Saturday, January 10, 2015

திருப்பாவைக் கோலங்கள்!

பாடல் 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

 


  


இங்கே கண்ணனின் சங்குக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் சங்குக் கோலம், சங்குச் சக்கரக் கோலம் போடலாம். அதோடு விரதம் முடிக்கையில் பெருமானைத் துதிக்க வேண்டி நாம் வைத்திருக்க வேண்டிய முக்கியப் பொருட்களான விளக்கு, கொடி, விதானம் போன்றவற்றையும் கண்ணனையே கொடுக்கச் சொல்கிறாள் ஆண்டாள். ஏனெனில் இவ்வுலகத்தின் அனைத்துப் பொருட்களும் இறைவன் நமக்குத் தந்த மாபெரும் கொடை.  இதில் நம்முடையது என எதுவும் இல்லை.  எல்லாம் அவன் கொடுத்தவை.  ஆகவே இந்தப் பொருட்களைச் சேகரம் செய்யும்போது கூட நம்முடையது என்னும் எண்ணம் வராமல் பெருமான் கொடுத்தவை என்னும் எண்ணத்துடனேயே சேகரம் செய்து அவனுக்கு அர்ப்பிக்க வேண்டும்.

ஆயிற்று. விரதம் முடியும் நாள் நெருங்கி விட்டது. பாஞ்சஜன்யம் என்னும் சங்கினால் எதிரிகளை எல்லாம் நடுங்க வைத்தான் கண்ணன்.  அந்தச் சங்கை எடுத்து அவன் ஊதினாலே எதிரிப்படைகள் நடுநடுங்கும்.  அத்தகைய பெரிய வலம்புரிச் சங்குகளையும், கொடி, விதானங்கள், தோரணங்கள் ஆகிய அனைத்தையும்  அவனிடமிருந்தே பெற்று பெருமானுக்குப் படைத்து அருளுமாறு வேண்டுகிறாள்.  அதோடு இல்லாமல் இவர்களுக்குத் துணையாகப் பெரியோரும் வந்து கண்ணன் மேல் பல்லாண்டு இசைக்கக் கேட்கிறாள்.


பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

     


இன்று விரதம் முடிந்து நெய், பால் சேர்த்துப் பொங்கல் படைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணும் நாள். ஆகையால் பொங்கல்பானைக் கோலம் போடலாம்.  பொங்கல் இன்னும் பண்ணவில்லை.  பண்ணினால் படம் எடுத்துப் போடுகிறேன். :)  இன்றைய தினம் மதுரைப் பக்கமெல்லாம் கூடாரவல்லித் திருநாள் என்று விழாவாக நடக்கும். அனைவருமே இன்று சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதனம் செய்து அனைவருக்கும் கொடுத்து உண்பார்கள்.

கூடாரை வெல்லும் என்பது இங்கே நாம் நம்முடன் சேர்க்கக் கூடாதவரான தீயோரைக் குறிக்கும்.  அதோடு நம்மிடம் இருக்கக் கூடாதனவான தீய எண்ணங்களையும் குறிக்கும். இவற்றை வெல்ல வேண்டுமானால் கண்ணன் அருள் வேண்டும்.  அவன் அனைத்தையும் கடந்தவன்.  அனைத்தையும் வென்றவன்.  ஆகவே அந்த கோவிந்தனைப் பாடிப் புகழ்ந்து ஏத்தினோமானால் நமக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்.  கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவளையம் எனப்படும் அணிகலன், காதில் அணியும் தோடு, செவிப்பூ, காலுக்கு அணியும் பாடகம் எனப்படும் அணிகள் அனைத்தும் கிடைக்கும்.  இங்கே கைகளினால் தாளம் போட்டுக் கொண்டு, தோளுக்கு மேல் கைகளை உயர்த்திப் பெருமானைக் கும்பிட்டு, நாவினால் அவன் நாமாவைத் துதித்து, காதுகளினால் அவன் நாமாவைக் கேட்டு, கால்களினால் அவன் இருக்குமிடம் சென்று அவனையே சரணம் என அடைந்து முக்தி பெறுவதைக் குறிக்கும்.

அதோடு பால் சோற்றில் மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் என்பது அனைவருமாகச் சேர்ந்து இறைவனின் பிரசாதத்தைப் பகிர்ந்து உண்பதையும் குறிக்கும்.  அதே சமயம் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன் திருவடியை நினைத்து அவனையே சரணம் என அடைந்தோமானால் நமக்கு அமிர்தமே கிட்டும்.  அந்த அமிர்தத்தையும் நாம் நம்முடன் கூட வரும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டே பருக வேண்டும். என்ன தான் இவ்வுலகத்து சுகங்களான உணவு, உடை, பொருட்செல்வம் எல்லாம் அடைந்தாலும் கடைசியில் கண்ணன் திருவடிகளைச் சரணடைவதே நித்திய சுகம் என்கிறாள் ஆண்டாள்.











9 comments:

  1. கூடாரை வெல்லும் - அருமையான விளக்கம் அம்மா...

    ReplyDelete
  2. மார்கழிக் கோலங்களும் விளக்கங்களும் இனிமையாக இருக்கின்றன.கூடலழகர் கோவிலும் திருப்பாவைப் பள்ளியும் நினைவுக்கு வருகிறது கீதா மார்கழி பூர்த்தியாகிற நேரம் வருகிறதே என்று வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. இன்று கூடாரவல்லித் திருநாள். மதுரையில் கழித்த நாட்கள் நினைவில் வருகின்றன. முடிஞ்சால் இன்னிக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்யணும். :) பார்ப்போம்.

      Delete
  3. அருமை.

    கூடாரை வெல்லும் என்றால் கூடை நிறைய வெல்லம் என்று காதில் விழுகிறது!

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பாடலையும் சேர்த்தே கொடுத்திருக்கேன். எல்லாம் ஷெட்யூல் பண்ணிட்டதாலே அந்த அந்த நேரத்துக்கு வந்துடும். ஆனால் ஜி+இல் நாம தான் இணைக்க வேண்டி இருக்கு. நேற்றுக் காலை தம்பி வீட்டில் இருக்கும்போது இணைத்தேன். இணைக்கலைனா உங்களுக்குத் தெரியறதில்லை. :) வரவுக்கும் வெல்லத்துக்கும் நன்றி. :))))

      Delete
  4. அழகான கோலங்கள்! விளக்கங்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

      Delete
  5. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2015/01/7.html

    முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete