விதியை வெல்ல யாராலும் முடியாது தான். ஆனாலும் வென்று கொண்டிருக்கோம்னு நினைச்சேன். திடீரென வந்த சர்க்கரை அளவு எல்லாவற்றையும் தூக்கி அடித்து விட்டது. என்ன காரணம்? விடாமல் பிசியோதெரபி செய்து கொண்டிருந்திருக்கலாமோ? நடைப்பயிற்சிக்குக் கூப்பிட்டால் வரலைனுடுவார். ஹீமோக்ளோபின் குறைவால் நடக்க முடியலைனு நினைச்சேன். அது தப்போ? மருத்துவமனைக்குச் செல்லும் முன்னர் தானாகவே கரைத்த ரசம் சாதம், மோர் சாதம் பாத்திரத்தில் இருந்து தம்பளரில் விட்டுக் கொண்டு சாப்பிட்டதைப் பார்த்தால் நம்பிக்கை அதிகமாய்த் தான் இருந்தது. ஆனால் இம்முறை மருத்துவமனையில் வற்புறுத்திச் செய்யப்பட்ட என்.ஜி ட்யூப் மூக்குத்துவாரத்து வழியாக வயிற்றுக்குள் செலுத்தியதில் பேச முடியாமல், சாப்பிடமுடியாமல் போனது என்னமோ நிஜம், இத்தனைக்கும் காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் வந்து அதை எடுக்கச் சொல்லியும் மேலும் ஆறு மணி நேரம் நீட்டித்து வைத்து 30 மில்லி திரவ ஆகாரத்தோடூ பசியும் பட்டினியுமாய்ப் போட்டதில் வந்ததா? எது? ட்யூபை எடுத்ததும் ஆகாரம் கொடுத்தால் முழுங்க முடியலை. என்றாலும் நினைவு தெளிவாக இருந்தது. ஆனால் அவருக்கு இருக்க வேண்டும், அதுக்காகப் போராடணும் என்னும் ஆர்வம் இல்லாமல் போய் விட்டது. ஏதோ ஒரு காரணம். போக வேண்டிய வேளையை விதி நிர்ணயித்து விட்டது.
ஆனால் ஒரு விதத்தில் நான் முன்னால் போயிருந்தால் அவர் தடுமாறிப் போயிருப்பார். யாருக்கும் தொலைபேசியில் அழைப்பதுன்னாக் கூட நான் தான் நம்பர் போட்டுத் தரணும். கத்துக்கோங்க, கத்துக்கோங்கனு எத்தனை முறை சொன்னாலும் அலட்சியமாகப் போடி என்பார். நான் விளையாட்டாச் சொல்லுவேன். திடீர்னு ஒரு நாள் நான் மண்டையைப் போட்டால் நீங்க யாரையும் கூப்பிட முடியாமல் திகைச்சுப் போய் நிப்பீங்க என்பேன். நீ எங்கே பார்த்துண்டா இருக்கப் போறே என்று வம்பிழுப்பார். ஆனால் நல்லவேளையாக அவர் அந்தக் கஷ்டம் எல்லாம் படவில்லை. கடவுள் என்னை நீ இருந்து எல்லாவற்றையும் அனுபவினு சொல்லிட்டு அவரை மட்டும் கூட்டிக் கொண்டு போய் விட்டார். கடைசியில் ராகவேந்திரர் பிரசாதம் மானசிகமாகக் கிடைச்சிருக்கு. அந்தத் திருப்தியோடு போயிட்டார். கொடுத்து வைத்த ஆன்மா. கடவுளைச் சிந்தித்த வண்ணமே போயிருக்கு. எனக்கும் உடனே உயிர் போயிடாதானு தான் இருந்தது. ஆவால் பாவப்பட்ட ஜன்மமான எனக்கு அதெல்லாம் எப்படிக் கிடைக்கும்?
யாரும் படிச்சுட்டு மனசு வருந்த வேண்டாம். தனிமரமாக நிக்கணும்னு எனக்கு விதி. ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றையும் அவரிடம் மானசிகமாகச் சொல்லிட்டுத் தான் செய்யறேன். ஆனால் உயிரும், ரத்தமும், சதையுமாக இருப்பது போல் வருமா என்ன? ராத்திரியெல்லாம் தூக்கமே வருவதில்லை.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஎப்படியிருக்கிறீர்கள்? நான் உங்களை நினைக்காத நாளிலில்லை.ஒரு வாரமாக எ. பி யில் உங்களைப்பற்றி விசாரிக்கலாமென்ற நினைப்பு எனக்கு வந்த வண்ணமாக இருந்தது. உங்கள் வருத்தத்தை அது மேலும் அதிகமாக்குமோ என்ற ஐயமும் வந்தது. இன்று உங்கள் பதிவை கண்டவுடன் மனம் கலங்கி விட்டது.
என்னதான் காலம் துயரங்களை மாற்றும் என்றாலும், நம் நினைவு உள்ள வரை வருத்தம் வருத்தந்தான். மனதை தளர விடாமல், தைரியமாக இருங்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும், உங்கள் பதிவை படிக்கும் போது என் மனம் கனத்துப் போய் விழிகளை கண்ணீர் நிரப்ப தட்டச்சு செய்ய இயலாமல் தவிக்கிறேன். இறைவனிடம் நாங்கள் செலுத்தும் எங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. தங்கள் மகன், மகள் இருவரும் தங்களருகில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களால் மனது ஆறுதல்கள் அடைந்து தைரியமாக இருங்கள். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
உங்கள் வருத்தம் எனக்குப் புரிகிறது கீதா சாம்பசிவம் மேடம். ஆணால் தனியாக வாழ்வது கடினம். அவரது புண்ணிய கர்மாக்கள் அவருக்கு இந்தப் பலனைக் கொடுத்திருக்கின்றன என நினைத்துக்கொள்ளணும். தனிமை மனதைச் சுற்றிச் சுழலாமல் அவ்வப்போது இணையத்துக்கு வாங்க.
ReplyDeleteஉங்களுக்கும் அவசரத்துக்கு உதவ ஆட்கள் இருக்கணுமே என்ற எண்ணமும் எனக்கு அவ்வப்போது எழும்.
ReplyDeleteஅக்கா... மனசைத் தேத்திக்கிட்டு உறுதியா இருங்க.. ஒரு வேளை இதுதான் காரணமோ இல்லை அதுதானோ இபப்டி செய்திருக்கலாமோன்னு எல்லாம் கடைசி நேரத்துக்குப் பின் மனம் அலைபாய்வது எல்லோருக்கும் நடப்பது. அந்தக் கடைசி வினாடியைக் கொண்டு வரு ம் இயற்கை அதற்கான முஸ்தீபுகளோடுதானே வருகிறது? நாம் என்ன செய்து நிறுத்த முடியும்?
ReplyDeleteநீங்கள் சொல்லி இருப்பது போல ஆண் இருந்து பெண் போய்விட்டால் அந்த ஆண் என்னென்ன அவஸ்தைகள் படுவார் என்று என் அப்பா விஷயத்தில் பார்த்தேன். இங்கு நீங்கள் சொல்லி இருப்பதும் புரிகிறது.
இயற்கை இழுக்கும் வழியில் செல்கிறோம். உங்கள் உடலநலனில் கவனமாக இருங்கள். தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.
கடைசி வரிகளின் கனத்தை உணர முடிகிறது. அவரவர் துன்பம் அவரவருக்குதான் தெரியும். என்ன ஆறுதல் சொல்ல? நடந்ததின் கனத்தை நாட்கள் இலகுவாகட்டும்.
ReplyDeleteஅக்கா, இப்படி மனசு அலை பாய்வது என்பது எல்லோருக்குமே பாய்ந்து தோன்றும்தான். ஆனால் இயற்கையை எதிர்த்து நம்மால் போராட முடியுமா? ஆனால் தயவு செய்து பாவப்பட்ட ஜென்மம் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. இப்படி எல்லாம் நடப்பதால் பாவப்பட்ட ஜென்மா என்றெல்லாம் இல்லை. அப்படி நினைக்கத் தொடங்கினால் மனம் மிகவும் டல்லாகிவிடும்.
ReplyDeleteஎனவே மனதை உறுதியாக வைச்சுக்கோங்க. உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை. புரிகிறது உங்கள் எண்ணங்கள். இருந்தாலும் தவிர்க்கமுடியாதவை ஆயிற்றே இதெல்லாம்.
காலம் உங்கள் மனதை அமைதிப்படுத்தட்டும். இந்த வருத்தத்திலிருந்து மெதுவாக வெளியில் வந்திட உதவட்டும்.
கீதா
நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்து இருக்கிறேன்.
ReplyDeleteஅவர்கள் கொடுத்து வைத்த ஆதமாக்கள் என்று நினைத்து கொள்வேன்.
என்ன காரணத்திற்கு இப்படி என்னை வைத்து இருக்கிறார் இறைவன் என்று தெரியவில்லை.
எனக்குத்தான் அடிக்கடி மருத்துவரிடம் போக வேண்டும். கீழே விழுவது இடுப்பு வலி, கால்வலி என்று . பிசியோதெரபிக்கு, ஆர்த்தோ டாக்ரிடம் என்று என்னுடன் வந்து கஷ்டப்பட்டார்கள்.
அவர்களை அதிக கஷ்டபடுத்தாமல் இறைவன் எடுத்து கொண்டார்.
கடைசியில் நீங்கள் சொன்னது போலதான் நானும் இருக்கிறேன்.மனதை திடபடுத்தி கொள்வதை விட வேறு வழி இல்லை. நமக்கு இறைவன் கொடுத்து இருக்கும் காலம் வரை அவர்கள் நினைப்புடன் வாழ்வோம்.
மாமாவை இழந்து வேதனைப்படும் உங்களுக்கு யாரால் என்ன ஆறுதல் கூற இயலும்? உங்களுக்குத் தெரியாதது அல்ல.....வந்தவரெல்லாம் ஒரு நாள் போய்த்தான் ஆக வேண்டும். யாருக்கு எப்போது அந்த வேளை வருகின்றது என்று இறைவனல்லாவா முடிவு செய்கிறார்? மாமாவின் ஆத்மா சத்கதியை அடையப் ப்ரார்த்தனை செய்கிறேன். நீங்கள் குழந்தைகளுக்காக உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு உங்கள் ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ReplyDelete