எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 29, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

வைவஸ்வதபுரியில் கண்ணன்!


மீண்டும் ஒருமுறை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் இது திரு முன்ஷிஜி அவர்கள் எழுதியவை என. மொழிபெயர்ப்பில் வேண்டுமானால் சில குறைபாடுகள் இருக்கலாம். மூலத்தில் இருந்து மாற்றம் இல்லை. கடைசியாய் எழுதியது இங்கே
************************************************************************************

கண்ணன் தனக்கெதிரே தோன்றிய கரிய நிழலைக் கண்டதுமே எச்சரிக்கை அடைந்தான். சட்டென ஒரு குதி குதித்து எழுந்துவிட்டான். மின்னல் வேகத்தில் தனக்கெதிரே வீசப் பட்ட வாளைப் பிடித்திருந்த கையைத் தன் கரங்களால் பிடித்துவிட்டான். அது வேறு யாரும் இல்லை. பாஞ்சஜனாவே தான். கண்ணன் அடுத்து எதுவும் செய்யும் முன்னர் பாஞ்சஜனாவின் பின்னிருந்து மற்றொரு உருவம் எழுந்து வந்து பாஞ்சஜனாவை அப்படியே தன்னிரு கரங்களாலும் தூக்கிக் கடலுக்குள் வீசியது. கண்ணன் ஏதும் செய்வதறியாது திகைத்து நிற்கக் கப்பல், எதுவுமே நடவாதது போல் மேலே சென்று கொண்டிருந்தது. சமுத்திரத்தின் அலைகளும் அந்த நிகழ்வுக்குப் பயந்தோ என்னமோ, ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொண்டிருந்தன. விண்மீன்களோ, சற்றே கவலையுடனும், கொஞ்சம் சந்தோஷத்துடனும் நடந்ததையும், இனி நடக்கப் போவதற்கும் தாங்களே சாட்சி எனக் கண் சிமிட்டித் தெரிவித்துக்கொண்டிருந்தன.

ஆயிற்று. எங்கும் மகிழ்ச்சி! சுதந்திரம். வயிறு நிறைய உணவு. ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம். பாஞ்சஜனாவால் சேமித்து வைக்கப் பட்டிருந்த உணவுப் பண்டங்கள் தாராளமாய் விநியோகம் செய்யப் பட்டு உணவு சமைக்கப் பட்டுக் கப்பலின் அனைத்து ஊழியர்களுக்கும் வயிறு நிறைய உணவு கொடுக்கப் பட்டது. புத்தாடைகள் அளிக்கப் பட்டன. பாஞ்சஜனாவால் கப்பல் ஊழியர்கள் துணையோடு கொள்ளையடிக்கப் பட்ட பெரும் செல்வம் பகிர்ந்தளிக்கப் பட்டது. மறைத்து வைக்கப் பட்டிருந்த பெரும் ஆயுதங்கள் வெளிக் கொணரப் பட்டுக் கப்பல் ஊழியர்களுக்கு அவரவர் திறமைக்கேற்ற பயிற்சியும் அளிக்கப் பட்டது. உத்தவன் இதற்குப் பொறுப்பெடுத்துக்கொண்டான். கிருஷ்ணனும் பாஞ்சஜனாவின் மறுமகன்கள் இருவருக்கும், கப்பல் மாலுமியின் பேரன் குக்குராவிற்கும், தச்சன் ராதுவிற்கும் தன் சொந்தப் பொறுப்பில் ஆயுதப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தான். கண்ணன் பாஞ்சஜனாவின் மறுமகன்களுக்குக் கப்பல் அவர்கள் பொறுப்பிலேயே இருக்கும் என்றும் பிக்ருவே மாலுமியாக நீடிப்பான் எனவும் உத்தரவாதம் அளித்தான். ஹூக்குவையும், ஹூல்லுவையும் காவலுக்கு நியமித்தாலும், எவரையும் காரணமில்லாமல் துன்புறுத்தவோ, சாட்டை அடிகளோ கொடுக்கப் படக் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தான்.

கண்ணனும், உத்தவனும் அங்கே இருந்த உடைகளிலிருந்து தங்களுக்கும் சிறந்த உடைகளையும், ஆபரணங்களையும் எடுத்துக்கொண்டதோடு நீண்ட வாள்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். வைவஸ்வதபுரி நெருங்கிக் கொண்டிருந்தது. பிக்ரு அந்த நகரைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் தனக்குத் தெரிந்தவரை கண்ணனுக்குக் கூறினான்:

“சூரியனின் நாடு, நகரம் என அழைக்கப் பட்ட வைவஸ்வதபுரி, நாகலோகத்தில் அமைந்துள்ளது. படாலா என்னும் நாட்டிற்கு அருகே உள்ள இந்த நாடு முற்றிலும் நாககன்னிகைகளால் ஆளப் படுகிறது. இவர்களைச் சாமானியப் பெண்கள் என நினைக்கவேண்டாம். ஆண்களை விடத் தீரமாய்ப் போர் புரியும் வல்லமை கொண்டவர்கள். இதன் அரசியானவள் தேவி பராசக்தி, ஜகதம்பாவுக்கு இணையாகச் சொல்லப் படுகிறாள். அவளை “அம்மா” என்றே அழைக்கின்றனர். சர்வ சக்தியும் வாய்ந்த அந்தப் பராசக்தியே இவள்தான் என நம்பவும் செய்கின்றனர். அவள் கணவன் இந்த நாட்டின் அரசன் எனப் பெயரளவுக்கு அழைக்கப் பட்டாலும், அவனும் இந்த மஹாராணியின் முதல் சேவகன் என்றே கருதப் படுகிறான். ராணியை மீறி இந்த அரசனால் எதுவும் செய்ய முடியாது. இந்த நாட்டின் இளவரசிக்கு மணம் புரிவிக்க என்றே புநர்தத்தன் பெரும் விலை கொடுத்து இந்த ராணியால் பாஞ்சஜனாவிடமிருந்து வாங்கப் பட்டான்.”

இவையே பிக்ருவுக்குத் தெரிந்தவை. கண்ணன் அனைத்தையும் கேட்டுக் கொண்டான். சில நாட்களில் அவர்கள் கடலும், நதியும் சேரும் கடற்கழியில் அமைந்துள்ள வைவஸ்வதபுரிக்கு அருகே வந்து சேர்ந்தார்கள். தூரத்திலிருந்து நகரம் சுற்றிலும் கோட்டைச் சுவர்களால் சூழப் பட்டுத் தெரிந்தது. மாலைச் சூரியனின் அந்திச் சிவப்பால் அந்தச் சுவர்கள் பொன்னாலானது போன்ற தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது. துறைமுகத்தில் கணக்கற்ற படகுகள் காணப்பட்டன. சரக்குகளை இறக்குமிடமும், அங்கிருந்து கோட்டைக்குள் நுழையும் படிகளும் காணப்பட்டன. கப்பல் துறைமுகத்தை நெருங்க, நெருங்கக் கரையில் ஒரு பெருங்கூட்டம் தூரத்தில் இருந்தே இந்தக் கப்பலைப் பார்த்துவிட்டு வரவேற்கக் காத்திருந்தது தெரிந்தது. ராணியின் அநுமதி வாங்க வேண்டும் அல்லவா உள்ளே நுழைய? கண்ணன் அதற்கென பாஞ்சஜனாவின் மறுமகன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். உள்ளூர் மொழியை அறிந்தவன் அவன். அவனோடு உத்தவனையும், ராதுவையும் அனுப்பி வைத்து ராணியின் அநுமதியை வாங்கி வரச் சொன்னான். கூடவே அங்கிருந்த அதிகாரிகளுக்கெனச் சிறு சிறு பரிசுகளையும் கொடுத்திருந்தான். ஒரு படகில் மூவரும் கிளம்பிக் கரைக்குச் சென்றனர்.

அடுத்த நாள் காலையில் துறைமுகத்திலிருந்து நகருக்குச் செல்லும் வழியில் ஒரு பெரும் ஜனக்கூட்டம் கண்ணனையும், கப்பலில் வந்த மற்றவர்களையும் வரவேற்க நின்றது. உத்தவனும் கண்ணனை வரச் சொல்லி ராணி கொடுத்த அநுமதியோடும், அந்த அநுமதியைக் கொடுத்த ஒரு பெண் அதிகாரியோடும் கப்பலுக்குத் திரும்பி வந்தான். உத்தவனோடு வந்திருந்த அந்தப் பெண்மணிக்கு நடு வயதிருக்கும். தங்கத்தாலான சில ஆபரணங்களே அவள் உடலை அலங்கரித்தது. அவையும் நாகப் பாம்புகளைப் போல் செய்யப் பட்டிருந்தன. அவள் உடலையே நாகங்கள் அலங்கரித்தாற்போன்ற தோற்றத்தில் காட்சி அளித்தது. அவள் தலையைக் கட்டி இருக்கும் விதமும், அதில் அலங்கரிக்கப் பட்டிருந்த தங்க ஆபரணமும், படம் எடுத்தாடும் நல்ல பாம்பின் படத்தை ஒத்திருந்தது. பாம்பின் சீறும் நாக்கைப் போலவே அந்த ஆபரணத்திலிருந்தும் சிவந்த ஒளி வீசும் கற்கள் தென்பட்டன. அவள் ஓர் உயர் அதிகாரி என்னும் தோற்றத்தையும் அளித்தாள். பிக்ருவும் அதை உறுதி செய்தான். ஆனால் கண்ணன் ஓரளவுக்கு இவற்றை எல்லாம் எதிர்பார்த்திருந்தான். பிக்ருவின் முன் கதைச் சுருக்கமும் அதைப் புரிந்து கொள்ள கண்ணனுக்கு உதவியிருந்தது. ஆகவே அவன் இந்தப் பெண்மணியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடையவில்லை.

இந்த நாடு பெண்களால் ஆளப்படுவதும், ஆட்சிமுறை பெண்வழியில் இருப்பதும் கண்ணன் அறிந்து கொண்டிருந்தான். இந்த அன்னை ராணிக்குப் பின்னர் அவள் மகள் அடுத்த அன்னை ராணியாவாள். இப்படியே மகள் வழி இந்த ஆட்சி முறை தொடரும். இந்தப் பெண்கள் ஆட்சியில் அரசனாகப் பதவி வகிக்கும் ஆண் பெயரளவுக்குத் தான் அரசன் என்பதும், ராணிக்குப் பிடிக்கவில்லையானால் அவன் உயிருக்கும் ஆபத்தே வரும் என்பதையும் கண்ணன் புரிந்து கொண்டான். உத்தவனைப் பார்த்தான்.

"கண்ணா, நீ இங்கே இந்த நாட்டுக்கு வருவாய் என இந்த நாட்டு அன்னை ராணி ஏற்கெனவே ஆரூடம் கூறிவிட்டாள். அதிலும் பல மாதங்கள் முன்னாலேயே!" என்றான் உத்தவன்.

இப்போது கண்ணனுக்கு உண்மையாகவே அதிர்ச்சி! "என்ன????" என்றான்.

8 comments:

  1. hmm intha kathai ellam nan padichadu illa. break kodukkama seekiram mudinga paati

    ReplyDelete
  2. கண்ணன், அருமையாக கதை சொல்கிறான்....... :-)

    ReplyDelete
  3. எல்கே தாத்தா, ரொம்ப இளைச்சுப் போயிட்டீங்க! த.ம.வைச் சமைச்சுப் போடச் சொல்லிச் சாப்பிடுங்க, எத்தனை நாளைக்கு உங்க சமையலே?? சகிக்காது இல்லை?? :P:P:P:P நன்னி ஹை!

    ReplyDelete
  4. வாங்க சித்ரா, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹை!

    ReplyDelete
  5. @geetha paati

    ithu oru varusatthuku munnadi eduta photo appadithan irukum

    ReplyDelete
  6. தலைவி ஸ்கூல் போயிட்டு வந்துட்டிங்க போல!! ;))

    படிச்சாச்சி ;))

    ReplyDelete
  7. எல்கே தாத்தா, ஒரு வருஷத்துக்கு முன்னாடியா? அப்போ இப்போ?? ஹிஹிஹி, கிங்காங் மாதிரியா? தாராசிங் மாதிரியா? :P

    ReplyDelete
  8. வாங்க கோபி, ஸ்கூல் போயிட்டு வந்துட்டேன். :D

    ReplyDelete