Monday, February 19, 2024

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி

 



உ.வே.சா. சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராய் இருந்தார். ஆனாலும், அவர் தந்தையவர்கள் உ.வே.சா. விளையாடுவதை விரும்பியதில்லை. எப்பொழும் படித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உ.வே.சா. இசை பயின்றாா்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உ.வே.சா.விற்குச் சிறுவயதில் ஆங்கில எழுத்துகள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபஐயங்காரே தமக்குத் தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன்முதலில் கற்பித்தாா் என்று உ.வே.சா. தெரிவிக்கின்றார்கள். அரியலூரில் தம் குடும்பம் மிக்க வறுமையில் வாழ்ந்து வந்ததையும் பதிவு செய்கின்றார்.கல்வி, கேள்வி இல்லாதவரும் அக்காலத்தில் கல்வி அறிவுடையவர்களைக் கண்டால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆதரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.


உ.வே.சா.வின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்துச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக் கற்றார். அக்காலத்தில் கற்பது என்பது தற்போது முறையாகப் பள்ளியிலமர்ந்து பாடம் வாரியாக அல்லாமல் இது போன்று தமிழ் நூல்களை நன்கு கற்பதே போலும். உ.வே.சா. தமது வாழ்நாள் முழுவதும் இது போன்றே தமிழ் நூல்களை ஐயம் தீர்ந்தபடி கற்றுத் தேர்ந்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார். சிறுவயது முதலேயே நன்னூலை நன்கு கற்றிருந்ததால் இவருக்கு இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. எந்தப் புலவரிடம் பாடம் கேட்கச் சென்றாலும், இவரது நன்னூல் புலமை கைகொடுத்து உதவியது.


உ.வே.சா. கவிதை எழுதும் கலையையும் பயின்று வந்தார். அவர் முதலில் செய்யுள் இயற்றிய போது பிறர் கருத்தை வைத்துச் செய்யுள் இயற்றினார். அவர், தந்தை அவருக்கு இது முறையாகாது என்றும் அவருடைய பாட்டில் அவர் அனுபவம் இருப்பதுதான் உசிதம் என்று கூறியதைப் பின்பு நன்கு உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உ.வே.சா. தமது தந்தையாருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதன் மூலம் இவர் தந்தைக்கு நல்ல வருமானமும் கிடைத்தது.


உ.வே.சாவிற்குத் திருமணம் முடித்துவிட வேண்டுமென்று அவர் தந்தையார் விரும்பினார். இளம்வயதில் மணமுடிப்பது அக்காலப்பழக்கம். பதினாறு வயதில் மணம் முடியாமலிருந்தால் அது பெருங்குறை என்று கருதியது அந்தக்காலம். காலமாற்றத்தின் பலனாக அக்காலத்தில் சிறந்தது என்று நினைத்தது தற்பொழுது நகைப்புக்குரியது ஆகிறது. அது போல் அக்காலத்தில் நகைப்புக்குரியது, தற்பொழுது சிறந்தது ஆகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். அப்பொழுது கூட உ.வே.சா. தமிழை நிறைவாகக் கற்றுக் கொள்ளவில்லை என்ற மனக்குறைதான் பெரிதாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவிற்குப் பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. மணபெண் வயது எட்டு. பொருட்செலவிற்குப் பெரும்பாலும் கிராமத்தினர் உதவி செய்து திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் உ.வே.சாவின் சிந்தனை எல்லாம் “தமிழ்தான் எனக்குச் செல்வம் அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு . . .அன்றும்சரி இன்றும்சரி இந்த நிலைமை மாறவே இல்லை” என்னும் அவருடைய சொற்கள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும், தமிழ் மீது அவர் கொண்ட பற்றின் வெளிப்பாடும் ஆகும். இறுதிவரை அவர் வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையைத் தவிர, அவர் வேறு எதிலும் நாட்டம் கொண்டதற்கான சாயலே கிடையாது.


தம் தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ், உ.வே.சா. தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரிய பயனில்லை; ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் முலம் உதவி செய்வதாகவும் கூறியபொழுது அவர்பால் உ.வே.சா. அவர்களுக்குக் கோபமுண்டாயிற்று; தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் பதிவு செய்கிறார்.

Sunday, February 18, 2024

என்ன செய்யலாம்? தெரிந்தவர்கள் உதவலாம்!

 முந்தாநாள் மெடிகல் ஃபார்மசியில் மருந்துகள் வாங்கப் பட்டியலைச் சொல்லிக் கொண்டிருந்தேன், முடிந்ததும் அந்தப்பெண் அவ்வளவு தானா மேடம்? வேறே ஏதும் இருக்கானு கேட்டாங்க. ஆமாம், ஒரு டெட்டால் பாட்டிலும் சேர்த்துப் போடுங்க என்றேன். டெட்டாயில் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்) தானே மேடம்? எத்தனை லிட்டர்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது டெட்டாயில் இல்லை, டெட்டால் என்றேன். அதான் மேடம் நானும் சொல்றேன், டெட்டாயில் அரை லிட்டர் போடவா? 

ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

முந்தாநாளே நடந்த இன்னொரு விஷயம். சிலிண்டர் தீர்ந்து விட்டதால் ரீஃபில் பதிவு செய்தேன், வழக்கம் போல் வாடசப் மூலம் என்னுடைய மொபைல் நம்பரில் தான் செய்தேன், எல்லாம் சரியாக வந்தது. ஆனால் எனக்குச்செய்தி எஸ் எம் எஸ் மூலம் வரவே இல்லை. சரினு மறுபடி செய்தால் ஏற்கெனவே பதிவு செய்தாச்சு, சிலிண்டரும் வந்துடும்னு வாட்சப்பில் வந்தது. இந்த டி.ஏ.சி. நம்பர்னு ஒண்ணு வரணுமே! அது வரவே இல்லை. என்னாச்சுனு தெரியலையேனு குழப்பம், நேத்திக்கு சிலிண்டரும் வந்தது,. வழக்கமாய் வருபவர் தான். சிலிண்டரைப் பொருத்திப் பார்த்துட்டுப் பணம் கொடுக்கையில் டிஏசி நம்பர் கேட்க நான் வரவே இல்லை என்றேன், அவருக்கு திடீர்னு எனக்கு மொபைல் பார்க்கத் தெரியலைனு ஜந்தேகம். மொபைலைக் கொண்டானு சொன்னார். காட்டினேன். பிஎஸ் என் எல் ரீசார்ஜ் மெசேஜ் தான் இருந்தது, (அதுவும் ஒரு தனிக்கதை. பின்னால் பார்ப்போம்.) ஏன் வரலைனு கேட்டேன். உடனே அந்த மனிதர் உங்க காஸ் ஏஜென்சிக்குத் தொலைபேசிக் கேளுங்க. அவங்க தான் அனுப்பணும். அனுப்பாமல் விட்டிருக்காங்க என்றார்.

உடனே தொலைபேசினேன். முதலில் ஒரு பெண் எடுத்தார். அவரிடம் விபரங்கள் சொல்லிக் கேட்டால் நான் புதுசுனு வேறே ஒருத்தரிடம் சொல்ல அந்த ஒருத்தர் எடுத்தார் அவரிடம் விபரங்கள் கன்ஸ்யூமர் நம்பர் எல்லாம் சொல்லவே பெயர், விலாசம் சரியாகச் சொல்லிட்டு உங்க மொபைல் நம்பர்னு ஆரம்பிச்சு 988 நு ஆரம்பிக்கும் ஏதோ நம்பரைச் சொல்லவே இல்லையே இது என்னோட நம்பரே இல்லைனேன். உடனே அவர் மீண்டும் பார்த்துட்டு, நவம்பரில் நீங்க சொல்லும் நம்பரில் இருந்து பதிவு செய்திருக்கீங்க. இப்போ இந்த நம்பரில் பதிவு செய்திருக்கீங்கனு சொல்லவும் கோபத்துடன் இந்த மாதிரி ஒரு நம்பருடன் எங்களிடம் எந்தத் தொலைபேசி/அலைபேசி கிடையாது, இந்த ஒரே நம்பர் தான் எங்க நம்பர்னு சொன்னால் அவ்ர் ஒத்துக்கவே இல்லை. நாங்க கொடுத்த செய்து அந்த 988 இல் இருந்து ஆரம்பிக்கும் நம்பருக்குப் போயிருக்கும் ;என்று முடிக்கப் பார்த்தார். நான் விடலை. இதே நம்பரில் இருந்து தான் வாட்சப்பில் சிலிண்டர் புக் செய்தேன். அந்த வாட்சப் செய்திகளை உங்களுக்கு ஃபார்வார்ட் செய்யறேன் என்று சொல்லவே அவர் ஒரு சவாலாக அனுப்புங்க பார்ப்போம்னு ஒரு அலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

அது அலுவலக எண்ணாம். நானும் அந்த எண்ணிற்கு எனக்கு வந்த வாட்சப் செய்திகளை ஃபார்வார்ட் செய்து விட்டு மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். ரொம்ப நேரம் யாருமே எடுக்கலை. பின்னர் ஒரு பெண் எடுத்து என்ன எனக் கேட்கவும் விபரங்களைச் சொன்னேன். ரொம்பப் பணிவாக, சரி மேடம், நாங்க என்னனு பார்க்கிறோம் மேடம்னு சொல்லிட்டு ஃபோனை வைச்சுட்டார். மறுபடி சிலிண்டர் போடுபவரைக் கூப்பிட்டு விபரங்களைச் சொன்னால் ஏஜென்சிக்காரங்க தான் தப்பான தொலைபேசி எண்ணை இணைச்சிருக்கணும் எனவும் இது அவங்க தப்பு அதனால் அப்படியே விடுங்க, நீங்க பத்து வருஷத்துக்கு மேலாகத் தெரிஞ்சவங்க என்பதால் நானும் சிலிண்டரைக் கொடுத்துட்டேன். பின்னால் பார்த்துக்கலாம் என்று சொன்னார். ர்ங்க்ஸிடம் இதை ஒரு மாதிரி விபரமாகச் சொல்லி என்ன செய்யனு கேட்டால் பேசாமல் இருப்போம் என்றார், இதுக்கு என்ன செய்யலாம்? ஐ.ஓ.சி.யிடம் புகார் கொடுக்கணுமா? ஏஜென்சியில் நம்பரை மாத்தணும்னால் நேரே வரணும் என்றார்கள். எனக்கோ/அவருக்கோ நேரில் போகும் நிலையில் இல்லை. என்னதான் சும்மா இருந்தாலும் மனதில் இது ஓடிக் கொண்டே இருக்கு.


Friday, February 02, 2024

கோலத்தில் கொண்டாடிய பண்டிகை!


 பால்கனியில் கனுப்பிடி வைச்சேன். மொட்டை மாடிக்கு இப்போல்லாம் ஏற முடியாததால் இங்கேயே வைச்சுடுவேன். நான் மட்டும் தான் என்பதால் ஒற்றை இலை போடாமல் இரண்டு இலைகள் போட்டு இரண்டிலும் வைப்பேன். கூட யாரேனும் இருந்தால் எனக்குத் தனி இலை, அவங்களுக்குத் தனி இலைனு இரண்டு ஆயிடும். ஆனால் யாருமே இல்லையே!



கனுவன்று போட்ட கோலம்.


 
பொங்கலன்று போட்ட கோலம்.



இந்த வருஷம் பூஜை பண்ண முடியலை என்பதால் பால்கனியில் சூரியக் கோலம் போட்டு எல்லாம் எடுத்து வைச்சுப் பண்ணாமல் பொங்கல், அன்னம், அவிசு, காய்கள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள் கொத்து, கரும்பு ஆகியவ்ற்றை சுவாமிக்கு எதிரே வைத்து முடிஞ்ச மட்டும் கொண்டு வைத்துக் கொண்டு நிவேதனம் மட்டும் பண்ணினேன். அதுக்குள்ளேயும் அவருக்குப் பசி அதிகமாகி விட்டது. நேரம் ஆயிடுச்சே! :( பின்னர் சாப்பிடும்போது சாப்பாடு இறங்கலை . கஷ்டமாக இருந்தது. படம் எடுக்க முடியலை. ஒரேயடியாகப் பரத்தி இருந்ததால் மற்றவற்றை எடுத்து வைச்சுட்டு முக்கியமான பொங்கல், அவிசு மட்டும் படம் எடுத்துப் போட்டிருக்கேன்.


போகி அன்று போட்ட கோலம்

குட்டிக் குஞ்சுலுவிடம் பொங்கல் தினங்களை இந்தியாவின் தாங்க்ஸ் கிவிங் டே எனச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தேன். முதல்நாள் என்ன செய்வோம்,என்பதை வீடு சுத்தம் செய்து பண்டிகை நாளுக்காகத் தயார் செய்வோம் என்றும்  இரண்டாம் நாளான பொங்கலன்று சூரிய, சந்திரர்க்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிப்போம் என்றும் சொல்லிவிட்டு மூன்றாம் நாளன்று மாடு, கன்று, பறவைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் அவங்களுக்கும் இயற்கையைப் பேணி வருவதற்கான நன்றியைச் சொல்லுவோம் என்றும் சொன்னேன். அதோடு சகோதரர்களுக்காகச் சகோதரிகள் பிரார்த்தனை செய்து கொள்ளுவார்கள் என்றும் சொன்னேன். எல்லாமே வாய்ஸ் மெசேஜ் அதான். அதுவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது. ஊருக்குப் போகும் அவசரத்தில்.