Saturday, March 23, 2013

ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கதேரிலே!


அடுத்து ஆஸுரம் என்னும் முறை ஆகும்.  ஆஸுரம் என்றால் ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத மாப்பிள்ளை/வரன் பணக்காரனாக இருப்பான்.  நிறையப் பணத்தைப் பெண் வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்துப் பெண்ணைத் தனக்குக் கொடுக்கும்படி செய்வது தான் ஆஸுரம்.  இங்கே பெண்ணின் சம்மதம் கேட்கப் படுவது இல்லை. பணத்தைக் கொடுத்துப் பெண்ணை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகத் திருமணம் செய்து கொள்வான்.  மேலே சொன்னவற்றில் மூன்றாவதான ஆர்ஷத்தில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றது போல் தான் இதுவும் என நினைத்தீர்களானால் தப்பு. ஆர்ஷ முறைப்படி கல்யாணம் செய்துக்கிறவங்க அநேகமாய் தவ வாழ்க்கையில் ஈடுபட்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தவ வாழ்க்கைக்கு உதவக் கூடிய பெண்ணாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் அப்படிப் பட்ட பெண் எனில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து கன்யாதானம் பெறுவார்கள்.  ஆனால் இங்கேயோ பணத்தைக் காட்டி ஆசை காட்டி வசியம் செய்து பெண்ணைப் பெறுவது என்பது நடப்பதால் இதையும் இரண்டாம்பட்சமாகவே கருத வேண்டும்.

சுமார் முந்நூறு வருடங்கள் முன்பிருந்து சமீப காலம் வரையிலும் பலரும் முதல் மனைவி இறந்து போய்ப் பல வருடங்கள் வயது வித்தியாசத்தில் இரண்டாம் கல்யாணம், மூன்றாம் கல்யாணம் என்றெல்லாம் பண்ணிக் கொண்டது ஆஸுர வகையைச் சேர்ந்தது தான்.



அடுத்தது காந்தர்வ விவாஹம். இதில் பெண்ணும், பையரும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு மனம் ஒன்றிப் போய் அவர்களாகவே பெரியவர்கள் துணையோ, அவர்கள் சம்மதமோ இல்லாமல் பண்ணிக் கொள்வது ஆகும். இந்த காந்தர்வ விவாஹம் என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது துஷ்யந்தனும், சகுந்தலையும் செய்து கொண்ட காந்தர்வ விவாஹம் தான்.  எவருக்கும் தெரியாமல் இருவரும் செய்து கொண்ட திருமணம் காந்தர்வ விவாஹம் எனப்படும்.  தற்காலங்களில் பெண்ணும், பிள்ளையும் வீட்டை விட்டு ஓடிப் போய்க் கோயில்களில், திருமணப் பதிவு அலுவலகங்களில் செய்து கொள்ளும் திருமணங்கள் கூட ஒரு வகையில் காந்தர்வ விவாஹமே ஆகும்.


அடுத்தது ராக்ஷஸம்.  நம்ம கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் நடந்தது ராக்ஷஸ விவாஹமே.  என்ன ஆச்சரியமாப் பார்க்கிறீங்களா?  பெண்ணுக்குத் தாய், தந்தை ஏற்பாடு செய்யும் வரன் பிடிக்காமல் வேறொருவரை மணக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து, அந்தக் குறிப்பிட்ட நபருக்குத் தன் ஆசையையும் தெரிவித்துத் தன்னைத் தன் பெற்றோர் நிச்சயித்திருக்கும் வரனிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போகும்படி வேண்டிக் கொண்டாள் எனில் அந்த ஆண் அவள் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும். தனக்குப் பிடிக்காத இடத்தில் பெண் திருமணம் ஆகிச் செல்வதை ஒருபோதும் நம் சமூகம் அனுமதிக்கவே இல்லை.  ஆகவே ருக்மிணிக்கு சிசுபாலனைப் பிடிக்கவில்லை என்றும் சுயம்வரம் என்பது பெயருக்குத் தான் வைத்திருக்கிறார்கள் என்பதையும் ருக்மிணி கடிதம் மூலம் கண்ணனுக்குத் தெரிவித்ததுமே கண்ணன் ஓடோடியும் வந்து ருக்மிணியைத் தூக்கிச் செல்கிறான்.  இதற்கு நடுவில் தன்னை எதிர்க்க வந்த ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மியையும் மற்ற வீரர்களையும்,  சொந்தங்களையும் யுத்தம் செய்து வெல்கிறான்.  இப்படிப் பெண் வீட்டுக்காரர்களோடு போர் புரிந்து ஜெயித்துப் பெண்ணைத் தூக்கிச் சென்று கல்யாணம் செய்து கொள்வது ராக்ஷஸ விவாஹம் ஆகும். இதிலே பெண்ணின் சம்மதம் மிக முக்கியம்.  பெண் தன்னைத் தூக்கிச் செல்பவனோடு செல்ல முழுச் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும்.

அடுத்துப் பைசாசம். இது மிகவும் அசுரத் தனம்.  ஆஸுரம் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற மாதிரியானது.  ஆஸுரத்திலே பெண்ணின் சம்மதத்தைக் கேட்காவிட்டாலும் பெண் வீட்டுக்காரர்களைப் பணத்தாலே குளிப்பாட்டி சந்தோஷப் படுத்துவான்.  ஆனால் இதிலே பெண்ணின் சம்மதமும் முக்கியமில்லை.  அவளின் உறவினர்களோ, பெற்றோர்களோ எவருமே முக்கியமில்லை.  ஆணின் விருப்பம் ஒன்றே குறியாக அனைவரையும் பகைத்துக் கொண்டு பெண்ணையும் பலவந்தப் படுத்தித் திருமணம் செய்து கொள்வது பைசாசம் ஆகும்.  இதுவும் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கோம்.  இன்னமும் பார்க்கிறோம்.

இதிலே ராக்ஷஸம், பைசாசம் போன்ற விவாஹ முறைகளைக் காட்டு வாசிகளுக்கும், காந்தர்வ விவாஹ முறையை க்ஷத்திரியர்களுக்கும் அனுமதித்திருந்தார்கள்.  என்றாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி எட்டுவிதமான விவாஹங்களிலும் மந்திரபூர்வமாக விவாஹம் நடைபெறவும் உரிமை உண்டு.  பொதுவாக பிராம்ம விவாஹம் உயர்ந்தது  எனப்பட்டாலும் பல பெண்களுக்கும் பிள்ளை தேடி வந்து கல்யாணம் நடப்பதில்லை.  வயது ஆகிவிட்டால் தைவமாகவோ, ஆர்ஷமாகவோ, பிராஜாபத்யமாகவோ திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.  இவை நான்குமே பிராமணருக்கு என ஏற்பட்டவை எனினும் மற்றவர்களுக்கும் பெரும்பாலும் இப்படித் தான் இருந்து வருகிறது.  ஆனால் பெண்ணே சுயமாகத் தேர்ந்தெடுக்கும் முறை அரசகுலத்தில் உண்டு.  அதே போல் காந்தர்வ விவாஹமும் க்ஷத்திரியர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தது.

சரி, இப்போக் கல்யாணங்களின் வகையைத் தெரிந்து கொண்டு விட்டோம். இந்தக் காலத்தில் பெரும்பாலும் தைவமோ, பிராஜாபத்யமாகவோ தான் திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆகையால் பெண் பார்த்து நிச்சயம் செய்வதிலிருந்து படிப்படியாக ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.


படம் உதவி கூகிளார்: ருக்மிணி, கண்ணன் படம் வெங்கட் நாகராஜ் பதிவிலிருந்து. :)))))

சகுந்தலை படம் உதவி கூகிளார்

எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய குறிப்பு எழுத உதவியது

தெய்வத்தின் குரல்.

20 comments:

  1. ரொம்ப சுவாரசியமான விவரங்கள்.
    இந்த  வகைகள் எல்லாம் ஒரே சமூகத்துள் நடைபெறும் மணங்களுக்கானவை, இல்லையா?
    அந்தக் காலத்தில் கலப்புத் திருமணங்கள் நடக்கவில்லையோவென தோன்றுகிறதே? ஒரு பிராமண ஆண் அ பெண் இன்னொரு சமூகத்தில் மணக்க விரும்பினால்?

    ReplyDelete
  2. அதாவது இரண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன். 

    ReplyDelete
  3. ராக்ஷச விவாகம் பெயர்க்  காரணம் தெரிந்தால் சொல்லுங்க. மற்ற வகைகளின் பெயர்கள் பொருந்துவது போல  இது பொருந்தவில்லை, i think. 

    ReplyDelete
  4. பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது... தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. ஆஸுரம் = வியாபாரம்.

    இந்தக்காலத் திருமண முறைகள் இன்னும் இரண்டு இருக்கின்றனவே...பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைத் திருமணங்கள்...! (கணக்கில் வரணும் இல்லே..)

    ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அது குறித்து விஷயங்கள் தேடி எடுத்துத் தொகுத்துக் கொடுக்கும் உங்கள் டெடிகேஷனைப் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  6. பகுத்தறிவுள்ள யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?

    ReplyDelete
  7. மறையோர் வழக்காகிய நூல்களில் எட்டுவகை மணத்துள், யாழை ஏந்தி இசைத்துறையில் வல்லவர்களாக, என்றும் பிரியாத இணையர்களின் (தலைவன், தலைவி) கர்தர்வ மணத்தைப் போன்றதாகும்.
    அதாவது, களவு கந்தர்வ மணத்தை ஒத்ததாகும்.


    மன்றல் எட்டு:

    பிரமம்- பிரமச்சாரிகளுக்குத் தானமாக்க கொடுப்பது.
    பிரசாபத்தியம்- இரு பெற்றோரும் இசைந்து கொடுப்பது.
    ஆரிடம்- ஆவும் ஆனேறும் வாங்கிக் கொண்டு கொடுப்பது.
    தெய்வம்- வேள்வி ஆசிரியனுக்குக் கொடுப்பது
    காந்தர்வம்- மனம் ஒத்த இருவர் தாமே கூடுவது
    அசுரம்- வில் போட்டியில் வென்றவர்க்குக் கொடுப்பது.
    இராக்கதம்- விருப்பமில்லாத போது வலிந்து கூடுவது.
    பைசாசம்- கள்ளுண்டு மயங்கி கிடக்கும் போதும், தூங்கும் போதும் கூடுவது.
    இதனை வடநூலார் இலக்கியப்படுத்துவர். துணைமையோர் என்பது, ஒருவரை ஒருவர் இணை பிரியாத கர்தர்வர். கர்தர்வ முறை கற்பில்லாமலும் நிகழும். ஆனால், தமிழ் முறையில் கற்பின்றி களவே அமையாது என்று சொல்வார் நச்சினார்க்கினியர்./
    http://arulalantamizh.blogspot.in/2012/09/1-1038-1047.html//

    எங்கள் வீட்டில் உள்ள தமிழ் மொழி அகராதியில் மணம் 8 என்று போட்டு இருக்கும் குறிப்பு:

    மணம் 8: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்,

    இவற்றுட் பிரமசாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பதுபிரமமணம்.

    தலைமகளினத்தாருட் பட்டவளைத்தீமுன்னர்க் கொடுப்பது பிரசாபத்தியமணம்

    ஒன்றிரண்டு பசுமெருதும் வாங்கிக் கொண்டு கன்னியை தீமுன்னர்க் கொடுப்பதாரிடமணம்.

    வேள்வியால் வந்த கன்னியை தீ முன்னர்க் கொடுப்பது தெய்வமணம்.

    கொடுப்பாருங் கேட்பாருமின்றி யிருவருந்தனியிடத்தெதிபட்டுத்தாமே கூடுவது காந்தருவமணம்.

    பெண்ணுக்கு பொன்பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன்வேண்டுவனகொடுத்துக் கொள்வது அசரமணம்.

    பெண்ணும், பெண்ணினத்தாருடன் படாமல் வலிதிற் கொள்வதிராக்கதமணம் துயின்றாளைச் சென்று ஊடுவது பைசாசமணம்.

    நீங்கள் அழகாய் விரிவாக கூறிவிட்டீர்கள்.

    உங்கள் திருமணங்கள் பற்றிய ஆய்வு கட்டுரையில் நானும் சிறு அணில் போல் சேர்ந்து கொள்கிறேன்.









    ReplyDelete
  8. //இந்த காந்தர்வ விவாஹம் என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது துஷ்யந்தனும், சகுந்தலையும் செய்து கொண்ட காந்தர்வ விவாஹம் தான்.//

    இந்த காந்தர்வ விவாஹத்திற்கு பிராஜாபத்தியம் எவ்வளவு முற்போக்கானது என்று துஷ்யந்தனையும், சகுந்தலையையும் குறிப்பிட்டு வேறே, ஒரு பின்னூட்டம் சென்ற பகுதிப் பதிவுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன், பாருங்கள். இந்தப் பகுதி பிரசுரமாவதற்கு முன்பே அது உங்களுக்கு வந்திருக்கும். ஏனோ பிரசுரமாகவில்லை.அதைப் போட்டால் பிராஜாபத்தியத்தை பற்றி ஒரு தெளிவு கிடைக்கும்.

    //இந்தக் காலத்தில் பெரும்பாலும் தைவமோ, பிராஜாபத்யமாகவோ தான் திருமணங்கள் நடைபெறுகின்றன.//

    அதனால் சென்ற பதிவில் உசிதமில்லை என்று சொன்ன பிராஜாபத்யத்தை உசிதம் என்று சொல்லலாம்.

    ReplyDelete
  9. வாங்க அப்பாதுரை, கலப்புத் திருமணங்கள் எக்காலத்திலும் உண்டு. பிராமண ஆண் நான்கு வர்ணத்தவரையும் மணக்கலாம். தடை ஏதும் இல்லை. அதே போல் பெண் விரும்பினால் மாற்று வர்ணத்தவரை மணந்து கொள்ளவும் தடை இல்லை. பிராமணருக்குள் ஜாதிகள் உண்டு என்பது போல் க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தவரிடமும் ஜாதிகள் உண்டு. ஜாதி வேறு வர்ணம் வேறு.

    இரண்டு பெற்றோர் சம்மதம் என்ன? பெற்றோரே மனம் உவந்து கொடுத்த திருமணங்கள் உண்டு. பல ரிஷி பத்தினிகளும் ராஜகுமாரிகளாய் இருந்தவர்களே. வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் தாழ்ந்த குலம் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அது குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை. கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  10. ராக்ஷஸ விவாஹம் என்றதற்குக் காரணம் பெண்ணின் சுற்றத்தாரோடு சண்டை போட்டு ஜெயித்துப் பெண்ணைத் தூக்கிச் சென்று (அவள் சம்மதத்துடனேயாக இருந்தாலும்) கல்யாணம் பண்ணிக் கொள்வதால் என்ற வரையில் தான் கேள்விப் பட்டிருக்கேன். உபந்நியாசர்கள் பலரும் கண்ணன், ருக்மிணி கல்யாணம் ராக்ஷஸ விவாஹம் என்றே சொல்லி இருக்கின்றனர்.

    ReplyDelete
  11. வாங்க டிடி, நன்றி.

    ReplyDelete
  12. ஸ்ரீராம், பாராட்டுக்கு நன்றி. தமிழ் முறைத் திருமணத்தை விட்டுட்டீங்களே! :))))

    ReplyDelete
  13. //பகுத்தறிவுள்ள யாராவது திருமணம் செய்து கொள்வார்களா?//

    @அப்பாதுரை!:))))))in full form! :))))))

    ReplyDelete
  14. கோமதி அரசு, அடுத்த பதிவில் இதைக் குறிப்பிட எண்ணி எடுத்து வைத்திருந்தேன். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. உங்கள் பெயரோடு உங்கள் அனுமதியுடன் இதைப்பதிவாக நாளை பகிர்கிறேன். நன்றி. :)))))

    ReplyDelete
  15. // இந்தப் பகுதி பிரசுரமாவதற்கு முன்பே அது உங்களுக்கு வந்திருக்கும். ஏனோ பிரசுரமாகவில்லை.அதைப் போட்டால் பிராஜாபத்தியத்தை பற்றி ஒரு தெளிவு கிடைக்கும்.//

    சென்ற பதிவில் நீங்கள் கொடுத்த 3 பின்னூட்டங்களையும் வெளியிட்டுவிட்டேன். வேறு ஏதும் இல்லை. ஸ்பாமில் தேடிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. ஸ்பாமிலும் ஏதும் இல்லை ஜீவி சார். முடிந்தால் மறுபடி அனுப்புங்கள். நன்றி.

    ReplyDelete
  17. இதற்கு ஒரு  அகராதி விளக்கம் தேடிப்  பிடித்து.. அபாரம் கோமதி அரசு!

    தமிழ்த் திருமணம் என்னது?
    சுயம்வரம்?

    ReplyDelete
  18. பலரதும் கருத்துக்களுடன் விரிவாகத் தொடர்கிறது.

    ReplyDelete
  19. அப்பாதுரை, தமிழ் முறைத் திருமணங்கள் குறித்து எழுதும்போது சொல்கிறேன். :)))) சுயம்வரம் இல்லை.

    ReplyDelete
  20. மாதேவி, வருகைக்கு நன்றிம்மா.

    ReplyDelete