Saturday, December 10, 2022

பாரதியும் பெண் விடுதலையும்!


 பாதகம் செய்பவரைக் கண்டால்- நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா!

மோதி மிதித்து விடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!


பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி

பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார்.


கண்கள் இரண்டினில் ஒன்றைக்குத்தி

காட்சி கெடுத்திடலாமோ?

பெண்கள் அறிவை வளர்த்தால்- வையம்

பேதமையற்றிடும் பாரீர்!

Sunday, December 04, 2022

ஐயப்பனைக் காண வாருங்கள்! விரத நியதிகள்!

 அடுத்த பதிவைப் போடணும்னு நினைச்சு தினம் தினம் கணினிக்கு வந்தாலும் எழுத முடியலை. அதோடு விட்டுப் போன பதிவுகளைப் படிப்பது, எங்கள் ப்ளாக் பதிவுகளுக்கு பதில் சொல்லுவது என உட்கார்ந்தால் அதிலேயே நேரம் போய் விடுகிறது. இப்போதாவது எழுதிடணும்னு உட்கார்ந்திருக்கேன். இனி விரத கால நியதிகள் என்னென்ன எனப் பார்ப்போமா?

*********************************************************************

1. முக்கியமாய் மாலை அணிந்து கொண்ட ஐயப்பன்மார்கள் (விரதம் இருந்து மாலை அணிபவர்களையும் ஐயப்பன் என்றே அழைக்க வேண்டும். முதல் முறை மாலை அணிந்தவர்கள் "கன்னி ஐயப்பன்" என அழைக்கப்படுவார்) தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். முக்கியமாய்க் கோபதாபங்கள் கூடாது. அனைவரையும் பார்க்கும்போது "சாமி சரணம்" சொல்லிவிட்டே இன்முகத்துடன் பேச வேண்டும்.

2. காலையில் சூரியோதயத்துக்கு முன்னாலும் மாலையில் அஸ்தமனம் ஆன பின்னும் குளிர்ந்த நீரில் குளித்து முழுகி சுத்தமாக வீட்டில் இருக்கும் ஸ்வாமி சந்நிதிக்கு முன் நின்றவண்ணம் சரண கோஷம் போட வேண்டும். அதன் பின்னரே உணவு உண்ண வேண்டும். அருகில் கோயில்கள் இருந்தால் அங்கு போய்விட்டும் வரலாம். 

3.பொதுவாகக் கறுப்பு நிற ஆடைகளையே அணிந்தாலும் நீல நிறமோ காவி நிறமோ கூட அணியலாம். காலில் செருப்புப் போட்டுக் கொள்ளக் கூடாது. வெறும் காலுடனேயே நடக்க வேண்டும்.

4. ஆண்கள் மாலை அணிந்தாலும் அணியாவிட்டாலும் அவர்களை ஐயப்பனாகவே கருத வேண்டும். அதே போல் பெண்களை மாளிகைப்புற அம்மனாக்க் கருத வேண்டும்.  பேச ஆரம்பிக்கையில் சாமி சரணம் என ஆரம்பிப்பதைப் போல் முடியும்போதும் சாமி சரணம் என முடிக்க வேண்டும்.

5.வெளியில் உணவு உண்ணுவதை முற்றாகத் தவிர்த்தல் நலம் இயலாதவர்கள் சொந்தமாகச் சமைத்துச் சாப்பிட முடிந்தால் நல்லது. வீட்டிலேயே கூடியவரை அசைவம் தவிர்த்து உணவு எளிமையாகத் தயாரித்து உண்ண வேண்டும். இரு வேளையும் சமைக்க முடியாதவர்கள் ஒரு வேளை உணவு எடுத்துக் கொண்டு பால், பழம் எடுத்துக் கொள்ளலாம்.

6. வீட்டில் பெண்களின் பூப்பு நீராட்டு விழா, குழந்தை பிறப்பு, ஏதேனும் துக்கம் நிகழ்ந்த வீடு என இருப்பவை தீட்டு என்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

7. வீட்டுப் பெண்கள் மாத விலக்கானால் அவர்களைப் பார்க்கவோ பேசவோ கூடாது. கூடிய வரை அவர்களைத் தனியாக வேறு எங்கானும் தங்கச் செய்வது நல்லது தீட்டு ஆன தினத்திலிருந்து ஐந்து தினங்கள் அவர்கள் சமைத்த உணவையும் சாப்பிடக் கூடாது. வீட்டில் தவிர்க்க முடியாமல் அவர்கள் சமைக்க நேர்ந்தால் மாலை அணிந்தவர்கள் வெளியே ஐயப்ப பக்தர்கள் யார் வீட்டிலாவது தங்கிக் கொண்டு அங்கே உணவு உண்ணலாம்.

8. ஐயப்பன் விரதங்கள்/பூஜைகள் ஆகியவற்றில் அன்னதானம் முக்கியம். ஆகவே கூடியவரை அன்னதானம் செய்ய வேண்டும். முதல் முறை மாலை அணிந்து கொண்டு செல்லும்  கன்னி ஐயப்பன்மார் வீட்டில்பூஜைகள் நடத்தி குருசாமியின் தலைமையில் மற்ற ஐயப்ப பக்தர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

9.மது, மாமிசம், புகை பிடித்தல், திரைப்படங்களுக்குச் செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

10.தவிர்க்க முடியாத காரணங்களால் மாலையைக் கழற்ற நேரிட்டால் அந்த ஒரு வருடம் மீண்டும் சபரிமலை யாத்திரையைத் தொடரக் கூடாது.

11. இருமுடி கட்டுவது குருசாமியின் கரங்களாலேயே செய்யப்பட வேண்டும். அதற்கு குருசாமியின் உத்தரவுக்கிணங்க அவர் வீட்டிலோ அல்லது அவர் குறிப்பிடும் கோயில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.