Tuesday, December 24, 2013

நைமிசாரண்யத்தில் ஒரு நாள் பகுதி 2 தொடர்ச்சி

மஹாவிஷ்ணுவின் சொரூபம் காடு ரூபமாகவும் வழிபடப் படுகிறது. நைமிசாரண்யமும் அப்படியே மஹாவிஷ்ணு ரூபமாகவே வழிபடப் படுகிறது.  இந்தக் காட்டில் கிட்டத்தட்ட 60,000 ரிஷி முனிவர்கள் வாழ்ந்து தவம் செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.  லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரத்தில் உள்ள இந்த ஊர் நைமிசார், நேமிசால் என்றெல்லாம் வழக்குமொழியில் அழைக்கப்படுகிறது.  நிம்ஹார் எனவும் அழைக்கின்றனர்.  கோமதி நதிக்கரையில் இடது பக்கக் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்குத் திருமங்கை ஆழ்வாரைத் தவிர, ஆதி சங்கரரும் வந்ததாய்ச் சொல்கின்றனர்.  சூர்தாசர் இங்கே வசித்து வந்ததாயும் சொல்கின்றனர். நைமிசாரண்யம் என்பது இருவகைகளில் உச்சரிக்கப்படுவதால் அதற்கேற்ப அதன் பொருளும் மாறுபடுகிறது.

நைமிஸ் அல்லது நைமிஷ் என அழைக்கப்படுகையில் பரம சிவனை வழிபட்ட பின்னர் பிரம்மாவின் மனோமயச் சக்கரம் உருண்டு உருண்டு வந்து இங்கே நின்றதாகவும், ரிஷி, முனிவர்கள் அதைத் தொடர்ந்து வந்து இந்த இடமே தவம் செய்யச் சிறந்த இடம் எனத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறுகின்றனர்.  சூரியனை விட ஒளி பெற்றுப் பிரகாசித்த அந்தச் சக்கரம் இங்கே வந்து நின்று பல தீர்த்தங்களையும் உண்டாக்கியதாயும் சொல்கின்றனர்.  இன்னொரு கூற்றின்படி தனவஸ் என்பவனின் படைகள் மொத்தமும் ஒரு நிமிஷத்தில் இங்கே அழிக்கப்பட்டதால் நிமிஷாரண்யம் என்பது நைமிசாரண்யம் என ஆயிற்று என்றும் கூறுகின்றனர்.  மஹாவிஷ்ணுவின் சக்கரம் வந்து நின்ற இடம் என்பதையும் முன்னர் பார்த்தோம்.  இங்கே முக்கியமான தீர்த்தம் சக்ரதீர்த்தம் தான் என்பதையும் பார்த்தோம்.

அதோடு ஶ்ரீலலிதை என்னும் மஹாதிரிபுரசுந்தரிக்கு இங்கே ஒரு சக்தி பீடமும் உள்ளது.  லலிதா சஹஸ்ரநாமாவளிகள் வசினி தேவதைகளால் தோன்றிய இடம் எனச் சக்ரதீர்த்தக்கரையைக் குறிப்பிடுகின்றனர்.  இப்படி அநேகச் சிறப்பு வாய்ந்த இந்த இடத்திலேயே வ்யாசகதி என்னும் வியாசரின் இருப்பிடம், சுகர் மற்றும் சூத முனிவர்கள் முறையே பாகவதமும், பாரதமும் ப்ரவசனம் செய்த இடம் என இருக்கின்றன.  அதோடு அஹி ராவணன், மஹி ராவணன் என்னும் இரு அசுரர்களை ஶ்ரீராமரும், லக்ஷ்மணரும் வதம் செய்யப் போகையில் அவர்கள் ஶ்ரீராம, லக்ஷ்மணர்களைப் பாதாளத்துக்குக் கொண்டு சென்றதாகவும் ஆஞ்சநேயர் அசுரர்களைக் கொன்று ஶ்ரீராம, லக்ஷ்மணர்களைத் தோளில் தூக்கி வந்தார் எனவும் சொல்கின்றனர்.  ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு காலகட்டத்திலும் நைமிசாரண்யம் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிய வருகிறது.

ஸ்வாயாம்புவ மனு பிரம்மாவின் உதவியுடன் மனித குலத்தை ஆரம்பித்து வைத்த இடமாகவும் கூறப்படுகிறது.  இப்படிப் பல சிறப்புகள் நிறைந்த இந்த இடம் உண்மையிலேயே பார்க்க வேண்டிய ஒன்றாகும்.


படங்கள் அடுத்த பதிவில் தொடரும்.

12 comments:

  1. எப்படி இருந்தாலும் பல கதைகளை உள்ளடக்கிய இடத்துக்கு சென்று வந்த திருப்தி இருக்குமே.அனுபவித்த சிரமங்களை எல்லாம் மறக்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நைமிசாரண்யம் பார்க்க வேண்டிய ஒன்றுதான்.
    படங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம் என்றது மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. எத்தனைச் சிறப்புகள். நம்பமுடியாத விவரங்கள்.

    ReplyDelete
  4. அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள்......

    படங்களுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. சக்ரதீர்த்த சிறப்புகள அறிந்துகொண்டோம்.

    ReplyDelete
  7. வாங்க ஜிஎம்பி சார், நைமிசாரண்யம் பல வருடங்களாகப் பார்க்க ஆசைப்பட்ட இடம். பார்த்ததில் மகிழ்ச்சியே! :)

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, நன்றி.

    ReplyDelete
  9. ஶ்ரீராம், எதை நம்ப முடியவில்லை? :)

    ReplyDelete
  10. நன்றி வைகோ சார்.

    ReplyDelete
  11. நன்றி வெங்கட்

    ReplyDelete
  12. நன்றி மாதேவி.

    ReplyDelete