எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 29, 2016

புடைவைகள் பார்க்கவும்!

நாவல் பழமே காசிக்குப் போய் விட்டாச்சு. நாவல் பழக் கலரிலே புடைவை எங்கேருந்து எடுக்கிறது! ஜேகே அண்ணாவுக்கு என்னோட புடைவை செலக்‌ஷனே பிடிக்கலை! ஹிஹிஹி, ஏனெனில் புடைவைகளோட நிறத்தை அப்படியே ஃபோட்டோவில் பார்க்க முடியறதில்லை. இப்போக் கிட்டே வைச்சுப் படம் எடுத்திருக்கேன். ஒரு புடைவை பன்னீர் ரோஜாப் பூவின் ரோஸ் நிறம். குலாபி பிங்க் என்றும் சொல்வார்கள். இன்னொன்று அழுத்தமான ஆரஞ்சு (?) மெரூன் கலந்தது. ஆனால் படத்தில் வேறே மாதிரித் தெரியுது. அதான் ஏன்னு புரியலை! :)

குலாபி பிங்க் மெரூன் பிங்க் மாதிரித் தெரியுது! :)


தலைப்பின் ஒரு பகுதியும் உடல் பாகமும். நல்ல ரோஜா நிறம் ஆனால் இங்கே நிறம் மாறித் தெரியுது! :) பச்சை நிற பார்டர், இங்கே நீலமாத் தெரியுது! ஒருவேளை எனக்குக் கலர் பார்க்கத் தெரியலையோனு நினைச்சால் அப்படி இல்லைனு புரிஞ்சது. :)



தலைப்பு நடுவில் உள்ள டிசைன்

உடல் பாகமும் கீழுள்ள பார்டரும்


இன்னொரு புடைவையின் தலைப்பின் ஒரு பகுதி



உடலும் தலைப்புக்கு அருகிலுள்ள பகுதியும். போடலாமா, வேண்டாமானு ரொம்ப யோசிச்சேன். அப்புறமா கோ ஆப்டெக்சுக்கு ஒரு விளம்பரமா இருக்குமேனு போட்டிருக்கேன். 

தீபாவளி கொண்டாடியாச்சா? அனைவருக்கும் வாழ்த்துகள்!

ராமர் உம்மாச்சி விளக்கின் பிரதிபலிப்பு வராமல் இன்னிக்குப் படம் எடுக்க முடிஞ்சது! 


கீழே உள்ள உம்மாச்சிங்க எல்லாரும்! 


நல்லெண்ணெய் காய்ச்சியது, சீயக்காய், மஞ்சள் தூள், ஸ்பூன் போட்டுத் தட்டுப் போட்டு மூடி இருப்பது தீபாவளி மருந்து அப்புறம் பட்சண டப்பாக்கள் வெற்றிலை, பாக்கு, பழம், புடைவை, வேஷ்டி! மேலே உள்ள புடைவையைத் தான் தீபாவளிக்குக் கட்டிக் கொண்டேன். அடியில் உள்ளது அப்புறமாக் கட்டிக்கலாம்னு வைச்சிருக்கேன். இரண்டுமே கைத்தறிப் புடைவைகள். கோ ஆப்டெக்ஸில் எடுத்தவை!

பட்சணங்கள், பால், தூக்கிலும் பால், மருந்து சின்னக் கிண்ணம், தேன் குழல், ஓமப்பொடி, பாதாம் அல்வா கொஞ்சம் போல பச்சைப்பயறு லாடு, தேங்காய் பர்ஃபி, மிக்சர் ஆகியன நான் செய்த பட்சணங்கள். இப்போச் சில வருடங்களாக ஒரே ஒரு உப்புப் பட்சணமும் ஒரே ஒரு லாடு இல்லைனா கேக் வகையும் பண்ணிக் கொண்டிருந்தேன். இந்த வருஷம் எங்க பையருக்குப் பதினோரு வருடங்கள் கழித்துப் பெண் குழந்தை போன மாதம் பிறந்திருக்கிறபடியால் பேத்தி வந்திருக்கும் சந்தோஷத்தில் மூணு ஸ்வீட்! (சாப்பிடத் தான் பயம்மா இருக்கு, விநியோகம் தான் செய்யணும்!) தேன்குழல் தவிர, ஓமப்பொடி, மிக்சர் ஆகியனவும் செய்துட்டேன்.

அப்புவோடு ஸ்கைபில் பார்த்துப் பேசிப் புடைவையைக் காட்டி, பட்சணங்களையும் காட்டிட்டேன். அப்புவுக்கு பட்சணங்களைப் பார்த்ததும் இந்தியாவுக்கு ஓடி வரணும் போல் இருந்தது! என்ன செய்ய முடியும்! :( ஏதேனும் ஒரு தீபாவளிக்காவது அவங்க இந்தியா வரணும்னு ஆசை தான்! ஆனால் தீபாவளியோ டிசம்பரிலோ அல்லது ஜூலை, ஆகஸ்டிலோ வராமல் அக்டோபர், நவம்பரில் வருது! அப்போ அவங்களுக்கு இங்கே வர முடியாது! :( கடந்த காலத்தை நினைவு கூர்ந்துக்க வேண்டியது தான்.

சின்னச் சின்ன டப்பாக்களில் பட்சணத்தைப் பார்த்த எங்க பொண்ணுக்குத் தான் ஆச்சரியம் தாங்கலை. இதையே நாங்க தின்னு தீர்க்கணுமேனு இப்போவே கவலையா இருக்கு! முன்னெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னரே எண்ணெய் சேகரிப்பு, சர்க்கரை சேகரிப்புனு நடக்கும். இன்றிரவு நரக சதுர்த்தசி ஸ்நானம்னா ராத்திரி பத்து மணிக்குத் தான் தீபாவளிக்கு வைச்ச எண்ணெய்ச் சட்டி அடுப்பிலிருந்து கீழே இறக்கப்படும். ராத்திரி படுக்கப் பதினோரு மணி ஆயிடும். திரும்பக் காலையிலே இரண்டு இரண்டரைக்கு எழுந்தால் தான் எல்லாம் தயார் செய்துட்டுக் குழந்தைங்களை நான்கு மணிக்கு எழுப்பிக் குளிக்க வைக்க முடியும். அப்போல்லாம் இருட்டோடு புடைவையும் கட்டிக் கொண்டு ஆயிடும். இப்போ இன்னிக்கு மூன்றரைக்கு எழுந்தே எல்லா வேலைகளையும் முடிச்சுக் குளிக்கையில் ஐந்தரை ஆயிடுச்சு!

முன்னெல்லாம் ஒரு வாரம் பட்சணம் செய்து கொண்டிருந்த காலமும் போயாச்சுனு சொன்னேன். இப்போல்லாம் மிஞ்சிப் போனால் காரம் செய்ய ஒரு மணி நேரமும் தித்திப்பு செய்ய அரை மணி நேரமும் தான். ஒரு நாளைக்கு இரண்டே மணி நேரத்தில் தேன் குழலும், தேங்காய் பர்ஃபியும் செய்து முடித்தேன் என்று சொன்னேன்.

ரொம்பவே சுயப் பிரதாபமோ! ஓகே. அனைவருக்கும் இந்த நரக சதுர்த்தசி நாளில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வாழ்த்துகள்.  நரகாசுரன் கதை எல்லாம் கடந்த நூறு வருடங்களுக்குள்ளாக வந்தது எனவும், உண்மையில் நரகத்திலிருந்து விடுதலை பெற வேண்டியே இந்தச் சதுர்த்தசி நாளைக் கொண்டாடுகிறோம் எனவும் ஞானமாகிய வெளிச்சம் பெற வேண்டியே தீபங்கள் ஏற்றிக் கொண்டாடுகிறோம் எனவும் சில நாட்கள் முன்னர் தான் யாரோ, எதிலோ எழுதிப் படிச்சேன்.

காரணம் எதுவாயினும் பண்டிகை கொண்டாடுவதால் நம் உடல், மனம் இரண்டுக்கும் மாற்றங்கள் கிடைக்கின்றன. மேலும் இப்போதெல்லாம் முன்னை மாதிரி உடலை வருத்திக் கொண்டு பட்சணங்கள் செய்து பண்டிகை கொண்டாடுவதும் இல்லை. என்றாலும் பெரும்பாலோர் வீட்டிலேயே செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அனைவருடனும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டு இனிப்புகளையும், காரங்களையும் கொடுத்து மாற்றிக்கொண்டு உறவு கொண்டாடிக் கொண்டு இணக்கமான சூழ்நிலையில் வாழ்வதற்காகவே பண்டிகைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். எங்கேப்பா என்னோட தம்பிங்கல்லாம்! வரிசையா வந்து சீ(ரு)றுங்கப்பா! எது கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஒரு சவரன் காசாக இருந்தாலும் போதும்! நமக்கெல்லாம் பேராசையே கிடையாதுனு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியுமே! :)

Sunday, October 16, 2016

புளிவிட்ட கீரையும், பொரிச்ச குழம்பும்!

நெல்லைத் தமிழன் புளிவிட்ட கீரையைப் பத்தி ஏக்கத்துடன் சொல்லி இருப்பதைப் படிச்சதும், இங்கே அதைக் குறித்துப் பகிரலாம்னு நினைச்சேன். ஆனால் பாருங்க, என்னமோ தெரியலை, எழுத மனசே வரலை! ரொம்பவே தள்ளிப் போட்டுட்டு இருந்தேன். அப்புறமா ஒரு வழியா எழுதறதுக்கு மனோநிலை ஒத்துழைக்க, இப்போ எழுத வந்தேன்.

புளிவிட்ட கீரை எங்க வீட்டிலே இரண்டு விதமாப் பண்ணுவாங்க. ஒண்ணு சாப்பாட்டுக்கு சைட் டிஷாகத் தொட்டுக் கொள்ள. அதுக்கு முக்கியமா சாதத்தோடு பிசைந்து சாப்பிடப் பொரிச்ச குழம்பு பண்ணணும். பொரிச்ச குழம்பும், புளிவிட்ட கீரையும் அருமையான காம்பினேஷன், தென் மாவட்டங்களிலே! இன்னொரு விதமான புளிவிட்ட கீரை சாதத்திலேயே போட்டுப் பிசைந்து சாப்பிடுவது. இரண்டுக்கும் வித்தியாசம் துவரம் பருப்புச் சேர்ப்பது மட்டுமே!

கீரை முளைக்கீரையா இருந்தால் நல்லா இருக்கும். இல்லைனா அரைக்கீரையும் பரவாயில்லை. சிறுகீரையில் பண்ணியதில்லை. பாலக்கில் கொஞ்சம் பரவாயில்லை ரகம். மற்றக் கீரைகளில் மணத்தக்காளிக்கீரையில் பொரிச்ச குழம்பு தான் நல்லா இருக்கு. ஆகவே முளைக்கீரை அல்லது அரைக்கீரை எடுத்துக்குங்க! கட்டு பெரிதாக இருந்தால் கீரை நிறைய இருக்கும். ஆகவே வீட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றாற்போல் கீரையைத் தயார் செய்துக்கணும். நான்கு பேருக்கான சாமான்கள்:

சின்னக் கீரைக்கட்டு ஒன்று நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கவும். கீரைத்தண்டுகள் இளசாக இருந்தால் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். கீரை இலைகளும் பெரிசாக இருந்து தண்டும் கனமாக இருந்தால் தண்டைத் தனியாக வைச்சுடவும், அப்புறமா ஒரு நாள் சாம்பாரிலே போடலாம் அல்லது பொரிச்ச குழம்போ, மோர்க்கூட்டோ, மிளகூட்டல் மாதிரியோ செய்துக்கலாம். இப்படி நறுக்கிய கீரை சுமார் மூன்று அல்லது நான்கு கிண்ணம் வரும்.
அரைக்கீரை க்கான பட முடிவு
இதற்குத் தேவையான உப்பு, சாம்பார்ப் பொடி, பச்சைமிளகாய் ஒன்று, பெருங்காயம் சிறிதளவு. தொட்டுக்கப் பண்ணும் புளிக்கீரைனால் அதற்குப் பருப்புப் போட வேண்டாம். பிசைந்து சாப்பிடுவது எனில் பருப்புத் தேவை. ஒரு சின்னக் கிண்ணம் குழைய வேக வைத்த துவரம்பருப்பு. புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக் கரைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும். அரைக்கிண்ணம் புளிச் சாறு இருக்கலாம்.
முளைக்கீரை க்கான பட முடிவு


கீரையை நன்கு கழுவி அலசி வடிகட்டிக் கல்சட்டி அல்லது உருளி அல்லது உங்கள் வழக்கமான நான் ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு அரைக் கிண்ணம் நீர் விட்டு வேக வைக்கவும். வேகும்போதே பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கீரையில் சேர்க்கவும்.  கீரையை வேக வைக்கையில் மேலே தட்டுப் போட்டு மூடக் கூடாது! கீரை நன்கு வெந்ததும் மத்தால் மசிக்கவும். இன்னும் சிறிது நேரம் வேகவிடவும். மீண்டும் மத்தால் நன்கு மசிக்கவும். கீரை நன்கு மசித்ததும் புளிச்சாறைச் சேர்த்து உப்பு, சாம்பார்ப் பொடி, பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். கெட்டிப்பட்டு வருகையில் வெந்த துவரம்பருப்பைச் சேர்க்கவும். கீரை ரொம்பவே நீர்க்க சாம்பார் மாதிரியும் இல்லாமல் அதே சமயம் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.  பின்னர் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், உபருப்பு, ஒரு மிவத்தல் தாளிக்கவும். குழம்புக் கருவடாம் இருந்தால் அதையும் எண்ணெயில் நன்கு வறுத்துச் சேர்க்கலாம். பொரிச்ச குழம்புக்குத் தொட்டுக்கப் பண்ணினால் துவரம் பருப்புத் தவிர மற்றவை சேர்த்துப் பண்ணி இதே போல் தாளிக்கலாம்.

பொரிச்ச குழம்பு: இதற்குப் பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு அல்லது இரண்டும் கலந்து தேவைப்படும். குழைந்த பருப்பு அரைக்கிண்ணம்.  காய்கள், புடலை, முருங்கை, கொத்தவரை, அவரை, கத்திரிக்காய், கீரைத்தண்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது கலந்த காய்களாக நறுக்கியது இரண்டு கிண்ணம். கலந்த காய்களில் அவரை+காரட் சேர்க்கலாம். புடலை+காரட் சேர்க்கலாம். கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றைத் தனியே சமைத்தால் தான் ருசி நன்றாக இருக்கும். கலக்கப் பிடிக்கும்னா கலந்துக்கலாம். ஒரு சிலர் சௌசௌவையும் காரட், பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்துப் பொரிச்ச குழம்பு செய்வார்கள்.

எல்லாவற்றுக்கும் அரைத்து விடும் முறை ஒன்றே தான். தே எண்ணெயில் காய்களுக்குத் தகுந்தாற்போல் ஒன்றிலிருந்து இரண்டு மி.வத்தல் ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, முக்கால் டீஸ்பூன் மிளகு, பெருங்காயம் தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை நன்கு வறுத்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

மேற்சொன்ன காய்களைக் கொஞ்சம் போல் எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு வேக விடவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு காய்கள் வெந்ததும் வேக விட்ட பருப்பைச் சேர்த்து அரைத்த விழுதையும் போட்டுக் கலக்கவும். ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு கொதி வந்ததும் கீழே இறக்கிக் கொண்டு, தே. எண்ணெயில் கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கருகப்பிலை, ஒரு மிவத்தல் போன்றவற்றைத் தாளிக்க வேண்டும். இதில் கொண்டைக்கடலையைக் காய் வேகவிடும்போதே எண்ணெயில் வறுத்துச் சேர்க்கலாம். வேர்க்கடலையையும் காய்கள் வேகும்போதே சேர்த்து வேக விடலாம். இதற்கு ஜீரகம் வைத்து அரைக்கக் கூடாது. அரைத்தால் ருசி மாறும் என்பதோடு மொளகூட்டலுக்கும் இதுக்கும் வேறுபாடு தெரியாமல் போயிடும்! :)  இதுக்குத் தொட்டுக்கத் தான் பருப்புப் போடாத புளிவிட்ட கீரை! இதிலும் குழம்புக்கருவடாம் வறுத்துச் சேர்க்கலாம்.

Friday, October 14, 2016

தண்ணீர், தண்ணீர், தண்ணீர் கேட்கும் வயல்கள்!

எப்போவும் நம்முடைய இருப்பைக் காட்ட வேண்டியதாய் இருக்கு! ஹிஹிஹி!கொஞ்ச நாட்கள் பதிவு போடலைனால் மக்கள் மறந்துடறாங்க! அவங்க அவங்க வேலை இருக்கு இல்லையா! அதோடு எனக்கும் இப்போப் பதிவுகள் போடுவதில் கொஞ்சம் இல்லை நிறையச் சுணக்கம் ஏற்பட்டிருக்கு. இந்த 2016 ஆம் வருடம் பிறந்ததில் இருந்தே சுணக்கம் தான். போகப் போக எப்படியோ தெரியலை! :)

நேற்றுப் பெரிய ரங்குவைப் பார்க்கப் போயிருந்தேனா! கூட்டமே இல்லை! தாயார் சந்நிதியில் கொஞ்சம் கூட்டம் இருந்தது என்றாலும் பட்டாசாரியார்கள் விரட்டவில்லை என்பதால் கொஞ்சம் நிம்மதியாகப் பார்த்துட்டு வந்தோம். நவராத்திரியும் முடிஞ்சு பள்ளிகள் அலுவலகங்கள் எல்லாமும் திறந்தாச்சா, கூட்டமே இல்லை. கோயிலில் நம்ம பெரிய

படம் நேத்தி எடுக்கலை, முன்னர் எடுத்தது.

 ரங்குவுக்கு இப்போ இரண்டாம் முறையாத் தைலக்காப்புச் சார்த்திப் போர்த்தி விட்டிருக்காங்க! முக தரிசனம் மட்டுமே! திருவடி தரிசனம் கிடையாது! அதனால் தானோ என்னமோ தெரியலை, நேத்திக்குக் கூட்டம் கம்மியா இருந்தது. எவ்வளவு கம்மின்னா நாங்க இரண்டு பேருமே இலவச தரிசனத்தில் நேரே ஜய, விஜயர்களைக் கடந்து உள்ளே காயத்ரி மண்டபம், மூலஸ்தானம் வரை போய் விட்டோம். உள்ளே ஒரு பத்திருபது பேர் தான் இருந்திருப்பார்கள். பட்டாசாரியார்கள் வழக்கம்போல் தெரிந்தவர்களுக்குச் சடாரி சாதித்துக் கொண்டும், துளசிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டும் இருந்தனர். அப்போ அவர் சரியாப் புரியாமல் எனக்கும் சடாரி சாதித்துவிட்டார். அடிச்சேன் பிரைஸ்! ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸ் தலையைக் குனிந்து குனிந்து காட்டிட்டு இருந்தார். அப்புறமா என்ன நினைச்சாரோ அவருக்கும் கிடைச்சது! துளசியும் நாங்க வேறே வாங்கிக் கொண்டு கொடுத்ததாலோ என்னமோ இரண்டு பேருக்கும் கிடைச்சது.

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் க்கான பட முடிவு

இதை எல்லாம் நம்பெருமாள் பார்த்துக் கொண்டு சிரிச்சாரா, நான் அவரையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டேனா, பட்டாசாரியா ர் ஒருத்தருக்குக் கோபம் வந்து விட்டது. என்றாலும் அசராமல் நின்று பார்த்து நம்பெருமாளை என்னனு கேட்டுவிட்டுத் தான் வந்தேன். யாகபேரரைத் தான் பார்க்க முடியவில்லை. அடுத்த முறை வைச்சுக்கலாம்னு வந்துட்டேன். அப்புறமா வெளியே வந்தும் சில நிமிடங்கள் நின்று கொண்டு பார்த்தோம். பெரிய ரங்குவின் திருமுக தரிசனம் கிடைச்சது. திருவடி தரிசனம் தீபாவளியிலிருந்து ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். 

இன்னிக்குக் கும்பகோணம் அருகிலுள்ள எங்க மாமனாரின் பூர்விக ஊரான பரவாக்கரை மாரியம்மன் கோயிலுக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டிச் சென்றோம். மாரியம்மன் தான் குல தெய்வம். அங்கே சென்றபோது அம்பாளின் அபிஷேஹம் முடிந்து அலங்காரம் வெகு எளிமையாகச் செய்திருந்தார் பூசாரி. அதைப் பார்த்ததும் அம்மனை ஒரு படம் பிடித்துக் கொண்டேன். பூசாரி அனுமதியுடன் தான். வழக்கம்போல் அலைபேசியில் எடுத்ததால் அதை ஶ்ரீராமுக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைச்சு அவர் என் மெயிலுக்கு அனுப்பினார். என் மெயிலுக்கு என் அலைபேசியிலிருந்து அனுப்ப முயன்றால் போவதே இல்லை! என்னனு புரியலை!
வரும் வழியில் வயல்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தோம். வசதி படைத்தவர்கள் போர்வெல் குழாய்கள் மூலம் நிலத்து நீர்ப்பாசனம் செய்திருந்தனர். சில இடங்களில் நாற்றுகள் பிடுங்கி நடுவதற்குக் காத்திருந்தன. சில இடங்களில் உழுது போட்டிருந்தார்கள். தண்ணீர் வருவதற்குக் காத்திருந்தார்கள். தண்ணீர் அங்கெல்லாம் போய்ச் சேரவே இல்லை. இங்கே திருச்சிக்கே வந்திருக்கும் தண்ணீரின் ஆழம் அரை அடி இருந்தால் பெரிது! இதிலே கல்லணையிலிருந்து விடப்படும் நீர் கடைமடை வரை போவது எங்கே? இங்கே நடுவிலிருக்கும் கும்பகோணத்துக்கே போகவில்லை! தண்ணீர் விடும் பாசன வாய்க்கால்கள் எல்லாம் தூர் வாரப்படாமல் நாணலும், ஆகாசத்தாமரையும் வளர்ந்து புதர்கள் மண்டிக் காட்சி அளித்தன.

உழுது போட்டிருக்கும் வயல்! அருகே பாசன வாய்க்கால், புற்கள் முளைத்துக் காணக் கிடைக்கிறது. 

இதுவும் ஒரு வயல் தான். உழுது விட்டுப் பின்னர் சும்மா விட்டிருக்கின்றனர். நீர் வருமா என எதிர்பார்த்தோ என்னமோ! அருகில் பாசன வாய்க்கால் வழக்கம் போல் செடி, கொடிகளுடன்! :(

குட்டை போல் கொஞ்சம் தண்ணீருடன் காணப்படும் அரிசிலாறு. மற்ற இடங்கள் மேடிட்டும், சில இடங்களில் மணல் வாரியதால் பள்ளமாயும், சில இடங்களில் மரங்களே முளைத்து வளர்ந்தும் காண முடிகிறது. :(



அரிசிலாறு இன்னொரு கோணத்தில் எடுக்கப்பட்டது. இங்கே தடுப்பணை போல் கட்டி இருப்பதால் குடி நீர்த்தேவையைப் பூர்த்தி செய்கிறது என்று நினைக்கிறேன். என்றாலும் ஆற்றுக்கு நடுவில் எவ்வளவு பெரிய மரம் வளர்ந்திருக்கிறது என்று பாருங்கள். 

இன்னொரு காய்ந்து காணப்படும் வயல். வயல்களை ஒட்டிய பாசன வாய்க்கால்கள் எல்லாம் வறண்டே காணப்படுகின்றன. அவை சுத்தம் செய்யப்படவும் இல்லை. ஆயிற்று, மழை இன்னும் சில நாட்களில் வந்து விடும். அப்போது தண்ணீரெல்லாம் உறிஞ்சப்பட்டாலும் தேங்கவும் செய்யும், அந்த நீரை எல்லாம்சேமிக்க வழி செய்யப்பட்டிருக்கிறதா? ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றனவா? நீர் வரத்துக்கால்வாய்களிலும் பாசனக் கால்வாய்களிலும் தூர் வாரப் பட்டிருக்கிறதா? செடி, கொடிகள், முட்புதர்கள் அகற்றப்பட்டிருக்கின்றனவா? கொடிய ஆகாயத் தாமரை அகற்றப்பட்டிருக்கிறதா? 

தண்ணீர் தரவில்லை என்று போராட்டங்கள் நடத்துகிறோம். ஆனால் அந்தத் தண்ணீரைச் சேமிக்கும் வழியை நாம் கடைப்பிடிக்கிறோமா? இந்த இடையூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டால் தான் கடைமடைவரை தண்ணீர் போய்ச் சேரும்! வருகிற தண்ணீரையாவது நன்கு செலவு செய்ய வேண்டாமா? போராட்டம் நடத்தினால் போதுமா? முன்னேற்பாடுகள் செய்ய வேண்டாமா?  யார் செய்வது? அரசாங்கம் செய்யும் என்று கிராமவாசிகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தால் அரசு வெளி ஆட்களைக் கொண்டு வந்து ஏதோ முடிந்தவரை சுத்தம் செய்து விட்டுப் போகும். கூலியும் வெளி ஆட்களுக்குப் போகும். சுத்தம் செய்வதும் சரிவர நடக்காது.

நம் கிராமம், நம் வயல், நம் மண் என்று இருந்தால் தானே இதெல்லாம் சரியாகும்! நம் கிராமத்தை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா? ஒரு காலத்தில் இவை எல்லாம் சரிவர நடந்து தான் வந்திருக்கிறது. அதனால் இன்றும் கண்டோர் வியக்கும் வண்ணம் நீர்ப்பாசன வாய்க்கால்கள் காணப் படுகின்றன. குறைந்த பக்ஷமாக முன்னோர்களால் கட்டிக்காத்த வளங்களை முடிந்த அளவு அழிக்காமலாவது இருக்கலாமே! தண்ணீர் குறைந்த அளவு செலவாகும் பயிர்களைப் பயிரிட ஆரம்பிக்கலாம். அல்லது சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் எப்படி என்று கண்டறிந்து அதன் மூலம் பாசனங்கள் செய்ய ஆரம்பிக்கலாம். ஏற்கெனவே நகரங்களை ஒட்டி இருந்த வயல்களெல்லாம் குடியிருப்புகளாக மாறி விட்டன. இப்போது கிராமங்களில் இருக்கும் வயல்களும் அழிந்து விட்டால்! எல்லாம் நரகமயமாகவே ஆகி விடும்! நினைக்கவே பயமாக இருக்கிறது. 

Monday, October 10, 2016

அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்.

அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.

சரஸ்வதி ரவிவர்மா படம் க்கான பட முடிவு

நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள். நதியாக ஓடியதற்கும் ஒரு காரணம் உண்டு. அது பின்னர் விளக்குகிறேன்.

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சிருங்கேரி சாரதை க்கான பட முடிவு
சிருங்கேரி சாரதை க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி விக்கி பீடியா!
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு.



இன்று நான் நெய்ப்பாயசம் கொஞ்சம் போல் செய்தேன். அப்புறமா வடை, அப்பம் மட்டுமே.  பூஜைக்கான படங்கள் கீழே போட்டிருக்கேன். சுண்டல் மாலை தான் செய்யப் போகிறேன். ஆகவே இப்போ நோ சுண்டல்! :)

இன்றைய சுண்டல் அநேகமாக அனைவரும்  வடமாநிலங்களில் கூட இன்று கொண்டைக்கடலையே செய்வார்கள். கறுப்புக் கொண்டைக்கடலை தான் நல்லது. கடலையை முதல் நாளே முன்னர் சொன்னது போல் சோடா உப்புச் சேர்த்து ஊற வைக்கவும். பின்னர் மறு நாள் நன்கு கழுவிவிட்டுப் புதிய நீர் விட்டு வைக்கவும். அதன் பின்னர் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், கருகப்பிலை, இரண்டு மி.வத்தல் போட்டு வெந்த கடலையைக் கொட்டிக் கிளறவும். மி.வத்தல், தனியா இரண்டும் வறுத்துப் பொடி செய்து அதைச் சேர்க்கவும். இதற்குச் சாம்பார்ப் பொடி போட்டால் நன்றாக இருக்காது/ தேங்காயைத் துருவலாகவோ, அல்லது பல்லுப் பல்லாகக் கீறியோ சேர்க்கவும்.

இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

வட மாநிலங்களில் ராவணன் வதம் விஜயதசமி அன்று நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ராம்லீலா என்று ராவண வதம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி அங்கே பெரிய அளவில் நடைபெறும். ஒரு சிலர் குருக்ஷேத்திரப் போருக்கு முன்னர் அர்ஜுனன் ஆயுதங்களைச் செம்மை செய்து வன்னி மரத்திலிருந்து எடுத்த நாள் என்றும் சொல்வார்கள். எப்படியாயினும் நமக்கு வேலையை எளிதாக்கும் ஆயுதங்கள் அனைத்துக்கும் நன்றி தெரிவித்துப் பூஜை போடும் நாள் ஆயுத பூஜை.

இன்றைய நிவேதனம் தயிர்சாதம். முன்னர் சொன்னாற்போல் தயிர்சாதம் செய்து நிவேதனம் செய்யவும். இன்றைக்குச் சுண்டல் செய்வதில்லை. இரவு படுக்கப்போகும் முன்னர் ஒரு பொம்மையைக் கிழக்கு, மேற்காகப் படுக்க வைக்கவேண்டும். பொதுவாக மறுநாள் பொம்மைகளைப் பெட்டியில் எடுத்து வைக்கும் வழக்கம் இருந்தாலும் இந்த வருஷம் மறுநாள்  புதன் கிழமை தான். ஆகவே பொம்மைகளை எடுத்துப் பத்திரப் படுத்தி வைக்கலாம். அனைவருக்கும் நாளை அக்டோபர் 11-ஆம் தேதி விஜயதசமிக்கான வாழ்த்துகள்.

Sunday, October 09, 2016

ஹாஹா, தலைப்பே இல்லாமல் வந்துடுச்சு! :)

நேத்திக்கு பதிவர் ஆதி வெங்கட் வீட்டுக்குப் போனேன். நம்ம ரங்க்ஸ் தான் கூட்டிப் போனார். ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப தூரம்! அவங்க மாயவரத்திலே இருந்து பொம்மைங்க வாங்கிட்டு வந்ததாச் சொன்னதாலே நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பொம்மைங்களை எதிர்பார்த்துப் போனால் ம்ஹூம்! அவ்வளவெல்லாம் இல்லை! என்றாலும் நல்லாவே கொலு வைச்சிருக்காங்க. ரோஷிணி சித்திரம் வரையும் வகுப்புக்குச் சென்றிருந்ததால் ஆதி மட்டும் தான் இருந்தார். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெற்றிலை, பாக்கு பெற்றுக்கொண்டு அடுத்த கலெக்‌ஷனுக்குக் கிளம்பினோம். கீழே ஆதி வீட்டுக் கொலுவின் படங்கள். செல்லில் எடுத்தது. தொ.நு.நி. ஒண்ணும் சொல்லாதீங்கப்பா! 




நம்ம வீட்டிலே நிவேதனத்துக்கு நேத்திக்குக் குணுக்கு செய்தேன். குணுக்குனு பெயர் தானே தவிர கிட்டத்தட்டத் தவலை வடை மாதிரித் தான் கொஞ்சம் சின்ன அளவில் செய்தேன். குணுக்குக்கு எங்க மாமியார் பச்சரிசி மட்டும் போடுவாங்க. அதோடு சேர்த்தே எல்லாப் பருப்புக்களையும் நனைச்சு வைப்பாங்க. நாம தான் தனி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரகமாச்சே, இதிலும் தனியாப் பண்ணலைன்னா எப்பூடி? 

என்னோட செய்முறைப்படி விநியோகத்துக்காகக் குணுக்கு தயாரிக்கையில் எவ்வளவு பேர் வருவாங்க, நீங்க எவ்வளவு தின்னு  தீர்ப்பீங்கனு எல்லாத்தையும் கணக்கிலே எடுத்துக்கணும் இல்லையா? இது போணியாகலைனாலும் கவலை இல்லை. குணுக்காகவோ, அல்லது மாவாகவோ வைச்சுட்டா மறுநாளைக்கு ஒரு கை இல்லை இரண்டு கையாலும் பார்த்துடலாம். ஹிஹிஹி, ஆனால் நேத்திக்குப் போறாமல் போச்சு என்பது தான் உண்மை! அது தனியா இருக்கட்டும். இப்போக் குணுக்குக்கான படங்களும், நம்ம செய்முறையும் பார்ப்போமா!

இட்லி புழுங்கலரிசி ஒரு கிண்ணம் முக்கால் கிண்ணம் பச்சரிரி. இரண்டையும் கழுவிக் களைந்து தனியாக ஊற வைக்கவும். துவரம்பருப்பு முக்கால் கிண்ணம், அரைக்கிண்ணம் கடலைப்பருப்பு ஒன்றாகக் கழுவிக் களைந்து தனியாக ஊற வைக்கவும். அரைக்கிண்ணத்திற்குக் கொஞ்சம் குறைவாக உளுந்து கழுவிக் களைந்து தனியாக ஊற வைக்கவும்.

அரைக்கத் தேவையான பொருட்கள். மி.வத்தல் காரமாக இருந்தால் நான்கு போதும். இல்லை எனில் ஏழு அல்லது எட்டு எடுத்துக் கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், கட்டிப் பெருங்காயம் எனில் கொஞ்சம் ஜலம் விட்டு ஊற வைக்கவும். கருகப்பிலை, கொத்துமல்லிப் பொடியாக நறுக்கியது இரண்டு டேபிள் ஸ்பூன் வகைக்கு. தேங்காய்க் கீறியது ஒரு மூடி. ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உடைத்த உளுத்தம்பருப்பு களைந்து கொண்டு தனியாக ஊற வைக்கவும். தாளிக்கக் கடுகு, உபருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய்(விதை எடுத்தது)

இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறியதும் அரிசியை முதலில் மி.வத்தல், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். அரிசி நன்கு அரை பட்டதும், து.பருப்பு, கபருப்பு சேர்த்துக் கொரகொரவென அரைக்கவும். ரொம்பவே கொரகொரப்பாகப் பருப்புத் தெரியும்படி அரைக்கக் கூடாது. பின்பு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இப்போது அதே மிக்சி ஜாரில் தனியாக ஊற வைத்த உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஏற்கெனவே உப்புச் சேர்த்து அரைத்து வைத்திருப்பதால் உப்பெல்லாம் மறந்து போய்ச் சேர்க்கக் கூடாது. உளுந்து மாவு தளதளவென அரைபட வேண்டும். விழுது நன்கு அரைபட்டு மேலே கொப்புளங்கள் வருகையில் எடுத்து ஏற்கெனவே அரைத்திருக்கும் மாவுக் கலவையோடு சேர்த்துக் கொண்டு ஊற வைத்த பாசிப்பருப்பு, உடைச்ச உளுத்தம்பருப்பு சேர்த்துத் தேங்காய்க் கீற்றுக்கள், கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.  ஒரு இரும்புக்கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,   இஞ்சி சேர்த்து மாவில் கொட்டிக் கலக்கவும். சற்று நேரம் வைத்து விட்டுப் பின்னர் எண்ணெயில் கரண்டியாலோ அல்லது கைகளாலோ உருண்டையாக உருட்டிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். உங்கள் குணுக்கு விநியோகத்துக்குத் தயார். 


அரைச்ச மாவு, குணுக்குப் போடத் தயார் நிலையில்!


வெந்து கொண்டிருக்கும் குணுக்குகள்!



நிவேதனம் செய்யப்பட்ட குணுக்குகள்! 






பி.கு: இந்த மொக்கைக்குச் சும்ம்ம்ம்ம்ம்மாக் கூட்டம் அள்ளும்! :P :P :P :P :P :P :P

Saturday, October 08, 2016

நவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்!

இன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.


எல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்கும்,
காமேஸ்வரி க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்

இன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது.  இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில்,  உளுந்து வடை, எள் உருண்டை போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது!

எள் உருண்டை:  விசேஷ நாட்களுக்கு எள் உருண்டை முத்துருண்டை பிடிக்கக் கூடாது. வெறும் வாணலியில் எள்ளை நன்கு களைந்து கல்லரித்து வடிகட்டிக் கொண்டு வறுக்க வேண்டும். அதோடு வெல்லத் தூள் சேர்த்து மிக்சியில் ஒரு அடி அடித்த பின்னர் வெளியே எடுத்துத் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

வெல்லம் சேர்த்த மாவு உருண்டை! பாசிப்பருப்பைக் களைந்து கொண்டு நீரை வடிகட்டிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். மிக்சியில் பொடி செய்யவும். பொடி நன்றாக வரும். அதிலே வெல்லத் தூளைக் கலந்து மீண்டும் மிக்சியில் சேர்த்து அடிக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். ஒரு கிண்ணம் பாசிப்பருப்பு எனில் முக்கால் கிண்ணம் வெல்லத் தூள் சேர்த்தால் போதும். இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை நன்கு காய்ச்சி கலவையில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.

அக்கார அடிசில் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஆகவே மீண்டும் கொடுக்கச் சுட்டியைத் தருகிறேன். அக்கார அடிசில்

பத்து நாட்களும் கன்னிப் பெண்களை மேற்சொன்ன முறைகளிலும், சுவாசினிகளை அந்த அந்த நாளுக்கான தேவியாகவும் வழிபடுதல் ஐதீகம். வசதி இருப்பவர்கள் ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். எதுவும் முடியாதவர்கள் தேவி மஹாத்மியத்தின் துர்க சப்தச்லோகி, துர்க்கா சூக்தம், தேவி மஹாத்மிய ஸ்தோத்திரம் போன்றவற்றையோ லலிதா சஹஸ்ரநாமத்தையோ லலிதா நவரத்தினமாலையையோ தினம் சொல்லி வந்தால் போதும். அம்பிகை அருள் நிச்சயம் கிடைக்கும். நாம ஒண்ணுமே கொடுக்க முடியலைனாக் கூட அம்பிகை நமக்கென உரியதைக் கொடுக்காமல் இருக்க மாட்டாள்! ஆகவே நம்பிக்கையுடன் அம்பிகை அருளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டாலே போதும்! 

Friday, October 07, 2016

நவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்!

இன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து  கொண்டிருக்கக்  காட்சி தருகிறாள் தேவி.  ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள்.

      அன்னபூரணி க்கான பட முடிவு

ஒன்பது வயதுப் பெண் குழந்தையை "துர்கை"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.,

நெய்ப் பாயசம் செய்முறை:

அரைக்கிண்ணம் பச்சை அரிசி களைந்து ஊற வைக்கவும். ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை மிக்சி ஜாரில் போட்டு இரண்டு,மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியையும் மிக்சியில் போட்டுக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். மூன்றாம் தேங்காய்ப் பாலில் அரைத்த அரிசி விழுதைப் போட்டு வேக வைக்கவும். ஒரு கிண்ணம் தூள் செய்த வெல்லப் பொடியை அரிசி நன்கு குழைய வெந்ததும் சேர்க்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். பின் பாயசம் கரண்டியால் எடுக்கும் அளவு தோசை மாவு பதத்துக்கு கெட்டிப் பட்டதும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு நிமிஷம் கொதிக்க வைத்துக் கீழே இறக்கவும். நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்து தேங்காய்ப் பால் எடுத்தது போக இருக்கும் தேங்காய்ச் சக்கையையும் நெய்யிலேயே வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.

மாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால் புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம். புட்டுச் செய்முறை பழைய பதிவில் இருந்து எடுத்தது கீழே கொடுத்திருக்கிறேன்.

புட்டு செய்முறை:
நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.

அரிசி கால் கிலோ

பாகு வெல்லம் கால் கிலோ

தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்

முந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.

உப்பு ஒரு சிட்டிகை

முதல் முறை:
இது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் "டங்"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.

மற்றொரு முறை:

அரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.

புட்டுச் செய்தால் இங்கே சாப்பிட ஆள் இல்லை என்பதால் நான் புட்டுச் செய்யவில்லை! இன்றைய தினம் கடலைப்பருப்புச் சுண்டல் தான் செய்யப் போகிறேன்.