Saturday, February 16, 2013

உச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா?


அயோத்தியில் ஸ்ரீராமனின் பட்டாபிஷேஹம்.  அதில் கலந்து கொள்ளச் சென்ற அநேகரில் இலங்கைக்கு அரசனாகி இருந்த விபீஷணனும் ஒருவன்.  பட்டாபிஷேஹம் முடிந்து ஸ்ரீராமன் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டு வந்தான்.  விபீஷணனுக்கு என்ன கொடுப்பது என்ற சிந்தனை ராமனுக்கு.  கடைசியில் தன் குலதெய்வம் ஆன அந்த இக்ஷ்வாகு குலதனம் ஆன ஸ்ரீரங்கநாதப் பெருமாளை அவரின் பிரணவ விமானத்தோடு கொடுப்பது எனத் தீர்மானித்துக் கொண்டார்.  அவ்வாறே தன் குலதனத்தை விபீஷணனுக்குக் கொடுத்த ஸ்ரீராமன், "இந்த விமானத்தை வழியில் எங்கும் கீழே வைக்க வேண்டாம்.  நேரே இலங்கை எடுத்துச் சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும்." எனக் கட்டாயமாய்க் கூறி இருந்தான்.  அதன்படியே தன் புஷபகத்தில் அந்த இக்ஷ்வாகு குலதனத்தையும் எடுத்துக்கொண்டு பறந்து வந்த விபீஷணன், மாலை நேரம் ஆனதைக் கண்டான்.  ஆஹா, நித்திய கர்மாநுஷ்டானங்களை விட முடியாதே!  என்ன செய்யலாம் எனக் கீழே பார்த்தவனுக்கு ஒரு அகண்ட நதி ஒன்று ஓடுவதும், நடுவே ஓர் ஊர் இருப்பதும், தெற்கேயும் மிகவும் அகண்ட நதி ஒன்று அந்தத் தீவை மாலை போல் வளைத்துக் கொண்டு செல்வதையும் கண்டான்.

ஆஹா, இதுவே தகுந்த இடம்.  இந்த நதிக்கரையில் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து விடலாம் என எண்ணிக் கீழே இறங்கினான்.  தன் கையில் வைத்திருந்த விமானத்தையும், அதனுள் இருந்த ஸ்ரீரங்கநாதரையும் கீழே வைக்க இயலாதே.  சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஓர் அந்தணச் சிறுவன் நதியில் தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கரை ஏறிக் கொண்டிருந்தான்.  அவனை அழைத்துத் தன் நிலைமையைச் சொன்னான் விபீஷணன்.  அவனிடம் அந்த விமானத்தைக் கொடுத்து அதைக் கீழே வைக்கக் கூடாது என்றும் கூறி வைத்துக் கொள்ளச் சொன்னான்.  தன் தன் நியமங்களை முடித்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறினான்.  சிறுவன் அதை வாங்கிக் கொண்டான்.  விபீஷணன் நதியில் இறங்கினான்.  நடு நடுவே திரும்பிப் பார்த்துக் கொண்டான்.  சிறுவன் கைகளிலே விமானம்.  சாந்தி அடைந்தவனாக வடக்கே திரும்பித் தன் நித்ய கர்மாவைச் செய்ய ஆரம்பித்தான் விபீஷணன்.

அப்போது அந்தச் சிறுவன் ஒரு குறும்புச் சிரிப்போடு அந்த விமானத்தைச் சத்தம் போடாமல் கீழே வைத்தான்.  ஓட்டமாய் ஓடிய சிறுவன் சற்றுத் தூரத்தில் தென்பட்ட ஒரு குன்றின் மீது ஏறி அதன் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு விபீஷணன் என்ன செய்யப் போகிறான் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.  விபீஷணன் தன் அநுஷ்டானங்கள் முடிந்து திரும்பி வந்தால் சிலை தரையில் வைக்கப் பட்டிருக்கச் சிறுவனைக் காணவே காணோம்.  ஆத்திரம் பொங்கச் சிலையைத் தரையில் இருந்து எடுக்க முயன்றான்.  தன் பலம் முழுதும் பிரயோகித்தும் சிலை அசையவே இல்லை.   விபீஷணன் கோபம் கொண்டு சிறுவனைத் தேட.  மலைக்குன்றின் மீதிருந்து குரல் கேட்டது.  என்ன எடுக்க முடியலையா? என.  கோபம் மேலோங்கிய விபீஷணன் குன்றின் மீது ஏறி அந்தச் சிறுவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்ட அங்கே காட்சி அளித்தார் விநாயகர். அதிர்ந்த விபீஷணனிடம், இந்த ரங்கநாதருக்காகவே சோழ மன்னன் தவம் இருப்பதாகவும், ரங்கநாதர் இலங்கை சென்றுவிட்டால் அவன் தவம் வீணாகிவிடும் என்பதாலும், இந்த நிகழ்வு ஏற்கெனவே திட்டமிட்டு நடத்திய ஒன்று எனவும், ஸ்ரீரங்கநாதருக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல இஷ்டமும் இல்லை என்றும் கூறி அருளினார்.

மனம் வருந்திய விபீஷணனிடம் ஸ்ரீரங்கநாதர், தாம் தெற்கே பார்த்துக் கொண்டு படுப்பதாகவும், தன் பார்வை எந்நேரமும் இலங்கையை நோக்கிய வண்ணமே இருக்கும் எனவும், ஆகவே விபீஷணன் வருந்த வேண்டாம் என்றும் அருளிச் செய்தார்.  அதன் பின் ஓரளவு சமாதானம் அடைந்த விபீஷணன் இலங்கை திரும்பினான்.  இப்படி உச்சியில் அமர்ந்த பிள்ளையாரை அங்கேயே இருந்து வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்குமாறு அனைவரும் வேண்ட அன்று முதல் அவர்  அங்கேயே  இருந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  அவர் தலையின் விபீஷணன் குட்டிய குட்டின் வடு இன்னமும் இருக்கிறது என அங்குள்ள குருக்கள் கூறினார்கள்.  மேலும் சங்கட சதுர்த்தி ஹோமத்தின் பிரசாதமும் கூப்பிட்டுக் கொடுத்தார்கள்.  உஙகள் சங்கடங்கள் தீரும் எனவும் கூறினார்கள்.  ஆனால் படம் எடுக்க அநுமதி தரவில்லை.  உச்சியில் அவரின் கோயில் மட்டுமே இருக்கிறது.  பின்னால் மலைப்பள்ளம்.  முன்னால் ஏறிவரும் படிகள்.  பக்கவாட்டில் ஒரு பக்கம் மணிமண்டபமும், வரும் வழியும். இன்னொரு பக்கம் பிரகாரம் போல மலையில் பாதை இருந்தாலும் பொது மக்கள் தவறி விழுந்து விடுவதாலும் சிலர் வேண்டுமென்றே அங்கே வந்து தங்கள் முடிவைச் செயல்படுத்துவதாலும் கம்பி கட்டி அங்கே போக முடியாமல் செய்திருக்கின்றனர்.

இந்தக் கோயிலில் குடைந்து எடுக்கப் பட்ட இரு குகைகள்/சமணப்படுக்கைகள்(?) உள்ளன.  அவற்றில் கிரந்தம், தமிழில் கல்வெட்டுக்கள் உள்ளன.  அங்கெல்லாம் போக முடியலை.  மலைக்கோட்டையின் உயரம் 275 அடியாகும்,  மேலே ஏறிச் செல்ல மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து மொத்தம் 417 படிக்கட்டுகள் என்கின்றனர்.  மலையிலேயே வெட்டிய கருங்கற்படிகள்.  இந்தத் திருச்சி மலைக்கோட்டை மகேந்திர பல்லவர் காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுவதாக அறிகிறோம்.  நாம் ஏற்கெனவே தரிசித்த தாயுமானவர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். அவ்வளவு உச்சியில் இந்தக் கோயிலின் கட்டுமானம் ஆச்சரியப் படத்தக்க ஒன்றாகும்.

17 comments:

  1. இவ்வளவு விளக்கங்கள் இன்று தான் தெரியும்... நன்றி அம்மா...

    ReplyDelete
  2. பிள்ளையார் பார்ட் தவிர்த்து மிச்ச கதையை ஆன்மீகப் பயணத்தில் ஏற்கெனவே படித்து விட்டேனே!

    ReplyDelete
  3. சிறுவயதில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு பலமுறை ஏறிப் போயிருக்கிறேன். அங்கு ஒரு அறையில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாகவும் அது தஞ்சாவூர் வரை செல்லும் என்றும் சொல்வார்கள். நிஜமா என்று தெரியாது. எப்போதும் அந்த அறை பூட்டியே இருக்கும்.

    உச்சிக்குப் பிள்ளையார் வந்த கதையை மிகவும் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. சுவாரசியம்.
    சோழர் கதை என்ன?

    ReplyDelete
  5. அவ்வளவு உச்சியில் இந்தக் கோயிலின் கட்டுமானம் ஆச்சரியப் படத்தக்க ஒன்றாகும்.

    நிறைய முறை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறோம் ..

    அதிகம் வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில் அந்த விக்னேஷ்வரே வந்து தன்க்கான கோவிலை குடும்பத்தோடு வந்து அமைத்துக்கொண்டாரோ ..!

    ReplyDelete
  6. சோழ மன்னன் தர்மவர்மா....மேலுலகத்தில் இருந்த இஷ்வாகு குலதனம் தன்னுடைய இடத்தில் இருக்க வேண்டும் என தவமிருந்தான்.

    பிள்ளையாரப்பனை பார்க்க ஏறிச் செல்லும் படிகள் ரொம்பவே பயமாக இருக்கும்...:)

    சமண படுக்கைகளை அடுத்த முறை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  7. வாங்க டிடி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  8. வாங்க ஸ்ரீராம், அதான் விரிவா எழுதலை! :))))

    ReplyDelete
  9. வாங்க ரஞ்சனி, முதல் முறை உ.பி. கோயில் பார்த்தப்போ அப்பாவோடு வந்தோம். எனக்குப் பத்து வயசு இருக்கும். அப்போ எல்லாம் பார்த்த நினைவு இருக்கு. அந்த அறை இன்னமும் பூட்டித் தான் இருப்பதாய்க் கேள்விப் பட்டேன். வரவுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. வாங்க அப்பாதுரை, சோழர் கதை தனியா வெக்காளி அம்மனோடு சம்பந்தப் பட்டது. அதனால் பின்னால் வரும். :)))))

    ReplyDelete
  11. வாங்க ராஜராஜேஸ்வரி, ஆமாம், பிள்ளையார் இல்லாமல் இப்படிக் கட்டி இருக்க முடியாது தான். அந்த இடத்தில் எப்படிச் சாரம் போட்டுத் தளங்கள் போட்டுக் கட்டினாங்கனு இப்போ நினைச்சாலும் ஆச்சரியம் தான்! :))))

    ReplyDelete
  12. வாங்க கோவை2தில்லி, நான் ஏற்கெனவே ஆன்மிகப் பயணம் பதிவுகளில், "ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்". தொடரில் விரிவாக எழுதி இருப்பதால் இங்கே அதிகத் தகவல்கள் கொடுக்கவில்லை.

    ReplyDelete
  13. ரங்கவிமானத்தை விபிஷணன் கீழே வைத்தது பற்றி தெரியும். பிள்ளையார் குட்டு பற்றியெல்லாம் எனக்கு தெரியாது மாமி. இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.மிகவும் சுவாரசியமாக இருந்தது பதிவு.

    ReplyDelete
  14. வாங்க ராம்வி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. சிறப்பான தகவல்கள்.... உச்சிப்பிள்ளையார் கோவிலில் பல இடங்களில் பூட்டி வைத்திருப்பார்கள் - அங்கே உள்ளே சென்று பார்க்க முடிந்தால் நல்ல தகவல்கள் கிடைக்கலாம்......

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், ஆமாம், நீங்க சொல்றது சரி. அனுமதி வாங்கறதும் ரொம்பக் கஷ்டமான வேலை. :(

    ReplyDelete
  17. பிள்ளையார் வந்த வரலாறு தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete