Sunday, September 20, 2009

நவராத்திரியில் நவதுர்க்கைகள் - சைல புத்ரி! 2

இன்றைய அலங்காரம் ஸ்ரீராஜராஜேஸ்வரி


சைலபுத்திரி: சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப் படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை. நடைபெறாது. இவள் தமிழில் மலைமகள் என அழைக்கப் படுகின்றாள். மகாமேருவை வலம் வந்து கொண்டிருக்கும் ஆதித்தியன் ஆன சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரியும் வல்லமை கொண்டவன். நவராத்திரி நாட்களில் ஞாயிற்றுக் கிழமை அன்று இவளை வணங்கித் துதித்தால் ஆரோக்கியம் பெருகும். மனம் விசாலமடையும். பர்வத ராஜபுத்திரி வேண்டியது அருளுவாள். வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆநந்த தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவளே ஸ்ரீசைலபுத்ரி என்னும் இந்த தேவி ஆவாள்.

இன்று அன்னையை மஹிஷனை வதைக்கக் கிளம்பிய ராஜராஜேஸ்வரி ரூபத்தில் வணங்கவேண்டும். மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிமூர்த்தியாக பாவித்து வழிபடவேண்டும். இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது. சிவப்புக் கொன்றையும் விசேஷம். இன்றைய நைவேத்தியம் எள் சாதம். எள்ளைக் கல்லில்லாமல் களைந்து வடிகட்டி வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதோடு உப்பு, காய்ந்த மிளகாயும் வறுத்துக் கொண்டு பொடி செய்து வைத்து அந்தப் பொடியை நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் போட்டுக் கலந்து கொள்ளவேண்டும். சிலருக்குப் பெருங்காயம் உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்க்கும் வழக்கம் உண்டு. எள்ளுக்குப் பெருங்காயம் தேவை இல்லை. இது தவிர மூன்று வயதுக் குழந்தைக்குப் பிடித்த பலகாரங்கள் எதுவேண்டுமானாலும், வெங்காயம், பூண்டு, தவிர்த்துச் செய்து கொடுக்கலாம். இன்றைய சுண்டல் காய்ந்த மொச்சையை ஊற வைத்துச் செய்த மொச்சைச் சுண்டல். இன்னிக்கு ஓசிச் சுண்டல் இல்லை. அதனால் நோ படம்!

துர்கா அஷ்டகம் இரண்டாம் பாடல்:

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


லலிதா நவரத்னமாலையின் நீலம்!

மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

5 comments:

  1. லலிதா நவரத்ன மாலை யும் போட்டதுக்கு ரொம்ப நன்றி. ஒ. கே
    இன்னிக்கு சாயந்திரம் எள்ளு சாதம் பண்ணிடவேண்டியதுதான். கார்த்தால ஆஸி ஸ்ட்ராபெரீஸ், யூ.ஸ் ஆரெஞ்ச் தான் ப்ரசாதம்.ஓம் ஃப்ரி ட்ரேடாய நமஹ தான். எப்போ ஆப்பூஸும், பங்கனபள்ளி யும் வரவிடுவாளோ:)

    ReplyDelete
  2. Am first!! thanks for the info. :)

    ReplyDelete
  3. //பர்வத ராஜபுத்திரி வேண்டியது அருளுவாள்//

    எல்லோருக்கும் ஆரோக்கியம் அருளட்டும்.

    ReplyDelete
  4. சைலபுத்திரியின் திருவடிகள் சரணம். நன்றி அம்மா.

    ReplyDelete
  5. பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனித்தனியாய்ச் சொல்ல முடியலை!

    ReplyDelete