எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 19, 2006

65. பறவைகள் பலவிதம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்-மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
*****************
என்னனு பார்க்கறீங்களா? வேறே என்ன? இந்த மின் தடையும் Tata Indicom Broadband-ம் நேற்று ரொம்ப சோதனை கொடுத்துடுச்சு. மின் தடை என்றால் இப்படியா? 1/2 மணிக்கொருமுறை போய்ட்டுப் போய்ட்டு வந்தது. அது போதாதுனு இந்த பிராட்பாண்ட் வேறே தொந்திரவு. WAN என்று சொல்லப்படும் Wide Area Network வரவே இல்லை. ராத்திரி வரை வரலை. இப்போக் காலையிலே எப்போ வந்ததுனு தெரியலை வந்து விட்டது. அதான் பிள்ளையாருக்கு ஒரு வந்தனம்.
***************
சின்ன வயசிலே நான் வெளியே போய் எல்லாம் ரொம்ப விளையாட முடிஞ்சது இல்லை. அப்பா கண்டிப்பு ஜாஸ்தி. விளையாடினால் என் பெரியப்பா வீட்டுக்குப் போய் பெரியப்பா பெண்ணுடன் விளையாடுவேன். அங்கே அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். பின்னால் வீட்டுக்கு வந்ததும் தான் திட்டு கிடைக்கும். ஆகவே பொதுவாக என் பொழுது போக்கு என்பது புத்தகங்கள் படிப்பதும், பறவைகளைப் பார்ப்பதுவும் தான். இந்தப் பறவைகளைப் பார்ப்பது என்பது ஒரு சுவாரசியமான விஷயம். மதுரையில் மேல ஆவணிமூலவீதி வீட்டில் மாடியில் எங்களுக்கு ஒரு அறை உண்டு. வாடகைக்குத் தான் இருந்தோம். அந்த மாடி அறையில் இருந்து பார்த்தால் எங்கள் வீட்டுக் கொல்லைப்புறம், மற்றும் பின்னால் மேலச்சித்திரை வீதிகளின் வீடுகள், மேலக்கோபுரம், கொஞ்சம் பக்கவாட்டில் பார்த்தால் வடக்குக் கோபுரம் எல்லாம் தெரியும். அப்படி ஒருநாள் பார்த்துக் கொண்டு இருந்தபோதுதான் ஒரு குருவி அந்த ஜன்னலில் வந்து உட்கார்ந்து கொண்டது. அப்போது பள்ளி மாணவியான நான் அந்தக்குருவியைப் பார்த்ததும் பாரதி சிட்டுக்குருவியைப் பற்றி எழுதியதை நினைத்துக் கொண்டேன். பள்ளியில் கட்டுரைப் போட்டியில் அதற்குப் பரிசெல்லாம் வாங்கினேன். அந்தக் குருவி உள்ளே வரத் தவித்த மாதிரி இருந்தது. ஜன்னலைத் திறந்து உள்ளே விட்டேன். உடனே அது அங்கே வந்து உட்கார்ந்து கொண்டு ஒரு ஒரு இடமாகப் பார்த்துத் தனக்குக் கூடு கட்ட இடம் தேடியது. கடைசியில் அதைக் கண்டும் கொண்டது. ஆனால் அந்த அறைக்குள் நான் இருந்தால் தான் வரும். எனக்கும் எப்படியோ அந்தக்குருவி நம் வீட்டுக் குருவி என்று அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. இப்படியே பழகிப் பழகிப் பறவைகள் எல்லாம் எனக்கு நட்பாகத் தெரிய ஆரம்பித்தன. அவைகளும் என்னைப் பார்த்தால் பறக்காது. இப்போ கூட காக்காய்க்குச் சாதம் வைக்கும் போது தினமும் வரும் காக்காய் என்னைக் கண்டதும் பறக்காது. அணிலும் அப்படித்தான். ஓடாது. இரண்டும் ரொம்ப சிநேகிதமாக உட்கார்ந்து சாப்பிடும். இதில் காக்காய் மட்டும் கழுத்தைச் சாய்த்து என்னப் பார்த்து உறுதி செய்து கொள்ளும். வேறு யாராவது வந்தால் பறந்து விடும். அணிலும் ஓடும். சாதாரணமாகச் சண்டை போட்டுக் கொள்ளும் காக்காயும், அணிலும் அப்போது ரொம்ப சிநேகமாக இருக்கும்.

இந்தக் குயில் குஞ்சு இருக்கிறதே அது முட்டையில் இருந்து வெளியே வந்ததும் காக்கைகள் அதைத் துரத்தும் பாருங்கள். ரொம்பப் பாவமாக இருக்கும். குயில் எப்போ வந்து முட்டை இடுமோ தெரியாது. ஆனால் குஞ்சு அலறித் தவித்து மரத்தில் ஒவ்வொரு பக்கமாக உட்கார்ந்து கொண்டு மறைந்து கொள்ளப் பார்க்கும். கடைசியில் காக்காய்கள் சேர்ந்து அதை விரட்டி ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் ஓயும். இதில் ஆண் குயில்தான் பாடும். பெண்குயில் குரல் அவ்வளவு இனிமையாக இருக்காது. ராஜஸ்தானில் பொதுவாகப் பறவைகள் அதிகம். மேலும் எல்லாம் இங்கே இருப்பதைவிடப் பெரிதாக இருக்கும். எங்கள் வீட்டுக் கொல்லை முற்றத்துக்கு வரும் பறவைகளின் ஆகாரத்துக்காகத் தினமும் தானியங்களை உடைத்துப்போடுவோம். ராஜஸ்தானிலேயே இது அதிகமாக இருக்கும். எல்லாரும் தானியங்களை உடைத்து வைத்துக் கொண்டு, எறும்புப் புற்று இருக்கும் இடம், மரத்தடி என்று பறவைகளுக்கு உணவு இடுவார்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைப்போம். புறாக்களில் எத்தனை விதம். பக்கூம், பக்கூம் என்று கத்தும் மாடப்புறாவில் இருந்து, கணகணவென்று மணிஓசை போலச் சத்தம் செய்யும் மணிப்புறா வரை நிறையப் பார்க்கலாம். வானில் வட்டமிடும் கழுகுகள் சிலசமயம் அப்படியே விர்ரெனக் கீழே இறங்கிப் பறவைகளைக் கொத்திக் கொண்டு போய்விடும். அப்போது ஏற்படும் களேபரம். தாங்க முடியாது. வீட்டுக்குள் வேலையில் இருந்தாலும் அவைகளின் கூச்சலை வைத்தே ஆபத்து எனப் புரியும். மயில் எல்லாம் கோழி மாதிரித் தினமும் எங்கள் வீட்டு லானில் நடனம் ஆடும். மழை வரப் போகிறது என்று நம்பக்கம் சொல்வார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து மழை இல்லாவிட்டாலும் மயில் நடனம் ஆடும். அதுவும் ஆண்மயில்தான். பெண்மயில் பார்க்கச் சகிக்காது. குரலும் கர்ணகடூரமாக இருக்கும். கிளிகள் எத்தனை விதம். எல்லாம் பெரியதாக இருக்கும். சில வயதான கிளிகள் கூட இருக்கும். கிளிக் குஞ்சு ஒன்று அடிபட்டு விழுந்து அதற்கு மருத்துவம் பார்த்துப் பின் பறக்க விட்டோம். மைனாவில் சிவப்பு மூக்கு மைனா, மஞ்சள் மூக்கு மைனா, பிரவுன் மூக்கு மைனா என்று பலவிதம் உண்டு. அவை சண்டை போடுவது நம் ஊர்க் குழாயடிச் சண்டை மாதிரி ஒரே சத்தமாக இருக்கும். சிலசமயம் ரொம்பச் சத்தம் பொறுக்க முடியாமல்,"உஷ், சும்மா இருங்க எல்லாம்" என்று சத்தம் போடுவேன். எல்லாம் பறந்து விடும். புரிந்து கொண்டதாக நான் நினைத்துக் கொள்வேன். மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது பார்த்தால் தச்சன் கெட்டான் போங்கள், அப்படி ஒரு சத்தம் தச்சன் வேலை செய்வது போலே. முதலில் சில நாட்கள் புரியவில்லை. எங்கிருந்து சத்தம் என்று. ஆர்மியில் ஒரு க்வார்ட்டர்ஸுக்கும், இன்னொரு க்வார்ட்டர்ஸுக்கும் குறைந்தது 1/2 கி.மீ வித்தியாசம் இருக்கும். நான் சொல்வது பழைய க்வார்ட்டர்ஸ். நாங்கள் இருந்த க்வார்டர்ஸ் எல்லாம் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. ரொம்பரொம்பரொம்பரொம்பரொமப உயரமாக இருக்கும். ஆதலால் பக்கத்துக் க்வார்ட்டர் சத்தம் இங்கே காதில் விழச் சான்ஸ் இல்லை. அப்புறம் ரொம்பத் தேடிக் கண்டுபிடித்ததில் இது அழகாக மரத்தில் துளை போட்டுக் கொண்டிருந்தது. அவ்வளவு அழகாக நம்மால் முடியாது. கை தேர்ந்த தச்சனைப் போல வேலை செய்து கொண்டு இருந்தது. இந்த மாதிரிப் பார்த்துப் பார்த்து இது செம்போத்து, இது அக்காக்குருவி, இது வாலாட்டிக்குருவி, இது கரிச்சான் குருவி,(இது தான் காலையில் முதலில் எழுந்துக்கும். நல்லா ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடிச்சேன். இதிலே வாலில் சிவப்பு நிறம் ரத்தம் போல இருக்கிற ஒரு வகை, இன்னொரு வகை வெள்ளையாக இருக்கும்) என்று கண்டு பிடிக்க முடிந்தது. இதிலே ஒரு குருவி இருக்கிறது விசில் மாதிரியே சத்தம் கொடுக்கும். அதற்கு நான் வச்சிருக்கிற பெயர் "விசிலடிச்சான் குருவி" அதோட பேர் தெரியலை. இன்னும் தேன்சிட்டு, மஞ்சணாங்குருவி என்று நிறைய இருக்கிறது. இதிலே இந்தத் தேன்சிட்டுப் பார்க்கச் சின்னதாக இருக்கும். குரல் கொடுத்தால் அவ்வளவுதான். பெரிசாக் குரல் கொடுக்கும். சின்னதாக இருக்கே என்று கண்டு கொள்ளாமல் போயிடப்போறதுனு ஆண்டவன் இப்படிப் படைச்சிருக்காரோ என்னவோ? இப்போவெல்லாம் சிட்டுக்குருவி என்று சொல்லப்படும் தவிட்டுக் குருவியை காணக் கிடைப்பதில்லை. இதற்குச் சென்னைக் கான்கிரீட் காடாகி விட்டது என்று காரணம் சொல்லப் படுகிறது. அப்போ மற்றதுக்கெல்லாம் கான்கிரீட் காடு ஒத்துக் கொள்ளுமா? புரியவில்லை. ஆனால் இந்தச் சிட்டுக்குருவி கூடு கட்டிக் குஞ்சு பொரித்ததும் ரொம்பக் கவனமாப் பார்த்துக்கும். குஞ்சு ஏதாவது கூட்டில் இருந்து கீழே விழுந்தால் திரும்பச் சேர்த்துக் கொள்ளாது. ஒருமுறை அது வீட்டுக்குள் வழக்கம்போல சீலிங் ஃபானில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்து இருந்தது. தினமும் நாங்கள் யாராவது ஒருத்தர் வீட்டில் இருந்ததால் அது வரவும் போகவும் கஷ்டமாயில்லை. ஒருநாள் சாயங்காலம் 4 மணிக்கே வெளியே போக வேண்டி இருந்தது.அந்த நேரம் குருவிகள் திரும்பும் நேரம் இல்லை. ஆதலால் கதவைப் பூட்டிக் கொண்டு போய்விட்டோம். திரும்பி வர 7 அல்லது 8 மணி ஆகி விட்டது. வீட்டிற்கு வரும்போது குருவி பார்த்துவிட்டு ஏதாவது மரத்திற்குப் போயிருக்கும் என நினைத்தோம். கதவைத் திறக்கும்போதே உள்ளிருந்து குஞ்சுகளுடைய கூச்சல் கேட்டது. உடனேயே குருவிகள் வரவில்லையெனப் புரிந்தது. என்ன செய்ய முடியும் என நினத்து உள்ளே போனால் நாங்கள் கதவை மூடும் சமயம் விர்ர்ர்ர்ரென ஒரு சப்தம். பார்த்தால் எங்கேயோ இருந்து இரண்டும் நாங்கள் கதவு திறந்ததைப் பார்த்து விட்டு வந்திருக்கின்றன். சட்டெனக் கூட்டில் அமைதி. எங்கள் மனதிலும்.

10 comments:

  1. //பார்த்தால் எங்கேயோ இருந்து இரண்டும் நாங்கள் கதவு திறந்ததைப் பார்த்து விட்டு வந்திருக்கின்றன். சட்டெனக் கூட்டில் அமைதி. எங்கள் மனதிலும்.//

    ரசித்ததை ரசிப்பதற்க்காக ரசித்து எழுதி இருக்கிறீர்கள். நன்றாக இருந்தது.

    ReplyDelete
  2. Adengappaa! neenga oru ornithologist aa poi irukkalaam..

    nam manathil anbu irunthaal manushaalukku theriyuthoo illaiyoo, 5 arivu padaitha dog/cat/birdsku nallave theriyum.

    ellati enga house owner naay ennaya ethu varaikum kadikkama vittu vechurukunaa parungaleen. :)

    ReplyDelete
  3. yeppa...paravaikal mela ivalo interest ah ungaluku...inga enakum oru anil friend iruku aana inga anil size namma oor anil size ah pola oru five times irukum...thappa nenaichukaatheenga birds ah paartha enaku thonarathu ithu fry ku nalla irukuma illa kolambukaa...

    ReplyDelete
  4. தயாநிதி மாறனுக்கும் டாடாவிற்கும் உள்ள மோதலை விட உங்களுக்கும் டாடா விற்கும் மோதல் ஜாஸ்தி இருக்கும் போல.... BSNL மாறிப்பார்க்கலாமே...

    மேலஆவணி மூல வீதியில் வீடா...நல்ல வேளை தெற்கு ஆவணி மூல வீதியில் (நகை கடை வீதி) இல்லாம போச்சு. மாமா தப்பிச்சார்!!!!!

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி, நன்மனம், உளவு வேலையை (சங்கத்துக்குத் தான்) விட்டு விட்டு என் வலைப்பூவிற்கு வந்ததுக்கு. நாம் மட்டும் ரசித்தால் போதுமா? எல்லாரும் ரசிக்கணுமே, ஒவ்வொருத்தர் டேஸ்ட் ஒவ்வொரு மாதிரி. பறவையை ரசிக்கிறவங்களும் இருக்காங்கனதும் சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  6. அம்பி, நான் என்ன எழுதினாலும் விடாமல் வந்து ரசிக்கிறதுக்கு ரொம்ப நன்றி. விரைவில் உங்களைப் பாராட்டறதுக்கு ஒரு பதிவு போடணும். மத்தபடி எல்லாரும் ரசிக்கிறாப்பலதான் நானும் ரசிக்கிறேன்.

    ReplyDelete
  7. ச்யாம்,
    நீங்க எந்த ஊரிலே இருக்கீங்க தெரியலை. ராஜஸ்தானிலும் அணில், காக்காய், குருவி, கிளி, புறா எல்லாப் பறவைகளும் பெரிதாகத் தான் இருக்கும். பறவைகளுடன் பழகினால் ஒருவேளை உங்கள் டேஸ்ட் மாறலாம்.

    ReplyDelete
  8. மனசு, நேத்திக்கு மறுபடி சண்டை Tata வோட. BSNL சேவை எப்படி இருக்குமோ தெரியலை. Relianceகாரங்க wireless system கொண்டு வந்திருக்காங்க. அது பத்தித் தீர விசாரிச்சுட்டு மாறலாம்னு யோசனை.
    அப்புறம் தெற்காவணி மூலவீதியிலே முத்துசாமிச்செட்டியார் கடைதான் எங்க family கடை. ஆனால் எல்லாரும் இப்போ பிரிஞ்சுட்டாங்க. தனித்தனிக் கடையாக இருக்கு. காலமாற்றத்தில் இதுவும் ஒண்ணு.

    ReplyDelete
  9. அதுல ஒண்ணு இப்ப SMS (SM சிவசங்கர்) இல்லையா?

    ReplyDelete
  10. இன்னுமா நயன் தாரா போகலை? வேறே பதிவு போடுங்க மனசு, அப்புறம் நம்ம கடை மதுரைலே SMP (முத்துசாமி செட்டியார் பையன் பொன்னுசாமிச் செட்டியார்) கடைதான். அவங்க எல்லாம் அப்பா கிட்டே படிச்சவங்க.

    ReplyDelete