Sunday, May 24, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!


இந்த ராஸக்ரீடையைப் பற்றி பாகவதம் என்ன சொல்லுகின்றது என்பதை நாராயணீயம் ஸ்லோகங்கள் மூலம் பார்ப்போமா? கண்ணனின் வேணுகானத்தில் இருந்து கிளம்பிய மனதை மயக்கும் இன்னிசையால் கோபியர் கவரப்பட்டனராம்.

“ஸம்மூர்ச்சநாபிருதித ஸ்வரமண்டலாபி:
ஸம்மூர்ச்சயந்த மகிலம் புவநாந்தராலம்:
த்வத்வேணுநாத முபகர்ண்ய விபோ த்ருண்ய:
தத்தாருஸம் கமபி சித்த விமோஹமாபு:

கண்ணனின் குழலில் இருந்து கிளம்பிய இன்னிசையின் ஸ்வரங்களால் உலகு அனைத்துமே மயங்கியது. ஏதோ சொப்பன லோகத்தில் சஞ்சரிப்பது போல் உணர்ந்தனர் அனைவருமே. இளம் மங்கையரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் அனைவரும் விவரித்து உரைக்க முடியாத ஒரு பேரின்பத்தைப் பெற்றதாய் உணர்ந்தனர். அனைவரும் வனத்திற்கு வந்து கண்ணன் காத்திருக்கும் இடத்தில் கூடினார்கள்.

சந்த்ரகரஸ்யந்த லஸத்ஸுந்தர யமுநாதடாந்த வீதீக்ஷு!
கோபி ஜனோத்தரீயை ராபாதித ஸம்ஸ்தரே ந்யஷீதஸ் த்வம்!!

யமுனை நதிக்கரையே நிலவொளியால் அழகு மிகுந்து ஒரு சொர்க்கபூமியாகக் காணப் பட்டது.
கோபிகைகள் தங்கள் மேலாடைகளை விரிப்பாய் விரித்து அமரத் தாங்களும் அமர்ந்தீர்கள். இங்கே கோபிகளின் ஆடைகளைக் கண்ணன் களைகின்றானே என்ற ஒரு கேள்வி எழுகின்றது. ஆடை துறத்தல் என்பதின் உள் நோக்கம் இங்கே அனைத்தும் துறத்தல் என்று ஆகும். பொதுவாய் ஆடை இல்லாமல் யாரும் அவர்களைப் பார்க்க விரும்ப மாட்டார்கள் அல்லவா? ஆடை ஒரு கெளரவம், அந்தஸ்து தருகின்றது. ஆடை அகங்காரத்தையும் சேர்த்தே தருகின்றது. அத்தகையதொரு ஆடையானது இறைவனிடம் நம்மைச் சேரவிடாமல் நம் புத்தியை, மனதை மூடுகின்றது, மூடிக் கொள்கின்றது. அதன் வெளிப்புற அலங்காரங்களையும், இனிமையான பேச்சுக்களையும் கேட்டு மயங்கும் நாம் இறைவனிடம் சேருவதில்லை. நம் அகங்காரமே நாம் என எண்ணிக் கொண்டு அதிலேயே மூழ்கிப் போகின்றோம். ஆடை அனைத்தையும் துறத்தல் என்பது இங்கே வெட்கத்தை விட்டு இறைவனைச் சரணாகதி அடைவதைக் குறிக்கும் ஒன்று. ஆண்கள் இரு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டாலும் பெண்கள் பொதுவாக அப்படி வணங்குவதில்லை. ஆனால்? இங்கேயோ? ஆடைகளைத் துறந்து நிர்வாணமாய் நிற்கும் கோபியர் ஆடையை வேண்டிக் கண்ணனிடம் தங்கள் கைகளை மேலே தூக்கிக்கொண்டு வணங்கி வேண்டுகின்றனர். இங்கே கோபியர் நாம் அனைவருமே. கோபர்கள், கோபியர் அனைவருமே இங்கே கோபியராய் உருவகம் செய்யப் பட்டுள்ளனர். கண்ணனின் அரசாட்சியில் கண்ணன் ஒருவனே ஆண்மகன். மற்றவர் அனைவரும் பெண்களே. இதையே மீராபாயும் தன்னைப் பெண் என்பதால் பார்க்க மறுக்கும் ஹரிதாஸரிடம் கூறுகின்றாள்.

ஆகவே நம் புத்தியை மயக்கும் அகங்காரம் என்னும் ஆடையைத் துறந்து கண்ணனைச் சரணம் என அடைந்தோமானால் அவன் நம்மைக் காத்து அருளுவான். மோட்சம் கொடுப்பான் என்பதே இதன் தாத்பரியம். மேலும் இதில் பின்னால் வரும் ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடாகவும் நாராயண பட்டத்திரி சொல்லுகின்றார். கெளரவ சபையில் அனைவர் முன்னாலும் அவமானப் படுத்தப் பட்ட திரெளபதிக்கு ஆடைகளை அளிக்க வேண்டும் அல்லவா? அதற்கு முன்னேற்பாடாகக் கண்ணன் இங்கே தன் அடியாரான கோபியரின் ஆடைகளைக் களைந்தான் என்றும் சொல்லுகின்றார். ஆகவே இதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு படிக்கவேண்டும் அனைவரும் என வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

7 comments:

  1. கண்ணன் வருவான் கூடவே எங்கள் தலைவியையும் கூட்டிக்கிட்டு வருவான் ;))

    தொடருங்கள்...;)

    ReplyDelete
  2. நல்ல விளக்கம், நல்ல பதிவு...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மீண்டும் கண்ணனையும், கீதாவையும் பார்ப்பதில், கண்ணன் கானம் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி மா,

    ReplyDelete
  4. கண்ணன் திரும்ப வருவதில் மகிழ்ச்சி!

    ReplyDelete
  5. வாங்க கோபி, நன்றி.

    அடியார், முதல்வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. நன்றி ரேவதி, உங்கள் பாசத்துக்கும், அன்பான விசாரிப்புக்கும்.

    ReplyDelete
  7. @தி.வா.நன்றி.

    ReplyDelete