இதையே லலிதா சஹ்ஸ்ரநாமம்,
“மூலாதாரைக –நிலயா-ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸூதாஸாராபி-வர்ஷிணீ
என்று கூறுகிறது. அபிராமி பட்டரோ,
“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார் சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”
என்கின்றார்.
இதன் யோக தந்திர முறையிலான விளக்கம் என்னவெனில் திரிபுரை என்பதற்குப் பல பொருட்கள் சொல்லலாம். எனினும் இங்கே நம் உடலின் மூன்று நாடிகள், மனம், புத்தி, சித்தம் மூன்று இடங்களிலும் உறைபவள், முத்தேவர்களாலும் தன் தொழிலை நடத்துபவள், மும்மறைகளுக்கும் அதிபதியானவள், மூன்று வகை அக்னிக்களையும் ஒழுங்கு செய்பவள், மூன்று வகை சக்திகளைத் தன்னிடத்தே கொண்டவள், மூன்று ஸ்வரங்களைக் கொண்டவள், மூவுலகையும் தன்னகத்தே இருத்தியவள், என எல்லாவற்றுக்கும் அதிபதியானதோடு அல்லாமல் மூன்று பிரிவை உடைய ஆறு சக்கரங்களுக்கும் தலைவியாகவும் இருப்பவள். இவளின் அருளாலேயே நஞ்சை அமுதாக்கி நம்மை சாயுஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறாள். இனி சும்ப, நிசும்பர்களின் வதத்தைப் பார்ப்போமா?
சண்ட,முண்டர்களின் வதத்தைக் கேட்டுக் கோபம் கொண்ட சும்பனும், நிசும்பனும் ரக்தபீஜனைப் பலவகைப் படைகளோடும் அம்பிகையோடு யுத்தம் செய்ய அனுப்பி வைத்தான். காளி மிக உக்கிரமாய்ப் போரிடுகிறாள்.


தேவியானவள் அசுரர்கள் எய்த அம்புகளையும், சூலங்களையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் தன் வில்லினின்று எய்யப்பட்ட அம்புகளால் தடுத்து நிறுத்தக் காலியானவள் தன் கட்வாங்கம் என்னும் ஆயுதத்தால் அசுரக் கூட்டத்தை நசுக்கினாள். பிரம்மாணியோ தன் கமண்டலுவின் நீராலேயே சத்துருக்களை பலமற்றவர்களாக்கினாள். மாஹேஸ்வரி, திரிசூலத்தாலும், வைஷ்ணவி, தன் சக்கரத்தாலும், கெளமாரி ஈட்டியாலும், ஐந்திரி வஜ்ராயுதத்தாலும் அசுரர்படையைத் தாக்கினர். வாராஹி தன் கூரிய மூக்காலும், நாரசிம்ஹி தன் கூரிய நகங்களாலும் அசுரப் படைகளை ஒழித்தார்கள். அப்போது ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அவனைப்போல் ஓர் அசுரன் உதிக்க, சப்த மாதர்களும் சூழ்ந்து கொண்டு அவனைத் தங்கள் ஆயுதங்களால் தாக்கினார்கள். சண்டிகையானவள் சாமுண்டியான காலியைப் பார்த்து ரக்தபீஜனின் ரத்தம் கீழே விழாதவாறு பார்த்துக்கொள்ளச் சொன்னாள். காலியும் அவ்வாறே அவனின் கடைசிச் சொட்டு ரத்தம் கீழே விழும்வரைக்கும் அவனைக் களைப்படையச் செய்து ரக்தபீஜனின் ரத்தத்தைத் தன் வாயில் ஏந்தினாள். ரக்தபீஜன் ரத்தம் இல்லாமல் கீழே விழ, சும்பனும், நிசும்பனும் கோபம் கொண்டு அம்பிகையைத் தாக்கினார்கள்.
நிசும்பன் தன் கூரிய வாளால் தேவியின் வாகனமான சிங்கத்தின் தலையில் அடிக்க அந்த வாள் தேவியின் கூரிய பாணத்தால் துண்டாக்கப்பட்டது. இவ்வாறே நிசும்பன் எய்த ஆயுதங்கள் அனைத்தும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பயனற்றுப் போக நிசும்பன் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான்.
சங்கநாதமும், மணியை ஒலித்தும் ஓசை எழுப்பிய தேவி, நிசும்பனை மூர்ச்சை அடைய வைத்ததைக் கண்டு . கோபம் கொண்ட சும்பன் தேவியோடு போரிட, விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு எட்டுக் கைகளோடு பாய்ந்தான். சும்பனின் ஆயுதங்களும் தேவியின் ஆயுதங்களுக்கு முன்னர் பலனற்றுப் போக சும்பனையும் தன் சூலத்தால் அடித்து மூர்ச்சை அடைய வைத்தாள் தேவி. இதற்குள் எழுந்த நிசும்பன் மீண்டும் போருக்கு வர தன் சூலத்தால் நிசும்பனின் இதயத்தைப் பிளந்து அவனைக் கொன்றாள் தேவி. சகோதரன் கொல்லப்பட்டது கண்ட சும்பன் தேவியைப் பார்த்துக் கேலியாக மற்றவர்கள் பலத்தினால் ஜெயித்துவிட்டுக் கர்வம் கொள்ளாதே என்றான். அப்போது தேவி அவனைப் பார்த்து, “மூடா, இங்கு இருப்பவள் நான் ஒருத்தியே. இரண்டாவதாக எவரும் இல்லையடா! இவர்களெல்லாம் என்னிலிருந்து தோன்றிய என் அம்சங்களே அன்றி என்னிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல! இதோ பார்!” என்றாள். சப்த கன்னியரும், காளியும் மறைந்து சும்பன் கண்ணெதிரே தேவி ஒருத்தியின் உடலில் புகுவதைக் கண்டான். “என்னால் அளிக்கப்பட்ட என் பல்வேறு சக்திகளும் இப்போது என்னிலேயே கலந்துவிட்டன. இப்போது போரில் உறுதியாக இருந்து போர் செய்வாய்!” என்றாள் தேவி.
அசுர ராஜன் சும்பன் பல ஆயுதங்களால் தேவியைத் தாக்கினான். மிக உக்கிரமான அஸ்திரங்களை எய்தான். அனைத்தும் தேவி தன் ஹூங்காரம், உச்சாரணம் போன்றவற்றாலேயே அழித்தாள். அவனுடைய குதிரையையும் கொன்று ரத சாரதியுமின்றி வில்லையும் ஒடித்தாள் தேவி. சும்பன் முத்கர ஆயுதம் என்னும் ஆயுதத்தால் தேவியைத் தாக்கப் போக, தேவி அதைப் பிளந்தாள், அசுரனின் இருதயத்தின் தன் முஷ்டியால் குத்தினாள். அவன் அப்படியே தேவியைத் தூக்கிக்கொண்டு ஆகாய மார்க்கமாய்ச் செல்ல, தேவியும் அங்கே இருந்த வண்ணமே அவனோடு போர் புரிந்தாள். அவனுடைய அட்டஹாசம் அதிகமாகக் கண்ட தேவி இனி தாங்காது எனக் கருதித் தன் சூலத்தால் சும்பன் மார்பையும் பிளந்து குத்தி அவனைப் பூமியில் வீழ்த்தினாள்.
காளிதேவியும் ரக்தபீஜர்களை
வாரி வாரி விழுங்கிவிட்டாள்
ரக்தபீஜனும் பட்டவுடன் பொல்லா
நிசும்பனும் பார்த்துக் கோபத்துடன்
ஸம்ஹரிப்பேன் இவளையென்று சொல்லி
சபதம் செய்து தமையன் முன்னே
தேவியுடன் எதிர்த்து நிசும்பனும்
தோற்காமலே யுத்தம் செய்து நின்றான்
ஆயிரமாயிரம் அம்பு தொடுத்தவன்
அஞ்சாமலே யுத்தம் பண்ணலுற்றான்
நேரே யுத்தம் பண்ணி லீலாவிநோதமாய்
நிசும்பனக் கொன்றாள் ஸ்ரீதேவியும்
தம்பியும் பட்டதைக் கேட்டுச் சும்பாஸுரன்
சங்கையில்லாத கோபத்துடன்
அம்பிகையெதிரில் வந்து சும்பாஸுரன்
ஆங்காரத்துடன் ஏது சொல்வான்
யுத்தம் பண்ணத் தெரிந்தவளே எங்கள்
இத்தனை பேரையும் ஏய்த்தாயேடி நீயும்
யாருமில்லாதே யிருந்தாயேடி நீயும்
ஏழுபேருனிப்போ நின்றாயடி.
சதிகாரியடி நீயுமிப்போ என்னை
சற்பனை செய்யவே வந்தாயடி
வஞ்சித்தாயடி நீயுமென்னை யிப்போ
வாரத்தைகள் இரண்டு சொன்னாயடி.
ஒருத்தியாக இருந்து கொண்டன்றோ நீ
உத்தரஞ்சொல்லி யனுப்பி வைத்தாய்
அத்தனைபேர்களைச் சேர்த்துக்கொண்டு இப்போ
அதட்டுகிறாயடி நீயுமென்னை
சும்பன் வார்த்தையைக் கேட்டு ஸகிகளே
இங்கே வாருங்கள் என்றழைத்து
வாரியணைத்தாள் ஸகிகள் எல்லோரையும்
மாரோடு மறைத்து ஐக்கியமானாள்
இரண்டாம்பேரிங்கில்லை காளியுடன் நீ
எதிர்த்து யுத்தமும் பண்ணுயென்ரால்
அம்மன் செயலையும் வார்த்தையையும் கேட்டு
அ ம்புபட்டாப்போலுந்தானுருகி,
சும்பாஸுரனும் காளிகாதேவியும்
தோற்காமலே யுத்தம் பண்ணலுற்றார்
அடித்த பந்து கிளம்பினாற்போலவன்
ஆகாயத்தினிலே கிளம்பி,
ஒருவருக்கொருவர் சளையாமல் அங்கு
ஓடோடி யுத்தமும் பண்ணினார்கள்
சும்பாஸுரனும் காளிகாதேவியும்
தொந்தயுத்தமும் பண்ணினார்கள்
தேவர்களெல்லாம் பயத்துடனே மஹா
தேவியை ஸ்துதித்துக்கொண்டிருந்தார்கள்
எத்தனை பொழுதாக யுத்தம் பண்ணுவோம்
என்று காளியும் கோபத்துடன்
சும்பாஸுரனை வதைத்தாள் காளியும்
துர்க்காதேவி என்றவம்மனை அழைத்தாள்
துர்க்காதேவியம்மன் அஸுரனை வதைக்கத்
தேவர்கள் புஷ்பமழை சொரிந்தார்.
நாளை ஸ்ரீலலிதையின் உதயம்.
எவ்வளவு நிகழ்வுகள்
ReplyDeleteநல்ல பகிர்வு கீதாம்மா !நிறைய புது புது தகவல்கள்
நிறைய யோசிக்க வைக்கிறது !
நன்றி நன்றி !
ஸ்ரீ வித்யா ரூபிணி; சரஸ்வதி; சகலகலாவல்லி;
ReplyDeleteசாரபிம் பாதரி; சாரதாதேவி; சாஸ்திரவல்லி;
வீணா புஸ்தக தாரிணி; வாணி; கமலபாணி; வாக்தேவி;
வரநாயகி; புஸ்தக ஹஸ்தே; நமோஸ்துதே.
:வித்தைகளின் உருவமே ! சரஸ்வதி தேவியே! சகலகலைகளுக்கும் தலைவியே! கல்வியின் சாரமாகவும் விளக்கமாகவும் இருப்பவளே ! சாரதாதேவியே! சாஸ்திரங்களின் அதிபதியே! இசைக், வீணை புஸ்தகம் சகிதம் காக்ஷி அளிப்பவளே கலைவாணியே! தாமரையில் வீற்றிருப்பவளே! வாக்கின், சொல்லின் தேவியே ,வரம் தருபவளே புஸ்தகம் அலங்கரிக்கும் கையை கொண்டவளே உன்னை வணங்குகிறேன் புதிதா இருக்கே இந்த சோபனம் சோபனம் . மொத்தம் எத்தனை ஸ்லோகம்?
ஆறாம் நாள் கதையும் அற்புதமாய் விளக்கி விட்டீர்கள்.
ReplyDeleteசரணமடைந்தவற்களை காப்பவள்,உலகிற்காதராமாயிருப்பவள்
எல்லோரையும் காக்கட்டும்.
நன்றி.
தொடர் அருமையாக வந்து கொண்டு இருக்கிறது...
ReplyDeleteநிதானமாக படித்து விட்டு வருகிறேன்.
நன்றிகள் கீதாம்மா!
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. தனித்தனியாய்ப் பதில் சொல்ல முடியலை.
ReplyDeleteஜெயஸ்ரீ, இது சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்கள் தொகுத்தது. என்னோட சின்ன வயசிலே என் பெரியம்மா பாடிக் கேட்டிருக்கேன். அப்புறம் இந்தப் புத்தகத்தைத் தேடிக் கண்டு பிடித்து வாங்கினேன். மயிலை கிரி ட்ரேடர்ஸில் கிடைக்கிறது.
நல்ல தகவல்
ReplyDeleteஎந்த பதிப்பகம் என்ற தகவலையும்
சொன்னால் வாங்க உதவியாக இருக்கும்