எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 31, 2015

உங்க வீட்டிலே மதுரையா, சிதம்பரமா? எங்க வீட்டிலே திருச்செங்கோடு! :)

நாமக்கல் ஆஞ்சநேயர் 18 அடி உயரம் என்று சொல்கின்றனர். கையில் ஜபமாலையும் வைச்சிருக்கார். வாளும் வைச்சிருக்கார். அதுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இவர் பல காலமாக இங்கே இருப்பதாகப் பட்டாசாரியார் சொல்கிறார். ஒரு சமயம் மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணுவின் நரசிம்மாவதாரத்தைப் பார்க்க விரும்பினாளாம். அதற்கு விஷ்ணு பூலோகத்தில் கமலதீர்த்தக்கரையில் தவம் செய்யச் சொல்லி அனுப்பி வைக்கிறார். மஹாலக்ஷ்மியும் அங்கே தவம் செய்கிறாள். அப்போது கண்டகி நதியில் நீராடிய அனுமன் அங்கிருந்து சாளக்ராமம் ஒன்றை வழிபாட்டுக்காக எடுத்து வந்தார். விண்ணில் பறந்து வருகையில் கமலதீர்த்தத்தைக் காண்கிறார். இத்தலத்தில் நீராடலாம் எனக் கீழே இறங்கினவர் கையில் உள்ள சாளக்ராமத்தை எங்கே வைப்பது எனப் பார்க்கிறார். கீழே வெறும் தரையில் வைக்கக் கூடாது என்பதால் சுற்றும், முற்றும் பார்த்தவருக்கு அங்கே மஹாலக்ஷ்மி தவம் செய்து கொண்டு உட்கார்ந்திருக்கும் காட்சி தென்பட்டது. உடனே மஹாலக்ஷ்மியிடம் போய் அவளை வணங்குகிறார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

தவம் கலைந்து பார்த்த லக்ஷ்மி அனுமனைப் பார்க்கிறாள். அனுமனிடம் அவள் இங்கே வந்திருக்கும் காரணம் கேட்க நரசிம்மரைப் பார்க்கும் ஆவலில் வந்ததை லக்ஷ்மியும் சொல்கிறாள். பின்னர் ஆஞ்சநேயர் தான் நீராடி வரும்வரையில் கையில் வைத்திருக்குமாறு சாளக்ராமத்தை லக்ஷ்மியிடம் கொடுக்கிறார். விரைவில் வருமாறு கூறிய லக்ஷ்மி அவர் வர தாமதம் ஆனால் தான் சாளக்ராமத்தைத் தரையில் வைத்துவிடுவேன் என்றும் சொல்கிறாள். நினைத்தபடியே ஆஞ்சநேயர் வரத் தாமதம் ஆக, சாளக்ராமத்தைக் கீழே வைத்துவிடுகிறாள் லக்ஷ்மி. அந்த சாளக்ராமத்தைப் பெயர்த்து எடுக்க ஆஞ்சநேயர் முயன்றபோது அது மாபெரும் மலையாக உருவெடுத்துவிட்டது. அங்கே நரசிம்மரும் தோன்றி மஹாலக்ஷ்மி, ஆஞ்சநேயர் இருவருக்கும் அருள் பாலித்தார். மஹாலக்ஷ்மியை மார்பில் நரசிம்மர் தரித்துக் கொள்ள நரசிம்மரை வணங்கியவாறு அனுமனும் அங்கேயே தங்கிவிட்டார்.

அங்கே தரிசனம் நன்றாகவே செய்து வைத்தார் பட்டாசாரியார். அதன் பின்னர் நாமகிரித் தாயாரையும் போய்ப் பார்த்தோம். நாமகிரித் தாயாரிடம் வேண்டினால் கணக்கு நன்றாக வருமாம். என்ன செய்யறது? ரொம்ப லேட்! பள்ளி இறுதி வகுப்புக்கு முன்னாடியாவது தெரிஞ்சிருக்கலாம். கணக்கிலே 75%மார்க் தான் எடுத்தேன். நூற்றுக்கு நூறு எடுத்திருக்கலாம். கொடுத்து வைக்கலை!  பங்குனி உத்திரத்தன்று இங்கே சேர்த்தி உற்சவம் முன் மண்டபத்தில் ஊஞ்சலில் இருவரையும் அமர்த்தி நடக்கிறது.  திருமணத்தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்கும் இங்கே பிரார்த்தித்துக் கொள்வார்களாம்.

மற்றவை ஏற்கெனவே சொல்லிட்டேன். :) அருமையான குடவரைக் கோயில். மேலே போக முடியலைனு வருத்தம் தான். ஆனால் என்ன செய்வது? போக முடியாது. அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சத்திரத்துக்குச் சென்றோம். ஒரு சினிமா தியேட்டரைக் கல்யாண மண்டபமாக மாற்றி இருக்கிறார்கள். சக்தி கலை அரங்கம் என்னும் அந்தச் சத்திரம் கோயிலில் இருந்து 2, 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நல்ல பசி! அங்கே போனதும் நேரே காலை ஆகாரம் கொடுக்கும் இடத்திற்குச் சென்றோம். இங்கே ஒரு புதுமையாக ப்ரெட் சான்ட்விச்சும் காலை உணவில் பரிமாறினார்கள். ஸ்வீட் என்ற பெயரில் ஒரு வஸ்து! என்னனு கண்டுபிடிக்க முடியலை!  மற்றவை நன்றாகவே இருந்தன. காலையில் பூரிக்குப் பதில் சப்பாத்தி, குருமா/ காலை வேளை மசாலா சேர்த்த உணவு வேண்டாம்னு சொல்லிட்டு இட்லி, கொஞ்சம் பொங்கல் மட்டும் சாப்பிட்டேன். பின்னர் திருமணம் முடிய பத்தரை மணி ஆயிற்று, திருமணம் முடிந்ததும் தம்பதிகளை வாழ்த்திவிட்டு முடிந்த வரை சாப்பிட்டுவிட்டுத் திருச்செங்கோடு போகலாம்னு கிளம்பினோம்.

நம்ம ரங்க்ஸ் நேரே சமையல் ஒப்பந்ததாரரையே சந்தித்துக் கேட்டார். இப்போத் தான் உலையே வைச்சிருக்கோம்னு பதில் வந்தது. எப்படியும் சாப்பாடு போட ஒன்றரை மணி நேரத்துக்குக் குறையாது. தாமதமாக வந்த சிலருக்கு அப்போது கூடக் காலை ஆகாரம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆகவே திருச்செங்கோடு போயிடலாம்னு முடிவு செய்து கொண்டு நாங்கள் மூவரும் கிளம்பினோம்.  நாமக்கல்லில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரம். பல வருடங்களாகப் பார்க்க நினைத்த க்ஷேத்திரம். மலை மேலேயே வண்டிகள் போகும் வண்ணம் பாதை அமைத்திருக்கிறார்களாம். ஆகவே மலை ஏற வேண்டாம்.  என்னை யாரானும் உங்க வீட்டிலே மதுரையா, சிதம்பரமானு கேட்டால் நான் திருச்செங்கோடுனு பதில் சொல்லுவேன். :)

Tuesday, October 27, 2015

ஆஞ்சிக்கு எதிரே நம்ம நரசு, லக்ஷ்மியோடு குடி இருக்கார்!

ஒரு வழியா மடிக்கணினி சரியாகி இருக்கு. இந்த முகநூல் தான் போன வாரம் மடிக்கணினி கோமா நிலைக்குப் போனப்போ உள்ளே நுழைஞ்சது! இன்னி வரைக்கும் வெளியே வரவே முடியலை. வெளியேறும் ஆப்ஷனில் க்ளிக்கினால் எதுவுமே வரலை. உள் பெட்டி திறக்கலை! நோட்டிஃபிகேஷன்ஸ் வரும் ஆப்ஷனும் திறக்கலை. பூட்டுப் பெட்டி மட்டும் திறந்தது. அப்புறமா நண்பர் ஒருத்தர் ஆலோசனையின் பேரில் முகநூலுக்கு ஒரு செய்தி அனுப்ப இருந்தேன். ஆனால் திடீர்னு தானே சரியாச்சு! இன்னிக்கு முகநூல் பக்கம் திறந்ததும் ஒவ்வொரு ஆப்ஷனாப் போட்டுப் பார்த்து ஒவ்வொண்ணையும் சோதனை செய்து எல்லாமும் சரியாக வேலை செய்வதைக் கண்டேன். என்ன ஆச்சுனு தெரியாம திடீர்னு இப்படி ஒரு பிரச்னை!  அதோடு இரண்டு நாட்களாகக் கல்யாணங்களில் கலந்து கொள்ளவேண்டிய நிலைமை. ஞாயிறன்று திருச்சியிலேயே ஒரு கல்யாணம். நேற்று நாமக்கல்லில் ஒரு கல்யாணம்.

போயிட்டு வந்தாச்சு. அங்கே பல வருடங்களாகப் பார்க்க நினைச்சிருந்த ஆஞ்சியைப் பார்த்தாச்சு! நைனா மலை என அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு எதிரே ஆஞ்சி காணப்படுகிறார். லக்ஷ்மி நரசிம்மரைப் பார்த்துட்டுத் தான் ஆஞ்சியைப் பார்க்கணுமாம். எங்களுக்குத் தெரியாது. முதலில் ஆஞ்சியைத் தான் பார்த்தோம். அங்குள்ள பட்டாசாரியாரிடம் படம் எடுத்துக்கலாமா எனக் கேட்டுப் படமும் எடுத்துக் கொண்டேன். எதிரே மலை! கோட்டை போல் அமைப்பு. மலையின் நடுவே ரங்கநாதரும், உச்சியில் வரதராஜரும் இருக்கின்றனராம். என்னது? ஏறிப் போய்ப் பார்த்தீங்களாவா?  சரியாப் போச்சு! போங்க! இதுக்கே நாக்குத் தள்ளுது! ஏறி எல்லாம் போகலை! அதோட கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வேறே போகணும். நாமக்கல் ஊருக்குள்ளே நுழைஞ்சதும் முதல்லே கோயிலுக்குப் போயிடலாம்னு இங்கே வந்துட்டோம். மலை தான் ஏற முடியாது! போய்விட்டுத் திரும்பக்  குறைந்தது நான்கு மணி நேரம் ஆயிடும். ஆகையால் எதிரே உள்ள லக்ஷ்மி நரசிம்மரையும் போய்ப் பார்க்கலாம்னு என்னோட விருப்பம். ஆனால் அங்கேயும் சில படிகளாவது ஏற வேண்டி இருக்கும். ஆனாலும் பரவாயில்லைனு போனோம்.

நுழையும்போதே சில, பல படிகள். அதிலே ஏறி உள்ளே போனால் மேலும் சில, பல படிகள்! அதிலும் ஏறி முன் மண்டபத்திற்குப் போனால் இடப்பக்கம் நாமகிரித் தாயார் சன்னதி! திரை போட்டிருந்தனர். சரி நரசுவைப் பார்க்கலாம்னா இங்கேயும் தாயாரைத் தான் முதல்லே பார்க்கணும்னு சொன்னாங்க. நாங்க தான் சொன்னதைக் கேட்க மாட்டோமே! ஆகவே நரசுவைப் பார்க்கப் போயிட்டோம். மேஏஏஏஏஏஏஏஏஏஏலே ஏறித் தான் போய்ப் பார்க்கணும். ஹிஹிஹி, அங்கேயும் திரை! ஆனால் பட்டாசாரியார் இப்போத் திறக்கப் போவதாகவும் மேலே வரும்படியும் கூறினார். ஹிஹிஹி, மறுபடி சில, பல படிகள் ஏறிப் போனால் அங்கேயும் ஒரு மேலே! அங்கே உள்ளே வரச் சொல்லி பட்டாசாரியார் சொல்ல, நான் ஏறத் தயங்க, எங்களோடு வந்த எங்க மருமகள்(மாட்டுப் பெண் இல்லை, நாத்தனார் பெண்) மாமி, இங்கே ஒரு சிற்பம் பாருங்க, காலைத் தூக்கிக் கொண்டு பெருமாள்! என்று சொல்ல உடனே அலறி அடித்துக் கொண்டு மேலே ஏறி உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போயிட்டேனே!
வைகுண்டநாதர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்!  தினமலர் பக்கம்

இங்கே விக்ரஹமாகக் காட்சி அளிக்கிறார் வைகுண்ட நாதர். இந்தக் கோலமே அங்கே சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது.
சந்நிதியின் திரை இன்னும் விலகவில்லை. இடப்பக்கம் வைகுண்டநாதர் பாம்பு ஆசனத்தின் மேல் உட்கார்ந்திருக்க, அவருக்குக் கொஞ்சம் இடப்பக்கமாக சந்நிதியில் குடி கொண்டிருக்கும் நரசிம்மருக்கு வலப்பக்கமாக ஹிரண்யனைக் கிழிக்கும் கோலத்தில் அஷ்டபுஜ நரசிம்மர்.
அஷ்டபுஜ நரசிம்மர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார் தினமலர் பக்கம்

பார்க்கவே பயங்கரமாக அந்த மலைக்குள்ளே குடைவரையில் வடித்த சிற்பி நரசிம்ம அவதாரத்தின் இந்நிகழ்வை நேரில் கண்டிருக்க வேண்டும் என்றே தோன்றியது. நரசிம்மருக்கு இடப்பக்கச் சுவரில் பூவராஹர், பூமாதேவியைத் தன் மூக்கில் தூக்கியவண்ணம், அவருக்கு அருகே நான்கு வேதங்கள்!
பூவராஹர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார் தினமலர் பக்கம்

வைகுண்ட நாதருக்கு எதிரே உலகளந்த பெருமான்,

உலகளந்த பெருமாள் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார் தினமலர் பக்கம்
உயரமாக மஹாபலியின் பக்தியைச் சோதிக்க உலகளந்த கோலத்தில் காட்சி அளித்தான். கண் கொள்ளாக் காட்சி தான். உடல் பட்ட சிரமம் எல்லாம் இந்தச் சிற்பங்களைப் பார்த்ததில் பெரிய விஷயமாய்த் தெரியவில்லை. சற்று நேரத்தில் திரை திறக்கப்பட்டது. அற்புதமான தரிசனம்! பெரிய நரசிம்மர். மார்பில் மஹாலக்ஷ்மி. பெருமானுக்கு வலப்பக்கமாக நாமங்களைத் தரித்த கோலத்தில் சிவன்! ஹிஹிஹி! அதே போல் நாமங்களைத் தரித்த வண்ணம் இடப்பக்கமாக பிரம்மா! மூன்று பேரையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும். குடைவரைக் கோயில்! கட்டிய/ செதுக்கிய சிற்பிக்கு என்ன பரிசு கொடுப்பது என்றே தெரியவில்லை. அந்தக் கூரிய நகங்களும், வலது உள்ளங்கையில் சிவந்த நிறத்துடன் காணப்படும் ரத்தக்கறையும் ஓர் சிற்ப அற்புதம்! சனகாதி முனிவர்களோடு சூரிய, சந்திரரும் காணப்படுகின்றனர்.

இவருக்கு அபிஷேஹ ஆராதனைகள் கிடையாது. குடவரை மூர்த்தி என்பதால் உற்சவருக்கே அபிஷேஹங்கள் எல்லாம். எப்போது கட்டிய கோயில் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. மிகப் பழைய கோயில் என்று மட்டும் புரிகிறது. அனுமன் குறித்த கதை நாளைக்கு! அதிலேயே இந்தக் கோயிலின் தல புராணமும் வரும். 

Monday, October 26, 2015

ஆஞ்சியைப் பார்க்கப் போயிருந்தேன்! இன்னிக்கு இவர் மட்டும் தான், பதிவு நாளைக்கு! :)



இந்த ஆஞ்சி எங்கே இருப்பவர்னு தெரியும் இல்லையா? ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காகப் போயிருந்தப்போ ஆஞ்சியைப் பார்த்தேன். விபரங்கள் நாளைக்கு! இரண்டு நாட்களாகக் கல்யாணத்தில் கலந்து கொள்ள நேரிட்டிருக்கிறது. நேற்றுக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு திருமணம். இன்னிக்குச் சொந்தக்காரர் திருமணம். அடுத்தடுத்துப் பயணங்கள் காத்திருக்கின்றன. மடிக்கணினி இன்னிக்குத் தான் முழுசாச் சரியா ஆச்சு! ஆன்டி வைரஸ் வேறே தொந்திரவு கொடுத்துப் பின்னர் பையர் கிட்டே விபரங்கள் வாங்கி ஆன்டி வைரஸை செயல்பட வைத்தேன். அதனால் தான் இத்தனை நாட்களாகப் பதிவும் போடவில்லை. யார் பதிவுக்கும் போகவும் இல்லை. இனிமேல் தான் போகணும். :) பதிவுகளும் எழுதணும்.

Friday, October 23, 2015

சரஸ்வதி பூஜை சுண்டல் இன்னிக்குத் தான்!

இது காலை பூஜையின் போது எடுத்த படம்.

மாலை நிவேதனம் செய்தப்போ எடுத்த படம். கொண்டைக்கடலைச் சுண்டல். இன்னிக்கு வரை நல்லா இருக்காது! இப்போதைக்கு இவ்வளவு தான்.

இது சோதனைப் பதிவு! கணினியில் இருந்து!  மடிக்கணினி இன்னும் தயாராகலை!

Wednesday, October 21, 2015

Todays message! :D

Today is not my day. At first there was no charge in the camera battery, so I could not take photos during the Pooja.  And I took some photos in the afternoon Nivedanam and tried to upload them. But alas!!!!!!!!!!! The C Drive was corrupted and the Toshiba Company warning me to re install everything and it started about 3--00 PM and ended at 6--00 PM only. My documents, pictures, downloads, important other things are yet to restore. Gave a call to laptap Doctor and he will attend tomorrow only. So no e-kalappai. No Picasa! So no uploading photos for today. No writing in Tamil. Of Course there are other tools to write tamil. But I am very much used to e-kalappai.  So enjooyyyyyyyy! Will see you all tomorrow after completing all these things! Hoping for the best to come! Bye for now.


Geetha Sambasivam.

Tuesday, October 20, 2015

சரஸ்வதியின் கதை தெரியுமா?



நவராத்திரியின் கடைசி நாள் ஆன அன்று வழிபட வேண்டிய அம்பிகை சித்தாத்ரி அல்லது சித்தி தாத்ரி அவாள். தமிழ்நாட்டில் "சாமுண்டி"யாக விளங்குவாள். சும்ப நிசும்பர்களை வதம் செய்ய அவதரித்த காமேஸ்வரியாகவும் சக்தி தாசர்கள் வழிபடுவார்கள். இன்றைய தினம் பத்து வயதுப் பெண் குழந்தையை "சுபத்ரா"வாக வழிபட வேண்டும். பச்சைக்கற்பூரத்தால் ஏதேனும் ஆயுதம் ஒன்றைக் கோலமாக வரைய வேண்டும். நல்ல வாசனை மிகுந்த மரிக்கொழுந்து இன்றைய வழிபாட்டில் இடம்பெறும். இதைத் தவிர அடுக்கு மல்லிகை, நந்தியாவட்டை போன்ற வெண்ணிற மலர்களும் ஏற்றவை.
Saraswati.jpg
அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.

நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள். நதியாக ஓடியதற்கும் ஒரு காரணம் உண்டு. அது பின்னர் விளக்குகிறேன். ஏற்கெனவே எழுதி இருக்கேன். :) சுட்டி இங்கே!

இங்கே

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சிருங்கேரி சாரதை க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி விக்கி பீடியா!
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு.

இன்றைய தினம் அக்கார அடிசில் செய்யலாம். ஒரு கிண்ணம் பச்சரிசியையும் கால்கிண்ணம் பாசிப்பருப்பையும் வறுத்துக் கொண்டு குறைந்தது ஒரு லிட்டர் பாலில் கரைய விடவும். நன்கு குழையக் கரைந்து உருத்தெரியாமல் ஆனதும் வெல்லம் சேர்க்கவும். வெல்லமும் சேர்ந்து கொண்டு கெட்டிப்பட்டதும், நெய்யை இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம் வறுத்துச் சேர்க்கவும். ஏலப்பொடியையும் ஜாதிக்காயையும் பொடி செய்து போடவும். குங்குமப் பூக் கிடைத்தாலும் பாலில் கரைத்து விடலாம். சுத்தமான குங்குமப்பூவாக இருக்க வேண்டும்.

இன்றைய சுண்டல் அநேகமாக அனைவரும்  வடமாநிலங்களில் கூட இன்று கொண்டைக்கடலையே செய்வார்கள். கறுப்புக் கொண்டைக்கடலை தான் நல்லது. கடலையை முதல் நாளே முன்னர் சொன்னது போல் சோடா உப்புச் சேர்த்து ஊற வைக்கவும். பின்னர் மறு நாள் நன்கு கழுவிவிட்டுப் புதிய நீர் விட்டு வைக்கவும். அதன் பின்னர் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், கருகப்பிலை, இரண்டு மி.வத்தல் போட்டு வெந்த கடலையைக் கொட்டிக் கிளறவும். மி.வத்தல், தனியா இரண்டும் வறுத்துப் பொடி செய்து அதைச் சேர்க்கவும். இதற்குச் சாம்பார்ப் பொடி போட்டால் நன்றாக இருக்காது/ தேங்காயைத் துருவலாகவோ, அல்லது பல்லுப் பல்லாகக் கீறியோ சேர்க்கவும்.

இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

இன்றைய நிவேதனம் தயிர்சாதம். முன்னர் சொன்னாற்போல் தயிர்சாதம் செய்து நிவேதனம் செய்யவும். இன்றைக்குச் சுண்டல் செய்வதில்லை. இரவு படுக்கப்போகும் முன்னர் ஒரு பொம்மையைக் கிழக்கு, மேற்காகப் படுக்க வைக்கவேண்டும். பொதுவாக மறுநாள் பொம்மைகளைப் பெட்டியில் எடுத்து வைக்கும் வழக்கம் இருந்தாலும் இந்த வருஷம் மறுநாள் வெள்ளிக்கிழமையாக வருவதால் அன்று எடுத்து வைக்கக் கூடாது. மறுநாள் சனிக்கிழமை அன்று எடுத்து வைக்கலாம்.
22 ஆம் தேதி விஜயதசமி! அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

இன்றைக்கு நான் மொச்சைக்கொட்டைச் சுண்டல் செய்தேன். கால்கிலோ மொச்சையை முதல் நாள் இரவே கழுவி ஊற வைத்தேன். பின்னர் இன்று குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயத் தூள், கருகப்பிலை சிவப்பு மிளகாய் இரண்டு சேர்த்துக் கொண்டு ஒரே ஸ்பூன் சாம்பார்பொடியும் போட்டு வெந்த மொச்சையைச் சேர்த்துக் கிளறிப் பொடி வாசனை போனதும் தேங்காய்த் துருவலைச் சேர்த்தேன். (தம்பிக்காக {வா.தி.} இன்று காரம் குறைச்சல்) :) அப்புறமா இன்னிக்குக் கொலுவோட படத்தையும் இணைக்கிறேன். அதிலே ஒரு மாறுதல், சின்ன மாறுதல் தெரியும். கண்டு பிடிக்கிறவங்களுக்கு ஒண்ண்ண்ண்ணும் கிடையாது! :) எனக்குப் பளிச்சுனு தெரியுதே!