எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 29, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.

இந்தக் கண்ணன் தொடர் முழுக்க முழுக்க திரு முன்ஷி அவர்கள் பார்வையிலே எழுதப் பட்ட முறையிலேயே சொல்லப் படுகிறது என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றேன். ஏனெனில் இப்போது கண்ணன் வளர்ந்து கொண்டு வருகின்றான். புல்லாங்குழல் எடுத்து இனிய கீதங்கள் இசைக்க ஆரம்பித்து விட்டான். கண்ணன் நடக்கவும் ஆரம்பித்துவிட்டான். கோபியருக்கு மட்டுமின்றி, இப்போது அவன் யமுனையில் நீராடப் போகும்போது தன்னுடன் கோகுலத்துப் பிள்ளைகள் அனைவரையும் அழைத்துச் சென்று , கோகுலத்துச் சிறு பெண்களுடனும், விளையாட ஆரம்பித்து விட்டான்.

கண்ணனோடு இப்போது சிறு பெண்களும் சேர்ந்து கொண்டு விட்டனர். தன் புல்லாங்குழலை எடுத்து இனிய கீதம் இசைப்பதில் வல்லவானாய் இருந்தான் கண்ணன். பெண்களோ அவன் இசைக்கு மயங்கினார்கள். யமுனைக் கரையில் மரத்தின் மீது சாய்ந்து கொண்டு தன் சிறு விரல்களால் புல்லாங்குழலைப் பற்றிக் கொண்டு கண்ணன் இசைக்கும் இனிய கீதத்தைக் கேட்ட பெண்கள் அவனைச் சுற்றிக் கொள்ளுவார்கள். பெண்கள் எல்லாம் கண்ணனைக் கண்டு மயங்கி விடுகின்றார்களே என கோபியர்களுக்குக் கோபம் வந்தது. ஆனால் என்ன செய்ய? கண்ணனைக் கண்டதும் அவர்களுக்கும் இப்படியே அவன் பேரில் கோபம் வருவதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவனின் கொட்டம் அதிகரிக்கவே செய்தது.

வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய்

யசோதையிடம் சென்று கூவினார்கள். கண்ணனைப்பற்றிப் புறம் சொன்னார்கள். "அடி யசோதை உன் மகனைக் கூவி அழைப்பாயாக! எவ்வளவு வெண்ணெய் தின்பான் உன் மகன்?" என்று அதிசயித்துப் போனார்கள். யசோதைக்குக் கோபம் வருகின்றது. கண்ணனைத் தன்னிடம் அழைக்கின்றாள்.

வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ. வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்துக்
காகுத்தநம்பீ. வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.
அஞ்சனவண்ணா. அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே

கண்ணன் அப்போது தான் பலராமனுடன் வேக, வேகமாய் வந்தவன் தாயின் முகத்தைக் கண்டும், மற்ற கோபியர் சூழ்ந்திருப்பதைக் கண்டும் தயங்கி நிற்கின்றான். இன்னொருத்தி சொல்கின்றாள். "பாலைக் கறந்து அடுப்பிலே வைத்துவிட்டு, என் மகளிடம் சொல்லிவிட்டு மேலை வீட்டிற்கு நெருப்பு வாங்கச் சென்றபோது சற்றே அங்கே தாமதித்தேன் பேச்சில். அடி யசோதை! உன் மகனுக்கு அதுவே போதுமே! பாலை அப்படியே பானையோடு சாய்த்துப் பருகிவிட்டானடி, இந்தக் கூத்தைக் கேட்க மாட்டாயா?" என்றாள்

பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5.

207:
போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா.
குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா.
வேதப்பொருளே. என்வேங்கடவா.
வித்தகனே. இங்கேபோதராயே. 6.

யசோதை கண்ணனைப் பார்த்து "என் கண்ணே, அசலத்தார் உன்னை ஏதேனும் பேச என்னால் கேட்க முடியவில்லையே! கண்ணின் மணியே, என் முத்தே, மோகனமே, இங்கே வாடா" என்று அன்போடு அழைத்தாள். அப்போது வேறொருத்தி, "அடி, யசோதை, உன் மகனைப் போன்ற போக்கிரியை நாங்கள் கண்டதில்லை. கோகுலத்துப் பையன்களை மட்டுமின்றிப் பெண்களையும் மயக்கி இருக்கின்றான் உன் மகன். ஒரு நாள் என் பெண்ணின் வளையை எப்படியோ கழட்டி வாங்கி நாவல்பழக் காரியிடம் கொடுத்துப் பழங்கள் வாங்கித் தின்றான். கேட்டால் அது நானில்லையே! எனக் கூறிச் சிரிக்கின்றானடி யசோதை!" கோபியர்களில் ஒருத்தி இவ்வாறு கூறினாள்.

சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே

பெண்கள் எல்லாம் சென்று விடுகின்றனர். கண்ணன் அங்கேயே தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கின்றான். யசோதைக்குக் கோபம் தாங்க முடியவில்லை. பிள்ளையை அடிக்கவும் மனம் வரவில்லை. கண்ணனோ எனில் வழக்கமான அணைப்பையும், பாசத்தையுமே எதிர்பார்த்தான் தாயிடம். வேண்டுமானால் கீழே விழுந்து புரண்டு கூட அழலாமா என யோசித்தான். அம்மாவால் தாங்க முடியாது. கண்ணன் அறிவான் அதை. தாய் தான் இல்லாமல் தயிர் கடையவும் மாட்டாளே. அவள் தயிர் கடையும்போது தானும் சென்று பின்னாலிருந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு, தன் சிறு கைகளால் ஒரு பக்கக் கயிற்றை இழுக்க, தாயும் இழுக்க, "அம்மா, அந்த சுகம் வருமா? இதோ! அம்மா தயிர் கடையப் போகின்றாள் போலிருக்கிறதே! நம்மைக் கூப்பிடுவாள். நாமும் தயாராக வேண்டியது தான். ஆனால் அம்மாவுக்கு நாம் தயாராய் இருப்பது தெரியக் கூடாது. கோபமாய் இருப்பது போல் இருக்கவேண்டும். அம்மா உட்காரட்டும். தெரியாமல் பின்னால் போய்க் கழுத்தைக் கட்டிக் கொள்ளலாம். அப்போது வெண்ணெயும் இன்னும் நிறைய்ய்ய்ய்ய்யக் கிடைக்குமே!" கண்ணன் யோசித்தான்.

ஆனால் இது என்ன? அம்மா, தானே தயிர் கடைய ஆயத்தமாகிவிட்டாளே. ம்ம்ம்ம்..., நம்மைக் கூப்பிடக் காணோமே! கண்ணனின் உதடு பிதுங்குகின்றது. கண்களில் கண்ணீர் நிறைகின்றது. யசோதா அம்மாவோ எதையும் காணாதவள் போலத் தன் வேலையில் முனைந்தாள். கண்ணன் குரலெடுத்து அழ ஆரம்பித்தான். காது செவிடா யசோதைக்கு? திரும்பிக் கூடப் பார்க்கவில்லையே? ஓஹோ, அம்மாவுக்கு இன்னும் கோபம் தணியவில்லையோ? நன்றி கெட்ட கோபியர்கள்! நல்லா சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. ம்ம்ம்ம்ம் எனக்கும் கோபம் தான். அது அம்மாவுக்கும் புரியணுமே! எப்படி? ம்ம்ம்ம் பலராம அண்ணனுக்குக் கோபம் வந்தால் கண்ணை உருட்டி, காலை உதைத்துப் பெருங்குரலெடுத்துக் கத்துவான். அது சரியல்ல. நாம அப்படிக் கத்தக் கூடாது. நமக்கும் கோபம்னு அம்மாவுக்குத் தெரியணும். அதே சமயம் அம்மா நம்மை எடுத்துக்கொஞ்சவும் செய்யணும்.

கண்ணன் தன் அழுகையை நிறுத்திக் கொண்டு மெல்ல, மெல்லச் சென்று தாயின் புடவை முந்தானையைப் பிடித்து இழுக்கின்றான். உதடுகள் அழுகையில் பிதுங்கி நின்றன. எந்தக் கணமும் அழத் தயாரான நிலையில் கண்ணன். யசோதையோ திரும்பிப் பார்க்கின்றாள் தான். ஆனால் எந்த மாற்றமும் இல்லை அவள் முகத்தில். கண்ணன் அழத் தயாரானான். "அம்மா, யசோதா அம்மா, நான் உன் பிள்ளை அல்லவா? நீ தானே என்னைப் பெற்றாய்?" கண்ணன் முகத்தில் கள்ளச் சிரிப்பு. "என்னனு கேட்க மாட்டாயா?" கண்ணன் ஆரம்பித்தான்.

தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7

ஆனால் இது என்ன? அடுப்பில் வைத்த பால் பொங்குகிறதோ? யசோதை கண்ணனைக் கவனிக்காமல் உள்ளே சென்றாள். இப்போது கண்ணனுக்குக் கோபம் அதிகம் ஆனது. சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு கம்பு கிடைத்தது. அந்தக் கம்பினால் தயிர்ப்பானையை ஓங்கி ஒரு அடி அடித்தான். பானை உடைந்து தயிர் வெள்ளம் எங்கும். வெண்ணெய் சிதறியது. கையில் வெண்ணெயை எடுத்துக் கொண்ட கண்ணன் அங்கே கிடந்த ஒரு உரலில் அமர்ந்து கொண்டு பூனைகளுக்கும், குரங்குகளுக்கும், வெண்ணெயை ஊட்ட ஆரம்பித்தான். சற்று நேரம் கழித்து அங்கே வந்த யசோதை தயிர்ப்பானை உடைந்திருப்பதையும் வெண்ணெய் கீழே விழுந்து வீணாகப்போயிருப்பதையும், கண்ணன் வெண்ணெய் தின்ற கோலத்திலும், வெண்ணெய் ஊட்டும் கோலத்திலும் அமர்ந்திருப்பதையும் கண்டு திகைத்தாள்.

கோபம் பொறுக்க முடியாமல் போகின்றது யசோதைக்கு. கண்ணனை நன்றாய் அடித்துவிட வேண்டும் எனக் கம்பை எடுக்கின்றாள். "இரு, இரு, உன்னை நன்கு அடிக்கிறேன்." கண்ணனை அடிக்கப் போகக் கண்ணன் ஓடுகின்றான். யசோதை துரத்த, கண்ணன் ஓட, தான் கொட்டிய தயிரிலேயே வழுக்கிக் கண்ணன் விழ, கீழே விழுந்த கண்ணன் பெருங்குரலெடுத்து அழ, யசோதை ஒரு கணம் தயங்கினாள். கண்ணனும் இது சரியான சமயம் எனப் புரிந்து கொண்டு தான் அழுதால் தாய் மனம் இளகும் எனவும் அறிந்து கொண்டு மேலும் அழுகின்றான். யசோதை கம்பைத் தூக்கி எறிந்தாள். தலைமுடி எல்லாம் கண்ணனுடன் ஓடியதில் அவிழ்ந்து பறக்க, மேலாடை பறக்க, தலையில் சூடி இருந்த பூக்கள் வீடெங்கும் சிதறி இருக்க சுற்றுமுற்றும் பார்த்து யசோதை ஒரு கயிற்றை எடுத்தாள். யசோதை கோபத்துடனேயே கண்ணனை அழைத்து ஒரு கயிற்றை எடுத்து அவன் இடுப்பில் கட்டி அருகே இருந்த உரலோடு சேர்த்துக் கட்ட முனைகின்றாள்.

Friday, March 27, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

கண்ணனை அழைத்த யசோதை ஒரு கணம் தயங்கினாள். கண்ணனை வாயைத் திறக்கச் சொல்லி வெண்ணெய் தின்றானாஎனப் பார்க்க நினைத்ததை மாற்றிக் கொண்டாள். ஆஹா, அன்றொரு நாள் இவன் மண்ணைத் தின்றானோ என எண்ணி வாயைத் திறக்கச் சொன்னபோது என்ன நடந்தது? யசோதைக்கு அதை நினைக்கையில் மயக்கமே வந்தது. கண்ணனுக்குச் சிரிப்பு வந்தது.

மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 18.

அம்மா தன் வாயில் என்ன பார்க்கிறாள்? அங்கே என்ன அகில உலகுமா தெரிஞ்சிருக்கப் போகிறது? நிலவையும், விண்மீன்களையும், சூரியனையுமா பார்த்தாள்? யசோதையின் முகத்தை ஏதுமறியாப் பாலகன் ஏறிட்டுப் பார்க்க, விதிர் விதிர்த்த யசோதை, குழந்தையை இறுக அணைத்துக் கொண்டாள். யசோதையின் நினைவில் அது முட்டி மோத அவள் கண்ணனை அழைத்து உண்மை எதுவெனக் கேட்டாள்.

தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ. மகிழ்ந்தோடிவா. 9.

கண்ணா, அப்பா, ஏன் கோபிகளை இப்படிப் படுத்துகின்றாய்? நல்ல பிள்ளையாக நடந்து கொள்" என்று கெஞ்சினாள் யசோதை. கண்ணனோ, " யசோதா அம்மா, நீ எப்போதும் கோபிகள் பக்கமே பேசுகின்றாயே? நான் உன் பிள்ளை அல்லவா? என் பக்கம் பேசவே மாட்டேன் என்கின்றாயே? நீ என்னைப் பெற்றெடுக்கவில்லையா?" என்று கேட்கின்றான். கண்ணன் இவ்வளவு தூரம் பேசுகின்றதைப் பார்த்த கோபியர் அவன் மழலைச் சொற்களில் மகிழ்ந்து போய், "சரி அப்பா, கண்ணா, நீ அரிச்சந்திரன் தான் போ!" என்று பரிகாசம் செய்கின்றனர். "நீ வெண்ணெய் தின்றதை நாங்கள் பார்த்தோமே?" என்று சொல்கின்றனர். "இல்லை, இல்லை," அவசரமாய் மறுத்தான் கண்ணன். "நான் அந்த மரத்தின் மேலே இருந்தேன். பலராம அண்ணன் கூட என்னுடன் தான் இருந்தான்." வேலிக்கு ஓணான் சாட்சி!யசோதை கொஞ்சம் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு, "கண்ணா, உண்மையைச் சொல், உன்னை இப்போது அடிக்கப் போகின்றேன்!" என்று வருகின்றாள். அவ்வளவு தான். கண்ணனின் முகம் வாடி விடுகின்றது. அழுகையில் உதடு பிதுங்குகின்றது. யசோதையின் மனம் துடிக்கின்றது. தன் இரு கைகளையும் தன்னை அறியாமல் நீட்டி, "வா" என அழைக்கின்றாள் கண்ணனை. கண்ணன் ஓடிப் போய்த் தாயின் இடுப்பில் ஏறிக் கொண்டு, அவள் தோளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு இதழ்களில் கள்ளப் புன்னகையுடனும், கண்களில் பொய்யான அழுகையுடனும் கோபிகளைப் பார்க்கின்றான். கண்ணனைத் தன் கால்களில் இட்டு ஆட்டுகின்றாள் யசோதை.

வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. 4.

கோபியர் அனைவரும் இனி நம் குற்றச்சொற்கள் யசோதையின் காதில் ஏறாது எனப் புரிந்து கொண்டு கண்ணனின் சாதுரியத்தை மெச்சிக் கொண்டே அவரவர் வீடு செல்கின்றனர். வீடுகள் அனைத்தும் பூட்டப் படுகின்றன. சாளரங்கள் அடைக்கப் படுகின்றன. எனினும் பலராமன் தோள் மீது ஏறி, சுவர் ஏறிக் குதித்துக் கூரையின் மேலே ஏறி, ஓடுகளைப் பிரித்துக் கண்ணன் கோகுலத்து வீடுகளின் உள்ளே செல்வதும், வெண்ணை, பால், தயிர் போன்றவற்றைச் சாப்பிடுவதும் நிற்கவில்லை. கோகுலத்து மக்கள் அசந்துவிட்டனர் கண்ணனின் சாமர்த்தியத்தால். கோகுலத்தின் சிறு பையன்கள், பெண்கள் அனைவருமே இந்த விஷயத்தில் கண்ணன் கட்சி. அவனைக் காட்டிக்கொடுக்க ஒரு ஈ, எறும்பு கூட அங்கே இல்லை.

தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன்
உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன
ரங்கனுக்கடி யார்களாய்
நாத்தழும்பெழ நாரணாவென்ற
ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி
ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே 2.4 (குலசேகர ஆழ்வார்)

கொண்டையொண் கண்மட வாளொருத்தி
கீழை யகத்துத் தயிர்கடையக்
கண்டுஒல்லை நானும் கடைவனென்று
கள்ள விழிவிழித் துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ
வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம்
தாமோத ராமெய் யறிவன்நானே 6.2 (குலசேகர ஆழ்வார்)

இத்தோடு மட்டுமா? ஆய்ச்சியர்கள் தயிர் கடையும்பொழுது கண்ணனும் அங்கே சென்று நானும் கடைவேன் எனத் தன் இரு சிறு கரங்களால், முகம் வேர்க்க, இதழ்கள்சிவந்து துடிக்க, தயிர் கிடைக்கும் என்ற ஆசையுடனேயே அவர்களுக்கு உதவும் முகமாய் அவனும் கடைகின்றானாம். எப்பேர்ப்பட்ட பாக்கியவான்கள??? ஆனால் தேவகி? கீழ் வரும் பாடல் சொல்லுகின்றதே அவள் நிலையை! :(

களிநி லாவெழில் மதிபுரை முகமும்
கண்ண னேதிண்கை மார்வும்திண் டோ ளும்
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்
தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால்
பருகு வேற்கிவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த
பாவி யேனென தாவிநில் லாதே 7.4 (குலசேகர ஆழ்வார்)

யசோதை கண்ட கண்ணனின் முழுநிலா போன்ற முகத்தையும், அழகுத்திருக்கைகளையும், செங்கீரைத் தண்டை ஒத்த சிறு கால்களயும் அவை மிதிக்கும் இன்பத்தையும், குழந்தை பேசும் மழலைப் பேச்சையும், கையில் எடுத்துச் சீராட்டிப் பாலூட்டித் தாலாட்டும் அனுபவத்தையும் பாவியான தேவகி பெறவில்லை. ஊர், ஊராய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றாளே!

Wednesday, March 25, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

கடைசியாய்க்கண்ணன் வந்தது இங்கே அடுத்தடுத்து விருந்தினர் வருகை, வீட்டில் அதிகமான வேலை என்று இருந்ததால் எழுதி வைக்க முடியலை. அதோடு வேறே சில முக்கியமானவைகளும் முடிச்சுக் கொடுக்கவேண்டி இருந்தது. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
****************************************************************************************
வசுதேவரும், தேவகியும் தீர்த்த யாத்திரை சென்று விட்டார்கள். செல்லும் வழியிலேயோ அல்லது திரும்பும்போதோ ஹஸ்தினாபுரம் சென்று சில நாட்கள் தங்கவேண்டும் எனவும் திட்டம். அங்கே ஹஸ்தினாபுரத்தின் அரசன் பாண்டுவிற்கு வசுதேவரின் சகோதரி குந்தியைத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இது ஒரு புறமிருக்க இங்கே கோகுலத்தில் கண்ணன் வளர, வளர அவனின் விஷமங்களும் அதிகம் ஆகிக் கொண்டு வந்தது.

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ.
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2) 1.

கண்ணன் இப்போது தவழ ஆரம்பித்ததோடு அல்லாமல் நிலாவைப் பார்த்துக் கைகாட்டியும் அழைக்க ஆரம்பித்துவிட்டான். ஆஹா, தலைச்சுட்டி அவன் தவழும்போது அசைவதும் நிலவு விண்ணில் நகரும்போது கூடவே செல்லும் நட்சத்திரக் கூட்டம் போலக் கண்ணனோடு சேர்ந்து அசைகின்றனவே. (இது பாசுரத்தின் கருத்து அல்ல.) தன் சின்னஞ்சிறு கைகளால் கண்ணன் நிலவைக் கைகாட்டி அழைக்கின்றானே?

55:
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ. மகிழ்ந்தோடிவா. 2.

நிலவு மேகங்களால் மறைக்கப்பட்டால் ஆஹா, கண்ணனின் முகமும் அழுகையில் பிதுங்கி, ஏமாற்றத்தில் ஆழ்கின்றதே. இதோ நிலவு வந்துவிட்டது, கண்ணனின் முகத்தில் மகிழ்ச்சி. நிலவைப் பார்த்து இருகைகளையும் கொட்டிச் சிரிக்கின்றான் கண்ணன்.
56:
சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ. கடிதோடிவா. 3.

57:
சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா. சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய். 4.

அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ. 5.

மழலை மாறாத தன் இளங்குரலாம் நிலவைக் கூவி அழைக்கின்றான் கண்ணன். நீலமேக வண்ணனுக்கு மஞ்சள் பட்டாடை உடுத்தி இருக்கின்றனர். கண்ணனைக் கண்டு கோபியர் அனைவருக்குமே எடுத்துக் கொஞ்ச ஆசை. ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொஞ்சுகின்றனர். எனினும் கோகுலத்தில் உள்ள அனைவர் வீட்டுக்கும் கண்ணன் சென்று தயிரையோ, பாலையோ குடித்து விடுவான். சில சமயம் தனியாய்ச் செல்வான். சில சமயங்களில் கோகுலத்து மழலைப் பட்டாளமே உடன் செல்கின்றன. என்னவென்று சொல்லுவது? பார்க்க ஒரு பெரிய கோபக்காரக் குழந்தையாக இருக்கும் பலராமன் கூட இந்தக் கண்ணனுக்கு முன்னால் வாய் திறக்காமல் அவன் இழுத்த இழுப்புக்குச் செல்கின்றானே? அதிலும் பலராமனுக்கு அவன் தாய் ரோஹிணியோடு மதுரா செல்வதை விட கோகுலத்தில் கண்ணன் அருகேயே இருப்பதே ஆனந்தமாய் இருக்கின்றது. பலராமன் தூங்கும்போது யார் எழுப்பினாலும் எழுப்பினவர்கள் பாடு அவ்வளவு தான். ஆனால், என்ன ஆச்சரியம்? இதோ கண்ணன் அவன் கண்களைத் தேய்த்துத் தேய்த்து எழுப்புகின்றானே? பலராமனைப் படுக்கையிலிருந்து இழுக்கின்றானே? ஆஹா, பலராமன் இதோ கண் விழித்துவிட்டான்.ஆனால் இது என்ன? கண்ணனைக் கட்டி அல்லவா அணைத்துக் கொள்கின்றான். என்ன மாயம் செய்தாயடா கண்ணா? கோபியர்களால் கண்ணனின் விஷமம் பொறுக்க முடியவில்லை. யசோதையிடம் வந்து குற்றம் சொல்கின்றனர்.

கோகுலத்துப் பையன்களைக் கூட அதட்டி விரட்ட முடிகின்றது. ஆனால் இந்தக் கண்ணனை எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. திரும்பப் போகிறவன் போலப் போய்விட்டுத் திருட்டுத் தனமாய் உள்ளே நுழைந்து விடுகின்றான். எப்படித் தான் கண்டு பிடிக்கிறானோ, தாழ் போடாத சாளரக் கதவையோ, வீட்டுப் பின்பக்கக் கதவையோ. சிலசமயம் கூரைகளில் கூட ஏறிக் குதிக்கின்றான். அடி, யசோதை, என்ன பிள்ளையடி பெற்றிருக்கின்றாய் நீ? வீட்டில் உள்ள பால், தயிரை எல்லாம் அவன் எடுத்துக் குடித்துவிடுகின்றானே? நீ உன் வீட்டில் அவனுக்குச் சோறோ, பாலோ, தயிரோ கொடுப்பதே இல்லையா? அவன் குடிக்கிறது பத்தாமல் கூட வருகின்ற பிள்ளைகளுக்கும் கதவைத் திறந்துவிட்டு எடுத்துச் சாப்பிட வைக்கின்றான். அன்றைக்குப் பார்த்தால் ஒரு பூனைக்குக் கண்ணன் பாலையும், வெண்ணெயையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். அடி யசோதை, இத்தனை வருஷம் கழித்துப் பிறந்த உன் பிள்ளைசெய்யும் அக்கிரமங்களைக் கண்டும் காணாது போல் இருக்கின்றாயோ?

தாயே யசோதா, உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
பாலன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி,
தாயே யசோதா!

கோபியர்களின் கண்ணனைப் பற்றிக்குற்றம் சொல்லுவது அதிகரிக்கின்றது. ஒருத்தி சொல்கின்றாள். மஹா சாதுவான அவள் பிள்ளையைக் கண்ணன் கெடுத்துவிட்டானாம். இன்னொருத்தி சொல்கின்றாள், கொட்டிலில் கட்டி இருந்த மாடுகள் குரல் கொடுப்பதைக் கேட்டுவிட்டுப் போய்ப் பார்த்துவிட்டு வருவதற்குள், இங்கே தயிர் கடைந்து கொண்டிருந்த பானையைக் காணோமாம். கடைசியில் பார்த்தால் இந்தத் தயிர்ப்பானையை எடுத்துச் செல்லவேண்டியே கண்ணன் கொட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டு விட்டானாம். என்னவென்று சொல்லுவது? யசோதைக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. வீட்டிலும் கால் தரிக்கவில்லை இந்தப் பிள்ளைக்கு. வெளியே சென்றும் வம்பு வளர்த்துக் கொண்டு வருகின்றதே. "கனையா, கண்ணா, என் கண்மணியே! வாடா இங்கே!" யசோதை கூப்பிடக் கண்ணன் தயங்கிக் கொண்டே வருகின்றான். பலராமன் இருக்கும் திசையே தெரியவில்லை. அவன் தாய் ரோஹிணி வழக்கம்போல் மதுரா சென்றிருக்கின்றாள். கண்ணனை விட்டுப் பிரிய இஷ்டம் இல்லாமல் இந்தப் பிள்ளை இங்கேயே தங்கி விட்டது. அவனைத் தன் பிள்ளை போல் பார்த்துக் கொள்ளுவதாய் யசோதை ரோஹிணிக்கு வாக்களித்திருக்கின்றாள். ஆனால் அவன் எங்கே?

அதோ, பலராமன் அந்தத் தூணின் பின்னே ஒளிந்திருக்கின்றான். கடைக்கண்களால் பார்த்துக் கொண்டே தாயிடம் வருகின்றான் கண்ணன். யசோதை கேட்கின்றாள்" அப்பா, கண்ணா, இவர்கள் சொல்லுவதைக் கேட்டாயல்லவா? நீ அவர்கள் வீட்டில் போய் வெண்ணெய் தின்றாயா? பூனைக்கும், நாய்க்கும் கொடுத்தாயா? கொட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டாயா?" கண்ணன் சொல்லுகின்றான், "யசோதா அம்மா, நான் அப்படி எல்லாம் செய்வேனா? நான் காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே நம் வீட்டு மாடுகள் மேய வந்திருந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்." கோபியரில் ஒருத்தி சொல்கின்றாள்:"நல்ல பொய் சொல்கின்றான் யசோதை உன் குமாரன். என் பையன் காட்டில் இருந்து இப்போது தான் திரும்பினான். அங்கே உன்னோட கனையா வரவே இல்லையாம்." கண்ணன் சொல்கின்றான்:" நான் ஒண்ணும் பொய் சொல்லலை, உன் பையன் தான் பொய் சொல்கின்றான். காட்டில் நான் இருந்ததை அவன் பார்க்கலை." கண்ணனின் இதழ்களில் சிறு புன்னகை அரும்புகின்றது.

யசோதை செய்வதறியாது கண்ணனைத் தண்டிக்கவேண்டி,"கண்ணா, இங்கே வா," என்கின்றாள். கண்ணன் தாயை நெருங்குகின்றான்.


கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்

Tuesday, March 24, 2009

பிள்ளையார் வாஆஆஆஆஆஆரம்!

அதிசயமா அம்பி இந்தக் கண்ணடிக்கும் பிள்ளையாரை அனுப்பி வைச்சார். ஏற்கெனவேயே இந்தப் பிள்ளையார் எத்தனை முறை எத்தனை பேரால் அனுப்பப் பட்டதுனு தெரியலை. :D ஆனால் இப்போ அம்பி அனுப்பி வச்சதுக்கு அப்புறமா இன்னிக்கு வரைக்கும் இதோட எனக்குப் பல பிள்ளையார் படங்கள், சித்திரங்கள் வந்துவிட்டன. பிள்ளையாரை எனக்குப் பிடிக்கும்னு வலை உலகமே அறிந்து வைத்திருக்கு போல! ஹிஹிஹி, நான் அவ்வளவு பிரசித்தி அடைஞ்சுட்டேனா? இல்லை, பிள்ளையாரா?? தெரியலை எனக்கு!



இது "ஹா ஹா ஹாஸ்யம் எழுதும் கோமாராஜன் அனுப்பி இருக்காங்க. அவங்க பதிவுக்கு முதல் முதலா வல்லி-ராமலக்ஷ்மி-கோமா என்று போனேன், சில மாதங்களுக்கு முன்னால். அதுக்கு அப்புறம் மறந்தே போச்சு. அப்புறமா எப்போவாவது திடீர்னு தோணிப் போவேன். அந்த மாதிரி நேத்திக்கு(???) போனதுக்கு அனுப்பி இருக்காங்க போல. படங்களுக்கு ஏற்றாற்போல் பாட்டு கேட்டிருந்தாங்க. ஏற்கெனவே ஒரு பதிவில் அவங்க "காணிநிலம் வேண்டும்" னு கேட்டுட்டாங்க. அதனால் திரும்பக் காணிநிலம் தராமல் வேறே பாட்டுகள் எழுதினேன். முன்னணிப் பாடகினு எல்லாம் சொல்லிட்டு, (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஆனா ஸ்டாரை மட்டும் வேறே யாருக்கோ கொடுத்திருக்காங்க. என்ன அநியாயம் இது? அதான் படத்தை இங்கே பப்ளிஷ் பண்ணிட்டேன்.

இது தவிரவும் சில பிள்ளையார் படங்கள் வந்திருக்கு. அதிலும் ஒருத்தர் முழுக்க முழுக்கப் பிள்ளையார் படங்களாவே அனுப்பி இருக்கார். அடுத்த வருஷப் பிள்ளையார் சதுர்த்திக்காக வச்சிருக்கேன் அதை எல்லாம். இப்போவே போட்டால் அப்புறம் அது பழசாகிடுமே! கண்ணன் வந்துட்டே இருக்கான். கொஞ்சம் பெரியவனா ஆயிட்டானா? சட்டுனு வர மாட்டேங்கறான். குழந்தைனா தூக்கிண்டு வந்துடலாம்.

Monday, March 23, 2009

ஒரு முக்கிய அறிவிப்பு!

துவாரகைப் பயணத்தின் சில முக்கியமான குறிப்புகளத் தொடர்ந்து காண விரும்புவோர் இங்கே காணலாம்.
ஆன்மீக பயணம் பக்கத்தில் காணலாம்.

Thursday, March 19, 2009

"மொய்" எனும் வழக்கொழிந்த சொல்!

இவ்வளவு சீக்கிரமாக் கவிநயா கொடுத்த சங்கிலித் தொடரைத் தொடருவேன் என நானே எதிர்பார்க்கலை. மின்சாரத் தடையின் போது படித்த சில புத்தகங்கள் இந்தச் சொற்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. அதை நம்ம கண்ணன் வருவான் கதைத் தொடருக்கு ஏற்றாற்போல பயன்படுத்திட்டு இருக்கேன். அடிக்க வராதீங்க! சொற்கள் பலருக்கும் தெரிந்தவையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் அகராதியில் இவற்றைத் தேடினப்போ கிடைக்கலை. அப்பாடி நிம்மதி!
***********************************************

பலராமன் நல்லா "ஓங்குதாங்கா" வளர்ந்திருந்தான். அதே கண்ணனைப் பார்த்தாலோ நிதானமான உயரம், அளவான பருமன், செதுக்கி வைத்தாற்போன்ற முகம், கண்கள், நேர்த்தியான மூக்கு, சிவந்த அதரங்கள், ஒளி வீசும் நீல நிறத்தோடு காட்சி அளித்தான். யசோதா அம்மாவுக்குக் குழந்தையை மற்றப் பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே பெரும்பாடா இருந்தது. சின்னக் குழந்தைக்குச் "சீர் தட்டாமல்" பார்த்துக்கணும். தூக்கும்போது "உறம் விழாமல்" கவனமா இருக்கணும். சீர் தட்டினால் அந்த வாடைக்குக் குழந்தை துவண்டு போயிடும். உறம் விழுந்தால் தாய் மாமனின் வேட்டியில் குழந்தையைப் போட்டுவிட்டு, நாலு மூலையையும் எதிர் எதிரே இருவர் பிடித்துக் கொள்ளக் குழந்தையைக் கிடத்தி இருக்கும் பக்கத்தில் இருந்து மறுபக்கம் உருட்ட, அந்தப் பக்கம் இருப்பவர் இந்தப் பக்கம் உருட்ட ஒரு அரை மணி நேரத்தில் வேகவேகமாய்க் குழந்தையை உருட்டி உறத்தை நீக்க வேண்டும். அப்புறம் தான் குழந்தை பாலே குடிப்பான். அது மட்டுமா??

ஓய்வெடுக்குமிடமான "பட்டாசாலை"யில் குழந்தையை விட்டால், தவழ்ந்து, தவழ்ந்து அவன் "கூடத்துக்கு"ப் போயிடுவான். அப்படியே வாசல் "ரேழி"க்குப் போய் அங்கே இருக்கும் "குலுக்கை"க்குப் பின்னால் போயிட்டால் கஷ்டம். பூச்சி, பொட்டு நடமாடும் இடம். ஹிஹிஹி, கண்ணன் இப்போ ஆங்கிலம் பேசப் போறான் பாருங்க. அங்கிருந்து கேட்வாசலில், நடுசெண்டருக்குப் போய்க் குழந்தை உருள ஆரம்பிச்சதுனா புழுதி எல்லாம் ஒட்டிக்கும்.

யசோதை யோசித்தாள். இந்த நந்தனுக்கு "வாக்கப்பட்டு" இத்தனை வருஷம் கழிச்சுக் குழந்தை பிறந்திருக்கான். எல்லாரும் குழந்தையை எடுத்துக் கொஞ்சணும்னு பார்க்கிறாங்க. இருந்தாலும் உடனே கொடுத்திடக் கூடாது. கொஞ்சம் "பிரியக்கால்" பண்ணிட்டுக் கொடுக்கணும்.

"வெள்ளெனெ" எந்திரிச்சு, பெறத்தாலே போயிட்டு வந்து பார்த்தாக்க இந்தக் கண்ணன் "உண்டக்கட்டி" அத்தனையும் எடுத்துவச்சுக்கிட்டு "அருவாக்கி" இருக்கான். அன்னிக்கு "நெம்ப" கோவம் வந்து "எருக்கம் மிளாறு" எடுத்து அடிக்கலாமானு யோசிச்சேன். அவன் சிரிப்பைப் பார்த்துட்டு மனசு மாறிடுச்சு. எத்தனை "தியாலம்" உட்கார்ந்து யோசிச்சாலும் இந்தக் கண்ணனைக் கோவிக்க மனசு வரலை. "ஊடால" இந்த பலராமனும் சேர்ந்துக்கிறான். அன்னிக்கு ரோகிணி பலராமனுக்கு ஒரு
"நிமிட்டாம்பழம்" கொடுத்துட்டா போலிருக்கு. "கம்மாய்க்கர"யிலே சொல்லிட்டு இருந்தா. நான் அதெல்லாம் சொல்லறதில்லை. கண்ணனை "உக்கி போட"ச் சொன்னாலே மனசு கேட்கலை. அவனும் என்ன "சொணை கெட்டவனா" சும்மா "திருப்பாட்டு" கேட்க. சரி, சரி, இதெல்லாம் யோசிச்சா மண்டை காய்ஞ்சிடும். மழை விட்டு "உச்சி வெரிக்கட்டும்" நாளைக்குப் "பிழைச்சுக் கிடந்தா" சோறு "தப்பாய்" இருந்தா "நீச்சுத் தண்ணி" குடுக்கணும், கண்ணனுக்கு. உடம்புக்குக் குளுமை அது!

***********************************************

இப்போ ஒரு சொந்த சந்தேகம் சின்னதாய். என்னமோ "மொய், மொய்" அப்படினு ஒண்ணு இருக்காமே? அப்படினா என்ன? அதுவும் ஒரு வழக்கொழிந்த சொல்லா? அதன் உண்மையான அர்த்தம் என்னனு இந்த கை.நா.வுக்குச் சொல்லுங்களேன். இந்த அம்பி வந்து கேட்டுட்டே இருக்கார். நானும் பத்து முறை மொய் எழுதிட்டேன். பத்தலையாமே! இல்லைனா இந்தச் சொல்லை நாமளே வழக்கொழிச்சுடலாமா?? எப்படி வசதி????
***********************************************************************************

அருஞ்சொற்பொருள் :)))))))))))



ஓங்கு தாங்கு = நல்ல வாட்டம், சாட்டமா

சீர் தட்டறது= வேற்று வாடை ஒத்துக்காமல் போவது

உறம் விழுதல்=கிட்டத் தட்ட சுளுக்கு மாதிரியானது

கூடம்= இப்போ ஹால்

பட்டாசாலை=ஓய்வெடுக்குமிடம், சாப்பிடுமிடம்

குலுக்கை= நெல் குதிர்

கேட் வாசல்
நடு செண்டர்
வாக்கப்பட்டு= வாழ்க்கைப் பட்டு

பிரியக்கால்=பிகு பண்ணுவது
வெள்ளென= விடிகாலை

எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்

பெறத்தாலே = பின் பக்கம்
துட்டி =துக்கம்

கலாவலியான= கிண்டல் பேச்சுக்கள்
தியாலம்=மணி

உண்டக்கட்டி= சோற்றுருண்டை

ஊடால= இடையிலே, நடுவிலே

நிமிட்டாம்பழம் =கிள்ளுதல்,
கலரு குடிங்க
நீச்சுத் தண்ணி - நீராகாரம்
கேஸ் பெட்டி
உக்கி போடுதல்= தோப்புக்கரணம் போடுதல்
கம்மாய்= ஏரிக்கரை
சொணை கெட்டவன்=சுரணை இல்லாதவன்
உச்சி வெரிக்கிறது=மழை விட்டு வானம் வெளுத்தல்
திருப்பாட்டு=திட்டு

அருவாக்கறது=தீர்ப்பது
தப்பாய் இருத்தல் = மிச்சம் இருந்தால்

பிழைச்சுக் கிடந்தா= நாளை

Sunday, March 15, 2009

எதிர்பார்க்காத கெளரவம்!

திருக்கைலை யாத்திரை சென்று வந்து இரு வருடங்கள் ஆகிவிட்டன, என்றாலும் நினைவுகள் இன்னும் அழியவில்லை. ஆறு மாதங்கள் முன்பு திடீரென திரு அனந்தபத்மநாபன் என்பவர் பெரம்பூரில் இருந்து ஓம் நமசிவாயா என்றொரு மெயில் அனுப்பி இருந்தார். நான் திருக்கைலை சென்று வந்ததும், அது பற்றி எழுதியதும் அறிந்து கொண்டிருந்தார். பின்னர்தான் தெரிந்தது அது நம்கைலாஷி திரு முருகானந்தம் அவர்கள் அன்போடு என்னையும் அறிமுகம் செய்து வைத்திருப்பது.

பின்னரும் திரு அனந்தபத்மநாபன் அவர்கள் தொடர்ந்து என்னுடைய பக்திக் கட்டுரைகளைப் படித்து வந்ததோடு அல்லாமல், கைலை யாத்திரை சென்றவர்கள் அனைவரும் இணைந்து ஒரு குழு ஆரம்பிக்கப் போவதாயும் நான் கைலை சென்று வந்த விபரங்கள் தேவை எனவும் கேட்டு வாங்கிக் கொண்டார். என்னுடைய "ஓம் நமசிவாயா" பயணக் கட்டுரையையே அனுப்பினேன். டாக்டர் ராஜகோபாலன் என்னும் முன்னாள் காவல்துறை டிஜிபி அவர்கள் தலைமையில் காஞ்சி சங்கரமடத்தின் உதவியோடும், அவர்களின் ஆலோசனையிலும், அருளாசியிலும் ஸ்ரீகாஞ்சி கைலாஷ் யாத்திரா சமிதி இன்று நுங்கம்பாக்கம், ஸ்பர்டாங்க் ரோடு, சங்கராலயாவில் ஆரம்பிக்கப் பட்டது.

ஸ்ரீமஹாபெரியவர்கள் அவர்கள் தங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நேரில் வந்திருந்து அனைவரையும் ஆசீர்வதித்ததுடன், தங்கள் திருக்கரங்களால் ஆசீர்வதிக்கப் பட்ட வெள்ளிக் காசுடன் கூடிய உருத்திராட்ச மாலை, சால்வை, மற்றும் ஞாபகச் சின்னம் போன்றவை இன்று அழைக்கப் பட்ட 300 நபர்களுக்கு வழங்கப் பட்டது. இன்னும் அநேகர் இருக்கின்றனர் எனவும், சிலருக்கு சரியாகச் செய்தி போய்ச் சேரவில்லை எனவும், சிலர் செய்தி தெரிந்து தம்மை இணைத்துக் கொள்ள நேரில் வந்திருப்பதாயும், சொன்னார்கள். ஆகவே இணைக்கப் படாத மற்றவர்களுக்காக ஏப்ரல் 13-ம் தேதி மதியம் 3 மணி அளவில் இன்னொரு விழாவை நடத்தவும், அப்போது தாம் வருகை புரிந்து யாத்ரீகர்களைக் கெளரவிப்பதாயும் ஸ்ரீமஹாபெரியவர்கள் திருவாக்கின் மூலம் தெரிய வந்தது.

நிகழ்ச்சி காலை 9-15 மணிக்குக் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பித்தது. அறிமுகம் ஸ்ரீராஜகோபாலன் அவர்களால் செய்யப் பட்டது. பின்னர் ஸ்ரீமஹாபெரியவர்கள் இந்த சமிதி ஆரம்பித்ததன் நோக்கத்தையும், இதன் மூலம் பல்வேறு விதமான ஆன்மீகத் திருப்பணிகள் செய்யவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தினார். அதன் பின்னர் குமுதம் ஜோதிடம் திரு ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் தன்னுடைய சிற்றுரையில் கைலை யாத்திரை பற்றிய நினைவுகளைக் கூறினார். ஆன்மீகத்தின் அவசியம் பற்றியும், வாழ்நாளில் ஒருமுறையாவது கைலை யாத்திரை மேற்கொள்ளவேண்டும் எனவும், ஏற்கெனவே சென்றவர்கள் செல்ல இருப்பவர்களுக்கு வழிகாட்டவேண்டும் எனவும் கூறித் தன் பேச்சை முடித்துக் கொண்டார். பின்னர் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சி ஒளிப்படமாகவும், அசைவற்ற புகைப் படமாகவும் எடுக்கப் பட்டது.

கைலை யாத்ரீகர்கள் முந்நூறு பேர் தவிரவும் அவர்களுடன் வந்த குடும்பத்தினர், மற்ற நபர்கள், நிகழ்ச்சியைக் காண வந்தவர்கள் என ஒரு ஐந்நூறு பேருக்குக் குறையாமல் கூட்டம் கூடி இருக்க நிகழ்ச்சி 12 மணி அளவில் முடிந்தது. அனைவருக்கும் ஸ்ரீமடத்தின் சார்பில் உணவு அளிக்கப் பட்டது. திரு முருகானந்தம் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஆனால் அவர் பெயர் படிக்கப் பட்டதே தவிர, அவர் யாரெனத் தெரியவில்லை. திரு அனந்த பத்மநாபன் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். எங்களுடன் யாத்திரை சென்றவர்கள் யாரும் வரவில்லை எங்களைத் தவிர. ஆனால் எங்களைப் போல மயிலாப்பூர், நடுத்தெரு, மனோஹர் மூலம் கைலை யாத்திரை சென்றுவிட்டுத் தவித்தவர்கள் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். ஈரோடு மனோஹர் என்பவர் தன்னுடைய யாத்ரா சேவை மூலம் செல்பவர்கள் பட்டியலைக் காஞ்சி மடத்துக்கு நேரடியாக அனுப்பி விடுகின்றார். ஆகவே அவருடைய வாடிக்கையாளர்களே அதிகமாய் வந்திருந்தனர். இதுவரையிலும் இந்த விபரம் தெரியாதவர்கள் ஸ்ரீமடத்தைத் தொடர்பு கொண்டு ஏப்ரல் 13-ம் தேதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Saturday, March 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - தொடர்ச்சி!


கண்ணன் கடைசியாக் கதை சொன்னது இங்கேபார்க்கவும். இனி கண்ணன் சொல்லப் போகும் கதையின் தொடர்ச்சி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இங்கே மதுராவில் வசுதேவருக்கும், தேவகிக்கும் இந்தச் செய்தி சென்றது. கிருஷ்ணன் பிழைத்தது பற்றிய மகிழ்ச்சி இருந்தாலும் , கம்ஸன், எப்படியோ அறிந்து கொண்டு விடுவான் என நினைத்துக் கவலை அடைந்தனர். கர்காசாரியார் அவர்களுக்குக் கண்ணன் எவ்வாறு ஒவ்வொரு நிகழ்வில் இருந்தும் தப்புகின்றான் எனவும், அவன் ஒரு அற்புத இறை சக்தி பெற்ற குழந்தை எனவும், சாட்சாத் அந்த வாசுதேவனே வந்து குழந்தையாகப் பிறந்திருக்கின்றான் எனவும் சொல்லுகின்றார். தேவகிக்கும் இதில் நம்பிக்கை அதிகம் ஏற்படுகின்றது. தன்னுடைய குழந்தையாகத் தான் சீராட்டிப் பாராட்டி வரும் கண்ணன் சிலையைக் கையில் எடுத்துக் கொண்டு கண்ணீர் வழியப் பிரார்த்திக்கின்றாள். ஆனால் வசுதேவருக்கோ? தன் மகன் ஒரு சிறு குழந்தை எனவும், ஒவ்வொரு முறை அவன் தப்புவதும் ஏதோ ஒரு அதிசயத்தால் அன்றி, அதில் அவனுடைய திறமையோ, அல்லது அற்புதமோ நிகழ்த்தவில்லை எனவும் உறுதியாய் நம்புகின்றார்.

கம்ஸன் எவ்வாறேனும் தங்கள் மகன் கோகுலத்தில் வளருவதைக் கண்டு பிடித்து விடுவான் என அஞ்சுகின்றார் வசுதேவர். தன் சந்தேகத்தை கர்காசாரியாரிடமும், அக்ரூரரிடமும் பகிர்ந்து கொள்கின்றார். அக்ரூரர் வசுதேவரை சமாதானம் செய்கின்றார். வசுதேவரின் இந்தப் பதட்டமும், பயமும் கம்ஸனைச் சந்தேகம் கொள்ளச் செய்யும், எனவும், ஏற்கெனவேயே கோகுலத்தை ஒரு இண்டு, இடுக்கு விடாமல் துருவிப் பார்க்கச் சொல்லிக் கம்ஸன் ஆணை எனவும் சொல்கின்றார். வசுதேவரின் ஒரு சிறிய பதட்டமும் கம்ஸனைச் சந்தேகம் கொள்ளச் செய்யும் என்பதால், இப்போது அமைதி காக்கவேண்டியது அவசியம் எனவும் எடுத்துரைக்கிறார். அப்போது கர்காசாரியார் சொல்கின்றார்: “ வசுதேவா, வாசுதேவ கிருஷ்ணனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அவன் நம்மை மட்டுமின்றி தர்மத்தை நிலைநாட்டவும் பிறந்துள்ளான். யாராலும் அவனுக்கு ஒரு சிறிய காயம் ஏற்படும் அளவுக்குத் தீங்கு விளைவிக்க முடியாது. என்றாலும் நாம் கொஞ்சம் கவனமாய் நடக்கவேண்டும். பூதனையின் மரணத்துக்குப் பழிவாங்கவேண்டும் என ப்ரலம்பனைத் தூண்டிக் கொண்டிருக்கின்றான். ஆனால் ப்ரலம்பனோ, கம்ஸனுக்கு பழி வாங்கும் உணர்வைக் கைவிடும்படி அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறான்.

என்றாலும் ஒரு ஆபத்து என்னவென்றால் ஒவ்வொரு வாரமும், அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாவது நான் கோகுலம் சென்று உனக்குக் குழந்தை பற்றிய தகவல்களை அளித்து வருகின்றேன். என்னால் செல்ல முடியாவிட்டால் நந்தன் வந்து சொல்கின்றான். ஆகையால் எவ்வாறேனும் கம்ஸன் இதை அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மேலும் அனைவருடைய கவனமும், பாதுகாப்பும் கிருஷ்ணனைச் சூழ்ந்தே இருப்பதும் அவன் கவனத்துக்குத் தப்பாது. உடனே புரிந்து கொள்வான் கம்ஸன், இவன் தேவகியின் எட்டாவது மகன் என. “ என்றார் கர்காசாரியார்.

“என்ன செய்யலாம் குருவே?” என்று வசுதேவர் கேட்டார். “ ம்ம்ம்ம் நீங்கள் இங்கேயே இருந்தால் கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளுக்காகத் தவிப்பீர்கள். கிருஷ்ணனின் நலத்துக்காகப் பாடுபடுவீர்கள். ஆகவே, இங்கிருந்து சென்று விடுங்கள், இருவருமே. கொஞ்ச நாட்களுக்காவது. ஆம் வசுதேவரே, அது தான் நல்லது, உங்களுக்கு மட்டுமின்றி, வாசுதேவ கிருஷ்ணனுக்கும். “ என்றார் கர்காசாரியார். “ஆஹா, வாராது போல் வந்த மாமணியான என் கண்ணனை விட்டுப் பிரிவதா? நாங்கள் இங்கே இல்லாதபோது எங்கள் அருமைக் கண்மணிக்கு என்ன நேரிடுமோ?” எனத் தவிக்கின்றார் வசுதேவர். “அதான் நான் இங்கேயே தானே இருக்கப் போகின்றேன்.” என்றார் கர்காசாரியார். உடன் தொடர்ந்து,”நான் கோகுலத்திற்கே சென்று தங்கவும் முடியும். என்னை போன்ற வயதான, ஒரு பிராமண ஆசாரியன் கோகுலம் செல்வதையும், அங்கே தங்குவதையும் யாரும் சந்தேகக் கண்ணோடு பார்க்க முடியாது. நான் வேண்டுமானால் நந்தனிடம் முன் கூட்டியே சொல்லிச் சில பூஜைகள், வழிபாடுகள், ஜபங்கள் என நடத்த ஏற்பாடுகள் செய்யச் சொல்கின்றேன். அதை வைத்து நான் கொஞ்சம் அதிக நாட்கள், அல்லது மாதங்கள் கோகுலத்திலேயே தங்க முடியும்.” என்று கர்காசாரியார் கூற அக்ரூரர் அதை முழு மனதோடு ஆதரிக்கின்றார்.

தேவகியின் மனம் உடைந்து போகுமே எனக் கவலைப் படுகின்றார் வசுதேவர். ஆனால் நான்கு தினங்கள் முன்னால் பறவைகள் பிடிப்பவன் கிருஷ்ணனையும் ஒரு பறவை போல் பிடித்து வந்து கம்ஸனிடம் ஒப்படைக்க முயன்று இறுதியில் தன் முடிவை எட்டியதைச் சொல்கின்றார் கர்காசாரியார் ரகசியமாய். கிருஷ்ணனைப் பற்றிக் கவலை வேண்டாம் வசுதேவா, அவன் கடவுள், தன்னைத் தானே காத்துக் கொள்வான், என்றும் உறுதிபடச் சொல்கின்றார். அக்ரூரரோ முடிவே செய்துவிட்டார். ஆனால் வசுதேவரோ அரை மனதுடனே இருக்கின்றார். தேவகிக்கு நான்கு நாட்கள் முன்னால் நடந்த இவ்விஷயம் தெரியவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றார். தேவகி ஏற்கெனவேயே பாதி உயிர் போனவளாய் ஒரு நடமாடும் பொம்மை போல் நடமாடிக் கொண்டிருக்கின்றாள். அவள் ஜீவனெல்லாம் கிருஷ்ணனிடமே இருக்கின்றது. அரைக் கணமே பார்த்திருக்கும் அந்தக் குழந்தையிடமே அவள் தன் உயிரை வைத்திருக்கின்றாள். அவனுக்கு ஏதாவதொன்றென்றால் அவளால் தாங்க முடியாது எனச் சொல்கின்றார் வசுதேவர்.

“கண்ணா, என் கண்மணியே!” என்ற தீனக் குரல் கேட்க மூவரும் திரும்பிப் பார்க்கின்றனர். அரை மயக்கமாய் இருக்கும் தேவகி, நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியவளாய் அங்கே இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டு, “ ஆர்ய புத்ர, நாம் இங்கிருந்து செல்வதே என் கண்ணனுக்கு உயிர் கொடுக்கும் என்றால் உடனேயே கிளம்புங்கள், இங்கிருந்து சென்று விடுவோம், எப்படியோ என் கண்ணன் , என் உயிர், என் கடவுள், உயிரோடு இருக்கவேண்டும், நான் இறந்தால் தான் அவன் உயிர் தரிக்குமென்றால் அதற்கும் நான் தயார்” என்றாள்.

Friday, March 13, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்!

துவாரகை நகரின் நிர்மாணம் மிகவும் வியப்புக்கு உரியதாகும். ஏற்கெனவே சொன்னபடிக்குக் கடலரசனை வேண்டிக் கொண்டு நிலம் பெறப் பட்டதாய் ஐதீகம். செளராஷ்டிர மேற்குக் கடலில் இருந்து, கடல் விலகிச் சென்ற நிலத்தைப் பெற்றுக் கொண்டு, நகரம் ஒரு அற்புதமான திட்டமிடலுடம் கட்டப் பட்டது. முக்கிய நதி கோமதி ஆகும். த்வாரமதி, த்வாரவதி, குஷஸ்தலை எனவும் அழைக்கப் பட்டது இந்த நகரம். அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறையப் பெற்றதாயும், நீர்வளம் கொண்ட பகுதிகளில் குடி இருப்புகள், வியாபாரத் தலங்கள், அகன்ற சாலைகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான, சாலைகள், பொது நிகழ்ச்சிகள் நடக்கும் பொது அரங்கங்கள், அதில் ஒன்று "சுதர்ம சபா" என அழைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிரவும் பெரிய துறைமுகம் ஒன்றும் அங்கே இருந்துள்ளதாய், திரு எஸ்.ஆர்.ராவ் தெரிவிக்கின்றார். http://www.vedamsbooks.com/no14243.htm"பார்க்கவும். "http://video.google.com/videosearch?hl=en&q=The+Lost+City+of+Dwaraka&umவீடியோ காட்சிகளைக் காணலாம்.

மஹாபாரத யுத்தம் நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் துவாரகையைக் கடல் கொண்டது. ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்கி விலகிச் சென்று நிலத்தை அளித்த கடலரசன், துர்வாசரின் சாபத்தால் மீண்டும் அந்த நிலத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டான். இதை முன் கூட்டியே அறிந்த ஸ்ரீகிருஷ்ண வாசுதேவன், யாதவர்களைக் காக்க எண்ணி ப்ரபாஸ க்ஷேத்திரத்துக்கு (சோம்நாத்) அழைத்துச் செல்ல, விதியை வெல்ல முடியாத யாதவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு அடியோடு அழிந்து போக, ஸ்ரீகிருஷ்ணனும், வேடன் ஒருவனின் அம்பால், குதிகாலில் அடிபட்டுத் தன்னுயிரை இழந்தார். விராவல் என்னும் ஊரில் அடிபட்ட கிருஷ்ணனை, அர்ஜுனனும், பலராமனும், மெல்ல, மெல்ல சோம்நாத்துக்குக் கொண்டு வந்ததாயும், அங்கே பலராமன் தன் சுய உருவை அடைந்து ஆதிசேஷனாய் பாதாளம் வழியே வைகுந்தம் சென்றதாயும், ஸ்ரீகிருஷ்ணர் அங்கேயே அப்படியே ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்ந்து தன் இன்னுயிரைத் தானே போக்கிக் கொண்டதாயும், அர்ஜுனன் கலங்கிப் போய்த் திரும்பியதாயும் சொல்கின்றனர். இதை மஹாபாரதம் அர்ஜுனன் மூலம் எவ்விதம் வர்ணிக்கிறதெனில்:

"அன்று வரையிலும் ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனுக்குப் பணிந்து அடங்கி, ஒடுங்கி இருந்த கடலரசன், தன் அலைக்கரங்களால், அந்தப் பூமியைத் தொட்டுத் தொட்டுச் சென்று கொண்டிருந்தான். ஊறு ஏதும் விளைவிக்காமல் இருந்த கடலரசன், திடீரென வேகம் கொண்டு, பெரும் ஆவேசத்துடனேயே, துவாரகை நகருக்குள்ளே புகுந்தான். அவன் வேகம் தாங்க மாட்டாமல் அந்த அழகிய நகரின் மூலை, முடுக்குகள் எல்லாம் கடல் நீரால் நிறைந்தது. அர்ஜுனன் பார்த்துக் கொண்டு இருந்த போதே, மாட, மாளிகைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஸ்ரீகிருஷ்ணரின் அழகிய மாளிகை நீருக்குள் மூழ்கிப் போய், விரைவில் கண்மூடித் திறக்கும் முன்னர் துவாரகை என்பது ஓர் அழகிய முன் ஜன்மத்துக் கனவாகிப் போனது. கரையைத் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல் அப்படியே அங்கேயே தங்கி ஒரு பெரிய ஏரி போல் ஆகி, துவாரகை என்னும் நகரும், அதன் நிகழ்வுகளும், வெறும் நினைவில் மட்டுமே தங்கும் ஓர் பெயராகிப் போனது.

ஹைதராபாத்தில் உள்ள பிர்லா ம்யூசியத்தில் கடல் அகழ்வாராய்ச்சியினர் மேற்கொண்ட தேடுதலில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஒரு மாதிரி துவாரகை நகரை உருவாக்கி அங்கே காட்சிப் பொருளாக வைத்திருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணரின் காலத்தில் துவாரகை நகர் இப்படித் தான் இருந்திருக்கும் என அதன் மூலம் அனுமானிக்கின்றனர். மத்திய ப்ரதேசத்தில் விதிஷா என்னும் இடத்தில் உள்ள பெட்ஸா என்னும் பகுதியில் மேற்கொண்ட ஒரு அகழ்வாராய்ச்சியில் கி.மு. 300-ம் ஆண்டுக் காலத்து கிருஷ்ணர், பலராமர், கிருஷ்ணர் மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரின் சிலைகளைக் கொண்ட ஒரு கோயில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. யாதவர் தலைவன் சாத்யகி என்பவனின் விக்ரஹமும் கிடைத்துள்ளதாய்ச் சொல்லப் படுகின்றது.

கி.மு.113-ம் ஆண்டு வாக்கில் கிரேக்க நாட்டுத் தூதுவர் ஒருவரான ஹீலியோபிஸ் என்பவர் விகஸிலா என்று அப்போது அழைக்கப் பட்ட, இப்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப் இணைந்த பகுதியில் இருந்து செளராஷ்டிராவுக்கு வந்தார். கிருஷ்ணனைப் பற்றி நன்கு அறிந்த அவர் ஸ்ரீகிருஷ்ணனின் அடியாராகி கிருஷ்ணனின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு ஸ்தூபியை எழுப்பியுள்ளார். அது இன்றும் துவாரகையில் காணக் கிடைக்கின்றது. இந்தியக் கடல் அகழ்வாராய்ச்சிக் கழகத்தினர் கடல் கொண்ட துவாரகையின் நினைவுச் சின்னங்களைக் கடலுக்கு அடியிலேயே போய்ப் பார்க்கும் வண்ணம் உரிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாய்ப் பல ஆண்டுகளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் இந்தத் திட்டம் நிறைவேறியதாய்த் தெரியவில்லை. இத்துடன் துவாரகைப் பயணம் நிறைவு பெற்றது. இனி கண்ணன் வந்துடுவான், கதை சொல்ல. அப்பாடானு கவிநயா கொஞ்சம் சந்தோஷப் பட்டுக்கலாம். :)))))))

Thursday, March 12, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்.

வேறே ஏதோ தேடப் போய் துவாரகை அகழ்வாராய்ச்சி பற்றிய சில குறிப்புகள் மட்டும் கிடைச்சது. முதலில் சரியாத் தெரியாமல் இதை எழுத வேண்டாம்னு இருந்தேன். துவாரகையிலும் சரி, பேட் துவாரகாவிலும் சரி, படங்கள் எடுக்க முடியாது. படங்கள் எடுத்துக் குறிப்புகளைக் கொடுப்பது என்பது தனி. சும்மா எழுதறது தனி. ஆதாரங்கள், குறிப்புகளோடு கொடுப்பது தனி இல்லையா?? அதான் கொஞ்சம் தாமதமும் ஆச்சு. நான் தேடியது கிடைக்கலைனாலும், வாராது வந்த மாமணி போல் துவாரகை பற்றிய குறிப்புகள் கிடைத்தன. இனி அக்குறிப்புகளில் இருந்து.

இந்திய தேசீய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983-ம் ஆண்டு முதன் முதலில் இந்த ஆராய்ச்சியைப் பேராசிரியர் திரு எஸ்.ஆர்.ராவ் அவர்களின் தலைமையில் ஆரம்பித்தது. ஆராய்ச்சியின் முடிவுகளைப் பேராசிரியர் The Lost City of Dvarakaஎன்னும் தன்னுடைய நூலில் எழுதி உள்ளார். புத்தகம் முழுதும் படிக்கக் கிடைக்கவில்லை எனினும், அதிலிருந்து ஒரு சில குறிப்புகள் கிடைத்தன. அவை கீழே:

புராண காலத்தில் நடந்ததாய்ச் சொல்லப் படும் ஒரு நிகழ்வுக்கான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பு இதுவெனச் சொல்லப் படுகின்றது. இந்தக் கண்டு பிடிப்பின் மூலம் மஹாபாரதக் கதை நடந்தது எனவும், துவாரகை என்றோர் நகரம் இருந்ததும் உண்மையே என்பதும் உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றது. கி.மு. 1500-ம் ஆண்டில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகே உள்ள சிறு தீவான பேட் துவாரகை ஆகிய பகுதிகளில் ஸ்ரீகிருஷ்ணன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. கடற்கரையில் இருந்து சுமார் அரை மைல் தூரத்தில் நன்கு வடிவமைக்கப் பட்ட ஒரு நகரம் இருந்திருக்கின்றது. சாலைகள் சுமார் 18 மீட்டர் அகலமாயும், ஆறு குடியிருப்புகளும், அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டும், பிரம்மாண்டமான மூன்று கட்டிடத் தொகுப்புகளும் இருந்திருக்கலாம்.

கண்டு பிடிக்கப் பட்ட நகரின் சுவர்களின் தன்மையைக் கொண்டு அவை 3,600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததெனத் தெரிய வருகின்றது. கடலில் திடீரென ஏற்பட்ட சுனாமி போன்ற ஓர் இயற்கைப் பேரழிவால் கடலில் இந்நகரம் மூழ்கி இருக்கலாம். வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கவேண்டும் இந்நகரம். அப்படி வடக்கு நோக்கி விரிவடைந்த பகுதியே பெட் துவாரகை என்றழைக்கப் பட்டிருக்க வேண்டும். இந்தத் தீவு நகரம் கிருஷ்ணர் தன் மனைவியரோடு வந்து தங்கிப் பொழுதைக் கழிக்கும் ஒரு பொழுது போக்குத் தலமாக இருந்திருக்க வேண்டும். மேலும் இந்நகரத்தின் வியாபகத் தன்மை வியப்புக்குரியதாய் உள்ளது. தெற்கே ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கே பிந்தாரா என்ற இடம் வரையிலும் இந்நகரம் வியாபித்திருந்திருக்கிறது. இந்த பிந்தாரா - தாரகா என்ற பகுதியில் தான் துர்வாசரின் ஆசிரமம் இருந்ததாய் மஹாபாரதம் சொல்கின்றது.

Tuesday, March 10, 2009

கொஞ்சம் பொறுத்துக்கோங்க!

விளம்பரம் எதுவும் செய்யாமலேயே விளம்பரம் பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்தால் மக்கள் இம்மாதிரி லகுவான விஷயங்களை உடனே படிக்கிறாங்கனு புரியுது. ஆனால் அதுக்காக உங்களை எல்லாம் விடறதா இல்லை. கண்ணன் எப்போ வருவான்னு கவிநயா மட்டுமில்லாமால் இன்னும் சிலரும் கேட்டிருக்காங்க. கூடிய சீக்கிரம் வந்துடுவான். அதுக்கான ஏற்பாடுகளில் மும்முரமா இருக்கேன். துவாரகை பற்றி இன்னும் ஓரிரு பதிவுகளுக்குப் பின் கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.அஹோபிலம்பதிவுகள் இங்கே. போயிட்டு வந்த பயணம் பற்றிய குறிப்புகள் இங்கே பார்க்கலாம். சோம்நாத் பற்றியும் அதே வலைப்பக்கத்தில் வரும். 15 தேதி வரையில் கொஞ்சம் பொறுக்கவும். நன்றி.

Monday, March 09, 2009

ஆனந்தம் பொங்கும் விளம்பரங்கள்!

அதியமான் எழுதி இருக்கும் அற்புதமான கவிதை டெம்ப்ளேட்டைப் பார்த்ததும் கண்ணிலே தண்ணி வந்துடுச்சு. ஏற்கெனவே கவிநயாவின் கவிதையைப் படிச்சுட்டுக் கண்ணிலே தண்ணி வந்தது. தேனொழுகும் என்ற வார்த்தைகளில் மனம் மட்டுமில்லாமல் கண்ணும் கலங்க அங்கே போனால் ஒரு அருவியே வந்தது. அருமையான டெம்ப்ளேட். அவர் மனசை உணர்த்த இதைவிடச் சிறந்த ஒன்றில்லை. வாழ்த்துகளும், ஆசிகளும் அர்ச்சனாவுக்கும், அவங்க அப்பாவுக்கும்.

இன்று புதிதாய் வந்திருக்கும் ஏர்டெல் விளம்பரமும் அழகிய கவிதை. நான் இன்னிக்குத் தான் பார்த்தேன். ஏற்கெனவே வந்தாச்சா தெரியலை. அப்பாவுக்கு செல்லில் பேசக் குழந்தை போகின்றான் ஒருத்தருக்கும் தெரியாமல். தாத்தா தூங்க, அம்மா சமைக்க, மொட்டை மாடிக்குப் போய்த் தனியாய் உட்கார்ந்து அப்பாவோடு பேசறான். விளையாட்டுக் கைபேசியில். அந்தப் பையனின் முகபாவங்கள் அற்புதம். "எனக்கு எப்போ லீவு வரும்"னு கேட்கிற அதே பையன். மெல்லிய சிரிப்பும், குழப்பமும் முகத்தில் கொஞ்ச வெட்கம் மீதூற அம்மாவைப் பார்க்கும்போது மனதை அள்ளுகின்றது. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை செய்யுதோ இல்லையோ விளம்பரங்கள் அருமை. ஆனந்தம் பொங்கும் ப்ரூ விளம்பரங்களைப் போல. காலையிலே இருந்தே அந்த ஏர்டெல் விளம்பரப் பையன் தான் மனதில் நிற்கின்றான்.

Friday, March 06, 2009

சோதனைப் பதிவு

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்!

உஷத் காலம் எனப்படுவது விடிகாலை மட்டுமில்லாமல், சூரிய அஸ்தமனத்தின் பின்னே வரும் காலத்தையும் குறிக்கும் எனச் சொல்லுவதுண்டு. காலை, மாலை ஆகிய நேரங்கள் ஆரம்பிக்கும், பகல் ஆரம்பிக்கும், இரவு ஆரம்பிக்கும் நேரத்தின் தேவியை உஷா எனச் சொல்லுவார்கள். இந்தப் பிரதேசம் இந்தியாவின் மேற்குக் கோடியில் இருப்பதால் சூரியன் அஸ்தமிக்கும் இடம், அல்லது சூரியன் இங்கே அஸ்தமிக்கின்றான் என்றாலும் வேறோர் இடத்தில் அதே சமயம் உதயம் ஆகிக் கொண்டிருப்பதால், அவன் சுற்றுவதைக் குறிக்கும் வண்ணமும் ஓகா எனப் பட்டது. தற்போது மதுரையில் இருந்து ஓகா வரையிலும் ரெயில் செல்லுகின்றது. இந்தப் பிரதேசத்துக்கே ஓகா மண்டலம் எனப் பெயர் உண்டு. ஸ்ரீகிருஷ்ணரின் பேரன் ஆன அநிருத்தனின் மனைவியின் பெயரும் உஷா, அதனாலும் இந்தப் பெயர் வழங்கப் பட்டிருக்கலாம்.


துவாரகை எவ்வாறு நிர்மாணிக்கப் பட்டது என்பதை இன்னும் சில நாட்களில் கண்ணன் வருவானில் பார்க்கப் போகின்றோம், என்றாலும், இங்கே கொஞ்சம் சுருக்கமாய். யாதவ குலத்தைக் காக்க வேண்டிக் கண்ணன், அனைத்து யாதவர்களையும் ஒன்று திரட்டி, மதுராவில் இருந்து அவர்களை மேற்கே கொண்டு வந்து சேர்த்தான். வழியில் இறந்தவர்கள் பலர். என்றாலும் அனைத்து யாதவர்களும் தங்கள் கால்நடைச் செல்வங்களுடன், மட்டுமின்றி தங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பொருட்களுடனும், தங்கள் வீடு, வாசல்களை மதுராவில் காலியாக விட்டு விட்டு இங்கே வந்து சேர்ந்தனர். கருடனின் ஆலோசனையின் பேரில் இந்த நகரம் இங்கே இருந்த அசுரர்களைக் கொன்று விட்டு நிர்மாணிக்கப் பட்டதாய்ச் சொல்கின்றனர்.

விஸ்வகர்மா நகரை நிர்மாணித்ததாயும் சொல்லுகின்றனர். மஹாபாரதத்திலே, விஷ்ணு புராணத்திலே, பாகவதத்திலே என அனைத்திலும் இந்த நகரின் நிர்மாணத்தைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது.


ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சமுத்திரத்தை ஒதுங்கிப் போகச் சொல்லிக் கேட்டுத் தியானம் செய்தது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. "ஏ, சமுத்திர ராஜனே, நீ என்னிடம் அன்பு பூண்டிருப்பதும், மரியாதை காட்டுவதும் உண்மையானல், பனிரண்டு யோஜனை தூரம் இங்கிருந்து நீ விலகிச் செல்வாயாக! நீ இடம் கொடுத்தாயானால், என்னுடைய மக்களுக்கும், எங்கள் சைன்யங்களுக்கும், கால்நடைச் செல்வங்களுக்கும் மிக்க உதவியாய் இருக்கும். மேலும் இங்கே அழகிய மாடங்களும், கோயில்களும், உத்தியானவனங்களும் எடுக்கப் படும்." என்று வேண்டிக் கொள்ள, வாயுவின் உதவியோடு சமுத்திர ராஜன் விலகிச் செல்ல அங்கே ஒரு அழகான நகரம் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்டது. துவாரகா என்ற பெயர் ஏன் ஏற்பட்டதெனில், துவார்= வாயில், கதவு, என அர்த்தம் கொள்ளலாம். இந்த இடத்தில் வாயில் என்பதே பொருந்துகின்றது. கா= என்றால் பிரம்மா எனப் பொருள். பிரம்மனைக் காணும் வாயில் என்னும் அர்த்தத்தில் இந்தப் பெயர் அமைக்கப் பட்டதாய்ச் சொல்கின்றனர். இது லெளகீக விளக்கமாய் இருந்தாலும் ஆன்மீகச் சான்றோர் நம் கர்மங்களைத் தொலைத்துவிட்டு நமக்கு முக்தியைக் கொடுக்கும் வாயில் இது எனச் சொல்கின்றனர். அதனாலேயே துவாரகையை முக்திதாம்களில் முக்கியமான ஒன்றாய்ச் சொல்லுகின்றனர்.

ஸ்கந்தபுராணத்தில் சனகாதி முனிவர்கள் இங்கே வந்து விஷ்ணுவைக் குறித்துத் தவம் இருந்ததாயும், அந்தத் தவத்தின் பயனாலேயே இந்தப் பெயர் ஏற்பட்டதெனவும் சொல்லுகின்றது. மேலும் மரீசி, அத்ரி, ஆங்கிரஸர், புலஹர், க்ருது போன்ற முனிவர்கள் இங்கே இருந்து தங்கள் தவங்களைச் செய்துள்ளனர். இந்த இடம் பஞ்சநதி என்ற பெயரில் வழங்கப் படுகின்றது. கோமதி நதி இங்கே ஓடுகின்றது.சனகாதி முனிவர்களால் சித்தேஷ்வர் மஹாதேவரும், ஸ்ரீகிருஷ்ணரால் மஹாபத்ரகாளி சக்தி பீடத்திலும் வழிபடப் பட்டுள்ளது. சமுத்திரக் கரையில் உள்ள இந்த நகரம் காலதேச வர்த்தமானங்களாலும், பல்வேறு விதமான இயற்கை மாற்றங்களாலும் மாற்றத்துக்கு உட்பட்டிருந்தாலும் ஸ்ரீகிருஷ்ணர் இங்கே இருந்தார் என்பதற்கான சான்றுகள் சமுத்திரத்தை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டு வருவதன் மூலம் நிரூபணம் ஆகி வருகின்றது.

எப்படியாவது போஸ்ட் போடுவோமில்லை?

எங்க வீட்டிலே எலக்ட்ரானிக் பொருட்களோ, இல்லை எலக்ட்ரிகல் பொருட்களோ தொந்திரவு கொடுத்தால் மெகானிக் வரும்போது அது என்னமோ தெரியலை, சொல்லி வச்சாப்போல ஒழுங்கா வேலை செய்ய ஆரம்பிக்கும். சளபுள, சளபுள னு பேசிட்டு இருக்கிற குழந்தைங்க, டீச்சர்(துளசி இல்லை) தலையைக் கண்டதும் அமைதியா ஆகிறாப்போல. தண்ணீர் இறைக்கும் பம்ப்செட் ஒரே தகராறு. ஆனால் மெகானிக் தொட்டதுமே ஒழுங்கா சத்தம் கொடுத்துட்டு ஓடும். எடுக்காத குழல் விளக்குகள் பளிச்சுனு எரியும், (மின்சாரம் இருந்தால் தான், அதிலே சந்தேகம் இல்லை)அது போல ஒரே சத்தம் போட்டுட்டு இருந்த ஏசி, மெக்கானிக் வந்தால் இருக்கிற இடமே தெரியாம, ஓடுது. இந்த கணினியும் அப்படித் தான் நிபுணரை வரச் சொல்லி இருக்கிறது தெரிஞ்சோ என்னமோ, இன்னிக்குக் கொஞ்சம் ஒழுங்கா இருக்கு. இந்தக் கிருஷ்ணமூர்த்தி வேறே, இன்னுமா யுத்தம் முடியலைனு கேட்டுட்டு இருக்கார். போஸ்ட் இரண்டு முறை போட்டும் இரண்டு முறையும் பப்ளிஷ் ஆகலை. அஹோபிலம் போஸ்ட் மட்டுமே வந்திருக்கு. இன்னிக்கு மறுபடி முயல்கின்றேன். நல்லவேளையா, எழுதி வச்சது நல்லதாப் போச்சு, இல்லைனா திரும்ப அது வேறே ஒரு அதிகப் படி வேலை. சாயந்திரத்துக்குள்ளே கட்டாயமாய்ப் போட்டுடறேன்.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், என்று கண்ணன் பத்தின போஸ்ட் அநேகமாய்ப் பெண்களுக்கே பிடிக்குதுனு நினைக்கிறேன். ஒவ்வொருத்தரும் அவங்க குழந்தையை வளர்த்ததோட ஒப்பிட்டுப் பார்த்து சந்தோஷம் கொள்கின்றார்கள். பல பெண்களும் தனி மெயிலில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தமைக்கு நன்றி. இன்று மாலைக்குள் துவாரகையின் கதை போஸ்ட் போட்டுடறேன்.

Monday, March 02, 2009

ப்ளாகரோடு ஒரு மல்யுத்தம்!

//பாடங்கள் ஆரம்பம், பரிட்சையும் எழுதணும்!
posted by கீதா சாம்பசிவம் at எண்ணங்கள் - 5 days ago
லீவு முடிஞ்சு வந்தாச்சு. இனிமேல் அடிக்கடி இப்படி லீவ் போட்டுட்டுப் போக மாட்டேன்னு ம.பா. கிட்டே உறுதியாச் சொல்லியாச்சு. இப்படி அடிக்கடி போனால் உடனேயே சிஷ்ய(கே)கோடிங்க ஏற்கெனவே எதுடா சாக்குனு காத்துட்டு இருக...//

follow-up list ல follow or sign in அப்படினு போட்டிருக்கே, என்னனு பார்க்கலாம்னு ஆன்மீகத்தில் sign in எண்ணங்கள் follow இரண்டிலேயும் க்ளிக் பண்ணித் தொலைச்சேன். இப்போ என்னடான்னா என்னை நானே follow பண்ணிட்டு இருக்கேன். தொல்லை தாங்கலை ப்ளாகரோட. ஏற்கெனவே கமெண்ட் கொடுத்தால் விரட்டிட்டு இருக்கு. யாருக்கும், கமெண்ட் கொடுக்க முடியலை, என்னோட பதிவுகளிலே போடறவங்களுக்கு கமெண்டுக்கு பதில் கொடுத்தாலும் பக்கம் waiting for about: blank அப்படினு போய் மறுபடியும் எக்கச்சக்கமா tabs open ஆகி அவை எல்லாம் மூடறதுக்கே நேரம் ஆயிடுது. நோட்பாடில் ஒத்துக்கும் போலிருக்கு. பார்க்கலாம், கொஞ்ச நாளைக்கு. நானும் மவுஸ்பாடை மாத்தி எல்லாம் பார்த்தாச்சு. என்னத்தை போஸ்ட் போடறது?? ஒண்ணுமே புரியலை! :(((((((((

Sunday, March 01, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்

கண்ணனை இடைக்கோலத்தில் கண்டு மகிழ்ந்த மக்கள் ஆடிப் பாடினார்கள். பெண்கள் தங்கள் கையில் கொண்டு வந்திருந்த இனிப்புப் பலகாரங்கள், வெண்ணை, பால், தயிர் போன்றவற்றைக் கண்ணனுக்கு நேரே காட்டி, " முரளிதரா, கிரிதர கோபாலா, இந்தா, எடுத்துக்கோ" என்று காட்டிக் கெஞ்சினார்கள். தங்கள் இரு கைகளாலும் கண்ணனுக்கு திருஷ்டி கழித்து நெட்டி முறித்தனர். வித, விதமாய்த் துணிகள் வாங்கி வந்து அளிக்கின்றனர். அங்கே இருக்கும் கோயில் ஊழியர்களும் அவற்றை வாங்கிப் போய்க் கண்ணன் காலடியில் வைத்துத் திரும்பப் பிரசாதமாய்க் கொண்டு வந்தனர். கோயில் சார்பிலும் பெரிய பெரிய அண்டாக்களில் பிரசாதங்கள், அநேகமாய் இனிப்புப் பலகாரம் தான். இரவில் மட்டும் கண்ணனுக்கு ஜீரணம் ஆகணும்கிறதுக்காக மருந்துக் கஷாயம். நைவேத்தியம் செய்து, கோயிலைச் சார்ந்த அலுவலகத்துக்குச் சென்று பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் விநியோகிக்கப் படுகின்றது.

வெளியாட்கள் கொண்டு வரும் பிரசாதங்களையும் பெரிய அளவில் இருந்தால் அங்கேயே விநியோகம் செய்து விடுகின்றனர். பிரசாதங்களைக் கொடுக்கும்போதும், வாங்கும் போதும், "ராதே, ராதே, கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று சொல்லிக் கொண்டே கொடுக்கின்றனர், வாங்குகின்றனர். எங்களுக்குச் சர்க்கரை போட்ட வெண்ணெய் கிடைத்தது. திவ்ய தரிசனத்தை ஆற, அமர, எந்தப் பிடுங்கலும் இல்லாமல், ஜரிகண்டியோ, போ, போனு பிடித்துத் தள்ளுதலோ இல்லாமல் பார்த்துவிட்டு, நிம்மதியாக உள், வெளிப் பிரகாரங்களையும் சுற்ற முடிந்தது. காவலர்கள் இருவர் மட்டுமே சந்நிதிக்கு அருகே. ஒருவர் தனி வழியில் நின்று பெண்களை மட்டும் அவர்களுக்கென்றிருக்கும் தனிவழியில் உள்ளே விடுகின்றார். மற்றவர்கள் அனைவரும் அதற்குப் பின்னால் நின்று கொண்டு தரிசனம் செய்யவேண்டும். அங்கே பெயரளவில் ஒருத்தர் வாயிலருகே நிற்கின்றார். கூட்டமும் கட்டுக் கோப்பாய் நிற்கின்றது. ஆரத்தி முடிந்ததும் முன்னால் நிற்பவர்கள் யாருமே சொல்லாமல் தாங்களாகவே இடத்தைக் காலி செய்து பின்னால் வருபவர்களுக்கு அளிக்கின்றனர். இறைவனின் திருநாமம் தவிர வேறு பேச்சே இல்லை.

வெளிப்பிரகாரத்தில் கடற்கரையை ஒட்டினாற்போன்ற வாயில் பக்கமாய் பழைய கோயிலின் இடிந்த கட்டிடங்களின் மிச்சம் உள்ளது. அவற்றில் வெகு நேர்த்தியான சிற்பங்கள் பல உள்ளன. படம் எல்லாம் எடுக்க முடியவில்லை. உள்ளே நுழையும்போதே காமிரா, செல்போன், தோல்பை, கைப்பை உட்படக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டே உள்ளே செல்ல முடியும். கடுமையான சோதனைக்குப் பின்னர் மெடல் டிடெக்டரையும் கடந்தே உள்ளே செல்ல முடியும். ஆரவாரமின்றிப் பணி புரிகின்றனர் காவலர்கள். நாம் கொடுக்கும் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு லாக்கரில் பூட்டி விட்டுச் சாவியையும், டோக்கனையும் கொடுப்பதும் காவலர்தாம். வெளிக் கோபுரத்தை மட்டுமே எடுத்துள்ளோம். இந்த துவாரகை சார்தாம் எனப்படும் க்ஷேத்திரங்களில் ஒன்றாகவும், ஏழு புரிகளில் ஒன்றாகவும் கருதப் படுகின்றது. சார்தாம் எனப்படுபவை துவாரகை, பத்ரிநாத், மதுரா, புரி ஆகியவை ஆகும். ஏழு புரிகளில் அயோத்யா, மதுரா, துவாரகை, காசி, காஞ்சி, அவந்திகா, புரி ஆகியவை ஆகும்.
"அயோத்யா, மதுரா மாயா, காஷி காஞ்சி, அவந்திகா
புரி த்வாரதி சைவ ஸப்தைதா: மோக்ஷதாயிகாஹா" என்று ஸ்கந்தபுராணத்தில் இவை குறிப்பிடப் படுகின்றன. பல்வேறு புராணங்கள் துவாரகையை குஷஸ்தலை, கோமதி துவாரகை, சக்ரதீர்த்தம், ஆனர்தக் க்ஷேத்திரம் மற்றும் ஓகா மண்டலம் அல்லது உஷா மண்டலம் என அழைக்கப் படுகின்றது.

ரைவத மன்னன் குஷம் எனப்படும் தர்ப்பைப் புல்லை சமுத்திரத்தின் மத்திய பாகத்தில் இருந்து எடுத்து, இங்கே ஒரு மிகப் பெரிய யக்ஞம் செய்ததாகவும் அதனால் குஷஸ்தலை என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று. மற்றொன்று குஷன் என்னும் பெயர் கொண்ட அரக்கன் இங்கே தவம் செய்துகொண்டிருந்த ரிஷி முனிவர்களைத் துன்புறுத்தியது கண்ட ரிஷி, முனிவர்கள் பிரம்மாவிடம் முறையிட, அவர் மஹாபலியைச் சம்ஹாரம் செய்த திரிவிக்கிரமனை வேண்ட, திரிவிக்கிரமன் வந்து குஷனை பூமியில் புதைக்கவும், அவன் உடலுக்கு மேலே அவன் அனுதினமும் பூஜிக்கும் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து அந்த லிங்கத்திற்குக் குஷேஸ்வர் மஹாதேவ் என்ற பெயரும் அளிக்கின்றார். துவாரகை யாத்திரை வருபவர்கள் முதலில் குஷேஸ்வரைப் பார்த்துவிட்டே வந்து கண்ணனைத் தரிசனம் செய்யவேண்டும் என்றும், இல்லை எனில் யாத்திரை பூர்த்தி ஆகாது எனவும் ஐதீகம். இந்தக் குஷன் என்னும் அரக்கனின் பெயராலும் இந்தத் தலம் குஷஸ்தலை என அழைக்கப் பட்டு வந்தது.

இனி கண்ணன் இங்கே கோயில் கொண்டது எவ்வாறு எனப் பார்ப்போமா???


பதிவுகள் மிகத் தாமதமாயும், மெதுவாயும் வருவதற்கு மன்னிக்கவும். முக்கியக் காரணம் மின்சாரம் இல்லாதது தான். 4 மணி நேரம் என்று சொல்கின்றார்கள். ஆனால் அதற்கு மேலேயே மின் தடை இருக்கின்றது. கிடைக்கும் நேரம் எழுதி வச்சுட்டுப் பின்னர் எப்போ வருதோ அப்போ பதிவிடணும். இன்னும் போகப் போக மின்சார விநியோகம் இன்னும் மோசமாய் மாறும் போலவும் இருக்கு! சுதந்திரம் வந்து அறுபது வருஷம் ஆகிறது. ஆனால் இன்னும் நம்மால் தடை இல்லாமல் மின்சாரம் பெற முடியவில்லை. இலவசங்களுக்குச் செலவிடும் கோடிகளில் மின்சாரம் தயார் செய்ய முதலீடு செய்துவிட்டு அவர்களுக்கு அதன் மூலம் வேலை வாய்ப்பும் கொடுக்கலாம். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யாரு? சில சமயம் என்ன தோன்றுகின்றதென்றால் இவற்றிலெல்லாம் தன்னிறைவு பெற்றோமானால் அப்புறம் எதைச் சொல்லி வாக்குக் கேட்பது எனக் கட்சிகள் நினைக்கின்றனவோ என்று தோன்றுகிறது. இந்தப் பதிவில் இதை எழுதியமைக்கு மிக மன்னிக்கவும். வியாழன் அன்று இரவு பத்து மணியில் இருந்து மின் தடை, மின் தடை, மின் தடை தான்.