எதாக இருந்தாலும் சரி, இறைவன் துணை இருந்தால் சரியாகும் என்பதைக் கடந்த சில மாதங்களாக உணர முடிகிறது. எதிலும் மனம் பதியாமல் தவிப்புடன் இருந்து வந்த காலம் மாறும் என்னும் நம்பிக்கை தோன்றுகிறது. கூப்பிட்ட குரலுக்கு இறைவன் வருவான் என்பது உண்மை என்பதோடு அதைப் பூரணமாக உணர்ந்த நாட்கள்! ஒவ்வொரு நாளும் உணர முடிகிறது. இந்த 2016 ஆம் வருடம் பிறந்தது கூடச் சரியாக நினவில் இல்லாமல் ஓடி விட்டது. இப்போது வருடம் முடியவும் போகிறது. கழிந்து போன நாட்கள் அனைத்தும் மறக்க முடியாத நாட்கள்! இன்னும் சொல்லப் போனால் என்னால் இணையத்தில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போன நாட்கள்! பதிவுகள் போடுவதைத் தள்ளிப் போட்டு வந்த நாட்கள்! எத்தனையோ பதிவுகள் ட்ராஃப்ட் மோடிலேயே இருக்கின்றன. அவற்றை வெளியிடவும் மனம் இல்லாமல் போய்விட்டது! :)
இன்னிக்குக் கூடப் பாருங்க! சமைக்கும்போது பிரச்னை!
காலம்பர வழக்கம் போல் சமைக்க ஆரம்பித்துக் குக்கரை அடுப்பில் வைத்தேன். ரங்க்ஸ் கொஞ்சம் வெளியே செல்வதாகச் சொல்லிட்டுச் சென்றார். அவர் கீழே இறங்கி இருப்பார், இங்கே எரிவாயு தீர்ந்து போயாச்சு! ஒரு காலத்தில் சிலிண்டரை நானே தான் மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் என்னை சிலிண்டர் பொருத்த விடாமல் ரங்க்ஸே பொருத்துகிறார். ஆகவே அவர் வரணும். அடுப்பில் ஒரு பக்கம் குக்கரும், இன்னொரு பக்கம் காய்கள் வேகவும் வைச்சிருந்தேன். இப்போ என்ன செய்யறதுனு ஒரு கணம் யோசனை. ரங்க்ஸ் முக்கியமான வேலையாப் போனதால் கூப்பிடுவது கஷ்டம்! ஆனால் நல்ல வேளையா மின்சாரம் இருந்தது. ரைஸ் குக்கர் கீழே இருந்திருந்தா அதிலே சாதத்தை மாற்றிட்டு இன்டக்ஷனில் மற்றவற்றைச் சமைச்சிருக்கலாம். ஆனால் ரைஸ் குக்கர் மேலே இருந்தது. என்னால் ஏறி எடுக்க முடியாது. ஆகவே இன்டக்ஷனிலேயே குக்கரையும் வைச்சுடலாம்னு நினைச்சேன்.
உண்மையிலேயே நல்லவேளைதான். ஏனெனில் பத்து நாட்களாக் காலை சமையல் ஆரம்பிக்கிறச்சே போகும் மின்சாரம் சமையல் முடிச்சும் வராது! சாப்பிடும்போது தான் வரும். குறைந்தது இரண்டு மணி நேரம்! இன்னிக்கு மின்சாரம் இருப்பதே கடவுள் செயல் தான் என நினைத்துக் கொண்டு குக்கரை இன்டக்ஷன் ஸ்டவுக்கு மாற்றினேன். இரண்டே நிமிடத்தில் குக்கர் விசில் அடிச்சுக் கூப்பிட்டது. பின்னர் காய்களையும் ஓர் அடி தட்டையான எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றினேன். எனக்கு இந்த எவர்சில்வரில் சமைக்கவே பிடிக்காது. பாரம்பரியப் பாத்திரங்கள் தான் பயன்படுத்துவேன். குழம்பு வைக்கக் கல்சட்டி, ரசம் வைக்க ஈயச் சொம்புனு. காய்கள் வேக வைக்கவும் செப்பு அடியில் பதிக்கப்பட்ட ஒரு பாத்திரம் இருக்கு! அது அடி கனம் என்பதால் அதில் வேக வைப்பேன். அதை இன்டக்ஷனில் வைக்க முடியாது. ஆகவே எவர்சில்வர் பாத்திரத்தில் மாற்றிக் காய்களைச் சமைத்தேன்.
ரசம் வைக்கவும் இன்னொரு எவர்சில்வர் பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் வைத்தேன். மைசூர் ரசம்! இன்னிக்கு ரசமும், இரண்டு மூன்று காய்கள் மட்டும் சேர்த்து அவியல் மாதிரியும் பண்ணினேன். அவ்வளவு தான்! ஆகவே அதுவும் சீக்கிரம் கொதிக்க ஆரம்பிச்சது. சமையல் எப்போதும் போல் அரை மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. இரும்புச் சட்டி, இரும்புக் கரண்டி ஆகியன இன்டக்ஷனில்வைக்கலாம். கரண்டி நிற்கவில்லை. ஆகவே சின்ன இரும்புச் சட்டியை வைத்து ரசத்துக்குத் தாளித்தேன். சமையல் முடிஞ்சது. ரங்க்ஸும் வந்தார். சிலிண்டரும் போட்டாச்சு. சமையல் பிரச்னைக்குத் தீர்வும் கிடைச்சது. :) அது மாதிரி ஒவ்வொரு பிரச்னையாகத் தீர்வு கிடைக்கணும்;கிடைக்கும். எல்லாத்தையும் பெரிய ரங்கு பார்த்துட்டுத் தானே இருக்கார்.
இப்போக் கொஞ்சம் பொழுதுபோக்குக்கு! :) ரொம்பவே சீரியஸா இருந்துட்டா நல்லா இருக்காதே! :)
இது தான் நான் ரசம் வைக்கும் ஈயக் கிண்ணம்
இப்போ இன்னிக்கு வைச்ச மைசூர் ரசம் பத்திப் பார்ப்போமா? இது எங்க வீட்டிலே என் தம்பி மனைவி செய்யும் முறை. என் மாமியார் வீட்டிலே வேறே மாதிரிச் செய்வாங்க.அவங்க வைக்கிற ரசம் நான் வைக்கிற சாம்பார் மாதிரி நீர்க்கவும் இல்லாமல் கெட்டியாவும் இல்லாமல் நிதானமா அடியிலே சாம்பார், மேலே ரசம்ங்கற பக்குவத்தில் இருக்கும். பருப்பு நிறையப் போடுவாங்க! மைசூர் ரசம்னாக் கேட்கவே வேண்டாம். பருப்பு அடியில் கெட்டியாக நிறைய இருக்கும். ஆனால் என் தம்பி மனைவி பண்ணினாலும், நான் பண்ணினாலும் ரசம் நீர்க்க ரசமாகத் தான் இருக்கும். பருப்புப் போட்டுத் தான் பண்ணுவோம். ஆனாலும் ரசம் அடியிலிருந்து ஒன்று போல் இருக்கும். அதற்குக் காரணம் வறுத்து அரைக்கும் பொருள்களில் உள்ள சின்ன மாற்றம். நீங்க துவரம்பருப்பு வறுத்து அரைக்கும் பொருள்களில் சேர்த்தால் ரசம் நீர்க்க வரும். அதே கடலைப் பருப்பு வறுத்து அரைச்சால் ரசம் கெட்டியாக இருக்கும். ரசப்பொடி செய்யும்போதும் அப்படித் தான்! துவரம்பருப்பு மட்டும் சேர்க்கணும். மிவத்தல் நூறு கிராம்னா கால்கிலோ தனியா போட்டுட்டு துபருப்பு 200 மிளகு நூறு னு சேர்த்துட்டு அதையும் வெறும் வாணலியில் வறுத்து மிஷினில் கொடுத்துத் திரிச்சுட்டு வைச்சா ரசம் ரசமாக வரும். நான் கொத்துமல்லி விதை இன்னும் கொஞ்சம் கூடச் சேர்ப்பேன். ஆனல் துபருப்புப் போட்டும் மேலே கடலைப்பருப்பும் போட்டால் அது ரசமா, சாம்பாரானு யோசிக்கணும்! அதுவே சாம்பாருக்கு வறுத்து அரைக்கையில் மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், உபருப்பு வறுத்து அரைத்தால் சாம்பாருக்கு மாவு எல்லாம் கரைச்சு ஊற்றாமலேயே கெட்டியாக வரும். இப்போ இன்னிக்குச் செய்த மைசூர் ரசம் செய்முறை!

ரசம் அடுப்பில் கொதிக்கையில் எடுத்த படம்! :)
இரண்டு சின்ன மி.வத்தல்
ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை
அரை டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு
மிளகு ஒன்றரை டீஸ்பூன்
ஒரு டீஸ்பூன் ஜீரகம்
பெருங்காயம் ஒரு துண்டு
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
எல்லா சாமான்களையும் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். புளிச்சாறு ஒரு கிண்ணம் இருக்கலாம்.
தக்காளி (தேவையானால் சின்னதாக ஒன்று)
பச்சை மிளகாய் சின்னதாக ஒன்று
உப்பு தேவையான அளவு
தாளிக்க நெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, சின்ன மிவத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி
துவரம்பருப்புக் குழைய வெந்தது ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது சின்னக் கிண்ணம் ஒன்று
துவரம்பருப்பில் மஞ்சள் பொடி சேர்த்துக் குழைய வேக வைக்கவும். புளிச்சாறில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கருகப்பிலை, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு புளி வாசனைபோகக் கொதித்ததும் வெந்த பருப்பை நன்றாக நீர் விட்டுக் கரைத்துத் தேவையான அளவுக்கு விளாவவும். வறுத்து வைத்துள்ள பொடியைச் சேர்க்கவும். ஒரு கொதி விடவும். கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு, மிவத்தல் கருகப்பிலை போட்டுப் பொரித்துத் தாளிதத்தை ரசத்தில் சேர்க்கவும். கொத்துமல்லி தூவிச் சூடான சாதத்துடன் பரிமாறவும்.
ரசம் கெட்டியாக வேண்டுமானால்
இரண்டு மிவத்தல், தனியா, கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு மட்டும் ஒரு டீஸ்பூன் சேர்த்துப் பெருங்காயம் தேங்காயுடன் வறுத்து அரைத்துக் கொள்ளவும். புளிச் சாறைக் கொதிக்க விடுகையில் வீட்டில் இருக்கும் சாம்பார்ப் பொடி அல்லது ரசப்பொடியில் ஒரு டீஸ்பூன் பொடி போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து கொதிக்கவிட்டுத் துவரம்பருப்பை நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு ரசத்தில் சேர்க்கவும். இது கொஞ்சம் கெட்டியாக இருக்கும். தாளிதம் மேற்சொன்ன மாதிரித் தான்.
ஹிஹிஹி, நீங்க பாட்டுக்குத் திரைப்படம் பத்தித் தான் நான் எழுதி இருக்கேன்னு நினைச்சுட்டு வந்தா அதுக்கு நானா பொறுப்பு! நாங்க அப்படி எல்லாம் எழுதிடுவோமா! :))))