Monday, December 23, 2019

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 7

 கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!


 Image result for தீபக்கோலம்  Image result for தீபக்கோலம்

புள்ளி வைத்த  விளக்குக் கோலம் எதானாலும் போடலாம்.    2,3 வருடங்கள் முன்னர் மின் தமிழ்க் குழுமத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலம் உதயன் வரையப் பாட்டின் பொருள் கொண்டு  துணை செய்திருக்கிறேன். 

ஆனைச் சாத்தன் பேச்சைப் பற்றிக் குறிப்பிடும் ஆண்டாள் அடுத்து காசும், பிறப்பும் என்கிறாள்.

யார் கிட்டே எல்லாம் காசும், அதற்கேற்றாற்போன்ற பிறப்பும் இருக்குமோ அங்கெல்லாம் பேச்சும் ஜாஸ்தியாத் தான் இருக்கும் என்பது நாம் அறிந்ததே!  இங்கே குறிப்பிடுவது அது அல்ல. ஆயர்பாடிப் பெண்கள் இரு வகையான தாலியை அணிந்திருந்தார்களாம்.  ஒன்று பொற்காசுகளால் செய்த அச்சுத் தாலியும் இன்னொன்று முளைகளாக அமைத்துச் செய்த ஆமைத் தாலியும்

தாலி வகைகள், க்கான பட முடிவு
அணிந்திருந்தார்களாம்.  அந்தத் தாலிகள் அவர்கள் தயிர் கடையும்போது ஒன்றோடொன்று உராய்ந்து ஏற்படுத்திய சப்தத்தையே ஆண்டாள் இங்கே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து என்கிறாள்.  ஆனால் இதையே தத்துவரீதியாகப் பார்த்தால் திவ்யப் ப்ரபந்தங்களையும், பெருமானைக் குறித்த ஸ்லோகங்களையும் அவன் திருக்கோயிலில் அடியார்கள் ஒன்று சேர்ந்து சொல்லும் சப்தத்தையும் குறிக்கிறது என்பார்கள்.  அந்த நாராயண மூர்த்தி கேசவனின் திருநாமத்தை ஒரு தரம் சொன்னாலும் போதுமே.  அதைக் கேட்டபின்னருமா நீ உறங்குகிறாய்? எனத் தன் தோழியைக் கேட்கிறாள் ஆண்டாள்.

திருப்பாவை படம் க்கான பட முடிவு  ஆனைச்சாத்தன் க்கான பட முடிவு

ஆனைச்சாத்தன்  என்பது ஒரு குருவி வகை. எப்போவும் கிளுகிளுனு பேசிக்கொண்டே இருக்கும், அதோட கொஞ்சம் சோம்பேறியும் கூட. குயில் காலங்கார்த்தாலே எழுப்பி விட்டதுன்னா, இது மெதுவா காக்கைக்கும் அப்புறமா எழுந்திருக்கும், அத்தகைய ஆனைச்சாத்தன் கூட எழுந்துவிட்டது, கீசு கீசுனு பேச ஆரம்பிச்சுட்டதுனு இங்கே சொல்றாள் ஆண்டாள்.

கீகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே!= இந்த ஆனைச்சாத்தன் கூட எழுந்து கொண்டு கீசு கீசுனு சொல்றது கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்றாப்போல் இருக்காம். ஆ, அவைகளின் பேச்சொலி கேட்கவில்லையா பெண்ணே,

காசும் பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ= ஆய்ச்சியர்கள் எல்லாரும் எழுந்திருந்து தயிர் கடைகிறார்கள்.
பானையில் மத்து மோதும் ஓசை, தயிர் சிலுப்பும்போது எழும் ஓசை, ஆய்ச்சியர்களின் கை வளைகளின் கிண்கிணி நாதம், அவர்கள் கழுத்து ஆபரணங்கள் அங்குமிங்கும் அசையும்போது எழும் ஒலி என ஒரே சத்தமாய் இருக்கே! இது எதுவுமா உனக்குக் கேட்கவில்லை, அடி பெண்ணே, என்ன இப்படி ஒரு பெருந்தூக்கம் தூங்குகிறாயே? உனக்கு என்ன பேய்க்குணம் வந்துவிட்டதோ?

ஆனைச்சாத்தன் க்கான பட முடிவு

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!= நீ அருமையான நாயகப்பெண்ணாயிற்றே, நாங்கள் கேசி என்ற அரக்கனைக்கொன்றதன் மூலம் கேசவன் என்ற பெயர் பெற்ற கண்ணனைப்பாடிப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். நீ அதைக் கேட்டுக்கொண்டே படுத்திருக்கிறாயே? ஆனால் அந்தப் பெண்ணுக்கோ இதுவும் ஒரு சுகம்தான் போலிருக்கு. இவர்கள் கேசவனின் புகழைப்பாடப் பாட அதைப் படுத்துக்கொண்டே கேட்பதில் பெரும் ஆநந்தம் கொள்கிறாளோ என்னமோ.

ஒளிபொருந்திய முகத்தை உடைய பெண்ணே, வா, வந்து கதவைத் திறப்பாய் என்கிறாள்.

நாராயண பட்டத்திரி,சொல்லுவது என்னவெனில் வெறும் வறட்டுத் தர்க்கத்தில் சிரமப்பட்டு சித்தி அடைவதில் தாமதம் அடையாமல் பக்தி மார்க்கத்தின் மூலம் ஈசனை விரைவில் அடையலாம் என்கிறார்.

"பவத் பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத்
கிமப்யாரூடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ
புநஸ்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதாதய மிலந்
மஹாநந்தாத்வைதம் திஸதி கிமத: ப்ரார்த்யம் அபரம்

ஆரம்பத்திலிருந்து பகவானிடம் நாம் வைக்கும் பக்தியானது அவனுடைய லீலா விநோதங்களாலும், பகவானின் குண விசேஷங்களாலும் இனிமையானதாய் உள்ளது. வளர்ந்துவிட்டாலோ நம் மனத்தின் அனைத்துத் தாபங்களையும் அறவே நீக்குகிறது. அதோடு உள்ளத்தில் மாசற்ற தெளிவான ஞாநத்தையும் உதிக்கச் செய்கிறது. பக்தியானது இவ்வளவு செய்கிறதே இதற்கும் மேல் வேறேன்ன வேண்டும்??


வெளியே போயிருந்ததால் பதிவைப் போட நேரம் ஆகி விட்டது. மத்தியானம் போட முடியலை. நாளைக்கும், நாளன்றைக்கும் கூடக் கொஞ்சம் நேரம் ஆகும். முடிந்தால் ஷெட்யூல் பண்ணி வைக்கணும். அதிகம் பின்னூட்டக் கருத்துகள் வரலைனாலும் நான் இந்த மாதம் முழுவதும் போடுவதாக எண்ணம். இதற்கு முன்னரும் பல பதிவுகளில் கருத்துகள் வந்ததில்லை. ஆனாலும் கண்டுக்கிறதில்லை.

படங்களுக்கு நன்றி கூகிளார்!

11 comments:

  1. இனிய மாலை,இரவுக்கான வணக்கம் கீதாமா.
    நம் கடன் பதிவு போடுவது.
    இந்த மாதத்திற்கு நம்மால் முடிந்த மரியாதை.

    நீங்கள் பட்டத்த்ரியையும் சேர்த்துக் கொள்வதால் இன்னும் இனிமை.
    கேசவனைப் பாடி நாம் மகிழ்ந்திருப்போம்.

    இங்கேயும் கணினி முன் நேரம் குறைகிறது.
    குழந்தைகள் வீட்டில் இருப்பதால்
    அவர்களுடன் வெளியே செல்வதும் விளக்கு அலங்காரங்களைக்
    காண்பதுமாக நேரம் போகிறது.
    நன்றி. ஆனைச்சாத்தன் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இரண்டு நாட்களாக வெளியே போனதில் பதில் சொல்ல நேரம் இல்லை.

      Delete
  2. பாட்டின் விளக்கம் நன்றாக இருக்கிறது.பொருத்தமாய் புள்ளிக் கோலமும் அழகு.பகவானிடம் பக்தி செலுத்தி வாழ்வோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு!

      Delete
  3. தாலிபற்றிய குறிப்புகள் அறிந்தேன்.

    ReplyDelete
  4. நல்லதொரு இலக்கிய விரிவுரை கேட்டதைப் போல இருக்கிறது....

    ஆண்டாள் திருவடிகள் போற்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை! Where is ஸ்ரீராம்?

      Delete
  5. நன்றாக விவரிக்கிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
  6. நாராயணன் பாதம் பணிவோம்.

    ReplyDelete