Thursday, August 30, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 6


சமயபுரம் மாரியம்மன் தமிழ்நாட்டு மாரியம்மன் கோவில்களுக்கெல்லாம் தலைமைப் பீடமாகக் கருதப் படுகிறது.  அதோடு இந்தக் கோயிலும் ஒரு சக்தி பீடம் எனவும் கூறுகின்றனர்.  தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும்கோயில்களில் இதுவும் ஒன்று. ஆய்வாளர்கள் சோழர் காலத்திலேயே இங்கே அவர்களின் குலதெய்வமான மாரியம்மனோ அல்லது கொற்றவைக் கோயிலோ இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.  பின்னர் விஜயநகர மன்னர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் மேலும் சிறப்புப் பெற்றிருக்கலாம்.  கோயிலின் கொடிமரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களில் நாயக்கர் காலத்துச் சிலைகளே காணப்படுகின்றன.  ஆகையால் நாயக்கர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர்.  இந்தக் கோயிலின் அம்மன் திருவரங்கத்திலிருந்து வந்ததால் கோயில் பன்னெடுங்காலமாக ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தின் கீழேயே இருந்திருக்கிறது.  1984--ஆ ஆண்டில் தான் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு எனத் தனி நிர்வாகம் ஏற்படுத்தப் பட்டது.  திருமுருக கிருபாநந்த வாரியார் அவர்களால் பக்தர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டுக் கும்பாபிஷேஹம் நடத்தப் பட்டது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் இருக்கின்றன. முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்று உள்ளது.  இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்களைக் காணலாம்.  அம்மன் மிகவும் உக்கிரத்துடனும் கோரைப்பற்களுடனும் இருந்ததாகவும் அம்மனின் உக்கிரத்தைத் தணிக்க என்ன செய்வது என காஞ்சி பரமாசாரியாரைக் கலந்து ஆலோசித்த கோயில் நிர்வாகத்தினர் அவரின் ஆலோசனையின் படி நுழைவாயிலின் வலப்புறம் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களைப் பிரதிஷ்டை செய்ததோடு அம்மனின் மூல விக்ரஹத்தின் கோரைப் பற்களையும் அகற்றி இருக்கின்றனர்.  பின்னர் 1970--இல் இதற்காகக் கும்பாபிஷேஹமும் செய்திருக்கின்றனர்.  அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கும்.  அம்பாள் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு. பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் மூலம் அம்பாளின் கருவறையும், கருவறை விமானமும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 72 கிலோ தங்கத்தோடு மூன்றரை கிலோ செம்பு சேர்த்து அப்போதைய மதிப்பில் ஏழு கோடி ரூபாய்க்குத் தங்கத் தகடு வேயப்பட்டுள்ளது.

அம்மன் சுகாசனக் கோலத்தில் வீற்றிருக்கிறாள்.  எட்டுத் திருக்கரங்களுடன் காணப்படும் அம்பாளின் தலைக்கு மேலே ஐந்து தலை நகம் படம் விரித்துக்கொண்டு காணப்படுகிறது.  இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்க விட்டுள்ளாள்.  தொங்க விடப்பட்ட வலக்காலின் கீழே அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன.  கைகளில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஏந்திக் கொண்டு நெற்றியில் திருநீறும், குங்குமமும் அணிந்து, மூக்குத்தியும் தோடுகளும் ஜொலிக்க, 27 நக்ஷத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள்ளே அடக்கிய அம்பாள், 27 யந்திரங்களானத் திருமேனிப் பிரதிஷ்டையில் அருளாட்சி செய்கிறாள்.  இவளை ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகாதேவி தான் என்பார் உண்டு.  மன்மதனை எரித்த சிவன் அப்போது வெளியிட்ட வெப்ப அனல் தாங்காமல் தவித்த தேவலோகத்து மக்களையும், பூவுலக மக்களையும் உமை அன்னை அந்த வெப்பத்தைத் தான் உள்வாங்கிக் கொண்டு காப்பாற்றியதாகவும், அன்னையின் அந்த சக்தி சொரூபம் சீதளா எனவும், மாரியம்மன் எனவும் அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.  வசுதேவர் தேவகியின் எட்டாம் குழந்தையான கண்ணன்  கோகுலம் செல்ல, கோகுலத்தில் நந்தனுக்குப் பிறந்த பெண் குழந்தை சிறைச்சாலைக்கு வருகிறது.  அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்ற கம்சனிடம் இருந்து தப்பிய யோக மாயாவே இந்த மாரியம்மன் என்பாரும் உண்டு.  ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுர நாயகி, சாம்பிராணி வாசகி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, கெளமாரி, காரண செளந்தரி, சீதளா தேவி, கண்ணபுரத்தாள், மகமாயி எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள்.

மூலவர் விக்ரஹம் மூலிகைகளாலேயே ஆனதால் அபிஷேஹம் செய்வதில்லை.  உறசவ விக்ரஹத்துக்கு மட்டுமே அபிஷேஹங்கள் நடைபெறும்.  கருவறையின் பின் புறம் அம்மனின் பாதங்கள் உள்ள இடத்தில் மலர் சூட்டி, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.  அம்பாள் தினம் இரவு உலா வருவதாகவும் கோயிலிலேயே தங்கி முன் மண்டபத்தில் உறங்குபவர் பலருக்கும் இரவில் அம்மனின் கொலுசுச் சப்தம் கேட்பதாகவும் சொல்கின்றனர்.  தல விருக்ஷம் வேம்பு. அயோத்தி மன்னன் தசரதன் இங்கு வந்து வழிபட்டதாகச் சொல்கின்றனர்.  மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு பாலாலயம் செய்யப்பட்டு மீண்டும் அம்மன் பீடத்தில் அமர்த்தப் படுகிறாள்.  மற்ற மாரியம்மன் கோயில் போல் இல்லாமல் இங்கே சிவாசாரியார்களாலேயே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.  இங்கே அம்மனின் ஸ்தல விருக்ஷமான வேப்பமரத்தின் கீழுள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாயும், தினம் இரவில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நாகம் கருவறைக்குச் சென்று கொண்டிருந்ததாயும், மக்கள் நடமாட்டம் அதிகம் ஆகவே நாகம் இப்போது வெளிவருவது இல்லை என்றும் சொல்கின்றனர்.  நாகம் இருக்கும் இடத்தைக் கம்பிக் கதவு போட்டு மூடியுள்ளனர்.

இங்கு பக்தர்களுக்காக அம்பாளே விரதம் இருக்கிறாள்.  அம்பாளின் விரதகாலம் மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை.  அப்போது தினம் சாயங்காலம் ஒருவேளை மட்டும் இளநீர்,மோர், பானகம், துள்ளுமாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதனம் செய்யப்படுகிறது.  ஊர்மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பார்கள்.  விரத முடிவில் பூச்சொரிதல் விழா நடக்கும்.  பக்தர்களின் உடல் வெப்பத்தைத் தான் வாங்கிக் கொண்டு அவர்களைக் காத்து ரக்ஷிக்கும் அம்பாளுக்கு பக்தர்கள் பூமாரி பொழிந்து அவளைக் குளிர்விக்கின்றனர்.  தேர்த்திருவிழாவும் நடைபெறும்.  அப்போது திருவானைக்கா ஜம்புகேஸ்வரரும் அம்மனுக்குச் சீர் வரிசை அனுப்பி வைப்பார்.  அண்ணனிடமும், ஈசனிடமும் சீர் வரிசை பெறும் அம்மன் இவள் ஒருத்திதான் என்கின்றனர்.  இங்குள்ள விபரம் அறிந்த மக்கள் இனாம் சமயபுரம் சென்று ஆதி மாரியம்மனைத் தரிசித்த பின்னரே கண்ணனூர் வந்து சமயபுரம் மாரியம்மனைத் தரிசிக்கின்றனர்.  இது தான் முறை என்கின்றனர்.  சூரப்ப நாயக்கர் என்பார் அன்னையின் ஆசியைப் பெறாமல் அன்னைக்கு எனப் புதிய உற்சவ விக்ரஹம் செய்து திருவிழாவில் வீதி வலம் வர ஏற்பாடுகள் செய்ய அதற்குப் பல தடைகள் ஏற்பட்டதாகவும், சூரப்ப நாயக்கர் பின்னர் அன்னையிடம் மன்னிப்புக் கேட்டதாயும், அதன் பின்னர் அன்னை மனம் இரங்கியதாகவும் கூறுகின்றனர்.  இப்போதும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின் போது சூரப்ப நாயக்கர் செய்த உற்சவ விக்ரஹம் தான் உலா வருவதாகச் சொல்கின்றனர்.


மாரி திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்
பாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான் பெறுவர்
நாடித் துதிப்போரும் நற்கதியைத் தான் அடைவார்
ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஓடி
மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்
மங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு
எங்கும் நிறைந்த ஈச்வரிக்கு மங்களம்.

மாரியம்மன் தாலாட்டு.

13 comments:

  1. ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் கதை படிக்க அலுப்பு இல்லை எப்பொழுதும்

    ReplyDelete
  2. கதை கேட்டாச்சு..... சுண்டல் எங்கே?

    ReplyDelete
  3. வாங்க எல்கே, சிலருக்குத் தெரிஞ்சிருந்தாலும் பலருக்குத் தெரியறதில்லை; ராமாயணம், மஹாபாரதம் திரும்பத் திரும்பப் படிக்கிறதில்லையா? அது மாதிரி இதுவும். நீங்க எழுதற கதைனா அது தனி! :))))))) எனக்கு அப்படியெல்லாம் எழுத வராது. :)))))

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், நோ சுண்டல். சுண்டல் பண்ணலாம்னு தான் நினைச்சேன். ஆனால் பண்ணலை. வயிறு கெட்டுப்போயிடுமோனு பயம். நாளைக்கு முழுதும் வெளியே போகணும். :))))

    ReplyDelete
  5. பக்தர்களுக்காக அம்பாள் விரதம் இருப்பது - புதுசு.

    ReplyDelete
  6. எனக்கு இந்த மாதிரி எழுத வரதில்லையே :)

    ReplyDelete
  7. ம்ம், சோழர் வரலாற்று கல்வெட்டுகள் ஏதாவது இங்க இருக்கா..?

    இராஜராஜனின் தமக்கை குந்தவை நாச்சியார் மதம் மாறி துலுக்க நாச்சியாரா மாறி(த்தி) திருவரங்கத்துல போய் செட்டிலாயிட்டதாவும் அதை இவரே நேரில் பாத்த மாதிரி எந்த தரவும் இல்லாம சமீபத்துல ஒருத்தர் சரடு விட்ருந்தார். சமயபுரம் மாரியம்மனும் அந்த சரடுல வந்து போயிருந்தாங்க. அதான் கேட்டேன். :))

    ReplyDelete
  8. விரிவான பகிர்வு... நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    தொடரட்டும் பயணம்...

    ReplyDelete
  9. அப்பாதுரை, அம்பாள் இருப்பதே பக்தர்களை ரக்ஷிக்கத் தானே! விரதம் இருப்பது புதுமை இல்லை. :))))))

    ReplyDelete
  10. சரிதான் எல்கே, உங்களுக்கு இம்மாதிரியான விஷயங்கள் எழுத வராது. எழுதினதையே/படிச்சதையே திரும்ப எழுத போர் அடிக்கும். :))))))

    ReplyDelete
  11. அம்பி ஈ ஈ இ ஈ நிஜம்மா நீங்க தானா? நீங்க சொல்ற குந்தவை நாச்சியார் கதையை நானும் பல முறை (ஹிஹிஹி) படிச்சிருக்கேன். கிள்ளியும் பார்த்துக் கொண்டேன். சமயபுரம் மாரியம்மனின் பிறந்தகம் எனப்படும் இனாம் சமயபுரம் மட்டும் சோழனால் தன் தங்கைக்கெனக் கட்டிக் கொடுக்கப்பட்ட அரண்மனை இருந்த இடம். அரண்மனை மேடு என அழைக்கப் பட்டிருக்கிறது. மற்றபடி விஜயநகர அரசர்கள் காலத்தில் இருந்து தான் இதன் வரலாறு கொஞ்சமானும் தெரிய வருகிறது. ஆனால் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்தாள் அம்பிகை என்பதற்குக் கோயிலொழுகில் குறிப்பு இருப்பதாய்க் கேள்வி. :))))

    ReplyDelete
  12. வாங்க வெங்கட், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. சமயபுரம் மாரிஅம்மானைப் பார்த்துத் தரிசனம் செய்துதான் எவ்வளவு நாளாச்சு. 9 வருடங்கள் ஆச்சு.அத்தனை சரித்திரமும் அழகு. அவள் பேசும்தெய்வம்.

    ReplyDelete