எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 25, 2025

போனது போனது தானே!

 மாமாவுக்கும் எனக்கும் சுமார் ஏழரை வயது வித்தியாசம். இந்தக்காலத்துப் பெண்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எங்க பெண்ணைக் கூட நாங்க எட்டு வயது வித்தியாசத்தில் தான் கொடுத்திருக்கோம். அது போகட்டும்  பெண் அம்பேரிக்கா போக வேண்டிய தினம் பார்த்து மிசல்(Missile) அட்டாக் இரு பக்கமும். வான்வெளியை மூடிவிட்டார்கள் எனச் செய்திகள். எப்படிப் போகப் போறா என அன்றிரவு முழுக்க பதட்டம். போறாத குறைக்கு தோஹாவில் போட்ட மிசைல் பையர் இருக்கும் இடத்துக்கு அருகே சுமார் 50 கிலோ மீட்டருக்குள்ளாக .போட்டிருக்காங்க. போட்டிருக்காங்க. அவங்களுக்கு வீட்டில் சாப்பிடும்போது சப்தம் பலமாகக் கேட்டிருக்கு.. நல்ல வேளையாகச் சேதம் எதுவும் இல்லை. என்றாலும் கவலை, பதட்டம், செய்வது தெரியாமல் முழிச்சது என முந்தாநாள் இரவு எங்களுக்கெல்லாம் கழிந்தது. இன்று காலை ஆறு மணி அளவில் பெண் ஹூஸ்டன் போய்ச் சேர்ந்து தகவல் கொடுத்ததும் தான் கொஞ்சம் நிம்மதி.

எதுவோ சொல்ல வந்துட்டு எங்கேயோ போயிட்டேன். இந்த ஐம்பத்தி ஐந்து வருட இல்வாழ்க்கையில் நாங்கள் பிரிஞ்சிருந்தது என்றால் என்னுடைய இரு பிரசவத்தின் போது மட்டுமே. அதிகம் நான் அவரைத் தனியாச் சமைத்துச் சாப்பிடும்படி விட்டதில்லை. அவரும் அந்த அளவுக்கு என்னை அனுமதித்ததில்லை. கல்யாணங்களுக்குப் போனால் கூட அவருடனே போயிட்டு அவருடனேயே திரும்பிடுவேன். இதுக்காகப் பெண், பிள்ளை படிக்கும் நாட்களில் இருவரும் சேர்ந்து போக முடியாதவற்றுக்கு மாமனார், மாமியார் போவாங்க. அல்லது நான் மட்டும் தனியாகவோ, அவர் மட்டும் தனியாகவோ போவோம். 

எங்களுக்குள் சண்டைனு வந்தால் அது அவர் காய்கறி மார்க்கெட் போயிட்டு வந்தால் தான். கருகப்பிலை மட்டும் இரண்டு மூன்று கட்டு, கொத்துமல்லிக்கட்டு  தினுசு தினுசாகனு வாங்குவார். பாத்திரக்கடைனு போனால் நான் ஒரு ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்துடுவேன். அவர் தான் ஆசை ஆசையாக எல்லாமும் பார்த்து வாங்குவார். அதிகமாக வாங்கினால் டிஷும் டிஷும் தான். ஆனாலும் கண்டுக்க மாட்டார். அக்கம்பக்கம் எல்லாம் நான் சத்தம் போடுவதைப் பார்த்துட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னாடி அவர் குணம் புரிந்து நான் கடிவாளாம் போடுவதைப் புரிஞ்சுண்டாங்க. இதுக்காக அவர் கை ஓங்கியது என்றோ என்னோட கை ஓங்கியது என்றோ பொருள் இல்லை. நவராத்திரிக்குக் கொடுக்கும் பரிசுப் பொருள் மட்டும் எப்போவுமே என்னோட தேர்வாக இருக்கும்.

இப்போ உடல்நிலை சரியில்லாது போனாதில் இருந்து அவருக்குள் ஒரு ஏக்கம். வீட்டில் தான் தன்னுடைய அதிகாரத்தோடு பழைய மாதிரி இருக்க முடியலை என்னும் ஏக்கம். ஒவ்வொரு பொருளும் நான் வாங்குகையில் முகத்தில் குற்ற உணர்வு இருக்கும். நீ வீட்டையும் பார்த்துண்டு வெளி வேலைகளும் பார்க்க வேண்டி இருக்கே என்பார். நீ படுத்துட்டா நான் என்ன செய்வேன்? உன் உடம்பையும் பார்த்துக்கோ. எனக்கு முன்னாடி போயிட்டியானா நான் தான் கஷ்டப்படுவேன். என்னை யார் கவனிச்சாலும் எனக்குச் சரியா வராது. நீ மட்டும் என்னை விட்டுட்டுப் போயிடாதே என்பார். இதான் அவர் கடைசியாக என்னிடம் சொன்னதும். என்னோட இரண்டு கைகளையும் பிடிச்சு அவர் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, நீ எங்கேயும் போயிடாதே. என்னை ஏமாத்திடாதே! என்றே திங்கட்கிழமை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் தான் பைத்தியம் பனிரண்டு மணிக்கு மேல் தூஙிட்டாரேனு வந்து படுத்துக் கொண்டது தப்பாகி விட்டது. நான் இல்லைனு தெரிஞ்சதும் அந்த ப்யத்திலேயே போயிட்டாரோனு குற்ற உணர்ச்சி என்னைக் கொன்று கொண்டு இருக்கிறது. என்ன செய்ய முடியும்?


இதோடு புலம்பலை நிறுத்திக்கப் பார்க்கிறேன்f. எல்லோருக்கும் அலுப்புத் தட்டிடும் இல்லையா?  _/|_

9 comments:

  1. தங்களது மன உளைச்சலை கொட்டிக் தீருங்கள்.
    மனம் சற்று ஆறுதல் அடையும்.

    எனது ஆழ்ந்த இரங்கல்களை தாமதமாக சொல்லிக் கொள்கிறேன்.

    மனம் தளர வேண்டாம்.
    குட்டிக் குஞ்சுலுவோடு தினம் உரையாடுங்கள்.
    மனம் மகிழ்ச்சியாக மாறும்.

    ReplyDelete
  2. பெண் பத்திரமாக ஊர் சென்று சேர்ந்தது மோமம்தி. இப்போது துணைக்கு மருமகள் வந்திருக்கிறாரா?

    ReplyDelete
    Replies
    1. // மோமம்தி //


      நிம்மதி. :)) __/\__

      Delete
  3. மாமா பற்றிய நினைவுகளை எழுதி இருக்கிறீர்கள்.  ஓரளவு எல்லாம் ஏற்கனவே உங்கள் அப்பதிவுகளில் இது பற்றி எல்லாம் அவ்வப்போது சொல்லி வந்திருக்கிறீர்கள்.  மாமா காய்கறி வாங்கும் விதத்தையும் சொல்லி இருக்கிறீர்கள்.  நானும் அப்படிதான் வாங்குவேன்.

    ReplyDelete
  4. கடைசி நேரம் வரை மாமா நினைவுடன் இருந்தார் என்பதும், மனம் விட்டு உங்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்பதும் நெகிழ்ச்சி.  உங்கள் கைகளை பிடித்துக் கொண்டு மாமா பேசிய வார்த்தைகள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது கண்களை கலங்க வைத்து விட்டது.  எல்லோருக்கும் தங்கள் கடைசி நிமிடங்கள் தெரியும் என்பார்கள்.  மாமாவும் உணர்ந்திருந்தாரோ என்னவோ..  அந்தக் கடைசி நொடிகளில் உங்களைத் தேடி இருப்பாரோ..  

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    அந்த காலத்தில், தம்பதிகள் இடையே வயது வித்தியாசங்கள் இப்படித்தான் அமைந்து விடுகிறது. இங்கு எங்கள் இருவருக்கும் பத்து வயது வித்தியாசத்தில் திருமணம்.1979 ல் நடந்தது. இப்போது எங்கள் பெண்ணிற்கும் ஏழு வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் திருமணம் செய்து தந்தோம் . ஆனால் அந்த காலத்திலேயே எங்கள் அப்பா, அம்மா இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். அதுமட்டுமல்ல! எங்கள் அண்ணா, மன்னி, எங்கள் மகன்கள், மருமகள்கள் அனைவருக்குமே இரண்டு வயதுதான் வித்தியாசம். எனக்கும் இதை கேட்க அப்போது தோன்றவில்லை. பெற்றோர்களின் முடிவுக்கு மதிப்பளித்தேன். அவ்வளவுதான்.! இரண்டாவது விதியின் செய்கைகள் நம்மை ஏதும் கேட்காது அதுவே முடிவெடுத்து விடும்.

    உங்களின் மனவிசாரம் புரிகிறது. படிக்கும் போது எனக்கும் மனதை வருத்துகிறது. உங்கள் மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டாம். நீங்கள் மனதைரியம் மிக்கவர். ஆனாலும், உங்கள் மனதை வருத்திக் கொண்டால், உங்கள் உடல்நிலைக்கு பாதிப்புக்கள் வரும். உங்கள் கூட இப்போது துணைக்கு உறவுகள் அருகில் உள்ளார்களா? இப்படி எழுத்துலகில் எங்களுடன் உங்கள் மனக் கவலைகளை பகிர்ந்தால், உங்களுக்கும் மனது சற்று நன்றாக இருக்கும். அடிக்கடி வலைப்பக்கம் வாருங்கள் சகோதரி வேறு என்ன சொல்ல? , உங்கள் உடன் நலனை கருத்தில் வையுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
  6. இதுவும் கடந்து போகும்... என்று சொன்னாலும் சில விஷயங்களை எளிதில் மறந்து விட முடியாது.... காலம் நல்லதொரு மருந்து. வேறென்ன சொல்ல.

    ReplyDelete
  7. சார் உங்களிடம் பேசியது மனதை விட்டு அகலாது. வயதான காலத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேன்டும் அந்த சமயம் ஆதரவை இழந்து தவிக்கும் தவிப்பு நன்றாக உணர முடிகிறது. நான் பக்கத்தில் இருந்தும் என்னால் காப்பற்ற முடியவில்லை அதை நினைத்து வருந்தாத நாள் இல்லை.

    கவலைகளை சொல்லித்தான் ஆற்றிக் கொள்ள வேண்டும்.
    இறைவன் உங்களுக்கு மன ஆறுதலை தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.


    நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன் , என் தங்கை மகனும் தோஹாவில் இருக்கிறான் அவனிடமும் நிலவரத்தை கேட்டுக் கொண்டோம், செய்திகளை கேட்டோம்.
    மகள் பத்திரமாக ஊர் போய் சேர்ந்தது மனநிம்மதி , அது போல என் மகன் இங்கு வந்து இருக்கிறான் நல்லபடியாக வந்தான்.
    போரால் மக்கள் படும் துன்பங்கள் நாட்டு தலைவர்கள் உணர வேண்டும்.

    ReplyDelete
  8. பெண் பத்திரமாக ஊர் போய்ச்சேர்ந்தார் என்பதுமகிழ்ச்சி கீதாக்கா

    உங்கள் வருத்தங்களைப் பதிந்துருக்கீங்க, புரிந்து கொள்ள முடிகிறது. இப்பதான் போன பதிவில் மாமா மார்க்கெட் போவது பத்தி நீங்க எழுதியதைச் சொல்லிவிட்டு வந்தேன்.

    மாமா உங்களிடம் கடைசி வரை மனம் விட்டுப் பேசியது மனதை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது, இதைக் கடந்து வர நிறைய சமயம் எடுக்கும் என்றாலும் இறைவன் துணையிருப்பான். வேறு என்ன சொல்லித் தேற்ற..

    கீதா

    ReplyDelete