Saturday, April 05, 2014

"தவம்" செய்த விமரிசனம்!

இந்த நாட்களில் படித்த புத்தகங்கள்

தவம் அநுத்தமா, 

மன்னன் மகள், சாண்டில்யன், 

குருக்ஷேத்திரம், ர.சு.நல்ல பெருமாள், 

ஆதலினால் காதல் செய்வீர், சுஜாதா, 

அரங்கேற்றம், சுஜாதா, 

கொலை அரங்கம், சுஜாதா, 

இருள் வரும் நேரம், சுஜாதா, 

நில்லுங்கள் ராஜாவே, சுஜாதா.


தவம் எழுதிய அநுத்தமா பெரும்பாலும் குடும்பக் கதைகளே எழுதுவார். கல்யாணம் ஆகிப் புகுந்த வீடு சென்று அங்கே மாமனார், மாமியார், கணவன் ஆதரவோடு எழுத ஆரம்பித்தவர்.  இவர் எழுதியவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது நைந்த உள்ளம். ரொம்பச் சின்ன வயசில் படிச்சேன். பள்ளி மாணவியாக இருந்தப்போப் படிச்சது. அப்புறமா விபரம் தெரிஞ்சுப் பலமுறை நூலகத்தில் வாங்கிப் படிச்சிருக்கேன். ஒவ்வொரு முறையும் புதுசாப் படிக்கிறாப்போல் இருக்கும்.  இந்த தவம் கதையும் ஒரு முறை படிச்சிருக்கேன். மீண்டும் இப்போப் படிக்கச் சந்தர்ப்பம் கிடைச்சது. உடல்நலமில்லாத கணவனை அழைத்துக்கொண்டு  ஆறுமுகனூருக்கு வரும் கதாநாயகி நம்புவது இறைவனையும், அவன் நிகழ்த்தும் அற்புதங்களையும்.  அதுக்காக மருத்துவம் தேவையில்லைனு ஒதுக்கவெல்லாம் இல்லை.  தேவையான மருத்துவ உபகரணங்களோடு முதலில் மருத்துவரான உடன்பிறந்த தம்பியோடு வருகிறாள்.  பின்னால் தம்பிக்கு அந்தக் கிராமம் பிடிக்கவில்லை என்றதும், போகச் சொல்லிவிட்டு ஊராரின் துணையுடன் கணவனைப் பார்த்துக் கொள்கிறாள். ஆறுமுகனூரில் வாழும் மக்கள் அங்கே கோயிலுக்கு வரும் பக்தர்களைச் சார்ந்தே வாழ்கின்றனர்.  பலமுறை அங்கே வந்து போன காந்தாவுக்கு ஊரின் நிலைமையும் மனதை உறுத்த கணவனின் வைத்தியம் மட்டுமில்லாமல் கூடவே ஊர் மக்களின் மனப்போக்கையும் மாற்றுகிறாள்.

கணவனுக்குத் தன் உடல் நிலையின் உண்மை நிலை புரியும்.  மருத்துவர்கள் கெடு வைத்திருக்கின்றனர்.  ஆனால் மனைவிக்குத் தெரியக் கூடாது என மறைக்கிறான்.  மனைவி இன்னமும் விபரம் தெரியாத இல்லத்தரசி என்று அவர் எண்ணம். இதை எப்படி எதிர்கொள்வாளோ என்ற கவலை.  ஆனால் மனைவியோ கணவன் நிலையைப் பூரணமாக அறிந்து கொண்டாலும், தான் அறிந்து கொண்டது போல் காட்டவில்லை.  ஒருவித அலக்ஷியம் காட்டியே நடந்து கொள்கிறாள். இது அவள் அறியாமையா என்றால் இல்லை. மனோதிடம் மிக்க காந்தா தன் கணவனுக்கு அதைரியத்தை உண்டு பண்ணக் கூடாது என்பதற்காகவே அவள் தான் ஒரு முட்டாள் போலவும் கடவுளை மட்டுமே நம்புவதாகவும் காட்டிக் கொள்கிறாள்.  கணவன் தன் வயம் இழந்து மனைவியை நாடும்போதெல்லாம் அதை  நாசூக்காகத் தவிர்க்கிறாள்.  அதோடு கணவன் உடல்நிலை மிக மோசமான நிலைக்குப் போகையில் இன்னொரு தம்பியையும் வரவழைத்து விடுகிறாள்.  சில நாட்களுக்கு அவர் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார். சுறுசுறுப்பான காந்தா ஊராரின் மனதிலும் விரைவில் இடம் பிடிக்கிறாள்.  ஊராரின் சோம்பேறித்தனத்துக்கும் மெத்தனத்துக்கும் காரணம் வறுமையே என்பதை அறிந்து கொண்டு கோவிலை ஒட்டி வாழ்க்கை நடத்தும் மக்களின் சுகாதாரத்தையும் ஒழுங்கு செய்து அவர்கள் வாழ்க்கைப் போக்கை மாற்றுகிறாள்.

இதற்கு நடுவே வெறும் மருந்தும், கவனிப்பும், திறமையான வைத்தியரின் அண்மையும் மட்டுமே போதாது என்பதைப் புரிந்து கொண்டு தன் கணவனையும் ஒத்துழைக்க வைத்து அவன் மனநிலையையும் மாற்றிக் குணப்படுத்த முயலும் காந்தா தன் இறை நம்பிக்கை மூலம் கிட்டத்தட்ட ஒரு தவமே செய்கிறாள்.  அந்த ஊர் முருகனுக்குக் காவடி எடுக்க முடிவு செய்து அதற்காகக் கடுமையான சட்டதிட்டங்களுடன் கூடிய விரதத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். அப்போது திடீரெனக் கணவனின் உடல்நலம் மோசமடையத் தற்செயலாக வந்தது போல் காந்தாவின் சொந்தத் தம்பி தன் மனைவியுடனும், அக்கா காந்தாவின் குழந்தைகளுடனும் அங்கு வந்து சேர்கிறார்.  எவ்வளவு கடினமான நிலையிலும் தன்னுடைய மனோதிடம் குன்றாமல், விரதமும் பங்கமுறாமல், கணவனிடம் தன்னையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க காந்தா தவிக்கும் தவிப்பு.

காந்தாவின் கணவர் உடல் நலம் தேறுகிறதா?  காந்தாவின் தவம் பலிக்கிறதா? காவடி எடுத்தாளா?  சொந்த ஊருக்குத் திரும்பிப் போனாளா?  புத்தகத்தில் படியுங்கள். :)))

9 comments:

  1. வெள்ளித் திரையில் காணுங்கள் என்பது போல 'புத்தகத்தில் படியுங்கள்' என்று சொல்லி விட்டீர்கள். எங்கே போக புத்தகத்துக்கு? எனக்கு மட்டுமாவது தனி மெயிலில் முடிவைச் சொல்லி விடுங்கள், ஆமாம்!

    அநுத்தமா கதை ஏதோ ஒன்றே ஒன்று படித்திருக்கிறேன். அதுவும் எது என்பது நினைவில்லை. நிறைய புத்தகங்கள் வாசித்துள்ளீர்கள். ஏது நேரம்? பவர் கட் உபயம்?

    ReplyDelete
  2. ஆமாம், பவர் கட் உபயத்தில் தான், படிச்சேன். :))) முடிவைச் சொல்ல மாட்டேனே! இன்னிக்கு "அம்மா" தயவில் மின்சாரம் இதுவரை போகலை! :)))))

    ReplyDelete
  3. அநுத்தமா கதை என்றாலே கற்கண்டுதான். நேரில் பார்க்கவும் நன்றாக இருப்பார். என் சிநேகிதிக்கு சம்பந்தி உறவு. படு கம்பீரம். பெரிய குடும்பம். உடல் நலிவுற்று இருந்த போதுதான் பார்க்கப் போக முடியவில்லை. நல்லதொரு கதையைத் தந்தற்கு மிக நன்றி கீதா.

    ReplyDelete
  4. க்கும்... புத்தகத்தை வாங்க வேண்டும்...

    க்ர்ர்ர்ர்ர்ர்.... ஹிஹி...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  5. புத்தக விமர்சனத்திற்கு நன்றி அம்மா!

    ReplyDelete
  6. வாங்க வல்லி, நான் நேரில் எல்லாம் பார்த்ததில்லை. :)) ஆனால் அநேகமாக இவரோட எல்லாக் கதைகளையும் படிச்சிருக்கேன். ஒண்ணு, ரெண்டு பிடிக்காது. என்றாலும் விட்டதில்லை.

    ReplyDelete
  7. புத்தகம் நூலகங்களில் கிடைக்கும் டிடி. கடைகளில் கிடைக்குதானு தெரியலை.

    ReplyDelete
  8. நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  9. அநுத்தமா அவர்களின் புத்தகங்களில் சில படித்த நினைவு. இது படித்ததாக நினைவில்லை.

    நூலகத்தில் இருக்கிறதா பார்க்கிறேன்.

    ReplyDelete