Monday, February 04, 2013

மெல்ல, மெல்ல ஏறிட்டோமே!


வெகு எளிதாகவும், லாகவமாகவும் என்னைத் தாண்டிப் பலரும் சென்றனர்.  எங்கள் உறவினரும் முன்னே சென்றாலும்,  அவ்வப்போது நின்று நின்று ரங்க்ஸும், மன்னியும் எனக்காகக் காத்திருந்து சென்றனர்.  மொத்தம் உச்சிப் பிள்ளையாரின் படிகளையும் சேர்த்தால் 417 படிகளே என்று கணக்குச் சொல்கிறது.  ஆனால் எனக்கோ 41700 படிகளைப் போன்ற பிரமை. உயரமும் அதிகம் இல்லை.  300 அடிக்குள்ளாகவே.  இதை விடப் பிரம்மாண்டமான அஹோபிலம் மலைத் தொடர்கள், எல்லோரா, அஜந்தா, அவ்வளவு ஏன் கைலை மலையில் செய்த பரிக்ரமா எல்லாம் நினைவில் வந்தாலும், "நீ அப்படிப் பெருமையும் கர்வமும் கொண்டு இருக்கியா?"னு பிள்ளையார் கேட்டுட்டார்.  தப்புத்தான்.  ஆனானப் பட்ட விபீஷணனே இவரைத் தேடிக் கொண்டு மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து பின்னர் மலை உச்சியில் பார்த்துட்டு மூச்சு வாங்க ஓடோடி வரலையா? விபீஷணன் நினைச்சால் அவன் வந்த விமானத்தில் பறந்து வந்து தேடி இருக்கக் கூடாதா? இல்லை.  ஏனெனில் முழு முதல்வன், விக்னங்களைக் களைபவன் விளையாடிய விளையாட்டுத் தான் காரணம். ஆகவே மலை ஏறித்தான் வந்தான்.  இது ரொம்பச் செங்குத்தான மலை.  அதனாலேயே சிரமம் அதிகம்.

மலை மேல் ஏறியதும் கொஞ்ச தூரத்திலேயே அர்ச்சனைச்சீட்டுகள், வாழைத்தார் செலுத்தும் சீட்டுகள் கொடுக்கும் இடம் வருகிறது.  அங்கே தெருக்களும், குடியிருப்புகளும் காணப்படுகின்றன.  மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இது இருக்கிறது.  அங்கேயும் ஒரு விநாயகர்.  எதிரே ஒரு சின்ன மண்டபம்.  அந்த மண்டபம் எதுக்குனு அப்போப் புரியலை.  திரும்பி வரச்சே பார்த்தால் அங்கே தான் நம்ம நண்பர் அந்தச் சின்ன இடத்துக்குள்ளே நின்று கொண்டு காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரே பிளிறல் சப்தம். இப்போவும் அப்படித்தான் படிகளைச் சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் ஏற முடிந்த அளவுக்கு முக்கால் அடி உயரத்திலும் வைத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டப்பட்டே ஏற வேண்டி வந்தது.  அதிலும் பிடிமானம் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி சமாளித்து ஏறினாலும் தளங்கள் வருகையில் உச்சிப் படியில் மேலே ஏறுகையில் பிடித்துக்கொண்டு ஏற எந்தவிதமான பிடிப்பும் இல்லை.  அம்மாதிரி இடங்களில் மேலே ஏறுகையில் கவனமாக ஏற வேண்டி இருக்கிறது.  கொஞ்சம் அசந்தால் அப்படியே மல்லாக்கக் கீழே சாய்த்துவிடும்.  அப்படி ஒரு செங்குத்துப் படியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தளமாக மெல்ல மெல்ல மேலே ஏறிக் கொண்டே கடைசியில் தாயுமானவர் கோயில் இருக்கும் தளத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆறரை மணிக்கு ஏற  ஆரம்பித்தோம்.  வழியில் இரண்டு மூன்று இடங்களில் பிள்ளையாரும் நம்மை மாதிரி உட்கார்ந்து உட்கார்ந்து போயிருப்பார் போல.  இரண்டு, மூன்று சந்நிதிகளில் உட்கார்ந்து அருள் பாலிக்கிறார்.

ஒரு இடத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மண்டபம் என்ற பெயரில் ஒரு மண்டபம் காணப்பட்டது.  அதுதான் ஆயிரங்கால் மண்டபமோ என்ற சந்தேகம்.  யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.  மண்டபத்தைப் படம் பிடித்துக் கொண்டேன்.


 வழியில் ஆங்காங்கே தெரிந்த ஜன்னல்கள் வழியாக மலையின் வெளிப்புறத்தைப் படம் பிடித்தேன்.  சில இடங்களில் பிரகாரம் மாதிரியும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஏதோ அறைகள் போலவும் காணப்பட்டன. இங்கே இரு குகைகள் இருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.



  அவை குறித்தும் எதுவும் தெரியவில்லை.  மேலே இருந்து பார்த்தால் கோட்டை போன்ற அமைப்புக் காணப்படும்.  அந்த இடத்துக்குச் செல்லும் வழியை எல்லாம் இப்போது தடுத்து மூடி இருக்கின்றனர். உச்சிப் பிள்ளையார் சந்நிதிக்குப் பக்கமாக ஒரு கட்டிடம் காணப்பட்டது,  அது என்ன என்று கேட்டதுக்கு மணி மண்டபம் என்று சொன்னார்கள்.  ஆலாக்ஷ மணி அங்கே இருந்து தான் அடிப்பார்கள் போல.  மண்டபம் பூட்டி இருந்தது.  சரி, சரி, இதெல்லாம் உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கிறச்சே பார்க்கலாம்.  இப்போத் தாயுமானவர்.  தாயுமானவருக்கு வாழைத்தார் செலுத்துவது என்றொரு பிரார்த்தனை செய்கிறார்கள்.  நாங்களும் வாழைத்தாருக்குச் சொல்லி இருந்தோம். வாழைத்தார் எங்களுக்கு முன்னால் மேலே போய்விட்டது.  அவ்வளவு பெரிய தாரை எடுத்துக்கொண்டு எப்படித்தான் மேலே ஏறினாரோ தெரியலை. ஏறிய அரைமணி நேரத்துக்குள்ளே தாயுமானவர் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தாச்சு.


18 comments:

  1. நான் ஒவ்வொரு முறை செல்லும்போதும் இப்படித்தான் கேள்விகள் கேட்பேன் - பதில்தான் தெரிந்து கொள்ள முடியவில்லை! :(

    ஒரு வழியா உங்க கூடவே தாயுமானவர் ஸ்வாமி கோவில் வரைக்கும் வந்தாச்சு.... அடுத்தது உச்சிப் பிள்ளையார் தான்!

    ReplyDelete
  2. ஒரே ஒரு தரம் இங்கு ஏறியிருக்கிறேன். இவ்வளவு விவரங்கள் பார்க்கவில்லை.

    ReplyDelete
  3. அவ்வளவு பெரிய தாரை எடுத்துக்கொண்டு எப்படித்தான் மேலே ஏறினாரோ தெரியலை. ஏறிய அரைமணி நேரத்துக்குள்ளே தாயுமானவர் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தாச்சு.//

    எனக்கும் அவர்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கும்.
    என் தங்கை தன் பேரனுக்கு வேண்டி இருந்தாள் ,எப்படி வாழைத்தாரை தூக்கி போவது என்று மலைப்பாய் இருக்கிறது என்றாள், அதற்கு ஆள் இருக்கிறது என்று சொன்னவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவரிடம் கொடுத்தோம் வெகு சீக்கீரம் கொண்டு வந்து விட்டார் என்றாள்.
    கடவுள் அவர்களுக்கு பலத்தை கொடுத்து இருக்கிறார். அவர்கள் வயிற்று பிழைப்புக்கு.

    மெல்ல தாயுமானவரை பார்க்க ஏறிவிட்டீர்கள். தாயுமானவர் தரிசனம் கிடைத்து விட்டது.
    அடுத்து உச்சி பிள்ளயார் தரிசனத்திற்கு வருகிறேன்.

    ReplyDelete
  4. நான் உச்சிப்பிள்ளையார் கோவில் சென்று பார்த்ததே இல்லை.நீங்கள் விவரமாக அழகாக எழுதியிருப்பதை படிக்கும் போது நேரில் சென்று பார்பது போல இருக்கு. மிக்க நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. வாங்க வெங்கட், ஆமாம், பலருக்கும் தெரிவதில்லை தான்! :(

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், முடிஞ்சால் சாவகாசமா ஒரு தரம் வந்து மலை ஏறுங்க. :))))

    ReplyDelete
  7. வாங்க கோமதி அரசு, அவங்கல்லாம் ஏறுவதைப் பார்க்கிறச்சே நம்மாலே முடியலையேனு ஆற்றாமை பொங்கும்! :)))) என்ன செய்ய முடியும்! :)))))

    ReplyDelete
  8. வாங்க ராம்வி, ஒரு முறையாவது பார்க்கணும். முயற்சி செய்யுங்க. :)

    ReplyDelete
  9. ஒரு தடவை கிடுகிடுவென்று ஏறி கிடுகிடுவென்று இறங்கிவிட்ட நினைவு வந்தது. உங்களது நிதான விவரிப்பில் எவ்வளவு
    விஷயங்களைத் தவற விட்டிருக்கிறோம் என்றும் தெரிந்தது.


    அது என்ன வாழைத்தார் பிரார்த்தனை?....

    குடும்பம் வழிவழியாகத் தழைத்தோங்க வேண்டுமென்று வேண்டுதல் என்று தெரியவந்தது.

    ReplyDelete
  10. வாங்க ஜீவி சார், ரொம்ப நாளாச்சே இந்தப் பக்கம் உங்களைப் பார்த்து! :)

    ஆமாம், நீங்க சொல்றாப்போல் வாழையடி வாழையாகக் குடும்பம் வளரவே வைக்கின்றனர்.

    நாங்களும் ஒரு காலத்தில் உங்களைப் போல் அவசரம் அவசரமாகத் தான் ஏறி இறங்கினோம். இப்போத் தான் எழுத்தாளி ஆயிட்டோமுல்ல! :)))))

    ReplyDelete
  11. கடந்த பத்து வருடத்தில் மூன்று நான்கு முறை சென்றிருக்கிறேன்...

    சுகப்பிரசவம் ஆனால் வாழைத்தார் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். எனக்கும் அது போல் செய்தார்கள். குழந்தையை எடுத்துக் கொண்டு ஏறினோம். தாயுமானவர் முன்பு வாழைத்தாரை கட்டி ஆட்டி விடுவார்கள். பின்பு அங்குள்ளவர்களுக்கு விநியோகம் செய்தோம்.

    சென்ற முறை சென்ற போது வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு ஒரு பெண்மணி வந்திருந்தார். எட்டு மாதமாவது இருக்கும்...

    ReplyDelete
  12. நாளாக ஆக வாயசு குறைஞ்சுகிட்டே போகறதில்ல? இந்த மலை ஏற்ற விஷப்பரிட்சை எல்லாம் போதும். நிறுத்திகுங்க!

    ReplyDelete
  13. இருமுறை வந்தபோதும் விரைவாக ஏறிஇறங்க முடிந்தது.

    அதேபோல இனிமேல் இருக்காது.

    ReplyDelete
  14. அன்பு கீதா, கவலைப் பட்டுக் கொண்டே இருந்தேன். மனவளம்,தெய்வபலம் உங்களுடன்
    இருப்பதால் தான் முடிகிறது.என்னுடைய26 வயதில் ஏறியது.
    அப்போ எல்லாமே விளையாட்டு வேடிக்கை.
    உங்களைப் பார்த்து இப்போ எனக்கு ஏக்கமா இருக்கு.:)
    உடல் நலம் தேவலையா.
    உச்சிப் பிள்ளையாரைத் தரிசித்த பாக்கியத்தையும் எழுதுங்கள்.சீக்கிரம்.

    ReplyDelete
  15. வாங்க கோவை2தில்லி,
    உங்க வயசிலே எல்லாம் ஓட்டம் தான் பிடிச்சிருக்கேன். நடையே கிடையாது!இப்போவும் நடையே இல்லை; ஊர்தல் தான்! :))))வாழைத்தாரை ஆட்டி எல்லாம் விடலை. ஸ்வாமி முன்னே வைச்சுட்டுக் கொடுத்துட்டார். எங்களோட சேர்ந்து நான்கு, ஐந்து பேர் வாழைத்தார் வைத்தார்கள். வயித்திலே குழந்தையோடு வந்தது பெரிய விஷயம் தான்.

    ReplyDelete
  16. வாங்க வா.தி. ஹிஹிஹி, அப்படீங்கறீங்க? அப்போ அடுத்த மலை என்னனு யோசிச்சு வைச்சுக்கறேன். :)))))

    ReplyDelete
  17. வாங்க மாதேவி, இறை அருளால் ஏறுவீங்க!

    ReplyDelete
  18. வாங்க வல்லி, தொலைபேசியில் நீங்க கவலைப்பட்டபோது என்ன இப்படிக் கவலைப்படறீங்கனே நினைச்சேன். அவரும் அதான் சொன்னார். ஆனால் ஏறும்போது தான் புரிஞ்சது! எப்படியோ பிள்ளையார் மேலே ஏத்திக் கீழேயும் இறக்கி விட்டுட்டார்!

    ReplyDelete