எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 16, 2020

பகையே சுற்றி நில்லாதே போ! கந்த சஷ்டிப்பதிவுகள்! 2

 தீராத வினைகள் யாவையும் தீர்க்கும் கந்தவேள் நம் சொந்தவேள் என்பார் வாரியார் ஸ்வாமிகள். அவன் கைவேலோ துள்ளி வந்து நம் தீராத வினைகள் யாவையும் தீர்க்கும். அதைத் தான் பாரதியும், "துள்ளி வருகுது வேல்! பகையே சுற்றி நில்லாதே போ!" என்று பாடினார். பகை என்பது இங்கே நம் உள்ளேயே குடி கொண்டிருக்கும் பகை மட்டும் அல்ல. சுற்றி இருக்கும் பகை என நாம் கருதும் அனைத்தையும் மாற்றி அருளும் வல்லமை அவனுக்கு மட்டுமே உண்டு. நாம் அந்தக் கந்தனைக் "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்" அவனை மறவாமல் இருப்பதாலேயே வந்தனை செய்தாலும் நிந்தனை செய்தாலும் அனைவரையும் காத்து வருகின்றான். கந்தன் பிறந்தான். தொல்லைகள் தீர்ந்தன. அதுவும் எவ்வாறு? தாயான உமை குழந்தையைப் பார்க்க வருகின்றாள். ஏற்கெனவே சூரபதுமாசுரனால் தேவர்களுக்குத் துயர் என்பதும் அவள் அறிந்த ஒன்றே. அதனாலேயே இந்த சிவகுமாரன் ஜனனம் என்பதும் அவள் அறிந்ததே. குழந்தை குழந்தையாகவே இருக்க முடியுமா?? பெரியவன் ஆகி அவன் வந்த வேலையைக் கவனிக்க வேண்டாமா?? வேலையைக் கவனிக்க அவனுக்கு வேலாயுதம் தேவை அல்லவா?? குழந்தைகள் ஒன்றா? இரண்டா? இது என்ன? ஆறு குழந்தைகள் ஒரே மாதிரி. அனைத்தையும் ஒரு சேர எடுத்து அள்ளி அணைத்தாள் உமை! என்ன ஆச்சரியம்? அனைத்தும் ஒன்றாகி ஆறுமுகங்களுடனும் குழந்தை ஆறுமுகனாய்க் காட்சி அளிக்கின்றான். வேதங்கள் அவனை "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" என மும்முறை சொல்லி ஆராதிக்கின்றது. அந்த வேதத்தையே, அவற்றின் பொருளையே தன் தகப்பனுக்குப் போதிக்கின்றான் அந்தத் தகப்பன் சாமி. ஒரு பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு அவன் மலைதேடித் தனியே அமர்ந்ததாகவும் கதை! உண்மையில் பழத்துக்கா கோபம்! இல்லை! தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவேண்டி, தான் எவ்வாறு அனைத்தும் துறந்து இருக்கின்றோமோ அதே போல் பற்றை அறு, என்னைச் சரணடை! உனக்கு நான் இருக்கிறேன் ஞானத்தைப் போதிக்க என்று அந்தச் சின்னஞ்சிறுவன் நமக்கு எடுத்துக்காட்டாய் அனைத்தையும் துறந்து ஒரு ஞானியாக, துறவியாக நின்று காட்டுகின்றான். இவன் பாட்டுக்கு இப்படித் துறவியாகப் போய் உட்கார்ந்துவிட்டால் தேவர்கள் கதி?? அவங்களுக்குக் கவலை சூழ மீண்டும் அன்னையைச் சரணடைய அன்னையும் குமாரனின் கோபம் தணிக்க ஒத்துக் கொள்ளுகின்றாள்.



மகனின் கோபத்தை அன்னையைத் தவிர யாரால் தணிக்க முடியும்?? புதுப் புது விளையாட்டுக் கருவிகளைக் கொடுப்பார்கள் இல்லையா குழந்தை விளையாட? புதுப் புது நண்பர்களைக் காட்டி இவனோடு விளையாடு, அவனோடு விளையாடு என்று சொல்வதில்லையா? அதே போல நவரத்தினங்கள் ஆன நவவீரர்களையும் கந்தனுக்குத் துணை சேர்க்கின்றாள். தன் சக்தியனைத்தையும் திரட்டிக் கந்தனுக்கு வேலாயுதமாய் மாற்றி அளிக்கின்றாள். அன்னையின் யோக சக்தி, ஞான சக்தி, ஆத்ம சக்தி அனைத்தும் சேர்ந்த அந்த சக்தி ஆயுதமான வேலாயுதத்தைப் பெற்ற கந்தன் வேலாயுதனாகி நிற்க அவன் முகத்தில் முத்து, முத்தாய் வியர்வைத் துளி. தன் வேல் போன்ற நெடுங்கண்களால் மகனை அன்புடன் பார்த்து அன்னை அளித்த அழகுவேலை வாங்கிய முருகன் முகமோ முத்து, முத்தாய் வியர்த்ததாம். இன்றும், இப்போதும், இதோ இப்போக் கூட அதைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டுத் தான் வருகின்றேன். என்ன சொல்லுவது வேலின் சக்தியை! சாதாரண வேலா அது?? ஞானவேல்! சக்தி வேல்! பக்தர்களுக்கு அருளும், பக்தனைக் காக்கும் வேல்! வெற்றி வேல்!



சத்ரு சம்ஹார வேல் அது! அதுவும் தன் அனைத்து சக்தியையும் கொடுத்த அன்னை அளித்த வேல். தாயானவள் ஒரு மகனுக்குப் பலவகைகளிலும் தைரியத்தையும், வீரத்தையும் ஊட்டவேண்டும். தாயின் மனோசக்தியால் பிள்ளை வீரனாக விளங்கவேண்டும் என்பதற்காக அளிக்கப் பட்ட அந்த வேல் பகைவனை அழித்ததா?? இல்லையே! துள்ளி ஓடி வந்த அந்தக் கந்தவேளின், சொந்தவேலானது, பகைவனின் ஆணவத்தை அழித்தது. மாயையை அழித்தது. அவன் யார் என்பதை உணர்த்தியது. அவனுக்கு ஞானத்தைப் போதித்தது. முருகன் திருவடிகளே சரணம் என அவன் சேவலாகவும், மயிலாகவும் மாறி ஷண்முகனின் கொடியாகவும், வாகனம் ஆகவும் ஆனான். அதிகாலையில் முதன்முதல் எழுப்புவது சேவல் தான் அல்லவா?? இந்தச் சேவல் யார் எழுந்தாலும், எழுந்திருக்காவிட்டாலும் கூவுவதை நிறுத்தாது. அதுவும் அதிகாலைச் சூரியனை வரவேற்கும். இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் ஆதவனை வரவேற்கும் சேவலின் கொக்கரக்கோ என்ற கூவலே ஓம் என்ற ஓங்கார நாதமாய்த் தோன்றுகின்றது அல்லவா??

19 comments:

  1. ஓம்..
    சுப்ரமண்யோம்..
    சுப்ரமண்யோம்..

    சுப்ரம்மண்யோ...ம்!...

    ReplyDelete
    Replies
    1. முருகா, முருகா, முருகா, வருவாய் மயில் மீதிலே!

      Delete
  2. மெய்மை குன்றா மொழிக்குத் துணை
    முருகா எனும் நாமங்கள்!...

    முருகா எனும் ஒற்றைச் சொல்லே
    பல ஆயிரம் பெயர்களுக்கு நிகரானது..

    முருகா... முருகா..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தம்பி! நூற்றுக்கு நூறு உண்மை.

      Delete
    2. முருகா.
      அன்பு கீதா, அன்னை வேல் தரும் காட்சி கண்முன்.
      சக்தி வேலின் அத்தனை பிரகாசமும்
      கந்தன் முகத்தில் .
      போர் முடித்து அரக்கனின் நற்குணங்களையே
      ஸேவலாகவும், மயிலாகவும்
      ஏற்ற சுத்த தெய்வம்.
      கந்தா போற்றி.
      கடம்பா போற்றி.
      அருமையான பதிவுக்கு மிக நன்றி மா.

      Delete
    3. வாங்க வல்லி. தொடர்ந்து வந்து படிப்பதற்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  3. கந்தவேளை வணங்குவோம். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தன் காப்பான் என்பது உண்மையே!
    மிக அருமையாக சொல்லி வருகிறீர்கள்.

    கந்தன் என்ற பெயர் காரணம்:-
    பார்வதி பொய்கையில் இறங்கி ஆறு குழந்தைகளையும் ஆனந்தம் பொங்க நோக்கினாள். ஆரத்தழுவி ஆறு குழந்தைகளையும் தம் இருதிருக்கைகளாலும் வாரி அணைத்து கொஞ்சினாள்.
    அன்னையின் அரவணைப்பால் ஆறு குழந்தைகளும் திவ்ய தேஜசுடன் கூடிய ஆறுமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட குழந்தையாகக் காட்சி அளித்தது,
    "கந்தன்" என்று பெயர் பெற்றார் சிவகொழுந்து!
    கந்தம் என்றால் கலத்தல்- ஒன்டு சேக்கப்பட்டவர் கருணையே இருவான கந்த கடவுள் ஆனார்.

    //நவ ரத்தினள் ஆன நவ வீரர்களை துணை சேர்க்கின்றாள்//

    நவவீரர் பிரதாபம் தான் படித்து வருகிறேன். நவசக்தியரையும், அவர்கள் பெற்றெடுத்த நவவீரர்களையும் லக்ஷ்ம் வீரர்களையும் தங்கள் அருமை புதல்வன் முருகனுக்கு உற்ற துணைவர்ளாக - உடன் பிறந்தவர்ளாக இருக்கும் படி பேரருள் புரிகிறார்கள்.

    சிக்கலில் வேல் வாங்கும் போது முருகனுக்கு முத்து முத்தாக வேர்க்கும் நீங்கள் இன்று பார்த்தீர்களா? எந்த தொலைக்காட்சி?


    பதிவு அருமை தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இது இந்தப் பதிவு எழுதியப்போப் பார்த்தது கோமதி. இந்த வருஷம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனால் நிறையப் பார்த்திருக்கேன். கந்தன் என்றாலே ஒருங்கிணைப்பது என்று தானே பொருள்! உங்கள் விரிவான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. கந்தவேளின் பதிவு அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லையாரே!

      Delete
  5. வேலின் பெருமையைப் படித்துச் சிலிர்த்தேன்.

    ReplyDelete
  6. வார்த்தை ஜாலம் அருமை
    கந்தனுக்கு வேல் வேல்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, பாராட்டுக்கு நன்றி.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    கந்த சஷ்டி பதிவுகளை தங்கள் அற்புதமான விளக்க நடையில் தொடர்வதற்கு நன்றிகள். நான் இரண்டொரு நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை அதனால் உடனடியாக தங்கள் பதிவுகளுக்கும் வரவில்லை. இன்று மதியம் தங்கள் இரு பதிவுகளையும் விரிவாக படித்து விட்டு கருத்திடுவதற்கு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. உங்களுக்கு நேரம் எப்போக் கிடைக்கிறதோ அப்போ வாருங்கள். இவ்வளவு வேலைகளுக்கு இடையே நீங்கள் வந்து விரிவான கருத்துரை கொடுப்பதே பெரிய விஷயம். மெதுவாக வந்து கருத்துச் சொன்னால் போதும்.

      Delete
  8. அழகாக எழுதியிருக்கீங்க கீதாக்கா

    குறிப்பாக இந்த வரியை மிகவும் ஆதரிப்பேன் //தாயானவள் மகனுக்குப் பல வகைகளிலும் தைரியத்தையும் வீரத்தையும் ஊட்ட வேண்டும்//
    உண்மை உண்மை. தாய் கொடுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி மிக மிக முக்கியம். பாசம் கண்ணை மறைத்துவிடக் கூடாது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, ஆமாம், இந்தக் காலத்துப் பெற்றோர் முக்கியமாய் அம்மாக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எதையும் தாங்கும் வல்லமையைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கவே இல்லை. எதைக் கண்டாலும் பயப்படும்படி செய்து வைத்துள்ளார்கள். அரசும் "தேர்வு" என்றாலே நடுங்கும்படி பண்ணி வைச்சிருக்கு! :(

      Delete
  9. வேலின் பெருமை அறிந்தேன். சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி துளசிதரன்.

      Delete