Saturday, November 01, 2014

இதுக்குத் தான் இரண்டாம் பரிசு!

இரண்டாம் பரிசு


மேற்கண்ட சுட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருக்கும் செய்தியைக் காணலாம்.  விமரிசனம் கீழே!  இந்தக் கதையைக் குறித்து நிறையப் பேச வேண்டியது இருக்கிறது. இந்தக் கணினி யுகத்தில் இப்படி ஒரு கணவன், மனைவியா என்ற ஆச்சரியம் இன்னும் எனக்கு விலகவில்லை. ஆனால் விமரிசனத்தில் இதைக் குறிப்பிடவில்லை. என்னதான் மனைவி தனக்கு மட்டும் சொந்தம் என நினைத்தாலும், வெளியே போகக் கூடக் கணவன் உத்தரவோடு அவன் தாய் துணையோடுதான் போகணும்னு நிபந்தனைகள் இருந்தால் அதை அந்தப் பெண், பிறந்த வீட்டில் சுதந்திரமான போக்குடனும், சிந்தனைகளுடனும், தைரியத்துடனும் இருந்தவள் எப்படி இங்கே பெட்டிப்பாம்பாக அடங்கி நடந்தாள்?  அதுவும் கணவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் எப்படி இருந்தாள்?  நினைக்க நினைக்க ஆச்சரியம் தான்.

மனைவிக்குப் பொன்விலங்கு பூட்டி வீட்டில் அடைத்து வைக்கும் கணவனைக் குறித்த கதை இது.  சகலகலாவல்லியான கல்பனா திருமனத்துக்குப் பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்க வேண்டி வருகிறது.  அவளுக்கு இதுதான் பிடிக்கும் என்று அவள் கணவன் தானாக முடிவெடுத்து அவளைக் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைக்கிறான். வீட்டில் அடைபட்ட கிளியான அவளுக்குத் துணையாகவும் சில பச்சைக்கிளிகள் கூட்டில் அடைக்கப்பட்டு வளர்கின்றன. சுதந்திரமாகப் பறக்கும் பறவைகளைக் கூட்டில் அடைப்பதே எனக்குப் பிடிப்பதில்லை. கல்பனா கோயிலுக்குப் போனால் கூடத் துணைக்குத் தன் தாயை அவள் கணவன் அனுப்புகிறான். இத்தனைக்கும் கல்பனா திருமணத்துக்கு முன்னர் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளே!  வங்கியில் வேலை செய்த கல்பனா, வங்கிக்கும் நீண்ட விடுமுறை போட்டுவிட்டுக் கணவன் விருப்பப்படி வீட்டுச் சிறையில் வாயே திறக்காமல் இருக்கிறாளாம். கோபமாக வருகிறது! :( அதோடு அவள் வங்கி வேலையில் இருந்தவள் என்பது தெரியாமல் அவள் கணவன் கல்யாணம் செய்து கொண்டிருக்கவும் முடியாது.  இப்படி இருக்கையில் எவ்விதம் அவன் அவளை அவ்வாறு நடத்தினான் என்பது வியப்பே!


கணவன் வரையில் மனைவியை மிகவும் சந்தோஷமாக ராணி போல் வைத்திருப்பதாக எண்ணம். எல்லா வீட்டு வேலைகளுக்கும் ஆட்கள்.  மனைவி எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சுகமாகப் புத்தகங்கள் படித்துக்கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், கிளிகளுக்கு உணவிட்டுக் கொண்டும் இருந்தாலே போதும் என்பது அவன் எண்ணமாக இருக்கலாம்.  ஆனால் இதுவா உண்மையான சுகம்? என்னதான் வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்தாலும் அக்கம்பக்கத்தினருடன் பேசிப் பழகவோ, தன் வீட்டுக்கு வேண்டிய பொருட்களைத் தானே தேர்ந்தெடுத்து வாங்கவோ, சுதந்திரமாகக் கடை, கண்ணிகளுக்கும் கோயிலுக்கும் போவதற்கோ, பிறந்த வீட்டுக்குப் போவதற்கோ கூடக் கணவனின் அனுமதியை எதிர்பார்ப்பது என்றால் கொடுமையாக இல்லையோ?  பிறந்த வீட்டிற்கு நினைத்த நேரம் போக முடியாது;  போகவும் கூடாது.  ஆனால் முன் கூட்டித் திட்டமிட்டுக் கணவனிடம் சொல்லிவிட்டுப் போய் வரலாமே!  அதுவும் இல்லை.  ஆனால் இதற்குக் காரணமே ஒரு வகையில் கல்பனாவே தான்.


கணவன், மனைவிக்குள் ஒளிவு, மறைவு இல்லாமல் இருந்தால் நல்லது. தன்னைக் குறித்த அனைத்தையும் மனைவியிடம் தெரிவிக்கும் கணவன் அதே போல் மனைவியிடமும் அவள் ஆசைகள், தேவைகள், திறமைகள் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனதுமே முதல் ஒரு வாரத்திற்குள்ளாக இது எல்லாம் நடந்து முடிந்து விட வேண்டும். இப்போதெல்லாம் நிச்சயம் ஆனதிலிருந்தே  ஆணும், பெண்ணும் சேர்ந்தே தான் சுற்றுகிறார்கள்.  இதுவும் அவள் கணவனுக்குப் பிடிக்காது போலும்;  அப்படிப் போயிருந்தால் ஓரளவுக்குக் கல்பனாவின் விருப்பு, வெறுப்புகள் பிடிபட்டிருக்குமே! மனைவியின் ஆசைகளை, விருப்பங்களை மதிக்க வேண்டும்.  அவளை கொலு பொம்மை போல் கருதக் கூடாது.  அலங்கரித்து வீட்டில் அமர்ந்து கொண்டு அழகு பார்க்க மட்டும் மனைவி அல்ல.  கணவனின் முதல் நண்பனாக மனைவியும், மனைவியின் முதல் நண்பனாகக் கணவனும் இருத்தல் வேண்டும். சொல்லப் போனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து இருவரின் விருப்பமும் தெரிந்து கொண்டு பின்னரே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம்.  கணவன் கேட்காவிட்டாலும் கல்பனாவே தன்னைக் குறித்துக் கணவனிடம் சொல்லி இருக்கலாம். அதைச் செய்யவில்லை அவள்.  என்ன படித்து என்ன? கல்லூரியில் தைரியமான பெண்ணாகப் பெயர் வாங்கினதெல்லாம் இங்கே கணவனுக்கு அடிமையாக இருப்பதற்கா? தன்னுடைய கோழைத்தனத்தை நினைத்தல்லவோ கல்பனா வெட்கப்பட வேண்டும்?  கணவனைக் குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம்?  தன் மனைவியை மிகவும் நேசிக்கும் சிவராமன் அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் என எண்ணுகிறான்.


ஒரு சமயம் சிவராமனுக்கு அலுவலக வேலையாக வடமாநிலத்தில் உள்ள ஹரித்வார் செல்ல நேர்கிறது.  அப்போது தில்லியில் ரயில் மாறும் முன்னர் பெட்டி, படுக்கைகள், அடையாள அட்டை உட்பட அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு மொழியும் புரியாமல் நிற்கும் சிவராமன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுக் கொண்டு போகப்படும்போது  தில்லியில் வக்கீல் தொழில் புரியும் கல்பனாவின்   சிநேகிதி நந்தினி அவனைப் பார்க்கிறாள்.  நந்தினியின் வண்டியும் போலீஸ் வண்டியும் சிக்னலில் நிற்கும்போது பார்க்க நேரிடுகிறது.  கல்யாணத்தின் போதே நந்தினி கவனித்த சிவராமன் கன்னத்தில் உள்ள மச்சத்தை வைத்து அடையாளமும் கண்டுகொள்ளுகிறாள்.  ஆனாலும் சந்தேகம்.  நிவர்த்தி செய்து கொள்ளக் கல்பனாவுடன் பேச வேண்டும்.  ஆனால் அவள் கைபேசி எண் இல்லை; அங்கங்கே விசாரித்து அவளுடைய வீட்டு எண்ணை வாங்கித் தொடர்பு கொண்டு நாசூக்காக விசாரிக்கிறாள் நந்தினி.  ஒரு மாதிரியாக நந்தினிக்குக் கல்பனாவின் நிராதரவான நிலைமை புரிய மன வருத்தம் கொள்கிறாள்.

கல்பனாவைத் தன் ஆதர்சமாகக் கொண்டிருந்த நந்தினிக்குக் கல்பனாவின் தற்போதைய நிலையை எப்படியானும் மாற்றவேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை. பெண் சுதந்திரம் என்று இங்கே பேசப்பட்டாலும் அதற்காக அத்துமீறி நடக்கும்படியும் சொல்லவில்லை. கணவனோடு இணையாகவே அவள் கருதப்பட வேண்டும்.  நந்தினியின் எண்ணம் அதுவே! கல்பனாவின் கணவன் நிலை குறித்து அவளிடம் சொல்லி அவளைப் பதட்டப்பட வைக்காமல் நந்தினியே தன் வருங்காலத் துணைவன் துணையோடு சிவராமனை மீட்கிறாள்.  சிவராமனுக்கோ இரண்டு நாட்கள் சிறைவாசம் நிறைய மாற்றத்தைத் தந்திருக்கத் தன் தவற்றை உணர்கிறான்.  அதற்கேற்ப நந்தினி அவனைக் கல்பனாவிடம் பேச வைத்து அவனுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து உதவி செய்வதோடு, கல்பனாவின் திறமைகளையும் பட்டியலிடுகிறாள்.  தனக்கே தெரியாமல் தன் மனைவிக்குள் இத்தனை திறமைகளா என வியந்த சிவராமன் தன் மனைவியை வீட்டுப் புறாவாகத் தான் நடத்தியது குறித்தும் வருந்துகிறான்.

நந்தினியின் உதவியால் தன் அலுவலக வேலையை முடிக்க ஹரித்வாருக்கும் சிவராமனால் செல்ல முடிந்தது.  அதோடு தன் மனைவி கல்பனாவுக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும் என்ற செய்தியையும் நந்தினியின் மூலம் அறிந்து கொள்கிறான்.  தான் எதுவுமே மனைவியைக் குறித்துத் தெரிந்து கொள்ளாமல் மூன்றாம் மனிதர் மூலமாய்த் தெரிந்து கொள்வதில் அவனுக்கு உள்ளூர அவமானமும், வெட்கமும் நேரிடுகிறது.  அதனால் தான் ஹரித்வாரிலிருந்து திரும்புகையில் கல்பனாவுக்குப் பிடித்த பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை வாங்கியதோடு அல்லாமல், தனக்கு உதவி செய்தவள் "நந்தினி" என்பதையும் அந்த இனிப்பின் பெயர் நந்தினி என்றிருந்ததைச் சுட்டிக்காட்டித் தெரியப்படுத்துகிறான். எல்லாவற்றையும் விட இனிப்பான செய்தியாகக் கல்பனாவுக்கு இனி பிறக்க விருக்கும் குழந்தையும் பெண்ணாக இருந்தால் நந்தினி என்னும் பெயரை வைக்க விரும்புவதாக நன்றியுடன் கூறும் சிவராமன் கூண்டுக்கிளிகளையும் பறக்க விடச் சொல்கிறான்.  கல்பனா இனி வேலைக்குச் செல்லலாம் என்றும் தான் அவளைக் குறித்து அறியாமல் இருந்தது குறித்தும் வருந்துகிறான். இரண்டு நாட்கள் சிறைவாசம் தன் கணவனைப் பெருமளவு மாற்றி இருப்பதிலும் தன்னால் சொல்ல முடியாத தன் அருமை, பெருமைகளை எடுத்துச் சொன்ன தன் சிநேகிதி நந்தினிக்கும் கல்பனா மனதுக்குள் பாராட்டுத் தெரிவித்திருக்க வேண்டும்.  தெரிவித்திருப்பாள் என நம்புவோம்.  இப்போதாவது கல்பனா தானும் தன்னைக் குறித்துத் தன் கணவனிடம் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்க வேண்டும் என நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை. அது கொஞ்சம் குறையாகவே இருக்கிறது.

எல்லாவற்றையும் மனதுக்குள் பூட்டி வைத்து விட்டுக் கணவன் தன்னை மதிக்கவில்லை; தனக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லை என்றெல்லாம் சொல்வது மிகக் கொடுமை.  சுதந்திரம் பிறர் கொடுத்துப் பெறும் ஒன்றல்ல.  நாம் நாமாக இயல்பாக இருப்பதே உண்மையான சுதந்திரம். மாற்றங்கள் தேவை தான்.  ஆனால் அவை இரு மனதிலும் தோன்றி ஓர் ஒத்திசைவோடு நடைபெற வேண்டும்.  அதற்கு இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும். ஆரம்பத்திலேயே கணவன் தனனை நடத்தும் விதம் சரியில்லை என்பதைக் கல்பனா இதமாகச் சுட்டிக் காட்டி இருந்தால் சிவராமனுக்கும் புரிந்து இருக்கும் அல்லவா?  ஏனெனில் மனைவியை நேசிக்கும் கணவன் தானே!  நேசம் அதீதமாகப்போய்விட்டது.  அது தன் மனைவிக்கு வசதிகள் செய்து கொடுக்கிறோம் என்னும் பெயரில் அவளைச் சிறைப் பறவையாக ஆக்கிவிட்டது.


குறிஞ்சி மலர் பனிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் பூக்கும்.  அவை பூக்கையில் தான் அவற்றைப் பார்க்க முடியும்.  ஆனால் அன்பு அப்படி அல்ல. ஊற்றுப் போல் சுரந்து கொண்டே இருக்கும்.  வற்றாத ஊற்று.  பெரு வெள்ளத்தின்போது அடித்துக் கொண்டு வரும்  மணலால் அந்த ஊற்றுக்கண் அடைபடாமல் பார்த்துக் கொண்டாலே போதும்.  இரு வேறு மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட பெண்களை வைத்துக் கதை பின்னி இருக்கும் ஆசிரியர் கல்பனாவின் மேல் நமக்கெல்லாம் இரக்கம் தோன்ற வேண்டும் என நினைத்திருந்தால் ம்ஹூம், எனக்கு இரக்கம் தோன்றவே இல்லை.  ஏனெனில் அவள் குணாதிசயங்கள் அப்படி இல்லையே!  கல்பனா தன் வாயைத் திறக்காமல் இருந்துவிட்டுக் கணவன் தன்னை ஒழுங்காக நடத்தவில்லை என எதிர்பார்ப்பதில் நியாயம் என்பதே இல்லை. கணவன் புரிந்துகொள்ளும்படி கல்பனா நடந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. :)

ஆனாலும் இந்தக் கதையின் மூலம் இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி விருப்பு, வெறுப்புகளை அலசிக் கொண்டு பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தால் அதுவே கதைக்கு மாபெரும் வெற்றி!  இன்றைய காலகட்டத்துக்கு ஏற்பக் கதையை ஆசிரியர் புனைந்திருந்தாலும் வழக்கமான ஆணாதிக்க மனப்பான்மையையே இங்கேயும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.  ஒரு விதத்தில் சிவராமன் ஆணாதிக்கம் கொண்டவனாக இருந்தாலும் மனைவி மேல் அளவு கடந்த பாசம் கொண்டிருப்பதால் எளிதில் மனைவியால் அவனை மாற்றி சகஜ நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்பதும் தவிர்க்க முடியா உண்மை. கல்பனாவின் மேல் உள்ளூர அனுதாபத்தைத் தோற்றுவிக்கும் விதமாக எழுதியுள்ள ஆசிரியரின் கதை சொல்லும் திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும்.
 .

26 comments:

  1. மனம் நிறைந்த பாராட்டுகள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இதைத் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  2. நாளை முதல் அவ்வப்போது ஒருசில சாதனையாளராக தோன்றப்போகும் தங்களுக்கு இன்றே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)

    அன்புடன் கோபு

    ReplyDelete
  3. வாழ்த்துகள்.

    பூவனம் பக்கமும் உங்களைக் காணோமே! :)))))))

    ReplyDelete
  4. இங்கும் என்னை வர்ட் வெ. கேட்கவில்லை!

    ReplyDelete
  5. வாங்க வைகோ சார், வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. :)

    ReplyDelete
  6. வைகோ சார், என்னையும் சாதனையாளராக ஆக்கிய பெருமை உங்களைத் தான் சாரும்! :)

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், இன்னும் எந்தப் பதிவுக்கும் போகலை. பூவனத்தில் என்ன விசேஷம்?

    ReplyDelete
  8. பூவனத்தில் பொ.செ.

    ReplyDelete
  9. பாராட்டுகள்
    மேலும் பல பரிசில்கள் கிட்ட
    எனது வாழ்த்துகள்

    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  10. தங்கள் ஆற்றுப்படுத்தலுக்கு நன்றி, ஸ்ரீராம்.

    அங்கு வந்தும், எங்கும் வந்தாலும்
    தன்னைச் சுற்றியே சிந்தனை சுழல்வது ஒரு பரந்துபட்ட பார்வையை சுருக்கி விடுகிறது. போலும்..

    நந்தினி என்றதும் தங்களுக்கு பொ.செ. நினைவு வந்தது தான் பொ.செ.யின் வெற்றி..

    ReplyDelete
  11. //அங்கு வந்தும், எங்கும் வந்தாலும்
    தன்னைச் சுற்றியே சிந்தனை சுழல்வது ஒரு பரந்துபட்ட பார்வையை சுருக்கி விடுகிறது. போலும்.//

    புரியவில்லை ஸார்!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அம்மா!.. தங்கள் விமரிசனத்தை பாராட்ட வார்த்தைகளில்லை.. எவ்வளவு அருமையாக, ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தையும் பதிவு செய்திருக்கிறீர்கள்!...தங்கள் சாதனைகள் தொடர வேண்டுகிறேன்!.

    ReplyDelete
  13. எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. தகவலுக்கு நன்றி ஶ்ரீராம். போய்ப் பார்த்தேன். எல்லோருக்கும் இளமையில் பொ.செ. படித்த நினைவுகள் வந்தாப்போல் எனக்கும் அந்த நினைவுகளே வந்தன! :)))))

    ReplyDelete
  15. மற்றபடி பொன்னியின் செல்வனை எத்தனை பேருக்குப் படிச்சுச் சொல்லி இருப்பேன் எனக் கணக்கு இல்லை. :) அனைவரும் வந்தியத் தேவன் பழியிலிருந்து மிண்டு வருவதற்குப் பிரார்த்தனைகள் பண்ணி இருக்காங்க. அந்த அளவுக்கு ஈடுபாட்டோடு கதையைக் கேட்பாங்க.

    ReplyDelete
  16. வாங்க காசிராஜலிங்கம், வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  17. வாங்க ஜீவி சார், பொன்னியின் செல்வனின் எழுதிய தாக்கத்தில் தானோ அல்லது பொ.செ.வின் குமாரன் என்பதாலோ கல்கி அவர்கள் தன் மகனுக்குக் கூட ராஜேந்திரன் என்ற பெயரை வைத்தார். எங்க உறவினரில் பலரும் பொ.செ.படிச்சுட்டு நந்தினி என்னும் பெயரை அவங்க பெண்ணுக்கு வைச்சுப் பார்த்திருக்கேன். :)

    ReplyDelete
  18. /அங்கு வந்தும், எங்கும் வந்தாலும்
    தன்னைச் சுற்றியே சிந்தனை சுழல்வது ஒரு பரந்துபட்ட பார்வையை சுருக்கி விடுகிறது. போலும்.//

    புரியவில்லை ஸார்!//

    ஶ்ரீராம்,ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி, வி.வி.சி.

    ReplyDelete
  19. வாங்க பார்வதி , சாதனையெல்லாம் எதுவும் பண்ணலைனு நல்லாவே தெரியும்.நடுவருக்கு என் பேரில் இருக்கும் இருக்கும் அன்பினால் சில பரிசுகள் கிடைத்திருக்கின்றன என்பது தான் உண்மை. :))))) ஏனெனில் என் எழுத்து நடை அவர் நன்கறிந்தது. படிக்கும்போதே புரிந்திருக்கும் என எண்ணுகிறேன். :))))

    ReplyDelete
  20. நன்றி துளசிதரன் தில்லையகத்து. ரொம்ப நாளாக் கேட்கணும்னு ஒரு எண்ணம். இது என்ன பேருங்க? துளசிதரன் தில்லையகத்து??? தில்லையகத்து வருவதற்கு என்ன காரணம்? முடிஞ்சால் சொல்லுங்க.

    ReplyDelete
  21. @ ஸ்ரீராம்

    உங்களுக்கானதில்லை, அது.

    கீதாம்மாவின் ஹிஹிஹிஹிஹி கூட அது என்னன்னு சொல்லலியா?

    இந்த நகைச்சுவை உணர்வு கீதாம்மாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது.

    விவிசிக்கு தான் கொஞ்சம் மேல்மாடத்தைக் கசக்கிக்கணும்.
    விட்டு விடுதலையாகி சிறகடித்து அடுத்த பதிவுக்கு அவர் போவதற்குள் வந்து சொல்ல வேண்டிய அவசரமும் இருக்கு பாருங்க... அதான்!

    ReplyDelete
  22. //விவிசிக்கு தான் கொஞ்சம் மேல்மாடத்தைக் கசக்கிக்கணும்.
    விட்டு விடுதலையாகி சிறகடித்து அடுத்த பதிவுக்கு அவர் போவதற்குள் வந்து சொல்ல வேண்டிய அவசரமும் இருக்கு பாருங்க... அதான்!//

    நிதானமாக் கசக்கிண்டு சொல்லுங்க. ஒண்ணும் அவசரம் இல்லை. எனக்கு அடுத்த பதிவு உடனே போடும் அளவுக்கு இப்போ நேரமெல்லாம் இல்லை. அவ்வப்போது தான் இணையத்துக்கே வர முடிகிறது. ஒரு சில நாட்கள் கொஞ்சம் நேரம் கிடைக்கும். :))))

    ReplyDelete
  23. //விவிசி//

    "வி"ட்டு "வி"டுதலையாகி "சி"றகடித்து

    அட!

    ReplyDelete
  24. எல்லாவற்றையும் மனதுக்குள் பூட்டி வைத்து விட்டுக் கணவன் தன்னை மதிக்கவில்லை; தனக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லை என்றெல்லாம் சொல்வது மிகக் கொடுமை. சுதந்திரம் பிறர் கொடுத்துப் பெறும் ஒன்றல்ல. நாம் நாமாக இயல்பாக இருப்பதே உண்மையான சுதந்திரம். //

    உண்மை, அழகாய் ஆணித்தரமாய் கருத்தை சொன்னீர்கள் கீதா.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. ஶ்ரீராம், விவிசிக்கு நீங்க சொல்லும் அர்த்தம் இல்லையாக்கும். உங்களுக்கும் தெரியலையா? ஜாலிதான்! :)

    ReplyDelete
  26. வாங்க கோமதி அரசு, நீண்டநாட்கள் கழித்து வந்ததுக்கும், கருத்துச் சொன்னதுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete