Tuesday, June 24, 2025

இன்ஸ்டா மார்ட்டின் பித்தலாட்டம்!

 இவ்வளவு நாட்களாகச் சாப்பாடு வந்து கொண்டிருந்ததால் காய்கறி ஏதும் வாங்கவே இல்லை. இப்போப் பொண்ணும் அம்பேரிக்கா கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறாள் என்பதால் எனக்கு மட்டும் அவ்வளவு சாப்பாடு தேவை இல்லை என்பதால் இன்ஸ்டா மார்ட் மூலம் காய்கள் வாங்கினேன். வாசலிலேயே காய்க்கார அம்மா வருகிறார். அதைத் தவிர்த்தும் வேலை செய்யும் அம்மாவிடம் சொன்னாலும் காய்கள் கிடைக்கும். ஆனால் பெண், பையர் எல்லாம் வசதி, வாய்ப்பு இருந்தும் ஆன்லைன் வியாபாரம் செய்வதில்லை எனப் புகார் சொன்னதால்/ சொல்லிக்கொண்டே இருப்பதால் வாங்கலாம்னு முடிவு எடுத்தேன். ஞாயிறன்று காய்கள் வாங்கினதில் 174 ரூ ஆச்சு. அதில் 164 ரூபாய்கள் காய்க்காகவும் பத்து ரூபாய் டிப்ஸாகவும் வந்தது. காய்கள் பட்டியலோடு விலைப்பட்டியலும் ஒத்து வந்தது. ஆகவே கேள்வி கேட்காமல் பணம் கொடுத்துவிட்டு வாங்கினேன். இன்னிக்குக் கருகப்பிலை, இஞ்சி, வெண்டைக்காய், பாகல்காய் தேவை என்பதால் வாங்கினேன். கருகப்பிலை 11 ரூ, இஞ்சி, 15 ரூ, வெண்டைக்காய் 23 ரூ, பாகல்காய் 25 ரூ மொத்தம் 74 ரூபாய்கள் மட்டுமே.




நூறு ரூபாய்க்கு மேலே தான் இலவசமாக டெலிவரினு சொல்லி இருந்ததால் டிப்ஸ் பத்து ரூபாய், டெலிவரி சார்ஜஸ் 20 ரூ இருக்கும்னு நினைச்சேன். எப்படியும் நூறு, நூற்றுப் பத்துக்குள் தான் எதிர்பார்த்தேன். ஆனால் அப்போவே பில் தொகை 143 எனக் காட்டியது. காஷ் ஆன் டெலிவரி தான் என்பதால் கான்சல் பண்ணவும் நினைச்சேன். ஆனால் பாகல்காய் கட்டாயம் தேவை என்பதால் இருக்கட்டும், பார்த்துக்கலாம்னு விட்டேன். டெலிவரி ஆள் கொண்டு வந்து 143 ரூபாய் கேட்கவும் எப்படி அவ்வளவு ஆச்சு எனக் கேட்டால் அவர் திருதிரு    டெலிவரி சார்ஜஸாக இருக்கலாம் என்றார். ஆனாலும் 69 ரூபாயா டெலிவரி சார்ஜஸ்?அப்போவுமே இடிக்குதே, 74 ரூபாய்ப்  பொருளுக்கு 90 சதவீதமா? நான் அவ்வளவு பணம் எனில் எனக்குக் காய்களே வேண்டாம் எடுத்துச் செல்லுங்கள்னு சொல்லவே அவர் தயக்கத்துடன் தன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். அவங்க என்னிடம் பேசணும்னு சொல்ல, எனக்கு அழைப்பு வந்தது. தேன் போன்ற இனிமையான குரலில் கொஞ்சினாள் ஓர் இளம்பெண்/ அவளிடம் காரணம் கேட்டால், உங்கள் "ஆப்"பைச் சரியாக நிறுவுங்கள்னு பதில் வந்தது. மற்றபடி எதனால் இவ்வளவு சார்ஜஸ்னு விபரங்கள் கொடுக்கலை. நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் பதில் இல்லை.நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவளிடம் பதில் இல்லை.

காலை வேளை, சத்தமாக இருப்பதைப் பார்த்துட்டு யாரும் ஏதும் நினைச்சால்.! நம்ம குரலோ பெரிய குரல். ஆகவே   . பில் விபரங்களைப் பார்ப்போம் என்று மறுபடி அவற்றைத் தோண்டிப் பார்த்தால் ஹான்ட்லிங்க் சார்ஜஸ் மட்டுமே கிட்டத்தட்டப் பத்து ரூபாய்  டெலிவரி பார்ட்னருக்கு மட்டும் 30 ரூபாய், இதைத் தவிர்த்து டிப்ஸ் 10 ரூபாய்  காய்களைக் கொண்டு வரும் சின்னக் கார்ட்டிற்கு வாடகை மட்டும் 15/20 ரூபாய். இதில் ஜிஎஸ்டி மட்டுமே 4 ரூ 80 பைசா, மற்றவை எல்லாம் குறைந்த பக்ஷமாகப் பத்து ரூபாய்கள். இந்த அழகில் இலவசமாக டெலிவரி என்றும் காய்களை விலை மலிவாய்க் கொடுக்கிறோம் எனவும் கூவுகின்றனர். நான் வழக்கமாக வாங்கும் பழமுதிர்ச்சோலையில் காய்களைமலிவாகக் கொடுப்பதோடு அல்லாமல் இலவசமாகக் கருகப்பிலை, கொ.மல்லி, புதினாக்கட்டுகள் கொடுப்பாங்க. செர்வீஸ் சார்ஜ் எல்லாம் இல்லை. அதை விடவும் வாசலில் தூக்கிக் கொண்டு வந்து விற்கும் அம்மாவிடம் இந்தப் பணத்தைக் கொடுத்தால் இரு வேளை சாப்பாடுக்கு ஆகும். இனிமேல் இந்த ஆன்லைன் வியாபாரம் காய்கள் விஷயத்தில் வேண்டாம்னு முடிவு கட்டிட்டேன்.. இந்த அழகில் இலவசமாக டெலிவரி என்றும் காய்களை விலை மலிவாய்க் கொடுக்கிறோம் எனவும் கூவுகின்றனர். 

 எப்போவுமே காய்கள் 100 ரூபாய்க்கு மேல் வாங்கவா முடியும்? நூறு ரூபாய்க்கு மேல் வாங்கினால் தான்  சலுகை எனில் வாசலிலேயே வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்குத் தேவை 100 அல்லது 200 கிராமுக்குள் தான், அதை ஏன் இவங்க கிட்ட வாங்கிட்டு இரட்டிப்புப் பணம் கொடுக்கணும். பொதுவாக ஸ்விகியே கொஞ்சம் அப்படி, இப்படித் தான். சாப்பாடு வாங்கினாலும் நாம் கேட்டது வராது. வேறே ஒண்ணைக் கொடுப்பாங்க. எங்க பொண்ணு அவங்க கிட்டே சண்டை போட்டு சுமார் 110ரூ பணம் அவங்களைக் கொடுக்கும்படி செய்தாள். அவங்கல்லாம் அம்பேரிகாவில் இத்தகையயே ஏமாற்றும் குணம் இல்லை எனச் சொல்கின்றனர். என்னதான் அரசு எல்லாவற்றையும் டிஜிடல்ல் மயமாக ஆக்கி இருந்தாலும் அதிலும் தகிடுதத்தம் பண்ணுவார்கள் நம்மவர்கள். திருந்துவது என்பது வேப்பங்காய் சாப்பிடுகிறாப்போல். ஆகவே நாம் தான் பார்த்து உஷாராக நடந்துக்கணும்.

4 comments:

  1. ஆன்லைனில் காய்கறி வாங்குவதில் நிறைய கடுப்பேற்றும் சமாச்சாரங்கள் உண்டு. தரமற்ற காய்கறிகளை சப்ளை செய்கிறார்கள். ஒரு முறை உருளைக்கிழங்கு போட்டால் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய உருளைக்கிழங்கு கொடுத்து அதுவும் சுருங்கி போய் வந்தது. நீங்கள் சொல்வது போல அதற்கு டெலிவரி சார்ஜஸ் மற்றும் டிப்ஸ் அது இது என்று காசு கூட தான் வாங்குகிறார்கள். ஒரு எட்டு எடுத்து பின்னால் நடந்த சென்றால் காய்கறி கடையில் வாங்கி விடலாம்.

    ReplyDelete
  2. காய்கறி என்று இல்லை, எது வாங்கினாலும் அவர்கள் அடிக்கும் கொள்ளை அதிகமாக தான் இருக்கிறது்

    ReplyDelete
  3. எந்த ஒரு சேவையும் இலவசமாக நம்மை வந்து அடைவதில்லை.  அததற்கு ஒரு விலை இருக்கும் - மறைமுகமாகவாவது.  

    இந்த சுமைக்கூலி முக்கா பணம் என்பது சமீப காலங்களில்தான் ரொம்ப அதிகாமாச்சோ என்றும் சந்தேகம்.  எங்கள் வீட்டிலும் குறைத்துக் கொண்டே வருகிறோம்.

    ReplyDelete
  4. இப்படி பல விஷயங்கள் உண்டு. அவற்றை எல்லாம் யாரும் கவனிப்பதும் இல்லை. கவனித்து, நாம் கேட்டால் பதிலும் கிடைப்பதில்லை. “வேணும்னா நீங்க நேர்ல போய் வாங்கிக்கோங்க!” என்று ஒரு முறை பதில் கிடைத்தது - செயலி சார்ந்தவர்களிடமிருந்து...

    ReplyDelete