எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 31, 2015

நாலு கெட்டு வீடு!










இது எந்த இடம்னு கண்டு பிடிச்சு வைங்க. அப்புறமா மெதுவா வரேன். :)

Sunday, August 30, 2015

படத்துடன் தேப்லா! :) வந்து சாப்பிடுங்க!

தேப்லா

ரொம்ப மாசம் கழிச்சு நேத்திக்குத் தேப்லா பண்ணினேன்.காலம்பர செய்த மோர்க்குழம்பு மீந்து போச்சு! இங்கே தான் கொடுக்க யாருமே இல்லையே! ஆகவே மோர்க்குழம்பைச் செலவு செய்த மாதிரியும் இருக்குமேனு தேப்லா பண்ணிட்டேன். பொதுவா தேப்லாவுக்கு சோம்பு முழுதாகவோ அல்லது சோம்புப் பவுடரோ போடுவேன். நேத்திக்கு அதெல்லாம் போடலை. அதோட பச்சைமிளகாய், இஞ்சிப் பொடியாய் நறுக்கிச் சேர்ப்பேன். நேத்திக்கு அப்படியும் போடலை. பச்சை மிளகாய் பாதி, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் பச்சைக்கொத்துமல்லியோடு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொண்டேன். ஜீரகமும் சேர்க்கலை.

நேற்றுத் தேப்லா செய்த முறை

கோதுமை மாவு இரண்டு கிண்ணம்
கடலை மாவு அரைக்கிண்ணம்
மஞ்சள் பொடி  அரை டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்
ஓமம் போட்டிருக்கலாம். என்னமோ போடலை.
பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லியை மிக்சியில் அரைத்த விழுது
(பாதி பச்சை மிளகாய்தான் போட்டேன்.)
உப்பு தேவையான அளவு
தயிர் அரைக்கிண்ணத்திலிருந்து ஒரு கிண்ணம் வரை (மாவு பிசையப் போதுமான அளவு)
நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்


தோசைக்கல்லில் தேப்லாவைப் போட்டு எடுக்கவும் நல்லெண்ணெயோ, நெய்யோ ஒரு சின்னக் கிண்ணம் தேவை.


கோதுமை மாவு, கடலைமாவோடு மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு, பச்சைமிளகாய் விழுது ஆகியவற்றை  எண்ணெயோடு நன்கு கலந்து கொண்டேன். கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியதும் சேர்த்தேன். மாவை நடுவில் குழித்துக் கொண்டு தயிரைக் கலந்து நன்கு பிசைந்து வைத்தேன். சுமார் மாலை நாலு மணி அளவில் மாவு பிசைந்து தயாராகி விட்டது. ராத்திரி ஏழு மணிக்குப் பண்ண 3 மணி நேரமாவது ஊற வேண்டாமா?

பின்னர் ராத்திரி தேப்லா பண்ணினேன். சப்பாத்திக்கல்லில் சப்பாத்தி போல் இட்டுக் கொண்டு தேவையானால் உள்ளே நெய் தடவி மடித்துப் போட்டு இட்டுக் கொண்டும் போடலாம். அல்லது அப்படியே மெலிதாக இட்டும் போடலாம். நேற்று உள்ளே நெய் தடவிப் போட்டேன். கீழே படங்கள்.

தோசை வார்க்கும் தோசைக்கல்லிலேயே சப்பாத்தி பண்ணுவதில்லை. சப்பாத்திக்கு எனத் தனியாகக் கல் வைத்திருக்கிறேன். இரும்பில் உள்ள பிடி போட்ட தோசைக்கல் தான் என்றாலும் கல் என்று சொல்லியே பழக்கம் ஆகிவிட்டது. :)


இரண்டு நாட்கள் வரை இந்தத் தேப்லா கெட்டுப் போகாது. நன்றாக இருக்கும்.




பிசைந்து வைத்த மாவு




சப்பாத்திக்கல்லில் மாவு






அடுப்பில் வேகும் தேப்லா



Saturday, August 29, 2015

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??

அனுமதி வாங்காமல் போட்டதற்காக சற்று முன்னர் போட்ட பதிவை எடுத்துவிட்டேன். என்னமோ மனசு கேட்கவில்லை. வேறு யாரும் சொல்லும் முன்னர் நாமே  செய்துடுவோம்னு எடுத்துட்டேன். முகநூலில் இருக்கும் நண்பர்கள் அதில் பார்த்துக் கொள்ளவும். இப்போது என்னோட பழைய பதிவு ஒன்றே மீள் பதிவாகப் போட்டுடறேன். அனைவரும் மன்னிக்கவும்.


ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும்.  .  இந்த வருடம் செப்டம்பர் பதினைந்தாம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று சாமவேதிகளுக்கான உபாகர்மா!

தகவல்களுக்கு நன்றி:தெய்வத்தின் குரல்!

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.  .  பொதுவாக மீள் பதிவு போடுவதில்லை;  என்றாலும் இது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் கடந்த சில வருடங்களாகப் போட்டு வருகிறேன்.  ஏற்கெனவே படித்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  நன்றி. பொறுத்தருள்க! :)))))

Friday, August 28, 2015

வந்தாள் மஹாலக்ஷ்மி, வாமனனையும் அழைத்துக் கொண்டு!



படத்துக்கு நன்றி கூகிளார்

இன்னிக்கு வரலக்ஷ்மி விரதம் எனப்படும் நோன்பு கொண்டாடறதில் பெண்கள் அனைவரும் மும்முரமாய் இருப்பார்கள் என எண்ணுகிறேன். அஷ்ட லக்ஷ்மிகளில் இந்த வரலக்ஷ்மி சேரலைனு நினைக்கிறேன்.  பார்த்தாலே பாவம் தீரும் என்று சொல்லப்படும் இந்த நோன்பை எடுத்துக் கொண்டாட ரொம்பவே ஆசை தான். ஆனால் என் மாமியார் வீட்டில் இந்த நோன்பு கிடையாது. ஆகவே என்னையும் எடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. கொஞ்சம் வருத்தம் தான். பிறந்த வீட்டில் நோன்பு இருந்தால் எடுத்துக்கலாம்னு என் பெரிய மாமியார் (மாமியாரின் ஓரகத்தி) சொன்னாங்க. ஆனாலும் என் மாமியாரோட அனுமதி கிடைக்கலை. ரொம்ப ஆசையா இந்த நோன்பு கொண்டாடக் காத்திருந்தது கடைசியில் வீணாத் தான் போச்சு. ஆனால் என் பிறந்த வீட்டில் நோன்பு முடிந்ததும் ஒவ்வொரு வருஷமும் அப்பா நோன்புச் சரட்டை எனக்குத் தபாலில் அனுப்பி வைப்பார். கட்டிப்பேன். உள்ளூரிலேயே இருக்கும்போது நோன்பன்று அங்கே போய்ப் பூஜையில் கலந்துக்கறதும் உண்டு. அப்போவும் நோன்புச் சரடு என் மாமியார் கட்டிக்க மாட்டாங்க. தயங்குவாங்க. நான் கட்டிப்பேன். :)

அம்மா முதல் நாளில் இருந்தே வேலையை ஆரம்பிப்பார்.  முதல்நாளே மாவெல்லாம் இடித்துத் தேங்காய்ப் பூரணம், எள்ளுப் பூரணம், பச்சரிசியில் அரைச்ச இட்லி மாவு எல்லாம் தயார் ஆகும். இது எல்லாம் செய்து முடித்துவிட்டுத் தான் அம்மா சாப்பிடப் போவார். நாங்க பாட்டுக்குப் பள்ளிக்குப் போயிடுவோம். அம்மா தனியாகவே எல்லாம் செய்து கொள்வார். விபரம் தெரிந்தபிறகு மாவு இடித்துக் கொடுக்க உதவி இருக்கேன். கல்யாணம் ஆகி வந்த பின்னர் தான் கொழுக்கட்டைக்கு மாவை இடித்துக் கொண்டு கஷ்டப்பட வேண்டாம். நல்லாத் தண்ணீர் விட்டே அரைச்சு (பெயின்ட் மாதிரி இருக்கணும்) எடுத்துக் கொண்டு மாவு கிளறினால் கட்டியே தட்டாமல் வரும் என்பது தெரியும். மாவு இடித்துக் கிளறுவதில் கொஞ்சம் இல்லை நிறையவே கட்டி தட்டிக்கும். அப்படியும் அம்மா எப்படியோ கட்டிகள் இல்லாமல் கிளறி எடுப்பார். சும்மா வீட்டுக்கு மட்டும் கொழுக்கட்டை செய்யறதில்லை. அப்பாவோட கூட வேலை செய்யும் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்தக் கொழுக்கட்டை போகும். ஆகவே நிறையச் செய்யும்படி இருக்கும்.

நோன்பு காலையில் தான் எங்க வீட்டில் செய்வாங்க. ஆனால் இந்த நோன்பு செய்ய வேண்டிய நேரம் மாலை மாடு, கன்றுகள் மேய்ச்சலில் இருந்து திரும்பி வரும் நேரம் ஆரம்பித்துச் செய்யணும் என என் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார். பின்னால் இன்னும் சிலரும் அப்படித் தான் சொல்லி அதை உறுதி செய்தாங்க. இந்த அவசர உலகில் காலையிலேயே அவசரம் அவசரமாக எல்லாம் முடிந்து விடுகிறது. வெள்ளிக்கிழமையன்று பத்தரை மணிக்கு ராகு காலம் ஆரம்பிக்கும் என்பதால் அதற்குள்ளாக அனைவரும் முடிக்கின்றனர். ஆகவே ஒரே கூச்சல், குழப்பம், அவசரம், பதட்டம் எல்லாமும் நிறைந்ததாக மன அமைதி இல்லாமல் செய்ய வேண்டியதாக ஆகி விடுகிறது. இதை அறிய மாட்டேன் என்கிறார்கள். நிதானமாக மாலையில் செய்யலாமே! யார் தடுக்கப் போகிறார்கள்? நோன்பு செய்ய வேண்டிய சரியான நேரம் அதுதான் எனப் பலரும் பலமுறை சொல்லி விட்டார்கள். ஆனாலும் மாலை எவரும் செய்வதில்லை. காலையிலேயே எல்லாவற்றையும் முடித்துவிடுகின்றனர். என்னவோ போங்க! ஆனால் இப்போது எல்லோரும் இந்த நோன்பையும் செய்ய ஆரம்பித்திருப்பது கொஞ்சம் இல்லை நிறையவே மகிழ்ச்சிக்கு உரிய ஒன்று.

திருவோணம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

அடுத்து இன்று தான் ஓணம் பண்டிகையும் கூட. பள்ளி நாட்களிலோ மற்றும் விபரம் தெரிந்த பின்னரோ கூட இந்தப் பண்டிகை குறித்து அதிகம் தெரியாது. ராஜஸ்தான் போன பின்னர் அங்கே மலையாளத்தவர் கொண்டாடுவதைப் பார்த்ததும் இந்தப் பண்டிகை குறித்துத் தெரிய வந்தது. அப்போவும் அத்தப்பூக் கோலம் எல்லாம் தெரியாது. ஆவணி மாதத் திருவோணம் அன்று பெருமாள் கோயில்களில் திருவிழா என்று மட்டுமே அறிந்திருந்தேன். பூக்கோலம் போடுவது எல்லாம் எண்பதுகளில் அம்பத்தூரில் வீடு கட்டிக் குடி போனப்புறமா எங்க பக்கத்து வீட்டுப் பாலக்காட்டுக்காரங்க வீட்டில் ஓணத்தன்று வாயிலில் பூக்கோலம் போடுவதைப் பார்த்தே தெரிய வந்தது. எங்க வீட்டிலே குடி இருந்த மாமியும் பூக்கோலம் போடுவாங்க. அந்த மாமி எல்லாப் பண்டிகையும் கோலத்திலேயே கொண்டாடிடுவாங்க. ஆனால் இந்த ஓணம் பண்டிகை தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பது சங்கப் பாடல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் இருந்தும், மற்றும் பெரியாழ்வார் திவ்யப் பிரபந்தத்திலும், சம்பந்தர் தேவாரத்திலும் சொல்லிட்டுப் போயிருக்காங்க. சம்பந்தர் மயிலையில் கொண்டாடப்பட்டதுனு எழுதி இருப்பதோடு ஐப்பசி மாதம்னு வேறே குறிப்பிடறார். அதான் ஒண்ணும் புரியலை. ஆனால் இப்போதும் தென் தமிழ்நாட்டு மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிட்டுத் தான் வராங்க.

மதுரைக் காஞ்சியில் ஓணம் கொண்டாடியது குறித்து

கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார்,

“பரம்பரையாகத் திருமாலுக்கு
தொண்டுசெய்வதையும்
திருவோண நன்னாளில் நரசிம்ம
அவதாரமெடுத்து இரணியனை
அழித்தவனை நம் துன்பங்கள் போகப்
பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதமே” - (பெரியாழ்வார்திருமொழி 6 ).

தேவாரத்தில் சம்பந்தர், ஓணம் கபாலீஸ்வரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டதென்று பின்வருமாறு விளக்குகிறார்.

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள். வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுபவர்களுக்குத் திருநாள் வாழ்த்துகள். பேய்ப்படம் பார்த்துட்டு இருக்கேன். அப்புறமா வரேன். 

Thursday, August 27, 2015

திருவட்டாறில் கேஷுவின் வலக்கரம் சொல்வது என்ன?






படம் நன்றி கூகிளார்

நேற்று எழுதிய பதிவில் கேஷுவின் வலக்கரம் சின்முத்திரை காட்டுவதாக எழுதி இருந்தேன். ஆனால் அது தப்புனு கேஷுவோட படத்தோடு விளக்கம் அளித்திருக்கிறார் நாகர்கோயில்காரர் ஆன திரு கண்ணன் ஜே.நாயர்.  நாகர்கோயில்க் காரர் ஆன அவர் சின்முத்திரை தக்ஷிணாமூர்த்திக்கே உரியது என்றும் இது சின் முத்திரை இல்லை, யோகமுத்திரை என்பார்கள் என்றும் எழுதி இருக்கிறார்.  கோயிலில் தரிசனத்தின் போது பட்டாசாரியார் (போத்திமார்) சின்முத்திரை என்றே சொன்னதாக நினைவு. கையில் குறிப்புப் புத்தகங்கள் ஏதும் இல்லை. மனதில் குறித்துக் கொண்டது தான். தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. இணையத்தில் தேடிப் பார்த்தபோது விக்கி பீடியாவில் சின்முத்திரை என்றே இருக்கிறது. தினமலர் கோயில் பக்கத்தில் முத்திரை என்று மட்டுமே போட்டிருக்கின்றனர். இன்னொரு வலைப்பக்கம் யோகமுத்திரை என்றே குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே அதன் பின்னர் படங்களைத் தேடி எடுத்துப் பெரிது படுத்திப் பார்க்கையில், நாமெல்லாம் "டூ" விட்டால் "சேர்த்தி" போடுவோமே அது போல் விரல்களை வைத்திருக்கிறார் கேஷு! ஆக நம்மோடு சேர்த்தி தான் போட்டுக் கொண்டிருக்கிறார்.  இந்த முத்திரையின் அர்த்தமே வேறே. இதற்குத் தத்துவ ரீதியாக அர்த்தமே வேறாகும். சுவகரண முத்திரை என்பதை நம் தோழி எழுதிய முத்திரைகள் குறித்த பதிவில் படித்திருக்கிறேன். அதை உறுதியும் செய்து கொண்டேன். ஆகத் தவறாகச் சின் முத்திரை எனக் குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும். இப்போது கோயிலின் தலவரலாறு.


பிரம்மா யாகம் செய்யும்போது தவறு நேரிட கேசன், கேசி ஆகிய இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க வேண்டித் திருமாலை வேண்ட, அவரும் கேசனை அழித்துக் கேசியின் மேல் பள்ளி கொண்டார். கேசியின் மனைவி கங்கையையும், தாமிரபரணி நதியையும் திருமாலை அழிக்க வேண்டி அழைக்க, பூமாதேவி அந்த இடத்தை மேடாக்கினாள். கங்கையும், தாமிரபரணியுமோ திருமாலை வணங்கி அவரைச் சுற்றிக் கொண்டு வட்டமாக ஓடத்தொடங்கினார்கள். திருமாலைச் சுற்றி வட்டமாக ஆறுகள் இரண்டும் ஓடியதால் "வட்டாறு" என அழைக்கப்பட்ட இடம், திருவும் சேர்ந்து திருவட்டாறு எனப்படுகிறது.


//வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே.//

என நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.  கேசனை அழித்ததால் கேசவன் என இவரை அழைக்கின்றனர். கேசியோ தப்ப முயற்சி செய்தான்.  12 கைகளுள்ள அவன் தப்ப முயன்ற போது கேசவப் பெருமாள் அவன் கைகளில் 12 ருத்ராக்ஷங்களை வைத்துத் தப்பவிடாமல் தடுத்தார். இந்தப் பனிரண்டு ருத்ராக்ஷங்கள் இருந்த இடமே திருவட்டாறைச் சுற்றி இருக்கும் 12 சிவன் கோயில்கள். மஹாசிவராத்திரி அன்று  சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் 12 சிவாலயங்களையும் தரிசித்த பின்னர் திருவட்டாறுக்கு வந்து இங்கே கேஷுவின் காலடியில் உள்ள சிவனையும் தரிசித்துச் செல்வார்கள். இங்கே பெருமாளின் நாபியில் இருந்து தாமரையோ, பிரம்மாவோ கிடையாது. இவரை திருவனந்தபுரத்து அனந்துவுக்கு அண்ணன் என்றும் சொல்கின்றனர்.  ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம்  3 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரைக்கும், பின்னர் பங்குனி மாதம் அதே 3 ஆம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரை சூரியனின் அஸ்தமன கதிர்கள் இந்தப் பெருமாளின் மேல் படும் என்கின்றனர்.



கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மது,கைடபர்கள் ஆகியோரும் இருக்கின்றனர். இங்கேயும் ஒரு ஒற்றைக்கல் மண்டபம் உண்டு.  கோயிலின் வெளிப்பிரகாரம் நெடுகிலும் உள்ள தூண்களில் தீப லக்ஷ்மியின் சிலைகள் காணப்படுகின்றன. (படம் எடுக்க அனுமதி இல்லை) கோயிலின் கொடிக்கம்பத்தில் உள்ள கல்வெட்டில் தமிழில் பொறித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நாளை திருவோணம் இந்தக் கோயிலின் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அதைத் தவிரவும் ஐப்பசி, பங்குனித் திருவிழா, தை மாசம் கள பூஜை ஆகியன பிரசித்தி பெற்றது ஆகும்.


முதலில் படம் எடுக்கலாம்னு நினைச்சுப் பிரகாரங்களைத் தூரத்துப் பார்வையில் படம் எடுத்தேன். அங்கிருந்த அறநிலையத் துறை அதிகாரி பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுத்தார். ரொம்பவும் ரகசியமாவெல்லாம் எடுக்க இஷ்டமில்லை. பார்த்துட்டாங்கன்னா காமிராவைப் பிடுங்கி அழிப்பாங்க. அதிலே ஏற்கெனவே எடுத்ததும் போயிடும். ஆகையால் நிறுத்திட்டேன். பிரகாரம் இப்படித் தான் நீளமாகப் போகிறது. இந்தக் கோயில் திருவனந்தபுரம் அனந்துவோட கோயிலை விடப் பழமையானது என்றும் கிட்டத்தட்ட 3000 வருடப் பழமையான ஒன்று என்றும் சொல்கின்றனர். 




கோயிலின் தோற்றம், பக்கவாட்டுப் பார்வையில்


அங்கிருந்த அறிவிப்புப் பலகை! இதைப் படம் எடுக்க மட்டும் அனுமதி கொடுத்தாங்க. :)


Wednesday, August 26, 2015

திருவட்டாறில் கேஷுவைப் பார்த்தோம்!




கோயிலின் பிரதான நுழைவாயில் (படத்துக்கு நன்றி கூகிளார்)

அனந்த கிருஷ்ணருக்குத் தை மாதம் பிரம்மோத்ஸவம் நடக்கும் என்கிறார்கள். பூசத்தன்று தேர்த்திருவிழாவும் ஆயில்யத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும் எனக் கூறுகின்றனர். கிருஷ்ண ஜயந்தி விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறும். இது நாகராஜா கோயில் என்பதால் கோயில் கொடி மரத்தில் கருடன் இல்லை. சாதாரணமாகப் பெருமாள் கோயில்களில் கொடிமரத்தில் கருடனே காணப்பட்டாலும் இங்கே மூலவர் நாகராஜா என்பதாலும் கருடன் நாகத்தின் விரோதி என்பதாலும் ஆமையே காணப்படுகிறது.  மஹாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்ததன் அடிப்படையில் இங்கே ஆமையக் கொடிமரமாக வடிவமைத்ததாகச் சொல்கின்றனர். அனந்தகிருஷ்ணரும் புறப்பாட்டு சமயங்களில் ஆமை வாகனத்திலேயே கிளம்புகிறார்.

ஓடவல்லி என்னும் கொடியே இங்கே தல விருட்சம். வெளிப் பிரகாரத்தில் நாகலிங்க மரம் புஷ்பங்களை வர்ஷிக்கிறது. அருகிலுள்ள இடத்தில் துர்க்கை அம்மன் சந்நிதி காணப்படுகிறது. துர்கையை இங்கே அம்மச்சி துர்கை என அழைக்கின்றனர்.  இந்த துர்கை சிலை இங்குள்ள நாகர் தீர்த்தத்தில் கிடைத்ததாகவும் சொல்கின்றனர்.  கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

நாகராஜா கோயிலில் இருந்து நாங்கள் சென்றது திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு! கோயில் பனிரண்டு வரை திறந்திருக்கும் என்று சொன்னார்கள். ஆகவே நேரம் இருக்கிறது என்று நினைத்தோம். வண்டி திருவட்டாறை நோக்கி ஊர்ந்தது. வழியெங்கும் அழகான இயற்கைக் காட்சிகள். பசுமை போர்த்திய வயல்கள், மேகங்கள் மூடிய மலைகள்! காமிராவை எடுத்தால் வண்டி போடும் ஆட்டத்தில் கீழே போட்டுடுவேனோ எனப் பயமாக இருந்தது. ஒரு வழியாகத் திருவட்டாறும் வந்து சேர்ந்தது. அதற்குள்ளாக மனதில் எதையோ நினைத்துக் கொண்டு வந்த நம்ம ரங்க்ஸ் திருவட்டாறில் ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்து தரும் முகவர்கள் யாரேனும் இருந்தால் பார்க்கணும்னு சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் கோயிலுக்குத் தான் முதலில் சென்றோம். கீழே இறங்கும்போது மணி பத்தரைக்குள் தான். ஆனாலும் அங்கிருந்தவர்கள் எங்களைச் சீக்கிரம் போகச் சொல்லி அவசரப் படுத்தினார்கள். நடை சார்த்திவிடுவார்களாம். பதினோரு மணிக்கெல்லாம் மூடி விடுவார்களாம்.

என்னடா இது சோதனை என அந்த உயரமான படிகளில் ஏறணுமேனு யோசித்துக் கொண்டே ஏறினேன். கோயிலின் உள்ளிருந்து வந்த ஒரு பட்டாசாரியார் எங்களைப் பார்த்துவிட்டுச் சீக்கிரம் வாங்க, நடை சார்த்திடுவோம், திருப்பணி நடைபெறுவதால் அதிக நேரம் கோயிலைத் திறந்து வைப்பதில்லை." என்று சொன்னார். மெல்ல மெல்ல மேலே ஏறினோம். மறுபடி திருவனந்தபுரம் மாதிரியே இங்கேயும் குறுக்கு வழியில் (இதுவும் பிரதக்ஷிணமாகவே அமைந்தது. ) சென்றோம். மீண்டும் உயரமான படிகள். ஒவ்வொரு படிக்கும் நடுவே இரண்டடியாவது உயரம் இருந்தது. அவற்றில் ஏறி மேலே உள்ள மண்டபத்தை அடைந்தோம்.

ஆஹா! நீள நெடுகப் படுத்துக் கிடந்தார் ஆதிகேசவர். 22 அடி நீளம். இதுவும் ஒரு திவ்ய தேசமே. 77 ஆவது திவ்ய தேசம் என்கின்றனர். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். கோயில் தமிழ்நாட்டு முறையில் கட்டியது இல்லை. மிக மிகப் பழமையான கோயில் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. பட்டாசாரியார்கள் பொறுமையுடன் நாங்கள் மேலே ஏறி வரும் வரை காத்திருந்து தீப ஆராதனை காட்டி தரிசனம் செய்து வைத்தனர். பெருமாள் தெற்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். வடக்கே திருவடி. மேற்கே திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரைப் பார்த்த வண்ணம் இருப்பதாகச் சொல்கின்றனர். மேற்குப் பார்த்த பெருமாளைப் பார்ப்பது சிறப்பு என்றும், திருவனந்தபுரம் அனந்துவைப் பார்க்கும் முன்னர் இவரை முதலில் பார்க்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். ஆனால் நாங்க அனந்துவைப் பார்த்துட்டு வந்தே கேஷுவைப் பார்த்தோம்.  கேஷு கோவிச்சுக்கல்லாம் மாட்டார் என்று தெரியும்.

இதுவும் சாளக்கிராமங்களால் ஆன கடுசர்க்கரை யோகத் திருமேனி!  இங்கேயும் மூன்று வாயில்கள் உள்ளன. திருமுக வாயிலில் இடக்கையைத் தொங்கப் போட்ட வண்ணம் படுத்திருக்கிறார் கேஷு.  அடுத்த திருக்கர வாயிலில் வலக்கை சின்முத்திரை காட்டுவதையும் சங்கு, சக்கரங்களையும், உற்சவரோடு அமர்ந்திருக்கும் தாயாருடைய வடிவத்தையும் காண முடியும். திருவடி வாயிலில் திருப்பாதங்களின் அருகே சிவலிங்கமும், ஒளிந்திருக்கும் அசுரர்கள் இருவரையும் காண முடியும்.




கோயிலுக்குச் செல்ல ஏறும் படிகள்






உள்ளே பிரகாரத்தின் ஒரு பகுதி


Tuesday, August 25, 2015

கொண்டாட்டமாம் கொண்டாட்டம்!

இப்போது சுடச் சுடப் பேசப்படும் விஷயம் வெங்காய விலையும், ராணுவத்தினரின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டமும் தான். இரண்டுக்காகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் வெங்காய விலை அதிரடியாகக் குறையவும் வாய்ப்புகள் உண்டு. அநேகமாக எந்த அரசு பதவிக்கு வந்தாலும் சில குறிப்பிட்ட ஆண்டுகளில் வெங்காய விலை ஏறுவதும் அதற்கு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. பொதுவாகப் பொருளாதார நிலை பாதிப்பும், சர்வதேசப் பங்கு மார்க்கெட் வீழ்ச்சியும் விலை ஏற்றத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், சீனா தன் நாட்டு நாணய மதிப்பை மிகக் குறைத்ததே சர்வ தேசப் பொருளாதாரச் சிக்கலுக்கு முக்கியக் காரணம் ஆகும்.

நம் நாடு இதைத் தாண்டி நிற்கும். ஏனெனில் இங்கு சேமிப்பு அதிகம். இன்னமும் சில இடங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. குடும்ப வாழ்க்கை முறை அடியோடு அழியவில்லை. என்னதான் தனி மனித சுதந்திரம் என்று பேசிக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் சமூக வாழ்க்கையில் அப்படித் தனி மனித சுதந்திரம் எல்லையற்றுப் போவது சீரழிவை உண்டாக்கும் என்பதையும் அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள். இந்தத் தனி மனித சுதந்திரம் இப்போது எல்லையற்றுப் போய்க் குழந்தை பெற்றுக் கொள்வது கூடத் தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அதைப் பலரும் பாராட்டி ஏற்றுக் கொள்வதும் நடக்கிறது. இது எவ்வளவு தூரத்துக்கு நன்மை பயக்கும் விஷயம் என்பது போகப் போகத் தான் தெரியும். நம் தாய், தந்தை தனி மனித சுதந்திரம் குறித்து நினைத்திருந்தார்களானால், அதைக் கடைப்பிடித்திருந்தார்களானால் நாமே இல்லை!

இப்போது ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் பிரச்னைக்கு வருவோம். எல்லா அரசு ஊழியர்களையும் போல் ராணுவத்தினரின் வேலையும் இல்லை. அவர்களுக்குக் கடுமையான பயிற்சிகள், கடுமையான வேலைகள், நேரக்கட்டுப்பாடு எல்லாம் கிடையாது. எங்கு வேண்டுமானாலும், எந்தச் சூழ்நிலையிலும் இருந்து சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள், பனி பொழியும் இமயமலைச் சாரலில் இருந்து ராஜஸ்தானின் பாலைவனம் வரை அவர்கள் கட்டாயமாக அனைத்தையும் சமாளித்துத் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இதில் பலரும் ஒரே பதவியில் இல்லை. சிலர் ராணுவ வீரர்களே! வேறு சிலர் வேலையில் சேரும்போதே அதிகாரிகளாகச் சேர்ந்திருப்பார்கள். சிலர் ராணுவ மருத்துவத் துறையில் இருக்கின்றனர். சிலர் பொறியியல் துறை. சிலர் தொலைத் தொடர்புத் துறை. சிலருக்கு எழுத்துப் பணி! பலருக்கும் நேரடியாகப் போரிடும் பணி. இப்படி அனைத்தும் சேர்ந்த கலவையே ராணுவம் ஆகிறது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கால கட்டத்தை ஓய்வு பெறுவதற்கு என அரசு நிர்ணயித்துள்ளது. உதாரணமாக ஒரு ராணுவ வீரரின் (ஜவான்) பணிக்காலம் 20 ஆண்டுகள் என நிர்ணயித்திருக்கலாம். அந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவர் பணி ஓய்வும் பெற்றிருக்கலாம். அல்லது 20 ஆண்டுகள் முடிந்த பின்னரும் பெற்றிருக்கலாம். அல்லது பணி உயர்வு 20 ஆண்டுகளுக்குள் பெற்றிருக்கலாம். அப்படிப் பணி உயர்வு பெற்றிருந்தால் எந்தப் பணி உயர்வு பெற்றிருக்கிறாரோ அதற்கென நிர்ணயிக்கப்பட்டக் கால அளவு உண்டு. அது வரை அவர் ராணுவப் பணியில் இருக்கலாம். அல்லது பணி ஓய்வு பெறும் காலகட்டத்தில் பணி உயர்வு பெற்றால் ஆறு மாதம், ஒரு வருடத்துக்குள்ளாக ஓய்வு பெற்றிருக்கலாம். இன்னும் சிலர் பதினைந்து ஆண்டுகளிலேயே தங்கள் பணியை விட்டு விலகி இருப்பார்கள். அவர்களுடைய ஓய்வூதியம் கணக்கிடப்படுவது ஒரு வகை எனில் மற்றவருக்குக் கணக்கிடப் படுவது வேறு வகையாக இருக்கும்.




அதிகாரிகளில் காப்டன், மேஜர், லெஃப்டினன்ட் கர்னல், கர்னல், பிரிகேடியர் என்று பதவி உயர்வு பெற்றுப் பதவியில் இருந்திருக்கலாம். அல்லது காப்டன் பதவியிலேயே ஓய்வும் பெற்றிருக்கலாம். இந்த ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு பணிக்காலம் உண்டு.  ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு சம்பள விகிதம். காப்டன் பதவியிலேயே ஓய்வும் பெற்றிருக்கலாம். பணி உயர்வும் பெற்றிருக்கலாம்.  பணி உயர்வு பெற்றால் அதே மாதிரியான சம்பளம் கிடைக்காது. மேஜர் பணிக்கு என்ன சம்பளமோ அது கிடைத்திருக்கும்.  இரண்டு வெவ்வேறு நபர்கள் ஒரே சமயம் ராணுவப் பணியில் காப்டன் ஆகச் சேர்ந்திருக்கலாம். ஒருத்தர் காப்டன் பதவியிலேயே பணி ஓய்வு பெற்றிருப்பார். இன்னொருவர் பணி உயர்வு பெற்றுப் பணியைத் தொடர்ந்திருக்கலாம். அப்போது இவர்களுக்கான ஓய்வூதியத்தை அவர்கள் கடைசியாக இருந்த பணியின் தகுதியைக் கணக்கிட்டே கொடுக்க முடியும்.


காப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவரும், காப்டனில் இருந்து மேஜர் ஆக உயர்வு பெற்றவரும் ஒரே மாதிரியான  ஓய்வூதியம் வாங்க முடியாதே! பணியில் சேர்ந்தது என்னமோ ஒரே நாள், ஒரே தேதி, ஒரே தகுதியில் பதவியும் இருந்திருக்கலாம்.  மேஜராகப் பணி உயர்வு பெற்ற நபர் பணி ஓய்வு பெறும்போது லெஃப்டினன்ட் கர்னல் ஆகவோ அல்லது கர்னல் ஆகவோ பணி ஓய்வு பெற்றிருக்கலாம். ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கும் அதிகாரிகளும் மீண்டும் ராணுவப் பணிக்கு வருவது உண்டு. அவர்கள் கடைசியாக இருந்த பதவியைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு மறுபதவி கொடுப்பார்கள். ஆக இத்தனை சிக்கல்கள் இருக்கையில் ஒவ்வொன்றையும் கணக்கிட்டு அவற்றைச் சரி செய்த பின்னரே ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கொண்டு வர முடியும். ஆனால் பதவிக்கு வரும் முன்னர் பிரதமர் மோதி இதை மிக எளிதாக நினைத்திருக்கிறார். பதவிக்கு வந்த பின்னரே நடைமுறைச் சிக்கல்கள் புரிய வந்திருக்கிறது. ஆகவே அவர் நேரிடையாக ராணுவத்தினரிடம் அவகாசம் கேட்டிருக்கலாம். நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல. கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். விரைவில் தகுதி அடிப்படையில் எல்லாம் சரி செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் உள்ள இந்தக் கோரிக்கை இப்போது ஒரே ஆண்டில் மோதி பிரதமர் ஆனதும் நிறைவேற்றவில்லை எனப் போராட்டம் வலுத்துள்ளது. சுதந்திர தின உரையில் மோதி இந்தத் திட்டத்திற்கான செயல்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் போராட்டம் வலுவடைந்துள்ளது. அவ்வளவு எளிதாக நிறைவேற்ற முடியாது இந்தத் திட்டத்தை என்று பொருளாதார வல்லுநர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அல்லது நிதி மந்திரியோ, ராணுவ மந்திரியோ நிலைமையை விளக்க வேண்டும். இதற்காக அதிக நிதியும் தேவை.  ஆகவே இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது கொஞ்சம் கடினமே. எல்லாப் பக்கங்களில் இருந்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து அரசால் எதையும் நிறைவேற்ற முடியவில்லை; இது கையாலாகாத அரசு என்பதை நிரூபிக்கப்பாடுபடும் எதிர்க்கட்சிகளுக்குக் கொண்டாட்டம் தான்.  இதனால் இந்த அரசு செய்திருக்கும் ஓரிரு சாதனைகளும் வெளியே தெரியாமல் போய்விடுகிறது.  யாருமே அறியாமல் போய் விடுகிறது. :)

Monday, August 24, 2015

நாகராஜா வந்த கதை!

நாக வழிபாட்டுக்காகக் கோயில்கள் பல இருந்தாலும் நாகர்கோயிலின் நாகராஜா கோயிலே பழமையானதும், முக்கியமானதுமாய்க் கருதப்படுகிறது. இந்தக் கோயிலை வைத்தே இந்த ஊரின் பெயர் அமைந்துள்ளது.  மக்கள் இவ்வுலகப் பற்றின்றி எதிலும் ஒட்டாமல் வாழ வேண்டும் என்பதை நாகங்கள் உணர்த்துவதாக ஆன்மிகப் பெரியோர் சொல்லுவார்கள். எங்கே இருந்தாலும் அந்த இடத்தின் தன்மை நாகத்திடம் ஒட்டாது.  அதே போல் நாம் இவ்வுலக வாழ்க்கையை வாழ்ந்தாலும் அதில் ஒட்டாமல் பற்றற்ற தன்மையுடன் வாழ வேண்டும் என்பதே முக்கியக் கருத்து.

இந்த ஊரில் இந்தக் கோயில் தோன்றியதைக் குறித்துச் சொல்லப்படும் பரம்பரைக் கதையானது என்னவெனில்!  ஒரு வயலில் நெற்கதிர்களை அறுவடை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண்! அப்போது ஒரு கதிரில் இருந்து மட்டும் ரத்தம் பீறிடவே பயந்த அந்தப் பெண் ஊருக்குள் சென்று அனைவரிடமும் இந்தச் செய்தியைக் கூறவே அனைவரும் ஓடோடி வந்து பார்த்தனர். நெற்கதிருக்குக் கீழே நாகராஜா வடிவம் தெரிந்தது. ஆகவே அந்த வயலிலேயே நாகராஜா வடிவத்தைச் சுற்றியும் குடிசை வேய்ந்தனர். ஓலையாலேயே கூரையும் போட்டனர். சிறிய சந்நிதியை அமைத்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி வழிபட்டு வந்தனர்.

அப்போது தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட அரசர் மார்த்தாண்ட வர்மா இங்கு வந்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். ஆகவே கோயிலை விரிவு படுத்திக் கட்டிச் சந்நிதியையும் பெரிதாக்கிக் கட்டிக் கொடுத்தார். ஆனால் கூரையை மட்டும் மாற்ற முடியவில்லை. ஓலைக்கூரையே இருக்கட்டும் என்று உத்தரவு வந்தது. ஆகவே கூரை மட்டும் ஓலையில் தான். இதை இந்தக் கோயிலின் அர்ச்சகர்களே ஆடி மாதத்தில் பிரித்து மீண்டும் கட்டுகின்றனர். மூலஸ்தானத்தில் நாகராஜர் ஸ்வயம்பு மூர்த்தி! ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இங்கு துவாரபாலகர்களாக தர்நேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் காணப்படுகின்றனர். சந்நிதிக்கு நேர் எதிரிலுள்ள தூணில் நாக கன்னி காணப்படுகிறாள். இங்கே இப்போதும் நாகங்கள் வசிப்பதாகவும், அவையே இந்தக் கோயிலைப் பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு நாகராஜாவுக்குப் பால் அபிஷேஹம் செய்வித்து வழிபடுகின்றனர். தினம் காலை பத்து மணி அளவில் பாலபிஷேஹம் நடைபெறும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால் பாயசம் செய்து நிவேதனம் செய்தும், நாகப் பிரதிஷ்டை செய்தும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். ஶ்ரீராமனின் தம்பியான லக்ஷ்மணன் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால் லக்ஷ்மணனின் நக்ஷத்திரம் ஆன ஆயில்யத்தன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.  மூலஸ்தானம் மணல் திட்டாக இருப்பதாகச் சொல்கின்றனர்.  வயல் இருந்த இடம் என்பதால் எந்நேரமும் நீர் ஊறிக் கொண்டிருக்கும். இங்குள்ள இந்த ஈர மணலையே பிரசாதமாகவும் தருகின்றனர். இந்த மணல் உத்தராயணத்தில் வெண்ணிறமாகவும், தக்ஷிணாயனத்தில் கருப்பு நிறமாகவும் காணப்படுகிறது. இதன் காரணம் எவருக்கும் தெரியவில்லை. இது ஓர் அதிசயமாகவும் கூறப்படுகிறது.

ராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதால் அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் பல்லாண்டுகள் இந்தப் பிரதேசம் கேரளாவுடன் சேர்ந்திருந்ததால் கேரளாவின் ஆண்டுத் தொடக்கமான ஆவணி மாதமும் இங்கே மிக முக்கியம். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளும் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறும். இக்கோயில் கட்டுமான அமைப்பும் கேரளப் பாணியிலேயே காணப்படுகிறது என்பதோடு வழிபாடுகளும் கேரள முறைப்படியே நடக்கிறது. இங்கே மூலவர் சந்நிதிக்கு எதிரில் கொடிமரம் கிடையாது. மாறாகப் பக்கத்தில் உள்ள அனந்த கிருஷ்ணர் சந்நிதியிலேயே கொடிமரம் காணப்படுகிறது



நாகராஜா கோயிலின் வெளியே



Saturday, August 22, 2015

மேகம் கருக்குது! மழை வரப் பார்க்குது!

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகம். நேற்றுப் பகல் முழுவதும் வெயில் சுட்டெரிக்க, மாலையில் திடீரென இந்திரனார் கருமேகங்களைத் திரட்டி வஜ்ராயுதத்தையும் ஏவ விண்ணில் ஒரே முழக்கம், பேரொளி! அதைப் பார்த்த உடனேயே  இரவு எட்டு மணிக்கு வாயுவின் ஆட்டம்! உடனே கோபம் கொண்ட வருணன் நீரை வர்ஷிக்க ஆரம்பிக்க, வாயுவின் உக்கிர தாண்டவம் ஆரம்பம் ஆனது. பக்கத்துத் தோட்டத்து மரங்கள் அனைத்தும் எங்கள் பகுதியின் ஜன்னலை உரசி உரசி பெரும் சப்தம்! நான் மட்டும் சளைத்தவனா என வருணன் வேகமாக மழை நீரைக் கொட்ட இவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு விண்ணில் தீபாவளி கொண்டாடினான் இந்திரன்.

பேரிடி முழங்க, அண்டமே கிடுகிடுத்தது. மீண்டும் மின்னல், அதைத் தொடர்ந்து இடி முழக்கம். நல்ல வேளையாக ஏழு மணிக்கெல்லாம் இணைய இணைப்பை நிறுத்தி இருந்தேன். இடியின் ஆரவாரம் அதிகமாய் இருந்ததால் தொலைக்காட்சியையும் நிறுத்தி விட்டுப் போய்ப் படுத்துவிட்டோம். ஏசியும் போடவில்லை. வெளியே வாயுவும், வருணனும் நடத்திய போட்டியில் கடைசியில் ஜெயிச்சது யாருனே தெரியாமல் இருவரும் ஓசைப்படாமல் விலகி விட்டனர்.  தோற்று விட்டோமோ என்னும் வருத்தத்தில் அரை மணி நேரம் வருணன் மெல்ல மெல்ல அழுது பார்த்தான். ஆனால் வாயு இருந்த இடமே தெரியவில்லை. பின்னர் மெல்ல மெல்ல வருணனும் அடங்க இந்திரனும் யதாஸ்தானம் திரும்பி விட்டான். பத்து மணிக்கெல்லாம் கப்சிப்!

மழை பெய்த சுவடே தெரியலை! :(  இன்று சூரியனார் வரலாமா, வார விடுமுறை எடுக்கலாமானா யோசிக்கிறார் போலும்! ஒரு வேளை தாமதமாக வந்தாலும் வருவார். தாமதமாக வந்தாலும் கோபத்தில் சுட்டெரிக்கிறார்.


ஏற்கெனவே பகிர்ந்த பழைய படங்களில் ஒன்று தான். என்றாலும் நேற்றிரவு ஜன்னல் கதவைத் திறக்க முடியவில்லை. சாரல் உள்ளே வந்து அறை முழுவதும் தண்ணீராக ஆகிவிடும் போல் இருந்தது. காற்றின் வேகமும் அதிகம். ஆகவே எடுத்த படத்தையே பகிர்கிறேன். 

Friday, August 21, 2015

நாகராஜா கோயிலில்!

சற்று நேரத்தில் அந்தக் காரின் சொந்தக்காரரும் ஓட்டுநரும் ஆகிய மனிதர் வந்தார். கார் பழைய காலத்து அம்பாசடர் கார். ஆனாலும் சரியான பராமரிப்பு இல்லை. உட்காரும் இடத்தில் போடப்பட்டிருந்த மெத்தை எல்லாம் கிழிந்து வர ஆரம்பித்திருந்தது. ஆனாலும் அந்த ஓட்டுநரின் நிலைமையைப் பார்க்க மனம் கஷ்டப் பட்டது. வயதானவர். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்களாம். ஒரு மகன் மட்டும் ஏதோ வேலை செய்வதாகச் சொன்னார். அவருக்கு ஒரு வருமானமாக இருக்கட்டும் என்ற எண்ணம் எங்கள் இருவர் மனதிலும் தோன்றியது. ஆனாலும் அந்தக் காரில் எல்லா இடங்களும் செல்லவும் யோசனை தான்.

ஆகவே முதலில் ரயில்வே நிலையம் சென்று டிக்கெட் நிலைமையைப் பார்த்துக் கொண்டு, பின்னர் நாகராஜா கோயில், திருவட்டாறு, பத்மநாபபுரம் அரண்மனை, முடிந்தால் திற்பரப்பு அருவி, கன்யாகுமரி, சுசீந்திரம் போன்ற இடங்களைப் பார்த்துக் கொண்டு இரவு திரும்புவதாகப் பேசிக் கொண்டோம். இதில் பத்மநாபபுரம் அரண்மனையைப் பார்க்க நேரம் எடுக்கும் என்று சொன்னதால் திற்பரப்பு அருவியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டோம். மேலும் நாங்கள் முக்கியமாகப் பார்க்க நினைத்தவை கோயில்களே!  மற்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆகவே பேசியபடி அந்த வண்டியில் ஏறிக் கொண்டு முதலில் ரயில்வே நிலையம் சென்றோம். எல்லா வண்டியிலும் பின்னால் ஏறுகின்ற மாதிரி ரங்க்ஸால் இந்த வண்டியில் ஏற முடியவில்லை. ஏற்கெனவே கழுத்துப் பிரச்னை! குனிய முடியாது. ரொம்ப சிரமப் பட்டு ஓட்டுநர் அருகில் அமர்ந்து கொண்டார். பின்னால் உள்ள இடத்தில் நான் அமர்ந்து கொண்டேன். வண்டி திடீர்னு பிரேக் பிடித்தால் உட்கார்ந்திருந்த மெத்தையோடு சேர்ந்து நகர்ந்து முன்னால் தள்ளும்.  பின்னர் மெத்தையைச் சரி செய்து கொண்டு மறுபடி பின்னால் போவேன். மீண்டும் அதே மாதிரி! ஒவ்வொரு வளைவிலும் கூட இப்படித் தான் வேடிக்கை காட்டியது. இதுவும் ஒரு அனுபவம் என மனதுக்குச் சொல்லிச் சமாதானம் செய்தேன்.

ரயில்வே நிலையத்தில் நாங்கள் மறுநாள் போக வேண்டிய வண்டியில் இடம் இருக்கிறதா என்று பார்த்தால்! சுத்தம்! ஒன்றுமே இல்லை. காலை குருவாயூரில் மட்டும் இருந்தது. குருவாயூர் நாகர்கோயிலுக்குக் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து விடும். அத்தனை சீக்கிரம் கிளம்ப முடியுமா என்ற சந்தேகம் வந்தது. ஆகவே பேசாமல் திரும்பி வந்தோம். பயணம் குறிப்பிட்ட நாளில் வாங்கிய பயணச் சீட்டில் தான் என்று நான் நினைத்தேன். ரயில் நிலையத்திலிருந்து நாகராஜா கோயிலுக்குச் சென்றோம். கேரள முறைப்படி கட்டப்பட்டிருந்த கோயில்.  பல வருடங்களாகப் போக நினைத்த கோயில். அங்கே அர்ச்சனை செய்யவென்று என் அண்ணா, தம்பி எல்லோரும் பணம் கொடுத்திருந்தார்கள். எங்கள் குடும்பத்திற்கும் சேர்த்து அர்ச்சனைக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டோம். அவ்வளவு கூட்டமெல்லாம் இல்லை.

தமிழ்நாட்டில் இருந்தாலும், தமிழில் பேசினாலும் கேரள முறைப்படியே வழிபாடுகள் நடைபெறுகின்றன. என்றாலும் அத்தனை நிதானமாக இல்லை என்பது என் வருத்தம். எங்களிடமிருந்து அர்ச்சனைகளுக்கான பொருட்களை வாங்கிக் கொண்டவர் சங்கல்பம் செய்யும் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக சங்கல்பம் செய்ய மறுத்துவிட்டார். பொதுவாய்ச் சொல்லுங்க என்றார். எல்லாம் வெவ்வேறு குடும்பம். அண்ணாவும், தம்பியுமாவது ஒரே கோத்திரம். நாங்க வேறே கோத்திரமாச்சே! அதுக்கும் மறுத்துவிட்டார். பின்னர் வேறொருவர் வந்து ஒரு பேப்பரில் எழுதிக் கொடுங்க, படிக்கிறேன் என்று கூறவே ஏற்கெனவே எழுதி வைச்சிருந்ததை உடனே எடுத்து அவரிடம் கொடுத்தோம். என்ன அர்ச்சனை செய்தாரோ தெரியாது! ஐந்தே நிமிடத்தில் பிரசாதங்கள் புற்று மண்ணோடு வந்துவிட்டன! :( நாங்கள் எங்கள் மனமார இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டோம்.  அது ஒன்று தான் ஒரே வழி! பொதுவாகக் கோயில்களில் அர்ச்சனைகள் எல்லாம் செய்வது இல்லை. இந்தக் கோயிலில் பிரார்த்தனைக்கு என்றே போனதால் அர்ச்சனை செய்தோம். அவர்கள் அளித்த பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டோம். பின்னர் பக்கத்தில் உள்ள சந்நிதிகளுக்குச் சென்றோம்.

அடுத்துத் தலவரலாறு! படங்கள் எடுக்க அநுமதி கிடையாது. வெளியே இருந்து எடுத்திருக்கும் படங்களை மட்டும் பகிர்கிறேன்.



கோயிலின் முக்கிய நுழைவாயில் நேரே நாகராஜா சந்நிதி






சந்நிதியின் இடப்பக்கம் உள்ள நாகர் தீர்த்தம்



Thursday, August 20, 2015

நாகர் கோயிலில் நாங்கள்!

இங்கே

கடைசியாய் மேலுள்ள சுட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டதாக எழுதி இருந்தேன். சரியாக 4 மணிக்கு ஓட்டல் ஊழியர் வந்து ஃப்ளாஸ்கை வாங்கிச் சென்று காஃபி வாங்கி வந்தார். போகும்போதே ஃபில்டர் காஃபியா என்று கேட்டுக் கொண்டு சென்றிருந்தார். காஃபி நன்றாகவே இருந்தது. அன்று எங்கும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுநாள் செல்லலாம் என்றும் முடிவு செய்திருந்தோம். அதன்படி ஓய்வு எடுத்துக் கொண்டு ஐந்தரை மணி போலக் கீழே இறங்கி வந்தோம். ஓட்டலில் லிஃப்ட் இருந்தது. அதோடு இணைய இணைப்பும் இருந்திருக்கிறது. இது காலி செய்கையில் தான் அறிந்தோம். முன்னரே அறிந்திருந்தாலும் நான் கையில் மடிக்கணீனி கொண்டு செல்லாததால் எதுவும் பலன் இல்லை. ஓட்டல் சகலவிதத்திலும் வசதியாகவே இருந்தது. ஏ.சி.யும் நன்கு வேலை செய்தது.முக்கியமாய்க் காற்று வரும் ஜன்னல்கள் இருந்தன.  ச்யாமா என்று பெயர் ஓட்டலுக்கு.

கீழே வந்ததும் மறுநாள் சுற்றிப் பார்க்க வண்டி ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்டோம் அவங்க தொலைபேசிப் பேசிய வண்டிக்காரர்கள் எல்லாம் ஒரு நாள் சுற்றிப் பார்க்கவே வண்டியின் விலையைக் கேட்டனர். பின்னர் நாங்களும் சிறிது நேரம் அவர்கள் கொடுத்த எண்ணில் எல்லாம் பேசிப் பார்த்துவிட்டு ஒன்றும் பலன் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். சுற்றுலா வண்டி ஓட்டுநர்கள் அனைவரும் அங்குள்ள படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள், கோவளம் கடற்கரை மற்றும் உள்ள சின்னச் சின்னச் சுற்றுலாத் தலங்கள் எல்லாமும் போகணும் என்றும் எல்லாவற்றுக்கும் இரண்டு நாட்கள் ஆகும் என்றும் சொன்னதோடு ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக 3,000 ரூபாய் ஆகும் என்றும் சொன்னார்கள். பணம் இருந்தது என்றாலும் அவங்க கேட்ட தொகை அதிகமாகத் தோன்றியது. மேலும் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கோ கோவளம் கடற்கரைக்கோ போகும் எண்ணமும் இல்லை. அதிகம் அலைய முடியாது. முடிந்தால் திற்பரப்பு அருவியைப் பார்க்கலாம் என்று தான் நினைத்தோம். அதுவும் கடைசி விருப்பமாகவே இருந்தது.

ஊட்டி செல்லும் வழியிலும் திருக்கயிலை செல்லும் வழியிலும் பார்க்காத அருவிகளா என்றே தோன்றியது. பின்னர் வந்து முடிவு செய்து கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு பசி வேறு எடுத்ததால் சாப்பிட இடம் தேடினோம். அந்தத் தெருவிலேயே ஒரு ஓட்டல் இருந்தாலும் எல்லோரும் சிபாரிசு செய்தது பேருந்து நிலையம் செல்லும் வழியில் இருந்த விஜய் ஓட்டலும், பேருந்து நிலையத்துக்கு மறுபக்கம் இருந்த ஆரியபவன் ஓட்டலும் தான். ஆரிய பவன் ஓட்டல் செல்ல பேருந்து நிலையத்தின் இன்னொரு வாசலுக்குப் போய் முக்கிய ரஸ்தாவைக் கடந்து எதிர்ப்புறம் செல்ல வேண்டும். சரி இங்கே ஓட்டலில் சும்மா உட்காருவதற்கு நடக்கலாம் என நினைத்துப் பேருந்து நிலையம் வரை நடந்தோம். அங்கிருந்து ஆரிய பவன் செல்லப் பேருந்து நிலையத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் படிகளை ஏறிக் கடக்க வேண்டும். அல்லது சுரங்கப் பாதையில் செல்ல வேண்டும்.

செல்லும் வழியெங்கும் குப்பைகள். படி ஏறிச் செல்வோம் என்று சென்றால் படி எங்கும் கால் வைக்க முடியாதபடி குப்பை மயம்.  படம் எடுக்கக் கை துறுதுறுத்தது என்றாலும் நம் தமிழ்நாட்டை நாமே தாழ்த்தக் கூடாது என்னும் எண்ணத்தில் அதை அடக்கிக் கொண்டேன். மேலும் நாகர்கோயில் ஊர்க்காரங்க பார்த்தாலும், படிச்சாலும் மனம் வேதனைப்படும். சென்னையில் இல்லாத குப்பையா? மாசு சூழ்ந்த நகரம், சேச்சே, நரகம் என்பதில் முதலிடத்தை அன்றோ சென்னை பெற்றிருக்கிறது! :(  பேருந்து நிலையத்தின் படிகளில் ஏறிச் சாலையின் மறுபக்கம் செல்ல முயற்சித்தோம். முக்கியச் சாலை என்பதோடு ஒருவழிப் போக்குவரத்தும் கூட என எண்ணுகிறேன். வண்டிகள் வந்த வண்ணமிருந்தன. கொஞ்சம் குறைந்த சமயம் நாலைந்து பேராகக் கையைக் காட்டி வண்டிகளை நிறுத்திச் சாலையைக் கடந்து சாலையின் மறுபக்கம் வந்தோம். ஆரிய பவனில் உள்ளே செல்லவும் படிகள் ஏற வேண்டும். ஆரிய பவனுக்குள் சென்று இரவு உணவையும் சேர்த்தே சாப்பிட்டு விடலாம் என முடிவு செய்து உணவு உண்டோம். மணி அப்போதே ஏழு ஆகி இருந்தது.

மறு நாளும் அங்கேயே உணவு எடுத்துக் கொள்ளலாம் என்பது ரங்க்ஸின் ஆவல். ஆனால் எனக்கோ படிகள் ஏற வேண்டியதில் இருந்த கஷ்டமும், சாலையைக் கடக்க வேண்டிய அவஸ்தையுமே முன்னால் நின்றது. ஆகவே மறுநாள் நான் வரவில்லை என்று சொல்லி வேண்டுமானால் அவர் மட்டும் போய்ச் சாப்பிட்டுவிட்டு எனக்கு வாங்கி வரட்டும் என்றும் சொல்லி விட்டேன். பின்னர் மறுபடி ஓட்டலுக்கு வந்து சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டுப் படுத்தோம். ஶ்ரீரங்கம் திரும்ப வேண்டி வாங்கிய எங்கள் பயணச் சீட்டு வெள்ளிக் கிழமைக்கு இருந்தது. இன்று செவ்வாய் தான். பார்க்க வேண்டிய இடங்கள் என்ற பட்டியலில் நாகராஜா கோயில், திருவட்டாறு, பத்மநாபபுரம் அரண்மனை, கன்யாகுமரி கடற்கரை முக்கடல் சங்கமிக்கும் இடம், பகவதி அம்மன் கோயில் ஆகியன இருந்தன.

வள்ளுவர் சிலை இருக்கும் குன்றிற்கும் விவேகானந்தா பாறைக்கும் செல்லத் திட்டம் போடவில்லை. விவேகானந்தா பாறைக்கு ஏற்கெனவே போய் வந்தாச்சு என்பதுடன், உள்ளே படிகள் ஏற வேண்டும். வள்ளுவர் சிலைக்கும் மேலே செல்லப் படிகள் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று சொல்லி விட்டேன். ரங்க்ஸுக்கும் மருத்துவர் தடை செய்திருப்பதால் அவரும் ஏற முடியாது. அவ்வளவு உயரம் ஏறி விட்டு இறங்குவதில் பிரச்னை வந்தால் என்ன செய்வது! ஆகவே பார்க்க வேண்டிய இடங்கள் சுருங்கி விட்டன. எல்லாவற்றையும் நாளை ஓர் நாளில் முடித்து விடலாம். பின்னர் இங்கே ஏன் உட்கார்ந்திருக்க வேண்டும்? அநாவசியமாக ஓட்டல் வாடகை 1,200 கொடுக்க வேண்டும் அல்லவா? ஆகவே பயணச் சீட்டை ஒரு நாள் முன்னதாக வாங்கலாமா என்னும் யோசனை ரங்க்ஸுக்கு வந்துவிட்டது.

அவருக்கு இப்படித் தான் திடீர் திடீர்னு பயணத்தை மாற்றும் எண்ணம் வரும். மூன்று முறை யு.எஸ் போனப்போவும் இப்படித் தான் நாங்கள் கிளம்பும் தேதிக்கு முன்னரே பயணத்தை மாற்றிக் கொண்டு கிளம்ப வைத்தார். ஆகவே இது ஒன்றும் புதிதல்ல என்பதால் நான் மறுநாளைக்குக் காத்திருந்தேன். மறுநாள் காலை முதல் நாள் காஃபி வாங்கித் தந்த ஊழியர் இல்லை. வேலை நேரம் முடிந்து வீட்டுக்குப் போய்விட்டார். அநாதைப் பெண்ணை மணந்திருக்கிறாராம். அந்தப் பெண்ணுக்கு இப்போது உறவு என்பதே இவர் தானாம். மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு ஊழியர் காஃபி வாங்கித் தந்தார். இது திடீர் காஃபி. ஃபில்டர் காஃபி இல்லை. நெஸ்கஃபே! பரவாயில்லைனு குடிச்சுட்டுக் குளிச்சு முடிச்சுக் கிளம்பினோம். வண்டி தேடுதல் வேட்டையில் இறங்கினோம். பக்கத்து ஓட்டலில் டூரிஸ்ட் கார் கிடைக்கும் என அறிவிப்பு இருக்கவே அங்கு போய் விசாரித்தோம். அங்கே நின்று கொண்டிருந்த அம்பாசடர் காரின் சொந்தக்காரர் கூட்டிச் செல்வார் என்றும் இப்போது வீட்டிற்குப் போயிருப்பதாகவும் தொலைபேசி வரவழைப்பதாகவும் சொன்னார்கள். சரினு அவரை வரச் சொல்லிட்டுக் காலை ஆகாரத்தை விஜய் ஓட்டலிலேயே  முடித்துக் கொண்டோம்.



Monday, August 17, 2015

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா!


ஆடி மாதம் மாவிளக்குப் போடும் மாதம். இந்த வருடம் சரியாக நாளே அமையாத காரணத்தால் நேற்றுத் தான் எங்க குலதெய்வம் கோயிலுக்குப் போய் மாவிளக்குப் போட்டுட்டு வந்தோம். காலையிலேயே ஆறு மணிக்குக் கிளம்பிட்டோம். கையிலே காஃபியும், சாப்பாடும் எடுத்துக் கொண்டோம். காலை ஆகாரம் நான் சாப்பிடப் போவதில்லை என்பதால் ரங்க்ஸ் தனக்கும் வேண்டாம்னு சொல்லிட்டார்.  ஆறு மணிக்குக் கிளம்பி சரியாக ஒன்பதரைக்குப் பரவாக்கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். முதலில் பெருமாள் கோயிலில் சஹஸ்ரநாம அர்ச்சனை முடித்துக் கொண்டு பின்னர் மாரியம்மன் கோயிலுக்குப் போனோம். ஒரே கூட்டம். யாருக்கோ வளைகாப்புப் போடுகிறார்கள். ஆகவே கூட்டம் தாங்கவில்லை. சாப்பாடெல்லாம் வந்து இறங்கி இருந்தது. மாவிளக்குப் போட்டு முடித்துக் கோயிலில் இருந்து கிளம்ப பனிரண்டு மணி ஆகி விட்டது. அதன் பின்னர் அங்கிருந்து கருவிலி சென்றோம். மேலே உள்ள பிள்ளையார் கருவிலிக் கோயிலின் பிரகாரத்தில் சுற்றுச் சுவரில் உள்ள கோஷ்ட மூர்த்தங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு! சுவரின் ஒரு மூலையில் தக்ஷிணாமூர்த்திக்கு அருகே இந்தப் பிள்ளையார் இருக்கிறார். மொத்தம் ஓர் அங்குலத்திற்குள் தான் இருப்பார் என எண்ணுகிறேன். இந்தப் பிள்ளையார் நம்ம ரங்க்ஸின் அருமை நண்பர். ஊரில் இருக்கும்போதெல்லாம் இவருக்கு எண்ணெய்க்காப்புச் சார்த்திப் பூக்களால் அலங்கரிப்பாராம். இப்போவும் யாரோ அலங்கரித்திருக்கிறார்கள். அங்கே போகும்போதெல்லாம் இவரைப் பார்க்கத் தவறுவது இல்லை. நேற்றும் பார்த்தோம். கையிலே செல் தான் இருந்தது. பிள்ளையாரை ஒரு படம் எடுத்துக் கொண்டேன். எத்தனை முறை எடுத்திருப்பேன் எனத் தெரியாது! :)




தக்ஷிணாமூர்த்தி! பிள்ளையாருக்கு இடப்பக்கம் உள்ள மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார். முகத்தில் சொல்லவொண்ணா சாந்தம், அமைதி! அழகு. இங்குள்ள அர்த்தநாரீசுவரின் அழகையும் பார்த்த வண்ணம் இருக்கலாம். இன்னொரு தரம் போகையில் காமிரா எடுத்துப் போய்ப் படம் பிடித்து வருகிறேன். வழியெங்கும் பசுமைக்காடாகக் காட்சி அளித்தது. அந்தப் பசுமையைப் பார்க்கப் பார்க்க மனம் ஆனந்தம் அடைந்தது. பரவாக்கரை செல்லும் வழியில் ஓர் வயலில் மாடு வைத்து உழுது கொண்டிருந்தனர். இன்னமும் மாடுகள் ஏர் ஓட்டுவதைப் பார்க்கவும் சந்தோஷமாகவே இருந்தது. சில இடங்களில் நடவு முடிந்து விட்டது. சில இடங்களில் பயிர் நடவுக்குக் காத்திருக்கிறது. ஒவ்வொன்றும்  ஒவ்வொரு பச்சை நிறம். 

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா--நிந்தன் பச்சை நிறம் தோன்றுதய்யே நந்தலாலா!



எல்லோரும் கேட்டுக் கொண்டதன் பேரில் முன்னர் நான் மின் தமிழுக்கு எழுதிய கட்டுரையில் பகிர்ந்த மாவிளக்குப் படம் இங்கேயும் பகிர்கிறேன்.


இங்கே கிடைக்கும் சுட்டியில் முழுக்கட்டுரையும் வாசிக்கலாம்.

Saturday, August 15, 2015

சுதந்திரமாம், சுதந்திரம்

அப்புவைத் திரும்ப மும்பைக்கு அனுப்பி வைச்சாச்சு. அப்புவுக்குச் சொல்ல முடியாத வருத்தம். காலையில் எழுந்ததில் இருந்து அது சிரிச்ச முகமாவே இல்லை. அதோடு பண்ணிக் கொடுத்திருந்த சாப்பாட்டையும் மறந்து இங்கேயே வைச்சுடுத்து. நானும் கவனிக்கலை. அவ அம்மாவும் கவனிக்கலை! :( அவங்க கிளம்பிப் போய் அரை மணி கழித்துத் தான் நான் பார்த்தேன். காலையிலிருந்து சாப்பாடுப் பார்சலைக் கையில் கொடுத்து எடுத்து வைக்கச் சொன்னபோதெல்லாம் அப்பு பேசாமல் இருந்து விட்டது. :( என்னவோ போங்க!

அப்புவுக்கு இங்கே வரும்போது இந்தியா பிடித்திருந்தது. இப்போது இந்தியா பிடிச்சிருக்கா, பிடிக்கலையானு சொல்ல முடியலை! என்று சில சமயமும், பிடிக்காவிட்டாலும் இங்கே வந்து உங்களை எல்லாம் பார்த்துட்டுப் போவேன் என்று சில சமயமும் சொல்கிறது. ஏன் இந்தியா பிடிக்கலை என்றால் ஒரே குப்பை, கூட்டம், சத்தம்! என்றெல்லாம் சொல்கிறது.

எங்க வீட்டிலேயே நான் கொஞ்சம் சத்தமாய்த் தான் பேசுவேன். வெளியே இருந்து பார்க்கிறவங்க/கேட்கிறவங்க நான் ஏதோ சண்டை போடுவதாய்க் கூட நினைக்கலாம். :) ஆனால் அதுக்காகவெல்லாம் என்னோட தொண்டையின் சுருதி குறைவதில்லை. இதுக்கே இப்படின்னா ஊரிலே உள்ள மத்தவங்களுக்குக் கேட்கணுமா?

ஆனால் நான் சொன்னேன், எப்படி இருந்தாலும் இது எங்க இந்தியா! எனக்கு இந்தியா தான் பிடிச்சிருக்கு! என்று அப்புவிடம் சொன்னேன்.   ஏனெனில் இது நம் தாய் நாடு. என்ன நடந்தாலும் நாம் விட்டுக் கொடுக்க இயலாது. நாட்டிற்காக ஒன்றுபடுவோம்!
**************************************************************************************


தேசியக் கொடி க்கான பட முடிவு


கடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரில் ஒரு நாள் ஒரு மணி நேரம் கூட கூட்டத் தொடரை நடத்தவிடாமல் தேசியக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சி, சுதந்திரம் வாங்கித் தந்ததாகப் பீற்றிக்கொள்ளும் கட்சி பெரு முயற்சி எடுத்துத் தடுத்துவிட்டது. கடைசியில் அவங்களோடு கூட்டுச் சேர்ந்தவங்களுக்கே அவங்க நடவடிக்கை பிடிக்கவில்லை! ஆனாலும் அந்த தேசியக் கட்சி திருந்தவில்லை. காரணம்?

பொறாமை தான்!

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஈட்டித் தரும், தரப்போகும் அந்நிய முதலீட்டைக்குறித்த பொறாமை,

பல தேசங்களிலும் இந்தியாவின் வலுவான ஸ்திரத் தன்மையையும், அதன் இறையாண்மையையும் பலப்படுத்தியதைக் கண்டு ஏற்பட்ட பொறாமை,

நில மசோதாத் திட்டம் நிறைவேறினால் உண்மையிலேயே சிறு விவசாயிகள் பலனடைந்துவிட்டால் அதன் மூலம் தங்கள் கையாலாகாத் தன்மை வெளிப்பட்டுவிடுமோ என்னும் பொறாமை

எல்லா மாநிலங்களையும் ஒன்று போல் கருதி எல்லா மாநிலங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்த பொறாமை

வட கிழக்கு மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும் தனிப்பட்ட முக்கியத்துவம் குறித்த பொறாமை

நாகாலாந்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்த பொறாமை

மியான்மரில் நடத்திய அதிரடித்தாக்குதல் குறித்த பொறாமை

பொருளாதார முன்னேற்றங்களைக் குறித்த பொறாமை

இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகலாம். விரிவாக அலசத் தொடங்கினால் பல பதிவுகள் ஆகிவிடும்.  மொத்தத்தில் பிரதமரையும் ஆளும் கட்சியையும் பலவீனமாக ஆக்கி, செயலற்றவர்களாக ஆக்கி நாட்டை முன்னேற்றப்பாதையில் செல்வதில் இருந்து தடுக்கும் தேசியக் கட்சி காங்கிரஸுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரியப்படுத்துவதோடு அல்லாமல், தேசத்தின் ஒற்றுமையும், தேசத்தின் சுபிக்ஷத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் கட்சிகளுக்கு நம் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வோம்.

உண்மையாக தேசத்துக்கு நன்மை செய்யும் கட்சி எது என்பதைப் புரிந்து கொள்வோம். பிரதமரின் கரங்களை வலுப்படுத்துவோம். இந்தச் சுதந்திர நன்னாளில் தேசத்திற்கும், தேச மக்களுக்கும் ஊறு விளைவிக்கும் வேலைகளைச் செய்யும் கட்சிகளைப் புறம் தள்ளுவோம். நாட்டின் 69 ஆவது சுதந்திர தினத்தை நாட்டை பலப்படுத்தும் விதமாக மாற்றுவதற்கு வேண்டிய உறுதிமொழிகளை எடுப்பதோடு மட்டுமில்லாமல் செயலாற்றுவதிலும் ஊக்கம் காண்பிப்போம்.

ஜெய் ஹிந்த்!

பாரத மாதாவுக்கு வந்தனம்!

Friday, August 14, 2015

அம்மா, அம்மா, கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி!

"எங்கள்" ப்ளாகில் எழுதின அத்திரிமாக்கு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மக்குனு படிச்சேன்! :P அத்திரிபாச்சா கதையைப் படிச்சதும் இன்னொரு கொழுக்கட்டைக் கதை நினைவில் வந்தது.

அம்மாக்காரி ஒரு நாள் கொழுக்கட்டை பண்ணினாங்களாம். பொண்ணுக்கோ பள்ளிக்குப் போக மனசில்லை. வீட்டில் இருந்து கொழுக்கட்டை திங்கணும்னு ஆசை. அம்மாக்காரி சொன்னாங்களாம், நீ போயிட்டு வா! நான் பண்ணி வைக்கிறேன், சாயங்காலம் வந்து கொழுக்கட்டை தின்னலாம்னு சொல்லிட்டாங்க! பொண்ணும் பள்ளிக்குப் போயிட்டா. பள்ளியிலே கொழுக்கட்டையே நினைவு! சாயந்திரமாப் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தா! அம்மா, அம்மா, கொழுக்கட்டை எங்கேனு கேட்டா!

அம்மாவுக்கு அப்போ வேறே ஏதோ வேலை, ஆகவே அங்கே பாத்திரத்தில் வைச்சிருக்கேன், எடுத்துக்கோனு சொன்னாங்க! பொண்ணும் பாத்திரத்தில் கைவிட்டு எடுக்கப் போனாள். ஒரே அதிர்ச்சி. அம்மா! என்று கூக்குரல் இட்டாள்!

என்னடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி?

அம்மா, அம்மா,கொழுக்கட்டைக்குக் காது உண்டோடி?

அம்மா, அம்மா, கொழுக்கட்டைக்குப் பல்லு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வாலு உண்டோடி?

என்று கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்க, அம்மாவுக்கு ஒண்ணும் புரியலையாம். வந்து பாத்திரத்தைப் பார்த்தால் அங்கே எலி ஒன்று எல்லாக் கொழுக்கட்டைகளையும் தின்றுவிட்டு அசைய முடியாமல் படுத்துக் கிடந்ததாம்!  கொழுக்கட்டைப் படம் மட்டும் தனியாத் தேட முடியலை என்பதால் நான் முன்னர் பிள்ளையார் சதுர்த்திக்குப் போட்ட படத்தையே போட்டிருக்கேன். :)

Thursday, August 13, 2015

அடடா, மைசூர்ப்பாகு! ஓடி வாங்க!

ஹிஹிஹிஹி, இன்னும் ரெண்டு, மூணு நாளைக்கு இதாங்க! மாமியாருக்குக் கொடுத்து அனுப்பறதுக்காக நேத்து மைசூர்ப்பாகு பண்ணினேன். கொஞ்சம் இல்லை, நிறையவே மிருதுவாகப் பண்ணினேன். வயசானவங்க சாப்பிடணுமே!

அதைத் தாம்பாளத்தில் கொட்டியதுமே படம் எடுக்க நினைச்சு அடுத்தடுத்த வேலைகளில் மறந்து போச்சு, அதுக்குள்ளே ரங்க்ஸ் பாகப்பிரிவினையை முடிச்சுட்டார். என் பங்குக்கு வந்தது இது மட்டும் தான்!

போனால் போகட்டும் போடானு மனசுக்குள்ளே பாடிக்கொண்டே இதை மட்டும் இப்போ செல்லில் படம் எடுத்தேன். இல்லைனாலும் இப்போல்லாம் தித்திப்புப் பண்டங்கள் சாப்பிடறதைக் குறைச்சாச்சு., இதுவே ரங்க்ஸ் சாப்பிட மாட்டார். நான் மட்டுமே! :) அதான் போதும்னு விட்டுட்டோம். :)







கீழே உள்ளது கொஞ்சம் பரவாயில்லையா வந்திருக்குனு நினைக்கிறேன். தீர்ந்து போகிறதுக்குள்ளே ஓடி வந்து எடுத்துக்குங்க! யார் முதல்லே வரப் போறது? 

Wednesday, August 12, 2015

அப்பு ஸ்பெஷல், சி.உ.கி. கறி! :)

அப்புவுக்குச் சின்ன உருளைக்கிழங்கு பிடிக்குது. ஆகவே இன்னிக்கும் அதைச் செய்தேன். கீழே படம் போட்டிருக்கேன், பாருங்க. கூடவே கல்சட்டியில் கொத்தவரைக்காய்ப் பொரிச்ச குழம்பும்! பொரிச்ச குழம்புன்னா எங்க மதுரைப் பக்கமெல்லாம் புளி விட்ட கீரை செய்வோம். இன்னிக்கு ஒரு மாறுதலுக்கு அப்படிச் செய்யலாம்னு நினைச்சால் அப்பு சி.உ.கி. தான் வேணும்னு சொல்லி விட்டது! அதோடு கீரை வாங்கி வர நேரம் வேறே ஆயிடுச்சு! ஆயந்து நறுக்க நேரம் ஆகும் என்பதால் கீரையை நாளைக்கு எடுத்து வைச்சாச்சு!


ஹிஹிஹி, தம்பி, வா.தி. வந்து இதெல்லாம் ஒரு போஸ்டானு கேட்கிறதுக்குள்ளே ஓட்டமா ஓடிடறேன். எல்லோரும் சி.உ.கி. கறி சாப்பிட்டுட்டு  இருங்க.காரம் கம்மியாத் தான் போட்டிருக்கேன். குழந்தை சாப்பிடணுமே! நாளைக்கு அநேகமா வேறே ஒண்ணு போடலாம். :) என்னனு ஊகம் செய்து வைங்க!


கல்சட்டியில் பொரிச்ச குழம்பு!







சின்ன உருளைக்கிழங்கு வதக்கல்! நிதானமாச் சாப்பிடுங்க, நாளைக்கு நேரம் இருந்தால் வருவேன். 

Friday, August 07, 2015

கொஞ்ச நேரம் கிடைச்சது எட்டிப் பார்க்கிறேன்! :)

அப்புவோட அப்பாவும், அக்காவும் திரும்ப ஊருக்குப் போகணும்னு கிளம்பி மும்பை போயாச்சு. அப்புவும், அவ அம்மாவும் இருக்காங்க. அடுத்த வாரம் போறாங்க! அப்புவுக்குப் பொழுதே போகலை! சின்னக் குரலில் பேசிக் கொண்டு, கோவித்துக் கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கிறது.  எனக்கு உதவி செய்யறேன்னு சொல்கிறது. இன்னிக்கு மாதுளம்பழம் சாப்பிட்டுவிட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு அலம்பி வைக்க எழுந்தேன். அப்பு தான் வாங்கி அலம்பி வைப்பதாகச் சொல்லிக்கொண்டு வந்து விட்டது. வேண்டாம்னு சொல்லிட்டு நான் அலம்பி வைச்சேன். அவ அக்காவைப் போல் அமெரிக்கன் நேசல் ஆக்சென்ட்(American Nasal Accent) இல் பேசலை. கொஞ்சம் புரியறாப்போல் நிதானமாப் பேசறா!

திங்களன்று உள்ளூர்க் கோயில்களுக்குப் போனோம். சமயபுரத்தில் முன்னெல்லாம் நூறு ரூபாய்ச் சீட்டு வாங்கினால் நேரே போய் சாமி தரிசனம் செய்யலாம். ஆனால் இப்போ அதுக்கும் சுத்துத் தான்! மற்ற இடங்களில் எல்லாம் எளிதாக தரிசனம் செய்தோம்  செவ்வாயன்று சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில் போய்விட்டு அங்கிருந்து திருநள்ளாறு போனோம். வைத்தீஸ்வரன் கோயிலில் ஏகக் கூட்டம்.  ஆனால் அங்கே கட்டளை வைத்திருப்பதால் குருக்களுக்கு முன் கூட்டித் தகவல் அனுப்பி இருந்தோம். குருக்களும் எங்களுக்காகக் காத்துட்டு இருந்தார். எல்லா சந்நிதிகளிலும் தரிசனம் முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி மாயவரத்தில் அபிராமி ஓட்டலில் ரங்க்ஸும், மாப்பிள்ளையும் மட்டும் சாப்பிட்டார்கள். நாங்க நாலு பேரும் ஜூஸ் குடிச்சோம்.

அதன் பின்னர் மாயவரத்திலிருந்து நேரே திருநள்ளாறு சென்றோம். இரண்டே முக்காலுக்கே போய்விட்டோம். அங்கேயும் குருக்கள் தெரிந்தவர் இருப்பதால் அவங்க வீட்டில் நாலு மணி வரை உட்கார்ந்திருந்துவிட்டுப் பின்னர் கோயில் திறந்ததும் தரிசனம் முடித்துக் கொண்டு நாலரை, நாலே முக்காலுக்கெல்லாம் கிளம்பி விட்டோம். திரும்பும்போது திருவாரூர் வழி சென்றால் எளிது என எல்லோரும் சொல்லவே அப்படிப் போனதில் தாமதம் தான் ஆயிற்று. எட்டு மணிக்குத் தான் ஶ்ரீரங்கம் வந்தோம்.

சிதம்பரம் செல்ல ஶ்ரீரங்கத்திலிருந்து ஜெயங்கொண்டான் வழியாக கங்கை கொண்ட சோழபுரம் சென்று அங்கிருந்து கொஞ்சம் தடம் மாறிச் செல்ல வேண்டி இருக்கிறது. சரியாகக் காலை ஆறு மணிக்குக் கிளம்பினோம். ஒன்பது மணிக்கெல்லாம் சிதம்பரம் கீழ வீதி போயாச்சு. பத்து மணிக்கெல்லாம் கால பூஜை நேரம் என்பதால் நேரே கோயிலுக்குப் போய்விட்டோம். அதன் பின்னர் தீக்ஷிதர் வீட்டுக்குப் போயிட்டு அங்கே அவர் கொடுத்த கல்கண்டு சர்க்கரைப் பொங்கலைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வைத்தீசுவரன் கோயிலுக்குப் போனோம்.

வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கீழே இறங்கிப் பார்க்க ஆசைதான். முதல்முறையாகப் பார்க்கிறேன் இந்தக் கோயிலை. ஆனாலும்  கோபுரம் என்னதான் பெருவுடையார் கோயில் கோபுரம் போல் இருந்தாலும், ஏதோ ஒரு குறை தென்படத் தான் செய்தது, அதோடு அவ்வளவு உயரமும் இல்லைனு நினைக்கிறேன், வண்டி ஓட்டுநர் வண்டியை நிறுத்தறேன், இறங்கிப் பாருங்கனு தான் சொன்னார். ஆனால் ரங்க்ஸ் தான் அப்புறமா நம்ம அம்மாவை (என்னைத் தான்) இங்கேயே விட்டுட்டுப் போறாப்போல் ஆயிடும்னு சொல்லி வண்டியை நிறுத்தவே விடலை. படம் எடுக்க முயன்றேன். படமா, பப்படமானு தெரியலை. சரியாவே வரலை. பொண்ணு எடுத்திருக்கா. நல்லாவும் வந்திருக்கு. அனுப்பறேன்னு சொல்லிட்டு அனுப்பவே இல்லை! :(  ஆனால் கோயிலைப் பார்க்கையில் மனம் என்னமோ ஒரு இனம்புரியாத சோகத்தில் ஆழ்ந்தது! ஏன் என்றே புரியவில்லை. எல்லாக் கோயில்களையும் பார்க்கையில் ஏற்படும் பெருமித உணர்வு வரவில்லை.

கங்கை கொண்ட சோழபுரம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்




சும்மா ஒரு மாறுதலுக்கு எங்க வீட்டு மொட்டை மாடிப் படம் வேறே கோணத்தில் பொண்ணு எடுத்தது ரெண்டு கீழே போடறேன்.





காவிரி வித்தியாசமான ஒரு கோணத்தில்





உ.பி.கோயிலும் ஒரு வித்தியாசமான பார்வையில்