Saturday, January 21, 2017

தினம் தினம் ராமாயணம்!

ராமாயணம் புதியதொரு நோக்கில்! இது ஏற்கெனவே தமிழில் படித்திருக்கிறேன். எனினும் வாட்சப் மூலம் இது ஆங்கிலத்தில் பரவி வருகிறது. முதலில் ராமா என்னும் பெயருக்கான பொருளைக் காண்போம்.

"ரா" என்றால் வெளிச்சம், ஒளி என்னும் பொருளிலும் "மா" என்றால் எனக்குள்ளே, என்னுள்ளே என்னும் பொருளிலும்  வரும். அதாவது என் இதயத்தினுள்ளே என்ற பொருளில் வரும். உள்ளே ஒளியாகப் பிரகாசிக்கிறது "ராமா" என்னும் இரண்டெழுத்து.
பிராணாயாமம் க்கான பட முடிவு
ராமனைப் பெற்றவர் தசரதர்-- இதற்குப் பத்து ரதங்களை ஒரே நேரத்தில் செலுத்தும் திறமைசாலி என்னும் பொருள் ஏற்கெனவே காணக் கிடைக்கிறது. ஆனால் அந்தப் பத்தும் என்ன என்பதைத் தான் நாம் கீழே காணப் போகிறோம்.

ஐம்பொறிகள்  மற்றும் அவை சார்ந்த ஐம்புலன்களைக் குறிக்கும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இவற்றை அடக்கி ஆள வேண்டும் அல்லவா! அதை அடக்கி ஆளச் செய்யும் திறனே ராமனின் தாய் கௌசல்யா தேவி ஆவாள். திறமை வாய்ந்த ரதசாரதியால் அடக்கி ஆளப்பட்ட இந்தப் பத்து ரதங்கள் என்னப்படும் இந்திரிய சாதனைகளிலிருந்து உள்ளொளி பிறக்கிறது. ஶ்ரீராமனின் பிறப்பும் இதைத் தான் குறிக்கும்.

அதோடு இல்லை. ராமன் பிறந்தது அயோத்தியில். அயோத்தி என்பது யுத்தமே நடக்காத ஓர் இடம் என்பார்கள்.  அங்கே எந்த யுத்தமும் நடந்தது இல்லை. அதே போல் தான் நம் மனமும் ஓர் அயோத்தியாக இருக்க வேண்டும். மன்ப்போராட்டங்களே இருக்கக் கூடாது. நம் மனதில் எவ்விதமான போராட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்தால் அங்கே நம் புலன்கள் அடங்கி விட்டன என்றும் அதனால் நம் உள்ளத்தில் உள்ளொளி என்னும் ஶ்ரீராமன் பிறந்து விட்டான் என்றும் பொருள்.  உண்மையில் ராமாயணம் எப்போதோ நடந்த ஓர் இதிஹாசக் கதை என்று நினைக்காமல் தத்துவ ரீதியாகப் பார்த்தோமானால் அதன் உள்ளர்த்தம் நன்கு விளங்கும்.

நம்முடைய உடலிலேயே தினம் தினம் ஓர் ராமாயண நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதும் விளங்கும்.

ஏனெனில் நம் உயிர் அல்லது ஆன்மா தான் ஶ்ரீராமன்.  இங்கே உயிரும் ஆன்மாவும் ஒன்றா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு புரிதலுக்காக இரண்டையும் ஒன்றாகச் சொல்லி இருந்தாலும் உயிர் எல்லா உயிர்களுக்கும் உள்ளது. ஆனால் ஆன்மா மனித இனத்துக்கு மட்டுமே உள்ளது என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது.  மேலும் உயிர் இருப்பதால் தான் ஐந்தறிவு செயல்படுகிறது என்றாலும் ஆறாவது அறிவான பகுத்தறிவு ஆன்மாவின் மூலமே உணரப்படுவதாகச் சொல்கின்றனர்.  உயிரின் காரணமாக அறிவு ஏற்பட்டாலும் ஆன்மாவே ஞானத்தை உணர வல்லது என்கிறார்கள். அறிவினால் புற ஒளியை மட்டுமே உணர முடியும். ஆனால் ஆன்மாவே அக ஒளியை அறிந்து கொள்ளும். ஆகவே இங்கே ஆன்மா தான் ஶ்ரீராமன் என்று கொள்வதே சரி என நினைக்கிறேன்.

அவன் மனைவி சீதை தான் மனம் என்று கொள்ளவேண்டும். இந்த உடல் மூச்சு விடக் காரணமாக இருப்பது வாயு என்னும் காற்று. அத்தகைய காற்றைத் தான் இங்கே ஹனுமானாகச் சொல்லி இருக்கிறது. நம் உடலில் இருக்கும் உயிருக்கு மனம் சீதை எனில் நாம் விடும் மூச்சுக்காற்றாக ஹனுமன் செயல்படுகிறான். பிராணன் எனப்படும் வாயுவாக அனுமன் இருக்கிறான்.  ஆன்மாவும் உயிரும் சேர்ந்தால் ஏற்படுவது விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வு தான் அண்ணனையும், அண்ணியையும் காத்து வந்த லக்ஷ்மணன் ஆவான். ஆனால் நம்மிடம் தோன்றும், "நான்" என்னும் உணர்வு அதாவது ஈகோவே ராவணன் ஆவான்.

இந்த "நான்" என்னும் ஈகோ நம்மிடம் தலை தூக்கினால் நடப்பது தான் ராமாயண யுத்தம். நான் என்னும் உணர்வு தலை தூக்கினால் மனமாகிய சீதை அந்த உணர்வால் தூக்கப்பட்டு விடுகிறாள். நான் என்னும் உணர்வு மனதில் நல்லெண்ணத்தை அடியோடு அழித்து விடும்.  நல்லெண்ணங்களே இல்லாத மனம், உயிர், ஆன்மாவுக்கு நிம்மதி எங்கிருந்து கிடைக்கும்? அது தவிக்கும்! நிம்மதியை நாடி அலையும். ராமன் இப்படித் தான் தன் மனதைத் தேடிக் காட்டில் அலைந்தான்.  அவனால் தானாகத் தன் மனதைத் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. அத்தனைக்கு "நான்" என்னும் உணர்வு தலை தூக்கி இருந்தது. ஆகவே விழிப்புணர்வுடன், பிராணனின் உதவியை நாட,  இது இங்கே பிராணாயாமத்தின் மூலம் மூச்சை அடக்கி மனதை ஒருமைப்படுத்துவதைக் குறிக்கும். பிராணன் உதவியுடன் மனம் அடக்கி ஆளப்படும்.
பிராணாயாமம் க்கான பட முடிவு
பிராணனும், அதனுடன் கூடவே விழிப்புணர்வும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மனமானது ஆன்மாவுடன் ஒன்றி விடும்.  மனதில் தலை தூக்கிய "நான்" என்னும் உணர்வு அழிந்து படும்.  இப்படி ஓர் நித்திய நிகழ்வாக நம் உடலில் ராமாயணம் தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது.  இதே போல் மஹாபாரதத்துக்கும் சொல்லலாம். அது பின்னர்!

படங்களுக்கு நன்றி கூகிளார். 

18 comments:

  1. விளக்கம் நன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. ராமாயணத்துக்கு இப்படியெல்லாம் வியாக்கியானமா

    ReplyDelete
    Replies
    1. மஹாபாரதத்துக்கும் இப்படியான தத்துவரீதியிலான விளக்கத்தைத் திரைப்படமாக ஜி.வி.ஐயர் என்னும் கர்நாடகாவைச் சேர்ந்தவர் எடுத்திருந்தார்.

      Delete
  3. நல்லா விளக்கியிருக்கிறீர்கள். இராமாயணத்தை எழுதும்போது இவைகளையெல்லாம் ஆசிரியர் நினைத்திருப்பாரா என்பது சந்தேகம். ஆமாம்்.. ஆன்மீக உபன்யாசத்துக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழன், வேதப் பொருளே ராமாயணம் என்று பரமாசாரியார் அவர்கள் சொல்லுவார். நம் போன்ற சாமானியர்களுக்குப் புலப்படும் இந்த உண்மை வால்மீகிக்குத் தெரியாமல் இருந்திருக்குமா? அதே போல் தானே ஆண்டாளின் திருப்பாவையும். அதன் உள்ளார்ந்த பொருளே வேறு அல்லவோ! :))))))

      Delete
    2. வேதம் படிக்கப் படிக்க அதில் உள்ள உட்பொருட்கள் ஆங்காங்கே இம்மாதிரி இதிகாசங்களில் இருப்பது நமக்குத் தெரிய வரும் என்றும் பரமாசாரியார் சொல்லி இருக்கார். :)

      Delete
  4. படிக்கும்போதே மனதில் வித்தியாசமான நிறைவு காணப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற ஒரு சிலருக்காகவே இம்மாதிரிப் பதிவுகள். ஆகவே நான்பதிவிட்டதின் நோக்கமும் நிறைவேறி விட்டது. :)

      Delete
  5. புராணங்களை தெரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்வது வேறு. புரிந்து கொள்ள உதவும் உங்கள் விளக்கத்திற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், படிப்பது வேறு, உட்பொருளைக்குறித்துப் புரிந்து கொள்வது வேறு அல்லவா? இப்படித் தான் திருப்பாவை, திருவெம்பாவைக்கும் தத்துவரீதியிலான பொருள் உள்ளது. அப்படி எழுதினால் படிப்பாங்களோ இல்லையோனு எழுதுவது இல்லை! :)

      Delete
  6. நல்ல விளக்கம்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  7. நல்ல விளக்கம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. Geethamma, What's that 10 ratham ?

    ReplyDelete
    Replies
    1. @ நாஞ்சில் கண்ணன், இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்டப் பத்துத் தேர்களை ஒரே சமயத்தில் செலுத்திப் போரிடும் வல்லமை பெற்றவன் தசரதன். தசரதன் என்பது காரணப் பெயர். மஹாபாரதத்திலும் அதிரதர்கள், மஹாரதர்கள் என உண்டு.

      Delete