Sunday, September 30, 2012

கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு

பெண்கள் உந்நதமான நிலையில் இருக்க வேண்டியவர்கள்.  அவர்கள் காலம் காலமாக ஒடுக்கப் பட்டே வந்திருக்கிறார்கள் என்பது பொதுவான கருத்து. இங்கே அதைப் பற்றிப் பேசப்போவதில்லை. இப்போது நாம் பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்கையில் கூடப் பெண் திருமணம் ஆகிக் கணவன் வீடு வருவதையும், அவளுக்குக் கணவனின் கோத்திரமே தான் கோத்திரமாக மாறுகிறது என்பதையும் அறிவோம். ஆகவே பெண் என்ன மட்டமானவளா, ஆண் என்ன உசத்தி என்றெல்லாம் கேட்பதோடு ஆண் குழந்தை பிறந்தால் தான் வம்ச வ்ருத்தி எனச் சொல்வதையும் தவறாகவே புரிந்து கொள்கிறோம். பெண்ணில்லாமல் கருவைச் சுமக்க யாரும் இல்லை.  ஆகவே பெண் வேண்டாம் என யாருமே சொல்வதில்லை. என்றாலும் ஏன் இந்தப் பாகுபாடு? விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.

விஞ்ஞான முறையில் யோசித்தால் இதற்கான காரணம் நமக்குப் ப்ள்ளிகளிலேயே போதிக்கப் படுகிறது.  ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.  ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.  இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.  இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.  தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.  தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.  ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+xசேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது. 

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.  ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். மனித இனம் குறித்த அறிவை விஞ்ஞானிகள் பல ஜெனடிக் நுட்பங்கள் மூலம் கண்டறிந்து கூறி வருகின்றனர்.  ஆனால் நம் ரிஷிகளும், முனிவர்களும் இதைத் தங்கள் மெய்ஞ்ஞானத்தால் அறிந்திருந்த காரணத்தாலேயே இப்படி வரையறுத்திருக்கிறார்கள்.  ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன.  ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது.  இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.  இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை.  தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.  பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.  பெண் எப்போதும் பெண்; 100% பெண் ஆனால் ஆணோ 50% பெண் எனலாம்.  இதிலே வேடிக்கை என்னவெனில் ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.  ஆனால் அதிலே உருவாகும் ஆண் பெண்ணை அடக்கி ஆள்கிறான் என்பதும் விந்தையிலும் விந்தை. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். ஆகவே தான் ஏற்கெனவே பலவீனமான    y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரக் கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப் படுகிறது.


பெண்கள் மட்டுமே  பிறக்கும் குடும்பத்தில் அந்தத் தந்தையுடன் அவர் கோத்திரம் முடிவடையும் காரணமும் இதனால் தான்.  இதனால் தான் கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்று சொல்லி இருக்கிறார்கள்.  மேலும் இந்த க்ரோமோசோம்கள் முற்றிலும் அழிந்துவிட்டால் ஆணினமே இல்லாமலும் போய் விடும் அல்லவா? பெண்ணே பெண் குழந்தையைப் படைத்துக்கொள்ளும் சாத்தியங்கள் உருவாகலாம்.  ஆனால் ஆண்??

உட்கார்ந்து யோசிச்சோம். நல்லதே நடக்கும்.  என் தம்பி எனக்கு தினம் தினம் திருமந்திரம் என்னும் நூலைப் பரிசளித்தார். தற்சமயம் அதைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதோடு அப்பாதுரை திருவாசகம் குறித்துக் கூறிய கருத்துக்களையும் யோசித்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது இணையத்தில் திருவாசகத்தையும் கொஞ்சம் கொஞ்சம் வாசித்து வருகிறேன்.  புத்தகம் எடுத்துவரலை. அப்பாதுரைக்கு அளிக்க வேண்டிய பதில்களும் கிடைத்தன என்றாலும் இப்போது அதற்கு சூழ்நிலை சரியில்லை.  மனம் ஒருமைப் படவில்லை. அதனால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டேன். அப்போது தான் இவை எல்லாம் நம் முன்னோர்கள் யோசித்து வைத்திருப்பதைக் குறித்து ஆச்சரியம் வந்தது.  பகிர்ந்தேன். இதை நேத்தே போட்டிருந்தேன்.  என்னமோ சுரதாவிலே இருந்து காப்பி, பேஸ்ட் பண்ணறச்சே தகராறு ஆயிருக்கு போல!


Friday, September 28, 2012

About my Bil

Hi All,

My BIL Ganesh is slowly improving. The doctors team attended yesterday
for his neuro problem and the treatment for that is going on. They put
him under ventilation for the last three days to support the
neurological treatment. Now his pulse and bp is in normal condition.
Yesterday he tried to get up from the bed after hearing our voice
calling him by name.  He is under anaesthesia and will come to
conscious after the ventilation is removed. They will observe his
condition without ventilation and may be shifted to room, only after
his  condition is stable.    We are praying the Almighty for his
speedy recovery.  We may be in Delhi for another ten days.

I am seeing the group mails occasionally. Read Engal Blog and gave comments. Will try to write with the help of Suratha if the situation and time permits me. Requesting you all for his speedy recovery.  I am sorry for the english.

Thank You,

Geetha & Sambasivam

Wednesday, September 19, 2012

பிள்ளையாரே காப்பாத்துப்பா!

இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை;  ஏனெனில் பதினைந்து நாட்களாகக் கடுமையான மின்வெட்டு.  முதலமைச்சர் வந்துட்டுப் போன அன்னிக்கும் கூட மின்வெட்டு தாராளமாகவே இருந்தது.  ஆகவே கவலைதான்.  பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்களுக்கு எப்போவும் ஒரு வாரம் முன்னாடியே இருந்து அறிவிப்புச் செய்வேன்.  இம்முறை முடியவில்லை. எல்லாத்துக்கும் மேலே டெல்லியிலே என்னோட கடைசி மைத்துனர் உடல்நலம் ரொம்ப மோசமாகப் போய் மைல்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறதாகத் திங்களன்று செய்தி வந்தது.  உடனே கிளம்பவேண்டி ரெயில், விமானம் எல்லாம் அலசினோம்.  எதிலேயும் இன்னும் ஒரு வாரத்துக்கு இல்லை.  விமானம் ரொம்ப காஸ்ட்லி என்பதோடு இரண்டு இடங்களில் மாறணும். :( பணத்தைப் பார்க்காமல் கிளம்பலாம் என்றால் இது வேறு தொல்லை.  பிள்ளையார் சதுர்த்தியை எப்படிக் கொண்டாடப்போகிறோம்னு புரியாமல் குழப்பம்.  நேற்று எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யமுடியலை.  இன்னிக்கோ காலம்பர மூன்றரை மணிக்குப் போன மின்சாரம், நாலரைக்கு வந்து திரும்ப ஐந்தரைக்குப் போய், மறுபடி ஆறரைக்குப் போய், ஒன்பதரைக்கு வந்து பத்தரைக்குப் போய் ஒருவழியா இப்போத் தான் மின்சாரம் வந்து பத்து நிமிடங்கள் ஆகிறது.  இன்வெர்டர் சார்ஜ் ஆகவோ, யுபிஎஸ் சார்ஜ் ஆகவோ, லாப்டாப் பாட்டரி சார்ஜ் ஆகவோ மின்சாரம் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு.

ஒரு மாதிரியா இன்னிக்குக் காலம்பரக் கிடைத்த தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு கொஞ்சமாய்க் கொழுக்கட்டையும், வடை, அப்பமும் செய்து பிள்ளையாரைக் கொண்டாடியாச்சு.  பிள்ளையாரோடு ஏகத்துக்குச் சண்டை போடணும்னு நினைச்சேன்.  ஆனால் இந்தமட்டில் நல்லபடியாகக் கொண்டாடும்படி வைச்சதும் அவரால் தானேனு தோணித்து.  அதனால் சண்டையை கான்சல் பண்ணிட்டேன்.  என்னிக்கு எதிலே டிக்கெட் கிடைக்கிறதோ அன்னிக்குக் கிளம்பறோம்.  இப்போக் கொஞ்சம் தேவலைனு கொஞ்சம் நேரம் முன்னாடி தொலைபேசிச் செய்தி வந்தது.  என்றாலும் நாங்க இப்போ இருக்கவேண்டிய இடம் அங்கே தான்.


Sunday, September 16, 2012

பாரு, பாரு, பயாஸ்கோப்பு பாரு! :)))


எங்கள் ப்ளாக் ஞாயிறு அன்று படம் காட்டுவாங்க.  இந்த வாரம் வந்ததா வரலையானு அப்டேட் ஆகலை. சரி நாம போடலாமேனு ஒரு எண்ணம் தோணி போட்டேன்.  ஏற்கெனவே பார்த்தவங்க கண்ணை மூடிக்குங்கப்பா.  முன்னோர் படம் தமிழ்நாட்டில், அழகர் கோயிலில் வண்டியிலே போறச்சே எடுத்தது.  கீழே உள்ளது அமெரிக்காவில் ஹூஸ்டனில் 2007-ஆம் வருஷம் கால்வெஸ்டனில் எடுத்தது.. 



Saturday, September 15, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 8


திருப்பட்டூரில் கைலாசநாதர் கோயிலும் ஒன்றிருப்பதாய் இன்றே அறிந்தேன்.  இங்கே ஆறு அடி உயரம், ஆறு அடி சுற்றளவில் நான்கு தலைகளுடன் பத்மாசனக் கோலத்தில் காட்சி அளிக்கும் பிரம்மாவிற்கு எனத் தனிக்கதை உண்டு என்பதைப் போன பதிவில் பார்த்தோம். அது:

ஆரம்பத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்ததைக் கேள்விப் பட்டிருப்போம்.  ஈசனைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் கர்வம் கொண்ட பிரம்மா தனக்குப் படைக்கும் சக்தி இருப்பதால் தானே அனைவரிலும் பெரியவன் என்ற எண்ணமும் கொண்டார். தேவி தனக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார்.  பிரம்மாவின் எண்ணங்களைப்புரிந்து கொண்ட ஈசன் அவர் அகந்தையை அடக்க எண்ணினார்.  அவரின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். மேலும் படைக்கும் ஆற்றலையும் பறித்துவிட்டார்.  படைப்பாற்றலை இழந்த பிரம்மாவுக்குத் தன் தவறு புரிந்தது. ஈசனைப் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.  எந்தத் தலங்களில் எல்லாம் பிரம்மாவால் ஈசன் வழிபடப்பட்டாரோ அந்தத் தலங்களின் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயருடன் காணப்படுவார்.

இவ்வூருக்கு வந்த பிரம்மா இங்கே துவாதச லிங்கங்கள் அமைத்து வழிபட்டு வந்தார்.  அவரின் வழிபாட்டால் மகிழ்ச்சியடைந்த ஈசன் அவருக்குப் படைப்பாற்றலை மீண்டும் வழங்கினார்.   மேலும் பிரம்மாவை இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவோருக்கு விதியிருப்பின் நன்மையைக் கூட்டி அருளும் சக்தியையும் கொடுத்தார். ஆகவே திருப்பட்டூரில் பிரம்மாவைத் தரிசிக்கும் விதி யாருக்கு உள்ளதோ அவர்களுடைய விதியை மாற்றவும், அதன் மூலம் அவர்களின் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் பெருகவும் அருள் புரிந்து வருவதாக ஐதீகம்.  இவரை வழிபடுவோர் வாழ்வில் சிறந்த நற்பலன்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.  ஈசனை பிரம்மபுரீஸ்வரர் என அழைப்பது போல் அம்பிகையும் பிரம்ம சம்பத் கெளரி என அழைக்கப்படுகிறாள்.  பக்தர்களால் அரைத்து வழங்கப்படும் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பிரம்மா காணப்படுகிறார்.

பிரம்மாவின் சந்நிதிக்கு அருகே பதஞ்சலி சித்தரின் ஜீவசமாதி உள்ளது.  ஜீவ சமாதியில் அமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.  பதஞ்சலி ஐந்து இடங்களில் ஜீவசமாதி அடைந்த்தாய்க் கூறப்படுகிறது.  இதில் அது முக்கியமான ஒன்று.  சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே காணப்படும் பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி இங்கேயும் காணப்படுகிறது.  வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் அருகே இது உள்ளது.  அம்மன் சந்நிதிக்கு அருகே தாயுமானவர், பிரம்மதீர்த்தம், பகுள தீர்த்தம் ஆகியன உள்ளன.  ஆலயத்தின் தல விருக்ஷம் மகிழ மரம்.  இங்குள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களில் தட்டினால் இசை எழும்பும் நாத லயத்தோடு கட்டப்பட்டுள்ளதாக அறிந்தோம். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  குரு பார்க்கக் கோடி நன்மை என்னும் வழக்கிற்கு ஏற்ப குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்கள் தங்களுக்குக் கோடானு கோடி நன்மை கிடைக்கும் என நம்புகின்றனர்.


இந்தக் கோயிலிலிருந்து சற்று தூரத்தில் உள்ளது காசி விசுவநாதர் கோயில்.


இங்கே வியாக்ரபாதரின் ஜீவ சமாதி உள்ளது.  கோயில் குறித்த விபரங்களைத் திரட்ட முடியவில்லை.  கோயிலுக்குப் போனபோதும் அங்கு விசாரிக்க யாரும் இல்லை.  கூகிளாரும் கைவிட்டுவிட்டார்.  மீண்டும் நேரில் செல்கையில் விசாரிக்கணும்.  ஊருக்குள் நுழையும்போதே ஐயனார் கோயிலைப் பார்க்கலாம்.


இவர் சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கைலாய உலாவை அரங்கேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.  இவரை மாசாத்தனார் எனவும் அழைக்கின்றனர்.  இவர் கோயில் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே இருப்பதாகக் கூறப்படுகிறது,  கோயிலுக்குள் நுழைந்ததும் நேரே செல்லாமல் பக்கவாட்டிலேயே செல்ல வேண்டும்.  ஐயனாரின் பார்வை நேரே நம் மேல் படாமல் பக்கவாட்டில் சென்றே ஐயனார் தரிசனம் செய்ய வேண்டும்.  இதற்குச் செவி வழியாக ஒரு கதையைச் சொல்கின்றனர்.  ராஜகோபுரத்திலிருந்து நேரே தெரிவது ஒன்பது துளைகள் கொண்டதொரு ஜன்னல் ஆகும்.

இந்த ஐயனார் பலருக்கும் குல தெய்வம் எனவும் அக்கம்பக்கத்துக் கிராமங்களில் இருந்து மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து இங்கே பிரார்த்தனைகளை நிறைவேற்றிச் செல்வார்கள் எனவும் சொல்கின்றனர்.  ஒரு சமயம் அப்படி வந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.  செல்கையில் பாதி தூரம் சென்றதும், எந்தக் குழந்தைக்காகப்பிரார்த்தனை செலுத்த வந்தனரோ அந்தக் குழந்தையைக் காணோம்.  அக்கம்பக்கம் எல்லாம் நன்கு தேடிவிட்டுப் பின்னர் கோயிலிலேயோ, அல்லது கோயில் வாசலிலேயோ குழந்தையை விட்டிருக்க வேண்டும் எனத் தேடிக் கொண்டு திரும்பக் கோயிலுக்கு வந்தனர். கோயிலை அடைந்ததும், குழந்தையைத் தேடத் தொடங்கியவர்களுக்கு உள்ளே குழந்தையின் குரலும் குழந்தையோடு யாரோ விளையாடும் சப்தமும் கேட்கக் கதவைத் திறக்க முயல்கின்றனர்.  அசரீரியாக ஒரு குரல் கதவைத் திறக்க வேண்டாம் என எச்சரிக்க அதையும் மீறிக் கதவைத் திறக்க, உள்ளே குழந்தை தலை வேறு உடல்வேறாகக் கிடக்கிறது.  அப்போது ஒரு குரல் இந்தக் குழந்தை இந்தக் கோயிலைச் சார்ந்தது.  அதனாலேயே அதன் ஆன்மா ஐயனாரிடம் ஐக்கியம் ஆகிவிட்டது.  நீங்கள் கதவைத் திறக்காமல் இருந்திருந்தால் குழந்தையே நாளை உங்களோடு வரமாட்டேன் எனச் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.  இனி இம்மாதிரி செய்யாதீர்கள். என்று சொல்லி விட்டு இனி என்னை நேரே பார்க்க வேண்டாம், பக்கவாட்டில் வந்தே தரிசனம் செய்யுங்கள் என்றும் கூறுகிறது.  அதைக் கேட்ட கிராமத்தார்கள் குழந்தையின் நிலை கண்டு மனம் வருந்தினாலும் இறைவன் திருவுளம் அது எனத் தங்களைச் சமாதானம் செய்து கொண்டு செல்கிறார்கள்.  அன்று முதல் ஐயனாரை யாருமே நேரில் பார்ப்பதில்லை என்கின்றனர்.  இது அந்தக் கோயில் வாசலில் படுத்திருந்த ஒரு பெரியவரை எழுப்பிக் கேட்டபோது அவர் சொன்னது.  செவிவழிச் செய்தி தான்.  கோயில் குருக்கள் இல்லை;  இருந்தால் அவரிடம் கேட்டிருக்கலாம்.  எப்படியும் இதன் காரணம் விரைவில் தெரிந்து கொண்டு சொல்கிறேன்.  இதை அடுத்து நாங்கள் சென்றது திருவெள்ளறை.

Tuesday, September 11, 2012

டிசம்பர் 22-இல் உலகம் அழியப் போகுதாமே!

தெரியுமா உங்களுக்கு?  டிசம்பர் 22--இல் உலகம் அழியப் போகுதுனு அந்தக் கால மாயன் கலாசாரத்து மக்கள் அப்போவே எழுதி வைச்சிருக்காங்களாம்.  அப்படினு சொல்றார் உயிர்மை பத்திரிகையில் இதைக் குறித்த தொடர் எழுதிய ராஜ் சிவா என்பவர்.  அவர் சொல்வதில் மாயன்களுக்குக்கற்றுக் கொடுத்ததே தமிழர்கள் என்பதும் ஒன்று.  இதை அவர் 2012 பிறக்கும் முன்னரே எழுதி இருக்கார்.  கொஞ்ச நாட்களாக எனக்கு இதைக் குறித்துப்  உறவினர்களிடமிருந்து வந்த ஃபார்வர்ட் மெயில் மூலம் ராஜ் சிவா எழுதி இருப்பதைப் படித்தேன்.  நம்ம ரங்க்ஸ் கூட அதைப் பத்தி இரண்டு நாட்கள் முன்னாடி தான் கேட்டார்.  ஏதானும் தெரியுமானு! தெரியலை, அப்படிப் போனா எல்லாரும் தானே போகப் போறோம்; கவலைப்படாதீங்கனு சொல்லிட்டேன். :))))

இதிலே இருந்து தப்பிச்சுக்கறதுக்காகவும் சிலர் முயற்சி செய்யறாங்களாம்.  எப்படி முடியும்னு புரியலை.  ஒட்டு மொத்தமா உலகமே, பூமி உருண்டையே அழியறச்சே ஒரு சிலர் மட்டும் பூமிக்கு அடியிலே போய் இருப்பாங்களாம்.  பூமியே அடியோடு புரண்டு போகறச்சே அவங்களும் வந்துட மாட்டாங்க?  இதைக் குறித்து நான் அதிகம் விளக்குவதை விட, உங்களுக்கு அந்த லிங்க் தரேன்.  படிச்சுட்டுத் தலை சுத்தி உட்காரலாம்.  இப்போ வரைக்கும் நான் நல்லாவே இருக்கேன். தலை சுத்தலை.  ஆகவே தைரியமாகப் படியுங்கள், நாமெல்லாம் மனிதர் தானே!

https://docs.google.com/file/d/0Bxd_jvqaheFtaHpuYmE3bldJbHM/edit

https://docs.google.com/file/d/0Bxd_jvqaheFtREJzblZ4b3E4REE/edit?pli=1

http://worlddoomsday2012.wordpress.com/

இப்போதைய எங்க கவலை, டிசம்பர் 22 வரைக்கும் இப்போப்பண்ணி வைச்சிருக்கும் முறுக்கு வராதே என்பது தான்.  அதுக்குள்ளே மறுபடியும் பண்ணியாகணும்.  சூரியக்கதிர் வீச்சுத் தாக்குதலாய் இருக்கலாம்.  எரிமலை வெடிப்பாய் இருக்கலாம்னு சொல்றாங்க.  பார்க்கலாம். :)))))))) எல்லாத்துக்கும் தயாராய் இருப்போம்.  ராத்திரின்னா தூங்கிட்டு இருப்போம். 

மஹா கவிக்கு அஞ்சலி!



படம் உதவி கூகிளார்: கூகிளாருக்கு நன்றி.

Monday, September 10, 2012

அப்பாவின் கம்பீரம்!

அப்பாவைப் பார்த்தாலே எங்களுக்கு நடுக்கம் தான்.  தொலைவில் வரும்போதே தெரிந்து விடும்.  இன்னிக்கு என்ன மூடில் வராரோனு பயமாவும் இருக்கும்.  யார் மாட்டிப்பாங்களோனு நினைப்போம்.  அநேகமா அம்மா தான் மாட்டிப்பா.  அம்மாவை அப்பா உண்டு, இல்லைனு பண்ணிடுவார்.  அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு தூசி கூட அந்தண்டை, இந்தண்டை நகர முடியாது;  நகரவும் கூடாது.  சமையலறையில் கூட அம்மா ஒரு பாத்திரத்தைத் தன் செளகரியத்துக்கு ஏற்ப இடம் மாற்ற முடியாது.  அப்பா கத்துவார்.  அந்தப் பாத்திரம் முன்னிருந்த இடத்துக்கு வரும் வரையிலும் விட மாட்டார்.  ஒரு விதத்தில் பிடிவாதம்னு தோன்றும் இது இன்னொரு விதத்தில் சாமான்களை வைச்ச இடத்தில் வைக்கத் தானே சொல்கிறார்னும் தோணும்.  அம்மா என்ன இதுக்குப் போய் அலட்டிக்கிறானும் நினைச்சுப்பேன்.

எங்கள் அனைவரையும் அடக்கி ஆளும் அப்பாவின் சாமர்த்தியத்தையும், கம்பீரத்தையும் நினைச்சால் கொஞ்சம் பெருமிதமாக இருக்கும்.  அவருக்கு அடங்கிப் போகும் அம்மாவை நினைச்சால் கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கும்.  அப்பா சொல்வது தான் சரி; செய்வது தான் சரி;  இந்த எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததுனு சொல்லலாம்.  அம்மாவிடம் அன்பு இருந்தாலும் அப்பாவுக்கு அடங்கித் தானே போறா என்ற அலக்ஷியமும் இருந்தது.  ஒரு தரம் அம்மா கிட்டேக் கேட்டேன். "நீ பெரியவளா? அப்பா பெரியவரா?

"சந்தேகமே இல்லாமல் அப்பாதான் பெரியவர்."

"அப்போ நீ?"

"அப்பாவுக்கு அப்புறம் தானே நான்!" சகஜமான குரலில் தான் அம்மா சொன்னாள்.

"ஆனால்..... மாதா, பிதா,குரு, தெய்வம்னு சொல்லிக் கொடுக்கிறாங்க.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னும் படிக்கிறேனே.  என்னோட படிக்கிற எல்லாருமே அவங்க அவங்க அம்மாவைப் பத்தித் தான் பேசறாங்க.  இங்கே சமையல் கூட அப்பா சொல்றது தான் நீ செய்யறே. எங்களுக்கும் செய்து கொடுக்கிறே!  ஏன் அப்படி?"

"ஏன்னா, அப்பா ஒருத்தர் தானே நம்ம வீட்டிலே சம்பாதிக்கிறார்.  அதான்."

"என்னோட நண்பர்கள் வீட்டிலேயும் அவங்க அவங்க அம்மா சும்மாத் தான் வீட்டிலே இருக்காங்க.  எல்லாரும் வேலைக்குப் போகறதில்லை."

"என் கண்ணே," என அணைத்துக் கொண்ட அம்மா, பதிலே சொல்லவில்லை.

அன்று சாயங்காலமாக அலுவலில் இருந்து வந்த அப்பா காபி சரியில்லை என ஒரு பாட்டம் அம்மாவோடு சண்டை போட்டார்.  இது கூடத் தெரியாமல் என்ன பொம்மனாட்டி! என்ற வழக்கமான கத்தல்.  பின்னர் வழக்கம் போலக் கோயிலுக்குப் போய் விட்டார்.  வீட்டிலே என்ன சண்டை நடந்தாலும், அப்பா தன் வரையில் எதுவும் பாதிக்காதவராகவே இருப்பார்.  அம்மாதான் அழுது கொண்டிருப்பாள்.  அப்பா அதையும் லக்ஷியம் செய்ததாகத் தெரியவில்லை.  அன்று விளையாடும்போது என் சிநேகிதர்களில் யாரோட அப்பா வீரமானவர்னு ஒரு பேச்சு வரவே, நான் "எங்க அப்பா தான்!" என்று அடித்துச் சொன்னேன்.  அதற்கான காரணங்களையும் கூறினேன்.  பக்கத்து வீட்டு கோபு சிரித்தான்.  "உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி!" எனச் சீண்டினான்.  எனக்கு வந்த கோபத்தில் அவனோடு "டூ" விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

ராத்திரி ஏழு மணி இருக்கும்.  அம்மா கொல்லையிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.  திடீர்னு ஒரு அலறல்.  "என்னம்மா, என்ன கொஞ்சறியா?  என்ன அங்கே சப்தம்?" அப்பா கடுமையாகக் கேட்க, அம்மா, "ஒரு பெருச்சாளி, எப்படியோ சமையலறையில் புகுந்திருக்கு.  அது காலில் ஏறிடுத்து.  கத்தவே எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டிருக்கு."  என்றாள்.

அப்பா திடுக்கிட்ட குரலில், "என்ன பெருச்சாளியா?" என்றார்.

"ஆமாம், அப்படித் தான் இருந்தது."

"சரியாச் சொல்லித் தொலை;  நிஜம்மா பெருச்சாளியா?"

"ஆமாம், ஆமாம், இதோ மறுபடி வெளியே வரப் பார்க்கிறது.  அடுப்பு மேடைக்குக் கீழே போய் ஒளிஞ்சிட்டு இருக்கு."

அப்பா படபடவென எங்களை எல்லாரையும் அழைத்தார்.  நாங்க வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள், அப்பா இப்போ அதை அடிக்கப் போகிறார்;  குறைந்த பக்ஷமாக அதை விரட்டவாவது முயற்சி செய்வார் என நினைத்துக் கொண்டு, "என்ன அப்பா, உனக்கு நாங்களும் உதவி செய்யட்டுமா?" எனக் கேட்டோம்.  அப்பா எவ்வளவு கம்பீரமானவர்!   அம்மாவையும் அடக்கி ஆள்பவர்.  இந்த வீட்டில் எதுவும் அவருக்குத் தெரியாமல் நடக்காது.  அப்படி இருக்கையில் ஒரு பெருச்சாளி எம்மாத்திரம்!  விரட்டித் தள்ளிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்.

நாங்கள் வந்ததும் அப்பா எங்களை அழைத்துக்கொண்டு, கிட்டத்தட்டத் தரதரவென இழுத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் சென்றார்.  எங்களை அங்கே தள்ளிக் கதவைச் சார்த்தப் போகிறார் என நினைத்தேன்.  கிட்டத்தட்ட நடந்ததும் அதுவே.  ஆனால் அப்பாவும் கூடச் சேர்ந்து எங்களோடு உள்ளே வந்துவிட்டார்.  கம்பு ஏதானும் தேடறாரோனு நினைச்சேன்.  இல்லை; கம்பெல்லாம் தேடலை.  இங்கிருந்தே அம்மாவுக்குக் குரல் கொடுக்கிறார்.

"மெதுவா அந்தப் பெருச்சாளியை விரட்டப் பாரு.  உன்னால் முடியலைனா அக்கம்பக்கம் யாரையானும் அழைச்சுக்கோ.  நான் இங்கே குழந்தைங்களை பத்திரமாப் பார்த்துக்கறேன்."

அம்மாவின் இதழ்களில் இகழ்ச்சியான (?) சிரிப்பு ஓடியதாக எனக்குத் தோன்றியது.

அப்பா கம்பீரம் இழந்து விட்டார்.


டிஸ்கி:  சில பல பழைய விஷயங்களைத் தோண்டிக்கொண்டிருந்தப்போ கிடைச்ச ஒரு விஷயத்தைக் கதை மாதிரி, கவனிக்கவும், கதை மாதிரிதான். ஆக்கி இருக்கேன்.


பெரிய டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கி:  ஹிஹிஹி, இது மலரும் நினைவுகள் இல்லை.  

Wednesday, September 05, 2012

விரைவில் இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதச் சம்பளம் கொடுக்க சட்டம்!

மேல்நாடுகளிலேயே இல்லாத ஒன்றை இந்தியா கொண்டு வரப்போகிறது.  இனிமேல் இந்த மாதிரியான உரையாடல்களைக் கேட்கலாம்.

மனைவி:  தீபாவளிக்குப் பட்டுப் புடைவை எடுத்துத் தாங்க.

கணவன்:  அதெல்லாம்முடியாது.  உனக்குத் தான் சம்பளம் தரேன் இல்லை?  வேணும்னா போனஸ் மாதிரி ஏதானும் போட்டுக் கொடுக்கிறேன். அதிலே இருந்து வாங்கிக்க. உனக்குச் சம்பளம் வேறே கொடுத்துட்டு இன்னும் பட்டுப்புடைவை வேறேயா?


மனைவி:  என்னங்க, இன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லை, சமைக்க முடியலை.  வெளியிலே ஏதானும் சாப்பிட்டு எனக்கும் வாங்கிட்டு வாங்க.

கணவன்:  என் வரைக்கும் சாப்பிட்டுக்கறேன்.  எத்தனை நாள் உடம்பு சரியில்லாமல் படுத்திருப்பேனு சொல்லு.  சம்பளம் அத்தனை நாள் பிடிக்கணும்.  அதுக்குச் சட்டம் என்ன சொல்லுதுனும் பார்த்து வைச்சுக்கணும்.  உனக்கு வேணுங்கற சாப்பாடை உன் சம்பளப் பணத்திலே இருந்து வாங்கிக்கோ.  இங்கே நீ சமைக்கிற சாப்பாடைச் சாப்பிடறதுக்கும் கணக்கு வைச்சுக்கணும்.  மறந்துடப் போறேன். உன் சம்பளத்திலே சாப்பாடு சேர்த்தியா இல்லையானு பார்த்து வைச்சுக்கணும்.

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 7


படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குத் தனியான கோயில்களே கிடையாது.  இது ஒரு சாபத்தினால் என்பதை நாம் அனைவரும் அறிவோம், என்பதோடு பிரம்மாவுக்கும் நம்மைப் போல் முடிவு உண்டு என்பதும் காரணமாய் இருக்கலாம்..  ஆனாலும் அவருக்கென ஒரு சந்நிதி எல்லா சிவாலயங்களிலும் காணப்படும். சந்நிதி இருந்தாலும் அவருக்கென அர்ச்சனைகளோ, அலங்காரங்களோ, அபிஷேஹமோ நடைபெறாது. வட மாநிலமான ராஜ/ஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் க்ஷேத்திரத்தில் மட்டும் பிரம்மாவுக்கெனத் தனிக் கோயில் உண்டு.  வடநாட்டுப் பாணியில் காணப்படும்.  ஆனால் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான பிரம்மாவும், அவருக்கெனத் தனியான சந்நிதியும் தனி அலங்கார, அபிஷேஹ ஆராதனைகளும் நடைபெறுகின்றன என்பது ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.  இவரின் உருவமும் பெரிய உருவம் என்பதோடு தனக்கெனத் தனியான கருவறையில் அருள் பாலிக்கிறார்.  இவரைத் தரிசிப்பதும் எல்லாராலும் இயலாது எனவும் யாருடைய தலை எழுத்தில் மாற்றம் ஏற்படுமோ அவர்களால் மட்டுமே தரிசிக்க இயலும் என்பதும் சொல்லப் படுகிறது.  அத்தகையதொரு கோயில் இங்கே திருச்சிக்கு அருகே உள்ள திருப்பட்டூர் என்னும் தலத்தில் உள்ளது.

சமீப காலங்களாக இந்தக் கோயில் பற்றி, "சக்தி விகடன்" மூலமாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  ஆகவே இந்தக் கோயிலும் இப்போது கூட்டம் நிறைந்த கோயிலாக மாறி வருகின்றது.  திங்கட்கிழமை அன்று இந்தக் கோயிலில் பிரம்மாவைத் தரிசிப்பது விசேஷம் என்கின்றனர்.  நாங்கள் சென்றதும் ஒரு திங்கட்கிழமை தான்.  இது தற்செயலாக நேர்ந்தது.  ஒரே நாளில் சுற்றிய ஊர்களில் சமயபுரத்துக்கு அடுத்து நாங்கள் சென்றது திருப்பட்டூர்.  திருப்பிடவூர் என்னும் பெயர் கொண்ட இது தற்போது திருப்பட்டூர் என அழைக்கப் படுகிறது. இங்கு உறையும் ஈசன் பிரம்மபுரீஸ்வரர் எனவும், அம்பிகை பிரம்மநாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர்.  இந்த ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  இந்தக் கோயில் பழமை வாய்ந்த கோயில் எனவும் பல்லவர் காலம் தொட்டு இருப்பதாகவும் கேள்விப் படுகிறோம்.  ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றோமானால் வேத மண்டபம் எனப்படும் மண்டபம், நாத மண்டபம் எனப்படும் மண்டபம் ஆகியவற்றைத் தாண்டிச் சென்றால் அர்த்த மண்டபம் வருகிறது.

அங்கே கருவறையில் பிரம்மபுரீஸ்வர, மண்டூகநாதர், கைலாச நாதர் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஈசன் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார்.  அன்னை பிரம்ம நாயகி பராசக்தி, பிரம்ம சம்பத் கெளரி என்னும் பெயர்களில் அருள் பாலிக்கிறாள். பல்லவர்கள் காலம் தொட்டு நாயக்க மன்னர்கள் வரை பல மன்னர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்திருக்கின்றனர்.  கோயில் பழமையான கோயில் என்பது பார்த்தாலே தெரிய வருகிறது.  ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் உதிக்கும் சூரியன் முதல் வணக்கத்தை பிரம்மபுரீஸ்வரருக்குச் சமர்ப்பிக்கிறான்.  அதைக் காணவே அக்கம்பக்கம் உள்ள பக்தர்கள் வருவார்களாம்.   இவருக்கு வடப்புறத்தில் உட்பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் ஆறடி உயரத்துக்கு தியானக் கோலத்தில் பத்மாசனமிட்டுத் தாமரை மீது அமர்ந்த வண்ணம் காட்சி அளிக்கிறார் பிரம்மா.  மஞ்சள் காப்பிட்டு எந்நேரமும் மஞ்சள் வண்ணத்திலேயே காட்சி கொடுக்கிறார்.

இவரை இந்தியாவிலேயே பிரம்மாண்டமான பிரம்மா என்கின்றனர்.  புஷ்கரைத் தவிர திருக்கண்டியூரில், உத்தமர் கோயிலில், கொடுமுடியில், திருநெல்வேலி மாவட்ட பிரம்மதேசத்தில் என இன்னும் ஐந்து இடங்களில் தனிச் சந்நிதி கொண்டிருக்கும் பிரம்மா இங்கே எப்படி வந்தார் என்பதற்கான வரலாற்றைப் பார்ப்போமா?

Sunday, September 02, 2012

தக்குடு வந்தார் தக்குடு வந்தார் நடந்து நடந்து தானே!

பாலாஜி கல்யாணத்துக்குப் போகணும்னு நினைச்சிருந்தோம்.  போக முடியாமல் உடம்பு படுத்தல் நிக்கலை.  சரி, புதன்கிழமையன்னிக்குப் பார்த்துக்கலாம்னு நினைச்சால் அன்னிக்குனு எங்க ஊர்க் கோயில் பட்டாசாரியார் பெளர்ணமி அன்னிக்கு வரச் சொல்லிட்டார்.  அதோட பெளர்ணமி, வெள்ளிக்கிழமை எல்லாம் சேர்ந்து வரதாலே அன்னிக்குத் திருநாகேஸ்வரம் போகச் சொல்லியும் ஆர்டர்.  சரினு பாலாஜி கல்யாணத்துக்கு வரமுடியாதுனு மெயிலிட்டு இருந்துட்டேன்.  பாலாஜிக்கும் போன் பேசிச் சொல்லிட்டேன்.  ரிசப்ஷனுக்கு ரெடியாகிட்டு இருந்தார். சரினு ரொம்ப அறுக்காம விட்டுட்டேன்.  மறுநாள் கல்யாணத்தன்னிக்குக் காலம்பர ஒரு ஃபோன் கால்.

இந்த முறை அம்பியா, அந்நியனானு சஸ்பென்ஸ் வைக்காமல் எடுத்தவுடனேயே, "மாமி, நான் தக்குடு.  இன்னிக்குச் சாயந்திரம் உங்காத்துக்கு வரப் போறேன்" அப்படினு ஒரு குரல் போனில்.  நிஜம்மாவே தக்குடுதானா?  சந்தேகமாவே இருந்தது.  அம்பி என்ன ஆச்சுனு எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அம்பி நிச்சயமா வரலைனதும், சரி, போனால் போகட்டும்னு தக்குடுவை வர அனுமதி கொடுக்கலாம்னு கொடுத்தேன்.  கன்டிஷன்ஸ் அப்ளைனும் சொல்லிட்டேன். (ஹிஹிஹி) பின்னே, சென்னைக்கு நூறுதரம் வந்துட்டு, அங்கே அம்பத்தூருக்கு ஒரு தரம் கூட வராதவங்க கிட்டே என்ன சொல்றது?  கண்டிஷன்ஸ் அக்ரீட் அப்படினு சொல்லிட்டார்.  சாயந்திரமே வந்துடறேன்னு சொன்னார்.  சொல்லிட்டுப் "பொட்". போனை வைச்ச சப்தம்.  அட்ரஸ் கேட்டுக்கவே இல்லை.  இந்தக் காலத்துப் பசங்களுக்கே என்ன அவசரமோனு  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டு வைச்சுட்டேன்.  அவரைக் கூப்பிடலாம்னா லான்ட்லைனிலே பேசி இருந்தார். நம்பர் அதிலே டயல் பண்ணும்போது வந்திருக்கும்.  ஸ்டோர் ஆகி இருக்காது.  கண்டு பிடிக்கிறதும் கஷ்டம்.  அதோட, தக்குடு நினைவா, ஞாபகமாத்  தன்னோட இந்தியா மொபைலை தோஹாவிலேயே வைச்சுட்டு வந்துட்டேன்னு வேறே சொன்னார். அதனால் தக்குடு நம்பருக்கும் கூப்பிட முடியாது.  எவ்வளவு சமர்த்துனு மெச்சிக் கொண்டு ஶ்ரீரங்கம் வந்ததும் கூப்பிடட்டும்னு விட்டுட்டேன்.

சரியா ஐந்து மணிக்குத் திரும்ப ஒரு கால்.  "மாமி, எங்கே இறங்கறது?"
"சரியாப் போச்சு, எங்கே இருந்து கூப்பிடறீங்க?"
"ஸ்ரீரங்கத்திலே பஸ் ஸ்டான்டிலே இருந்து தான்"
"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முன்னாடியே சொல்லக் கூடாதோ"(மனசுக்குள் முணு முணு)
"சரி, அங்கே இருந்து திருச்சி பஸ் இருந்தா அதிலே வந்து அம்மா மண்டபம் இறங்கி வாங்க.  எதிரே தான் வீடு. இல்லைனா ஆட்டோவிலே வரலாம்."

"லான்ட்மார்க் என்ன?"

லான்ட்மார்க் சொன்னேன்.  அப்புறமா வாசல்லே வந்து ஒருதரம் உள்ளே வரலாமா?  வாங்க, நாலாவது மாடி. தக்குடுவுக்குத் தூக்கிவாரிப்போட்டது நாலாவது மாடியிலிருந்தே தெரிந்து கொண்டு, அப்புறமா மெதுவா லிஃப்ட் இருக்குனு ஆறுதல் செய்தியும் கொடுத்தேன்.  நல்லவேளையா வேறே 2,3 நபர்கள் எங்க ஃப்ளாட்டுக்கே வந்துட்டு இருந்தாங்க.  ஆனால் அதுக்குள்ளே நம்மவர் என்ன இது?  கேட்டு இத்தனை நேரம் ஆச்சு, இரண்டு பேரையும் காணோமே? லிஃப்டிலே மாட்டிக் கொண்டாங்களானு சந்தேகப் பட ஆரம்பிச்சுட்டார்.  கரன்ட் போயிருந்தது.  ஜெனரேட்டர் போட்டால் தான் லிஃப்ட் இயங்கும். சரி அவங்களைக் கீழே போய்ப் பாருனு சொன்னார்.  அவர் ஜபம் பண்ணிட்டு இருந்தார்.  ஆகவே நான் கீழே செல்ல ஆயத்தமா வெளியே போக தக்குடு வந்தார், தக்குடு வந்தார், நடந்து நடந்து.  கூடவே அவர் மனைவி மிசஸ் தக்குடுவும் வந்தாங்க.

மிச்சம் தக்குடுவோட பதிவிலே தக்குடு எழுதும்போது பார்க்கவும். ஹிஹிஹி. 

Saturday, September 01, 2012

திடீர்னு ஒரு பயணம்!

நேத்திக்கு ஒரு திடீர்ப் பயணமாகத் திருநாகேஸ்வரத்தில் ஒரு பிரார்த்தனைக்குப் போக வேண்டியதா இருந்தது.  பெளர்ணமி, வெள்ளிக்கிழமை சேர்ந்து வந்ததாலும், ராகுகாலத்து வழிபாடுகளாலும் கூட்ட்ட்ட்ட்ட்டமோ கூட்டம்.  உள்ளே ராகுவுக்கு வழிபாட்டுக்கு டிக்கெட் வைச்சிருந்தாங்க.  ஒரு காலத்தில் 25 ரூக்குள் இருந்தது.  எத்தனை பேர் வேணாலும் போகலாம். இப்போ ஒரு நபருக்கு 100 ரூபாய்.  250 ரூக்குக் கொஞ்சம் கிட்டக்கப் பார்க்கலாமாம்.  நூறு ரூபாய்க்குத் தள்ளித் தான் நிக்கணும்.  500 ரூபாய்க்கு இரண்டு பேரை உள்ளே விடறாங்க.  500ரூபாய்க்குக் கிட்டக்க முன்னாடி உட்காரலாம்.  மூன்று குழுவாகப் பிரிச்சு நடத்தறாங்க.  நாங்க போனப்போ முதல் குழு உள்ளே போயிருந்தது.  ஐநூறு ரூபாய் டிக்கெட் வாங்கினால் ஜாஸ்தி காத்திருக்க வேண்டாம், நிற்க வேண்டாம்னு நினைச்சது தப்பு.

அதிலும் காத்திருக்க வேண்டி இருந்தது.  உள்ளே முதல் குழுவுக்கு சங்கல்பம் ஆரம்பிச்சதும் தான் இங்கே கதவைத் திறந்து உள்ளே விடறாங்க.  உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போய்க் கூண்டு மாதிரியான வரிசையில் நின்னு, (திருப்பதி மாதிரி காபி, டீ, டிபன் வரதில்லை, நல்லவேளையா) ஆனால் அங்கேயே சங்கல்பத்துக்கு கோத்திரம், பெயர் எல்லாம் கேட்டுக்கறாங்க.  ஒரு பக்கம் ஏதோ யாகம்; இதிலே சங்கல்பம் வேறே மைக்கிலே.  சத்தம், காற்று இல்லாமல் கஷ்டம், நல்லவேளையா உட்கார பெஞ்ச் இருந்தது.  ஒரு மாதிரிச் சமாளிச்சு உட்கார்ந்து காத்து இருந்து பிரார்த்தனையை இரண்டாவது குழுவில் முடிச்சுக் கொண்டோம்.  அத்தனை பணம் கொடுத்ததுக்கு இரண்டு பேரீச்சம்பழப் பாக்கெட்(தலா நான்கு பேரீச்சைகள்) சின்னதாய்க் கல்கண்டு பாக்கெட் 2, விபூதி அவ்வளவு தான்.  தஞ்சை ஜில்லா இலை வச்சுக் கட்டிய மாலை அரை முழம்.  ஒரு கிள்ளுப் பூக் கிடையாது அதிலே.  அபிஷேஹத்துக்குப் பாலும் கொஞ்சம் போலத் தான் விட்டாங்க.  அத்தனை பேர் கொடுக்கிற பணத்தில் கொஞ்சம் தாராளமாய்ப் பால் வாங்கி விடக் கூடாதோ எனத் தோன்றியது.  சூரிய ஒளியை மறைச்சுட்டதாலே ராகுவின் மேலே  பால் விடுகையில் நிறம் மாறுவது தெரியறதில்லை.

அதுக்கப்புறமா உப்பிலியப்பனைப் பார்த்துட்டு, திருப்பதிக்குப் போக முடியறதில்லை இப்போல்லாம்.  கடைசியாப் போனப்போக் கீழே தள்ளிட்டாங்க, விழுந்துட்டேன். அதிலே இருந்து கொஞ்சம் யோசனை.  ஆகையால் உப்பிலியப்பனைப் பார்த்துட்டு வந்துடறோம்.  பின்னர் அங்கிருந்து எங்க ஊர்க் கிராமத்துக் கோயிலுக்குப் போனோம்.  கருவிலியில் கோயில் மூடிட்டாங்க.  நல்லவேளையா கேர்டேக்கர் இருந்ததாலே திறந்து தரிசனம் பண்ணி வைச்சாங்க.  பின்னர் எங்க ஊர்க் கோயில் பட்டாசாரியார், மாரியம்மன் கோயில் பூசாரி கிட்டே சொல்லி வைச்சிருந்தோம்.  அவங்க இருந்தாங்க.  அம்மன் கோயில் பெளர்ணமி என்பதால் அபிஷேஹமே அப்போத் தான் நடந்தது.  அதுக்கப்புறமா பெருமாளையும் பார்த்துட்டு பட்டாசாரியார் கொடுத்த பிரசாதங்களைச் சாப்பிட்டுட்டுத் திரும்பினோம்.

திரும்பறச்சே கல்லணை வழியா வந்தோம். போறச்சேயும் கல்லணை வழிதான்.  திரும்புகையில் கொஞ்சம் நின்னு படங்கள் எல்லாம் எடுக்கணும்னு நினைச்சேன்.  ஆனால் நேத்திக்குப் பயணம் ரொம்பவே கஷ்டமாப்போயிடுச்சு.  அதிலே ரொம்பவே களைப்பு. கும்பகோணத்திலே வெயில் வேறே தாங்கலை.  சூடு தாங்காமல் உடலெல்லாம் வெந்து போய் எரிச்சல், அரிப்பு, வலி தாங்கலை.  நாங்க போகையிலேயே பார்த்தோம்.  காவிரியில் மணல் எடுக்க ஆயிரக்கணக்கான லாரிகள், லாரிகள், லாரிகள்.  அவை எல்லாம் நாங்க போகையிலே ஒரு பக்கமா நின்னுட்டு இருந்தது.  திரும்புகையில் டிரைவர் தஞ்சாவூர் வழியாப்போகலாம்னு சொன்னதை வேண்டாம் சுத்துவழினு சொல்லிட்டுக் கல்லணை வழியாப் போகச் சொன்னால் மணல் எடுத்துக்கொண்டு திரும்பி வரும் லாரிகள்.  சாலையில் நின்று கொண்டிருந்த மணல் எடுக்கச் செல்லும் லாரிகள் எல்லாம் சேர்ந்து இரண்டு வரிசையாக சாலையை அடைத்துக்கொண்டு போகவும் முடியாமல், வரவும் முடியாமல், இதிலே பள்ளி விட்டுச் செல்லும் குழந்தைகள் சைகிள்களில், பள்ளி வாகனங்கள், கல்லூரி வாகனங்கள். எனக் கும்பகோணத்திலிருந்து திருவையாறு வர வரைக்கும் போதும்டா சாமினு ஆயிட்டது.

வந்து சாப்பிடக் கூட இல்லை. உடனே படுக்கணும் போல இருந்தது.  கொஞ்ச நேரம்  மெயில் பார்க்க உட்கார்ந்தால் உட்கார முடியலை.  போய்ப் படுத்தாச்சு. இன்னும் ஸ்கின் பிரச்னை சரியாகலை.  இரண்டு நாளாவது ஆகும்.  குப்பைமேனியைத் தேடிட்டு இருக்கேன்.