Thursday, September 16, 2010

வந்தாச்சு, வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு! 8

பிள்ளையார் தும்பிக்கை மாதிரி எனக்கும் மூக்கு இருந்திருக்கலாமோ என்னமோ! இந்தச் சின்ன மூக்கின் வழியா மூச்சுக்காற்றுப் போயிட்டு வரதுக்கு ரொம்பக் கஷ்டப் படறது. சீக்கிரம் சரி பண்ணுங்கனு பிள்ளையார் கிட்டே சொல்லி வச்சிருக்கேன். இனி ச்யமந்தக மணி தொடரும். தாமதம் ஆனதுக்கு மன்னிக்கவும். எழுதி வச்சதை அப்லோட் பண்ண முடியாம உடம்பு படுத்தலும் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணினால் ஆற்காட்டார் படுத்தலும் தாங்கலை! தினம் நாலு மணி நேரம் அறிவிக்கப்படாதக் கட்டாய மின் தடை! :(
****************************************************************************************கிருஷ்ணர் குகையினுள் நுழைந்தபோது ஜாம்பவதி தன் தம்பியான சுகுமாரனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள். அதை ஒரு ஸ்லோகமாய்க் கீழே காணலாம்.

ஸிம்ஹ: ப்ரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:
ஸுகுமார்க மா ரோதீ தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:”

இந்த ஸ்லோகம் ஸ்காந்தத்தில் காணப் படுவதாய்த் தெரிய வருகின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், “சிங்கமானது ப்ரஸேநனைக் கொன்றது. அந்தச் சிங்கத்தை ஜாம்பவான் கொன்றார். ஸ்யமந்தகமணி இப்போது உனக்குத் தான் ஸுகுமாரனாகிய என் அருமைக் குழந்தையே, நீ இனி அழாதே!” என்று அர்த்தம் தொனிக்கும்படிப் பாடிக் கொண்டிருந்தாள் ஜாம்பவதி. கிருஷ்ணருக்கு நடந்தது என்னவென்று புரிந்துவிட்டது. உள்ளே நுழைந்தார். கிருஷ்ணரைக் கண்டதுமே ஜாம்பவதிக்கு அவர் மேல் இனம் புரியாத மரியாதையும், அன்பும் ஏற்பட்டது. என்றாலும் யாராலும் நுழையமுடியாத இந்தக் காட்டுக் குகைக்குள்ளே இவர் வந்தது எப்படி? இவர் யாராயிருக்கும்? தந்தையான ஜாம்பவான் கண்டால் இவரை என்ன செய்வாரோ என எண்ணி அஞ்சினாள். ஜாம்பவதி கிருஷ்ணரிடம் அவர் யார் என்றும் என்ன விஷயமாய் வந்திருக்கின்றார் என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். ஆஹா, ஸ்யமந்தகம் தான் இவரை இங்கே வரவைத்திருக்கின்றதா?? என நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் தொட்டிலின் மேலே கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த மணியைக் காட்டி, அதைக் கழற்றி எடுத்துக் கொண்டு சத்தம் செய்யாமல் திரும்பும்படிக் கேட்டுக் கொண்டாள். தன் தகப்பனுக்கு விஷயம் தெரியவேண்டாம் என்றும் கூறினாள்.

தனக்கு அவர் பேரில் ஏற்பட்டிருக்கும் அன்பை விட, அவர் தன்னைப் பிரியக் கூடாது எனத் தான் நினைப்பதைவிட, இப்போது அவர் தன் தந்தையிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிச் செல்வதே சரி எனவும் நினைத்தாள் ஜாம்பவதி. ஆனால் கிருஷ்ணர் மறுத்தார். ஏற்கெனவே இந்த மணியை நான் தான் திருடிக் கொண்டு வந்தேன் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கின்றது. இப்போது உன் தந்தையையும் நான் பகைத்துக் கொண்டு இதை எடுத்துச் செல்லவேண்டுமா?? என்னால் முடியாது. அவர் எங்கே? அவருடன் நேருக்கு நேர் மோதிவிட்டே நான் இந்த மணியை வெற்றி வீரனாக எடுத்துச் செல்கின்றேன் என்று கூறுகின்றார். ஆனால் தன் தந்தையின் உடல்பலத்தையும், அவர் மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்றவர் என்றும் கூறிய ஜாம்பவதி, அவரால் கிருஷ்ணருக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ என அஞ்சி மறுக்கின்றாள். கிருஷ்ணரை உடனே அந்த இடத்தை விட்டு மணியை எடுத்துச் செல்லும்படிக் கூறுகின்றாள். கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துச் சங்க நாதம் செய்கின்றார்.

சங்கின் முழக்கத்தைக் கேட்ட ஜாம்பவான் விழித்துக் கொண்டார். கிருஷ்ணர் வந்திருப்பதையும், அவர் வந்ததன் காரணத்தையும் தெரிந்து கொண்டார். “ஆஹா, இவன் என்னை என்ன கிழட்டுக் கரடி என நினைத்துக் கொண்டானோ? இருக்கட்டும், ஒரு கை இல்லை, இரு கையாலும் பார்த்துவிடுகின்றேன். “ என்று நினைத்துக் கொண்டு, கிருஷ்ணருடன் போருக்குத் தயார் ஆனார். த்வந்த்வ யுத்தம் நடக்கின்றது, கிட்டத் தட்ட இருபத்தொரு நாட்கள். ஜாம்பவான் தன்னால் முடிந்தவரையில் சமாளித்தார். ஆனால் மூன்று வாரத்துக்கு மேலே அவரால் முடியவில்லை. ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நினைத்துக் கொண்டு மேலும் முயன்றார். சட்டென உண்மை பளிச்சிட்டது. வந்திருப்பது சாமானியமானவர் இல்லை. ஆஹா, இவன் சாட்சாத் அந்தப் பரம்பொருளே அல்லவோ? பரம்பொருளோடா சண்டை போட்டோம்? ஜாம்பவான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஸ்யமந்தக மணியையும், தன் பெண்ணான ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்குத் தானம் செய்கின்றார். ஜாம்பவதிக்கும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. மீண்டும் த்வாரகையை அடைந்த கிருஷ்ணர் ச்யமந்தகத்தை நினைவாக சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார்.

சத்ராஜித்தும் கிருஷ்ணரை அநாவசியமாய் அவதூறு செய்துவிட்டதை நினைத்து வருந்தி தன் ஒரே பெண்ணான சத்யபாமாவைக் கிருஷ்ணருக்குத் திருமணம் செய்வித்துக் கூடவே ஸ்யமந்தகத்தையும் ஸ்ரீதனமாய்க் கொடுக்கின்றான். ஆனால் கிருஷ்ணரோ அந்த மணியால் தனக்கு விளைந்த அபவாதத்தை மறக்கவே இல்லை. ஆகையால் திரும்ப ஸத்ராஜித்திடமே கொடுத்துவிட்டார். இன்னும் பிள்ளையார் வரலையேனு நினைக்கிறவங்களுக்குக் கொஞ்சம் பொறுங்க, இதோ பிள்ளையார் இந்தக் கதையில் நுழையும் நேரம் வந்தே ஆச்சு.

சத்யபாமாவைத் திருமணம் செய்துகொண்டபின்னர் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்கள் அரக்குமாளிகையில் அக்னியில் எரிந்து குடும்பத்தோடு சாம்பலாகிவிட்டனர் எனக் கேள்விப் பட்டு அதைப்பற்றி விசாரிக்க ஹஸ்தினாபுரம் சென்றார். பாமாவைத் துவாரகையிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். ஸத்ராஜித் ஏற்கெனவே பாமாவை சததன்வா என்னும் ஒருவனுக்கும், க்ருதவர்மா என்பவனுக்கும் அல்லது அக்ரூரருக்கேயாவது சத்யபாமாவைத் திருமணம் செய்வித்துவிட முயன்று கொண்டிருந்தான். ஆனால் கடைசியில் கிருஷ்ணர் சத்யபாமாவைத் திருமணம் செய்து கொள்ளவே, மிக மிக நல்லவராயும், கிருஷ்ணரை ஆரம்பத்தில் இருந்தே காப்பாற்றி வந்தவரும் ஆன அக்ரூரருக்கே கிருஷ்ணர் பேரில் கொஞ்சம் பொறாமை உண்டாகிவிட்டது. அவருடன் க்ருதவர்மாவும் சேர்ந்து கொள்ள, இருவரும் சததன்மாவைப் போய்ச் சந்தித்து, எப்படியேனும் ஸ்யமந்த்கத்தையாவது ஸத்ராஜித்திடம் இருந்து அபகரிக்கவேண்டும் என நினைத்துத் திட்டம் தீட்டினார்கள். ஸததன்மாவோ, ஸ்த்ராஜித்தை அநியாயமாயும், முறையற்றும் கொன்றுவிட்டு மணியை அபகரித்து வந்துவிடுகின்றான். சத்யபாமாவோ அலறிக் கலங்கினாள். கிருஷ்ணர் வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் தன் மாமனாரைக் கொன்றவனைத் தானும் கொன்று பழி தீர்க்கப் போவதாய்ச் சபதம் எடுக்கின்றார்.

விஷயம் தெரிந்ததும் சததன்மாவுக்குக் கிலி ஏற்படுகின்றது. கிருஷ்ணர் எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்துத் தன்னைக் கொன்றுவிடுவார் என நினைத்த அவன் அந்த ஸ்யமந்தக மணியை அக்ரூரர் வீட்டிலே போட்டுவிட்டு, துவாரகையை விட்டு ஓட்டம் பிடித்தான். ஸ்யமந்தகம் இருக்குமிடத்திலே சகல செளபாக்கியங்களும் ஏற்படவேண்டி இருக்க இம்மாதிரியான சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், அகசுத்தியும், புறசுத்தியும் அதை வைத்திருந்தவர்களிடையே இல்லாத காரணமே ஆகும். சூரியபகவான் சத்ராஜித்திடம் அதைக் கொடுத்தபோதே அகமும், புறமும் சுத்தமாக இல்லாவிட்டால் மணியால் நாசமே விளையும் எனச் சொல்லி இருந்தார். ஆகவே அந்த மணியால் தனக்குத் தொந்திரவு ஏற்படுமோ எனக் கலங்கியே சததன்மா அதை இப்போது அக்ரூரரிடம் போட்டுவிட்டு ஏற்படும் நாசம் அவருக்கு ஏற்படட்டும், அல்லது கிருஷ்ணர் விஷயம் தெரிந்து அக்ரூரரைக் கொன்றுவிட்டு எடுத்துக் கொள்ளட்டும். எப்படியானாலும் தன் தலை தப்பவேண்டும் என நினைத்துக் கொண்டு அக்ரூரரிடம் போட்டான்.

7 comments:

  1. என்ன மிஸஸ் ஷிவம் உடம்பு தேவலையா?

    ReplyDelete
  2. த்ரேதாயுகத்துல ஜாம்பவான் ராமரோட திறமையை பாத்துட்டு யுத்தம் பண்ணினா ராமனைப் போல ஒரு வீரனோடும் stylish warrior ஓட யுத்தம் பண்ணனும்னு நினைச்சாராம் உடனே ராமன் அந்த ஆசையை த்வாபர யுகத்துல க்ரிஷ்ணனா வந்த போது தீர்த்து வைத்ததா குருஜி ஸ்ரீ ஹரிதாஸ்கிரி சொல்லுவார்.

    ReplyDelete
  3. Started my regular reading.padikka padikka suvarasiyam.Thodaravum,please. Kadhai ketka romba aaval.

    ReplyDelete
  4. நன்றி எல்கே.

    ReplyDelete
  5. ஜெயஸ்ரீ, இதெல்லாம் எழுதி வச்சு ஒரு வருஷத்துக்கு மேல் ஆறது. அதிலே இருந்து காப்பி, பேஸ்ட் பண்ணிண்டிருக்கேன். புதுசா எழுத முடியலை! :(

    ReplyDelete
  6. அட எஸ்கேஎம்??? எப்போ வந்தீங்க?? நல்வரவு, நல்வரவு, உங்களை மறுபடி பார்க்க சந்தோஷமா இருக்கு. அடிக்கடி வாங்க.

    ReplyDelete