Friday, June 21, 2013

காதல் என்பது எது வரை! கல்யாண காலம் வரும் வரை!


சூரி சார் தன்னோட பதிவிலே பார்க்கிற பெண்கள் மேலெல்லாம் ஆசை வருதுனு ஒருத்தன் புலம்புவதைப்  பத்திச் சொல்லி இருக்கார்.  அப்படிப் பார்க்கிற பொண்ணுங்க எல்லார் கிட்டேயும் வழியறதுக்குப் பேர் காதலா? எப்போதுமே எதிர் எதிர் பாலினங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தான். ஆனால் அது எல்லாரிடமும் ஏற்பட்டால் அதன் பெயர் காதலே அல்ல. சில ஆண்கள் ஒருதலைப் பக்ஷமாக ஒரு பெண்ணைப் பார்த்து மனம் பறி கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணைத் துரத்திக் கொண்டு சென்று தங்கள் காதலைச் சொல்லி அவளையும் தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.  நம் தமிழ்த் திரைப்படக் காதல்கள் பெரும்பாலானவை இப்படியானதே. அதோடு இல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய், அந்தப் பெண்ணிடம், "என்னை விட்டா வேறே யாரு உன்னைக் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ வரப் போறாங்க!" என்று மறைமுகமாக மிரட்டுவதும் உண்டு.  பயத்திலே வருவதற்குப் பெயர் காதலா என்ன?  காதலனை நினைக்கையிலேயே காதலியின் மனம் மலர்ந்து போவது அவள் முகத்திலும், கண்களிலும் தெரியும்;  தெரிய வேண்டும்.  காதல் என்றால் உள்ளங்கள் தான் முதலில் பேசிக்கணும்.  உள்ளங்கள் ஒன்றுபட்டது கண் வழியே ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சுப்பாங்க.  அதுக்கப்புறமாத் தான்  நேரிலே சொல்றது எல்லாமும் நடக்கும்.  அப்போவும் உடனடியாகச் சொல்பவர்கள் இருக்க மாட்டாங்க.  தயங்கித் தயங்கி சொன்னால் தப்பாய் எடுத்துப்பாங்களோனு நினைப்பாங்க.

ஒருத்தருக்கொருத்தர் அசடு வழிஞ்சு சிரிச்சுப்பாங்க.  அவங்களையும் மீறி ஒரு நாள் உண்மை வெளிவரும்.  வரணும். அது வரைக்கும் ஏதோ சாதாரணமாப் பார்க்கிறது மாதிரி நினைச்சுட்டு, பேசிட்டு இருப்பாங்க. ஆனால் கண்கள் வழி உள்ளம் பேசிக்கிட்டு இருக்கும்.  இது எல்லாரிடமும் ஏற்படக் கூடிய ஒன்றல்ல.  தினம் தினம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்.  ஆனால் காதல் என்பது ஒருத்தரிடம் தான் வரும். ஒரு பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருத்தர் பார்க்கிறச்சே எல்லாரையும் பார்க்கிற மாதிரித் தான் பார்ப்பாங்க.  ஆனால் குறிப்பாக ஒருத்தரிடம் மட்டுமே மனம் திறக்கும்.  இது ஒரே சமயம் இருவரிடமும் நடக்கணும். இரண்டு பேருக்கும் இந்த உணர்வு தோணணும். சினிமாவிலே எல்லாம் வர மாதிரி துரத்தித் துரத்திக் காதல் வராது.  அதிலும் உண்மையான காதல் அப்படி எல்லாம் வராது.  வந்தால் அது தூண்டிவிட்டதுனு தான் சொல்ல முடியும். 

பூ எப்படி எந்த விதத் தூண்டுதலும் இல்லாமல் தானாக மலர்ந்து மணம் பரப்புகிறதோ உண்மையான காதலும் அப்படித்தான் மணம் பரப்பும். காதல் என்பது தோன்றும் வரை மணத்தை உள்ளே அடக்கிக் கொண்டு மலரானது மலர்வதற்கு எப்படித் தவிக்கிறதோ அப்படி மனமும் தவிக்கும்.  மலர்ந்து மணம் பரப்பியதும் அந்த சுகந்தத்தில் உலகமே தெரியாது. ஆனால் ஒண்ணு, காதல் எல்லாமே வெற்றியில் முடியறதில்லை.  தோல்வியும் கிட்டலாம். எது வந்தாலும் தாங்கிக்கும் மனோபாவம் வரணும்.  பழி வாங்கக் கூடாது.  இப்போதெல்லாம் ஒரு பெண் தன்னைக் காதலிக்கவில்லை எனில் துரத்தும் ஆண்கள் அந்தப் பெண்ணின் மேல் ஆசிட் ஊற்றிக் கொலை செய்கின்றனர்.  இப்படி நமக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைப்பது காதலே இல்லை. அன்பு அதுவும் உண்மையான அன்பு உள்ளத்தில் ஊற்றெடுத்தால் அதன் பிரவாஹத்தில் மூழ்குபவர்கள் ஆனந்தத்தைத் தான் அடைவார்கள். சுநாமி மாதிரிச் சுழன்றடிப்பது காதலே அல்ல. அருவி மாதிரிக் கொட்டவும் கூடாது.  ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும்.  மெல்ல மெல்ல ஆரம்பித்துப் பின்னர் வேகம் எடுக்க வேண்டும்.  தானால மலரும் உள்ளங்கள் தானாகவே இணையவும் ஆரம்பிக்கும். யாராலும் தடுக்க இயலாது. 

அதோடு இன்னொன்று. காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிச்சயமாய் வித்தியாசம் உண்டு.  காதலில் பல விஷயங்களை நாம் நம் அறிவுக் கண் கொண்டு பார்க்க மாட்டோம்.  பல குறைகள் தெரிய வராது.  அதே காதலர்களுக்குத் திருமணம் ஆன பின்னால் குறைகள் பூதாகாரமாகத் தெரிய வரும்.  பலவீனங்கள் அனைவருக்கும் உண்டு.  குறைகள் இல்லாத மனிதரும் இல்லை. ஆகவே இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் குறைகளோடும், பலவீனங்களோடும் துணையை ஏற்கும் மனம் வேண்டும்.

22 comments:

  1. /// பூ எப்படி எந்த விதத் தூண்டுதலும் இல்லாமல் தானாக மலர்ந்து மணம் பரப்புகிறதோ... உண்மையான காதலும் அப்படித்தான் மணம் பரப்பும்... ///

    பிரமாதம்... மற்ற கருத்துகளும் ஆலோசனைகளும் அருமை...

    ReplyDelete
  2. திருமணம் பூதக்கண்ணாடி - சொன்னீங்களே ஒரு சொல்!

    //காதல் என்பது தோன்றும் வரை மணத்தை உள்ளே அடக்கிக் கொண்டு மலரானது மலர்வதற்கு எப்படித் தவிக்கிறதோ அப்படி மனமும் தவிக்கும்.

    ஆகா! ஆகா!

    ReplyDelete
  3. உண்மையான அன்பு உள்ளத்தில் ஊற்றெடுத்தால் அதன் பிரவாஹத்தில் மூழ்குபவர்கள் ஆனந்தத்தைத் தான் அடைவார்கள். சுநாமி மாதிரிச் சுழன்றடிப்பது காதலே அல்ல. அருவி மாதிரிக் கொட்டவும் கூடாது. ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும். மெல்ல மெல்ல ஆரம்பித்துப் பின்னர் வேகம் எடுக்க வேண்டும். தானால மலரும் உள்ளங்கள் தானாகவே இணையவும் ஆரம்பிக்கும். யாராலும் தடுக்க இயலாது. //

    உண்மை நீங்கள் சொல்வது.

    ReplyDelete
  4. அத்தனையும் உண்மை, உண்மை, உண்மை. காதல் என்ற ஒரு சொல்லே போதும். அதில் உண்மைக் காதல், பொய்க்காதல் என்று இரண்டு இல்லை! :))

    ReplyDelete
  5. என்ன ஒரே கவித்துவமா இருக்கு!
    :-))))))))))))))
    நல்ல பதிவு!

    ReplyDelete
  6. //என்ன ஒரே கவித்துவமா இருக்கு!//

    ரிப்பீட்டேய்...!

    ReplyDelete
  7. பொய்க்காதல் இல்லையா?

    ReplyDelete
  8. குறைகளோடும், பலவீனங்களோடும் துணையை ஏற்க வேண்டும் - ரொம்ப practical!

    ReplyDelete
  9. சுநாமி மாதிரிச் சுழன்றடிப்பது காதலே அல்ல. அருவி மாதிரிக் கொட்டவும் கூடாது. ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும்.

    எண்ணப்பகிர்வுகள் அருமை..!

    ReplyDelete
  10. வாங்க டிடி, பாராட்டுக்கு நன்றிப்பா. :)

    ReplyDelete
  11. வாங்க அப்பாதுரை, ஹிஹிஹி, கவித்துவமா இருக்குனு சொல்றாங்க! :)))) எங்கேயானும் கவிதை எழுதிப் பயமுறுத்திடப் போறேன். :)))))

    ReplyDelete
  12. வாங்க ஸ்ரீராம், பொய்க்காதல்னு சொல்லாட்டியும் அந்த அர்த்தம் வருது தான். உள்ளத்தில் உண்மையான, ஆழமான அன்பில்லாமல் வெளிக்கவர்ச்சிக்கு மயங்கிடறவங்களைத் தான் சொன்னேன். இம்மாதிரிக் காதலில் கல்யாணம் செய்து கொண்டு பின்னர் வருந்தும் ஆட்களைப் பார்த்திருக்கேன். :((((((

    ReplyDelete
  13. வாங்க வா.தி. நல்லா இல்லை??? கவிதையா எழுதி இருக்கலாமோ! ஹிஹிஹி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நல்ல பதிவுனு சொன்னதுக்கு!

    ReplyDelete
  14. வாங்க கவிநயா, ரீபிட்டேக்கு ஒரு ரிப்பீட்டே நன்றி.:))))

    ReplyDelete
  15. மீள்வரவுக்கு நன்றி அப்பாதுரை, ஶ்ரீராமுக்குச் சொன்ன பதிலைப் பாருங்க. :)))))

    ReplyDelete

  16. எல்லாமே அனுபவித்து எழுதியதுபோல் இருக்கிறது. காதல் என்பது எதுவரை.? அது காலன் கொண்டு போக வரும்வரை.!.....

    ReplyDelete
  17. //அதில் உண்மைக் காதல், பொய்க்காதல் என்று இரண்டு இல்லை! :)) //

    காண்டேகர் இதில் கில்லாடி.

    அவர் சொல்லும் முதல் காதல்,
    காதலிக்கத் தெரிந்த அத்தனை பேரும் அறிந்த ஒன்று.

    ReplyDelete
  18. வாங்க ரஞ்சனி, ரொம்பநாளாச்சு பார்த்து! :)))

    குறைகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அப்புறமா அது பூதாகாரமாகப் பெரிதாகிப் பிரிவினைக்கு வழி வகுக்கும் இல்லையா? :)))))

    ReplyDelete
  19. வாங்க ராஜராஜேஸ்வரி, ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  20. வாங்க ஜிஎம்பி சார், ஒரு அனுபவமும் கிடையாது. என்னோடது பெற்றோர் ஜாதகம் பார்த்துக் குலம், கோத்திரம் பார்த்துச் செய்து வைத்த திருமணம்! :)))))))))))

    எழுதறவங்க எல்லாருமே அனுபவம் பெற்றுத் தான் எழுதணும்னு தேவை இல்லைனு நினைக்கிறேன். பொதுவாக இது என் கருத்து. அதை வெளிப்படையாகப் பகிர்ந்தேன். :)))))))

    ReplyDelete
  21. வாங்க ஜீவி சார், காண்டேகர் குறித்த உங்கள் பதிவைச் சீக்கிரம் போடுங்க. :))))) அல்லது போட்டுட்டீங்களா?

    ReplyDelete
  22. காதல் பற்றி நல்ல கருத்துகள்.

    ReplyDelete