Saturday, June 16, 2012

கோயில்களை எடுத்து நடத்துவதால் என்ன பயன்! தொடர்ச்சி


கோயில் என்பது காதலர்கள் கூடும் இடம் அல்ல.  மக்கள் கூடி நின்று வம்பு பேசும் மடமும் அல்ல. தற்காலங்களில் கோயில் அப்படித் தான் ஆகி விட்டது.  வணிக வளாகங்களாக மாறி உள்ளன.  அங்கே மனதை மயக்கும் காதல் விளையாட்டுகளுடன் கூடிய சிற்ப விநோதங்கள் இருக்கின்றனவே எனக் கேட்கலாம். அவை நம் மனதை இன்னமும் வலுவாக்க வேண்டியே வைக்கப்பட்டுள்ளன.  இவற்றையும் வென்று நாம் இறைவனிடம் ஐக்கியம் ஆக வேண்டும் என்பதற்காகவே.  அதோடு இல்லறமின்றி நல்லறம் இல்லை என்பதனாலும் கூட.  இல்லறத்தை நல்லறமாக முடித்துவிட்டுக் கடைசியில் இறைவனடி சேர வேண்டும் என்பதாலும்.  அங்கேயும் காமத்தை வெல்ல வேண்டும். இங்கே காமம் என்பது வெறும் குடும்ப உறவு மட்டுமல்ல.  எல்லாவிதமான ஆசைகளும் சேர்ந்ததே காமம்.  பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என அனைத்துமே காமத்துக்குள் அடங்கும். இன்றைய அவசர உலகில் இந்த ஆசையை வெல்வது கடினம்.  கோயில்களை வடிகால்களாக மாற்றிக் கொண்டு விட்டனர்.  அங்கே தொலைக்காட்சித் தொடர்களை எடுப்பதனாலும், அவங்க தப்புத் தப்பாய் அங்கப் பிரதக்ஷிணம் செய்வதிலும், பிரார்த்தனைகள், வேண்டுகோள்கள் என மூட நம்பிக்கைகளைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்டுவதால் இன்று கோயில்கள் சந்தை மடங்களாகவும் காதலர் தனித்திருக்கும் இடங்களாகவும் மாறி விட்டன.  கோயில்களின் புனிதம் கெட்டுக் கொண்டிருக்கிறது. அதை அழிப்பவர்கள் மனிதர்களே. மனிதர்களைக் குறை சொல்லாமல் அங்கே வீற்றிருக்கும் தெய்வத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்?  ஆனால் ஆதியில் கோயில்கள் அப்படி இல்லை.  ஒவ்வொரு ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் தங்கள் சக்தியைப் பிரயோகித்து விக்ரஹங்களுக்கு சாந்நித்தியம் உண்டாக்கி அதன் மூலம் வெகு ஜனங்களுக்கு நன்மை செய்ய விரும்பினார்கள்.  எல்லாருக்குமே நான் பிரம்மம் என்பது புரிந்து விடாது.  அனைத்தும் பிரம்மம் என்பதும் புரியாது. அப்படிப் புரிந்து கொண்ட மனிதர்கள் இருந்தால் சிருஷ்டிக்கும், மரணத்துக்கும், காதலுக்கும், காமத்துக்கும், கோபத்துக்கும், தாபத்துக்கும் வேலையே இல்லையே! 

ஆகவே நம்முடைய பஞ்ச இந்திரியங்கள் மட்டுமன்றி, பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை எல்லாம் ஒழுங்கு செய்யும் ஒரு மாபெரும் சக்தி இருக்கத் தான் செய்கிறது.  எப்படிச் சங்கீதத்தைக் காதால் மட்டும் கேட்க முடியுமோ, உணவின் சுவையை நாக்கு மட்டுமே உணர முடியுமோ, கண்களால் மட்டுமே பார்க்க முடியுமோ, மூக்கால் மட்டுமே நுகர முடியுமோ அது போலத் தான் கடவுளும்.  ஒரு இந்திரியத்தால் கண்டு பிடிக்க முடியாத ஒன்றை இன்னொரு இந்திரியம் கண்டு பிடிக்கிறது என்பதற்காக நாம் அதை இல்லை என்றா சொல்கிறோம்.  சங்கீதமே கிடையாது என்பவர் உண்டா?  நாவால் உணவை ருசிக்க இயலாது என்பவர் உண்டா? மூக்கால் நுகர்ந்தால் அது கணக்கில் வராது என்பார்களா! இல்லையல்லவா?  இவை இப்படித் தான் இருக்க வேண்டும், மாறுதலாக இருக்க முடியாது எனச் செய்தவர் யார்? நம்மால் சொல்ல இயலுமா?  மின் விளக்குகள் மின்சாரத்தின் மூலமே எரிகின்றன.  ஆனால் அந்த மின்சாரத்தை நம்மால் பார்க்க முடியுமா?  அது போலத் தான் இறைவனும்.

காண்போருக்குக் கேட்ட உருவில் காட்சி கொடுப்பான் அவன்.  நான் குழந்தையாக இருந்தப்போ என் அப்பா, அம்மாவுக்கு மகள், என் தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும் பேத்தி, என் அண்ணாவுக்குத் தங்கை, என் தம்பிக்கு அக்கா. என் சிநேகிதிகளுக்கு சிநேகிதி, ஆசிரியருக்கு மாணவி. கல்யாணம் ஆனதும் என் கணவருக்கு மனைவி, மாமனார், மாமியாருக்கு மருமகள், மைத்துனர், நாத்தனர்களுக்கு அண்ணி, என் குழந்தைகளுக்கு அம்மா.  நான் ஒருத்தியே இத்தனை அவதாரம் எடுத்திருக்கேன்.  கடவுள் எடுக்க மாட்டாரா?  நிச்சயமாய் எடுப்பார். ஞானியாக இருப்பவர்களுக்கு அனைத்தும் பிரம்மமயமாய்த் தெரியும்.  எது மாயை எனப் புரியும். சாமானிய மனிதர்களுக்கு அவை புரியுமா?  வேறொண்ணும் வேண்டாம். நாம சாப்பிடும் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  மஞ்சள் பழம் எனும் பூவன் பழம், பேயன் பழம், மொந்தன் பழம், பச்சை நாடன், நேந்திரம்பழம், ரஸ்தாளி, பெங்களூரா எனப்படும் சின்ன வாழைப்பழம், மலைப்பழம், சிறுமலைப்பழம், கற்பூர வாழை, செவ்வாழை என எத்தனை வகை.  எல்லாமும் வாழை மரத்திலிருந்து தோன்றியவை தானே! ஆனால் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு மருத்துவ குணம் இருப்பதாகவும் சொல்கிறார்கள் அல்லவா?  அது போலத் தான் இறைவனும். அடியவர்களின் குணநலன்களுக்கு ஏற்ப அவர்களுக்குப் பிடித்த வடிவை எடுத்துக் கொள்கிறான்.

அவ்வப்போது தொடரும்.

21 comments:

  1. ஊருக்கு நடுவே ஒரு கோவில் கட்டினால்.....
    -வெள்ளக் காலத்திலும் வெய்யில் காலத்திலும் மக்களைக் காக்க அல்லது ஒதுங்க ஒரு இடம்.
    -அதில் காணப்படும் குளம் மழை நீர் சேகரிப்பாகவும் நிலத்தடி நீர்க் குறையாமல் ஊருக்குத் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படாமல் காக்கவும் உதவும்
    -விக்க்ரகங்களில் தடவப் படும் சில மூலிகைகள் காற்றில் பரவி சில நோய்களைக் குணப்படுத்தும்
    -கடவுள் பயத்தை ஏற்படுத்தி சில ஒழுங்கு முறைகளுக்கு மக்களைக் கட்டுப் படுத்த உதவும். தண்டனையைக் கடவுள் பெயரால் தரவும் முடியும்.
    -கட்டிடத்தின் வலுவைப் பொறுத்து எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து கூடத் தப்பிக்க இயலும்.
    -சில சுரங்க வழிகளுக்கும் நாணய, நகைகள் பாதுகாக்கவும் உதவும்.
    -பஜனை, நாட்டியம் மூலம் கலைகளை வளர்க்கவும் அதன் மூலம் மன பாரம் குறையவும் வைக்க முடியும்.
    -கடவுள் நம்பிக்கை, பயம் ஆகியவை அந்த ஊர் மக்களிடையே ஒரு தவிர்க்க முடியாத ஒற்றுமையை உருவாக்கப் பயன்படும். நட்பை வளர்க்கும்.
    -ஆளும் அதிகார பெடத்துக்கும் மக்களுக்கும் நடுவே ஒரு பாலமாக இருக்கும்!

    :)))))))))))))

    ReplyDelete
  2. ஸாரி..... 'பீடம்' பெடம் ஆகி விட்டது!

    ReplyDelete
  3. இறைவன் பல வடிவங்கள் எடுப்பதற்கான உங்களின் விளக்கம் அருமை.

    ReplyDelete
  4. sriram comment is good. ippa sameeba kaalama kovilukku povathaivida veetil irunthe samiyai kumbidave pidikirathu

    ReplyDelete
  5. மகாசக்திப் பரம்பொருளை வாழைப்பழம் லெவலுக்கு கொண்டு வந்திருக்கீங்க. இனி எல்லாம் வல்ல வாழைப்பழத்தை வணங்கவேண்டியது தான்.

    ReplyDelete
  6. மின்சாரத்துக்கு மகா சக்தியில்லை. படைத்து காத்து அழிக்கும் தொழிலில்லை. வேண்டியதை வழங்கும் சக்தியில்லை. புன்ணியம் பாவம் பார்க்கும் அறிவில்லை. மின்சாரத்துக்கு பூஜை விரதம் என்று எதுவும் இல்லை. கண்ணால் காண முடியாத மின்சாரம் போல் கடவுளும் என்று ஒவ்வாத உவமைகள் சொல்வது மிகவும் வருந்தத்தக்கது. இதைப் படித்தும் கேட்டும் இளவயது முதலே நாம் தான் மனதை கறைபடுத்திக் கொண்டுவிட்டோம், அப்படியே தொடர வேண்டுமா சொல்லுங்கள்?

    ReplyDelete
  7. விடறதில்லை உங்களை.. இதுக்காகவே இன்னொரு பதிவெழுதப்போறேன்.

    கோவில்கள் அந்த நாளிலும் சமூக பொதுவிட நோக்குடனேயே கட்டப்பட்டன. திருவிழாக்கள், பாடசாலை போன்றவை கோவில்களிலே நடந்தன. வெளிப்படையாக சொல்லத்தயங்கிய உடலுறவு பற்றி "அறிய" கோவில் சிற்பங்கள் ஒரு கருவியாகவே செதுக்கப்பட்டன என்றும் படித்திருக்கிறேன். model உபயோகித்தார்களா தெரியாது (ஹிஹி.. இது கருப்புச் சட்டை டயலாக், கண்டுக்காதீங்க)

    ReplyDelete
  8. விக்கிரகத்தில் தேய்த்து காற்றில் பரவி நோய்களைக் குணப்படுத்துமென்றால் நேராகவே உடலில் தேய்த்துக் கொள்ளலாமே ஸ்ரீராம்?

    பயம் இருக்கும் இடத்தில் உண்மையான மதிப்பு இருக்காது. பயம் போனவுடன் மதிப்பும் போய்விடும். அப்பனாக இருந்தாலும் சரி, ஆண்டவனாக இருந்தாலும் சரி. கணவனாக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி. இன்னும் ஒரு வரி விரல் வரைக்கும் வந்துடிச்சி.. :)

    நீங்கள் சொல்வது போல, கடவுளைக் கும்பிடக் காரணம் பயம் தான். அதனால் தான் "பயத்தினால் உருவாக்க நினைக்கும்" எந்தப் பலனும் உருவாகவில்லை.

    ReplyDelete
  9. அப்பாதுரை, மணி ஒன்பதாகப்போகிறது. நான் சாமியாட ஆரம்பிச்சுடுவேன். ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிட்டுப் போறேன். மிச்சம் நாளைக்கு.

    நிச்சயமாய் எந்த பயத்திலும் நான் கடவுளை எப்போதும் வணங்கியதில்லை; சின்ன வயசில் இருந்தே. பிள்ளையார் என் அருமைத் தோழர். உங்களோடு உரிமையாய்ப் பேசுகிறாப் போல் அவரோடும் பேசுவேன்.

    என் குழந்தைகளுக்கும் கடவுளிடம் பயத்தைக் காட்டி வளர்த்தது இல்லை. நிச்சயமாய்.

    நீங்க சொல்கிறாப் போல் என் மாமியார் சொல்வாங்க தான். மாரியம்மன் எங்கள் குலதெய்வம் என்பதால் மாரியம்மனைத் தவிர வேறு தெய்வங்களை வணங்கக் கூடாதுனே இருந்தாங்க. அப்படிப் பட்டவங்களை துளசி பூஜை செய்ய வைச்சிருக்கேன்; கந்தர் சஷ்டி கவசம் படிக்க வைச்சிருக்கேன். கடவுள் ஒருவரே. பல ரூபங்களில் வருகிறார் என்பதே உண்மை. கிறிஸ்தவர்களுக்கு ஏசுவாக, முஸ்லீம்களுக்கு அல்லாவாக, ஜைனர்களுக்கு மஹாவீரராக, பெளத்தர்களுக்கு புத்தராக என அவரவர் நம்பிக்கைக்கு ஏற்பத் தோற்றம் கொடுக்கிறார். பலன் உருவாகவில்லை என்றும் சொல்லாதீர்கள். நானே ஒரு உயிருள்ள சாட்சி. ஒவ்வொரு விஷயத்திலும்,ஒவ்வொரு கஷ்டத்திலும், ஒவ்வொரு பிரச்னையிலும் எனக்குத்துணையாக என் முன்னால் நடந்து எனக்கு வழிகாட்டியாகச் சென்றவர் கடவுளே. வேறு யாரும் இல்லை. இது சத்தியம்.

    ReplyDelete
  10. மிச்சம் நாளைக்கு!

    ReplyDelete
  11. நீங்க எழுதியிருப்பதைப் படிக்கறப்போ நெகிழ்ச்சியாகத் தான் இருக்கு. உங்களுக்குப் பலனிருந்தா நல்லது தானே?

    ReplyDelete
  12. வாங்க ஶ்ரீராம், நீங்க சொல்வது எல்லாமும் சரியே. எ.பி. பரவாயில்லை விடுங்க. :)))))

    ReplyDelete
  13. விச்சு, பாராட்டுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  14. எல்கே, இப்போக் கோயில்கள் இருப்பதை வைத்து எதையும் எடை போடக் கூடாது. இந்த நிலைமை மாற எல்லாரும் பாடுபடணும். ஆனால்! :(((((

    ReplyDelete
  15. அப்பாதுரை, வாழைப்பழத்தை வணங்கலாம்.

    பேயன்பழம்= சிவன்
    மொந்தன் பழம்= விஷ்ணு
    பூவன் பழம்= பிரம்மா
    :)))))))))

    ReplyDelete
  16. மின்சாரத்துக்கு மகா சக்தியில்லை. //
    சக்தியில்லை என நீங்கள் கூறும் இந்த மின்சாரம் இல்லாமல் மக்கள் படும்பாடு! :))))))))

    படைத்து காத்து அழிக்கும் தொழிலில்லை. //

    சரியானபடி தொடவில்லை எனில் அழிக்கும் சக்தி படைத்தது. அதே சமயம் விளக்கு எத்தனை பேருக்குப் பாதுகாப்பாகத் துணைக்கும் வருகிறது. மின்சாரமே ஒரு சிருஷ்டி தானே!


    வேண்டியதை வழங்கும் சக்தியில்லை.//

    மின்சாரம் இல்லைனா சமையல்லே எதை எப்படி அரைத்துச் சேர்க்கிறதுனு தவிக்கிற தவிப்பு, பாடங்கள் படிக்க முடியாமல் குழந்தைங்க தவிப்பு, இருட்டிலே தடுமாறும் வயோதிகர் தவிப்பு

    எல்லாமும் மின்சாரம் வந்து தான் சரியாகிறது. அவங்க வேண்டுவதை மின்சாரம் வந்தால் வழங்கப் படுகிறது. :))))) இந்த நவீன யுகத்தில் அரை மணி நேரம் மின்சாரம் இல்லைனால் என்ன ஆகும் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

    // புன்ணியம் பாவம் பார்க்கும் அறிவில்லை. மின்சாரத்துக்கு பூஜை விரதம் என்று எதுவும் இல்லை.//

    புண்ணியம், பாவம் எதுக்குப் பார்க்கணும்? பூஜை, விரதம்னு எதுக்கு இருக்கணும்? மனசு சுத்தத்துக்குத் தானே. பூஜையோ, விரதமோ இருந்தால் தான் உனக்கு அருள் புரிவே ன் என எந்தக் கடவுளும் யார் கிட்டேயும் சொல்லலை. புராணக்கதைகளைச் சரியானபடி படித்தால் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள் புரியும்.

    கதை என்ற அளவிலே அதிலிருக்கும் இடைச்செருகல்களோடு படித்தால் :((((( உதாரணத்துக்கு அத்ரி மஹரிஷி மனைவி அநசூயாவிடம் மும்மூர்த்திகள் ஆடையின்றி உணவு பரிமாறச் சொன்னதாக உள்ள கதை.

    அதில் சிறிதும் உண்மையில்லை. குறிப்பிட்ட பகுதி இடைச்செருகல்.

    ReplyDelete
  17. விடறதில்லை உங்களை.. இதுக்காகவே இன்னொரு பதிவெழுதப்போறேன்.//

    செய்ங்க, சந்தோஷமா இருக்கு.



    //கண்ணால் காண முடியாத மின்சாரம் போல் கடவுளும் என்று ஒவ்வாத உவமைகள் சொல்வது மிகவும் வருந்தத்தக்கது.//

    இதிலே வருந்த என்ன இருக்கு? சக்தி வாய்ந்த மின்சாரத்தைக் கண்களால் காண முடியாவிட்டாலும் அதன் இருப்பை உணர்கிறோம். அப்படியே நமக்கும் மேலே ஒரு மஹாசக்தி இருந்து நம்மை வழி நடத்துவதை என்னால் உணர முடிகிறது. ஒரு உதாரணம் காட்ட, இதை விட எளிமையாக வேறொன்று தோன்றவில்லை.


    // இதைப் படித்தும் கேட்டும் இளவயது முதலே நாம் தான் மனதை கறைபடுத்திக் கொண்டுவிட்டோம், அப்படியே தொடர வேண்டுமா சொல்லுங்கள்?//

    கறை எதுவும் இல்லை. சர்ஃப் எக்ஸெல்லா போட முடியும்? கடவுள் இல்லை என்னும்போதே அதன்/அவர் இருப்பை நீங்கள் உறுதி செய்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்.

    சரியானபடி சொல்ல வேண்டிய தகவல்களைச் சரியாகச் சொல்லிப் புராணக் கதைகளைச் சொன்னால் யார் மனமும் கறை படியாது. எங்க வீட்டிலே பெரியவங்க அப்படித் தான் சொல்லிக் கொடுத்தாங்க.

    தாத்தா வீட்டிற்குப் போனால் தாத்தா, பாட்டி, எங்க வீட்டிலே அப்பா, அம்மா, பெரியப்பாக்கள்.

    ஒரு காக்கா, நரி, பாட்டி வடை சுட்ட கதையைக் கூட அதன் நீதியையும், வயதான பாட்டி உழைத்துச் சாப்பிட நினைத்ததையும், நரி பொய் சொல்லி ஏமாற்ற நினைத்ததையும், காக்கை முகஸ்துதிக்கு அதுவும் பொய்யான ஒன்று ஏமாந்ததையும் சொல்லி இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்றே சொல்லிக் கொடுத்தார்கள்.

    சமீபத்தில் மங்கையர் மலரில்/அல்லது ஏதோ ஒரு பெண்கள் பத்திரிகையில் அந்தக் கதை மிகவும் எதிர்மறைச் சிந்தனை எனச் சொல்லி அதை மாற்றி எழுதி இருந்தனர். அப்போது நினைத்துக் கொண்டேன். இந்தக் கதையை யாருக்கும் சரியானபடி சொல்லித் தரலையோனு. :((((

    இந்தக் கதை குறித்துக் குழுமங்களில் கூட விவாதித்தோம்.

    ReplyDelete
  18. விக்கிரகத்தில் தேய்த்து காற்றில் பரவி நோய்களைக் குணப்படுத்துமென்றால் நேராகவே உடலில் தேய்த்துக் கொள்ளலாமே ஸ்ரீராம்?//

    ஶ்ரீராம் லேசாய்த் தொட்டிருக்கிறார். ஆனால் இது குறித்து எழுதுவதெனில் நிறையப் பதிவுகள் போடும்படி ஆகும். போகர் இதைச் சரியாகச் செய்தார். ஆனால் இன்றுள்ளவர்கள் உள்ளதையும் கெடுக்கின்றார்கள். இது குறித்து எழுதப் போனால்! :(((((((

    ReplyDelete
  19. பயம் இருக்கும் இடத்தில் உண்மையான மதிப்பு இருக்காது. பயம் போனவுடன் மதிப்பும் போய்விடும். அப்பனாக இருந்தாலும் சரி, ஆண்டவனாக இருந்தாலும் சரி. கணவனாக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி. இன்னும் ஒரு வரி விரல் வரைக்கும் வந்துடிச்சி.. :)//

    உண்மை அப்பாதுரை, எங்க பையரிடம் சின்ன வயதில் யாரோ பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தும்னு சொல்லி இருக்காங்க. அவன் அழுது கொண்டே என்னிடம் வந்து சண்டையே போட்டான். சாமி கண்ணைக் குத்தும்னு அவங்க சொல்றாங்க; நீ ஒண்ணும் பண்ணாது; ஃபிரன்டுனு சொல்றியேனு. அவனுடைய பயத்தைப்போக்கி சகஜநிலைக்குக் கொண்டு வந்து, சாமி கண்ணை எல்லாம் குத்தாது; ஆனால் அதுக்காகப் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் சாமிக்குப் பிடிக்காது. சமூகத்திலும் உன்னைக் கெட்டவன்னு சொல்வாங்கனு எடுத்துச் சொல்ல வேண்டி இருந்தது.

    உங்களோட சிறு வயதில் யாரோ உங்களுக்கு சாமி தண்டனை கொடுக்கும்னு சொல்லி இருப்பாங்களோ? அல்லது நீங்கள் பார்த்த/கேட்ட அந்த சாமியாடுதல், ஆவி விரட்டுதல், ஆகியவற்றின் பாதிப்போ?

    நாங்களும் இதை எல்லாம் சிறு வயதிலிருந்து கேட்டிருக்கோம் தான். இன்னும் சொல்லப் போனால் அம்பத்தூரில் நாங்க இருக்கும் தெருவிலேயே ஒரு பெண்மணி தன் மேல் அம்மன் வந்து இறங்கி விட்டதாய்ச் சொல்லிக் கொண்டு குறி சொல்வார். அந்த வீட்டைத் தாண்டிக் கொண்டு தான் நான் செல்வேன். அங்கே நுழைந்ததில்லை. ஏனெனில் எனக்கு உண்மையான கடவுளிடம் நம்பிக்கை அதிகம்.

    Above all I am an optimistic. எனக்கு வேண்டியதை வேண்டும் நேரம் கடவுள் கூட்டவோ, குறைக்காமல் கொடுத்தே தீருவார். அவர் வைத்துக்கொள்ள முடியாது. :)))))))))

    ReplyDelete
  20. பயம் இருக்கும் இடத்தில் உண்மையான மதிப்பு இருக்காது. பயம் போனவுடன் மதிப்பும் போய்விடும். அப்பனாக இருந்தாலும் சரி, ஆண்டவனாக இருந்தாலும் சரி. கணவனாக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி. இன்னும் ஒரு வரி விரல் வரைக்கும் வந்துடிச்சி.. :)//

    உண்மை அப்பாதுரை, எங்க பையரிடம் சின்ன வயதில் யாரோ பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தும்னு சொல்லி இருக்காங்க. அவன் அழுது கொண்டே என்னிடம் வந்து சண்டையே போட்டான். சாமி கண்ணைக் குத்தும்னு அவங்க சொல்றாங்க; நீ ஒண்ணும் பண்ணாது; ஃபிரன்டுனு சொல்றியேனு. அவனுடைய பயத்தைப்போக்கி சகஜநிலைக்குக் கொண்டு வந்து, சாமி கண்ணை எல்லாம் குத்தாது; ஆனால் அதுக்காகப் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால் சாமிக்குப் பிடிக்காது. சமூகத்திலும் உன்னைக் கெட்டவன்னு சொல்வாங்கனு எடுத்துச் சொல்ல வேண்டி இருந்தது.

    உங்களோட சிறு வயதில் யாரோ உங்களுக்கு சாமி தண்டனை கொடுக்கும்னு சொல்லி இருப்பாங்களோ? அல்லது நீங்கள் பார்த்த/கேட்ட அந்த சாமியாடுதல், ஆவி விரட்டுதல், ஆகியவற்றின் பாதிப்போ?

    நாங்களும் இதை எல்லாம் சிறு வயதிலிருந்து கேட்டிருக்கோம் தான். இன்னும் சொல்லப் போனால் அம்பத்தூரில் நாங்க இருக்கும் தெருவிலேயே ஒரு பெண்மணி தன் மேல் அம்மன் வந்து இறங்கி விட்டதாய்ச் சொல்லிக் கொண்டு குறி சொல்வார். அந்த வீட்டைத் தாண்டிக் கொண்டு தான் நான் செல்வேன். அங்கே நுழைந்ததில்லை. ஏனெனில் எனக்கு உண்மையான கடவுளிடம் நம்பிக்கை அதிகம்.

    Above all I am an optimistic. எனக்கு வேண்டியதை வேண்டும் நேரம் கடவுள் கூட்டவோ, குறைக்காமல் கொடுத்தே தீருவார். அவர் வைத்துக்கொள்ள முடியாது. :)))))))))

    ReplyDelete
  21. நீங்க எழுதியிருப்பதைப் படிக்கறப்போ நெகிழ்ச்சியாகத் தான் இருக்கு. உங்களுக்குப் பலனிருந்தா நல்லது தானே?//

    எனக்கு மட்டும் தனியா வந்து கடவுள் பலனைக் கொடுக்கப் போறதில்லை. இந்த உலகத்து மக்கள் அனைவருக்கும் அவரவர் வினைக்கு ஏற்ப நல்லதோ, கெட்டதோ நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா.

    ReplyDelete