எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 31, 2016

அப்பாடா! வந்து சேர்ந்துட்டேனே!

அப்பாடானு இருக்கு. ஒரு வழியாக் குடும்ப நிகழ்ச்சிகள் எல்லாம் சுபமாக முடிவடைந்தன. இனிமேல் பயணங்கள் குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்று மாலை நாலு மணிக்குத் தான் மும்பையிலிருந்து திரும்பி வந்தோம். மைத்துனர் பையருக்குக் கல்யாணம், 29 ஆம் தேதி மும்பையில் நடந்தது. அதுக்காகப் போயிட்டு இன்று தான் திரும்பினோம். பார்க்கப் போனால் அங்கே பத்து, பதினைந்து நாள் டேரா போடுகிறாப்போல் இருந்தது. ஆனால் இப்போ அதுக்குத் தேவை இல்லைனு சொல்லிட்டாங்க. இங்கேயும் நம்ம சொந்தக் காரியங்களை இனிமேல் பார்க்கணும்.

இணையத்திலே ஒழுங்கா இருந்தே ஆறு மாசம் ஆச்சா?  பல ரசிகப்பெருமக்கள் அலுத்துப் போய் ஒதுங்கிட்டாங்க போல! 263 க்கும் மேல் இருந்த பின் தொடர்பவர்கள் இப்போ 246 க்கு வந்துட்டாங்க! ஹிஹிஹி, ஆள் கொஞ்ச நாட்கள் இல்லைனா எப்பூடினு பாருங்க! மும்பை விமான நிலையம் நம்மளை ஒரு வழி பண்ணிடுச்சு! அதுவும் மதுரை--மும்பை விமானத்தை ஏர் இந்தியாக்காரங்க பிடிவாதமா பன்னாட்டு முனையத்திலே தான் நிறுத்தறாங்க.  அதிலே ஏரோ பிரிட்ஜ் வழியா இறங்கி இறங்கி இறங்கி இறங்கி இறங்கி வந்தாலும் வழி நீ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாப்போயிட்டே இருக்கு. வெளியே காத்திருக்கிறவங்க விஷயம் தெரிஞ்சவங்கன்னா ஓக்கே! இல்லைனா என்னடா இது சோதனைனு நினைச்சுப்பாங்க. வெளியே வரவே அரை மணிக்கும் மேல் ஆகிடுது.

புது தில்லி விமான நிலையமோ, கல்கத்தா விமான நிலையமோ பெரிசா இருந்தாலும் மும்பை விமான நிலையம் கிட்டக் கூட நிற்க முடியாது. இதைப் பார்த்துட்டு நம்ம சென்னை விமான நிலையம் பொம்மை மாதிரி இருக்கு! அதிலும் தினம் தினம் கண்ணாடி வேறே விழுந்துட்டுப் பயமுறுத்தும். நல்லவேளையா ட்ரான்சிட்டுனு வெளியே வந்து உட்காரச் சொல்லலை! விமானத்துக்கு உள்ளேயே உட்காரச் சொல்லிட்டாங்க. இந்த விமானச் சேவை கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேல் இருக்காம். இதை ரத்து செய்து சில நாட்கள் முன்னர் அறிவிப்புக் கொடுத்துட்டுப் பின்னர் மக்களெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கவே மறுபடி பழைய சேவையையே தொடர்ந்திருக்காங்க. இது விமானத்தில் ஏறும்போது தான் தெரியும். நல்லவேளையா அலைச்சல் இல்லாமல் போச்சு.  ஃப்ராங்க்ஃபர்ட், ஹூஸ்டன், துபாயிலெல்லாம் நடக்கிறது ஒண்ணுமே இல்லைனு இங்கே மும்பையில் நடக்க வைச்சுட்டாங்க. இனிமேல் ஒரு மாசத்துக்கு நடைபயிற்சியே செய்ய வேணாம் போல.

இனியாவது ஒழுங்கா இணையச் சேவை செய்யணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பல பதிவுகள் பாதியிலே நிக்குது. பல கட்டுரைத் தொகுப்புக்களைப் பதிப்புக்கு ஏற்றாற்போல் அமைக்கணும். ஏதோ ஒரு பெரிய தூக்கத்திலே இருந்து எழுந்தாப்போல் இருக்கு இப்போ! இதுக்கு நடுவிலே நம்ம ரங்க்ஸுக்குக் கண் ஆபரேஷன் வேறே ஆகணும். பல வேலைகள் காத்திருக்கு. வர்ட்டா?  நாளைக்குப் பார்க்கலாம். எதை எல்லாம் பாதியிலே விட்டிருக்கேன்னு பார்த்துட்டு அதை எல்லாம் முழுசா எழுதி முடிக்கணும்.

Sunday, January 24, 2016

கோனாரக் சூரியனார் கோயிலின் மேலும் சில படங்கள்!


இவையெல்லாம் சிதைந்த பகுதிகள் செப்பனிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இங்குள்ள சக்கரங்களின் ஒவ்வொரு பகுதியும் படம் எடுத்தேன். அவையே இங்கு இடம் பெறுகின்றன.



 ஒரு பக்கப்பார்வை


நாட்டியக் கரணங்கள் மேலே உள்ளவை

இதற்கே மணி மூன்று ஆகிவிட்டது. மதிய உணவு வேண்டாம் என ஏற்கெனவே முடிவு எடுத்திருந்தோம். ஆகவே அங்கே இருந்த இளநீர் வியாபாரியிடம் இரண்டு இளநீரை வாங்கிக் குடித்துத் தேங்காயையும் சாப்பிட்டோம். எங்கு பார்த்தாலும் பத்தடிக்கு ஒரு இளநீர்க்கடை! சுவையான இளநீரும் கூட! விலையும் அதிகம் இல்லை. சக்கர நாற்காலியை இழுத்து வந்தவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தோம். பின்னர் நாங்கள் வந்த வண்டியில் ஏறி புவனேஸ்வரத்துக்குத் திரும்பச் சொன்னோம். அங்கே மிகவும் பிரசித்தி பெற்ற லிங்கராஜா கோயிலுக்குப் போகச் சொன்னோம். மாலை நாலு மணிக்குத் தான் நடை திறக்கும் என்பதால் போகும்போது சரியாக இருக்கும் என்று கணக்குப் போட்டோம். அது போல் நாலரை மணிக்கு லிங்கராஜா கோயிலுக்குப் போனோம். இங்கேயும் தோல் பொருட்கள், காமிரா, மொபைல் பயன்பாட்டில் இல்லை என்பதால் எல்லாவற்றையும் வண்டி ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டுச் செருப்பையும் அங்கேயே கழட்டிப் போட்டோம். அதற்குள்ளாக ஒரு பண்டா இளைஞர் வந்து ஆளுக்கு ஐம்பது ரூ கொடுத்தால் போதும். கோயிலைச் சுற்றிக் காட்டுகிறேன். என்றார்.
லிங்கராஜா கோயில் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன் தினசரி

ரொம்ப அதிகமும் இல்லாமல் குறைவும் இல்லாமல் நியாயமான பேரமாக இருக்கவே ஒத்துக் கொண்டோம். ஆனாலும் என்னால் தான் நடக்கவே முடியவில்லை. பல படிகள் ஏறி உள்ளே செல்லணும். உள்ளேயும் படிகள். அந்த இளைஞர் நின்று நின்று காத்திருந்து அழைத்துச் சென்றார். இந்தக் கோயிலின் வரலாறும் மற்ற விஷயங்களும் நாளை!

Saturday, January 23, 2016

அரங்கன் வந்தான் தேரினிலே!

வைகுண்ட ஏகாதசியை அடுத்துப் பெரிய திருவிழா என்பது தை மாதத் தேரோட்டம் தான் ஶ்ரீரங்கத்திலே நடக்கும். இந்தத் தேர் சித்திரைத் தேரைவிடச் சிறியது எனச் சொல்லப்பட்டாலும் இதுவும் பெரிய தேரே. இதை பூபதித் திருநாள் என அழைக்கின்றனர். அரங்கநாதரைத் தன்குலதெய்வமாகக் கொண்ட அயோத்தியாபுரியை ஆண்ட ஶ்ரீராமனே இந்தத் திருவிழாவை நேரில் நடத்துவதாக ஐதீகம். புவியை ஆண்ட பூபதியான ஶ்ரீராமன் எடுப்பித்த திருவிழா என்பதால் இது பூபதித் திருநாள் எனப் பெயர் பெற்றது. 


நாங்களும் இங்கே வந்து கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தேருக்குப் போகவேண்டும் என நினைத்துப் போகமுடியாமல் போயிற்று. முதல் வருடம் கடுமையான ஜுரம் இரண்டு பேருக்கும். உ.பி. கோயில் போனதில் உடல்நலமின்றி ஒரு மாதம் படுத்துவிட்டோம். அடுத்தடுத்த வருடங்களில் இதே போல் ஏதேதோ பிரச்னைகள். இந்த வருடம் எப்படியானும் போகணும்னு ஒரு புத்தாண்டு சபதமே எடுத்திருந்தோம். நேற்றுத் தான் கும்பகோணம் வரை போய் வந்த களைப்பு, என்றாலும் இன்னிக்கு எப்படியானும் தேரைப் பார்க்கணும்னு ஒரு  உறுதியான முடிவு.


காலை நாலரைக்கு எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு வீடு சுத்தம் செய்து காஃபி குடித்துக் குளித்துக் கிளம்புகையில் ஆறே கால் ஆகிவிட்டது. ஆறரைக்குத் தேர் கிளம்பும் என்று சொல்லி இருந்தார்கள். தெற்கு வாசலிலே வண்டியை வைத்துவிட்டு அங்கிருந்து ரங்கா கோபுர வாசலுக்கு நடந்தோம். நாங்கள் போகும்போது தான் பூஷணிக்காய் உடைத்து, சிதறு தேங்காய் போட்டுத் தேர் கிளம்ப ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல முன்னேறிக் கொஞ்சம் கிட்டத்திலே போய்ப் பெருமாளைத் தரிசிக்க எண்ணினோம். காவல்துறை வளையம் போட்டிருந்தது. ஆகவே இன்னும் கொஞ்சம் முன்னேறி வளையம் இல்லாத இடத்தில் போய்ப் பெருமாளைத் தரிசித்தோம். ஆனால் நல்ல கூட்டத்தில் மாட்டிக் கொண்டோம். விடிந்தும், விடியாத காலைப் பொழுது. கருக்கிருட்டு அப்போது தான் கிளம்பிற்று. அந்தச் சமயம் எடுத்த படம். காமிரா இன்னும் சரியாகவில்லை, என்பதால் அலைபேசியில் தான் எடுத்தேன். படமும் அலை பாய்கிறது.

நாங்க வருவதற்குக் காத்திருந்த மாதிரி அரங்கனும் நகரா கொட்ட அதிர்வேட்டுகள் முழங்க மெல்ல மெல்லத் தேரில் வீதி வலம் கிளம்பினான். கொஞ்ச தூரம் அரங்கன் செல்லும்வரை காத்திருந்தோம். அதற்குள்ளாகக் காவல் துறையினர் போகச் சொல்லி அவசரப் படுத்தவே கிளம்பி வந்தோம். மதுரையில் கடைசியாக எழுபதாம் வருஷம் மீனாக்ஷி தேர் பார்த்தது. அதன் பின்னர் 2010 ஆம் வருடம் சிதம்பரத்தில் நடராஜா தேர். அதன் பின்னர் இப்போது தான் அரங்கன் தேர். அடுத்த மாதமும் பூந்தேர் இருக்கிறது. சித்திரையில் விருப்பன் திருநாளின் போது பெரிய தேர். முடிஞ்சால் போகணும். அரங்கன் விருப்பம் என்னமோ தெரியாது! 

Friday, January 22, 2016

பெருமாள் குறித்த இப்போதையத் தகவல்கள்


இந்தத் தலைப்பில் என்னுடைய புகுந்த ஊரான பரவாக்கரைப் பெருமாள் பத்தி எழுதி இருந்தேன். அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அதைக் குறித்து எழுதிய பதிவு இதோ!

அதன் பின்னர் அப்போது இந்தச் சிலைக்கொள்ளைகளைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியான திருமதி திலகவதியை நேரில் சென்று பார்த்து விண்ணப்பித்தோம். அப்போது இந்தப் பெருமாளின் படத்தையும் ஸ்கான் செய்து எடுத்துப் போனோம். அதை வைத்துப் பின்னர் காவல்துறை பெருமாள் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துப் பெருமாளை மீட்டு விட்டார்கள். ஆனாலும் பெருமாள் கோயிலுக்கு வரவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்ற காரணத்தால் திருவாரூரிலேயே வைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த 2015 ஆம் வருடம் ஒரு வழியாகக் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

அதன் பின்னர் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டு செய்தோம். படங்களுக்கான சுட்டி இங்கே

இந்தப் பதிவில் சொன்ன மாதிரிப் பெருமாள் கிடைத்தாலும் வலக்கையின் சக்கரம் உடைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு கைக்கட்டை விரல், சக்கரத்தைப்பிடித்திருக்கும் ஆட்காட்டி விரல் போன்றவையும் வெட்டப்பட்டு இருக்கின்றன. அந்தப் படங்கள் கீழே! இது இன்றைய நிலைமை.


இதோ கீழே  இந்தப் படத்தில் பெருமாளின் வலக்கையைப் பாருங்கள், சுண்டுவிரல், ஆட்காட்டி விரல், கட்டை விரல் போன்றவை இல்லை. இதைச் சரி செய்ய ஸ்தபதிகளிடம் எடுத்துச் சென்றதில் அவங்க அறநிலையத் துறை கோயிலில் அவர்கள் அதிகாரிகளை முன்னே வைத்துக் கொண்டு இதைச் செப்பனிட வேண்டும் என்று சொல்வார்கள் எனக் கூறவே மீண்டும் அறநிலையத் துறை அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டுச் செப்பனிடச் சம்மதம் கொடுத்து உத்தரவும் கொடுத்துவிட்டார்கள்.


ஆனால் ஸ்தபதி வலக்கையை மணிக்கட்டோடு துண்டித்துவிட்டுப் புதிதாக வார்த்துப் பொருத்த வேண்டும் எனவும் அந்த உலோகக் குழம்பு அப்போது தான் முழங்கை வரையில் போய் மணிக்கட்டைக் கையோடு பொருத்தும் என்றும் சொல்லி இருக்கிறார். அது தான் மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. விரைவில் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டுப் பெருமாள் கோயிலுக்குக் கிரஹப்பிரவேசம் ஆனப்போச் செய்த கருடன் வாஹனத்தில் விரைவில் கருட சேவையும் செய்வார்கள் எனத் தெரிய வருகிறது. 



பட்டாசாரியார் இதை விவரிக்கையில் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லையே. எல்லாம் நல்லபடியாக முடிய அந்தப் பெருமாள் தான் தன்னைத் தானே பார்த்துக்கணும். இன்னிக்கு மாவிளக்குப் போடறதுக்காகக் குலதெய்வம் கோயிலுக்குப் (அதுவும் பரவாக்கரையில் தான் உள்ளது.) போனபோது பெருமாளையும் பார்த்துவிட்டு வந்தோம். அப்போது உற்சவரை எடுத்த படங்கள் இது. ஆஞ்சியும் இருக்கார் கைகூப்பிய வண்ணம் மிகச் சிறிய வடிவில்.  படம் எடுத்தேன், தெளிவாக வரலை. காமிரா எடுத்துப் போக முடியலை. ஆகவே அலைபேசியில் எடுத்தவை. அதையும் பிகாசாவில் ஏற்றுவதற்குத் தகராறு பண்ணி ஒருவழியா ஏறியது.


Monday, January 18, 2016

மீண்டும் சூரியனார் கோயிலுக்கு!

கோயிலின் மேல் தளம் தெரியும் என நினைக்கிறேன். அங்கே ஒருத்தர் நின்று கொண்டு இருக்கிறார், தெரிகிறதா?

வேலைகள் நடந்து வருகின்றன என்றாலும் அப்போது இருந்தாற்போல் வருமா என்று தெரியலை!

கீழே உள்ள வேலைப்பாடுகள்

இது ஒரு பக்கவாட்டுத் தோற்றம், ஏதோ ஒரு வகை மணலால் செப்பனிட்டிருக்கிறபடியால் சிற்பங்கள் சரியாகத் தெரியவில்லை. :(


நாட்டியக் கரணங்கள் இவை கோயிலின் மேல் தளம் வரை போகிறது.



இங்கே அழகிய மண்டபம் போன்ற சிற்பம் 

இங்கே ஒரு அருண ஸ்தம்பம் 33 அடிக்கு இருந்ததாகவும், இந்தக் கோயிலின் வழிபாடுகள் நின்ற பதினெட்டாம் நூற்றாண்டில் கோஸ்வாமி என அழைக்கப்பட்ட மராத்தா பிரமசாரி ஒருவரால் அது பெயர்த்தெடுக்கப்பட்டு புரி ஜகந்நாதர் கோயிலின் சிங்க வாயிலில் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. அருணன் சூரியனின் சாரதி என்பதால் இங்கே அருண ஸ்தம்பம் இருந்திருக்கிறது.  அதோடு அப்போது இருந்த ஓர் அரசனால் சில சிற்பங்களும்,கற்களும் எடுக்கப்பட்டு புரியில் அவனால் கட்டப்பட்ட ஓர் கோயிலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது. அதை எடுக்கும்போது மேலும் சில சிற்பங்களும் வாயில்கள், அவற்றில் இருந்த அலங்காரச் சிற்பங்கள் எல்லாம் உடைந்து போயின. ராஜா  கோயிலில் இருந்து சிற்பங்களை எடுப்பதில் இருந்து தடுக்கப்பட்டார்.

வங்காளத்தின் ஏசியாடிக் சொசைடியால் இங்கிருந்த நவகிரஹ சிற்பம் இந்திய அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்யப்பட்டது,  1867 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி மேற்கொண்டு பணம் இல்லாததால் பாதியில் கைவிடப்பட்டுப் பின்னர், 1894 ஆம் ஆண்டில் கிட்டத்தட்டப் பதின்மூன்று சிற்பங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு இந்திய அருங்காட்சியகம், வங்காளத்தில் வைக்கப்பட்டன.

1903 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் அகழ்வாராய்ச்சி இதன் அருகே நடைபெற்றபோது அப்போது வங்காளத்தின் கவர்னராக இருந்த ஜே.ஏ.பர்டிலான் என்பவர் கோயிலை மூடி மணலால் நிரப்பி வைக்குமாறு கட்டளை இட்டார். பின்னர் 1909 ஆம் ஆண்டு மணலை நீக்கி இடிபாடுகளை அகற்றுகையில் மாயா தேவி கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ இந்தக் கோயிலை உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரித்தது. 


Sunday, January 17, 2016

ஒரு இடியாப்பம் புளி உப்புமா ஆன கதை!

முதல்லேருந்து கதையை ஆரம்பிக்கலாமா? அரிசியில் வண்டுகள் குடி இருப்பால் அரிசியைச் சலிக்க வேண்டி அரிசிச் சல்லடை வாங்கி வரச் சொல்லி இருந்தேன் ரங்க்ஸிடம். அவரும் வாங்கிண்டு வந்தார். இரு முறை வாங்கியும் இரண்டும் பெரிய கண் உள்ள சல்லடையாகப்போய்விட்டது. கடைகளில் அதைவிடச் சிறிய கண் உள்ள சல்லடை இல்லைனு சொல்லிட்டாங்க. ஆகவே சல்லடை வாங்கிய பணத்தைக் கடைக்காரர் திரும்பத் தரமாட்டார் என்பதால் வேறே என்ன வாங்கறதுனு ரங்க்ஸ் கேட்க, நானும் இடியாப்பச் சொப்பு, இடியாப்பம் பிழியும் சின்னப் படி, தேங்குழல் படி மாதிரி இருக்கும். முழுக்க முழுக்க மரத்திலேயே செய்தது. அடியில் துத்தநாகத் தகட்டில் சின்னச் சின்ன ஓட்டைகள் போட்டுப் பொருத்தி இருப்பார்கள். நான் சொன்னதும் அதை வாங்கிட்டு வந்துட்டார் ரங்க்ஸ். அது ஆச்சு ஒரு இரண்டு மாசம் முன்னால் நடந்த கதை! ஆனால் ரங்க்ஸுக்கு அது வாங்கிப் பயன்படுத்தலையேனு கவலை. என்னிடம் சேவை பண்ணு அதிலே என்றார். நானும் சேவை பண்ணறதுன்னா நாழியிலேதான் பண்ணணும், இதிலே வராது என்றேன்.



அதோடு சேவை என்றால் புழுங்கலரிசியை ஊற வைச்சு கிரைண்டரில் அரைச்சு அதை இட்லியாக வார்த்துத் தான் சேவை செய்வேன். இதிலே அப்படிப் பண்ண முடியாது என்றேன். பின்னர் ஏன் வாங்கினேனு கேட்டாரா? கடையிலே விற்கும் இடியாப்ப மாவில் வெந்நீர் விட்டுப் பிசைந்து இதை நேரடியாக ஒற்றைத் தட்டில் தேங்குழல் மாதிரி பிழிந்து வேக வைச்சுடலாம்னு ரொம்ப சுலபமாச் சொன்னேன். பார்க்கப் போனால் அது சுலபம் தான். முன்னர் ஒரு முறை தேன்குழல் படியிலேயே பிழிஞ்சிருக்கேன். ஆகவே தைரியமாக (என்ன தைரியம், என்ன தைரியம்) இன்று காலை கீழே உள்ள வணிக வளாகத்திற்குச் சென்று இடியாப்ப மாவையும் வாங்கி வந்தேன்.  இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமையா! புதுசா இந்தச் சொப்பைப் பயன்படுத்தப் போறேனா! ராகு காலம், எமகண்டம் எல்லாம் பார்த்துக் கொண்டு மூன்றரை மணிக்கு இடியாப்பம் பிழிய வெந்நீரைக் கொதிக்க வைத்தேன். பண்ணி வைச்சுட்டா ராத்திரி சாப்பிட எளிதாக இருக்குமே! வெந்நீரை மாவில் விட்டு அரை உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி வைத்தேன். மாவு நல்ல பதமாகவே இருந்தது. ரொம்பத் தண்ணீரும் இல்லை; அதே சமயம் தண்ணீர் குறைவாகவும் இல்லை.

அலுமினியம் சட்டியில் நீர் வைத்து ஒற்றைத் தட்டைப் போட்டு இடியாப்பச் சொப்பில் மாவை நிரப்பி அதில் பரப்பினேன். பரப்பும்போதே மனதில் பட்டுவிட்டது! இது ஒட்டிக்கப்போகிறது! தனியாக வரப் போவதில்லை என. உடனே ரங்க்ஸிடம் சொல்லிட்டேன். அவரும் பொறுமையாகச் செய்து பார்னு சொன்னார். அது வெந்ததுனு வாசனை வந்ததும் எடுத்துத் தட்டில் கொட்டினால் ஹிஹிஹி, மொத்தையாக விழுகிறது. சரி இந்தச் சொப்புத் தான் சரியில்லைனு தேன்குழல் சொப்பை எடுத்து அதில் மாவை நிரப்பிச் செய்தால் அதுவும் பெப்பே! அப்படியே மாவை எடுத்து மொத்தமாகச் சேர்த்து வைத்து மூடி விட்டு வந்து உட்கார்ந்துட்டேன்.  இந்த மாவைக் கர்நாடகாவில் செய்யறாப்போல் அக்கி அடையாகச் செய்யலாமா? அல்லது நாளைக்காலை இதிலே ப.மி. உப்பு.பெருங்காயம் சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து வடாமாகப் பிழியலாமானு மண்டையை உடைத்துக் கொண்டேன். ரங்க்ஸுக்கு அக்கி அடையெல்லாம் புதுசு, எப்படி இருக்குமோனு பயம். வடாம் பிழியலாம் எனில் போன வருஷம் போட்டதே இருக்கு! அதைச் செலவு செய்யலைனு நான் இந்த வருஷம் போடப் போறதில்லைனு அறிவிப்புக் கொடுத்துட்டேன்.

அப்புறமா எனக்கு ஓர் யோசனை தோன்றியது. இந்த மாவில் புளி ஜலத்தைச் சேர்த்து இன்னும் தேவையான உப்பையும் சேர்த்து வெங்காயம் போட்டுப் புளி உப்புமாவாகப் பண்ணினால்? உடனே ரங்க்ஸும் ஆமோதிக்க (ரொம்பநாளாக் கேட்டுட்டு இருந்தார். நான் தான் அதிகம் பண்ணறதில்லை! இன்னிக்கு அடிச்சது வாய்ப்பு) இரவுக்கு அந்த மாவில் புளி உப்புமா என முடிவு செய்தாயிற்று. சற்று முன்னர்  நல்லெண்ணெயில் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, மி.வத்தல் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி உப்புமாவைக் கிளறிச் சாப்பிட்டாச்சு! என்ன? படமா? எடுக்கலை! எடுக்கணும்னு தான் காமிராவை எடுத்து வந்தேன்! ஏதோ பிரச்னை! மொபைலில் எடுத்திருக்கலாம். இந்தப் புறா காலம்பர போனது இன்னும் வரவே இல்லையா! ஜன்னலை, ஜன்னலைப் பார்த்ததில் மொபைலில் எடுக்கலாமேங்கறதும் மறந்து போச்சு! புறாவும் இன்னும் வரலை. அது உட்காரும் இடத்தைச் சுத்தம் செய்ததால் அதுக்கு வரப் பிடிக்கலைனு என்னோட எண்ணம்.  அது வந்திருந்தாக் காலம்பரக் கேட்டுட்டுச் சொல்றேன்.

புளி உப்புமா பல மலரும் நினைவுகளைக் கொண்டு வந்தது. அம்மா இந்த உப்புமாவை அப்பா ஊரில் இல்லாத சமயமாகப் பார்த்துச் செய்து தருவார். அப்பாவுக்குப் பிடிக்காது என்பதால் இந்த மாதிரி. எங்கானும் ஊருக்குப் போனால் அம்மா எங்களுக்குச் செய்து வைக்கும் பக்ஷணமும் இது தான். இந்தப் புளி உப்புமா, சுண்டல்(அதுவும் சிவப்புக் காராமணியில் சின்ன வெங்காயம் போட்டுச் செய்தது) புடலங்காய் பஜ்ஜி மூன்றும் எங்க மூணு பேருக்கும் (அண்ணா, நான், தம்பி) மறக்க முடியாத பக்ஷணங்கள். :)  இன்னிக்குப் புளி உப்புமா நல்லாவே இருந்தது.  ரங்க்ஸும் ரசிச்சுச் சாப்பிட்டார். அவங்க பாட்டி செய்வாங்களாம்.  ரொம்ப நாளைக்கப்புறமாப் பிடிச்ச உணவா ஒண்ணு சாப்பிட்டாச்சு இடியாப்பச் சொப்பின் தயவிலே! இடியாப்பச் சொப்பின் படத்தை அப்புறமாத் தான் எடுத்துப்போடணும்.

Saturday, January 16, 2016

பயணங்கள் முடிவதில்லை-- தொடர் பதிவு

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
எப்போனு சரியா நினைவில் இல்லை. ஆனால் பத்து வயதில் என்னோட அண்ணா&தம்பி உபநயனம் திருமலையில் நடந்தது. அதுக்குக் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாகச் சென்றோம். மதுரையிலிருந்து விழுப்புரம், அங்கிருந்து ரயில் மாற்றம். அப்போ ஜன்னலோர சீட்டில் உட்காரப்போட்டி போட்ட நானும் என் தம்பியும் ஜன்னல் கதவில் கையில் அடிபட்டுக் கொண்ட நினைவு இருக்கு.

திருப்பதியிலிருந்து திரும்பும்போது முதல் முதல் சென்னைக்கு வந்தோம். அப்போவே ஐயே! இதான் மெட்ராஸானு ஒரு எண்ணம் மனதில் பதிந்து விட்டது. காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது! :)

2. மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
பயணங்களே மகிழ்ச்சியை அளிக்கிறவை தானே. குறிப்பிட்டுச் சொல்ல முடியலை என்றாலும் உறவினருடன் சென்ற பல பயணங்கள் மகிழ்வானவை. உதாரணமாக என்னோட அண்ணா கல்யாணம், தம்பி கல்யாணம், மாமாக்கள் கல்யாணங்கள் இப்படிப் போயிருக்கோம். என்றாலும் திருக்கயிலைப் பயணம் மறக்கவே முடியாத பயணம் பல காரணங்களால். அதுவும் எனக்கு எதிர்பாராமல் கிடைத்த பரிசு அந்தப் பயணம். அந்தப் பயணத்தில் பெரிய பெரிய உயரமான மலைகளும், அதலபாதாளத்தில் தெரியும் நதியும் நம்மோடு கூடவே பயணிக்கும்போது ஒவ்வொரு திருப்பத்திலும் மனதில் ஓர் திகில் தோன்றி மறையும். ஏனெனில் அவ்வளவு ஒட்டில் வண்டி செல்லும். அதுவும் தொடுவானம் தொலைதூரத்தில் தெரிவதும், அதன் பிரம்மாண்டமும் இம்மாதிரிப் பயணங்களில் ஓர் மயக்கநிலையைத் தரும்.  அதோடு இத்தனை பெரிய பிரபஞ்சத்தின் முன்னர் நம் சிறுமையும் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதையும் புரிய வைக்கும். அடுக்கு அடுக்காகக் கூடவே வரும் முடிவில்லா மலைத்தொடர்களை கயிலை யாத்திரையின் போது கண்டு அதிசயித்திருக்கிறோம்.

விதம் விதமான நிறங்களில் ஏரிகள், வண்ண வண்ணமான பூக்கள் ஓர் மலையில், இன்னொரு மலை வறட்சியாக, பனி மூடி ஓர் மலை எனில் துளிக்கூடப் பனியே இல்லாமல் இன்னோர் மலை! இப்படியான பல விசித்திரங்களை அங்கே பார்க்கலாம். இயற்கை தன்னுள் பல அதிசயங்களைப் பொதிந்து மறைத்து வைத்திருக்கிறது. மனிதனால்  கண்டுபிடிக்கப்படப் பற்பல அதிசயங்கள் இன்னமும் காத்திருக்கின்றன.


3. எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?
புரியலையே! எப்படின்னா? முக்கால்வாசி ரயில் பயணம் தான் பிடிக்கும். பேருந்துப் பயணம் அவ்வளவாப் பிடிக்காது! அதோடு பயண சமயங்களில் பேருந்துப் பயணத்தில் கழிவறை வசதி இருக்காது. ரயில் என்றால் அந்தப் பிரச்னை இல்லை. என்றாலும் பேருந்துப் பயணங்களும் நிறைய இருக்கின்றன. மதுரையிலிருந்து ஹோசூருக்கு, ஹோசூரிலிருந்து மதுரை, மதுரையிலிருந்து சென்னை, சென்னையிலிருந்து மதுரை, சென்னையிலிருந்து கும்பகோணம், திருச்சி, திருச்சியிலிருந்து பெண்களூரு இப்படிப் போயிருக்கோம்.

4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை
இசை எல்லாம் கேட்டதில்லை. பேருந்தில் போனாலோ, ரயிலில் போனாலோ கூட வர பயணிகள் போடும் இசையை வேறு வழியில்லாமல் கேட்பது உண்டு. யு.எஸ்ஸில் காரில் நீண்ட பயணங்கள் செய்தது உண்டு. அது மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஆங்காங்கே தங்கிச் செல்லலாம். அப்போது பிள்ளையோடு சென்றால் பிள்ளையோ, பெண்ணோடு சென்றால் மாப்பிள்ளையோ பாடல்கள் காசெட்டைப் போடுவார்கள். கேட்டுக் கொண்டு வருவது வழக்கம். காரில் நீண்ட பயணம் என்றால் யு.எஸ்ஸில் செய்யப் பிடிக்கும். வசதிகள் அதிகம்.  


5. விருப்பமான பயண நேரம்.
முன்னெல்லாம் இரவுப் பயணம் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் இரவுப் பயணம் தூக்கம் கெடுவதால் பிடிப்பதில்லை. பகல்நேரப் பயணம் தான் பிடிக்கிறது.


6. விருப்பமான பயணத் துணை
சந்தேகமே இல்லாமல் ரங்க்ஸ் கூடத் தான்.


7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்
முன்னெல்லாம் வீட்டில் இருந்து புத்தகங்கள் எடுத்துச் செல்வேன். அபூர்வமாகச் சில சமயங்களில் நல்ல புத்தகங்கள் ரயில் நிலையத்தில் கிடைத்தால் வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது எப்போதோ ஓரிரு முறை தான்! ஆகவே பொதுவாக ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே போவதில் பொழுது போய்விடும்.

8. விருப்பமான ரைட் அல்லது ட்ரைவ்
அப்படி ஏதும் இல்லை. விருப்பம் எனில் யு.எஸ்ஸில் கார்ப் பயணம் தான்மிக மிகப் பிடிக்கும்.


9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்
அப்படி ஏதும் கிடையாது. பாடினால் கூட வரவங்க பயந்துட்டா என்ன செய்யறது? :)

10. கனவுப் பயணம் ஏதாவது?

அநேகமாய் எல்லா இடங்களுக்கும் போயிட்டு வந்தாச்சு. கனவுப் பயணம்னு ஏதும் இல்லை. முன்னே அமர்நாத், வைஷ்ணோ தேவி, மற்றும் கங்கை, யமுனை, சிந்து பிறக்கும் இடங்கள் பார்க்கும் ஆவல் இருந்தது. நர்மதை நதி பிறக்கும் அமர்க்கண்டும், காவிரி பிறக்கும் மடிக்கெரேயும் போக நினைத்தது உண்டு. இப்போது உடல் நலம் இருக்கும் நிலையில் அந்தப் பயணங்கள் எல்லாம் முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. கல்கத்தாவில் கங்காசாகர் பார்க்க நினைத்து அதையும் பார்க்க முடியாமல் போனது. 

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து! :) அண்ணன், தம்பிமாருக்குச் செய்தி!



கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே,

சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "

சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,

"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.

தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.

இது ஒரு மீள் பதிவு!

கனுப்பிடி க்கான பட முடிவு

நன்றி பார்வதி ராமச்சந்திரன்.

சரி, சரி, இப்போ நம்ம வேலையைப் பார்ப்போமா! 

அண்ணன்மாரே, தம்பிமாரே!

உங்க எல்லோருக்காகவும் வேண்டிண்டு கனுப்பிடி வைச்சாச்சு. இனிமே ஒவ்வொருத்தரா வந்து "சீ"று"(ரு)ங்கப்பா! நீங்க அன்போட தங்கம் கொடுத்தாலும் வாங்கிப்பேன். வைரம் தான் கொடுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க கிட்டே, பரவாயில்லைனு அதையும் வாங்கிப்பேன். ஒரு சிலர் நவரத்தினங்களையும் வைச்சுட்டுக் காத்திருக்கிறதாச் செய்தி கசியுது. ஹிஹிஹி, நன்னீஸ்! அதுவும் வாங்கிக்கொள்ளப்படும். புடைவை எல்லாம் நல்லி பட்டுன்னாலும் ஓகே! எல்லா ஊர்ப் பட்டும் ஆரெம்கேவியிலேதான்னு ஆரெம்கேவின்னாலும் ஓகே தான். சென்னை சில்க்ஸும் பரவாயில்லை. போத்தீஸும் ஓகே! எல்லாக் கடைகளிலேயும் வகைக்கு ஒண்ணாக் கொடுக்கிறவங்க அப்படியே கொடுத்துடுங்க. எங்கே, எல்லோரும் வரிசையா வாங்கப்பா! கூட்டம் நெரியுது!  இவ்வளவு கூட்டம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா கட்டுப்படுத்தக் காவல் துறையைக் கூப்பிட்டிருக்கலாம். சரி, போனாப் போகட்டும். நீங்களே வரிசையா வாங்க.

தலைப்பு ரொம்பப் பெரிசா இருக்கோ? ம்ம்ம்ம்? இரு செய்திகளையும் சேர்த்துக்கணுமே! அதான்!

Friday, January 15, 2016

பொங்கலுக்கு வந்த விருந்தாளி! பூஜைக்கு நேரிலே வந்த சூரியன்!

 இவர் நேற்றைய புது வரவு. முதல்லே எதிர் குடியிருப்பு ஜன்னலில் (நாங்க முந்தி குடியிருந்த வீடு) அமர்ந்திருந்தது. பாத்திரம் தேய்க்கையில் பார்த்தேன். அங்கேயே உட்கார்ந்திருந்தது. சாயந்திரம் தேநீர்த் தயாரிப்பின் போது சமையலறை ஜன்னலில் வந்து உட்கார்ந்திருந்தது. போயிடுமோனு நினைச்சேன். போகலை.சரினு படம் எடுத்தேன்! பறந்துவிட்டார்.


பின்னர் ராத்திரி தோசை செய்கையில் மறுபடி ஜன்னலுக்கு வந்திருந்தார். இம்முறை படம் எடுத்தும் போகலை. அங்கேயே இருந்தார். இரவு முழுவதும் அங்கேயே இருந்துட்டுக் காலையிலேயும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். குளிச்சுட்டு வந்து பார்த்தால் காணோம். எங்கே போனார்னு தெரியலை. அன்றாட வேலைக்குப் போயிருக்கலாம். மறுபடி இன்னிக்குச் சாயந்திரம் பார்க்கிறேன்.


இன்னிக்கு சூரிய பூஜைக்கு சூரியனாரே நேரில் வந்திருந்தார். பூஜையை ஏற்றுக் கொண்டார். 
இது தீபாராதனை முடிஞ்சதும் எடுத்த படம். ஹிஹிஹி, நிவேதனம் எல்லாம் எடுத்துட்டேன்! :)   

Tuesday, January 12, 2016

இன்னமும் சூரியனார் கோயிலில் தான் இருக்கோம்!

மேலே மண்டபம் போல் தெரிகிற இடத்தில் சூரியனின் சிற்பம் உள்ளது. மேலே ஏறும்படியாகப் படிக்கட்டுகள் எளிதாக இல்லை. ஒவ்வொரு படியும் இரண்டு, மூன்று அடி உயரத்தில் உள்ளன. இது போல் இரண்டு தளம் ஏற வேண்டும் என்பதால் ஏறவில்லை. :(



படத்துக்கு நன்றி விக்கி பீடியா!



படத்தில் இடப்பக்கம் காணப்படுவது  கோயிலின் ஆதி கட்டுமானம். 1837 வரை இப்படிப் பட்ட விமானத்துடன் காணப்பட்டது சூரியன் கோயில். விமானத்தின் உயரம் கிட்டத்தட்ட 230 அடி என்று சொல்கின்றனர். இந்த விமானம் அங்குள்ள மண்ணின் தன்மையினால் தாக்குப் பிடிக்க முடியாமல் விழுந்து விட்டது எனவும் மூலஸ்தானத்தில் இருந்த சூரியனார் இப்போது புரியில் இருப்பதாகவும் சொல்கின்றனர். எனினும் மேல் தளத்தில் நாலு பக்கமும் சூரியனின் சிற்பம் நம்மூரில் கோஷ்டத்தில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று உதய சூரியனாகவும் இன்னொன்று மதிய நேரத்து நண்பகல் சூரியனாகவும், இன்னொன்று அஸ்தமன சூரியனாகவும் சொல்கின்றனர். நான்காவது எதற்கு எனத் தெரியவில்லை.

ஜகமோகனா என்னும் அர்த்த மண்டபமும், நாட்டிய மண்டபமும், போஜன மண்டபமும் மட்டுமே இப்போது இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பவிஷ்ய புராணம், சாம்ப புராணம் ஆகியவற்றில் மூன்று சூரியக் கோயில்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அவற்றில் கோனாரக்கில் ஒன்றும், மத்ராவில் ஒன்றும் முல்தான் எனப்படும் பாகிஸ்தானின் பஞ்சாபிலும் உள்ளது எனச் சொல்லப்படுகிறது. கோனாரக்கில் உள்ள இந்தக் கோயில் தற்சமயம் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் வசம் உள்ளது. கோயிலின் பல சிற்பங்கள் கடல் காற்றால் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். அரிக்கப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே செப்பனிடும் வேலைகள் நடந்தாலும் பழைய முறையில் அது வருமா என்பது சந்தேகமே!

இதைத் தவிரவும் இந்தக் கோயிலுக்கு அருகே இன்னமும் இரு கோயில்கள், ஆனால் இதை விடப் பழமை வாய்ந்தவை இருப்பதாகவும் சொல்கின்றனர். ஒன்று மாயா தேவிக்கான கோயில், இன்னொன்று வைஷ்ணவிக்கான கோயில். இரண்டிலுமே மூலஸ்தானத்தில் எந்தவிதமான கடவுளரும் இல்லாமல் காணப்படுகின்றன.  இந்தக் கோயிலின் ஒரு சக்கரத்தின் மூலம், நாள், கிழமை, நேரம், இரவு, பகல் போன்றவற்றை அறிந்து வந்தனர் என்றும் தெரிய வருகிறது.

இன்னும் சில கூற்றுகளின் படி இந்தக் கோயிலின் இத்தகைய மோசமான நிலைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பதினான்காம் நூற்றாண்டில் கோயில் நல்ல நிலையில் இருந்ததாகத் தெரிய வருகிறது. பதினாறாம் நூற்றாண்டில் அயினி அக்பரியில் அபுல் ஃபாசலின் கூற்றுப்படி கோயில் நன்றாக இருந்தாலும் அதே நூற்றாண்டில் ஒடிஷாவை காலா பஹர் என்பவன் தாக்கிய சமயம் இங்கேயும் தாக்குதல்கள் நடந்ததாகச் சொல்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் அப்போதிருந்த ராஜாவால் அங்கிருந்த சூரியனின் விக்ரஹம் அகற்றப்பட்டு புரி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜேம்ஸ் ஃபெர்கூஸன், இங்குள்ள மண்ணின் தன்மையே கோயில் இடிந்ததற்குக் காரணம்  என்று சொன்னாலும் கோயிலின் அஸ்திவாரம் உறுதியாகவே இருப்பதாகவும் கோயில் பூமியில் புதைந்து போகும் நிலையில் இல்லை என்றும் சொல்கின்றனர். இன்னும் சிலர் கோயில் கட்டுமானங்களே முழுமையாக முடியவில்லை என்றும் கருதுகின்றனர்.  இடி, மின்னல்களாலும் கோயிலில் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பூகம்பங்கள் ஏற்பட்டதும் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். ஆனால் கோயில் பதினாறாம் நூற்றாண்டிலேயே சிதைய ஆரம்பித்திருக்கிறது என்பதை 1929 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு நிரூபிக்கிறது.







Sunday, January 10, 2016

சூரியனார் கோயிலில்!




புரியில் தரிசனம் முடிந்து திரும்பினோம். அதே ஆட்டோக்காரர் எங்களுக்காகக் காத்திருந்தார். வரும்போது கேட்ட தொகையைவிட இப்போது அதிகம் கேட்டார். அங்கே வேறே ஆட்டோக்களும் இல்லை. ஆட்டோ வேறே பிடிக்க வேண்டுமெனில் அரை கிலோ மீட்டராவது நடக்க வேண்டும். ஏற்கெனவே கோயிலில் உள்ளே நுழைகையில் ஏறியது இறங்கியது, அந்தப் பெரிய பிரகாரத்தில் நடந்தது என அதீதக் களைப்பு! ஆகவே பேரம் பேசியும் படியாமல் அவர் சொன்ன தொகைக்கே அந்த ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். எங்களுக்கு மட்டும் தனியாக, "ரிஜர்வ்" என்றும் சொல்லி விட்டோம். எங்கள் கார் நிற்கும் இடத்திற்குக் கொண்டு விட்டார். மணி பனிரண்டு போல் ஆகி இருந்தபடியால் சாப்பிடவேண்டுமா என வண்டி ஓட்டுநர் கேட்க, வேண்டாம் நேரே கோனார்க் செல்லுங்கள்  என்று சொல்லிவிட்டோம். கடற்கரை ஓரமாகவே வண்டி சென்றது. புரியில் இருந்து மிக அருகே 35 கிலோ மீட்டர் தூரத்தில் தான் இது உள்ளது.



செல்லும் வழியில் சந்திபாகா என்னும் அழகான கடற்கரை வருகிறது. வண்டியை மெதுவாக ஓட்டச் சொல்லி வண்டியில் இருந்தே அதைப் பார்த்துக் கொண்டோம். பின்னர் கோனார்க் சென்று அடைந்தோம். இங்கேயும் மேலே படிகளில் ஏற வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டிருந்தோம். சொல்லலைனாலும் நான் ஏறுவதாக இல்லை. தூரத்திலிருந்தே படிகளைப் பார்த்த நம்ம ரங்க்ஸுக்கும் ஏறுவது கடினம் எனத் தோன்றி விட்டது. மேலும் அவ்வளவு பெரிய கோயிலைக் கீழே இருந்தே சுற்றிப் பார்ப்பதும் இயலாது எனத் தோன்றியது. அதற்கேற்றாற்போல் அங்கே சக்கர நாற்காலிகளும் கிடைத்தன. இங்கே ஶ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் என்னைப் பார்த்த உடனே சக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டு வருவார்கள். வேண்டாம்னு சொல்லிட்டுப் போவேன். ஆனால் இன்று இன்னும் சில இடங்கள் பார்க்க வேண்டி இருக்கிறது. அலைச்சல் இருப்பதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திக்கலாம்னு முடிவெடுத்தேன். அவருக்கும் அதுவே சிறப்பு எனத் தோன்ற அவரும் சக்கர நாற்காலியைத் தேர்ந்தெடுத்தார்.

இருவருமே சக்கர நாற்காலியில் சென்றோம். என்னோட சக்கரநாற்காலியைத் தள்ளியவர் வெறுமனே தரதரவென இழுத்துக் கொண்டு போய் நிறுத்தியதோடு சரி. விளக்கங்கள் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் ரங்க்ஸின் சக்கரநாற்காலியைத் தள்ளியவர் விளக்கங்கள் கொடுத்தார். ஆகவே எனக்கு ஓட்டியவரிடம் அவர் வந்ததும் சேர்ந்தே போகலாம் என்று சொல்லிவிட்டேன்.

இந்தக் கோயிலின் பெயர் கோனார்க் என்பது கோனா+அர்க் என்னும் இரு சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது.  கோனா என்றால் மூலை அல்லது கோணம் என்னும் பொருள். அர்க் என்பது சூரியனைக் குறிக்கும் வார்த்தை. அர்க்கா என்றால் சூரியன். இது சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் எனத் தெரிய வருகிறது. எப்போது எனச் சொல்ல முடியாக் காலத்திலிருந்து இருப்பதாய்ச் சொல்லப்பட்டாலும் இப்போதைய கோயிலைக் கட்டியவன் கீழைக் கங்க அரசன் நரசிம்ம தேவன் காலத்தில் கி.பி.1250 ஆம் ஆண்டில் என்று சொல்கின்றனர்.

சந்திரபாகா நதிக்கரையில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தக் கோயில் நாளடைவில் நதி பின் வாங்கியதால் காணப்படவில்லை என்கின்றனர். கோயிலும் பெரும்பாலும் சிதைந்தும், அழிந்தும், காற்றில் கரைந்தும் வருகிறது. சூரியனுக்காக உருவாக்கப்பட்ட மாபெரும் ரதமாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில் சௌர வழிபாடு செய்பவர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதைக் கறுப்பு பகோடா என ஐரோப்பிய மாலுமியர் அழைக்கின்றனர். புரி கோயில் வெள்ளை பகோடா என அழைக்கப்படுகிறது.  12 ஜோடிக் கல்லால் ஆன சக்கரங்களைக் கொண்டும் (ஒவ்வொன்றும் மூன்று மீட்டர் என்கின்றனர்) ஏழு குதிரைகள் இழுப்பதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. வலப்பக்கம் நான்கு குதிரைகள், இடப்பக்கம் மூன்று குதிரைகள்.

கலிங்க நாட்டுச் சிற்ப முறைப்படி வடிக்கப்பட்ட இந்தச் சக்கரங்கள் 24 ம், ஒரு நாளின் 24 மணி நேரத்தைக் குறிப்பதாகவும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் சொல்கின்றனர். கொன்டாலைட் என்னும் மலைக்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்கே பார்த்து இருப்பதால், சூரியனின் முதல் கதிர்கள் நேரே கோயிலின் பிரதான மூலஸ்தானத்தில் விழும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மலைக்கற்கள் சிவப்பு மணற்பாறைகளாலும், கறுப்பு கிரானைட் கற்களாலும் ஆகியவை என்கின்றனர்.  நரசிம்ம தேவனின் பனிரண்டு ஆண்டு கால வருமானம் செலவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது.



தொடரும்.

கோயிலின் முழுத் தோற்றம், நன்றி விக்கி பீடியா

Thursday, January 07, 2016

ஒடிஷா(ஒரிஸா) சாலைப்பயணத்தின் சில காட்சிகள்!

கோனாரக்கின் கோபுரத்தை ஒரு தூரப்பார்வையில் எடுத்த படம்.


சாலைகள் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன. கிராமங்களில் கூடக் குப்பைகளைக் காண முடியவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள காய்கறித் தோட்டங்களில் விளைந்த பச்சைப்பசேல் என்ற காய்களை அந்தக் கிராமத்தாரே நெடுஞ்சாலைப்பக்கம் கொண்டு வந்து கடை போட்டு விற்பனை செய்கின்றனர். இக்காய்களைப் போட்டி போட்டுக்கொண்டு அக்கம்பக்கம் நகரத்திலிருந்து பெரிய பணக்காரர்கள் கூட வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகள் விற்கும் விலை தான். நேரடியாக விற்கப்படுவதால் லாபமும் நேரடியாக விவசாயிகளுக்கே போய்ச் சேருகிறது. காலிஃப்ளவர் வெள்ளை வெளேர் எனக் காட்சி அளிக்கிறது. நாங்கள் அங்கிருந்து  ஶ்ரீரங்கம் திரும்பி இருந்தால் நம்ம ரங்க்ஸ் ஒரு மூட்டையே காய்கறிகளை வாங்கி இருப்பார். பழங்களும் அப்படித் தான். ஆப்பிள் பழம் சுவையோ சுவை. ஆரஞ்சும் நன்றாக இருக்கிறது. வாழைப்பழமும் இனிப்பு! கூடியவரை பசுந்தாள் உரமே போடுவதாகச் சொல்கின்றனர். ஏனெனில் பசுமாடுகளை அதிகம் காண முடிகிறது.

இதுவும் கோனாரக் தான்.  இதைக் குறித்த விரிவான பதிவு விரைவில் வரும்.



காடுகள் அடர்ந்து காணப்படுவதோடு அவற்றில் துஷ்ட மிருகங்களும் இருப்பதாக ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் காண முடிகின்றன. அதோடு யானைகள் கூட்டம் கூட்டமாக வருமாம். நெடுஞ்சாலையிலேயே யானைகளைக் குறித்த அறிவிப்பைக் காண முடிகிறது. யானைகள் வரும்போது  ஒரு கிலோமீட்டர் முன்னாலேயே இருபக்கங்களிலும் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்களாம். யானைகள் சாலையைத் தாண்டிச் சென்ற பின்னரே மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும். எங்கள் நெடுஞ்சாலைப் பயணம் மூன்று மணி நேரத்துக்கும் குறையாமல் இருந்தும் எங்களை ஆனையார் வந்து தொந்திரவு செய்யலை என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்! :)

மஹாநதிப்பாலத்தில் வண்டி செல்கையில். கைப்பிடிச் சுவரைத் தாண்டித் தெரிவது நதி தான். என்றாலும் இறங்கி எடுக்க ஓட்டுநர் அனுமதிக்கவில்லை. 

பாலத்திலிருந்து கீழே இறங்கும்போது வரும் இடத்தில் எடுத்த படம்.

Monday, January 04, 2016

புரியின் தேரோட்டம் குறித்த சில தகவல்கள்!

புரி ஜகந்நாதர் கோயிலின் தேரோட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த ரத யாத்திரை ஒன்பது நாட்கள் நடைபெறும்.  ஒரு வருடம் பயன்படுத்திய தேரை அடுத்த வருடம் பயன்படுத்த மாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் தேர் புதிதாக நிர்மாணிக்கப்படுகிறது. தேர்த் திருவிழா ஆஷாட மாதம், நமக்கெல்லாம் ஆனி மாதம் என்றும் தெரியவருகிறது. ஆனால் விக்கிபீடியா ஆடி மாதம் எனக் குறிப்பிடுகிறது. ஆடி மாதம் பௌர்ணமி தினத்தன்று துவங்கும். 16 கலைகளைக் குறிக்கும் வண்ணம்  16 சக்கரங்களைக் கொண்ட  45 அடி உயரமான சிவப்பு. மஞ்சள் நிறத் தேரில் ஜகந்நாதரும், 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வண்ணம் 14 சக்கரங்களைக் கொண்ட 44 அடி உயரமான  சிவப்பு, பச்சை நிறத் தேரில் பாலபத்திரரும், 12 மாதங்களையும் குறிக்கும் வண்ணம் 12 சக்கரங்களைக் கொண்ட  43 அடி உயரமான சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்திரா தேவியும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வீதி வலம் வருவார்கள்.  ஆண்டு தோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் செய்யப்படுகிறது.  தேரோடும் வீதிகள் "ரத்னவீதி" எனப்படுகின்றன. உண்மையிலேயே அகலமான வீதிகளாகவே இருக்கின்றன. இந்த வீதிகளைப் புரி ராஜா கஜபதி என்பவர் தங்கத் துடைப்பத்தால் தேரோட்டம் துவங்கும் முன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வாராம். முதலில் பாலபத்திரர் தேரும், பின்னர் சுபத்ரா தேவி தேரும், கடைசியாக ஜகந்நாதர் தேரும் கிளம்பும்.



நந்திகோஷ் ரதம், படம் உதவி விக்கிபீடியா

ரதயாத்திரையைப் பார்ப்பது வாழ்வின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. புரி கோயிலின் கருவறையில் இருக்கும் மூர்த்தங்கள் கோயிலின் சிங்கத்வார் எனப்படும் வாயில் வழியாக வெளியே கொண்டு வரப்படுகின்றன.  அதிக கனம் வாய்ந்த மர மூர்த்தங்கள் என்பதால் பலர் சேர்ந்து தூக்கி வருகிறார்கள்.  சுமார் எட்டடி உயரத்திற்கு ஜகந்நாதர் காணப்படுகிறார். அவரை நந்திகோஷா அல்லது கருடத்வஜாஎனப்படும் அவருடைய தேரிலும், பாலபத்திரரை தலத்வஜா எனப்படும் அவருடைய தேரிலும், சுபத்ராதேவியை த்வார்பதாலனா அல்லது பத்மத்வஜா எனப்படும் அவருடைய தேரிலும் அமர்த்தப்படுகின்றனர்.  சுபத்ரா தேவியின் தேரில் காணப்படும் கறுப்பு நிறம் சக்தி தேவியின் நிறத்தைக் குறிக்கிறது என்கின்றனர். சுபத்ரா தேவியை சக்தியின் அவதாரமாகக் கருதுகின்றனர்.  கறுப்பு நிறத்துடனும் பெரிய கண்களுடனும் காணப்படும் ஜகந்நாதரை சாம வேதத்தின் இறைவனாக விஷ்ணு சொரூபமாக வழிபடுகின்றனர்.  பலராமன் ரிக்வேதத்தைக் குறிக்கும் சிவ சொரூபமாகவும், சுபத்ரா தேவி மஞ்சள் நிறத்துடன் யஜுர் வேதத்தைக் குறிக்கும் சக்தி சொரூபமாகவும் வழிபடப்படுகிறாள்.  ஜகந்நாதரின் தேரோட்டியை தாருகா எனவும், (இவரும் மர வடிவமே) தேரை இழுக்க உதவும் வடத்திற்குச் சங்கசூடா என்றும் பெயர்.  பலராமரின் தேரோட்டிக்கு மாதவி என்றும் தேர் வடத்திற்கு வாசுகி என்றும் பெயர். சுபத்ராவின் தேரோட்டி அர்ச்சுனன், வடத்தின் பெயர் ஸ்வர்ணசூடா ஆகும்.


தலத்வஜா ரதம், படம் உதவி விக்கிபீடியா

சிங்கத்வார் வழியாகக் கிளம்பும் தேர் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள குண்டிச்சா தேவி ஆலயம் வரை இழுத்துச் செல்லப்படுகிறது. வழியில் பல கோயில்களின் தேர்களும் இந்த ஊர்வலத்தில் சேர்ந்து கொள்கின்றன. மேள, தாளங்கள், வேத மந்திரங்கள், பக்திப்பாடல்களுடன் தேர் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது. ஒன்பது நாட்கள் குண்டிச்சா தேவி கோயிலில் தங்கி இருக்கும் ஜகந்நாதருக்கும், பாலபத்திரர் சுபத்ரா தேவிக்கும் அங்கே சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் நாள் தேர் அங்கிருந்து திரும்புகிறது.  நண்பகல் நேரம் புரியின் கோயில் சிம்மத்வார் வரும் தேர்கள் அங்கேயே நிறுத்தப்படுகின்றன. ஜகந்நாதருக்கும் அவருடன் கூட இருக்கும் மற்ற இருவருக்கும் ராஜாங்கக் கோலத்தில் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஜகந்நாதருக்குத் தங்கத்தாலான கைகள் பொருத்தப்பட்டு தங்கச் சங்குச் சக்கரமும் வைக்கப்படுகின்றன. அன்றைய தினம் ஏகாதசி நாளாக இருக்கும்.  இந்த ஏகாதசி தினத் திருக்காட்சி கனாவேஷா என அழைக்கப்படுகிறது. மறுநாள் துவாதசி அன்று ஆலயத்தினுள் எடுத்துச் சென்று  நான்கடி உயரம், 13 அடி அகலம், 16 அடி நீளம் கொண்ட ரத்தினச் சிம்மாதனத்தில் அமர்த்துவார்கள். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும். வலம் வந்து வணங்குவார்கள். இத்துடன் புரி ரத யாத்திரை நிறைவு பெறும்.



த்வார்பதாலனா அல்லது பத்மத்வஜா

படம் உதவி விக்கி பீடியா