Sunday, September 27, 2015

வரகு புழுங்கலரிசியில் இட்லியும், தோசையும்! கம்பில் அடை கூட உண்டு!




கம்பு அடை
நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் மேலே.

தேவையான பொருட்கள்

கம்பு ஒரு கிண்ணம்

இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்

துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.

4  மி.வத்தல்+பச்சை மிளகாய் 2

உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.
கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான்  ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்..  காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன்.





தைரியமா எடுத்துக்குங்க! நல்லாவே இருந்தது. சோள ரவையில் உப்புமா பண்ணியது தான் படம் எடுக்க முடியாமல் விட்டுப் போச்சு! முடிந்தால் இன்னொரு நாள் பண்ணுகையில் படம் எடுக்கிறேன். வர வர இந்த எண்ணங்கள் பதிவு சாப்பாட்டு எண்ணங்களா மாறிட்டு வருதோனு ஜந்தேகமா இருக்கே! ::)

இந்தக் கம்பு அடை சாப்பிடும்போதும் சரி (ஏற்கெனவே 2.3 முறை கம்பு செய்து பார்த்திருக்கேன்.)பண்ணும்போதும் சரி, எனக்கு நினைவில் வருவது கல்கியின் பார்த்திபன் கனவு தான்! அதில் தான் படகோட்டி பொன்னன், மனைவி வள்ளி வார்த்துப்போடப் போடச் சுடச் சுடக் கம்பு அடையைக் கீரைக்குழம்போடு ஒரு கை பார்த்துக் கொண்டிருப்பான். கம்பு அடையின் மணம் அந்தக் காவேரிக்கரையில் பரவியதாக எழுதி இருப்பார். அது போல் இந்தக் கம்பு அடையின் மணமும் பரவி இருக்கணும். :)

அடுத்த சோதனை வரகில்! இதுக்கு நடுவில் ப்ரவுன் ரைஸ், கைக்குத்தல் அரிசி இரண்டும் ஒண்ணுதாங்கறங்க. ஆனால் கடையில் தனித்தனியாகக் கொடுத்தாங்க. இரண்டையும் சமைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதிலே முக்கால் மணியிலிருந்து ஒரு மணி ஊற வைக்கச் சொல்லி இருந்தாலும் அது போதலை. மூன்று மணி நேரம் ஊற வேண்டி இருக்கு. பதினோரு மணிக்குக் குக்கர் வைக்க நான் எட்டு மணிக்கே ஊற வைச்சாச் சரியா இருக்கு! :)


வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே  நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.

ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி

அரை கப் இட்லி புழுங்கலரிசி

முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.

சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்

பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!



தொட்டுக்கக் கொத்துமல்லிச் சட்னி, தக்காளிச் சட்னி. ரங்க்ஸுக்கு மிளகாய்ப் பொடி மேல் திடீர்க் காதல். ஆகையால் அவர் அதைத் தான் தொட்டுக் கொண்டார்.  தோசை கொஞ்சம் போல் நிறம் சிவந்திருந்தாலும் தீயவில்லை. ருசியும் பரவாயில்லை.





அடுத்த நாள் காலை சப்பாத்தி பண்ணியதால் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்




இட்லிக் கொப்பரையில் மாவு விட்டு வைத்திருக்கேன் அரை வேக்காட்டில் எடுத்த படம்! :)




வெந்த இட்லிகள். இட்லியும் பஞ்சு, தோசையும் பஞ்சு!  தோசை, இட்லி இரண்டு பேருமேதகராறு செய்யாமல் சமர்த்தாக ஒழுங்காக அவங்க வேலையைப் பார்த்தாங்க!  தொட்டுக்க சாம்பார் தான்! ஹூம் ஹூம் இல்லை, இல்லை ஶ்ரீராம் சாம்பார் இல்லை. சாதாரண சாம்பார் தான். 

20 comments:

  1. //ஶ்ரீராம் சாம்பார் இல்லை//

    ஹி.... ஹி..... ஹி....

    புதுசு புதுசா ட்ரை பண்றீங்க... மாமாதான் பாவம். ஒவ்வொன்றையும் சாப்டுட்டு ரிஸல்ட் சொல்லணும் அவர்!!!

    கம்பு, கம்புங்கறீங்க... எந்த மரத்துலேருந்து வேணும்னாலும் உடைச்சு பொடி பண்ணிக்கலாமா, இல்லை பர்ட்டிகுலர் மரம்லேருந்துதான் உடைச்சு எடுத்துக்கணும்னு உண்டான்னு குறிப்பிடவே இல்லையே நீங்கள்!! :P

    ReplyDelete
    Replies
    1. நான் எங்கே புதுசு புதுசா முயற்சி செய்யறேன்! மாமா தான் மாத்திட்டே இருப்பார்! :) சோதனை எலி நான் தானாக்கும்!
      உங்க வீட்டு வாசலிலே இருக்கும் மரத்தோட கம்பை உடைச்சுப் பொடி பண்ணி அடை செய்து சாப்பிடுங்க! வாழ்த்துகள்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

      Delete
    2. //மாமாதான் பாவம். ஒவ்வொன்றையும் சாப்டுட்டு ரிஸல்ட் சொல்லணும் அவர்!!!//

      எங்காத்துலே மாமா பண்ணித்தான் மாமி ஒபினியன் சொல்வதா இந்த நாப்பத்து அஞ்சு தப்பு நாப்பத்து ஏழு வருசமும் ஓடிக்கிட்டு இருக்கு.

      சுப்பு தாத்தா.

      Delete
    3. நம்ம வீட்டிலே எனக்கு முடியலைனால் இங்கே சமைச்சுக் கொடுக்கும் மாமி கிட்டே இருந்து சாம்பார், ரசம் வரும்! சாதம் மட்டும் வைத்துக்கொள்வோம். :) காஃபி எல்லாம் நான் போடணும்! :) அவர் சமைச்சுட்டு அதை யார் சாப்பிடறதாம்!

      Delete
  2. இந்த வரகு புழுங்கல் அரிசியில் இட்லி தோசை பண்ணி சாப்பிட்டபின்பு தான் அவர் அந்தப் பாட்டு, என்னது

    வராக நதிக்கரை ஓரம் ..ஒரே ஒரு பார்வை பார்த்தேன்..

    அப்படின்னு அந்த பாட்டுக்கு இன்ஸ்பிரேஷன் வந்ததாமே !!
    நிசமாவே அம்புட்டு நல்லா இருக்குமா ?

    இருந்தாலும் நம்ம ஆச்சாரத்துக்கு சரியா தப்பா அப்படின்னு
    பார்யாளைக் கேட்டுட்ட்டுத் தான் செய்ய ஆரம்பிக்கணும்.
    வயிற்றை ஒன்னும் பண்ணாது கடபுடா என்று நினைச்சு
    பகவான் மேல பாரத்தைப் போட்டுட்டு ஆரம்பிக்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வராக நதி எங்க ஊரான மேல்மங்கலத்தில் ஓடுது! சமயங்களில் வெள்ளம் வந்து ஊருக்குள்ளே அக்ரஹாரம் முழுசும் ஒரே தண்ணீர் மயமாகிடுமாம். :) இது வரகு! இதிலேயும் பனி வரகுனு ஒண்ணு இருக்காம். இப்போத் தான் பார்த்தேன். நாங்க வாங்கி இருக்கிறது வெறும் வரகு!

      Delete
  3. Pavam mama.....edho avarukku milagai podi better nu irukku pola

    ReplyDelete
    Replies
    1. அந்த மிளகாய்ப் பொடி செய்தது யார்னு நினைப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  4. பசி எடுக்க வச்சிட்டீங்களே....

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! அடை, தோசை, இட்லி எல்லாமும் சாப்பிடலாமே! :)

      Delete
  5. வரகு அரிசி தெரியும, அதுல சாதம் வச்சு சாப்பிடலாம், வரகு புழுங்கல் அரிசி தனியா கிடைக்கிறதா ? நான் வரகு அரிசி ல இட்லி தோசை பண்ணுவேன் . கம்பு தோலை எடுக்கண்டாமா ?

    ReplyDelete
    Replies
    1. வரகு அரிசிச் சாதம் இன்னும் சமைக்கலை ஷோபா! புழுங்கல் அரிசினு வரகிலே கொஞ்சம் சிவந்த நிறத்துடன் கிடைக்கிறது. எதுவுமே முழு தானியமாகக் கிடைக்கலை. சென்னையில் கம்பு முழுசாக் கிடைச்சது. நீங்க சொல்றாப்போல் தோலை எடுத்துட்டுச் சமைச்சிருக்கேன். இங்கே கம்புக் குருணை தான்! எல்லாமும் கிருஷ்ணா ப்ராடக்ட்ஸ்! அரைகிலோ, ஒரு கிலோ பாக்கெட்களில் விற்கிறாங்க. சிறுதானியக் கடைக்கு 2 தரம் போனார். கடை திறக்கவே இல்லை.

      Delete
    2. Oh ! ok, inga kaettu paakkaren Varagu Puzhungal arisi irukkannu. Thank you

      Delete
    3. கேட்டுப் பாருங்க ஷோபா, பெரிய சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கலாம்.

      Delete
  6. இந்த கம்பு வரகு எல்லாம் அரிசியை விட விலை அதிகமாமே நம் கலாச்சார உணவுக்கு மதிப்பு கூட்டுவது இப்போதெல்லாம் ஃபேஷண் சோள ரவையில் உப்புமா செய்து சாப்பிட்ட காலம் 1947-லிருந்து 1950 என்று நினைக்கிறேன் ரேஷன் அமலில் இருந்தகாலம்

    ReplyDelete
    Replies
    1. ஃபாஷனுக்காகச் சாப்பிடலை ஐயா! சர்க்கரை அளவு குறைய வேண்டும் என்றே மாற்றங்கள் செய்து வருகிறோம். கேழ்வரகு நானும் சின்ன வயதில் அறுபதுகளில் சாப்பிட்டிருக்கேன். குழந்தைகளுக்குக் கேழ்வரகுக் கஞ்சி கொடுப்பதும் உண்டு. சோள ரவை எல்லாம் இப்போது தான் சாப்பிடறோம். கம்பு முன்னர் ஒருமுறை செய்திருக்கேன்.

      Delete
  7. கம்பு அடை, கேழ்வரகு கஞ்சி என பலதும் சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன். அத்தைப் பாட்டியும் அம்மாவும் செய்து தருவார்கள். சமீபத்தில் கூட திருச்சி பயணத்தின் போது பெரியம்மா கம்பு அடை செய்து கொடுத்தார்கள்.....

    இதெல்லாம் மீண்டும் இப்போது Round வரும் போல!

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசில் கேழ்வரகு நிறையச் சாப்பிட்டிருக்கோம். கம்பு, சோளம் எல்லாம் சாப்பிட்டதில்லை. சோளம் சுட்டுச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கேன். மற்றபடி கம்பு, சோள ரொட்டி எல்லாம் ராஜஸ்தான் போய்த் தான் பழக்கமே ஆச்சு! வரகு, தினை, சாமை எல்லாம் இப்போத் தான் பார்க்கிறேன். கேள்வி மட்டுமே! இன்னிக்குக் குதிரைவாலி அரிசியில் தான் சாதம்! :) ப்ரவுன் அரிசியில் தோசைக்கு அரைச்சு வைச்சிருக்கேன். எப்படி வருமோ, தெரியலை! :)

      Delete
  8. பேசாம மீண்டும் கம்பும் கேழவரகும் தனி பதிவு ஆரம்பிச்சுடலாம் கீதா.
    இட்லி வெள்ளை வெளெர்னு வெள்ளையா சூப்பரா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, கேழ்வரகு என்னமோ அவருக்குப் பிடிக்கலை! :) வேண்டாம்னு சொல்லிட்டார். மத்தது ஒவ்வொன்றாகப் பயன்படுத்திட்டு இருக்கேன். நேத்தி வரகு அரிசியிலே பொங்கல்! இன்னிக்குக் குதிரைவாலி அரிசிச் சாதம்! :) என்ன ஒரு பயன் என்றால் வெள்ளை அரிசியில் சாதம் வைக்கையில் கொஞ்சமானும் மிஞ்சும். இது கரெக்டாப் போயிடுது! ராத்திரிக்குனு மிஞ்சறதே இல்லை. :)

      Delete