Saturday, May 26, 2012

ஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா!

இப்போதைக்கு அழகர் பத்தி மட்டும் சொல்கிறேன்.  சித்திரைத் திருவிழா முழுசையும் பத்தி எழுத நிறையவே இருக்கு. ஆனால் அழகர் திருவிழா ஒரு காலத்தில் தனியாகவே நடந்து வந்தது.  மதுரையில் மீனாக்ஷி கல்யாணம் மாசி, பங்குனி மாதங்களில் நடந்து வந்தது.  அந்தச் சமயம் அறுவடை மும்முரமாக இருக்கும் நேரம் ஆதலாலும், கோடையில் மக்கள் ஓய்வாக இருப்பார்கள் என்பதாலும் மாசி, பங்குனியில் நடந்த மீனாக்ஷி கல்யாணத் திருவிழாவைத் திருமலை நாயக்கர் மன்னராக இருந்த போது சித்திரை மாதத்தில் மாற்றினார்.

அழகர் திருவிழா தேனூரில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.  அங்கே தான் மண்டூக முனிவருக்கு மோக்ஷம் கொடுக்கும் நிகழ்வு சித்ரா பெளர்ணமிக்கு மறுநாள் நடைபெறும்.  இரண்டையும் ஒன்றாக இணைத்தது திருமலை நாயக்கர். அழகர் கோயில் திருமாலிருஞ்சோலையாகவே 19-ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்தது.   பெருமாள் கள்ளழகர் என்ற பெயருடனும் அழைக்கப்படவில்லை.  ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்தும் இவை அறிய முடிந்தாலும் இக்கோயிலின் கல்வெட்டுக்களில் இருந்தும் இது தெரிய வருவதாய் அறிகிறோம்.  இதற்குக் காரணம் என்னவெனில் அழகர்மலையைச் சுற்றியுள்ள ஊர்களில் கள்ளர்களே அதிகமாய் வாழ்ந்து வந்தனர்.  அவர்களின் வாழ்வாதாரம் வழிப்பறிக் கொள்ளை தான். அவ்வப்போது கிடைத்த நபர்களிடம் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தனர்.  சொத்துக்கள் நிறைய உள்ள கோயிலின் அழகர் ஒவ்வொரு வருடமும் மலையை விட்டுக் கீழே இறங்கும்போது கள்ளர்களால் வழிமறிக்கப் படும் அபாயம் இருந்தது.  ஆகவே கோயிலின் நிர்வாகிகள் கள்ளர்கள் தலைவனோடு சேர்ந்து ஆலோசித்துக் கள்ளர்களுக்குக் கோயிலில் முதல்மரியாதை கொடுக்க ஒப்புக் கொள்கின்றனர்.  அதோடு இறைவனுக்கும் கள்ளர்களின் தலைவன் என்ற கள்ள அழகர் கோலம் போட ஒப்புக் கொள்கின்றனர்.  இந்த ஒப்பந்தத்தின் படியே மலையில் இருந்து இறங்கி வரும் அழகர், (சுந்தரராஜப் பெருமாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு.) கள்ளர் வேடத்தில் வருகிறார்.

சங்கு, சக்கரத்தை விட முடியுமா? இல்லை கிரீடத்தைத் தான் விடமுடியுமா?  அவற்றோடு காட்சி தரும் கள்ளழகர், கள்ளர்களின் ஆயுதமான வளரித்தடி, கன்னம் இடும்  ஆயுதம், சாட்டைக் கம்பு, காதுகளில் கள்ளர்கள் அணியும் கடுக்கன், கறுப்பு ஆடை, தலையில் கள்ளக் கொண்டை போட்டுக் கொண்டு தல்லாகுளம் கள்ளர்களின் தலைவராக கள்ளராகவே மாறி வருகிறார்.  கோயில் வாசலில் இருந்து வெளியே வரும் அழகர் அங்குள்ள பதினெட்டாம்படிக் கருப்பு சந்நிதியில் தங்குவார்.  அங்கு வைத்துக் கருப்பண்ண சாமியிடம் அழகரின் நகைகளின் கணக்குக் கூறப்படும்.  இவை முடிந்த பிறகே மலையை விட்டுக் கீழே இறங்குவார்.  கூடவே கள்ள இனத்தவரும், மற்ற இனத்து இளைஞர்களும் அழகர் வேடமிட்டுக் கைகளில் தண்ணீர் பீய்ச்சும் துருத்தியை எடுத்துக் கொண்டு அனைவர் மேலும் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டே ஆடிப் பாடிக் கொண்டு வருவார்கள்.  தப்பும், தவிலும் முழங்க துருத்தியால் தண்ணீர் பீய்ச்சுபவர்கள் அழகரையும் விட மாட்டார்கள். அவர்களில் ஒருவரே.  அழகரைச் சுமக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒயிலாட்டம் ஆடிக்கொண்டு அழகரைச் சுமந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவர்கள் ஆடுகிற ஆட்டத்தில் தங்கக் குதிரை உண்மையாகவே ஓடி வருகிறாப் போல் இருக்கும். இவ்வாறு தல்லாகுளம் நோக்கி வருவார்கள்.  அடுத்து எதிர்சேவை

13 comments:

  1. ஓ... இந்த சித்திரைக்கு மாத்தற பிசினெஸ் எல்லாம் அப்பவே தொடங்கியாச்சா...கள்ளழகர் பெயர்க் காரணம் அருமை. நீங்க சொல்றதைப் பார்த்தா அப்போ தல்லாக்குளம்தான் மலையடிவாரமா இருந்ததா?

    ReplyDelete
  2. சித்திரைத்திருவிழா அழகர் ஆற்றில் இறங்குவது எல்லாம் கேள்விப்பட்டவிஷயங்கள் ஒரு முறைகூட நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலே. உங்க பதிவு அதை ஓரளவு நிறைவேத்திட்டது.

    ReplyDelete
  3. ஆற்றில் இறங்கும் அழகரைப் பற்றிய நல்ல பதிவு. முன்பு நடந்த விசயங்கள் பெரும்பாலானோருக்கு தெரியாது.

    ReplyDelete
  4. நேரில் பார்க்க ஆசை. நேரம் கூடி வரலை

    ReplyDelete
  5. //தப்பும், தவிலும் முழங்க துருத்தியால் தண்ணீர் பீய்ச்சுபவர்கள் அழகரையும் விட மாட்டார்கள். அவர்களில் ஒருவரே.//

    உண்மைதானே?.. அத்வைதமும் அதானே! :)))

    இங்கிருந்து கொண்டு அங்கத்ய நோக்கா என்று அஞ்ஞானத்தில் நினைத்தேன்! எங்கிருந்தால் என்ன?
    ஸ்ரீரங்கநாதரும் அழகரும் ஒருவரேயல்லவோ?

    அதுமட்டுமா?.. ஹரிஹரனும் ஒருவரே அல்லவோ?..

    அன்பே சிவம்! அன்பே ரங்கன்!

    சிவசிவ! ரங்கா! ரங்கா!...

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், பல தமிழ்நாட்டுப் பழக்கங்கள் விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சி, மராட்டி மன்னர்கள் ஆட்சி, நாயக்கர் ஆட்சிகளில் மாறி இருக்கு. :)))) அதிலே இதுவும் ஒண்ணு.

    தல்லாகுளம் தான் மலையடிவாரமா இருந்திருக்கணும். இந்த அழகர் மலை பத்தி சங்கப் பாடல்களிலேயே குறிப்பும் இருக்கு. திருமாலிருஞ்சோலைனு. ஆண்டாளும் இவருக்குத் தானே நூறு தடா அக்கார வடிசில் நூறு தடா வெண்ணெய் போட்டுச் செய்யறதாச் சொன்னா.
    அவளாலே செய்ய முடியாமல் போனதை ஸ்ரீராமாநுஜர் அழகர் மலைக்கு விசிட் பண்ணினப்போ செய்திருக்கிறார். அதுக்கப்புறமா ஸ்ரீ ராமாநுஜர் ஸ்ரீவில்லி புத்தூர் போனப்போ ஆண்டாளின் அர்ச்சா விக்ரஹம் எழுந்து வந்து, ஸ்ரீராமாநுஜரை, "என் அண்ணாரே!" என அழைத்து மறைந்ததாகவும் சொல்வாங்க. அதனாலேயே ஆண்டாள் குறித்த பாடலில்

    பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே என்று வரும்.

    ஹிஹி, பதிவாயிடுச்சோ? :P

    ReplyDelete
  7. இந்த அக்காரவடிசில் இப்போவும் மார்கழிக் கூடாரவல்லித் திருநாள் மதுரை மாநகரிலும், அழகர் கோயிலிலும் சிறப்பாகக் கொண்டாடப் படும். நானும் வருடா வருடம் அக்கார வடிசில் மூட நெய் பெய்து முழங்கை வழிவாரச் செய்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேத்திடுவேன். :))))

    ReplyDelete
  8. வாங்க லக்ஷ்மி, கடைசியா நான் 72-ல் எதிர்சேவையும் அழகர் ஆத்திலே இறங்கறதும் பார்த்தேன். அந்த எதிர்சேவையின் போது தான் அழகர் மேல் தண்ணீர் அடிச்சது ஒரே கலவரமாப் போய் எங்க அப்பாவின் பள்ளியில் கூட வேலை செய்த நண்பர் பரமசாமிக் கோனார் மண்டபப் படியில் இருந்து அழகரை எடுக்கும்போது கீழே சரிய, பக்கத்தில் நின்றிருந்த நான் திறந்த வாய் மூடாமல் பார்க்க, சுற்றி இருந்தவங்க எல்லாம் என்னை(அம்மா, தம்பி) இழுத்துட்டுப் போனதை இன்னமும் மறக்க முடியவில்லை.

    ReplyDelete
  9. வாங்க விச்சு, பல விஷயங்களும் தெரியாததானாலேயே பதிவாக்க வேண்டி இருக்கு. வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. எல்கே, முயற்சி செய்ங்க. கூட்டம் தாங்காது. அழகர் ஆத்தில் இறங்குகையில் தள்ளு,முள்ளு பார்த்ததில்லை. இப்போல்லாம் எப்படியோ!

    ReplyDelete
  11. வாங்க ஜீவி சார், மின் தமிழ்க் குழுமத்தில் பல நாட்களாய்ச் சொல்லிட்டு இருந்தாங்க. மதுரைச் சித்திரைத் திருவிழா பத்தி எழுதச் சொல்லி. இப்போத் தான் நேரம் வாய்த்தது. :))))

    மற்றபடி இங்கே ரங்கனாரும் வசந்தோற்சவம் கொண்டாடிட்டு இருக்கார். ஒருநாள் போய்ப் பார்க்கணும். இல்லாட்டி அவரே வருவாரா தெரியலை. விசாரிக்கணும். :))))))))

    ReplyDelete
  12. முன்னேயே படிச்சாப்போல இருக்கே!மீள் பதிவா?
    :P:P:P

    ReplyDelete
  13. வா,தி. நீங்க வரதே ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள். :P:P:P இதிலே இந்தப் பதிவைப் படிச்சேன்னு சொல்றீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    புத்தம்புதுசு! ப்ராண்ட் நியூ! :)))))

    ReplyDelete