Monday, December 22, 2014

திருப்பாவைக்கோலங்கள் ---2

பாடல் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

வில் கோலம் அல்லது சங்குக் கோலம்,  வலம்புரிச் சங்கைக் குறிப்பிட்டிருப்பதால் சங்குக் கோலம் பொருத்தம்.




அல்லது சக்கரமும் சங்கும் சேர்ந்த கோலமும் பொருத்தம். மழைப் பிறப்பைக் குறித்து அந்தக் காலத்திலேயே கூறி இருக்கும் ஆண்டாள் இங்கே கண்ணனை அழைக்கிறாளா, மேகத்துக்கு அதிபதியான இந்திரனை அழைக்கிறாளா என்பது குறித்துக் கருத்து வேறுபாடு இருந்தாலும் எல்லாவற்றிலும் கண்ணனின் கரிய திருவுருவையே கண்ட ஆண்டாள் மழையைப் பொழிவிக்கும் கருமேகக் கூட்டங்களிலும் கண்ணனையே காண்கிறாள். ஆகவே கண்ணனின் கைச்சக்கரம் போலவும், அவன் ஊதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் போலவும் இடியையும் மின்னலையும் ஒப்பு நோக்குகிறாள்.  சக்கரம் மின்னுவதைப் போன்ற மின்னலும் பாஞ்சஜன்யத்தின் ஒலியைப் போன்ற இடி முழக்கமும் கேட்கும்படி மழையைப் பொழிவித்து இவ்வுலகின் நீராதாரத்தைப் பெருக்கி அனைவரையும் வாழ வை என்கிறாள் ஆண்டாள்.

பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்







மலர் தூவி எம்பெருமானைத் தொழப் போவதால் மலர்க்கோலம் பொருத்தம்.

மலர் தூவி எம்பெருமானைத் தொழச் சொல்லுகிறாள் ஆண்டாள்.  ஆயர் குலத்தின் அணி விளக்கைத் தன் பிறப்பின் மூலம் தேவகியின் கருவறையில் பத்துமாதங்கள் இருந்ததால் அதன் மூலம் அவளைப் பெருமைப் படுத்தியவனும், பின்னர் கோகுலம் வந்து யசோதையிடம் வளர்ந்தவனுமான கண்ணனின் புகழை நாம் எப்போதும் வாயினால் பாடுவதோடு மட்டுமில்லாமல் மனதில் வேறு சிந்தனை இல்லாமல் கண்ணனைக் குறித்தே சிந்திக்க வேண்டும் என்கிறாள்>


பாடல் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்



பறவைகளின் கீச்சொலி கேட்டு எழச் சொல்வதால் பறவைகளைக் கோலத்தில் வரையலாம்.  கிளி, மயில், புறா போன்றவற்றைக் கோலத்தில் கொண்டு வரலாம்.

புள்களுக்கெல்லாம் அரையன் ஆன கருடன், பறவைகளின் அரசன் என்கிறாள் ஆண்டாள் கருடனை. அத்தகைய கருடனைத் தன் வாகனமாகக் கொண்ட எம்பெருமான் கோயிலில் சங்கங்கள் ஆர்த்தன!  பூதகி என்னும் அரக்கியின் நச்சுப்பாலை உண்டு அவளுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தவனும் சகடாசுரனை வதைத்து அவனுக்கும் மோக்ஷம் அளித்தவனும் ஆன பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமானை முனிவர்களும் யோகிகளும் "அரி" என்று அழைக்கின்றனர்.  அந்தக் குரலைக் கேட்டாவது எழுந்திரு தோழி எனத் தோழியை எழுப்புகிறாள் ஆண்டாள்.

10 comments:

  1. ம்.......

    கோலம் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஓசிக் கோலம் அழகாய்த் தான் இருக்கும். :)))) ஆனால் நான் ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போவெல்லாம் கூட விடாமல் கலர்க் கோலம், கலரில்லாத கோலம், கிறிஸ்துமஸ் அன்னிக்கு கிறிஸ்துமஸ் தாத்தா கோலம் என்றெல்லாம் போட்டிருக்கேன். இப்போத் தான் முடியலை! :( அம்பத்தூரில் போட்ட அளவுக்கு இல்லைனாலும் சின்னதாகவானும் போடமுடியுமானு பார்க்கிறேன். :(

      Delete
  2. கோலமும் பாவை விளக்கமும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் நன்றி.

      Delete
  3. கோலங்களும் பாடல் விளக்கங்களும் மிக அழகு கீதா.

    ReplyDelete
  4. சங்குக் கோலம் அருமை. பாட்டிற்குத் தகுந்தாற்போல கோல செலெக்ஷன் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, பாராட்டிற்கு நன்றி. கோலம் எல்லாம் இரவல்.

      Delete
  5. அனைத்து விளக்கங்களும் அருமை அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றிப்பா.

      Delete
  6. கோலங்களும், பாடல் விளக்க்மும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete