Wednesday, January 07, 2015

திருப்பாவைக் கோலங்கள்

பாடல் 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

   


   

சகடாசுரனைக் குறிக்கும் வரிகள் வந்திருப்பதால் சக்கரக் கோலம் போடலாம்.  குன்றைக் குடையாய் எடுத்த பெருமானுக்காக மலையைக் கோலத்தில் வரையலாம்.  ஶ்ரீராமாவதாரத்தையும் இங்கே தென்னிலங்கைச் செற்றதாய்க் குறிப்பிட்டிருப்பதால் சஞ்சீவி மலைக் கோலமும் போடலாம்.  இந்தப் பாடலில் வாமன, திரிவிக்கிரம, ஶ்ரீராம, கண்ணன் ஆகிய அவதாரங்களைக் குறிப்பிட்டிருப்பதோடு பகை கெடுக்கும் கண்ணன் கையில் வேல் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளாள் ஆண்டாள்.  பொதுவாக வேல் முருகப் பெருமானுக்கு உகந்தது எனினும் இங்கே கண்ணனும் கையில் வேல் வைத்திருப்பதாயும் அதன் மூலமே பகையை ஒழிப்பதாயும் கூறி இருப்பதால் வேலும், தீபமும் கலந்த கோலமும் போடலாம்.

இந்தப் பாடல் முழுவதுமே கண்ணன் புகழைச் சொல்லி அவனைப் போற்றித் துதிக்கும் பாடலாய் உள்ளது.  ஆகவே இந்தப் பாடலைப் பாடிப் பெருமானை எப்போதும் வாழ்த்தலாம்.  கண்ணனின் வீரத்தைப் புகழ்ந்து பாடி அவன் சேவைகளில் ஆழ்ந்து அவனை ஏத்தி வணங்குவதற்கு வந்துள்ள தங்களைப் பார்த்துக் கருணை காட்டுமாறு கேட்கிறாள் ஆண்டாள்

பகவான் சேவை செய்கிறானா என்று கேட்டால், ஆம். தன்னை  நாடி, தன்னையே சரணம் என நம்பி வந்த பக்தர்களுக்குப் பெருமான் சேவை செய்கிறான்.  பிரஹலாதனுக்கு நரசிம்மமாக வந்து சேவை செய்தாற்போல்!

பாடல் 25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


  

நெருப்பன்ன நின்ற நெடுமாலைக் குறிக்கும் விதமாக ஒளி வீசிப் பிரகாசிக்கும் தீபக்கோலங்களைப் போடலாம்.  இங்கே கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய நிகழ்வு சுட்டிக் காட்டப்படுகிறது.  தேவகியின் வயிற்றில் பிறந்து உடனேயே கோகுலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு யசோதையின் மகனாய் வளர்ந்த கண்ணனின் பிறப்பைச் சகிக்க முடியா கம்சனின் தீமைகளை அடக்கி ஒடுக்குவதற்காகக் கண்ணன் நெருப்பென்னும்படி நெடுமாலாக நின்றானாம்.  சாதாரணமாக சிவனையே நெருப்புப் பிழம்பு, ஜோதியாய் நின்றவன் என்போம் அல்லவா?  இங்கே கண்ணனையும் சுட்டி இருப்பதில் இருந்து அரியும், சிவனும் ஒண்ணு என்னும் தத்துவம் மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டப்படுகிறது.  அதோடு பக்தர்களின் பக்தியைக் கண்டு அவர்களுக்கு சேவகம் செய்யவும் ஆண்டவன் கீழே இறங்கி வந்துவிடுகிறானாம்.  பக்தியின் பெருமை அவ்வளவு உயர்ந்தது.

ஶ்ரீயாகிய "திரு"வையே தன்னில் ஒரு அங்கமாய்க் கொண்டவனுக்கு, தன் மார்பில் இடம் அளித்தவனுக்குச் செல்வத்துக்குப் பஞ்சம் ஏது?  அத்தகைய உயர்ந்த செல்வத்தைக் கொண்டவனின் செல்வச் சிறப்பையும், பக்தர்களூக்கு அருளும் பெருமானின் சேவகக் குணத்தையும் புகழ்ந்து பாடினால் நம் வருத்தம் தீர்ந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்.


இங்கே செல்வம் எனக் குறிப்பிடப்படுவது சொத்து, சுகத்தைக் குறிப்பனவல்ல.  அளவற்ற எடுக்க எடுக்கக் குறையாத ஞானச் செல்வத்தையே குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.  இறைவனுக்கு மாறாத அன்பு செலுத்தினாலே போதும் என்பது இதன் உட்கருத்து. 

10 comments:

  1. - கண்ணன் கையில் வேலும், சஞ்சீவி மலைக் கோலமும் புதிது எனக்கு! (எங்கே? ஒழுங்காய் எதையும் படித்தால்தானே!)

    - செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை!

    :))))))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், ஹிஹிஹி!

      Delete
  2. கண்ணன் கையில் வேல்...? அடையாளம் காண சிரமமாகுமே.....!

    ReplyDelete
    Replies
    1. வேல் பொதுவான ஆயுதம் தானே ஐயா! அதோடு நந்தகோபன் வேல் வைத்திருந்ததாக ஆண்டாளே சொல்லி இருக்கிறாளே!

      கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் என ஆண்டாள் குறிப்பிடுகிறாள். இடையர்களுக்கு வேலும் முக்கியம், கண்ணன் அதன் பின்னர் தன் தந்தை, தாயைச் சேர்ந்த பின்னர் தான் சங்கும், சக்கரமும் அவனுக்குக் கிடைக்கின்றன. :)

      Delete
  3. பக்தியின் பெருமை எவ்வளவு உயர்ந்தது என்பதை அழகாக விளக்கும் பகிர்வு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி டிடி.

      Delete
  4. முடக்கப் பட்ட பதிவு இப்போது தெரியும்

    ReplyDelete
    Replies
    1. இன்று தான் பார்த்தேன் ஐயா.

      Delete
  5. அழகான கோலங்கள்! விளக்கங்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete