Friday, October 11, 2013

சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள்! இரண்டாம் பகுதி


இந்தக் கதை அநேகமாக அனைவரும் அறிந்ததே.  எனினும் திரும்பச் சொல்கிறேன். அம்பிகையின் உடலைத் தூக்கிக் கொண்டு ஈசன் தாண்டவம் ஆடியபோது, மஹாவிஷ்ணு அதைப் பார்த்துவிட்டு அம்பிகையின் உடலைப் பல துண்டங்களாக்கினார்.  அவை அனைத்தும் பூமியில் விழுந்த இடங்களே சக்திபீடங்கள் எனப்படுகின்றன.  அந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடமே மேல் மலையனூர் என்று சொல்கின்றனர்.  இங்குள்ள அங்காளியம்மன் போட்ட பிக்ஷையால் தான் பிரம்ம கபாலம் ஈசன் கைகளிலிருந்து அகன்றது என்றொரு ஐதீகம்.  ஈசனைப் போலவே தனக்கும் இருந்த ஐந்து முகங்களால் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய மண்டை ஓடு அவர் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக் கொண்டது.

மண்டை ஓடு கைகளை விட்டு அகலவில்லை என்பதால் இது அம்பிகை பிக்ஷை அளித்தாலே தன் கைகளை விட்டு அகலும் என்பதை ஈசன் புரிந்து கொண்டதாகவும், அம்பிகை எந்த ஊரில் பிக்ஷை இடுகின்றாளோ அங்கே தான் மண்டை ஓடு அகலும் என்பதையும் புரிந்து கொண்டவராக பிக்ஷாடனக் கோலத்தில் ஊர் ஊராக அலைகிறார். மண்டை ஓட்டு மாலை அணிந்து நாகாபரணத்தையும் அணிந்து கொண்டு, இடுப்பில் புலித்தோலுடன், ஒரு கையில் உடுக்கையை ஏந்தி, இன்னொரு கையில் பிரம்மகபாலத்தோடு ஈசன் உலகெல்லாம் உய்வதற்காக பிக்ஷை எடுத்தான்.  சாதாரணக் கோலமா அது!  பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் கோலம் அன்றோ!  அதோடு சர்வ லோக நாயகனுக்கு பிக்ஷை இடும் தகுதி தான் யாருக்கு உண்டு!  அன்னை ஒருத்தியைத் தவிர எவரால் பிக்ஷை இட இயலும்?

இந்த நிகழ்வு நடந்த இடம் மேல் மலையனூர் என்றும் மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை அன்று அங்காளியானவள் தன் முழு பலத்தோடும், வலுவோடும் இருப்பதாகவும் அனைத்துக்கும் மூலாதார சக்தியானவள் அன்று சுடுகாட்டில் உள்ள ஆவிகள், பேய், பிசாசுகள், பூதங்கள் அனைவருக்குமே சூரை இடுவாள் என்றும் கூறுகின்றனர்.  இதை மயானக் கொள்ளை என்ற பெயரில் அழைக்கின்றனர்.  உலகெங்கும் அலைந்து திரிந்து பிக்ஷை எடுத்த சர்வேசன் கடைசியில் இங்கே வந்து சேர்ந்தான்.  அன்று மாசி மாத அமாவாசை நாள். ஈசன் அன்னையிடம் தன் திருவோட்டை ஏந்தி, 'பவதி பிக்ஷாம் தேஹி!' என்று கேட்க முதல் கவளம் சூரையை பிரம்ம கபாலத்தில் அன்னை போடுகிறாள்

அந்தக் கபாலத்தில் இருந்த பிரம்மஹத்தி ஆவலுடன் தனக்குக் கிடைத்த உணவை உடனே உண்கிறது.  இரண்டாவது கவளத்தையும் அன்னை கபாலத்திலேயே இடுகிறாள்.  அதையும் பிரம்மஹத்தி சாப்பிட்டு முடிக்கிறது.  உணவின் ருசியில் தன்னையும் மறந்த பிரம்மஹத்தி ஆவலுடன் எதிர்பார்க்கும் மூன்றாவது கவளத்தை அனனை சூரையாகச் சுடுகாட்டில் வாரி இறைத்துவிடுகிறாள்.  பிரம்மஹத்தி அந்தச் சூரையை உண்ணும் அவசரத்துடன் ஈசன் உடலில் இருந்து இறங்க வேண்டி கபாலத்துள் புகுந்து அதன் வழியே கீழே இறங்குகிறது.  கபாலம் ஈசன் கைகளை விட்டு அகன்று விட, கீழே இறங்கிய பிரம்ம கபாலம் சூரையைச் சாப்பிடுகிறது.  அப்போது ஈசன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்துவிட்டார்.  அதன் பின்னர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறினார் என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.  இதைத் தான் "சிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள்," எனப் பாடலாசிரியர் பாடி இருக்க வேண்டும். எனினும் வேறு சில புராணக்கதைகளும் இது பற்றிச் சொல்கின்றன.

இந்த பிக்ஷையையே அன்னபூரணி இட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன.  அதைக் குறித்து நாளை பார்ப்போம்.  நேரப் பற்றாக்குறையால் விரிவாக எழுத முடியவில்லை. 

9 comments:

  1. அருமையான பல விஷயங்கள் அறிந்து கொண்டோம்.

    அன்னபூரணியைக் காணும் ஆர்வத்துடன் அனைவரும்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வேறு சில புராணக்கதைகளும் -

    சிரமது அறுபட்ட பல புராணக்கதைகள் சுவாரஸ்யமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. வாங்க வைகோ சார், நன்றி.

    ராராஜேஸ்வரி, வரவுக்கு மிக மிக நன்றிங்க.

    ReplyDelete
  4. அம்பிகையின் கதையை அறிந்து கொண்டேன். தொடர்ந்து வருவேன்...

    ReplyDelete
  5. வாங்க வைகோ சார், பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  6. நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  7. வாங்க ஆதி, நன்றி.

    ReplyDelete
  8. சுவாரஸ்யமான கதைகள்.

    ReplyDelete
  9. தெளிவான விரிவான
    அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துகள்

    ReplyDelete