Saturday, June 15, 2013

நான் எழுதியது கடிதம் அல்ல!!! உள்ளம்! :))))))

காதல் கடிதம் எழுதும் போட்டி அறிவிச்சிருக்காங்க.  வல்லி வெளுத்துக் கட்டறாங்க.  நமக்குக் காதல் கடிதம் எல்லாம் எழுத வராது.  ஆனாலும் நான் முதன் முதலா என் கணவருக்கு எழுதின கடிதம் ஓரளவு நினைவிலிருந்து இங்கே கொடுக்கிறேன்.  அதுக்கு அவர் கொடுத்த பதிலும், போஸ்ட் கார்டில் ஒரே பக்கம், {க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,} அதையும் ஓரளவுக்கு நினைவிலிருந்து தரேன்.  என்ன, கொஞ்சம் வார்த்தைகள் மாறி இருக்கலாம்.


//அன்புள்ள

நமஸ்காரங்கள். உங்களை எப்படி அழைப்பதுனு தெரியவில்லை;  அதனால் அப்படியே விட்டுவிட்டேன்.  இங்கே நீங்கள் ஊருக்குப் போனதிலிருந்து எனக்கு மனசே சரியா இல்லை. ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.  கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலே என்னையும் கூட்டிக் கொண்டு போவீங்கனு நினைச்ச சமயத்திலே நீங்க மட்டும் தனியாப் போக நேர்ந்தது வருத்தமாவும் இருக்கு.  இங்கே வேறு யாரோடும் மனம் விட்டுப் பேச முடியலை.  நான் பேசுவது அவங்களுக்கு எல்லாம் பிடிக்குமானும் தெரியலை.  நிறைய வித்தியாசங்கள் இருக்கு! இங்கே எல்லாரும் இருந்தும் யாருமே இல்லாதது போன்றதொரு வெறுமை என் உள்ளத்தில் ஏற்படுகிறது.

நீங்கள் எப்போது புனாவிலிருந்து வருவீர்கள்?? தீபாவளிக்குக் கூட வரமாட்டீர்கள் என்று பேசிக் கொள்கிறார்களே, உண்மையா? அப்போ இனி உங்களைப் பார்ப்பது எப்போது? கொஞ்ச நாட்கள் எங்க அம்மா வீட்டில் இருந்துவிட்டு வரட்டுமா? வேலைக்கு ஆர்டர் வந்திருக்குனு அப்பா எழுதி இருந்தார்.  அங்கே போய் வேலையில் சேர்ந்துடவா? நீங்கள் போகும்போது என்னையும் அழைத்துப் போயிருக்கலாம்.  விட்டுட்டுப்போயிட்டீங்க. எனக்கு இப்போ உடனே அங்கே பறந்து வந்துடணும் போல இருக்கு.  என்ன செய்யறதுனு புரியலை. மனம் கிடந்து தவிக்கிறது. தண்ணீரிலிருந்து எடுத்துப் போட்ட மீனைப் போல் தவிக்கிறேன். //

கிட்டத்தட்ட இப்படி ஒரு கடிதம் இன்னும் ருசிகரமாக, உணர்ச்சிகரமாகவும் எழுதி நம்ம ரங்க்ஸுக்கு அனுப்பி வைச்சேன்.  முதல் லெட்டர்.  அப்போதைய இன்லான்ட் லெட்டரின் மூன்று பக்கத்திலும் எழுதி இருந்தேன்.  பதில் என்ன வந்தது தெரியுமா?  போஸ்ட் கார்டின் ஒரே பக்கத்தில்,

செள.கீதாவுக்கு,

அநேக ஆசிகள்.  இப்பவும் உன் கடிதம் கிடைத்தது.  ரொம்ப நன்றாகத் தமிழ் எழுதுகிறாய்.  கதை படிப்பது போல் இருந்தது.  அடிக்கடி எழுதிப் பழகு. அவ்விடம் அப்பா, அம்மா, ராஜி, ஶ்ரீதர், கணேஷ் செளக்கியமா?  எனக்குச் சென்னை மாற்றலாகி விட்டது.  இன்னும் ஒரு வாரத்தில் ரிலீவ் செய்வார்கள்.  அங்கே வந்ததும் மெட்ராஸில் குடித்தனம் வைக்க வீடு பார்த்துவிட்டு ஊர்ப்பக்கம் வந்து உங்களை எல்லாம் அழைத்துக் கொண்டு போக உத்தேசம்.  மற்றவை நேரில்.  வேணும் ஆசீர்வாதம்

சாம்பசிவம்.

பி.கு.:--ஆடிட் ரிப்போர்ட் தான் பக்கம் பக்கமாக எழுதுவார். :P :P :P :P  வல்லி ருக்மிணியோட கடிதத்தைப் போட்டிருக்காங்க போல.  போய்ப் படிக்கணும். :)))))

27 comments:

  1. நமஸ்காரங்கள். உங்களை எப்படி அழைப்பதுனு தெரியவில்லை;  அதனால் அப்படியே விட்டுவிட்டேன்.
    ~ ஐயோ! பாவம்!
    பி.கு.:--ஆடிட் ரிப்போர்ட் தான் பக்கம் பக்கமாக எழுதுவார்.
    ~ அடடா! என் அனுதாபங்கள்: ஆடிட்டீகளும், உங்களுக்கும்!

    ReplyDelete
  2. நீங்க எழுதியதாகச் சொல்லும் ’உள்ளம்’ நல்லா இருக்கு.

    இயல்பாகவும், இயற்கையாகவும், யதார்த்தமாகவும் உள்ளது.;)

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. இதுக்குப்போய் ஏன் இவ்வளோ நீள பதில் எழுதி இருக்கார்? :P:P:P:P

    ReplyDelete
  4. நான் திருமணத்துக்கு முன் காதலிக்கும்போது நிறையவே காதல் கடிதங்கள் எழுதுவேன். அநேகமாக அவளிடமிருந்து ஒன்று அல்லது இரண்டு வரிகளில் பதில் வரும்.பதில் வரத் தாமதமானால் இனி எழுதவே மாட்டேன் என்று எழுதுவேன். உடனே பதில் வந்துவிடும்.அப்பாதுரையின் பதிவுக்குப் பின்னூட்டமாக திருமணம் முடிந்து சில நாட்கள் பிரிந்திருந்தபோது எழுதிய கடிதம் இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. அப்போதே கதை வுடுகிறீர்கள் - அதுவும் தமிழில் நன்றாக... என்று அவருக்கு தெரிந்து விட்டது பாருங்கள்... ஹிஹி... இதுவே ஒரு பெரிய பாராட்டு தானே...?

    வேணும் ஆசீர்வாதம் - சூப்பர்...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  6. Yar potti vecchiruka. ithellam solrathu illaiyaa

    ReplyDelete
  7. கடிதம் பிரமாதமா இருக்கு. மாமாவின் பதிலும் அழகாக உள்ளது.

    போட்டியா? விவரம் தெரியலை....

    ReplyDelete
  8. எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம் இந்தப் பதிவை. அட்டகாசம் போங்க.

    (ஹிஹி.. நன்றாகத் தமிழ் எழுதுகிறாய் - நக்கல் தானே? அதுக்கு எத்தனை நாள் அனுபவிச்சாரோ பாவம்..)

    ReplyDelete
  9. ஆஹாஹா... சுவாரஸ்யம்... அடுத்த லெட்டர் எப்போ பிரசுரம் செய்யப் போறீங்க? எங்கள் வீட்டில் உல்டா... நான் விதவித தாள்களில் லெட்டர் எழுத, என் பாஸ் ஓரிரு வார்த்தைகளில் 'முடித்து' விடுவார்!

    அப்போ எல்லாம் 'இப்பவும்' 'வேணும்' வார்த்தைகள் இல்லாமல் லெட்டர் இருக்காது. கூடவே சௌ மற்றும் சி. ஆரம்பங்கள்!

    எல்கே...! 'திடங்கொண்டு போராடு' வலைத்தளம் நடத்தும் சீனு காதல் கடிதம் எழுதும் போட்டி அறிவித்திருக்கிறார்.

    சுட்டி இதோ : http://www.seenuguru.com/

    ReplyDelete
  10. உங்கள் உள்ளம் ச்சோ ச்வீட் கீதாம்மா :)

    ReplyDelete
  11. //ரொம்ப நன்றாகத் தமிழ் எழுதுகிறாய். கதை படிப்பது போல் இருந்தது. அடிக்கடி எழுதிப் பழகு.//

    உங்க எழுத்துகளின் முதல் வாசகர் :-}}}}}

    ReplyDelete
  12. வாங்க "இ"சார், முதல் வருகைக்கும் அனுதாபங்களுக்கும் நன்றி.

    ஆடிட் செய்தவங்களுக்குத் தானே அதைப் பத்தித் தெரியும். :)))))

    ReplyDelete
  13. நன்றி வைகோ சார், அந்தக் கடிதம் இருக்கானு தேடினேன். கிடைக்கலை. கிடைச்சாலும் அப்போல்லாம் இங்க் தானே அழிஞ்சிருக்கும். :)))))

    ReplyDelete
  14. வாங்க வா.தி. அதானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  15. வாங்க ஜிஎம்பி சார், அப்பாதுரையோட பதிவிலே உங்க கவிதையைப் படிச்சேன். நல்லா இருந்தது.

    ReplyDelete
  16. வாங்க டிடி, கதை விடறேனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ! :))))

    ReplyDelete
  17. எல்கே, மடல் பார்த்துட்டீங்க போலிருக்கே! ஸ்ரீராம் வேறே சுட்டி கொடுத்திருக்கார். :)) வெளுத்துக் கட்டுங்க.

    ReplyDelete
  18. வாங்க கோவை2தில்லி, பார்த்தே ரொம்ப நாளாச்சே, வருகைக்கு நன்றி. கீழே ஶ்ரீராம் சுட்டி கொடுத்திருக்கார் பாருங்க.

    ReplyDelete
  19. //(ஹிஹி.. நன்றாகத் தமிழ் எழுதுகிறாய் - நக்கல் தானே? அதுக்கு எத்தனை நாள் அனுபவிச்சாரோ பாவம்..)//

    அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))

    ReplyDelete
  20. ஶ்ரீராம், எப்போவுமே இப்படித் தான் கணவன், மனைவி இருவரில் ஒருவர் கிழக்குனா இன்னொருத்தர் மேற்காத் தான் இருக்காங்க. இருப்பாங்க. இதை அனுபவிக்கத் தெரிஞ்சால் அப்புறமா பிரச்னையே இல்லை. :)))))

    ReplyDelete
  21. வாங்க கவிநயா, நன்றி.

    ReplyDelete
  22. வாங்க அமைதி,

    ஆமாம், அதுக்கப்புறமும் பலமுறை குழந்தைங்களுக்கு நான் கதை சொல்லுவதைப் பார்த்துட்டும் சொல்லி இருக்கார். :)))))

    ReplyDelete
  23. ஆ! ஹா... நமஸ்காரம். சுவாரஸ்யம் சொட்டுகிறது.

    ReplyDelete

  24. //வேணும் ஆசீர்வாதம்//

    சாம்பு மாமா அப்பவே உண்மைய உணர்ந்து இருக்கார் போல.
    :)))))

    நடுவுல இந்த பிராண நாதா எல்லாம் கிடையாதா?

    ReplyDelete
  25. அப்போதைய இன்லான்ட் லெட்டரின் மூன்று பக்கத்திலும் எழுதி இருந்தேன். பதில் என்ன வந்தது தெரியுமா? போஸ்ட் கார்டின் ஒரே பக்கத்தில்,//

    எங்கள் வீட்டிலும் அப்படிதான்.

    நான் இன்லாண்ட் லெட்டரில் மூன்று பக்கமும் நிறைத்து எழுதினால் வருவது நான்கு வரிதான்.

    ReplyDelete
  26. கோமதி அரசு said...
    அப்போதைய இன்லான்ட் லெட்டரின் மூன்று பக்கத்திலும் எழுதி இருந்தேன். பதில் என்ன வந்தது தெரியுமா? போஸ்ட் கார்டின் ஒரே பக்கத்தில்,//

    எங்கள் வீட்டிலும் அப்படிதான்.

    நான் இன்லாண்ட் லெட்டரில் மூன்று பக்கமும் நிறைத்து எழுதினால் வருவது நான்கு வரிதான்.
    விரிவுரையாளரே! விரிவாக எழுதகூடாதா? என்று கேட்டும் வழக்கம் போல் தான் எழுதுவார்கள் ரத்தினசுருக்கமாய்.

    ReplyDelete
  27. //எப்போவுமே இப்படித் தான் கணவன், மனைவி இருவரில் ஒருவர் கிழக்குனா இன்னொருத்தர் மேற்காத் தான் இருக்காங்க. இருப்பாங்க. இதை அனுபவிக்கத் தெரிஞ்சால் அப்புறமா பிரச்னையே இல்லை. :)))))//
    ரொம்ப கரெக்ட்டு!
    நான் ரொம்ப லோட, லோட!நம்ம ரங்க்ஸ் சிரித்தாலே முத்து உதிர்ந்திடும்!

    உங்கள் கடிதம் அச்சு ஒரு பெண்ணின் உள்ளம்; உங்களவரின் கடிதம் ஒரு ஆணின் உள்ளம்!

    ReplyDelete