Wednesday, August 01, 2012

உபநயனம் என்றால் என்ன?? 5


//அம்மியில் நிற்க வைத்து
ஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர்
உரையாடுவார்.  இந்த உரையாடல் எதைக் குறித்து என விபரம் தெரியவில்லை.//

போன பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.  இதைப் படித்த திரு திவா அவர்கள் இது முக்கியம் என்று சொல்லிவிட்டு இதற்கான சுட்டியையும் கொடுத்து உதவினார்.  முதலில் சுட்டி கிடைத்தபோது சேமித்துக்கொள்ளவில்லை.  பின்னால் தேடியபோது சுட்டி கிடைக்கவில்லை.  ஆகவே என்னனு தெரியலைனு எழுதிட்டேன். :((( மிகவும் மன்னிக்கவும்.  முன்னாலேயே அவரிடம் கேட்டிருக்கணும். தாமதமாகவாவது தெரிய வந்ததுக்கு நன்றியைச் சொல்லிவிட்டு இதைக் குறித்து எழுதியதும் அடுத்த பதிவைப் பின்னர் போடுகிறேன்.

பூணூலே போடாத குழந்தைக்கு அப்பா, அம்மாவிடம் சொல்லி உபநயனம் செய்யச் சொல்லு என்று சொல்லிக் கொடுக்கவேண்டும்.  உபநயனத்துக்குத் தயாராக இருக்கும் வடுவிடம் உபநயனத்திற்குப் பின்னர் அவன் செய்ய வேண்டிய நித்ய கர்மாநுஷ்டானங்களைக் குறித்து அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.  இது தான் ஆசாரியர் முக்கியமாய்ப் பையனுடன் நடத்தும் சம்பாஷணை ஆகும்.   சந்தியா வந்தனம் செய்ய வேண்டியது மிக முக்கியம் என்பதாலும், ப்ரமசாரியாகப் போகும் சிறுவனுக்கு குருகுலத்தில் இருந்து வேத அத்யயனம் செய்ய வேண்டியதும் கட்டாயம் என்பதாலும், உபநயன காலத்திலேயே ஆசாரியர்கள் உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு அதற்கான தக்க பதிலையும் பெற்றுக் கொள்வார்கள்.  எல்லாம் வடமொழியில் இருப்பதால் இந்தக் காலத்தில் எல்லாருக்கும் இது புரியும் என்று சொல்ல முடியாது.  ஆசாரியார் கேட்டதற்குத் தக்க பதிலைச் சொல்லு என்று சொல்லிக் கொடுப்பதால் அப்படியே குழந்தைகள் சொல்வார்கள்.  ஆனாலும் இதைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆசாரியர் மாணாக்கனாகப் போகிறவனிடம்,

"ப்ரும்மசார்யஸி= ப்ரும்மசாரியாக இருக்க வேண்டும்." என்று சொல்கிறார்.

மாணவன் ஆசாரியரிடம்,

"அப்படியே ஆகட்டும்.  நன்றாக இருப்பேன்."  என்கிறான்.

ஆசாரியர்: தினமும் உணவு உண்ணும் முன் இத்தனை நாட்கள் நீ பாட்டுக்குச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாய்.  அதைப் போல் இப்போது செய்ய முடியாது.  நீ பரிசேஷணம் பண்ண வேண்டும்." என்கிறார்.

மாணவனும், அப்படியே செய்வதாகச் சொல்கிறான்.

அடுத்து ஆசாரியர் பிக்ஷை எடுத்துத் தான் உண்ண வேண்டும் என்கிறார்.
பிக்ஷாசர்யஞ்சரா= என்றும் பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவதோடு அல்லாமல் வேத அத்யயனமும் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்.

மாணவனும் சரி, அப்படியெ பண்ணுகிறேன் என்பான்.

பின்னர் ஆசார்யதீனோபவ என்று சொல்வார்.  அதாவது குருவுக்குப் பலன் தரக் கூடியவனாய் இருக்க வேண்டும்.   உனக்கு எந்த ஒரு குரு வேதத்தைக் கற்றுக் கொடுக்கிறாரோ அவர் சொல்வதை நீ கேட்க வேண்டும்."

மாணவன் அதற்கும் அப்படியே ஆகட்டும் என்பான்

பின்னர் தினசரி ஒரு நியமம் நீ தூங்காதே என்று சொல்லுவார்.

இதற்கு அர்த்தம் தூங்காமல் இருக்கக் கூடாது என்பதல்ல. தூங்குவதிலும் ஒரு ஒழுங்குமுறை இருத்தல் வேண்டும்.  என்பதுவே.  இதன் அர்த்தம் பகலில் தூங்காதே என்பதுவே.

மாணவனும் ஒத்துக்கொள்வான்.

இப்போதெல்லாம் இதன் முழுப் பொருளும் தெரியாமல் யந்திரத்தனமாக ஆசாரியர் சொல்ல மாணவனும் அப்படியே சொல்லப் பழகிவிட்டான்.  உண்மையில் அர்த்தம் புரிந்து கொண்டிருந்தால் இம்மாதிரிப் பிரதிக்ஞைகள் செய்துவிட்டு அதைக் காப்பாற்றமல் இருக்கக் கூடாது அல்லவோ!  ஆனால் இன்று அப்படி நடப்பதில்லை. பிரமசாரியாய் இருப்பதில்லை.  பிக்ஷை எடுத்து உண்பதில்லை.  பகலில் தூங்காமல் இருப்பதில்லை. ஆனால் க்ருஹஸ்தனான பின்னராவது அநுஷ்டிக்க வேண்டியதை அநுசரிக்கலாம் எனப் பரமாசாரியார் கூறுகிறார்.

தகவல் உதவிக்கு நன்றி:  திரு திவாஜி.

1 comment:

  1. வாங்க வா.தி. என்ன சிரிப்பு? திவாஜியை உங்களுக்குத் தெரியுமா? :P :P :P

    ReplyDelete