Saturday, February 21, 2015

பயணங்கள் முடிவதில்லை! 11

நாங்கள் திருதிருவென்று முழிப்பதைக் கவனித்த அந்த விடுதிக்காப்பாளர் அவர் பங்குக்கு அவரும் விழிக்க ஆரம்பிக்க, அப்போது அங்கே வந்த இளைய பட்டாசாரியார் ஒருத்தர் எங்கள் பிரச்னையை என்னனு புரிந்து கொண்டு, அருகில் உள்ள மாலோல மடத்தில் மேல்நாட்டு முறைப்படியான கழிவறையுடன் கூடிய அறை கிடைக்கும் என்றும்பபக்கத்துத் தெருவில் திரும்பினதும் சத்திரம்  கிடைக்கும் என்றும் சொன்னார்.  யாரேனும் ஒருத்தர் அங்கே போய்ப் பார்த்து அறை காலியாக இருக்கிறதா என்று கேட்டு வரலாம் என முடிவு செய்ய, அந்த பட்டாசாரியாரே மீண்டும் தன் தொலைபேசியை எடுத்து , 'மழையில் நீங்க போக வேண்டாம்; நானே கேட்டுச் சொல்றேன்,' என்று சொல்லிவிட்டு அலைபேசியில் முத்துக் கிருஷ்ணன் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர் தான் மாலோல மடத்தின் காப்பாளர் எனத் தெரிந்தது.  தற்சமயம் கோயிலில் இருப்பதாகவும், எங்களை அங்கே போய் விடுதிக் காவலாளியிடம் சொல்லி அறையைத் திறந்துவிடுமாறு சொல்வதாகவும் உறுதி கொடுத்தார்.  ஆகையால் நாங்கள் எல்லோருமே எங்கள் வண்டியில் அந்த மடத்தை நோக்கிச் சென்றோம்.  உத்திராதி மடத்திலிருந்து அரை ஃபர்லாங் கூட இல்லை.  அங்கே போய் விடுதிக் காவலாளி, வயதான கிழவர், அவரை எழுப்பி விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே காப்பாளரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருக்கு மீண்டும் தொலைபேசச் சொன்னார்.  நாங்களும் காப்பாளரின் தொலைபேசி எண்ணில் அவரை அழைத்து விபரத்தைச் சொல்ல அவரும் காவலாளியிடம் பேசித் தான் சற்று நேரத்தில் வருவதாகவும், எங்களுக்கு வேண்டிய அறைகளைத் தரும்படியும் சொன்னார்.

உடனே உள்ளே அழைத்துச் சென்றார் காவலாளி.  அதுவரை கீழ்ப்படியில் நின்று கொண்டிருந்த நான் மெல்ல ஓவ்வொரு படியாக மேலே ஏறினேன்.  கிட்டத்தட்டப் பத்துப்படிகள்.  மழை வேறு பெய்து கொண்டிருந்ததால் வழுக்கல்!  விடுதிக் காவலாளி நான் ஏறுவதைப் பார்த்தவர், "பைய, பைய" என்று சொல்ல எங்கள் பையருக்கு மயக்கமே வந்து விட்டது.  அவரைத் தான் கூப்பிடறார் என நினைத்து, என்ன தாத்தா என்று அவரிடம் கேட்க, தென்பாண்டிச் சீமையின் வட்டார வழக்கு மொழியைக் குறித்து அறிந்திருந்த நான் ஊடால (இதுவும் வட்டார வழக்குச் சொல்லே :D) புகுந்து இது தெற்கத்தித் தமிழ். மெல்ல என்பதை இங்கே பைய என்பார்கள் எனப் பையருக்கு விளக்கினேன்.  பின்னர் உள்ளே சென்றதும் கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிடும் கூடம்.

கூடத்தின் பக்கவாட்டில் இரண்டு அறைகள்.  கூடத்தின் நேர் மூலையில் ஒரு மாடிப்படி.  அதன் அருகே ஒரு வாயில் கொல்லைப்புறம் நோக்கிச் சென்றது.  அறைகளுக்கு அருகே இன்னொரு வாயில் இன்னொரு சின்னக் கூடத்திற்குச் சென்றது.  அங்கேயும் அறைகள் இருக்கின்றன எனக் கேள்விப் பட்டேன். எங்களுக்குக் கூடத்திலேயே இருந்த அறைகளைத் திறந்து காட்டினார் காவலாளி.  ஆஹா, கட்டில், மெத்தை, அதோடு மேல்நாட்டுக் கழிவறை வசதி!  அருகே இருந்த இன்னொரு அறையில் கட்டில், மெத்தை வசதி இருந்தாலும் கழிவறை இல்லை. என்ன செய்யலாம் என மண்டையை எல்லாம் உடைச்சுக்காமல் கழிவறை இருக்கும் அறையில் நானும், ரங்க்ஸும் தங்குவது என்றும், மற்றோர் அறையில் பையரும் மருமகளும் தங்குவது என்றும் எங்கள் அறைக் கழிவறையையே அவர்களும் பயன்படுத்திக்கலாம் எனவும் ஏகோபித்த முடிவு எடுக்கப்பட்டது.

அதற்குள்ளாக விடுதிக் காப்பாளரும் வந்து சேர மறுநாள் சேதுக்கரை ஸ்நானம் குறித்தும், சங்கல்பம் மற்றும் கோயில் வழிபாடு இதர வேலைகள் குறித்தும் அவரிடம் பேசி முடிவு செய்து கொண்டோம்.  காஃபி, சாப்பாடு போன்றவை அங்கே ஒரு வீட்டில் கொடுப்பாங்க என்றாலும் காஃபிக்கு ஏழு மணி ஆகும் என்றும் சொன்னார்.  ஆகவே அங்கே கோயில் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையிலேயே காஃபிக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என முடிவு பண்ணிக் கொண்டோம்.  காலை ஆகாரம் கிடைக்காது என்றும் சொல்லிவிட்டார்கள்.  பதினோரு, பனிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாடு கிடைக்கும் என்றும் கூறவே சரி, இருக்கும் பழங்களை வைத்துச் சரிக்கட்டிக்கலாம் என முடிவு செய்து அறைக்கு வந்து படுத்தது தான் தெரியும்.  நல்ல தூக்கம். 

12 comments:

  1. அப்பாடி... தங்க நல்ல இடம் கிடைத்ததே...!

    :))))))))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்த அறை கிடைச்சதே ஸ்டார் ஹோட்டல்லே கிடைச்சாப்போல் ஒரு எண்ணம். :)

      Delete
  2. Replies
    1. ஹிஹிஹ், பையர் அவரைத் தான் கூப்பிடறதா நினைச்சுட்டார். :)

      Delete
  3. அப்பாடா ரூம் கிடைச்சுதா??

    ReplyDelete
    Replies
    1. கிடைச்சது ராம்வி.

      Delete
  4. பையர் பையப் பையப் பறந்து வா ன்னு பாட்டு கேட்டதில்லே? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
    Replies
    1. வா.தி. நானே கேட்டதில்லை. பையர் எங்கே கேட்டிருக்கப் போறார்? :)))

      Delete
  5. நல்ல அனுபவம்தான்!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு அனுபவம் சுரேஷ்.

      Delete
  6. நல்ல வேளை தங்க ஒரு இடம் கிடைத்ததே...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெளியே போனால் இந்தத் தங்குமிடம் தான் பெரிய பிரச்னை! :)

      Delete