Sunday, January 18, 2015

பயணங்கள் முடிவதில்லை! 4


புதிதாக வந்திருக்கும் ஶ்ரீராமர் கோயில்


தனுஷ்கோடியில் புதிதாகக் கடந்த பத்து வருடங்களில் ஏற்படுத்தி இருக்கும் ஶ்ரீராமர் கோயில்.  நாங்கள் முதல்முறை போனபோது அங்கே ஒன்றும் இல்லை.  ஒரே மௌனம் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தது.  கடல் கூட அப்போது ஓசையிடப் பயந்தாற்போல் மெல்லவே அலைகளைக் கரைக்குத் தள்ளிக் கொண்டிருந்தது.  ஏற்கெனவே பயங்கரமான அலைகள் வீசி தனுஷ்கோடிக்குள் நுழைந்ததில் சமுத்திர ராஜன் இப்போது அங்கே ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்டதால் கொஞ்சம் கொஞ்சமாய் உள்வாங்க ஆரம்பித்திருந்தான்.

என்றாலும் 1964 புயலுக்குப் பின்னர் எப்போது கடல் உள் வாங்கும், எப்போது உள்ளே நுழையும் எனச் சொல்ல முடியாமல் இருந்தது. அங்கே போகவே சில காலங்கள் தடை இருந்தது.  புயலுக்குப் பின்னர் வாழத் தகுதியற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டும் தைரியமாக ஒரு சில மீனவக் குடும்பங்கள் மட்டும் அங்கே தங்கி இருந்தன.  அது வரையிலும் "குட்டி சிங்கப்பூர்" என அழைக்கப்பட்ட இடம் இன்று வெறுமையாக இருந்தது.  ஊரே மூழ்கி விட்டது.  99 ஆம் வருடம் நாங்கள் போனபோது கூடக் காலையிலேயே சென்று விட்டுப் பகல் 12 மணிக்குள் திரும்பி விட வேண்டும் என்று நிபந்தனைகள் எல்லாம் இருந்தன.  அப்போது சென்றது ராணுவ ட்ரக் போன்றதொரு வண்டியில். ஆனால் அது தண்ணீரிலும் ஓடும், மணலிலும் ஓடும், சாலையிலும் ஓடும். பல இடங்களில் நீரில் செல்ல வேண்டி இருந்தது. ஏறுவதும் இறங்குவதும் கஷ்டம் வேறே.  நாங்கள் ஒரு பதினைந்து பேர் மட்டும் புரோகிதர்கள் இருவரோடு, புரோகிதரே ஏற்பாடு செய்த வண்டியில் பயணம் செய்தோம். ஆனால் பதினாறு வருடங்களில் எல்லாம் மாறி விட்டது.


ராமர் இருந்தால் அனுமன் இல்லாமலா? ஜெய் பஜ்ரங்பலி!



அனுமன் சிவாம்சம் ஆச்சே!  சிவனும் இருக்க வேண்டாமா?



  மிதக்கும் கற்களைப் பார்வைக்காக வைத்திருக்கின்றனர்!


இப்போது எங்கே பார்த்தாலும் கடைகள், கடைகள்!  நாங்கள் ராமேஸ்வரத்துக்குள் நுழைந்து தனுஷ்கோடிக்குச் செல்ல வேண்டி பயணிகளை அழைத்துச் செல்லும் இடம் வந்தால் அங்கே அடுத்தடுத்து மாக்சி கேப் எனப்படும் சிற்றுந்துகள்.  வரிசையாகச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வண்ணமும், பார்த்தவர்களைத் திரும்பக் கொண்டு வந்து விட்ட வண்ணமும் இருந்தன.  இப்போது இது அங்கிருக்கும் உள்ளூர்க்காரர்களுக்கு நல்லதொரு வியாபாரமாக ஆகி இருக்கிறது.  இதன் மூலம் ஒரு நாளுக்கு ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம். கூட்டம் வேறே தாங்க வில்லை.  99 ஆம் வருடம் போனபோது நாங்கள் பதினைந்து பேரைத் தவிர வேறே அங்கே ஈ, காக்காய் இல்லை.

ஆனால் இப்போதோ  போகவே இவ்வளவு கூட்டம்!  எதிர்பார்க்கவே இல்லை! நாங்க காரில் வந்து இறங்கியதும் எங்க வண்டி ஓட்டுநர் இங்கேருந்து அந்த வண்டியில் தான் போகணும்னு சொல்லி எங்களை அனுப்பி வைச்சார்.  அப்போது தான் திரும்பி வந்த ஒரு வண்டியில் ஏறப் போனோம்.  ஆனால் அந்த ஓட்டுநர் தடுத்து நிறுத்தி நாங்க நாலு பேர் மட்டும்னா ஒருத்தருக்கு ஐநூறு ரூபாய் ஆகும் என்றும் மத்தவங்க வரும் வரை காத்திருக்குமாறும் சொன்னார்.  அப்படியே இன்னும் பத்துப் பேர் வந்தனர்.  இப்போது மொத்தப் பணம் பங்கு பிரிக்கப்பட்டு ஒருவருக்கு நூற்றைம்பது ரூபாய் கேட்டார்.  கொஞ்ச நேரம் பேரம் பேசிப் பார்த்தோம்.  நூற்றைம்பதுக்குக் குறைய மாட்டேன்னு சொல்லிட்டார். சரினு ஏறிக் கொண்டோம்.  வண்டி கிளம்பியது. 

14 comments:

  1. ம்.... தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. தனுஷ்கோடி மாறிவிட்டதாக இரண்டுவருடம் முன்பு சென்றுவந்த அப்பா கூறினார்! நான் 2005ல் சென்றேன்! அப்போதும் அவ்வளவு கூட்டம் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. அப்போக் கடந்த ஐந்தாறு வருடங்களாகத் தான் கூட்டமோ?

      Delete
  3. கோவையில் அனுமன் கோவிலில் மிதக்கும் கல்லை பார்த்தேன்.
    ராமர் பாலம் கட்ட அனுமன் பயன் படுத்திய மிதக்கும் கல் என்று ஒரு தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்து இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, அப்படியா? நான் இதுக்கு முன்னால் போனப்போ ராமேஸ்வரத்திலேயே பார்த்தது இல்லை.

      Delete
  4. பயணத்தை தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. 2003இல் நாங்கள் சென்றபோது ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்த
    நினைவு. அலைகள் ஆக்ரோஷமாக இருந்திருக்குமே .அனைத்து வேலைகளும் நன்றாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த பதிவுக்கு ஆவல் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. எல்லாம் நன்றாகவே நடந்தது.

      Delete
  6. எல்லாம் வியாபாரமாகி விட்டது என்ற கருத்து நிஜமோ நிஜம்.. பல சமயங்களில் மனம் சங்கடப்படுவதைத் தடுக்க முடியலை..

    அழகான படங்களுடன், விவரித்திருக்கிறீர்கள்.. தாங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள், அடுத்து பயணம் செய்பவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாய் இருக்கும்.. தொடரக் காத்திருக்கேன் அம்மா!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பார்வதி. இப்போல்லாம் கொஞ்சம் சுருக்கமாத் தான் சொல்றேன். :)))

      Delete

  7. ஆன்மீக அமுதம் கிட்டியது!
    பருகினோம்!
    மிக்க நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete