Friday, January 30, 2015

பயணங்கள் முடிவதில்லை! 7

பயணங்கள் முடிவதில்லை

கடைசியா நாம கோதண்டராமர் கோவிலுக்குப் போனோம். அங்கிருந்து ராமேஸ்வரம் வந்தடைந்தோம்.  திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் வரும் வழியிலேயே பாம்பன் பாலம் தாண்டியதும், நகருக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகளின் வண்டிக்கு ஒரு வண்டிக்கு நூறு ரூபாய் வசூலிக்கின்றனர். ஆகவே இப்போது ராமேஸ்வரம் நகருக்குள் நேரே வந்து வண்டிகள் நிறுத்துமிடம் போய்ச் சேர்ந்தோம்.  வண்டியிலேயே வைக்க வேண்டியவற்றை வைத்துவிட்டு 2,3 ஹோட்டல்களில் அறை இருக்கிறதா என்று கேட்டோம்.  எல்லாம் வழிகிறது.  சத்திரங்களில் கூட இடம் இல்லை என்றும் ஒரு அறை கிடைத்தால் பெரிய விஷயம் எனவும் தகவல் கிடைத்தது.  அதை அத்தோடு விட்டு விட்டு ஓட்டுநரை வண்டியோடு சாமான்கள் இருப்பதால் அங்கேயே பார்த்துக்கொள்ளும்படி இருக்கச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் அக்னி தீர்த்தம் நோக்கிக் கிளம்பினோம்.


வண்டி நிறுத்துமிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் அக்னி தீர்த்தம் இருக்கிறது.  என்றாலும் அப்போது இருந்த அசதியில் நடக்க முடியாது என்பதால் ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டதற்கு 25 ரூபாய் வாங்கிக் கொண்டு அக்னி தீர்த்தத்திற்கு ஒரு ஃபர்லாங் முன்னால் இறக்கி விட்டார். நானும் நம்ம ரங்க்ஸும் ஏற்கெனவே 2,3 முறை குளியல் போட்டு விட்டதாலும் அப்போது மணி மூன்று ஆகிவிட்டதாலும் குளிக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம்.  பையரும், மருமகளும் மட்டும் குளிக்கச் சென்றனர்.  அவர்களுக்கு உள்ளே உள்ள தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து வைக்க நல்லதொரு வழிகாட்டி தேவைப்பட்டது.  அங்கிருந்த காவல்துறையின் உதவியை நாடினோம்.  அவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழிகாட்டியை அழைத்து எங்களுக்கு உதவச் சொன்னார்.

முன்னெல்லாம் எங்கள் குடும்ப புரோகிதர் மணிகிண்டி சாஸ்திரிகள் என்பவர் அங்கேயே கிழக்கு கோபுரத்திற்கருகே இருந்தார்.  அவர் சிருங்கேரி மடத்தின் முத்ராதிகாரியாகவும் இருந்ததால் மடத்திலேயே தங்கவும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார்.  முதல்முறை சென்றபோது அவர் மனைவி இருந்ததால் அவர் வீட்டிலேயே தங்க, மற்றும் சாப்பாடு போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அவருடைய சீடர்களே தீர்த்த கட்ட ஸ்நானங்களுக்கும் வந்து உதவினார்கள்.  அதன் பின்னரும் அவர் மூலமே தநுஷ்கோடி சென்றோம்.  அப்போது அவர் மனைவி உயிருடன் இல்லை என்பதால் மைத்துனர் வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.  அப்போதே அவருக்கு வயதாகி விட்டது.  இப்போது அவர் இல்லாததோடு அவர் வீடு இருந்த இடத்தில் வேறு ஏதோ அரசு அலுவலகம் வந்திருப்பதையும் பார்த்தேன்.

எனவே கிடைத்த வழிகாட்டியை வைத்துக் கொண்டு பையரும், மருமகளும் அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு வந்தனர். பின்னர் எங்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றார் வழிகாட்டி. கோயிலிலும் நாங்கள் குளிக்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால் எங்களைப் பிள்ளையார் சந்நிதிக்கு அருகே அமர்த்திவிட்டுச் செல்வதாய்க் கூறினார். அதற்குள்ளாக நாங்கள் பாதுகாப்பு சோதனையை முடித்துக் கொண்டு வந்தோம்.  கடுமையான சோதனை. சாவிக் கொத்து சப்தம் போட்டுக் காட்டிக் கொடுக்க, வீட்டுச் சாவி என்று எடுத்துக் காட்டினேன்.  நல்லவேளையாக அலைபேசி, காமிரா எல்லாம் வைத்துவிட்டு வந்திருந்தோம். பின்னர் நாங்கள் உள்ளே சென்று விநாயகர் சந்நிதிக்கு அருகிலிருந்த ஒரு மேடையில் அமர்ந்திருக்கப் பையரும், மருமகளும் எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடி விட்டு வந்தனர்.

உடை மாற்ற ஆங்காங்கே அறைகள் இருக்கின்றன.  கோயிலுக்குச் சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் அறைகள் உள்ளன.  எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் தான்.  ஆனால் அங்கே நடக்கும் அட்டூழியம்!  நல்லவேளையாக எங்களுக்கு இப்படி அனுபவம் ஏற்பட வில்லை.  நாங்கள் குளித்த 2,3 முறைகளிலும் கோயிலுக்கு அருகேயே சிருங்கேரி மடம் இருந்ததால் அங்கே சென்று உடை மாற்றிக் கொண்டு துணிகளையும் காயப் போட்டு விட்டோம்.  இப்போது அறை கிடைக்காததால் பையர் அங்கே உடை மாற்றும் அறைக்குச் சென்று உடை மாறப் போனபோது பலரும் அங்கேயே சிறுநீர் கழிப்பதைப் பார்த்திருக்கிறார். அதே போல் பெண்கள் உடைமாற்றும் அறையிலும் நடப்பதை மருமகளும் பார்த்துவிட்டு உடையே மாற்றாமல் ஈரத்தோடு வெளியே வந்துவிட்டார்.  பையர் விடாமல் சத்தம் போட்டுவிட்டு வந்துவிட்டார். ஆனாலும் யாரும் கேட்கவில்லை என்றார்.

கோயில் என்பது புனிதமான இடம். பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வங்களின் புனிதத்தில் உள்ள ஈர்ப்பு சக்தியின் தாக்கம் நமக்குக் கிடைக்க வேண்டியே நாம் அங்கெல்லாம் செல்கிறோம்.  ஆனால் நாம்  நம் சுற்றுப்புறத்தை மட்டும் அசிங்கம் செய்யவில்லை.  கோயில்களையும் நம்மால் முடிந்த அளவு பாழாக்குகிறோம்.  சில நாட்கள் முன்னர் முகநூலிலும், குழுமத்திலும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் பிரதோஷம் முடிந்த அன்று /அல்லது ஏதோ விழா அன்று கொடுத்த பிரசாதத்தை உண்டவர்கள் அனைவரும் குப்பைகளை அங்கேயே மலை போல் குவித்திருந்ததைப் படம் எடுத்துப் போட்டுக் காட்டி இருந்தனர்!


நாம் தமிழர்கள் எனப் பெருமை கொள்கிறோம்.  பாண்டியர், சேரர், சோழர் கலைகளை வளர்த்தனர், கோயில்களைக் கட்டி நிர்வாகம் செய்தனர். என்றெல்லாம் படிக்கிறோம்.  சென்றும் பார்க்கிறோம்.  ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கவும், ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கவும் ஆர்வம் காட்டுகிறோம்.  ஆனால் அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப் பணத்தைச் செலவு செய்து கட்டிய கோயில்களை நாம் எவ்வளவு அழகாய்ப் பராமரிக்கிறோம்!  இதற்காகவா நம் அரசர்கள் அனைவரும் இத்தனை பாடுபட்டுப் பல சிற்பிகளையும் சம்பளம் கொடுத்து அவர்கள் உயிர், உடைமையைப் பாதுகாத்துக் கஷ்டப்பட்டுக் கோயில்களைக் கட்டி சிற்ப வேலைகளைச் செய்து வைத்தனர்.  காலத்துக்கும் நிற்கக் கூடிய கோயில்கள் வருங்கால சந்ததிகளால் இப்படிக் கேவலப்படுத்தப்படும் எனில் அவர்கள் இம்மாதிரிக் கோயில்களைக் கட்டியே இருக்கமாட்டார்கள்.



இது அலைபேசியையும், காமிராவையும் கொடுக்கும் முன்னர் அவசரமாக எடுத்த படம்.  அதுக்கப்புறமா எடுக்க முடியலை.  அங்கேயே இருந்த காவல்துறையினர் தடுத்துவிட்டனர். 

12 comments:

  1. நாங்க போனபோது கூட இப்படி இல்லையே கீதா. இந்த மாதிரி அக்கிரமம் நடக்க விடுகிறார்களே. போட்டொ எடுக்க மட்டும் தடை. நல்ல கூத்து. உங்கள் ஆதங்கம் உண்மையில் வருத்தப் பட வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க போய்ப் பத்து வருஷம் இருக்காதா வல்லி? போன வருஷத்துக்கு இந்த வருஷமே எல்லாம் மாறுது! :( கோயில்களை வணிக வளாகங்களாக்கிய அரசைச் சொல்வதா? அதைச் சரியானபடி பயன்படுத்தாத மக்களைச் சொல்வதா? தப்பு எல்லோரிடமும் இருக்கிறது!

      Delete
  2. இதற்குத்தான் இதுமாதிரி ஊர்களில் ஔ உறவினராவது இருந்தால் சௌகர்யம் என்பது! அறை தேடி அலைய வேண்டாம். :))))

    அங்கேயே சிறுநீர் கழிக்கிறார்களா? அடக் கொடுமையே... நம் மக்களைத் திருத்தவே முடியாது.

    வரவர எல்லா இடங்களிலும் கட்டுப்பாடுகள் ஜாஸ்தி ஆகிக் கொண்டு வருகிறது போலும். புகைப்படங்கள் விடுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், ராமேஸ்வரத்தில் உறவினர் யாரும் இல்லை தான். ஆனாலும் கொஞ்சம் முன்கூட்டி முயற்சி செய்திருந்தால் சிருங்கேரி மடத்திலோ, அல்லது காஞ்சி மடத்திலோ தங்கிக் கொண்டிருக்க முடியும். எங்கள் பயணம் திட்டமிடப் பட்டது கடைசி நேரத்தில். அதனால் பிரச்னை! ஆம், கோயிலுக்குள்ளேயே இருக்கும் உடை மாற்றும் அறைகளில் தான் இந்தக் கொடுமை! நம் மக்கள் திருந்துவது என்பது கஷ்டம்! சொல்லுபவர்கள் தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்! :(

      Delete
  3. என்னத்தைச் சொல்ல?!... கேக்கவே கஷ்டமா இருக்கு!. சுற்றுலாத்துறையும் இந்து சமய அறநிலையத்துறையும் இன்னும் கவனம் எடுக்கலாம்!..தரிசனக் கட்டணங்களை எல்லாம் வேற ரொம்ப ஜாஸ்தி பண்ணிட்டாங்க...அதுக்குத் தகுந்த மாதிரி, சுத்தமாக இடங்களைப் பேணுவதோடு, இம்மாதிரி அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, கண்காணிக்கலாம்.. .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இரண்டு அறைகளுக்கு ஒருத்தர் என்ற கணக்கிலாவது ஊழியர்களைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தலாம். அசுத்தம் செய்பவர்களைக் கண்டிப்பதோடு போதாது. அபராதமும் விதிக்க வேண்டும்.

      Delete
  4. நாங்கள் இரண்டு முறை ராமேஸ்வரம் சென்றிருக்கிறோம். காலையில் அக்னி தீர்த்தம் (கடல்) உள்வாங்கி இருக்கும். அதே இடம் மாலையில் காலையில் நாம் சென்ற இடத்துக்குப் போக ஆழம் அதிகமாக இருக்கும். சுற்றுலாத்தலங்களில் இருப்பிடம் கிடைக்கவில்லை என்றால் திண்டாட்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், இடம் கிடைப்பது கஷ்டம் என்று தெரியும். இருந்தும் முயன்றோம். ஆனால் அங்கு தங்காததும் நல்லதாகி விட்டது. :)

      Delete
  5. என்னத்த சொல்ல...? புனிதமான இடத்தில் தான் எல்லாக் கொடுமைகளும் நடக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. புனிதம்னு எழுதிப்பார்த்துக்க வேண்டியது தான் டிடி. மஹாக் கொடுமை! :(

      Delete
  6. கொடுமையான அனுபவம்.... உடை மாற்றும் இடத்திலேயே இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளும் மாக்கள்.....

    என்ன கொடுமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், பையரும் சண்டை போட்டுப் பார்த்திருக்கிறார். யாருமே கேட்கவில்லையாம். கேலி செய்தார்கள் என்று வருந்தினார். :(

      Delete