எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 31, 2011

சீனாச் சட்டி பார்க்க வாங்க, மல்லிகைப் பூ இட்லி!

கல்யாணம் ஆனப்போ எனக்குக் கொடுத்த சீர் வரிசைகளில் திருட்டுப் பாத்திரம் என்ற பெயரில் நுழைந்தது இந்தச் சீனாச்சட்டி. இந்தத் திருட்டுப் பாத்திரம் தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பின்பற்றப் படுகிறதென நினைக்கிறேன். எனக்கு மாமியார் வீடு, அம்மா வீடு இரண்டு பக்கமும் இந்தப் பழக்கம் உண்டு. ஆகவே என்ன தான் சீர் கொடுத்தாலும் திருப்திப் படாத சம்பந்தி வீட்டுக்காரங்க ஒரு இரும்புப் பாத்திரத்தைத் திருடியும் எடுத்துப் போவாங்களாம். அதுக்காகக் கொடுத்தது இந்தச் சீனாச்சட்டி. வார்ப்பிரும்பில் தயாரிக்கப் பட்டது. இதை வாங்கறச்சேயே அம்மா இதிலே வைக்கும்படியான இட்லித் தட்டும், (ஐந்து குழி உள்ளது.) சேர்த்து வாங்கிக் கொடுத்தார். ஆகவே கல்யாணம் ஆகித் தனிக்குடித்தனம் வந்ததில் இருந்து உழைத்துக்கொண்டிருந்த இந்தச் சட்டி ஒரு முறை என் நாத்தனார் காப்பிக்கொட்டை வறுக்கும்போது கீழே விழுந்து அடியில் கொஞ்சம் விரிந்து போயும், கண்ணில் உசிரை வைத்துக்கொண்டு உழைத்துக் கொண்டிருந்தது.

2010-ம் வருஷம் பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னால் ஒரு நாள் இட்லிக்கு ஜலம் கொதிக்க விட்டுவிட்டு தட்டில் துணியைப் போட்டு, மாவை ஊற்றிவிட்டு சட்டியில் வைக்க வந்தால் கொதிச்சுட்டு இருந்த நீரைக் காணோம்! என்னடா இது சோதனை என்று நினைத்தவண்ணம் தண்ணீர் ஊத்தலை போலிருக்குனு மறுபடியும் நீரை ஊற்றினால் சொய்ங்க்க்க்க்க்க்! எல்லா நீரும் அடுப்பில் விழுந்துவிட்டது. அடடானு கையிலே எடுத்துப் பார்த்தால் விரிசல் பெரிசாயிடுத்து. தண்ணீர் நிற்கவில்லை. அப்புறமா அன்னிக்கு எப்படியோ சமாளிச்சேன் இட்லி பண்ணாமல். சாயந்திரமே கடைக்குப் போய் சீனாச்சட்டி, சீனாச்சட்டினு ஏலம் போடாத குறையாக் கேட்டால் எந்தப்பாத்திரக் கடைக்காரங்களுக்கும் புரியவே இல்லை. கல்கத்தா அலுமினியம் சட்டியை ஒருத்தர் கொடுக்க, "உங்களுக்கு வேணும்னா நான் தரேன்"னு சொல்லிட்டு அதை வைச்சுட்டு அலைஞ்சோம் இரண்டு பேரும். ஒரு வட இந்தியப் பாத்திரக் காரர் மட்டும் இங்கே கிடைக்காது. சென்னையில் கந்தகோட்டம் அருகே கிடைக்கும் அங்கே போங்கனு சொன்னார். மறுநாள் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, இட்லிக்கு என்ன பண்ணறது? அவசரம் அவசரமா அங்கிருந்து இன்னொரு கடையிலே போய் இட்லிக் கொப்பரை வாங்கி வ்ந்தேன். எல்லாம் நல்லாத் தான் இருக்கு பார்க்க. மூன்று தட்டு இட்லிக்கு. ஒரே நேரம் பனிரண்டு இட்லி. அதைத் தவிர கொழுக்கட்டை, பருப்பு உசிலிக்குனு ஒற்றைத் தட்டும் இருந்தது. ஆனாலும் மனசு என்னமோ சீனாச்சட்டிக்கு அடிச்சுண்டது. அப்புறமா ஒரு நாள் சாவகாசமா வேறே எதுக்கோ சென்னை போகவேண்டிய சந்தர்ப்பம் நேர அப்போச் சீனாச்சட்டியும் வாங்கி வந்தேன். என்ன இருந்தாலும் பழசு மாதிரி இல்லைதான். என்னோட இட்லித் தட்டு உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போகிறது. கொஞ்சம் அகலம் கம்மியாய் இருந்திருக்கணும். ஆனால் இரண்டே அளவுகள் தான். இன்னொன்று ரொம்பச் சின்னது. அதிலே தட்டே வைக்க முடியலை. சரினு வாங்கி வந்தாச்சு!! இதிலே கொஞ்சம் நீர் ஜாஸ்தியானாலும் கொதிச்சு மேலே வந்து இட்லியில் பட்டு இட்லி வீணாகும். ஆகவே கவனமாய் நீரைச் சரியான அளவிலே ஊற்றணும். பழசிலே அப்படி இல்லை. வைச்சுட்டு நான் பாட்டுக்கு தொல்லைக்காட்சி பார்க்கலாம், கணினியிலே உட்காரலாம், கொல்லையிலே பூனை வந்திருக்கானு பார்க்கலாம், புதுசா வந்திருக்கிற குருவி என்ன கலர்னு பார்க்கப்போகலாம். நாரத்தையிலே பூ விட்டிருக்கானு ஆராயலாம். ஆனாலும் இதிலே தான் இட்லி செய்யறேன். பக்கத்திலேயே இருந்து காவல் காத்துக்கொண்டு. கொஞ்ச நாள் ஆனால் இதுவும் பழகிடும்! :))))))))




  இட்லி மாவுக்குக் காத்திருக்கும் சீனாச்சட்டி.
  ஜலம் உள்ளே கொதிக்கிறது.

  உள்ளே இட்லி வேகிறது.

 
Posted by Picasa
இன்னும் வெந்து கொண்டிருக்கிறது. இட்லியைத் தொடுத்துத் தலையில் வைச்சுக்கலாம் ஏடிஎம்.

Sunday, January 30, 2011

எல்லாரையும் பயமுறுத்த வரும் சீனாச்சட்டி!

தொண்டரடிப் பொடிங்களெல்லாம் மொக்கை போட்டாத் தான் கண்டுக்கறாங்க! அநியாயமா இல்லை?? அது போகட்டும். இப்போது என்னுடைய மண்டையை உடைக்கும் சந்தேகம் ஒருத்தரைப் பார்க்கமலேயே பிடிக்காமல் போகுமா?? இந்த வலை உலகிலேயே பலரும் பலரைப் பார்த்தது கூடக் கிடையாது. ஆனாலும் சிலருக்கு சிலரைக் கண்டால் அவங்க ஒதுங்கியே இருந்தாலும், ஏதோ ஒரு சின்னக் காரணம் கிடைச்சால் அதைப்பிடித்துக்கொண்டு அவங்களை வெறுப்பது ஏன்?? குழப்பமோ குழப்பம்! 2009-ம் வருஷம் பிறந்தப்போவும் கொஞ்சம் மனசு கஷ்டப்படும்படியான நிகழ்வுகள். அதுக்கப்புறம் இப்போவும். ஒருத்தருக்குவாழ்த்துச் சொன்னதுக்கு பதில் சொன்னால் அவங்களுக்குப்பிடிக்கலை! இத்தனைக்கும் அவங்களைப் பார்த்ததே இல்லை! ஏன் இப்படி?? போகட்டும். இதெல்லாம் சீரியஸான விஷயங்கள். நமக்கும் அதுக்கும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப தூரமாச்சே. அடுத்து உங்களைப் பயமுறுத்த வருது சீனாச்சட்டியும், இட்லித் தட்டும். அப்புறமா வெண்கலப்பானை(என்னனு தெரியுமா?) வெண்கல உருளி, (இதிலே அரிசி உப்புமா சூப்பரா இருக்கும்) எல்லாம் வரிசையா வரும். இட்லித் தட்டுனதும் அங்கே பாருங்க, ஏடிஎம் ஓடறாங்க! அட, ஏடிஎம், ஏடிஎம், எங்கே ஓடறீங்க??? வாங்க, வாங்க, உங்களுக்குத் தான் இந்தப் பதிவே போடப் போறேனாக்கும். வெயிட்டுங்க, படங்களை வலை ஏத்திட்டுப் போடறேன்.

Sunday, January 23, 2011

கல்சட்டி பார்க்கறீங்களா, கல்சட்டி?

 மின் தமிழ்க் குழுமத்திலே சில நாட்கள் முன்னால் உணவு சமைக்கும் புராதனப் பாத்திரங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடலில் ராஜம் அம்மா, அந்நாளைய அடுப்பு, கல்சட்டி போன்றவற்றின் படங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது நான் எங்க வீட்டிலே இப்போது கல்சட்டியில் சமைக்கும் வழக்கம் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். அதோடு வெண்கல உருளியிலும் சமைப்பேன் என்றும் கூறி இருந்தேன். மேலும் விறகு அடுப்பிலேயும் சமைச்சிருக்கேன். மண்ணால் கைகளால் போடப்பட்ட மண் அடுப்பு. அதிலேயும் இரும்பு அடுப்பிலேயும் சமைச்சிருக்கேன். கல்யாணம் ஆகிவந்துதான் சமைச்சிருக்கேன். கிராமத்திலே குமுட்டி அடுப்புக் கூட மண்ணாலேயே போட்டிருப்பாங்க. நான் இரும்புக் குமுட்டியிலே சமைச்சிருக்கேன். இப்போவும் இரண்டு வருஷங்கள் முன்னால் ஒரு மழைநாளில் கை கொடுத்ததையும் எழுதி இருக்கேன்.
 
Posted by Picasa
இந்தக் கல்சட்டியில் பழைய சாதம் வைத்துச் சாப்பிட ருசி மிக அருமையாக இருக்கும். முதல் நாள் மிச்சம் இருக்கும் சோற்றை இந்தக் கல்சட்டிகளில், இதைவிடப்பெரியதாக இருக்கும் கல்சட்டி எல்லாம். இது ரொம்பச் சின்னது. பெரிய கல்சட்டிகளில் போட்டுத் தண்ணீர் ஊற்றி மூடிவைப்பார்கள். மறுநாள் காலை அந்த நீர் ஆகாரம் வேண்டும் என்பவர்களுக்கு அந்த நீர் கிடைக்கும். அப்பா!!!! என்ன ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் தெரியுமா! உங்க பெப்சி, கோகாகோலா எல்லாம் இது கிட்டே கூட வரமுடியாது! :P அதிலே உப்புக் கொஞ்சம் போலப் போட்டு மோர் ஒரு கரண்டி ஊற்றிக் குடித்தால் சொர்க்கம் எட்டிப் பார்க்கும். பழைய சாதத்தை எங்க அம்மாவின் அம்மா( அம்மாவழிப் பாட்டி, நாங்க தாத்தாம்மா என்று கூப்பிடுவோம்) அவங்க உப்புச் சேர்த்து நல்ல எருமைத் தயிரை விட்டு கெட்டியாகப் பிசைந்து முதல் நாள் குழம்பையும், ரசத்தின் அடி மண்டி(பருப்பாய் இருக்குமே அது) சேர்த்துச் சுட வைத்திருப்பார்கள். இது சுட வைக்கவே ஒரு தனி குமுட்டி நிரந்தரமா இருக்கும். அந்தக் குழம்பை ஊற்றிக் கொடுப்பாங்க.

அதுவும், நாங்க பேரன், பேத்திகள் எல்லாம் சுத்தி வட்டமா உட்கார்ந்துப்போம். அவங்க எல்லாரோட கையிலேயும் ஒரு உருண்டை சோற்றைப் போட்டுக் கட்டை விரலால் குழி செய்துக்கச் சொல்லி அந்தக் குழியில் அந்தக் குழம்பை ஊற்றுவாங்க. கூடவே அவங்களுக்கும் தாத்தாவுக்கும் கல்யாணம் ஆன கதைகள், எங்க எங்க அம்மா, அப்பா திருமணக் கதைகள், கூடவே எங்க படிப்பைப் பற்றியும் ஜாடைமாடையான விசாரிப்புகள், அவங்க அவங்க பேச்சு சுவாரசியத்திலே வயிறு கொள்ளும் அளவு கூடத் தெரியாமச் சாப்பிட்டிருப்போம். இப்போ?? குமுட்டினா தெரியுமா? கல்சட்டினா தெரியுமா? ஈயச் செம்புனா தெரியுமா? (எங்க வீட்டிலே அதிலே தான் ரசம் இன்னிக்கும், என்னிக்கும்) விறகு அடுப்புன்னா தெரியுமா?? பால்காரங்க வீட்டிலேயும், தச்சுவேலை செய்யும் ஆசாரிகள் வீட்டிலேயும் மரத்தூளைப் போட்டு அடுப்பு எரிப்பாங்க. ஏனென்றால் அது தான் மலிவாயும், விலை இல்லாமலும் கிடைக்கும்னா?? தெரியலை. இன்னைக்கு எல்லாத்தையும் ஷோகேஸிலே வைச்சுப் பார்க்கக் கூடக் கிடைக்குமானும் தெரியலை.

எங்கே போயிட்டிருக்கோம்?? ஒண்ணும் புரியலை. ஆனால் முன்னேற்றம்னு சொல்றாங்க.

இருக்குமோ? :(

Saturday, January 22, 2011

கேசரியோட வாழ்த்துகிறோம்.

 
 போன வாரம் ஜெயஸ்ரீ வந்தப்போ கேசரி பண்ணினேன். அவங்களுக்குத் தான் சாப்பிடக் கொடுத்து வைக்கலை. அதிக அலைச்சலிலே உடல்நலமில்லாமல் இருந்தாங்க. என்றாலும் இந்தக் கேசரியை இன்னிக்கு எல்கேவின் திருமண நாளுக்காகப் போடறேன், அதோட அம்பிக்குக் காட்டவேண்டாமா?? சுபாஷிணி வந்தப்போ படம் எடுக்க மறந்துட்டேன். அப்புறம், அப்புறம்னு கடைசியிலே கூகிளாரைக் கேட்டு வாங்க வேண்டி இருந்தது. அதான் இப்போ அம்பிக்குக் காட்டறதுக்காகவும் போடறேன். கேசரியைப்பார்த்துட்டு அம்பி ஓடி வரமாட்டாரா? அதான்! :P மு.ப. போட்டிருக்கேன் திவா. தி.ப. இல்லை. தீர்ந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :D
 
Posted by Picasa
அம்பி வந்தா கேசரி என்னமோ கொடுக்கப் போறதில்லை. படத்திலேயானும் பார்த்துக்கட்டுமே!

எல்கேவுக்கும், அவர் மனைவிக்கும் திருமணநாள் வாழ்த்துகள், கொஞ்சம் தாமதமாய். வெளியே போயிட்டேன், இப்போத் தான் வந்தோம். அதான் தாமதம்!

Wednesday, January 19, 2011

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே!

அன்று படுக்கும்போதே ஒரு மணி ஆகிவிட்டிருந்தது. ஆனால் படுத்த சற்று நேரத்திற்கெல்லாம் அறைவாசலில் கதவை யாரோ தட்டினார்கள். யாருனு பார்த்தால் அறைப் பணியாளர். வெந்நீர் தயாராகிவிட்டதாம். கொண்டு வந்துவிட்டார். மணியைப் பார்த்தால் இரண்டரைதான் ஆகி இருந்தது. ஒரு மணி நேரம் கூடத் தூங்கவில்லை. ஆனால் இப்போ விட்டால் அப்புறமாய்க் குளிக்க வெந்நீர் கிடைக்குமோ கிடைக்காதோ! ஊர் விட்டு ஊர் வந்து குளிர்ந்த நீரில் குளிச்சு திடீர்னு உடல்நலக்கேடு வந்தால் என்ன செய்யறது? வெந்நீரை வாங்கிக்கொண்டு நான் குளிக்கப் போனேன். அதுக்குள்ளே இன்னொரு வாளி வெந்நீரையும் கொண்டு வர, வாங்கி வச்சுக்க வாளி இல்லாமல் திரும்ப அனுப்பினோம். அப்புறமாய் அவரும் குளிச்சுத் தயாரானதும் இருவருமாய்க் கோயிலுக்குக் கிளம்பினோம். அப்படியும், இப்படியுமா மணி நாலை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தக் காலை வேளையில் தெருவில் நடமாட்டம் இருக்குமானு நினைச்சுப் போனால் மக்கள் சாரி சாரியாகக் கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தனர். திறந்திருந்த ஒரு ஹோட்டலில் காபி மட்டும் குடித்துவிட்டு நாங்களும் உள்ளே சென்றோம். ஆயிரங்கால் மண்டபத்தில் லக்ஷார்ச்சனை முடிந்து அபிஷேஹம் ஆரம்பித்து இருந்தது. முதன்முதல் விபூதி அபிஷேஹம் செய்தனராம். அது பார்க்க முடியவில்லை.

மெல்ல மெல்ல கூட்டத்தில் நுழைந்து நாங்கள் மெதுவாக முன்னேறினோம். ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் அனைத்துத் தரப்பிலிருந்தும் பார்க்க வசதியாக வைக்கப்பட்டிருந்தார். தெற்குப் பார்த்தே வைத்திருந்தனர். தெற்குப் பார்த்து வைப்பதன் கோட்பாடு என்னனு சிலரைக் கேட்டேன். பதில் இன்னும் கிடைக்கவில்லை. அருகே சிவகாம சுந்தரியும் இருக்க அபிஷேஹம் நடந்து கொண்டிருந்தது. பெரிய பெரிய அண்டா, தவலைகளில் பால் லிட்டர் லிட்டராய் இருந்தது. கிழக்கு வாசலுக்கு அருகேயே நாங்கள் சென்று அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்தின் சமீபம் சென்று அபிஷேஹத்தைப் பார்க்கும் வண்ணம் வசதியாக நின்று கொண்டிருந்தோம். கொஞ்சம் முயன்றால் முன்னால் சென்று அமர்ந்து கொண்டிருப்பவர்களிடையே சென்று அமரலாம். ஆனால் கீழே அமர்ந்து கொள்வதில் எனக்கு இருந்த சிரமமும், உள்ளே அருகே சென்றுவிட்டால் பின்னர் திரும்ப வெளியே வருவதில் இருந்த பிரச்னையும் சேர்ந்து யோசிக்க வைத்தது. யாரும், யாரையும் தடுப்பதில்லை. போக ஆசைப்படுபவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

பெரிய குடங்களில் பால் நிரப்பப் பட்டு அபிஷேஹம் நடந்து கொண்டிருந்தது. பால் அபிஷேஹம் செய்யும்போதே அபிஷேஹப் பால் சேகரிக்கப் பட்டு, இன்னொரு வாசல் வழியாகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு உடனடியாக விநியோகிக்கப் பட்டது. எங்களுக்கும் பிரசாதமாக ஒருத்தர் வாங்கி வந்த பால் கிடைத்தது. கிட்டத் தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பால் அபிஷேஹத்தைப் பார்த்தோம். ஐந்தரை மணிக்கும் மேலாகியும் பால் அபிஷேஹம் நிறைவுறவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. குடத்தின் கனம் தாங்க முடியாமல் ஆசாரியருக்குக் கை நழுவிக் கொண்டிருந்தது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு அபிஷேஹத்தைச் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார். பக்தர்கள் தேவார, திருவாசகங்களை ஓதிக்கொண்டும், வேத கோஷங்கள் செய்து கொண்டும், பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். இரவு தூக்கமில்லாமையால் அதற்கு மேல் அந்த மண் தரையின் சில்லிப்பில் நிற்கமுடியாமல் எனக்கு வீசிங் வரும்போல் இருந்ததால் திரும்பினோம். தீக்ஷிதர் வீட்டுக்கு வந்துவிட்டோம். அங்கே தீக்ஷிதர் சந்தன அபிஷேஹம் முடிந்ததும் வருவதாய்ச் சொல்லி இருந்தார். அவருக்காகக் காத்திருந்தோம். தீக்ஷிதர் வீட்டுப் பெண்மணிகள் வீட்டில் நிவேதனம் செய்த களியை உண்ணக் கொடுத்தனர். கோயிலில் இருந்தும் பிரசாதம் வரும் என்றார்கள். அன்று கோயிலிலும் களிதான் நிவேதனம். அனைவருக்கும் கொடுக்கிறார்கள். பின்னர் ஆருத்ரா தரிசனத்தின் மகிமை பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அதன் பின்னர் தரிசனம் முடித்துவிட்டுக் கிளம்பினோம். கீழே ஆருத்ரா தரிசன மகிமையும் நடராஜப் பத்தும்.

பிக்ஷாடனராக தாருகாவனத்தில் ஆடிய ஈசன், அதன் பின்னர் ஈசனின் கணங்கள் என்று சொல்லப் படும் தில்லை வாழ் அந்தணர்களின் வேண்டுகோளின்படி தில்லைச் சிற்றம்பலம் வந்து சேர்ந்து பொன்னம்பலத்தில் தன் நடனத்தைத் தொடங்கிய நாள் திருவாதிரைத் திருநாளாகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப் படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை "ஓரியன் குழு"வில் சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும்.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.


ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

ஆதிரை நன்னாள் மட்டுமின்றி "அம்பா ஆடல்" என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவில் லக்ஷார்ச்சனை முடிந்ததும் ஆரம்பித்துக் காலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.

மேலும் ஈசனின் கணங்கள் ஆன தில்லைவாழ் அந்தணர்கள் ஈசனின் வழிபாட்டுக்கெனத் தில்லை வந்தவர்கள் கூத்த பிரானின் ஆடலைக் காணமுடியாமல் ஏங்கியதாயும், கூத்தனை வேண்டியதன் பேரில் நடராஜர் திருவாதிரை அன்றே சிதம்பரம் வந்து கோயில் கொண்டதாயும் ஐதீகம். ஆகவே இந்த அபிஷேஹம் முடிந்ததும், எட்டு மணியில் இருந்து பனிரண்டு மணி வரையிலும் நடராஜருக்கு அலங்காரங்கள் செய்து, சிவகாம சுந்தரி உடன் வர, நடராஜர் மீண்டும் ஆநந்த தாண்டவம் ஆடிக்கொண்டே தில்லைக் கோயிலின் சிற்றம்பலத்தில் கோயில் கொண்டருளுகிறார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படுகிறது. தாவித் தாவி ஆடுவது தாண்டவம், ஆண்களுக்கு மட்டுமே உரியது. இசையும், நளினமும் சேர்ந்த்து லாஸ்யம், பெண்களுக்கு உரியது. ஆகவே நடராஜரின் தாண்டவம் வேகத்தோடும், தாளத்தோடும் காணப்படும். அதுவே சிவகாமி அம்மை நளினமாகவும், மென்மையாகவும் ஆடுவாள்.

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ
மறைநான்கின் அடிமுடியும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டலமிரண்டேழும்நீ,
பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,
பிறவும்நீ ஒருவநீயே,
பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ
பெற்றதாய் தந்தைநீயே,
பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ
ஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,
புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த
புவனங்கள் பெற்றவனும்நீ
எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்
குரைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 1

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை
சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 2

கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்,
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்,
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனைத்,
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 3

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல,
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல,
அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல,
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,
அரியமோ கனமுமல்ல,
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,
கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாங்
கூறிடும் வைத்தியமுமல்ல,
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகலவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 4

நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்தமுண்டோ ,
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற
பின் நோக்காத தந்தையுண்டோ ,
சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ ,
தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ,
விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கையிது வல்லவோ,
இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனியுன்னை விடுவதில்லை,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 5

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சை யில்லாத போதிலும்,
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்,
மொழியெகனை மொகனையில் லாமலே
பாடினும் மூர்க்கனே முகடாகினும்,
மோசமே செய்யினும் தேசமேகவரினும்
முழுகாமியே யாகினும்,
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ,
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலனைக் காக்கொணாதோ,
எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 6

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ,
முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ
என்மூட வறிவுக் கழுவனோ,
முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்திவரு மென்றுணர்வனோ,
தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு
வனோ தவமென்ன வென்றழுவனோ,
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ,
இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு
வனோ யெல்லாமுரைக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 7

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ,
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்
தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,
தந்தபொரு ளிலையென்றனோ,
தானென்று கெர்வித்துக் கொலைகளவு
செய்தனோ தவசிகளை யேசினனோ,
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,
வானவரைப் பழித்திட்டனோ,
வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ,
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாம் பொறுத்தருளுவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 8

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி,
தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்
தென்ன, தாரணியையாண்டு மென்ன,
சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன
சீடர்களிருந்து மென்ன,
சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்,
ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க,
உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று
தான் உன்னிருபாதம் பிடித்தேன்,
யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்
பார்வை யதுபோதுமே,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 9

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ
இரும்போ பெரும்பாறையோ,
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ,
என்னை மோகமோ இதுவென்ன சோபமோ
இதுவேவுன் செய்கைதானோ,
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,
உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை
யுற்றுப்பார் பெற்றவையோ,
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
இனியருளளிக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 10

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரியனிவரை,
சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே,
பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்
படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,
கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்
தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
இனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை
யாள்வதினி யுன்கடன்காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 11

 
Posted by Picasa
தூர்தர்ஷன் பாரதியில் சிதம்பரம் பற்றிய டாகுமெண்ட்ரி படம் யாமினி கிருஷ்ணமூர்த்தி நாட்டியம் ஆடி எடுத்தது ஒளிபரப்பினாங்க. அதில் இருந்து ஒரு காட்சி மட்டும் இங்கே பார்வைக்கு. யாமினி அன்று ஆடியபோது தாண்டவத்துக்கும், லாஸ்யத்துக்கும் உள்ள வேறுபாடு நன்கு புரிந்ததோடு, யாமினி கண்ணிலோ, மனசிலோ தெரியாமல் ஈசன் மட்டுமே தெரிந்தார். அற்புதமான ஆட்டம்.

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தார்! தொடர்ச்சி!

திங்களுமாட, கங்கையுமாட! திருவாதிரை!
கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அடிமுடிகாணா ஜோதி ஸ்வரூபமாய் நின்ற எம்பெருமானின் திருநடனக் கோலம் காணும் நாளே ஆருத்ரா தரிசனம் ஆகும். ஆருத்ரா என்பது ஆதிரை நக்ஷத்திரத்தைக் குறிக்கும். திரு என்னும் அடைமொழியைச் சேர்த்துக்கொண்டு திருவாதிரை என்று சொல்கிறோம். விண்ணில் விண்மீன் குழுமத்தில் திருவாதிரை நக்ஷத்திரம் இருக்கும் குழுவை ஓரியன் என அழைக்கின்றனர். இதை வேட்டைக்காரன் என்றும் சொல்லுவதாய்த் தெரிய வருகிறது. மிருகசீர்ஷ நக்ஷத்திரமும் இந்தக் குழுமத்தில் இருக்கிறது. இந்த ஓரியன் குழுவின் நக்ஷத்திரங்கள் அனைத்தையும் பொதுவாய் வேட்டைக்காரன் என்று கூறுகிறார்கள் அல்லவா? இந்த வேட்டைக்காரனின் இடதுபக்கம் அவன் தோள்பட்டை போல் இருப்பது மிருகசீர்ஷம் எனில் வலது தோள்பட்டையாக விளங்குவதே இந்தத் திருவாதிரை நக்ஷத்திரம் ஆகும். செக்கச் சிவந்த நிறத்தில் காட்சி அளிக்கும் என்று தெரியவருகிறது. ஈசனின் நிறமும் செக்கச் சிவந்த வண்ணம் தானே?செந்தழல் வண்ணனுக்குரிய நக்ஷத்திரம் ஆன திருவாதிரையும் விண்மீன் குழுவிலேயே மிகப்பெரிய நக்ஷத்திரமாய்ச் சொல்லப் படுகிறது. மிகப் பிரகாசமான ஒளி பொருந்தியும் பரிமாணத்துக்கு ஏற்றவாறு ஒளி மாறும் தன்மையும் கொண்டுள்ளது என்றும் தெரியவருகிறது. பூமியிலிருந்து 430 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள இதன் அடிமுடியை எவரால் காண இயலும்?? பேரொளியும் அதனால் ஏற்பட்ட பெருவெப்பமும் கொண்ட இந்தத் திருவாதிரை நக்ஷத்திரம் விண்ணில் அசைந்தாடுவதானது எல்லாம் வல்ல அந்தக் கூத்தனே இந்த நக்ஷத்திர வடிவில் இவ்வுலகை இயக்க ஆடுவதை நினைவூட்டுகிறது. இந்த நக்ஷத்திரத்தின் குணமே துடிப்புடனும் செயலாற்றல் கொண்டவர்களாயும், உறுதியும் திடமும் படைத்தவர்களாயும் நிலையான மனம் படைத்தவர்களாயும் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஏனெனில் ஈசன் அன்போடு படைக்கிறான். அன்போடு காக்கிறான். அதே சமயம் நமக்காக விஷத்தைக் கூட அருந்துகிறான். அவன் தலையிலே பாம்பையும் ஆபரணமாய்க் கொண்டிருக்கும் அதே சமயம் அமுத கிரணங்கள் உடைய பிறைச் சந்திரனையும் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரனாய்க் காட்சி அளிக்கிறான். ஒரு பக்கம் அமைதியின் வடிவாகவும் இன்னொரு பக்கம் அழிவைக் கொடுக்கும் ருத்ரனாகவும் காட்சி கொடுக்கிறான்.

கற்பனைக்கெட்டாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் தன் கூத்தினாலேயே இவ்வுலகை இயக்குகிறார். நம் போன்ற சாமானியருக்கெல்லாம் புரியாத இந்த அற்புதக் கூத்தைச் செய்யும் எம்பெருமானை நடராஜராகக் காணும் நாளே திருவாதிரைத் திருநாள் ஆகும். எங்கும் நிறைந்த பரம்பொருள் தாமே எல்லாமுமாகி, எல்லாவற்றையும் காத்து, அழித்து, மறைத்து, மோக்ஷத்தை அளித்து என்று அனைத்தையும் நிகழ்த்துவதே நடராஜரின் தத்துவம் ஆகும். அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்தத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் காலையில் நீராடி உடல் தூய்மையோடு உள்ளத் தூய்மையுடன் கோயிலுக்குச் சென்று நடராஜரை வழிபடுவ்துதான்.
அன்று காலை களி செய்து, எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன் நடராஜருக்குப் படைப்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால் இந்தக் களிக்கும் ஒரு கதை உண்டல்லவா? களி என்றாலே மகிழ்ச்சி தானே பொருள்?? அத்தகைய களியைத் தன் அடியாருக்குத் தந்தார் ஈசன்.

சோழநாட்டின் அரசர்களுக்கு முடிசூட்டுவது தில்லை வாழ் அந்தணர்களே ஆகும். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அதிக அளவில் திருப்பணிகளும் சோழ மன்னர்களால் செய்யப் பட்டது. சேந்தனாரின் காலம் சரிவரத் தெரியவில்லை எனினும் சில குறிப்புகள்கண்டராதித்த சோழனுக்கு முற்பட்டவர் என்றும், சில குறிப்புகளால் முதல் ராஜராஜ சோழன் காலம் எனவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தனார் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராய் விளங்கினார். பட்டினத்து அடிகள் துறவு மேற்கொண்ட பின்னர் அவரின் கட்டளைப்படி பட்டினத்தடிகளின் கருவூலத்து பொக்கிஷத்தைத் திறந்துவிட்டு எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம் அள்ளிக்கொள்ளச் செய்தார். இதைக் கண்டு கோபம் கொண்ட சோழமன்னன் சேந்தனாரைச் சிறையில் அடைத்தான்.

பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொடுத்த சேந்தனாரோ தம் வாழ்க்கையைக் கழிக்க விறகு வெட்டியே பிழைத்துவந்தார். அதை அறியாத மன்னன் சிறையில் அடைக்க, சேந்தனாரின் மனைவியும், மகனும் பிச்சை எடுக்கவேண்டியதாயிற்று. உறவினர் அனைவரும் கேலி செய்ய சேந்தனாரின் மனைவி தங்கள் குருவான பட்டினத்தாரை வேண்ட, அவரும் விநாயகரை வேண்டித் துதித்தார். மேலும் திருவெண்காட்டு ஈசன் மேல் தனிப்பாடலும் இயற்றித் துதித்தார்.

மத்தளை தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் காணா நிமலனே அமலமூர்த்தி
செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண்காட்டுளானே"
என்று இறைவனைப் பட்டினத்தடிகள் வேண்ட. இறைஅருளாலும் பட்டினத்தடிகள் வேண்டுதாலும் சேந்தனாருக்கு விடுதலை கிடைத்தது. தில்லையம்பதி சென்று அங்கும் விறகு வெட்டிப் பிழைத்த சேந்தனார் அன்றாடம் தாம் சம்பாதிக்கும் பொருளில் இருந்து ஒரு சிவனடியாருக்கு உணவு சமைத்துப் போட்டுப் பின்னரே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

மழைக்காலம் வந்துவிட்டது. வெட்டும் விறகெல்லாம் மழையில் நனைந்து போயிற்று. விற்க முடியவில்லை. ஈரவிறகை வாங்க யாருக்கும் இஷ்டமில்லை. யோசித்த சேந்தனார் சிவனடியார் எவருக்கேனும் உணவு பரிமாறவேண்டுமே என்பதால் பண்டமாற்று முறையில் விறகைக் கொடுத்து அரிசிமாவையும், வெல்லத்தையும் பெற்று வந்துக் களிசமைக்கச் சொன்னார். கொல்லையில் இருந்த கீரைத்தண்டோடு கொல்லையிலேயே கிடைத்த சில காய்களையும் போட்டுக் குழம்பும் சமைத்துச் சாப்பிட அடியாரைத் தேடிக் காத்திருந்தார். ஆனால் அடியாரே தென்படவில்லை. துன்பத்தோடு அமர்ந்திருந்த சேந்தனர் கண்களுக்கு ஒரு முதிய அடியார் தள்ளாட்டத்தோடு வருவது தெரிந்தது. பசியினால் விளைந்த தள்ளாட்டம் என்பது புரிந்து அவரை அழைத்துச் சென்று களியும், குழம்பும் உண்ணக் கொடுத்தார். பெரியவரும் திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு, "மிச்சம் இருப்பதையும் கொண்டா" என்று கேட்டு வாங்கிக் கொண்டு போயிவிட்டார்.
இங்கே தில்லை வாழ் அந்தணர்கள் திருவாதிரைத் திருநாளுக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். அப்போது கருவறையில் ஈசனருகே களியாகச் சிதறிக் கிடந்ததைக் கண்டு திகைத்தனர்.

உடனேயே மன்னனுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. மன்னனும் தீர விசாரித்துச் சேந்தனாரே இதன் மூலகர்த்தா என உணர்ந்து அவரைப் பிடித்துவருமாறு கட்டளையிடுகிறான். அப்போது நடராஜப் பெருமானின் திருத்தேரை இழுக்கும் அடியார்களில் ஒருவராய்ச் சேந்தனார் திருத்தொண்டு செய்து வந்தார். திடீரெனத் தேர் நின்று போக, அனைவரும் திகைத்தனர். மன்னன் தேரை நிலைக்குக் கொண்டு வர ஆட்களை அழைக்கத் தேர் இம்மியளவும் நகரவில்லை. அப்போது அசரீரியால் ஈசன், "சேந்தனாரே, நீர் திருப்பல்லாண்டு பாடும் தேர் நிலைக்கு வரும்" எனக் கூற சேந்தனார் முதலில் திகைத்தாலும் பின்னர் ஈசன் அருளால் திருப்பல்லாண்டு பாடி அருள தேரும் நிலைக்கு வந்தது.


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.


டிஸ்கி: திருவாதிரை அன்று போட்ட இந்தப் பதிவை யாருமே படிக்கலைனு நினைக்கிறேன். இப்போது சிதம்பரம் ஆருத்ரா தரிசனப்பதிவுகளில் திருவாதிரைத் திருநாள் குறித்து எழுதவேண்டி இருப்பதால் ஒரு முன்னுரையாக மீள் பதிவு செய்கிறேன். மீள் பதிவுக்கு மன்னிக்கவும்.

Monday, January 17, 2011

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே தொடர்ச்சி!


கிளம்பிச் சற்று தூரம் வந்த தேர் திடீரென நின்றது. என்னனு பார்த்தால் சேந்தனாரின் திருப்பல்லாண்டுக்காக நடராஜர் நின்றிருக்கிறார். சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடியதும் தேர் மீண்டும் கிளம்பியது. சேந்தனார் கதையும், ஆருத்ரா தரிசன நிகழ்வும் அடுத்த பதிவில் வரும். தேர் மெல்ல மெல்ல நகர்ந்து, நகர்ந்து வந்து கொண்டிருந்தது. எல்லா வீடுகளிலும் வாசலில் பெரிய பெரிய கோலங்கள் போட்டு, நடராஜர் படத்தையும் பூரண கும்பமும் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே தீபாராதனை எடுத்தார்கள். மண்டகப்படி இருக்கும் இடங்களில் மட்டுமே தேர் நிறுத்தப் படுகிறது. மக்கள் உற்சாகமாய் அந்தப் பெரிய வடத்தைப் பிடித்து இழுத்துக் கீழவீதியின் நடுவில் இருக்கும் எங்கள் கட்டளை தீக்ஷிதர் ஆன ராமலிங்க தீக்ஷிதர் வீட்டருகே வந்து நின்றபோது மணி ஒன்பதைத் தொட்டு விட்டது.

அங்கே சில கடைகளில் மண்டகப்படி விசேஷ வழிபாடுகள் நடந்தன. தேர் வடம் கீழே கிடந்தது. வடத்தினருகே சென்று நடராஜரைப் பார்த்தோம். அப்ப்பா! எவ்வளவு உயரம்! வடத்தைத் தொட்டுப் பார்த்தாலே எவ்வளவு கனம் என்றும் புரிந்தது. ஆனாலும் தேரை இழுத்தவர்கள் உற்சாகத்தோடு இழுத்தார்கள். எதிரே தேவார, திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டுக்கொண்டிருந்தன. மக்கள் அனைவருமே நடராஜரைப் பார்த்தவண்ணம் பின்னாலேயே சென்றனர். தேருக்குப் பின்னால் இருந்தவர்கள் தவிர மற்றவர்கள் தேரின் முன்னே நடராஜரைப் பார்த்த வண்ணமே சென்றனர். என்றாலும் அந்தக் கூட்டத்திலும் நெரிசல் ஏற்படாமல் சமாளித்தனர். மக்கள் கூட்டமும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. தேர் தெற்கு வீதிக்குத் திரும்பும் வரை காத்திருந்துவிட்டு நாங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

உள்ளே ஆட்டோ எதுவும் வராதாகையால் அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு நடந்தே சென்று பேருந்து பிடித்து வைத்தீஸ்வரன் கோயில் போய்ப் பிரார்த்தனைகளையும், தரிசனத்தையும் கட்டளை வைத்திருக்கும் குருக்களையும் பார்த்துவிட்டுப் பின்னர் சிதம்பரம் திரும்பினோம். மாலை ஈசான்ய மூலைக்கு வர நாலுமணி ஆகும் என்று தீக்ஷிதர் சொல்லி இருந்ததால் அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள்ளப்போனோம். ரங்க்ஸ் நல்லாத் தூங்கிவிட்டார். எழுந்திருக்கும்போது, (எங்கே? பிடிச்சு உலுக்கவேண்டி இருந்தது!) நாலரைக்கும் மேல் ஆகவே, தேர் நிலைக்கு வந்திருக்குமோனு நினைச்சேன். அது போலவே கீழே இறங்கியதும் ஒருவரைக் கேட்டதுக்கு 3 மணிக்கே நிலைக்கு வந்தாச்சுனு சொல்லிட்டுப் போகவே ஒரு குருக்ஷேத்திரம் மீண்டும் ஆரம்பிக்க இருந்தது. அவசரம் அவசரமா ரங்க்ஸ் என்னோட முகத்தையே பார்க்காமல் எதிரே தீக்ஷிதரைப் பார்க்கப் போயிட்டார். வேறு வழியில்லாமல் நானும் பின்னாலேயே போனேன். தீக்ஷிதர் மனைவி, மருமகள், குழந்தைகள் எல்லாம் எங்கேயோ போய்க்கொண்டிருக்க அவரைக் கேட்டதில் தேர் வடக்குத் தெருவையே இன்னும் தாண்டலை என்றும் ஈசான்ய மூலைக்கு வர ஐந்தரை மணியாவது ஆகும் என்றும் வடக்குத் தெருவில் ஒரு மண்டகப்படியில் நிற்பதாயும் சொல்லிவிட்டு அவங்க வீட்டிலே எல்லாரும் அங்கே தான் போறதாகவும் எங்களையும் போகச் சொன்னார். தேர் நிலைக்கு வந்ததும் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் கால பூஜைகள் நடக்கும் என்றும் மீண்டும் மாணிக்கவாசகர் வந்து பதிகம் ஓதுவதும் நடக்கும் என்றும் கூறிவிட்டு அதன் பின்னரே நடராஜர் உள்ளே வருவார் என்றும் உள்ளே வரும்போதும் ஆடிக்கொண்டே வருவார். வந்துவிட்டு நேரே ஆயிரங்கால் மண்டபத்துக்குப் போவார் என்றும் அன்றிரவு பூராவும் லக்ஷார்ச்சனை நடக்கும் என்றும் கூறினார். நடராஜரை எங்கே இருந்து பார்த்தால் சரியாய் இருக்கும் என்பதை உள்ளே போய்ப் பார்த்துக்கோங்க, கூட்டம் இருப்பதால் சரியாய்ச் சொல்ல முடியாது. ஆயிரங்கால் மண்டபத்துக்குள்ளே வந்துவிட்டால் வெளியே வரது கஷ்டம். என்றும் கூறினார்.

அப்பாடி! இப்போ தைரியமா ரங்க்ஸ் என்னைப் பார்க்க நான் அசடு வழிந்தேன். இரண்டு பேரும் கீழவீதியும் வடக்கு வீதியும் சேரும் இடத்துக்குச் சென்றோம். அங்கே ரங்க்ஸ் படிக்கும்போது குடி இருந்த வீடு, (மாறவே இல்லையாம், அப்படியே இருக்குனு சொன்னார்) பாநுசேகரன் என்பவர் வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தோம். ஏற்கெனவே பலர் இருந்தார்கள். அதோடு அங்கே பாடசாலை வேறே நடக்கிறது. அந்த மாணவர்கள், வெளி ஊர்ப் பாடசாலைகளில் இருந்து வந்திருந்த வைதீகர்கள் என்று ஒரே கூட்டமாய்த் தான் இருந்தது. காலையை விட இப்போது கூட்டம் அதிகரித்திருந்தது பார்த்ததுமே புரிந்தது. என்றாலும் திண்ணையில் கொஞ்சம் போல் இருந்த இடத்தில் நான் மட்டும் உட்காரப் போனப்போ அவங்க எழுந்து எங்களுக்கு இடம் விட்டுவிட்டு வெளியே போய் உட்கார்ந்தாங்க.

சற்று நேரத்தில் தேர் ஈசான்ய மூலைக்கு வந்து திரும்பியது. தேர் ஆடிய ஆட்டமும், குலுங்கிய குலுங்கலும் நமக்குப் பயத்தைக் கொடுக்கிறது. மேலே அமர்ந்திருக்கிறவர்கள் சற்றும் கலங்காமல் அமர்ந்திருந்தனர். அவங்களுக்குக் கீழே இன்னொரு தட்டில் விஸ்வகர்மா வகுப்பினர் அமர்ந்திருக்கின்றனர். தேரின் பொறுப்பு முழுதும் அவர்களுடையதே. பல்வேறு வேலைகளும் செய்யும் விஸ்வகர்மாக்களில் ஸ்தபதிகள், ஆசாரிகள், தச்சர்கள், கொல்லர்கள் என்று பலரும் அமர்ந்து வருகின்றனர். தேரின் பாதுகாப்பு மட்டுமில்லாமல் கீழே மண்டகப்படிக்காரர்கள் கொடுக்கும் நிவேதனத்தை வாங்கி மேலே கொடுப்பதும், மேலே உள்ள தீக்ஷிதர்களில் ஒருவர் அதை வாங்கி அன்றைய வழிபாடு செய்யும் தீக்ஷிதரிடம் கொடுத்து நிவேதனம் செய்து தீபாராதனை காட்டிப் பின்னர் கீழே மீண்டும் அவர்களிடம் கொடுப்பதும், அவங்க வாங்கி மண்டகப்படிக்காரங்களிடம் ஒப்படைப்பதும் என்று இருபக்கமும் அமர்ந்திருப்பவர்களுக்கும் சரியான வேலை. அன்று பூராவும் உணவருந்துவதில்லை. திரவ ஆகாரமாய் எடுத்துப்பார்கள் போல. கீழே இறங்குவது என்றால் அவசரமான காரியங்களுக்கு மட்டுமே தவிர்க்க முடியாது என்றால் மட்டுமே. இல்லை எனில் இறங்குவதும் இல்லை. ஆட்கள் மாறுவதும் இல்லை. இவங்க எல்லாம் ஆருத்ரா தரிசனம் தேதிக்கு ஒருமாதம் முன்னாடியே தேர்ந்தெடுக்கப் பட்டு அதற்கென நியமங்களோடு இருப்பவர்கள். கண்டிப்பாக வேறு ஆட்கள் வருவதில்லை. தேரின் மேலே நடராஜருக்கு அருகே மட்டும் வழிபாடு செய்யும் தீக்ஷிதர் குடும்பத்தின் சிறு பிள்ளைகள் உட்கார்த்தி வைக்கப்படுகிறார்கள். பழக்கம் ஆவதற்காக.

தேர் ஈசான்ய மூலையைக் கடந்ததும் எல்லாரும் தேர் முட்டியை நோக்கிப் பாயக் கூட்டத்தில் மாட்டிக்கவேண்டாம் என்று நாங்கள் சிவகாமசுந்தரியின் தேரைப் பார்த்துவிட்டு வடக்கு வாசலை நோக்கி நடையைக் கட்டினோம். அங்கிருந்து செருப்பைத் தூக்கிக் கையில் வைத்துக்கொண்டு சிவகங்கைக் கரையோரமாய்க் கீழ வாசலுக்கு ஏற்கெனவே பலர் போய்க்கொண்டிருந்தார்கள். அட, நாம் தான் சாமர்த்தியம்னு நினைச்சால், நமக்கும் மேலே இல்லை இருக்காங்கனு நினச்சவாறே நாங்களும் செருப்பைத் தூக்கிக்கொண்டு போனோம். அதுக்குள்ளே சிவகங்கைக் கரை வரையும், கடைகள், கடைகள், கடைகள். எல்லாம் இன்றும், நாளையும் மட்டுமே அநுமதிக்கப்படுகின்றன. என்றாலும் மனசுக்கு உறுத்தலாய்த் தான் இருந்தது. ஒரே நல்லவிஷயம் உடனுக்குடன் சுத்தம் செய்யப் படுவது தான்.

கீழவாசலில் வெளியே போய்ச் செருப்பு வைக்குமிடத்தில் செருப்புகளை ஒப்படைத்தோம். இப்போ செருப்புக்கு ஆறு ரூபாய் என்றும் நாளை மாலை வரை எப்போ வேண்டுமானாலும் வாங்கிக்கலாம் என்றும் இரவிலும் திறந்திருக்கும் என்றும் கடைக்காரர் சொன்னார். உள்ளே போனால் எப்போ வெளியே வருவாங்கனு சொல்ல முடியாதே அதனால். நாங்கள் உள்ளே போகும்போதே ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியிலேயே க்ரில் போட்டுத் தடுத்து ஒரு மண்டபம் ஒன்றின் இடிந்த பாகங்கள் காணப்பட்டது. அந்த க்ரில்லுக்குள் புகுந்து அங்கிருந்த மேடையில் அமர்ந்து விட்டோம். நடராஜர் நுழையும் வாசலுக்கு அருகே இருந்தது அது. நடராஜர் நுழைந்தால் நம்மைப் பார்க்காமல் போகமுடியாது. அதுக்குள்ளே பக்கத்தில் இருந்தவங்க, நடராஜர் வர எட்டு மணி ஆகும் போய்ச் சாப்பிடறதுன்னா சாப்பிட்டு வாங்கனு சொன்னாங்க. இவருக்கு சர்க்கரையே பசி வந்துட்டா மயக்கம் வரப் போறதேனு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. ஆனால் அவரோ பசியே இல்லைனு சொல்லிட்டார். இப்போ வெளியே போய்ச் சாப்பிடப்போனா திரும்பி வரதுக்குள்ளே இங்கே வேறு யாரேனும் உட்கார்ந்திருப்பாங்க. கூட்டம் வரவர ஜாஸ்தியாயிட்டே இருக்கு. அப்புறம் உள்ளே நுழைய முடியாமப் போயிடும்னு அவரோட எண்ணம். சரினு உட்கார்ந்துட்டோம். வழியிலே இருக்கும் கடைகளை எல்லாம் காவலர்கள் அப்புறப்படுத்திக்கொண்டே இருந்தனர். திடீரென நாதஸ்வரம் சத்தம்.

என்னனு பார்த்தா ஆசாரியர் நடுவில் வர சுற்றி மற்ற தீக்ஷிதர்கள் வர, கையில் வெள்ளிக் கோல் ஒன்றைப் பிடித்துக்கொண்டு கோவில் ஊழியர் ஒருவர் பின் தொடர அனைவரும் ஆயிரங்கால் மண்டபம் வழியாய் ஊர்வலம் போல் வந்தனர். ஆசாரியர் நடராஜரிடம் அநுமதி வாங்கப்போகிறாராம். இவர்தான் நாளைக்கு ஆருத்ரா அபிஷேஹம் செய்யப் போகிறார். ராஜாவுக்கு அபிஷேஹம், அலங்காரம் செய்யப் போறவர் எப்படி இருப்பார்னு ராஜா பார்த்து ஓகேனு சொல்லணுமே! அதுக்கு! அவர் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் மாலைக் கட்டளைக்காரகள் சென்றனர். மீண்டும் பரபரப்பு. சரி நடராஜர் தான் வராராக்கும்னு பார்த்தா மாணிக்கவாசகர் பல்லக்கில் அவசரம் அவசரமாத் தேரை நோக்கிப் போனார். இப்போத் தான் போறார். இன்னும் கொஞ்சம் நேரமாகும்னு உள்ளூர்க்காரங்க சொன்னாங்க. ஒன்பதும் ஆயிற்று, பத்து மணியும் ஆயிற்று. தீவட்டி பிடிக்கிறவங்க தீவட்டித் திருவாசியோடு தேருக்குப் போனாங்க.

வேக வேகமாய்ப் பிள்ளையார் ஓட்டமாய் ஓடி வந்து மறைந்தார். அதன் பின்னே அதே வேகத்தோடு சுப்ரமணியரும் வர, அரை மணியில் தீவட்டி ஒளி திருவாசியாக மாற்றப்பட்டு வேகமாய் ஓடிவர, நடராஜர் வரப் போகிறார் என்பது புரிய உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து பார்க்க வசதியான இடத்துக்குப் போனேன். மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்துக்கொண்டே ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வர, நடராஜர் பல்லக்கில் ஆடி ஆடி வந்தார். அட, அந்தப் பக்கம் இல்லை பார்க்கிறார் என்று நான் நினைத்த அதே கணம் பல்லக்கு என் பக்கம் திரும்பிற்று. பார், பார், நன்றாய்ப் பார் என்ற வண்ணமே இன்னொரு ஆட்டம். அவர் ஆட்டத்துக்கு இடம் கொடுத்துக்கொண்டே மக்கள் சென்றனர். பல்லக்கோடு ஓடிக்கொண்டே பல்லக்கு திரும்பும் இடத்துக்கு வந்து மற்றொரு முறை பார்த்தேன். இப்போது இன்னும் அருகே, மிக மிக அருகே. கண்ணுக்கு எட்டாத செளந்தரியக் காட்சி! திரும்பத் திரும்ப அங்கேயே நடராஜரையே பார்த்ததில் பின்னால் சிவகாம சுந்தரி வருவதையே மறந்தும் போனேன். அதுக்குள்ளே என் கணவர் சிவகாமசுந்தரியைப் பாருனு என்னைப் பிடித்து இழுக்கவே ஒரு கணம் திரும்பியதில் சிவகாமி தெரிந்தாள். நன்றாய்ப் பார்ப்பதற்குள்ளாக பல்லக்கு நகர்ந்துவிட்டது. நடராஜர் முன்னாலே போய்விட்டாரே? எல்லாருமே பின்னால் ஓட்டமாய் ஓடினார்கள். ஆயிரங்கால் மண்டபத்திலோ கேட்கவே வேண்டாம். எல்லாரும் இடம் முன்பதிவு செய்துகொண்டு அமர்ந்திருந்தார்கள். நாங்கள் பார்க்கும்போதே ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தனர். இப்போ இன்னும் கேட்கவே வேண்டாம். லக்ஷார்ச்சனை பார்க்கவேண்டாம், காலை அபிஷேஹத்துக்கு வரலாம் என்று முடிவு செய்து கொண்டோம். பசி வயிற்றை அப்போது தான் கிள்ளியது.

வெளியே வந்தால் மணி பதினொன்றரை. இந்த நேரம் யார் நமக்குச் சாப்பாடு கொடுப்பாங்க? தீக்ஷிதர் வீட்டில் பாலாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால் இந்த நேரம் போய் அவங்க வீட்டுப் பெண்களை எழுப்புவதா? மனம் குழம்பியது. ஆனால் அங்கிருந்த உணவு விடுதிகள் அனைத்துமே திறந்திருக்க, எல்லாவற்றிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. வழக்கமாய்க் காபி, டிபன் சாப்பிடும் உணவு விடுதிக்குப் போனால் வெளியே ஐம்பது பேர் காத்திருப்பில். உள்ளே இடம் பார்த்துப் பார்த்துப் பார்த்து அநுமதித்துக்கொண்டிருந்தனர் எங்களை உள்ளே விட ஒரு மணி நேரமாவது ஆகும் போலிருந்தது. சூபர்வைசரிடம் பார்சல் கொடுக்க முடியுமா என்றால் இந்த மூன்று நாட்களும் பார்சல் சேவையே கிடையாது என்றுவிட்டார். அங்கேயே காத்திருக்கலாம் என்று ரங்க்ஸ் சொல்ல, வேண்டாம்,போகலாம் என்று நான் சொல்ல, எதிரே இன்னொரு உணவு விடுதி.

அங்கே போய்ப் பார்க்கலாம் என்று நான் கிளம்ப அரை மனசாய் அவரும் வந்தார். அங்கேயும் கூட்டம் தான். ஒருத்தர் வெளியே வருவதைக் கண்டு உள்ளே இடம் இருக்கானு கேட்டதுக்கு நாற்காலி காலினா போய் உட்காருங்க. உணவு எப்போத் தயாரோ அப்போ வரும். நான் ஒரு மணி நேரம் காத்திருந்தேன்னு சொல்லிட்டுப் போனார். நாங்க முழிச்சிட்டு நின்னப்போ ஒருத்தர் கூப்பிட்டு இரண்டு இடம் இருக்கு வாங்கனு உட்காரச் சொன்னார். உட்கார்ந்தாச்சு. சாப்பிட ஏதானும் கிடைக்குமா? அதுக்குள்ளே தட்டு நிறைய ஊத்தப்பம்(சாதா தான், சிதம்பரத்தில் நோ வெங்காயம்) எடுத்துட்டு ஒருத்தர் வர, பசிக்குப் பனம்பழம்னு நான் அதைக் கேட்க, எங்களுக்கு முன்னால் காத்திருப்பவர்களுக்குனு அவர் போக, எங்க எதிரே இருந்த ஒரு அம்மா, எழுந்து போகாதீங்க, இந்த ஊத்தப்பம் தான் எல்லாருக்கும். தொட்டுக்கத் தான் ஒண்ணும் கிடையாது. நாங்க வெறும் ஊத்தப்பம் தான் சாப்பிட்டுட்டுப் போறோம்னு சொன்னாங்க. சட்னி அரைக்கறாங்களாம் நேரம் ஆகுமாம். அதுக்குள்ளே இன்னொரு செட் ஊத்தப்பம் வர, இப்போ எங்களுக்குக் கொடுத்தார் சூபரவைசர். நான் முதல்லேயே ரெண்டு வாங்கிக்க எப்படி இருக்குமோனு நினைச்ச ரங்க்ஸ் ஒண்ணு போதும்னுட்டார். எப்படிச் சாப்பிடப் போறோம்னு நினைச்சால், வத்தக் குழம்பு இருக்கு வேணுமானு கேட்டார். ஆஹா, சரினு சொல்லிச் சாப்பிட்டோம். அப்புறம் ரங்க்ஸும் இன்னொண்ணு கேட்டுச் சாப்பிட்டார். மூன்றாவதுக்குத் தடா! அடுத்து வரவங்களுக்குக் கொடுக்கணுமே. ஒருத்தருக்கு ரெண்டு தான்! அதுக்கு மேலே கேட்டால் நோ தான்! :)))) அர்த்த ராத்திரியானாலும் சரி, பரவாயில்லைனு காப்பி வாங்கிச் சாப்பிட்டுட்டு வந்து ரூமிலே படுக்கும்போது பனிரண்டரைக்கும் மேலே ஆச்சு.

படங்கள் நன்றி கூகிளார். நான் எடுக்க முடியவில்லை! :(

Sunday, January 16, 2011

விலை உயர்ந்த பரிசு ப்ரியாவுக்கு! :D

என்னோட திருப்பாவைப் பதிவுகளைப்பொறுமையா முழுசும் படிச்சுக் கருத்துச் சொன்னதுக்காக வெங்காயமாலை ப்ரியாவுக்கு. இன்றைய நிலைமையில் வாங்கி எல்லாம்போடக் கட்டுபடி ஆகலை. அதனால் மாலை ஓசி தான். தொடுத்தது சிங்கப்பூர் மீனாமுத்து அவர்கள். அவங்க ஷைலஜாவுக்குக் கொடுத்ததை நான் கடத்திட்டு வந்து ப்ரியாவுக்குக் கொடுத்துட்டேன். ப்ரியா பெற்றுக்கொள்ளவும். வெள்ளையா இருக்கிறது பூண்டாம். இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய பூண்டு தான் சிங்கப்பூரில் கிடைக்குமாம். இருக்கிறதிலேயே இது தான் சின்ன சைஸாம்! சரிதான்! :P

Friday, January 14, 2011

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!

மார்கழி மாதம் முடிந்துவிட்டது. நோன்பும் முடிந்து விட்டது. கண்ணனும் வந்துவிட்டான். அவனிடம் வேண்டியதைக் கேட்கவும் கேட்டாயிற்று. இனி பொங்கல் கொண்டாடவேண்டியதுதான். ஆகவே இத்தனை நாட்களும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொன்றாய்ப் பாடிய பாடலைத் தான் பாடியதையும், அதை தினம் தினம் பாடலாம் என்றும், குறைவில்லாச் செல்வம் பெறலாம் என்றும் கூடப் பாடியோர், பாடலைக்கேட்டோர், இனி பாட இருப்போர் என அனைவரையும் வாழ்த்துகிறாள் ஆண்டாள். இதை பலஸ்ருதி என்று சொல்லலாம்.

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி= அமுதம் எடுக்க வேண்டிக் கடைந்த கடல் பாற்கடல். அதுதான் இங்கே வங்கக் கடல் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. வங்கம் என்பது இங்கே கப்பல்களையும் குறிக்கும். நம் மனதைக் கடலாகக் கொண்டால் அதில் மிதக்கும் அனைத்து எண்ணங்களும் கப்பல்கள் எனலாம். அத்தகைய மனதை இறைஅருள் என்னும் மத்தால் கடைந்து பகவானின் கடாக்ஷம் என்னும் அமுதத்தைப் பெறலாம். இன்னொரு பொருளில் பாற்கடலைக் கடைந்த போது அதில் இருந்து மா என்னும் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளை அடைந்தவன் ஸ்ரீமந்நாராயணன். மாவை அடைந்தவன் மாதவன் என்ற பொருளிலும் இங்கே வங்கக் கடல் கடைந்த மாதவனை என்று கூறுகிறாள் ஆண்டாள். அடுத்து கேசி என்னும் அரக்கனை அழித்தான் குழந்தை கண்ணன். ஆகவே கேசவன் என்ற பெயரும் பெற்றான். அந்த மாதவனை, கேசவனை இந்த ஆயர்பாடியின் கோபிகைகளான நாம், நிலவைப் போன்ற திருமுகம் கொண்ட அழகான பெண்கள் என்று கூறுகிறாள் ஆண்டாள். அந்த அழகான சேயிழையார் அனைவரும் சேர்ந்து கண்ணன் இருக்கும் இடத்துக்கே சென்று,


அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன= அவனிடம் வேண்டிப் பெற்றது இந்தப் பரமபக்தியாகிய அமுத ஊற்று. அதன் மூலம் கண்ணன் மனதை அவர்கள் வென்றார்கள். அவனிடமிருந்தே தங்களுக்கு வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார்கள். இவற்றை எல்லாம் தன் அளப்பரிய பக்தியால் உணர்ந்து பாடியது யார் தெரியுமா?? இப்பூவுலகுக்கே ஒரு அழகான அணி போல் விளங்கும் புதுவை என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருத்தர் இருக்கிறார். அவர் குளிர்ச்சியான மலர்மாலைகளைக் கண்ணனுக்குப் படைப்பார் தினமும், அந்த மாலைகளைப் பின்னர் கண்ணனின் பிரசாதமாகத் தானும் அணிந்து கொள்வார். ஆனால் அவர் மகளான கோதையோ தான் சூடிக் களைந்த பின்னரே கண்ணனுக்கு அணிவிப்பாள். கண்ணனுக்கும் அதுவே உவக்கும். அந்தப் பெரியவர் பெயர் பட்டர்பிரான் என அனைவரும் அழைக்கும் பெரியாழ்வார் ஆகும். அவருடைய திருமகள் தான் கோதை, என்னும் ஆண்டாள்.

சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்= அந்தக் கோதை சொன்ன தமிழ் மாலைகள் தாம் இந்தப்பாடல்கள். முப்பது பாடல்கள், இவை அனைத்தும் கோதை என்னும் ஆண்டாள் அடுத்து வருவோருக்கு அளித்த அருமையான பரிசு ஆகும். இந்தப் பரிசைத் தினம் தினம் தப்பாமல் சொல்லுபவர்களுக்குத் தன் நான்கு புஜங்களாலும்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!= சிவந்த வரியோடிய செந்தாமரைக் கண்களோடு கூடிய அழகிய இன்முகத்தை உடைய லக்ஷ்மிதேவியை மார்பில் சூடிய திருமால் எடுத்து அணைத்துத் தன் நெஞ்சோடு அவர்களைச் சேர்த்துத் தன் இன்னருளைத் தருவான். தன் அடியார்கள் தன் திருவருளைப் பெற்று இன்புறும் வண்ணம் அவர்களுக்குத் தன் இன்னருளைப் பொழிவான். இத்துடன் திருப்பாவை முடிகிறது. இதைத் தினமும் சொல்லலாம். மார்கழி மாசம் எல்லாருமே திருப்பாவை பொருள் எழுதுவார்கள் அல்லது அதை ஒட்டி ஏதேனும் எழுதுவார்கள். அது வேண்டாம்னு இத்தனை வருஷமா எழுதாமல் வைத்திருந்தேன். இப்போ நாராயணீயம் தினம் அரை மணி படிக்கிறதாலே அதைலிருந்தும் சில பாடல்களைச் சொல்லலாம் என்று நினைத்தபோது இந்தத் திருப்பாவையையும் போட முடிவு செய்து எழுதினேன்.


நாராயணீயத்தில் பட்டத்திரி வேண்டுவதாவது
"அஜ்ஞாத்வா தே மஹத்த்வம் யதிஹ நிகதிதம் விஸ்வநாத க்ஷமேதா:
ஸ்தோத்ரஞ் சைதத் ஸஹஸ்ரோத்தர மதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத்
த்வேதா நாராயணீயம் ஸ்ருதிஷூ ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந
ஸ்ப்பீதம் லீலாவதாரை ரிதமிஹ குருதா மாயுராரோக்ய ஸெளக்க்யம்

ஏ பரமாத்மா, விஸ்வத்துக்கெல்லாம் அதிபதியே! உனது சரித்திரத்தையோ பிரபாவங்களையோ முழுதும் நான் அறிந்தேன் இல்லை. ஆகவே இங்கு நான் சொன்னதில் தவறு இருந்தால் பொறுத்து அருளவும். என் வர்ணிப்பு சரியாய் இல்லை எனில் மன்னித்து அருளவும். ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் மேல் உள்ள இந்த ஸ்தோத்திரத்துக்கு உமது அனுகிரஹம் உதவட்டும். வேதப்ரமாணமான லீலா அவதாரங்களின் ஸ்துதிகளே இந்த ஸ்தோத்ரத்தை வளர்த்து வந்தது. நாராயணனைப் பற்றியதாலும், நாராயணனாகிய நான் எழுதியதாலும் இது நாராயணீயம் என்றே அழைக்கப்படும். இதைப் படிக்கும் உன் பக்தர்களுக்கும், இந்த அகில உலகில் உள்ள பக்தர்களுக்கும் நீண்ட ஆயுளையும், திடகாத்திரமான ஆரோக்யத்துடன் கூடிய தேகத்தையும், மற்றும் எல்லாவிதமான ஐஸ்வரியங்களையும் தந்து அருளட்டும்.


நாராயணீயம் ஸ்லோகம் சம்ஸ்கிருதத்தில் போட நினைச்சுப் போட முடியவில்லை. சரியான ஃபாண்ட் கிடைக்கவில்லை. திடீர்னு ஆரம்பிச்சதாலே சில தளங்களில் சென்று தரவிறக்க முடியவில்லை. நான் எழுதி இருப்பதில் சில தவறுகள் இருக்கலாம். அவை என்னாலேயே ஏற்பட்டவை. மேலும் சொல்லி இருக்கும் பொருளும் பொதுவான பொருளையே எடுத்துக்கொண்டேன். மூலப் பொருளைச் சிதைக்காமல் கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே.

திருப்பாவை உரைக்குத் துணை செய்தவர்கள்

உபய வேதாந்தி வேளுக்குடி திரு கிருஷ்ணன் அவர்கள், பொதிகைத் தொலைக்காட்சி உரைகள்.
உபய வேதாந்தி திரு அநந்தபத்மநாபாச்சாரியார் அவர்கள், ஜெயா தொலைக்காட்சி உரைகள்.

Thursday, January 13, 2011

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்! 29


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்= கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்தாகிவிட்டது. கண்ணனைக் கண்ணார, மனமாரக் கண்டு களித்துக்கொண்டிருக்கிறோம். மேலும் கண்ணனிடம் கேட்பதற்கு வெறும் அணிகலன்களும், ஆடைகளும் மட்டுமா?? இல்லை, இல்லை அவை எல்லாம் வெறும் வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் ஆடம்பரமாக, அத்தியாவசியமாய் இருக்கலாம், நமக்கு வேண்டியது அதுவல்லவே/

அதிகாலையிலேயே கருக்கலிலேயே எழுந்து, தோழிகளையும் அழைத்துக்கொண்டு நீராடி நோன்பு வழிபட்டு, இப்போது நோன்பையும் முடித்துவிட்டு உன்னையும் கண்டு சேவித்துக்கொண்டோம் கண்ணா, உன் பொற்றாமரை அடியே எங்களுக்குக் கதி. வேறெதுவும் இல்லை அப்பா. அந்தப் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் என்ன தெரியுமா கேள் கண்ணா!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.= அப்பா, எங்களைக் கடைத்தேற்றவே இந்த ஆயர் குலத்தில் நீ பிறந்தாய். பசுக்களை நாம் ரக்ஷிக்கிறோமா, அவை நம்மை ரக்ஷிக்கிறதா? ஆயர்கள் எவருமே பசுக்களை மேய விட்டு அவற்றின் வயிறு நிரம்பாமல் உணவு உண்ண மாட்டார்கள். பசுக்களை அப்படி ரக்ஷிப்பார்கள். அத்தகைய குலத்தில் பிறந்து நீ எங்களை ரக்ஷித்து ஆட்கொள்ளாமல் இருப்பாயா? எங்களை உன்னுடன் ஐக்கியம் செய்து கொள்ளாமல் இருப்பாயா? அதுதான் நடக்கும் அப்பா, வேறு எதுவும் நடவாது.

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு= கோவிந்தா, கோபாலா, நாங்கள் வந்தது வெறும் பறை என்னும் வாத்தியத்துக்காக மட்டும் அல்ல, எங்களுக்குத் தேவை மோக்ஷம், முக்தி. அதுவும் எப்படிப்பட்ட முக்தி?? ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும், என்றைக்கும், எப்போதும், எந்தப் பிறவியிலும் உன்னோடு நாங்கள்


உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!= உறவினர்களாகவே இருப்போம். நீ வந்து எங்கள் குலத்தைத் தேடிப் பிறந்துவிடு அல்லது எங்களை உன் குலத்தில் பிறக்கச் செய். உன்னைத் தவிர வேறொருவருக்கு நாங்கள் எந்தவிதத் தொண்டும் செய்ய மாட்டோம். உனக்கே நாங்கள் அடிமையாக இருப்போம். ஆகவே எங்களிடம் இருக்கும் மற்ற ஆசைகளை எங்களிடமிருந்து விட்டொழிக்க வேண்டி, எங்கள் மண்ணாசை, பொன்னாசை போன்ற எந்தவிதமான இவ்வுலக ஆசைகளும் எங்களிடம் ஒட்டாதபடிக்கு எங்களை மாற்றி அருள் புரிவாய் கண்ணா. எங்களுக்கு வேறு எதுவுமே வேண்டாம், நின்னருளே வேண்டும். உனக்கே நாங்கள் என்றென்றும் அடிமை.

இதை பட்டத்திரி எப்படிச் சொல்கிறார் என்று பார்த்தால்,பகவானின் சொரூபமே தியானிக்கத் தக்கது என்கிறார். பகவானின் செளந்தர்யமே நம்மை மகிழ்ச்சி பொங்க வைக்கும் என்கிறார். மேலும் அவர் பகவானின் செளந்தர்யத்தை எவ்விதம் வர்ணிக்கிறார் என்றால்

ஸூர்யஸ்பர்த்திகிரீடம் ஊர்த்த்வதிலக ப்ரோத்பாஸி பாலாந்தரம்
காருண்யாகுலநேத்ரம் ஆர்த்ர ஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்
கண்டோத்யந் மகராப குண்டலயுகம் கண்டோஜ்ஜ்வலத் கெளஸ்துபம்
த்வத்ரூபம் வநமால்ய ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே

பகவானின் திவ்ய மங்கள சொரூபத்தைத் தியானிப்போம். அதில் அடங்கி இருக்கும் இனிமையான செளந்தர்யத்தை வர்ணிக்க வார்த்தைகளால் இயலாது. சூரியனைப் போல் பிரகாசிக்கும் கிரீடமும், நீண்ட கஸ்தூரித் திலகமும், அழகான அகன்ற நெற்றியும், அருள் பொழியும் செந்தாமரையை நிகர்த்த கண்களும், அன்பான புன்னகையும், நீண்ட நாசியும், காதில் போட்டிருக்கும் மகரகுண்டலங்களின் ஒளியானது கன்னங்களில் பட்டுப் பிரகாசிக்கும் அழகும், கழுத்தில் கெளஸ்துபமணியும், வனமாலையும், ஸ்ரீவத்ஸம் என்னும் மறு உள்ள மார்பும் அணிந்த பகவானின் திருவடிகளைத் தியானிப்போம். அது ஒன்றே நம்மைக் கடைத்தேற்றும்.

Wednesday, January 12, 2011

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே! தொடர்ச்சி!


அன்று கொட்டும் மழையில் கூட பிக்ஷாடனர் வீதிவலம் வந்திருக்கிறார். அதன் பின்னர் மறுநாள் தேரில் ஏறப் போகும் நடராஜருக்குத் தேர் ஓடும் வீதிகள் அனைத்தும் செளகரியமாய் இருக்கானு பரிசோதனையைச் சந்திரசேகரர் நட்ட நடுராத்திரியில் வீதிவலம் வந்து எல்லாத்தையும் செக் பண்ணுகிறார். முழிச்சுண்டு இருந்து அவற்றை எல்லாம் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்த நான் நல்லாத் தூங்கிட்டேன். காலையில் நாலு மணிக்கே கொட்டுக் கொட்டுனு எழுந்த ரங்க்ஸ் லாட்ஜின் பணியாளரிடம் வெந்நீர் போடச் சொல்ல, அவரும் கீசரை ஆன் செய்தார். அந்தச் சத்தத்தில் நான் விழித்துக்கொண்டேன். ரங்க்ஸ் காப்பி சாப்பிட வரியானு கேட்க, இந்த அஜந்தா படியில் ஏறி, இறங்கும் அசெளகரியத்தை நினைத்து நான் காப்பியைத் தியாகம் செய்தேன். ரொம்பச் சொல்லிப் பார்த்துட்டு அவர் மட்டும் காப்பி சாப்பிடப்போனார். நான் அவர் வரதுக்குள்ளே குளிச்சுத் தயாராகலாம்னு நினைச்சால் கதவை யாரோ தட்டறாங்க. யார்னு கேட்டால் லாட்ஜின் பணியாளர். கதவைத் திறக்கலாம்னு பார்த்தா அது தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு. பூட்டிக்கொண்டிருக்கு போல! அடக் கடவுளே, இப்போ என்ன செய்யறது? சாவியும் உள்ளே இல்லை இருக்கு? உள்ளே இருந்து திறக்கும் முறை தெரியாதே? குழப்பத்துடன் இங்கே இருந்து நான் திறக்க, வெளியே இருந்து அந்த ஆள் திறக்கப் பத்து நிமிடப் போராட்டத்துக்குப் பின் கதவு திறந்தது. என்ன விஷயம்னு கேட்டால் காப்பி வாங்கித் தரவா? சார் போறச்சே சொல்லிட்டுப் போனார் என்கிறார். வந்த கோபத்தில் பேசாமல் கதவைச் சார்த்திக்கொண்டு பூட்டை நீக்கிட்டுத் தான் உள்ளே வந்தேன். எதுக்கும் ரங்க்ஸ் வந்ததுமே குளிக்கப் போலாம்னு உட்கார்ந்திருந்தேன். அவர் வந்ததும் கதவு புராணம் பாடிட்டுக் குளிக்கப் போனேன். அப்புறம் இரண்டு பேரும் குளிச்சுத் தயாரானதும் நாலரை மணி போல் கோயிலுக்குக் கிளம்பினோம்.

இவ்வளவு சீக்கிரமாப் போறோமே, செருப்பு வைக்கும் இடம் திறந்திருக்குமா? கோயிலில் யாரு இருப்பாங்க? தெருவில் நடமாட்டம் இல்லையேனு யோசிச்சுக்கிட்டே போனேன். நாங்க இருந்த பகுதியில் தான் நடமாட்டம் குறைவு. கொஞ்சம் தள்ளிப் போனதும், தேர்முட்டிக்கு முன்னால் ஆரம்பிச்சுச் சாரி சாரியாக மக்கள் கோயிலுக்கு உள்ளே போய்க்கொண்டிருந்தார்கள். அட? இவ்வளவு பேரா போறாங்க? ஆச்சரியமாய் இருந்தது. போகும் வழியிலேயே திறந்திருந்த ஒரு கடையில் காப்பியும் சாப்பிட்டுவிட்டு இருவரும் கீழவாசலுக்குப் போனோம். செருப்பு வைக்கும் இடம் திறந்திருந்தது. அப்போது வரையிலும் செருப்பு ஒரு ஜோடிக்கு ஒரு ரூபாய் தான் வசூலித்துக்கொண்டிருந்தார். ஆனால் இரவு ஒன்பது மணிக்குள்ளாகச் செருப்பை எடுத்துக்கொண்டுவிடவேண்டும். இல்லை எனில் மறுநாள் தான் எடுக்க முடியும். அக்கம்பக்கம் சுற்று வட்டாரமெல்லாம் அன்றும், மறுநாளும் பள்ளி, அலுவலகம் விடுமுறை. போக்குவரத்தெல்லாம் திசை திருப்பப் பட்டிருந்தது. மிகச் சிறப்பான ஏற்பாடுகள் நகராட்சியால் செய்யப் பட்டிருந்தது என்பதை மறுக்கவே முடியாது. முக்கியமாய் முதல்நாள் கோபுரவாசலிலும், சிவகங்கைக்கரையிலும் இருந்த திடீர்க்கடைகளில் போட்ட மிளகாய் பஜ்ஜி, பக்கோடா போன்ற தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்கேயே மக்கள் போட்டிருந்த குப்பையை மறுநாள் காலை நாலு மணிக்குள்ளாக அகற்றிச் சுத்தம் செய்ததோடு இல்லாமல் ப்ளீச்சிங் பவுடர், கொசுமருந்து போன்றவை அடித்துச் சுத்தமும் செய்திருந்தனர். எல்லாக் கடைகளும் திறந்து எல்லாக் கடை வாசலிலும் நடராஜரின் படமும், பூரணகும்பமும், ஆரத்தியும் கற்பூர ஆரத்தி, தேங்காய் உடைத்தல் மண்டகப்படி செய்பவர்கள் அதற்கான ஏற்பாடுகள் என்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தனர். பெரிய பெரிய மோப்ப நாய்கள், கிட்டத்தட்ட நானூறு போலீஸார் உள்ளே இருந்தனர். மெடல் டிடெக்டர் பொருத்திக்கொண்டிருந்தார்கள். நாங்க பாட்டுக்குப் போனோம். ஒண்ணும் சொல்லலை. வழியைப் போகிறவங்களுக்கு ஒண்ணு, வரவங்களுக்கு எதிர்த்திசைனு பிரிக்கக் கயிறு கட்டிட்டு இருந்தாங்க.

நடராஜர் சித்சபையில் இருந்து வெளியே வரும் கோபுரம் பழங்கள்,காய்களால், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கே போய் நிற்கலாம் என்றால் கூட்டம் அதைத் தாண்டி வந்து விட்டது. ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியெல்லாம் இரண்டு பக்கமும் வழிவிட்டு ஜனங்கள், ஜனங்கள், ஜனங்கள். உள்ளே போகலாமோ என யோசித்தால் எல்லாரும் உள்ளே போகவேண்டாம் நெரிசல் இருக்காதென்றாலும் லேசில் வெளியே வரமுடியாது. ரொம்பக் கஷ்டம் என்றார்கள். எங்கள் தீக்ஷிதரும் அதுதான் சொல்லி இருந்தார். அவர் சொன்னது கீழவாசலுக்கு எதிரே இருக்கும் கிணற்றில் சுற்றிப் போட்டிருக்கும் பெரிய மேடையில் நின்று கொண்டு பார்க்கலாம். உள்ளே இருந்து படிகளில் ஏறிவரும்போதும் பார்க்கலாம். பின்னர் விட்டவாசல் வரை போறதையும் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார். தீக்ஷிதருக்கு என் கணவர் ஐம்பது வருஷப் பழக்கம் என்றாலும் இந்த விஷயத்தில் தெரிஞ்சவங்க யாராய் இருந்தாலும் முன்னுரிமை கிடையாது. அவங்க குடும்பத்தின் மற்ற நபர்கள் கூட இப்போ நாங்க பார்க்கிறாப் போல் தான் பார்த்தாகணும்.

சித்சபையில் அன்றைய தினம் யார், யாருக்கு வேலை இருக்கிறதோ அவங்களும் நடராஜருக்கு அலங்காரம் செய்யும் எட்டு தீக்ஷிதர்களும், தலைமை ஆசாரியரும், மற்றும் அன்றைய கட்டளைக்காரர்களுமே தான் அருகே இருக்க முடியும். மற்றத் தொண்டர்களில் இயன்றவர்கள் கூடவே செல்கின்றனர். அதுக்குத் தனி பலமும், திறமையும் வேண்டும் என்றாலும் யாரும், யாரையும் தடுப்பது என்னமோ இல்லை. கிட்டப்போய்ப் பார்க்கிறதெல்லாம் நம்ம திறமை, சாமர்த்தியம். ஆனாலும் உள்ளே செல்வதில் உள்ள சில ஆபத்துக்களை நினைத்து அதைத் தவிர்த்தோம். கிணற்று மேடையில் இருந்து எதிரே சித்சபையும் உள்ளே நடக்கும் ஆராதனைகளும், அங்கே ஏற்றி இருந்த தீவட்டி வெளிச்சத்தில் தெரிந்தது. சற்று நேரத்தில் கொட்டுக் கொட்டுவதில் தெரிந்த வித்தியாசமும், ஜனக்கூட்டத்தின் பரபரப்பும் நடராஜர் வெளியே வரும் நேரம் வந்துவிட்டதை உணர்த்தியது. உள்ளே இருந்து வந்த பிள்ளையார் ரொம்பவே வேகமாய் வெளியே போய் அவரோட தேருக்குப் போய் விட்டார். இதே போல் சுப்ரமணியரும்.

கொம்பு வாத்தியத்தின் ஓசையும், எக்காளத்தின் ஓசையும், சங்கின் முழக்கமும் அதிகரித்தது. முதலில் தீவட்டிக்காரர்கள் பெரிய திருவாச்சி போன்ற தீவட்டிகளில் எண்ணெய் ஊற்றி எரிய எரிய அதை எடுத்துக்கொண்டு ஓடி வந்தனர். நடராஜர் சுற்றிலும் நெருப்பின் நடுவே ஆடுகிறார் அல்லவா? அதைச் சுட்டும் விதமாக இது! நடராஜரைச் சுற்றிக் காணப்படும் திருவாச்சியே அக்னி ரூபம் என்பார்கள். கிட்டத் தட்ட அதே மாதிரியில் திருவாச்சியில் தீபங்களை ஏற்றிக்கொண்டு தீவட்டிக்காரர்கள் ஒரு தாளலயத்தோடு ஓடி வர, அம்மன் திருவாச்சிக்கும் அவ்வாறே எடுத்துக்கொண்டு வேறொரு குழு வந்தது. அம்மனோடு சிறியது.

வாத்தியக்குழு அடுத்து வர, பின்னர் வேதகோஷங்கள் முழங்க வேதியர்கள் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் தேவார, திருவாசகங்கள் ஓதும் குழுவினர் வர, பொதுமக்களில் சிலர் ஆடிப்பாடிக்கொண்டு வந்தனர். நடராஜர் சித்சபையில் இருந்து எந்தவாசல் வழியாக இறங்கினார் என்பதை இங்கிருந்தே சொல்ல முடியவில்லை. ஆனால் கூட இருந்த மக்கள் இடப்பக்கமாய் இறங்கிப் பிராஹாரம் சுற்றிக்கொண்டு வெளியே வருவார் என்றனர். ஆகவெ அதுமாதிரியே சுற்றிவருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரத்தில் கூட்டத்தினரின் "ஹாஹா"காரம் உச்சகட்டத்தில் எழுந்தது. பலரும் ஆடிக்கொண்டிருந்தனர். காணக்கிடைக்காத காட்சி. ஆனால் கண்டிப்பாய்க் காமிரா தடை செய்யப் பட்டிருந்ததால் அந்தக் காட்சிகளை எல்லாம் எடுக்க முடியவில்லை. ரொம்பவே வருத்தம்.

கட்டளைக்காரர்கள் அனைவரும் சிறப்பான அலங்காரத்தில் நடராஜரைப் பார்த்த வண்ணமே பாடல்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பின்னாலேயே நடந்து வர, நடராஜரின் பல்லக்கில் ஆட்டமான ஆட்டம்! அது என்ன ஆட்டம், என்ன ஆட்டம்? ஆடிக்கொண்டு நடராஜர் வந்தார்.

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

முதல் நாள் போலவே இன்றைக்கும் கண்ணீர் வந்தது. ஒரு நிமிடம் இந்த ஆட்டத்தை நிறுத்திவிட்டானென்றால் என்ன ஆகும்?? நாம் வாழ, அவன் ஆடுகிறானே? நேற்று நாம் வாழப் பிச்சை எடுத்தான். இன்று நாம் வாழ அவன் ஆடுகின்றான். அந்த ஆட்டத்தில் தானே நம் இயக்கமே இருக்கிறது! கண்ணார, மனமாரக் கண்டோம் காட்சியினை. மெல்ல மெல்ல மெதுவாகத் தான் செல்கின்றார்கள். அதோடு இருபக்கமும் இருக்கும் மக்கள் பார்க்கும் வண்ணம் வசதியாக இப்படியும், அப்படியும், இடமும், வலமும் பல்லக்குத் திரும்பித் திரும்பித்தான் செல்கிறது. விட்ட வாசலுக்குப் போனதும் கூட்டமெல்லாம் தேர்முட்டிக்கு ஓடியது. கூட்டத்தில் செல்லவேண்டாம் என்று நாங்கள் சற்று நேரம் நின்றுவிட்டுப் பின்னர் வெளியே செல்லலாம் என்று தோன்றியபோது வெளியே வந்தோம். என்ன ஆச்சரியம்! அருகே இருந்து பார்க்கமுடியலையே என்ற என் வருத்தத்தைப் புரிந்து கொண்டாற்போல் எங்கள் எதிரே கோபுரவாசலில் இருந்த கடையின் மண்டகப்படியை ஏற்ற வண்ணம் நடராஜர் ஆடிக்கொண்டிருந்தார். ஆஹா, மீண்டும் அதிசயக் காட்சி. அங்கேயே நின்றுவிட்டோம். பின்னர் பத்து நிமிஷம் கழிச்சு நடராஜர் தேருக்குப் போனார். நாங்கள் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டுக் கூட்டம் குறைந்ததும் தீக்ஷிதர் வீடு நோக்கிப் போனோம்.

தேர் முதலில் அவர்கள் வீடு இருக்கும் பக்கம் தான் வரும் என்றும், பின்னர் தெற்கு வீதி வழியாக மேலவீதிக்குப் போய் வடக்கு வீதிக்கு ஈசான்யமூலைக்கு வரும்போது மாலை நாலு மணிக்கு மேல் ஆகும் என்றும் தீக்ஷிதர் தெரிவித்தார். ஈசான்யமூலையில் தேர் திரும்பும்போது பார்ப்பது நன்மை பயக்கும் என்றும் ,மாலை நாலு மணி அளவில் அங்கே போய்ப் பார்க்குமாறும் கூறினார். மேலும் அப்போது சிறிது நேரம் கழித்து அவர்கள் வீட்டு வாசலில் நடராஜர் மண்டகப்படிக்கு அரை மணி நேரம் நிற்பார் என்றும் தேரை அருகே இருந்து பார்க்கலாம் எனவும், முடிந்தால் வடமும் பிடிக்கலாம் என்றும் கூறினார். ஆகவே அவசரம் அவசரமாய்க் காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டோம். மீண்டும் அறைக்கு மேலே செல்லக் கணவர் விரும்ப நானோ மேலே ஏறமாட்டேன் என்று சொல்லிவிட்டு நிவேதா பதிப்பகம் போட்டிருந்த புத்தகக் காட்சிக்குப் போய்விட்டேன். மேலே போய்விட்டு அங்கிருந்து காமிராவை எடுத்துக்கொண்டு வந்தார். தேர்வரும்பாதையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்மணிகளையும், சிறுவன் ஒருவனையும் படம் எடுக்கப் போனால் தீக்ஷிதர்கள் நாலைந்து பேர் தேர்விழாமல் எடுக்கவேண்டும் என்று சொல்ல, கொஞ்சம் யோசித்துவிட்டு ஒரு மாதிரியாகக் கோலம் போடுவதை மட்டும் எடுத்துக்கொண்டேன். தேர் கொஞ்சம் நகர்ந்திருந்தது. யாரானும் மெதுவா நடந்தா, தேர் மாதிரி ஆடி, அசைந்து வரா பாரும்பாங்க. அது நிஜம் என்பதை நிரூபிப்பது போல் தேரின் தொம்பைகள் ஆட, கொடி பறக்க தேர் குலுங்கக் குலுங்க மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28

கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!


கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்= அடியவர்களுக்குக் கேட்டதை எல்லாம் கொடுக்கும் கண்ணன் இங்கே ஆண்டாளிடமும், மற்ற கோபியரிடமும் என்ன கொண்டு வந்தீர்கள் எனக் கேட்கிறான் போலும். ஆண்டாள் நாங்க என்ன கொண்டு வருவோம் அப்பா?? நாங்கள் அனைவரும் சாதாரண இடைக்குலத்துப் பெண்கள் தானே? தினம் பொழுது விடிந்தால் பாலைக் கறந்துவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு மேயவிட்டுவிட்டுக் கையில் கொண்டு போகும் கட்டுச்சோற்றை உண்போம். எங்களுக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் எதுவும் அறியமாட்டோம். சாதாரணமான அறிவு கூட எங்களிடம் இல்லை. எங்களிடம் இருப்பது உன்னிடம் நாங்கள் காட்டும் அன்பு மட்டுமே. அதுவும் இந்த ஆயர் குலத்தைத் தேடி வந்தல்லவோ நீ பிறந்திருக்கிறாய்?? இருந்திருந்தும் இந்தக் குலத்தை உய்விக்கவேண்டும் என்று தோன்றி உள்ளதே உனக்கு?

அடடா, இதைவிடப் பெரிய புண்ணியம் எங்களுக்கு வேண்டுமா?? வாராது வந்த மாமணியாக நீ எங்கள் குலத்திலெ எங்களுக்கு நடுவே பிறந்து, வளர்ந்து, இருக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோமே, அதுதான் அப்பா நாங்கள் செய்த பெரும்புண்ணியம்!


குறைவொன்றுமில்லாத கோவிந்தா! = அப்பா, உனக்குக் குறை ஒன்றும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். நீ எங்களிடையே வந்து பிறந்து எங்கள் குலத்தைப்பெருமைப்படுத்தியதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே, குறை எதுவுமே இல்லை, கோவிந்தா! பாதாளம் வரை பாயும் அறியாமையுடையோராகிய நாங்கள் உன்னால் அன்றோ குறை அறியாமல் இருக்கிறோம்! எங்கள் அறியாமையைப்போக்கி உன் கருணையால் எங்களை உய்விக்க வந்திருக்கிறாயே, இதை விடவும் பெரும்பேறு வேறு என்ன வேண்டும்? எங்களுக்கு என்ன குறை அப்பா? எதுவும் இல்லை. உன் கருணை தான் வேண்டும். ஆனால் அதையும் நாங்கள் கேட்கும் வரையில் நீ காத்திருக்காமல் அள்ளி அள்ளிப் பொழிகிறாய்.

உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் = உன்னோடு எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த உறவை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜென்ம ஜென்மங்களுக்கும் ஒழிக்க முடியுமா? அப்பா, நீ எங்களுக்கு ரத்த சம்பந்தமான உறவு மட்டுமல்ல. நீயே நாங்கள், நாங்களே நீ. இருவரும் ஒன்றே. எங்களைப்பிறக்கப் பண்ணிய நீ தேடிப்பிடித்து வந்து எங்களில் ஒருவனாயும் பிறந்து எங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் உறவாக்கிக்கொள்கிறாய். இதைவிட வேறு என்ன வேண்டும்? அப்பா, நாங்கள் ஏதுமறியாப்பிள்ளைகளாய் இருக்கிறோம்.

அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்! = உன்னிடம் நாங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பினாலும், பாசத்தினாலும் ஏதேனும் உன்னைச் சொல்லி இருப்போம். உன்னைச் சீண்டி இருப்போம். உன்னை ஏ, கோவிந்தா, மாடு மேய்ப்பவனே என்றெல்லாம் கூப்பிட்டிருப்போம். உன்னைக் கடிந்து பேசி இருப்போம். இதெல்லாம் உன்னிடம் கொண்ட உரிமையால் அன்றி வேறல்ல. கண்ணா, எங்கள் இறைவா, எங்களிடம் இவற்றை எல்லாம் ஒரு குற்றமாய்க்கண்டு எங்களைச் சீறி வெறுத்து ஒதுக்கிவிடாதே. எங்களை உன்னோடு சேர்த்து ஆட்கொள்வாய். நாங்கள் அனைவரும் உனக்கே உரியவர்கள். உன் சொந்தம், உன் உடமை, உன் சொத்து. ஆகவே எங்களுக்கு மோக்ஷத்துக்கான வழியைக் காட்டி அருள்வாய்.

இதே மோக்ஷத்தை பட்டத்திரியும் வேண்டுகிறார். அனைத்து உயிர்களிடமும் இருப்பது பரம்பொருளே என்றே அவரும் கூறுகிறார்.

த்வத் பாவோ யாவதேஷு ஸ்ப்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம்
த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிம்பி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ;
தஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம்

ப்ரபுவே, புழு, பூச்சிகளாகட்டும், மிருகங்களாகட்டும், மனிதர்களாகட்டும், மிக மிகத் தாழ்ந்த நிலையில் உள்ள உயிர்களாகட்டும், மிக மிக உயர்ந்த நிலையில் உள்ள உயிர்களாகட்டும், அனைத்தும் தங்கள் அம்சமே. இந்த பாவம் எனக்குள்ளே விளங்கித் தோன்றவேண்டும். ப்ரபுவே. எல்லா ஆத்மாக்களும் ஒன்றே. இந்த மெய்யறிவு எனக்கு ஏற்பட அருள் புரியவேண்டும். அந்நிலையில் "நீரும் நானும் ஒன்றே; வெவ்வேறில்லை" என்னும் வேறுபாடற்ற உணர்வோடு நான் இருத்தல் வேண்டும். இவ்விதம் ஆரம்பிக்கப் படவேண்டும் என்னுடைய பாகவத தர்மம். இதற்கு அழிவில்லாமல் காக்கவேண்டும். இத்தகையதொரு மனோநிலை எனக்கு நிலவ வேண்டிய பக்தி மார்க்கத்தைக் காட்டி அருள வேண்டும்.

அன்பெனும் அக்ஷயபாத்திரத்தில் இருந்து

அன்பெனும் அக்ஷய பாத்திரம்!

கபீரன்பரின், "ஈரக்கம்பளம் சுமையதிகம்" என்னும் பதிவின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் என்னுடைய குணத்தைச் சுட்டுவதாலோ என்னமோ தெரியவில்லை. அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டிப் பலரும் பெரும் மதிப்பும், மரியாதையும் காட்டுவது பல சமயங்களில் கூச்சத்தையும் எல்லாவற்றையும் விட பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. பாராட்டுக்களின் சுமை என்னை அந்தக் கழுதை சுமக்கும் ஈரக்கம்பளத்தை நினைவூட்டுகிறது. அந்தப் பதிவின் குறிப்பிட்ட இந்தப் பத்திகளே என்னைக் கவர்ந்தவை:

"//அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான். //

இங்கே சொல்லி இருப்பதோ மெளனம், மெளனம், இது தான் ஆன்மிகத்தில் நாட்டம் உடையவர்கள், முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டியது. ஆனால் குறைகுடமாய்க் கூத்தாடும் என்னையும் மதித்து, அரைகுறை அறிவோடு நான் எழுதுவதையும் பாராட்டி என்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமாய்க் கபீரன்பருக்கும் இதை எவ்விதம் தெளிவாக்குவது?? நான் இன்னும் ஆரம்பப் பாடத்தையே ஆரம்பிக்கவில்லை. ஞான வழி என்பதை என்னால் இன்னமும் நினைக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு அடிப்படையான பள்ளிப்படிப்பு பக்தியில். அதிலேயே இன்னும் தேர்ச்சி அடையவில்லையே? பக்தி என்றால் என்ன என்பதையே இன்னும் தெரிந்து கொள்ள முயலவில்லை. சாதாரணமாக எல்லாரும் நினைப்பதைப் போலவே கண், மூக்கு, முகம், காது, கைகள், கால்கள் உள்ள ஒரு தேவதையை என் பக்திக்கு என்ற ஏற்பட்ட ஒரு மூர்த்தியை என் இஷ்ட தெய்வமாக வணங்கிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அதைத் தாண்டி அப்பால் போகவில்லை. போக இயலவில்லை என்றே சொல்லலாம்.


நம் கண்ணுக்குத் தெரியாத நிர்குணப்பரமாத்மாவிடம் அன்பு/பக்தி செலுத்துவது என்பதை இன்னமும் என்னால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றே சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தது எல்லாம் நான் வணங்கும் அந்த மூர்த்தியின் பெருமைகளையும், மஹிமைகளையும் எடுத்துச் சொல்லும் புராணங்களில் இருந்து சின்னச் சின்னத் துளிகளே. அதுக்கே இவ்வளவு ஆரவாரம், ஆர்ப்பாட்டத்தோடு இருக்கேன். ஆண்டவனிடம் இன்னமும் பரிபூரண சரணாகதி செய்யும் மனப்பக்குவம் வரவில்லை. பரம்பொருளிடம் அன்பு வைக்கவேண்டும். ஆசை வைக்கக் கூடாது. ஆனால் நானோ ஆசைதான் வைத்திருக்கிறேன். அன்பே சிவம் என்று சொல்லிய திருமூலரின் வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

இதன் பொருள் தெளிவு. யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அத்தகையதொரு அன்பைத் திரும்ப எதையும் பிரதிபலனாய் எதிர்பாராத அன்பைக் கொடுக்கிறேனா?? என்னுள்ளே குடிகொண்டிருக்கு அந்த சிவனைக் கண்டு பிடித்து என் ஜீவனை அதனுடன் இணைத்துக்கொள்ளும் வழியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேனா? இல்லை என்பதே பதில். இன்னமும் உலகத்து ஆசைகளை விட்டொழிக்கவில்லை. மாயையாகிய அந்த ஆசைகளும், அவற்றில் ஈடுபாடும், பற்றும் அறவே ஒழியவில்லை. இறைவனிடம் அன்பு செலுத்தச் செலுத்த ஆசைகள் தோன்றுவதையும் முளையிலேயே அறுத்து எறிய வேண்டும் என்கிறார் திருமூலர்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

இன்னும் ஆசைகள் அகலவில்லை. மாயையில் இருந்து விடுதலை பெறவும் இல்லை. அதற்குண்டான முயற்சிகளும் செய்யவில்லை. மாயை மனதை விட்டு அகலமறுக்கிறது என்றே சொல்லலாம்.

//மாயை மாயை என்பர் அறிவாரில்லை மாயையை
மாயையாவது அதுவே மனம் விட்டு அகல மறுப்பதுவே

மாயை மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்த்தே தேகம்
ஓயாது உரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்//

கபீரின் ஈரடிகளிலே நம் கபீரன்பர் மேற்கண்ட வாறு மொழிமாற்றம் செய்துள்ளது என்னைப் பொறுத்த வரையிலும் முற்றிலும் பொருத்தமான ஒன்று. என்னிடம் இன்னமும் ஆசைதான் இருக்கிறது. ஆசைகள் அறுந்து மனம் ஈசனை நாடவேண்டும். இங்கே ஈசன் என்று சொல்லி இருப்பது, நாம் வடிவாய் வணங்கும் விக்ரஹங்களில் அல்ல. உள்ளே உள்ள அன்பு ஊற்றுச் சுரந்து அதில் தெரியும் ஜோதி மயமான ப்ரபிரும்மத்தை. அன்பு ஊற்றுப் பெருகவேண்டும். அன்பானது கொடுக்கும் பொருள். அக்ஷய பாத்திரத்தில் எவ்வாறு எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கோ அது போல் கொடுக்கக் கொடுக்க ஊற்றிலிருந்து சுரக்கும் தண்ணீர் போல் கொடுக்கக் கொடுக்க மீண்டும் மீண்டும் அன்பு சுரக்கும். ஊற்றுக்கண்ணிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க மீண்டும் மீண்டும் சுரப்பது போல. குழந்தை எத்தனை குடித்தாலும் தாய்க்கு மீண்டும் மீண்டும் பால் சுரப்பது போல கொடுக்கக் கொடுக்கக் குறையாத அன்பு ஊற்றுச் சுரக்கவேண்டும்.


அன்பு என்பது பிரதிபலன் எதிர்பாராமல் கொடுத்துக்கொண்டே இருப்பது. கொடுக்கக் கொடுக்க நம் மனம் நிறைகிறதே அதில் தான் பரிபூரண ஆநந்தம் தோன்றும். ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை விடவும் மனிதனுக்கு மனதும், புத்தியும் பண்பட்டே தான் இருக்கிறது. ஆனாலும் நாம் சரிவர அதைப் பயன்படுத்துவதில்லை. ஆசையை அன்பு எனத் தவறான புரிதலில் இருக்கிறோம்.
நம் மனதும், புத்தியும் உள்ளிழுக்கப்பட்டு, நான் என்ற அஹங்காரம் ஒழிந்து ஈசனிடம் ஒருமைப்பட்ட நிலையில் செலுத்தும் அன்பையே பக்தி என்றும் சொல்லலாம். அத்தகையதொரு அன்பு எத்தனை பிறவி எடுத்தாலும் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும். இந்த அவா என்னும் ஆசையை ஒழிப்பது குறித்து வள்ளுவப் பெருமானும் ஒரு அதிகாரமே எழுதி உள்ளார்.
"அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பினும் வித்து.

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தின் வித்தே இந்த அவா என்னும் ஆசைதான் என்று பரிமேலழகர் உரை கூறுகிறது. அந்த அவாவை ஒழிக்கவேண்டும். இதற்குத் தேவை ஒருமையுடனேயே ஈசன் திருவடி நினைந்து நினைந்து உருக வேண்டும். நாமே அதுவாகி ஒன்றோடு ஒன்று கலக்கவேண்டும். நாவுக்கரசப் பெருமான் சொன்ன மாதிரி,
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்னும்படிக்கு மெய்ம்மறந்த நிலையில் ஆன்மா அந்தப்பரம்பொருளோடு ஒன்ற வேண்டும்.


. இங்கே அன்பின் தத்துவம் பற்றி, அன்பே கடவுள் என்பதைப் பற்றி என் ஆதர்ச புருஷர்களின் ஒருவரான விவேகாநந்தர் கூறி இருப்பதைப் பார்ப்போமா?? இது 1896-ம் ஆண்டு சுவாமி அவர்கள் மாக்ஸ்முல்லருடன் ஆன தமது தரிசனத்திற்குப் பின்னர் கூறியவை. தன் சீடர் ஆன லெக்கெட் என்பவருக்குப் பிரேமையின் மாபெருங்கடல் ஆன சுவாமி எழுதியது பின்வருமாறு:

"சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனைக் கூட நேசிக்கும் நிலைக்கு நான் மெல்லச் சென்று கொண்டிருக்கிறேன். தாசிகள் வசிக்கும் ஒரு விடுதியில் அவர்களைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தை நினையாமல் உடன் வாழக் கூடியவனாக இருக்கிறேன். சுற்றியுள்ள தீமையைத் தீமையாகக் காணாவிட்டால் உலகுக்கு நல்லது செய்யமுடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக வேலை செய்யும் ஆற்றல் என்னிடம் அபரிமிதமாய்ப் பெருகியுள்ளது. எல்லாரையும் எல்லாவற்றையும் அநுகிரஹிக்கவேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். நான் ஒருவிதப் பரவச நிலையை அடைந்து விடுகிறேன்.

நான் பிறந்த தினத்தை வாழ்த்துகிறேன். இங்கு-இந்த மண்ணுலகில்- நாம் எத்தனையோ அன்பையும் தயையும் பெற்றுவிட்டேன். பூரணப் பிரேமையாகிய எது என்னைப் படைத்ததோ, அது என்னுடைய நற்செயல்கள், கெட்ட செயல்கள் சகலத்தையும் காத்திருக்கிறது. நான் யார்?? எப்போதுமே அவன் கையிலுள்ள ஒரு கருவி என்பதைத் தவிர நான் யார்?? அவனுடைய பணிக்காகத் தானே நான் எனது சகலத்தையும்- என் அன்பு மனிதர்களை, என் இன்பத்தை, என் வாழ்வை -நீத்துவிட்டேன்!நான் பிறந்திருக்கிறேன்! அவன் என்னோடு விளையாடுகிற அன்பன். நான் அவனுடைய விளையாட்டுத் தோழன். இந்தச் சராசரத்தில் அர்த்தமோ அறிவோ எதுவும் கிடையாது. எந்த அறிவால் அவனைக் கட்ட முடியும்! லீலை செய்கிற அவன் ஒருவனே இத்தனை கண்ணீராகவும் சிரிப்புக்களாகவும் விளையாடுகிறான்.

இது ரொம்ப வேடிக்கையான உலகம். இதில் ரொம்ப ரொம்ப வேடிக்கையானவன் அவனே. ஆதி அந்தமற்ற அன்பனாகிய அவனை விட வேடிக்கையை நீங்கள் காண முடியாது. ஜன சமுதாயம் எல்லாம் இந்தப் பரந்த மைதானமாகிய உலகத்தில் சகோதரர்களாக, தோழர்களாக விளையாடுவதற்காக விடப்பட்ட கும்மாளிக்குழந்தைகளின் சங்கமே அல்லவா? இதில் யாரைப் புகழ்வது? யாரைப் பழிப்பது? எல்லாமே அவனது லீலை அல்லவா? விளக்கம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவனை எப்படி விளக்க இயலும்?? அவனுக்கு புத்தி கிடையாது; அறிவுமுறைகளும் கிடையாது. நமக்குச் சின்னஞ்சிறிய புத்தியையும் அறிவுமுறைகளையும் தந்து அவன் நம்மை முட்டாள் ஆக்குகிறான். ஆனால் இப்போது நான் முட்டாளாக மாட்டேன். இனி அவன் என்னைத் தூங்குமூஞ்சியாகக் காண மாட்டான். ஏதோ ஓரிரு விஷயங்கள் கற்றிருக்கிறேன். அறிவுக்கும் படிப்புக்கும் பேச்சுக்கும் அப்பால்-அப்பாலுக்கும் அப்பால்--அன்பு என்ற உணர்ச்சியும், "அன்பன்" என்ற உணர்ச்சியும் இருக்கின்றன. தோழா, வா! கிண்ணத்தை நிரப்பு; இந்த அன்பால் நாம் போதை கொள்வோம்.''

அன்புக்கிண்ணத்தை வழிய வழிய நிரப்பி உட்கொண்டு தெய்வ போதை பெற்ற விவேகாநந்தரே தம்மை ஓரிரு விஷயங்கள் மட்டுமே கற்றிருப்பதாய்ச் சொல்லும்போது நான் எல்லாம் எம்மாத்திரம்??


இன்றைய கடினமான வாழ்க்கையில் சாதாரணமாய் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் செலுத்தும் அன்பே மறைந்து கொண்டு வருகிறது. அந்த அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தால் அதிலிருந்து மனம் மெல்ல மெல்ல ஆசைகள் ஒழிந்து எண்ணங்கள் ஒழிந்து உணர்வுகள் மறைந்து அன்பு பெருக ஆரம்பிக்கும். அத்தகையதொரு அன்பு என்னிடம் மட்டுமில்லாமல் இந்தப் பரந்த உலகின் மாந்தர் அனைவரிடமும் துளிர்க்கப் பிரார்த்திக்கிறேன். அதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். முதலில் நம் குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த அன்பு நாளாவட்டத்தில் விரிவடைந்து மற்ற உயிர்களையும் தன்னை உயிராகத் தெரிவித்துக்கொண்டு கொண்டாடிக் குதூகலிக்க வைக்கும். பின்னர் இதுவே மேலும் விரிந்து குரு பக்தி/அன்பு, ஈசனிடம் பக்தி/அன்பு என்று போய் இன்னும் மேலே இன்னும் மேலே என்று போய்க் கடைசியில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து தன்னையும் மறந்துவிடும். அத்தகையதொரு அன்புப் பிரவாகம் அனைவரிடத்திலும் சுரக்கப் பிரார்த்தித்துக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.


இன்று ஸ்வாமி விவேகாநந்தரின் பிறந்தநாள். இளைஞர்கள் தினம். இந்தச் செய்தி ஸ்வாமி விவேகாநந்தர் இளைஞர்களுக்குச் சொன்னவை.


Tuesday, January 11, 2011

மார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27

கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

மனதுக்கு மிகவும் மகிழ்வைத் தரும் பாடல் இது. இந்தப் பாடலைப் பாடியபோது நோன்பு முடிகிறது. அதுவரையிலும், நெய்யுண்ணாமல், பாலுண்ணாமல், நாட்காலும் நீராடி, மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த பெண்கள் இப்போது நெய்யும், பாலும் சேர்த்து கூடவே இனிப்பான வெல்லமும் சேர்த்து அக்கார அடிசில் செய்து கண்ணனுக்கு மட்டுமல்லாமல் அவர்களும் உண்டு, நமக்கும் கொடுக்கிறார்கள். கண்ணனின் பிரசாதம் அல்லவோ?? ஆகவே அனைவருமாய்க் கூடி இருந்து குளிரவேண்டும் என்கிறாள் ஆண்டாள். எது கொடுத்தாலும், என்ன கிடைத்தாலும் மனது திருப்தி அடையாது. போதும் என்ற வார்த்தை வாயில் இருந்து வராது. ஆனால் போதும்னு நாமே சொல்லும்படி வைப்பது ஒருவருக்கு அன்னம் படைக்கும்போதுதான். வயிறு கொள்ளும் அளவுக்குத் தானே உண்ணமுடியும்?? அதிகம் உண்ண முடியாதே? ஆகவே உண்பவர்கள் வெகு விரைவில் போதும் திருப்தி என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் வயிறைப்போல் அப்போது மனமும் குளிர்ந்து இருக்குமல்லவா?? அதான் கூடி இருந்து குளிர்ந்து அநுபவிப்பது.

இந்தப் பொங்கலையும் பாவம் ஆண்டாளுக்கு அவள் காலத்திலே பண்ணி கண்ணனுக்குக் கொடுக்க அவளுக்கும் கொடுத்து வைக்கலை. கண்ணனுக்கும் கிடைக்கவில்லை. அதுவும் அழகர் மலை நம்பிக்கு. திருமாலிருஞ்சோலையின் பரமசாமிக்கு. அதுக்காக எத்தனை நூற்றாண்டுகள் காத்திருந்தார்கள் இருவரும். ஆண்டாள் தரப்போகிறாள் என்று வருஷா வருஷம் அழகர்மலைக்கள்ளர் எதிர்பார்க்க, ஆண்டாளோ ஒவ்வொரு வருஷமும் பாடலைத் தவிர வேறேதும் கொடுக்காமல் இருக்க, ஏமாந்து போய்க்கொண்டிருந்தார் திருமாலிருஞ்சோலை நம்பி. கடைசியில் இங்கேயும் ஆண்டாளுக்கு உதவிக்கு வந்தவர் ஸ்ரீராமாநுஜர் தான். முன்னொரு பாடலில் செந்தாமரைக்கையால் சீரார் வளை ஒலிப்ப அவர் கண்ட ஆண்டாளைத் தம் சகோதரியாக ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமாநுஜர் அவளின் நாச்சியார் திருமொழியின் இந்தப் பாடலைப் படித்துப் பார்த்து மனம் உருகினார்.

"ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் (9:6)
நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?

அழகான மணம் வீசும் மலர்கள் நிறைந்த பொழில்கள் நிரம்பிய மாலிருஞ்சோலை நம்பியான எம்பெருமானுக்கு நான் நூறு தடாவில் வெண்ணெயும், நூறு தடா நிறைய அக்கார அடிசிலும் வைப்பதாய்ச் சொன்னாளாம். நூறு தடா என்பது நூறு அண்டாக்கள். இப்போதும் ( இப்போவுமானு தெரியலையே?) மதுரையில் பெரிய கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு அண்டாவில் தான் சாதம் வடிப்பார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் சாதம் வடித்துக் காடாத்துணி அல்லது வெள்ளை கதர் வேட்டியைக் கஞ்சி வடிய வாயில் கட்டி வடிய வைப்பார்கள். அந்தப் பழக்கம் ஆண்டாள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. அம்மாதிரி நூறு அண்டாக்கள் நிறைய வெண்ணெயும், நூறு அண்டாக்கள் நிறைய அக்கார அடிசிலும் படைப்பதாய் வேண்டிக்கொண்டாளாம். பல ஆண்டுகள் நிறைவேறாமல் இருந்த இந்தப்பிரார்த்தனையைப் பற்றிப் படித்த ஸ்ரீராமாநுஜர் தாம் திருமாலிருஞ்சோலை சென்ற போது அங்கே உள்ள நம்பிக்கு ஆண்டாளின் பெயரில் நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்கார அடிசிலும் சமைக்கச் சொல்லிப் படைத்து வழிபட்டார்.

பின்னர் அவர் சென்றது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு. அங்கே ஆண்டாளின் தனிக்கோயிலுக்குப் போனபோது, "வாருமையா, என் அண்ணாரே!" என்ற இனிமையான குரல் கேட்க, ஸ்ரீராமாநுஜரும், கூட வந்த சீடர்களும் குரல் எங்கிருந்து வருகிறதெனப் பார்க்க. மூலஸ்தானத்தில் இருந்த ஆண்டாள் விக்ரஹம் அவர்கள் கண்ணெதிரே நடந்து வந்து நின்று, மீண்டும், " வாருமையா என் அண்ணாரே", என அழைக்க, பின்னர் புரிந்ததாம் ஸ்ரீராமாநுஜருக்குத் தாம் ஆண்டாளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அவளுக்காக நிறைவேற்றிக் கொடுத்ததால் ஆண்டாளுக்கே அண்ணனாகிவிட்ட கதை! அது முதல் திருமாலிருஞ்சோலை மட்டுமில்லாமல் தென்மாவட்டங்கள் அனைத்திலும், முக்கியமாய்ப் பாண்டியநாட்டுப் பெருமாள் கோயில்கள் அனைத்திலும் இந்தக் கூடாரைவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் படும். அன்று எல்லாக் கோயில்களிலும் நெய் சொட்டும் சர்க்கரைப் பொங்கல் தான் நிவேதனம். இன்னிக்கு எங்க வீட்டிலும்! :D ஆண்டாள் பிறந்த வீட்டுக்கு இதைத் தொடர்ந்து வருவதாகவும் ஐதீகம். இப்போது பாடலின் பொருளைப் பார்ப்போமா?

கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்= கண்ணனோ நம் வேண்டுகோளுக்கு இணங்கி வந்துவிட்டான். அவன் சாதாரணமானவன் அல்ல. கூடாரை அதாவது மனதினால் அவனைக் கூடாதவர்களையும் அவன் வென்று ஆட்கொள்ளுவான். அவர்களும் ஒருவிதத்தில் கண்ணனைத் தானே நினைக்கின்றனர். அவன் அடியார்களான நாம் பக்தியினால் நினைக்கிறோம் எனில் அவர்கள் கண்ணனிடம் கொண்ட வெறுப்பால், அவனை எவ்வாறு வெல்வது என நினைக்கின்றனர். ஆனாலும் அவர்களையும் வென்று ஆட்கொள்கிறான் கண்ணன். அதுவும் இவனோ பசுக்களையும் ரக்ஷிக்கும் கோவிந்தன். வாயில்லா ஜீவன்களை ரக்ஷிப்பவன் வாய் பேசும் நம்மிடம் உள்ள மூடத்தனத்தைக் கண்டு நம்மை வெறுப்பானா? மாட்டான்! பசுக்கள் அவனிடம் போய் எங்களை ரக்ஷிப்பாய் என்றா கேட்டன? இல்லையே? ஆகவே இவனுக்குத் தொழிலே இது தான் ரக்ஷகன் இவன்.

அத்தகைய கோவிந்தனைப் பாடி நாம் அடைவது வெறும் முக்தி தானா?? இந்த நாடே அல்லவோ நம்மைப் புகழும்? உண்மைதானே? எப்போவோ ஆண்டாள் எழுதி வைச்ச இந்தப் பாடல்களின் மூலம் ஆண்டாளின் புகழ் பரவித்தானே இருக்கிறது?? நாடு புகழும் பரிசு வேறு என்ன வேண்டும்? எதுவும் வேண்டாம். ஆனாலும் ஆண்டாள் ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கிறாளே?

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்=சூடகம் என்னும் கைவளை, தோள்களில் பூட்டிக்கொள்ளும் தோள்வளை, காதில் அணியும் தோடு, மேல் செவியில் போட்டுக்கொள்ளும் செவிப்பூ போன்றவையும் கால்களில் அணியும் பாடகம் என்னும் அணியும் அணிந்து கொள்வார்களாம். கண்ணன் வரலை, வரலைனு காத்திருந்தது போய்க் கண்ணனும் வந்துவிட்டான். நோன்பும் முடிந்துவிட்டது. நிவேதனமாய்ச் சர்க்கரைப் பொங்கலும் பொங்கியாகிவிட்டது. குளித்து ஆடை அணிய நல்ல பட்டாடை வேண்டுமே? ஆகவே கண்ணனிடம் ஒவ்வொன்றாய்க் கேட்கிறாள் ஆண்டாள்.

வெளிப்படையாக இவை அணிகலன்கள் என்று தோன்றினாலும் உள்பொருளாக கைவளையல் கைக்குப் போடும் காப்பாகவும், தோள்வளைகள் என்பது வைணவர்கள் தங்கள் கைகளில் குத்திக்கொள்ளும் சங்கு, சக்ர முத்திரைகளாகவும், காதில் தோடாக அணிவது எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய என்பதாயும் செவிப்பூவும் இரண்டு மந்திரங்களாயும் பாடகம் என்பது புகழ்ந்து கூறும் ஸ்லோகங்களாகவும் கூறுவர். ஆகவே இத்தனையும் கண்ணன் தங்களுக்குக் கொடுக்கவேண்டும் என ஆண்டாள் எதிர்பார்த்ததில் வியப்பில்லையே?

ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!= அணிகலன்கள் மட்டும் போதுமா?? ஆடை வேண்டாமா? ஆயிற்று, குளித்தாயிற்று, கண்ணனைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்கிறோம். ஆடைகள் அணிந்து அணிகலன்கள் அணியவேண்டியதுதான் பாக்கி. கண்ணனுக்குச் சாற்றிய துணிகளே இவர்களுக்குப் பிரசாதமாய்க் கிடைத்தாலும் சரி. இங்கே வெளிப்படையாய் ஆடை என்பது உள்பொருளில் கண்ணன் ஞானத்தை ஆடையாக அவர்கள் அறியாமைக்குக் கொடுக்கவேண்டும் என்றே கேட்கிறாள். இத்தனைக்கும் பின்னரே பால்சோற்றை மூட நெய்பெய்து, மூட நெய் பெய்து என்றால், அந்தப் பால் சோறு முழுதும் முழுகுமாறு நெய்யைக் கொட்டி, பின்னே? நூறு தடா வெண்ணெய் என்றால் சும்மாவா? அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்றால் கையால் அள்ளிச் சாப்பிடவேண்டும். என்னதான் ஸ்பூன் நாகரீகம் என்றாலும் கை நம்ம கை, பிறர் பயன்படுத்த முடியாத ஒன்று. நாம் மட்டுமே பயன்படுத்துவோம் நம்ம கைகளை. ஸ்பூனெல்லாம் அப்படி இல்லை. அந்தக் கைகளால் எடுத்துச் சாப்பிடும்போது முழங்கை வழியாய் நெய்யும், பாலும் வழிய வேண்டுமாம்.

சமைச்சதும் அவ்வளவு பெரியதாக. சாப்பிடுவதும் அவ்வளவு பெரியதாக. அதும் ஒருத்தர் ரெண்டு பேரெல்லாம் இல்லை. எல்லாருமாய்க் கூடி இருந்து குளிர்ந்து, சளசளனு உற்சாகப் பேச்சுப் பேசிக்கொண்டே சாப்பிடலாம் என்கிறாள். இங்கே உட்பொருளாகப் பாலும், நெய்யும், வெல்லமும், அரிசியும் கலந்த சோறு எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு கண்ணனின் கனியமுதில் நாமும் ஒன்றாய்க் கலந்து அவனருளாலே அவனோடு இணைந்து நித்ய சூரிகளாய்க் கூடி இருப்போம், இன்புற்று மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். இவ்வாறு கூடி இருப்பதை பட்டத்திரி என்ன சொல்றார்னு பார்ப்போமா?

பரமாத்மாவின் சொரூபமே சத்தியம் வேறொன்றும் இல்லை என்கிறார்.

ஸத்யம் ஸுத்தம் விபுத்தம் ஜயதி தவ வபுர்நித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்வந்த்வம் நிர்விகாரம் நிகில குணகண வ்யஞ்ஹநாதார பூதம்
நிர்மூலம் நிர்மலம் த்ந்நிரவதி மஹி மோல்லாஸி ந்ரிலீனம்ந்தள்
நிஸ்ஸங்காநாம் முநீநாம் நிருபம பரமாநந்த ஸாந்த்ர ப்ரகாஸம்

பரம சத்தியமான சொரூபம் உம்முடையது. சுத்தமான விழிப்புடன் கூடிய சொரூபம். மேலும் வெற்றியும் உமது சொரூபத்துக்கே. என்றாலும் எந்தவித பந்தங்களும் இல்லாதது. எந்தவிதமான ஆசைகளோ, வேட்கைகளோ அற்றது. எவரோடும், எதனோடு ஒப்பிட்டுக்கூற இயலாத ஒன்று. என்றும் மாறாத்தன்மை கொண்டது. அனைத்துக்கும் ஆதாரமானது, முக்கியமாய் அனைத்து குணகணங்களுக்கும், அவற்றின் அடையாளங்களுக்கும் ஆதாரம் அதுவே. காரணம் ஏதும் இல்லாதது. மாசு இல்லாத அளவற்ற மஹிமை கொண்டது. பற்றற்ற ரிஷிகளின் மனதிலும், முனிவர்களின் மனதிலும் நிச்சலனமாய் உள்ளது. எந்நேரமும் நிகரற்றப் பரமாநந்தத்தில் பிரகாசிக்கிறது. இத்தகைய பரமாத்மாவின் சொரூபத்தின் சிறப்புக்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை.

Monday, January 10, 2011

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!


இந்தப் பாடலில் கண்ணனிடம் நோன்புக்குத் தேவையான பொருட்களை ஆண்டாள் கேட்டுப் பெறுவதாய் ஐதீகம். உண்மையில் அவள் நோன்புக்கான பொருட்களை யாசிப்பது என்பது முக்திக்கான வழிகளைக் காட்டித் தரும்படி கேட்பதே ஆகும். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா?


மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்= ஆயிற்று, கண்ணனை எழுப்பியாயிற்று. நீ வந்து உன் சிங்காதனத்தில் அமர்ந்து கொண்டு எங்கள் வேண்டுகோளைக் கேட்டு அருள் என்றும் வேண்டிக்கொண்டாயிற்று. கண்ணனும் வந்துவிட்டான். அவன், "பெண்களே, என்னவேண்டும் உங்களுக்கு?" என்றும் கேட்டுவிட்டான் போலும். அவனைத் தங்களுக்கு மிக நெருக்கமானவன் என்று காட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அந்தப் பெண்களிடையே தோன்றிற்று. இது எல்லாருக்குமே இருக்கும் இல்லையா?? பல நண்பர்கள் கூடி இருக்கும் இடத்தில் ஓர் உயர்பதவியோ, அல்லது மேன்மையானவரோ நண்பர் எதிர்ப்பட்டால் அவர் நமக்கு மிகவும் தெரிந்தவர் எனக் காட்டிக்கொள்ள, அதுவும் அனைவருக்கும் முன்னால் அவருக்கும், நமக்கும் உள்ள நெருக்கத்தை எடுத்துக்காட்ட விரும்பமாட்டோமா?? அப்படியே இங்கே எல்லாப் பெண்களுக்கும் கண்ணன் தங்களுக்கெல்லாம் நெருங்கியவன் என்று காட்டிக்கொள்ளத் தோன்றிற்று. ஆகவே மாலே, மணிவண்ணா, என்றெல்லாம் கொஞ்சிக் கூப்பிடுகின்றனர். அதுவும் தங்களோடு ஆடி, ஓடிப் பாடிக் களித்தவன் என்ற பாவனை தோன்றும்படி கூப்பிட்டுக் கேட்கவே, கண்ணனும் என்ன வேண்டும் என்று மீண்டும் கேட்கிறான். நாங்கள் வேண்டுவதைக் கேள் கண்ணா!
இவை எல்லாம் எங்களுக்கு முன்னிருந்த எங்கள் முன்னோர்கள் செய்தவையே, அவர்களைப் பார்த்தே நாங்களும் அவ்வண்ணமே கேட்கிறோம்.

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே= அப்பா, கண்ணா, உன் பாஞ்சசன்னியம் என்ற சங்கை எடுத்து நீ முழக்கினாயானால் இந்த அகில உலகமுமே நடுங்குமே? அப்படிப்பட்ட பாஞ்சசன்னியம் எங்களுக்கும் வேண்டும். நாங்கள் உலகை எல்லாம் நடுங்க வைக்கப்போவதில்லை. நீ அடைந்த வெற்றியை, எங்களை ஆட்கொண்ட சந்தோஷத்தை அதை முழக்கித் தெரிவிப்போம். எங்கள் கண்ணா, அதனால் எங்களுக்குப் பாஞ்சசன்னியம் வேண்டும்.

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே= அதோடு மட்டுமா? மேலும் உன் புகழைப் பாடும்போது கூடவே முழக்கம் போடும் பறை, பேரிகைகள், வாத்தியங்கள், எக்காளங்கள், கொம்பு போன்றவையும் தேவை. இதன் மூலம் உன் நாம ஜபத்தை நாங்கள் செய்வோம். அது மட்டுமா? உனக்குப் பல்லாண்டிசைக்கும் சத்சங்கத்தைச் சேர்ந்த பெரியோர்களையும் எங்களுக்கு குருவாக ஆக்கிக்கொடுப்பாய். அவர்கள் மூலம் சத்குரு கிடைத்து உன்னருகே நாங்கள் நெருங்கிவர இயலும்.


கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!= இது மட்டுமா?? இந்த மார்கழி அதிகாலையில் எழுந்து நாங்கள் நதிக்கோ, திருக்குளத்துக்கோ போய் நீராடிவிட்டு உன் நாமாவளியைப் பாடிக்கொண்டு வருகிறோமே? எங்களுக்கு வெளிச்சம் காட்ட ஒரு அழகான விளக்கைக் கொடுப்பாய். இங்கே விளக்காய் ஆண்டாள் கேட்பது அறியாமை என்னும் இருட்டை விலக்கி ஞானதீபமாகிய விளக்கைத் தரும்படிக் கேட்கிறாள். மேலும் எங்களுடன் கூட வரும், வந்து கொண்டிருக்கும் மற்றத் தோழியரும் அறியும் வகையில் நாங்கள் வருவதையும் நோன்பு நூற்பதையும் அனைவரும் அறியும் வகையில் ஒரு கொடியைக் கொடுப்பாய், எங்களை எல்லாம் மூடிக் காத்து அருளும் விதானத்தையும் கொடுப்பாய் என்றும் கேட்கிறாள். இந்தக் கொடியைக் கேட்பது, மஹாவிஷ்ணுவின் கருடக் கொடியில் இருக்கும் கருடனின் பாதார விந்தங்களைப் பற்றுவதன் மூலம் பகவானையும் பற்றலாம் என்பதற்காக. அவனைப் பற்ற அவனடியார்கள் அவனுக்கு நெருங்கியவர் மூலம் முயல்வதே நல்லதல்லவா? விதானமும் கேட்பது தங்களைக் காக்கப் பரம்பொருள் விதானம் போல் வந்து ஆட்கொள்ள வேண்டும் என்பதற்கு. ஒரு விதானம் (canopy)என்னும் கூரையானது எவ்விதம் நம்மை எல்லாவற்றிலிருந்தும் மூடிக் காக்கிறதோ அவ்வாறே கண்ணனின் அருள் என்னும் விதானம் தங்கள் பாவங்களை அகற்றித் தங்களை அறியாமையிலிருந்து அகற்றி மேலும் பாவம் செய்யாமல் காத்து அருளவேண்டும். மேலும் தங்களால் தங்கள் முயற்சியாலேயே எல்லாமும் நடக்கிறது என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் அனைத்தும் அவன் கிருபையாலேயே, அவன் பாதுகாத்தலிலேயே நடந்தது, நடக்கும் என்பதையும் சுட்டுவதற்காக. இத்தனையும் சொல்லிவிட்டுக் கடைசியில் ஆலினிலையாய் என்று சொல்கிறாள்.

மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கிய நிலையில் ஈரேழு பதினாலு லோகங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு ஒரு சின்னஞ்சிறிய ஆலிலையில் கால் கட்டைவிரலைச் சப்பிக்கொண்டு சின்னஞ்சிறு குழந்தையாக ஏதும் தெரியாதவனாய் நீ காட்சி கொடுத்தாலும், நீ அன்றோ அனைத்தையும் உள்ளடக்கியவன்? அனைத்தையும் உண்டு பண்ணுபவன்? அனைத்தையும் காத்து, ரக்ஷிப்பவன்?? நீ இல்லை எனில் உன் அருள் இல்லை எனில் எங்களால் ஏதுஇயலும்?? ஆகையால் உன் அருளே எங்களுக்கு வேண்டும் கண்ணா, எல்லாச் செல்வத்திலும் பெரிய செல்வம் அதுவே என்கிறாள்.

இப்படிக் கண்ணனிடமே மனதை வைத்து அவனிடம் அருள் ஒன்றையே யாசிக்கும் ஆண்டாளைப் போல் பட்டத்திரியும், அவனிடம் மனதை வைப்பது ஒன்றே சுகம் என்கிறார்.

த்வய்யேவ ந்யஸ்தசித்த: ஸுகமயி விசரந் ஸர்வ சேஷ்டாஸ் த்வதர்த்தம்
த்வத்பக்தை: ஸேவ்யமாநாநபி சரிதசராநாஸ்ரயந் புண்ய தேஸாந்
தஸ்யெள விப்ரே ம்ருகாதிஷ்வபி ச ஸமமதிர் முச்யமாநாவமாந
ஸ்பர்த்தாஸூயாதி தோஷ: ஸததமகில பூதேஷு ஸம்பூஜயே த்வாம்

ஈசா, பரம்பொருளே, உம்மைத் தவிர வேறு எதிலும், எவரிடமும் மனதை வைக்காதவனாய் நான் இருக்கவேண்டும். அவ்விதமான வாழ்க்கையே சுகமான வாழ்க்கையாகும். எல்லாக் கர்மாக்களையும் செய்தாலும் அவற்றை உமக்கே நான் அர்ப்பணமாக்கவேண்டும். உமது பக்தர்கள் சேவித்த அனைத்து திவ்ய க்ஷேத்திரங்களையும் அவர்கள் செய்த அனைத்து புண்ணிய திவ்யசெயல்களையும் நானும் செய்யுமாறு அருளவேண்டும். நீசமான மனிதர்களாய் இருந்தாலும் சரி, உயர்ந்த எண்ணமுடையவர்களாய் இருந்தாலும் சரி, அல்லது மிருகங்களானாலும், பறவைகளானாலும் அனைவரிடமும் நான் சமபுத்தி கொண்டவனாய் இருத்தல் வேண்டும். மானம், அவமானம், பொறாமை, துவேஷம், அஸூயை போன்ற துர்க்குணங்கள் நீங்கி அனைத்து உயிர்களிலும் உம்மைத் தவிர வேறொருவரையும் காண முடியாதவனாய் உம்மையே கண்டு வழிபடுபவனாய் இருத்தல் வேண்டும்.