Monday, November 03, 2014

வைகோவின் விமரிசனப் போட்டியின் நிறைவில் கிடைத்த பரிசு!

மூன்றாம் பரிசு


மேலுள்ள சுட்டியில் இந்த விமரிசனத்துக்கு மூன்றாம்பரிசு கிடைத்திருப்பது தெரிய வரும்.

இந்தக் கதையைக் கொஞ்சம் புதுமாதிரியாக எழுதி உள்ளார் ஆசிரியர். கதாநாயகன் காணும் கனவுகளே கதையின் அடித்தளம். கதாநாயகன் ஒரு மனநல மருத்துவர். அப்படி இருந்தும் அவருக்கும் கனவுகள், அதன் தொடர்பான நிகழ்வுகள் என வருகின்றன.  இது என்ன தான் படித்தாலும், அறிவு வேலை செய்தாலும் சில உணர்வு பூர்வமான விஷயங்களில் அதிலும் காதல் விஷயத்தில் மனிதன் மாறுவதே இல்லை என்பதைக் காட்டுகிறது. இதற்கெனக் காரண, காரியங்களை விளக்குவதும் கடினம்.   கதையை நான்கு பாகங்களாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். நான்குமே வெவ்வேறு நிகழ்வுகளைச் சுட்டுகிறது.

முதல் பகுதியில் படித்தால் உண்மையான கணவன், மனைவியின் உரையாடலாகவே காட்சி தருகிறது.  நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியிடமும், தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையிடமும் அளவற்ற பாசம் வைத்திருக்கும் கணவனாகக் காட்சி தருகிறான் கதாநாயகன் மனோ.  சில இடங்களில் அவன் நடத்தை மிகையாகவே தோன்றினாலும் இப்படியும் சிலர் இருப்பார்கள்; அல்லது இருக்கின்றனர் என மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும்.  ஆனாலும் என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் பித்துக்குளித் தனமாகவே தெரிகிறது. ஏதடா, மனைவிக்குப் பிரசவத்திற்கான நாட்கள் நெருங்குகிறதே, அவளுக்குத் தொந்திரவு கொடுக்காமல் இருப்போம்னு இல்லாமல், கொஞ்சுகிறேன் பேர்வழினு  ரொம்பவே வழிகிறாரோனு தோணுது.  அந்த அனுவும் கண்டிச்சுப் பார்த்துட்டு ஒண்ணும் முடியலைனு விட்டுடறாங்க போல! அல்லது அவங்களுக்கும் இதெல்லாம் ரசனையாக இருந்திருக்கலாம்.  இந்தக் காலத்தில் பல்வேறு தொலைககாட்சித் தொடர்கள், திரைப்படங்கள்னு பார்த்துட்டு எல்லோருமே அதிலே வரும் நாயக, நாயகியர் மாதிரி தான் வாழ்க்கையும் என்ற கனவில் இருக்கிறார்களோ என்னமோ!  யதார்த்தம் வேறே என்னும் உண்மை புரியலை என்றே நினைக்கிறேன். இப்படி எல்லாம் மனைவியைத் தொந்திரவு செய்யும் கணவன் அவளுக்குப் பிரசவ வலி என்றதும் பதறுகிறான்.

ஆனால்!!!!!!!!  இந்த ஆனாலில் தான் கோபு சார் கதையில் முடிச்சுப் போடுவதில் வல்லவர்னு நிரூபிக்கிறார். சரியாக இந்த நேரத்தில் விழிப்பு வருகிறது மனோவுக்கு.  ஆம்! மேலே சொன்ன அத்தனையும் கதாநாயகன் மனோ கண்ட கனவாம்! கனவில் இப்படி எல்லாம் வருமா என்றால் வருமே என்கிறான் இந்தக் கதாநாயகன்.  இளைஞனான மனோ மனநல மருத்துவமனையின் இளம் பயிற்சியாளராகச் சேர்ந்திருக்கும் மருத்துவர் என்றும் கதாநாயகி அனுவின் வீட்டு மாடியில் குடி இருப்பவன் என்றும் தெரிய வருகிறது.  அதோடு கதாநாயகன் இந்த அனு என்னும் இளம்பெண் தினம் தினம் வாசலில் கோலம் போடுவதை மாடியில் இருந்து பார்த்து ரசிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதும், அவளை நன்றாக நெருக்கத்தில் பார்த்து ரசிப்பதற்காக ஒரு பைனாகுலர் வேறு வாங்கி வைத்திருக்கிறான் என்பதும் தெரிய வருகிறது. உள்ளூர அனுவின் கோலத் திறமையையும் கண்டு ரசிப்பதோடு வியப்பாகவும் இருக்கிறது அவனுக்கு.  இவளுக்குக் கோலப் பைத்தியமோ என அவன் நினைக்கும் அளவுக்கு அவள் கோலத்தில் ஈடுபாடு காட்டுகிறாள்.

ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் பார்ப்பது, ரசிப்பது குற்றம் என்றே சொல்ல வேண்டும்.  அதிலும் பைனாகுலர் வைத்துக் கொண்டு அணு அணுவாகப் பார்த்து ரசிப்பது என்பது சரியாகத் தெரியவில்லை.  ஆண்களின் சுபாவமே இது தான் என்று ஆகிவிடாதோ! அதிலும் இது அந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்தால் அவள் மனம் புண்படுமே!  துடித்துப் போய்விடுவாள். என்னதான் காதல் என்றாலும் இவ்வளவு படித்து மனோதத்துவ மருத்துவராகப் பல்வேறு மனநல நோயாளிகளை தினம் தினம் சந்திக்கும் மனோவுக்கு ஒரு இளம் பெண்ணின் மனோநிலையும் புரிந்திருக்கணும். அவளை ரகசியமாய்ப் பார்த்து ரசிப்பது சரியல்ல என்றும் தோன்றி இருக்கணும். ஆனால் நாம் தான் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும்  நிறையப் படித்தவர்களே மிக மோசமாக நடந்து கொள்வதைப் பார்க்கிறோம்.  இங்கே விபரீதமாக ஒன்றும் நடக்கவில்லை எனத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியது தான். என்றாலும் ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இது போகட்டும்!  மனோவோ தன்னையும் அறியாமல் அனுவைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். அதே போல் அவளும் தன்னைக் காதலிக்கிறாள் என்றே அவள் நடவடிக்கைகள் மூலம் மனோவுக்குத் தோன்றுகிறது.

இங்கே தான் ஆசிரியர் அடுத்த முடிச்சை வைத்திருக்கிறார். இத்தனை அழகும், திறமையும் வாய்ந்த அனுவுக்கு வாய் பேச முடியாது என்பதை அவள் தாயின் மூலம் அறிந்து கொள்ளும் மனோவுக்கு இந்தக் குறையின் காரணமாக அவள் மேல் அதிக ஈடுபாடே தோன்றுகிறது. இதற்காகவெல்லாம் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியாது என்பதையும் அவன் உணர்கிறான். அப்போது தான் அனுவின் தாய் அங்கே வந்து அனுவுக்குச் செய்திருக்கும் கல்யாண ஏற்பாடுகளையும், மறுநாள் பிள்ளைவீட்டார் வரும்போது மனோ வந்து உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து மனோவின் ஆசையின் மேல் குண்டைத் தூக்கிப் போட்டு விடுகிறாள்.  என்றாலும் தன் காதலி அனு வாழ்க்கைப்பட்டுப் போகும் இடம் நல்ல இடம் தானா என அவள் தாய் விசாரித்தாளா என அந்த நிலையிலும் அவனுக்குக் கவலை.  அதை விசாரித்துத் தெரிந்து கொள்கிறான். நல்ல இடம் தான் என அவள் தாய் சொன்னாலும் இரவில் அவனுக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவித்து வெகுநேரம் கழித்துத் தூங்குபவன் காலை எழுந்தவன் தன் தினசரி வழக்கப்படிக் கோலம் போடும் அனுவைப் பார்க்கிறான்.

இன்னொருத்தன் சொத்தாகப் போகும் அனுவைக் கோலம் போடும்போது வருத்தத்துடனேயே பார்த்து ரசிக்கும் மனோவுக்குச் சற்று தூரத்தில் இருந்த புதரில் இருந்து வந்த ஒரு கருநாகம் அனுவின் முதுகின் பின்னால் படமெடுத்து ஆடிக் கொண்டு கொத்தத் தயாராக இருப்பது தெரியவர  மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கீழிறங்கிப் போய் அனுவைத் தூக்கி நகர்த்துகிறான். திடீரென மாடியில் குடி இருக்கும் வாலிபன் தன்னைத் தொட்டுத் தூக்கியதோடு இல்லாமல் தன்னெதிரே அவனால் சுட்டிக்காட்டப்பட்டக்  கருநாகத்தையும் கண்ட அனு அதிர்ச்சியில் வாய் திறந்து "அம்மா" என்று கத்த மனோவுக்கு அவள் பேச ஆரம்பித்ததைக் கண்டு ஆச்சரியம் ஏற்பட அவனும் கத்தி விடுகிறான். இருவரின் சத்தத்தில் ஊர் கூட, நடந்தது அறியாத ஊர் மக்கள் அனுவை மனோ தொட்டுத் தூக்கியதைத் தப்பு எனப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்களாம். இந்த இடம் தான் புரியலை எனக்கு!  அவர்களுக்கு அனுவோ, மனோவோ சொல்லாமல் அனுவை அவன் தொட்டுத் தூக்கியது எப்படித் தெரிய வந்தது?  அது தான் போகட்டும் என்றால் இக்கட்டான நிலையில் தூக்கியதைத் தப்பு என எப்படிச் சொல்ல முடியும்?


ஒன்று மனோவாவது வாய்விட்டு இந்த மாதிரி நிலைமை எனச் சொல்லி இருக்கணும்;  அல்லது அனுவாவது தன்னைக் கருநாகம் கொத்த வந்ததையும் மனோ காப்பாற்றியதையும் அந்த அதிர்ச்சியில் தனக்குப் பேச்சு வந்ததையும் தெளிவாக அவள் தாயிடமாவது சொல்லி இருக்கணும்.  அனுவால் பேசமுடியாத சூழ்நிலை எனக் கதாசிரியர் சொல்லி இருந்தாலும் என்னால் அதை ஏற்க முடியவில்லை. என்ன காரணம்னு தெரியாமல் அவளும் வாய் மூடி மௌனியாக இருக்க, மனோவும் மௌனம் காக்க, பஞ்சாயத்தில் மனோவுக்கு அடி, உதை எனத் தீர்ப்பு வர மனோ மனம் நொந்து போகிறான்.  ஆனால்

ஹிஹிஹி, இங்கே தான் அடுத்த கடைசி முடிச்சு.  அதுவும் உடனடியாக அவிழ்க்கப்படுகிறது. பாம்பு அனுவைக் கொத்தத் தயாராக இருந்த காட்சியை மனோ தன் கனவில் கண்டானாம். அது மட்டுமா? மனோ காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலிக்குமாம்.  முதலில் மனோவுக்கு மனோதத்துவ மருத்துவம் பார்க்கணுமோனு தோணுது! :)  ஆனால் மனோவின் தாய். தந்தையர் மரணம், அவன் நெருங்கிய நண்பனின் படிப்பு போன்ற விஷயங்களில் மனோவின் கனவு பலித்திருக்கவே இதுவும் பலிக்குமோ என்னும் எண்ணத்தில் தீர்மானமாக இருந்த மனோ அனுவைப் பெண் பார்க்க வருபவர்களைப் பார்த்துப் பேசவும், அனுவின் தாய்க்கு உதவிக்குச் செல்லவும் தன்னைத் தயார் செய்து கொள்கிறான். சற்று நேரத்தில் பிள்ளை வீட்டார் அனுவைப் பார்க்க வருகிறார்கள்.

வந்தவனோ ஏற்கெனவே மனோவுக்கு அறிமுகம் ஆன சமூக விரோதி ஒருவன். சென்னையைச் சேர்ந்த நாகப்பா என்னும் பெயருள்ள அவன் ஏற்கெனவே இரு முறை திருமணம் ஆனவன் என்பதும் மனோ அறிந்திருந்தான். உடனடியாக அனுவின் அம்மாவைத் தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திவிடுகிறான்.  வந்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்ப, இந்த நாகப்பா வரப் போவதைத் தான் சூசகமாகத் தன் கனவில் கருநாகமாகத் தான் கண்டிருப்பதாகவும், நல்ல சமயத்தில் அனுவை இந்தப் பொல்லாத திருமண பந்தத்தில் இருந்து காப்பாற்றிய தான் முயற்சி செய்தால் அனுவைக் கூடிய சீக்கிரம் பேச வைக்கலாம் என்றும் இனி அவளைத் தான் மணக்கத் தடை ஏதும் இராது எனவும் எண்ணிய மனோ மனது மகிழ்ச்சியில் தீபாவளி மத்தாப்புப் போல் ஒளிவீசிப் பிரகாசிக்கிறது.  மேலும் அனுவைக் குறித்துத் தான் கண்ட கனவுகள் அனைத்தும் பலிக்கப் போகிறது என்றும் புரிந்து கொண்டான். அதாவது அனுவைக் கல்யாணம் செய்து கொண்டு பிள்ளைத்தாச்சியான அவளுடன் தான் கழித்த இனிமையான நினைவுகளைக் கொண்ட கனவு உட்பட உண்மையாகப்  போவதை எண்ணி சந்தோஷம் அடைகிறான்.  அதற்கேற்றாற்போல் மறுநாள் அனு இதயவடிவக் கோலம் போட்டு அவனுக்கு நன்றியும் தீபாவளி வாழ்த்தும் சொல்லி இருந்தாள். அனுவின் மனம் அந்தக் கோலத்தின் வழியே தனக்குத் தெரிந்துவிட்டதை எண்ணிக் குதூகலிக்கிறான் மனோ.

இனி என்ன?  டும் டும் டும் தான்.  மேளம் கொட்டி, நாதஸ்வரம் ஊதத் தாலி கட்ட வேண்டியது தான். பொதுவாகப் பார்த்தால் வெகு சாதாரணக் கதையாக இருக்கிறது.  ஆனால் மனோவை ஒரு மனநல வைத்தியராகக் காட்டியதன் மூலம் மன நல மருத்தவரானாலும் அவருக்கும் மனம் சொந்தக் கட்டுப்பாட்டில் இயங்காது; அவருடைய உணர்வுகளுக்கும், சாமானியர்களின் உணர்வுகளுக்கும் வித்தியாசம் இல்லை என நிரூபிக்கிறாரோ? காதல் என்பது பொதுவான ஒன்று!  ஆகவே மனோ காதல் கொண்டதில் தப்பில்லை;  காதல் பலிக்கும் என்று  உறுதி கொண்டதிலும் தப்பில்லை.  ஆனால் தான் கண்ட கனவுகள் பலிக்கின்றன என்று சொல்வது மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது. கனவுகளைக் குறித்து மனநல மருத்துவர்கள் ஆய்வுகள் பல செய்திருக்கின்றனர். ஆகவே  மனநல மருத்துவன் ஆன மனோ தன் உள் மனதின் ஆழத்தை இன்னொரு அனுபவசாலியான மனநல மருத்துவர் உதவியுடன் கண்டறிந்திருக்க வேண்டுமோ?   ஒரு மனநல மருத்துவருக்கே உரிய நிதானமும், விவேகமும் மனோவிடம் காண முடியவில்லை என்றே தோன்றுகிறது.

கதையின் முடிவை நம் யூகத்திற்கே ஆசிரியர் விட்டிருக்கிறார்.  ஆனாலும் ஏதோ ஒரு குறை அல்லது நெருடல் தென்படுகிறது. என்ன என்று தான் புரியவில்லை.  சம்பவச் சேர்க்கைகள் கொஞ்சம் செயற்கையாக இருப்பது போலும் தெரிகிறது.  இயல்பாகக் கண்ணெதிரே பார்க்கும் சம்பவங்களைக் கோர்த்துக் கதை பின்னுபவர் இந்தக் கதையைக் கற்பனை உலகில் சஞ்சரித்த வண்ணம் எழுதி இருக்க வேண்டும்.  ஆனால் கனவுகளையும் உண்மையையும் வேறுபடுத்திக் காட்டி இருப்பதும் கதாசிரியரின் திறமை என்றே சொல்லவேண்டும். 

31 comments:

  1. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இதனை இங்கு தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  2. //"வைகோவின் விமரிசனப் போட்டியின் நிறைவில் கிடைத்த பரிசு!"//

    தலைப்பு நிறைவாகத்தான் உள்ளது.

    வெற்றிவிழா இன்னும் நிறைவடையவில்லை.

    மேலும் சில விருதுகள் [பரிசுகள்] தங்களுக்கே கிடைக்கலாம் அல்லவா ! :)

    அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  3. //ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் பார்ப்பது, ரசிப்பது குற்றம் என்றே சொல்ல வேண்டும்.//

    பார்க்காமல் ரசிக்காமல் இருப்பது மட்டுமே மாபெரும் குற்றம் என பல ஆண்களின் [ஏன் .... பெண்களின்] மனசாட்சிகள் தெரிவிக்கின்றனவாக்கும். :)))))

    மனித மனங்களின் உண்மையான கிளுகிளுப்பான பிரதிபலிப்புகளே இந்த என் கதையாக்கும். :)))))

    VGK

    ReplyDelete
  4. //ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் பார்ப்பது, ரசிப்பது குற்றம் என்றே சொல்ல வேண்டும்.//

    பார்க்காமல் ரசிக்காமல் இருப்பது மட்டுமே மாபெரும் குற்றம் என பல ஆண்களின் [ஏன் .... பெண்களின்] மனசாட்சிகள் தெரிவிக்கின்றனவாக்கும். :)))))

    மனித மனங்களின் உண்மையான கிளுகிளுப்பான பிரதிபலிப்புகளே இந்த என் கதையாக்கும். :)))))

    VGK

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்! மனமுவந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete

  6. விமரிசனம் என்றால் கதாசிரியரின் கற்பனையைக் குறை கூற வேண்டுமா.? பரிசுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாங்க வைகோ சார், நன்றி நான் தான் சொல்லணும். இன்னிக்கும் விருது அறிவிப்பைப் பார்த்தேன். என்ன சொல்றதுனே தெரியலை.

    ReplyDelete
  8. மனிதமனங்கள் கிளுகிளுப்புக்கு அலைவதைத் தப்பெனச் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரை மனைவியே ஆனாலு தெரியாமல் இப்படிப் பார்த்து ரசிப்பதை ஏற்க முடியவில்லை. இது என் கருத்து. :)))))

    ReplyDelete
  9. நன்றி துளசிதரன் தில்லையகத்து.

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், கற்பனையோ, நிஜமோ கதையோடு ஒத்திருக்க வேண்டும் அல்லவா? பொதுவாகவே வைத்தியர்கள் மனோதிடம் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இங்கே உணர்வுகள் சிறகடித்து அல்லவோ பறக்கின்றன???????

    ReplyDelete
  11. அருமையாக ஆழமாகச் சிந்தித்து எழுதிய
    விரிவான விமர்சனம் அருமை
    நிறையத் தெரிந்து கொண்டேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மனம் நிரந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ஜி எம் பி ஸார் கேட்பது சரிதானே? :))))

    ReplyDelete
  13. மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ஜி எம் பி ஸார் கேட்பது சரிதானே? :))))

    ReplyDelete
  14. மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ஜி எம் பி ஸார் கேட்பது சரிதானே? :))))

    ReplyDelete
  15. நான் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்பொழுது ( ஏன் நமது ஸ்ரீ ரெங்கனை வைரமுடியோடு சேக்கச்செல்லும்பொழுது கூடத்தான்!) கையில் பைனாகுலரை எடுத்த்துச் செல்லும்

    வழ்க்கம்..ஒரு முறை சென்னை R R Sabha-வில் பத்மா சுப்ரமணியம் அவர்களின் நாடன் நிகழ்ச்ச்சியின்

    பொழுது எனது,பக்கத்‌தில் அமர்திருந்த எனது நண்பர் நல்ல powerful-லான ( Foresrt ranger களிடம்உள்ளது)

    பைனாகுலரை கொடுத்த்துபார்க்கச்சொன்னார், "நன்றாக்த்த்தெரிகிறதா ?" என்றும் கேட்டார் ;' தெரிகிறதாவது

    எழும்பே தெரிகிறது ! ' என்று கூறிவிட்டு பைனாகுலரைதிருப்பிக்க்கொடுnத்தேன் ; ஏன் திருப்பிக்கொடுத்த்துவிட்டீர்கள் என்று கேட்டார் ..நான் ' ஓர்; அந்நிய ஸ்த்ரீயை இவ்வளவு நெருக்கமாகப்

    பார்க்க எனக்கு கூசுகிறது ;குற்ற உணர்வுஉண்டாகிறது', என்று கூறியதும் நண்பரும் என் கூற்றை

    மதித்த்து பைனாகுலரை பைக்குள் வைத்த்து விட்டா..--;தங்களுடைய பார்வை(observation)சரியானதே...

    மாலி

    ReplyDelete

  16. பரிசில் பெற்றமைக்கு
    எனது வாழ்த்துகள்!

    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  17. வாங்க ரமணி சார், வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வாங்க ஶ்ரீராம், கதைக்கு விமரிசனம் என்பது வெறும் பாராட்டாக இருக்காமல் கதாசிரியரின் கோணத்திலேயும் சிந்தித்துப் பார்த்து எந்த இடத்தில் இடறி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டுவதும் தான். சும்மா பாராட்டுக்களை மட்டும் தெரிவித்தோமானால் அவரின் எழுத்துத் திறமை மேம்பட நாம் உதவி செய்தவர்கள் ஆக மாட்டோம். குறைகளையும் சுட்டினால் தான் எழுத்து மேலும்மேம்படும். இதை வைகோ சார் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். அதே சமயம் அவர் கருத்துகளில் உறுதியாகவும் இருக்கிறார்.

    ReplyDelete
  19. வாங்க மாலி சார், உங்க கருத்துக்கு மிக்க நன்றி. நம் வீட்டுப் பெண்களை வேறொரு ஆண் அல்லது நம் சொந்தப் பெண்ணையே நம் சொந்த மாப்பிள்ளை இம்மாதிரி பைனாகுலர் மூலம் பார்ப்பதை நம்மால் ஏற்க இயலுமா? நிச்சயமாய் முடியாது.

    ஒரு ஆணாக ஆணின் பார்வையில் இது சரியாக இருக்கலாமோ என்னமோ! என்றாலும் இது குற்றமே! ஆனால் விமரிசனம் பண்ணியவர்களில் பலரும் இதை ஒரு குறையாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றனர்.

    ReplyDelete
  20. வாங்க காசிராஜலிங்கம், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் மேடம். அழகாய் அலசி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் மேடம். அழகாய் அலசி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  25. கனவையும் நனவையும் கலக்குற கதை. சாமர்த்தியமாக சமாளிச்சிருக்காருனு சொல்லலாம். பைனாகுலர்ல பெண்ணைப் பாரக்குறது அநாகரீகம்னாலும் அப்படி தோணாத்தற்குக் காரணம் அதுக்கு முன்னால வந்த கனவு சீன்ல ரெண்டு பேருக்கும் இருந்த நெருக்கம்.

    ReplyDelete
  26. வைத்தியர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா? ஏன்?

    ஆகா ஓகோ என்று பாராட்டினால் கதாசிரியரின் கற்பனையை(யும்) பாராட்டுவதாகத் தானே பொருள்? விமரிசன உரிமையில் இரண்டுமே சேர்த்தி தான்.

    நிற்க, கதை இப்படி இருந்திருக்கலாம்னெல்லா்ம் சொன்னா நடுவருக்கு பிடிக்காது.

    (நடுவர் டூட்டி முடிஞ்சுதா இல்லையா? தோளை விட்டு கீழே இறங்கலாமா?)

    ReplyDelete
  27. வாங்க கோமதி அரசு, நன்றிங்க.

    ReplyDelete
  28. மோகன் ஜி, முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. உங்களை விடவா அலசி விட்டேன்?

    ReplyDelete
  29. மோகன் ஜியோட தத்தி ஒண்ணு போதுமே! :))))

    ReplyDelete
  30. @வம்பாதுரை, கனவில் கண்டது கணவன், மனைவியின் நெருக்கம். பைனாகுலரில் பார்த்தது நிஜத்தில் நடந்தது(கதைப்படி) அது எப்படிப் பொருந்தும்? :)))))

    ReplyDelete
  31. @வம்பாதுரை,

    //வைத்தியர்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா? ஏன்?//

    டாக்டர் ரங்காச்சாரியில் இதைக் குறிப்பிடும் உண்மை நிகழ்ச்சி ஒன்றைக் குறித்து ராஜம் கிருஷ்ணன் எழுதி இருப்பார். படித்திருக்கிறீர்களானு தெரியவில்லை. இப்போவும் இங்கே தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் கதாநாயகியுடன் ஆன தனிப்பட்ட விரோதத்துக்காக மருத்துவர் கதாநாயகன் ஆன அவள் கணவனுக்கு மருத்துவம் செய்கையில் பழிவாங்குவது குறித்தெல்லாம் காட்டறாங்க. நொந்து நூலாகி விடுவேன்! :( என்னத்தைச் சொல்றது!

    //ஆகா ஓகோ என்று பாராட்டினால் கதாசிரியரின் கற்பனையை(யும்) பாராட்டுவதாகத் தானே பொருள்? விமரிசன உரிமையில் இரண்டுமே சேர்த்தி தான்.//

    வைகோ சார் எதையுமே சரியான கோணத்தில் பார்ப்பவர் என்பதால் தான் தைரியமாகக் குறைகளையும் சொல்ல முடிகிறது. மற்றபடி ஒரு நூலை வைத்துக்கொண்டே ஒன்பது கஜம் புடைவையை நெய்வதில் அவர் மிகச் சமர்த்தர் என்பதில் சந்தேகமே இல்லை. :))))

    //நிற்க, கதை இப்படி இருந்திருக்கலாம்னெல்லா்ம் சொன்னா நடுவருக்கு பிடிக்காது.//

    இதைப் பற்றி அவரிடம் தான் கேட்கணும். ஆனால் அந்தக் கதையின் முக்கியக் கருவை வைத்து வேறு மாதிரியாகக் கதை பின்னலாமே! அதை விமரிசனமாகச் சொல்ல முடியாது தான். ஆனால் வித்தியாசமாக எழுதலாம். :))))

    ReplyDelete