Friday, April 10, 2015

புருஷாமிருகமா? புருஷா மிருகியா?

பீமனும், புருஷாமிருகமும் ஓடிப் பிடிச்சு விளையாடினதைக் குறித்து அநேகமா எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.  புருஷாமிருகத்தின் பாலுக்காக பீமன் போனதாகத் தான் நான் அறிந்திருந்தேன்.  ஆனால் திரு நரசிம்மா தனது "குபேரவனக்காவல்" புத்தகத்தில் சொல்லுவது பீமன் சென்றது என்னமோ குபேரனைப் பார்த்து ராஜசூய யாகத்துக்கு யுதிஷ்டிரன் சார்பில் அழைக்கத் தான் என்றும், அப்போது அங்கே காவல் காக்கும்  புருஷாமிருகத்திடம் மாட்டிக் கொண்டதாகவும் சொல்கிறார்.  இது குறித்துக் கண்ணன் செய்த எச்சரிக்கை மேலே நான் சொன்ன கதையிலும் வந்திருக்கிறது.  இங்கே நரசிம்மாவும் சொல்லி இருக்கார். புருஷாமிருகத்திடம் இருந்து தப்ப கண்ணன் கொடுத்த பனிரண்டு கற்களையும்  பீமன் ஒவ்வொரு இடத்திலும் வைத்துவிட்டுத் தாண்டிச் செல்ல அவன்  வைத்த பனிரண்டு கல்லும் பனிரண்டு சிவாலயங்களாக ஆனதாகவும், அதை அடிப்படையாகக் கொண்டே இன்றும் நாகர்கோவில் பகுதியில் சிவாலய ஓட்டம் நடைபெறுவதாகவும் படித்திருக்கிறேன்.

ஆனால் இங்கே கொஞ்சம் மாறுதல். பீமன் கற்களை வைக்கிறான். அவையும் லிங்கங்களாக மாறுகின்றன. ஆனால் இந்த சிவாலய ஓட்டம் எல்லாம் வரலை.  ஒவ்வொரு சிவலிங்கத்தையும் வழிபாடு செய்யச் செல்லும் புருஷாமிருகம் தான் வழிபாடு செய்யும் நேரம் அதுக்குப் பதிலாக (தான் குபேரனின் குபேரவனத்தைக் காவல் காக்காத சமயம்)   வனத்தை ஒரு யட்சிணியின் காவலில் ஒப்படைத்ததாகவும், அந்த யட்சிணி காவல் இருக்கையில்  தெரியாமல் தன் காதலிக்காக மலர் பறிக்கச் சென்ற ஒரு கந்தர்வன் அந்த யட்சிணியிடம் மாட்டிக் கொண்டதாகவும். அவனை அந்த யட்சிணி துரத்தியதாகவும், அந்தத் துரத்தல் ஜன்ம ஜன்மங்களுக்கும் தொடர்வதாகவும் சொல்லி நம்மைப் படிக்கையிலேயே மிரட்டுகிறார் நரசிம்மா.

ஹா, இந்த யட்சிணிக்கெல்லாம் யாரு பயந்தாங்க? அடாது பயமுறுத்தினாலும் விடாது படிப்போமுல்ல!  யட்சிணி கதாநாயகனைப் பனிரண்டு ஜன்மங்களாகத் துரத்தி இருக்கிறாள்.  கல்லாய்ப் பிறந்த கந்தர்வனைக் கரைக்க நதியின் பெருகி வரும் வெள்ள நீராகவும், பசும்புல்லாய்ப் பிறந்தபோது, வெட்டும் வெட்டுக்கிளியாகவும்,  பூவாய்ப் பூத்தபோது அதில் உள்ள தேனைக்குடிக்கும் கரு வண்டாகவும், ஆலமரமாய்ச் செழித்து வளர்ந்தபோது அதன் வேரில் முளைத்த வேம்பாகவும், ஆண் சிலந்தியாய்ப் பிறந்தபோது அதைத் தின்னும் பெண் சிலந்தியாகவும்,  தேளாய்ப் பிறந்த கந்தர்வனைக் கொட்டும் கடுமையான பெண் தேளாகவும்,  நாகப்பாம்பாய்ப் பிறந்த கந்தர்வனை அழிக்க மலைப்பாம்பாகவும், புறாவாகப் பிறந்த கந்தர்வனைத் தின்னும் கிருஷ்ணப்பருந்தாகவும்,  பசுவாய்ப் பிறந்தவனை அடித்துத் தின்னும் வேங்கைப்புலியாகவும்,  மிலேச்ச தேச அரசனாய்த் தோன்றியபோது அவன் உடன் இருந்து அவனைக் கெடுத்த சகோதரியாகவும்,  நற்குலப் பெண்ணாகத் தோன்றிய கந்தர்வனின், கொடூர புத்தி கொண்ட கணவனாகவும் என
ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு வடிவில். யட்சிணி கிட்டே மாட்டிக்காமல் பதினோரு பிறவிகளைக்கடக்கும் கதாநாயகன் பனிரண்டாவது பிறவியில் நல்லா வசமா மாட்டிக்கிறானே! எப்படித் தப்பறான்? கதையைப் படியுங்க தெரியும்!

இந்தக் கதையின் முன்னுரையில் திரு நரசிம்மா பெண்களைப் பத்தி எழுதி இருப்பது எனக்கு ரொம்பப்பிடிச்சது.  என்னோட கருத்தும் அவர் கருத்தே தான். பெண் நதியைப் போன்றவள் என்பதில் எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை.  ஆண், பெண்ணைச் சார்ந்தவனே என்பதிலும் எனக்கு முழு ஒப்புதலே! இதை நான் பல முறை என்னோட சில பதிவுகளிலே வற்புறுத்திவிட்டுப் பல ஆண்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன்.  குறிப்பாத் தமிழ் இந்து தளத்தில். ம்ஹூம் இல்லை, இல்லை, நீங்க நினைக்கும் "தமிழ் த இந்து" இல்லை.  நான் சொல்வது http://www.tamilhindu.com/ இந்தத் தளத்தில். :)))

போகட்டும், இப்போக் கதைக்கு வருவோம். பெண்ணைச் சார்ந்த ஆண் தன்னைத்தப்புவித்துக் கொள்ளும் வழி தெரியாமல் விழிக்கிறான். பெண் என்றால் எப்படிப் பட்ட பெண்! யட்சிணியாக்கும்!  அதிலும் தான் ஒரு யட்சிணி என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தவள்.  1957 ஆம் வருஷத்திலே ஆரம்பிக்கும் கதையானது 1919 ஆம் வருஷம் பின்னோக்கிப் பயணித்துப் பின் முன்னோக்கி வந்து 1940 களில் விவரணைகள், பயங்கர நிகழ்ச்சிகளுடன் சென்று நடுவில் கொஞ்சம் தேக்கம் கண்டு பின்னர் 1967 ஆம் வருஷத்துக்கு வந்து அதன் பின்னர் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.

யட்சிணியின் கதி என்ன ஆகிறது?  அவள் மனித உருவில் இருந்தாளா? இல்லை யட்சிணி உருவிலேயா? என்பதெல்லாம் புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். முடிவை மிக சாமர்த்தியமாக ராஜஸ்தானின் முக்கிய நிகழ்வு ஒன்றோடு பிணைத்திருக்கிறார் ஆசிரியர். நான் கூடப் படிக்கையில் இது எதற்கு இங்கேனு நினைச்சேன். பின்னர் தான் புரிஞ்சது இது முடிவின் முன்னோட்டம் என்று.  அடங்கியே கிடக்கும் பெண்மை விஸ்வரூபம் எடுப்பதே கதையின் முக்கியக் கரு. அப்படி விஸ்வரூபம் எடுத்த பெண்மை தெய்வீக உருவில் ஜெயித்ததா? இல்லை ராக்ஷஸ உருவில் ஜெயித்ததா? ஆம்! இரு பெண்களுக்கிடையே நடந்த மறைமுகப் போட்டி எனலாம். இருவரில் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்?

இந்தக் கதையைப் படித்துப் பெண்கள் எதிர்ப்பு வரும் என ஆசிரியர் எதிர்பார்த்திருக்கிறார்.  அப்படி வந்ததாய்த் தெரியவில்லை. ஒரு வேளை இந்தக்காலப் பெண்கள் படிச்சுட்டு எதிர்க்கலாமோ என்னமோ! எனக்கு எதிர்க்கத் தோன்றவில்லை. பெண்களைக் குறித்த ஆசிரியரின் கருத்தும் சரியானது தான். இந்த ஒரு வாரத்தில் ரங்க ராட்டினத்தில் ஆரம்பித்து, சங்கதாரா, காலச்சக்கரம், குபேரவனக்காவல் நாலையும் முடிச்சிருக்கேன்.  நடுவில் சிவரஹசியங்கள்  பாகமும், நந்தி ரகசியமும் முடிச்சாச்சு.  மத்ததும் படிச்சுட்டு வரேன்.


புத்தகம் பெயர்: குபேரவனக் காவல்

ஆசிரியர்:   திரு காலச்சக்கரம் நரசிம்மா

வானதி பதிப்பகம் வெளியீடு

22 comments:

  1. நான் படித்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, படிங்க, படிங்க, மெதுவாப் படிங்க! :)

      Delete
    2. எங்கிருந்து படிக்க? புத்தகம்?

      Delete
    3. கிடையாதே! ஹிஹிஹி, ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா!

      Delete
    4. ஸ்ரீ என்னை உடன் அணுகினால் நரசிம்மாவின் அனைத்து புத்தகங்களும் வழங்கப்படும் என்பதை அறியவும்.

      Delete
    5. அநியாயமா இருக்கே! :)

      Delete
    6. அணுகிடுவோம்!

      Delete
    7. @பால கணேஷ், எனக்கும் கொடுக்கலைனா, நீங்க தான் "ஆதித்த கரிகாலனைக் கொன்னீங்க" ங்கற ரகசியத்தை ஊர், உலகம் அறியச் சொல்லிடுவேனாக்கும்! அந்த பயம் இருக்கட்டும்! :))))

      Delete
  2. Garrrrrrrrrrrrrrrrrrrrr! இப்ப ஒழுங்கா அந்த புக்க போஸ்ட் ல அனுப்பி வைங்க!

    ReplyDelete
    Replies
    1. ஆசை, தோசை, அப்பளம், வடை! ஹையா ஜாலி! கிடையாதே! புத்தகம் என்னோடது இல்லை! ஆதி வெங்கட்டோட புத்தகம். அவங்க வீட்டுக்குப் போய் வாங்கிட்டு வந்தேன்! :))))

      Delete
  3. இப்போ நரசிம்மா காட்டிலே மழை. இந்தக் காலத்துப் பெண்கள் இதையெல்லாம் எங்கே படிக்கப் ப்பொகிறார்கள்விட்டலாச்சார்யா கதைபோல் இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை, சுவாரசியமாகவே இருக்கிறது! தற்காலத்தோடு அருமையாகப் பிணைத்து விடுகிறார். தற்காலத்திலும் பல அமானுஷ்யங்கள் இருக்கின்றனவே! பதில் சொல்ல முடியாப்பல கேள்விகள்! :)

      Delete
  4. அருமையான விமர்சனம்! புத்தகத்தை படிக்கத்தூண்டுகிறது! வாங்கிவிடுவோம்!

    ReplyDelete
  5. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. எனக்கு பிடித்த புத்தகம். விறுவிறுப்பாக இருக்கும்.

    மிருகரஞ்சிகா என்னை பல நாட்கள் பயமுறுத்தியிருக்கிறாள்.....:)))

    இவரின் கதைகள் எல்லாவற்றிலும் வில்லனோ, வில்லியோ பூனைக்கண்களுடன் மிரட்டுவார்கள்....:)))

    ReplyDelete
    Replies
    1. அது என்னமோ எனக்கு சொப்பனத்தில் எல்லாம் வரதில்லை. இதெல்லாம் இல்லாமலேயே தூக்கத்தில் கத்தி எல்லோரையும் பயமுறுத்திட்டு இருக்கிறதாலே, இதெல்லாம் பார்க்கும், படிக்கும் அன்னிக்கு நல்லாத் தூங்கிடுவேன். :))))

      Delete
  7. நரசிம்மா சாரின் மின்னஞ்சல் முகவரி கணேஷ் சாரிடம் கிடைக்கலாம் மாமி. என்னிடமும் தாங்கள் அனுப்பிய முகவரி தான் உள்ளது.

    கணேஷ் சார் - நரசிம்மா சாரின் அடுத்த இரு புத்தகங்கள் வந்து விட்டதா??

    ReplyDelete
    Replies
    1. எங்கே பாலகணேஷ் சங்கதாராவில் நான் கேட்ட சந்தேகங்களுக்கும் நரசிம்மாவிடம் பதில் கேட்டு வாங்கிப் போடறதாச் சொன்னார். ஆளையே காணோம். சரி, நாமளே தொடர்பு கொள்ளலாம்னா மெயில் ஐடி வேலையே செய்யலை! :(

      Delete
  8. அருமையான புத்தகம். இவரது புத்தகங்கள் படித்த சில நாட்கள் வரை அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தாக்கம்னு சொல்ல முடியலை! ஆனால் நல்ல சரளமான ஓட்டம் கதையிலே. சம்பவங்களைக் கோர்வையாகக் கையாள்கிறார். அச்சுப் பதிப்பில் ஒரு சில பிழைகள் இருப்பதைத் தவிர வேறு குறை சொல்ல முடியலை.:)

      Delete