எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 26, 2016

இல்லம், இனிய இல்லம்! 2016

தெருவுக்கே நிழல் கொடுக்கும் வேப்பமரம்! 

Sunday, September 18, 2016

நிலா, நிலா! ஓடி வா! நில்லாமல் ஓடி வா!


நேத்துக் காலையிலேயே நடைப்பயிற்சியின் போது காமிரா எடுத்துச் செல்லலையேனு நினைச்சேன். இன்னிக்கும் மறந்துட்டுப் பாதிப் படிகள் ஏறினபின்னர் நினைவு வந்து எடுத்துப் போனேன். ஆனால் நேற்றுக் கண்ட மாதிரி இல்லை வானம்! இருந்தாலும் பரவாயில்லைனு எடுத்தேன். உ.பி.கோயில் தெரியுது பாருங்க பிரகாசமான விளக்குக்குப் பின்புறமா! என்னதான் ஜூம் பண்ணினாலும் இவ்வளவு தான் வருது! எனக்குத் தான் தொ.நு. தெரியாதே! ஆகவே போனாப் போகுதுனு விட்டுடுங்க! :) தெற்கே தெரியும் இது!

நிலாவைத் தான் எடுக்கக் காமிரா கொண்டு போனேன். நிலாவை மேற்கே அஸ்தமனம் ஆகும் முன்னர் காலை ஐந்தரைக்கு எடுத்தது இது. இதுவும் ஜூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பண்ணினது தான்! ஹிஹிஹி, இம்புடுதேன் வந்துச்சு!
நேற்றுக் கீழ்வானம் செக்கச் சிவந்திருந்தது. அந்த வண்ணக்கலவையைக் குழைக்க இன்று நேரமில்லை சூரியனுக்கு! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வண்ணத்தைத் தெளித்திருந்தான்! லேசாக இளமஞ்சள் கலந்த சிவப்பு வண்ணத்தைத் தெளித்திருந்தான். தனக்குத் தானே ஆரத்தி எடுத்துக் கொண்டான் போலும்!இவ்வளவெல்லாம் எடுத்துட்டு நம்மக் காவிரியம்மாவை எடுக்காமல் முடியுமா? அகண்ட காவிரியை வறண்ட காவிரியாப் பாருங்க! :)


இன்னொரு கோணத்தில் வறண்ட காவிரி!

Monday, September 12, 2016

நாங்களும் திம்போமுல்ல!

சிறு தானிய லாடு

கம்பு, குதிரைவாலி, தினை, சாமை, வரகு,(சோளம் இருந்தால் சோளரவை) அனைத்தும் சேர்த்து சமமாக ஒரு குழிக்கரண்டி போட்டு எடுத்துக் கொள்ளவும். இதற்குச் சமமாக கோதுமை ரவை எடுத்துக் கொள்ளவும். நான் கோதுமை ரவை ஒரு கிண்ணம் (200 கி) எடுத்துக் கொண்டேன். மற்றவை ஒவ்வொரு கரண்டி. எல்லாவற்றையும் நன்கு சிவக்க வறுக்கவும். வறுத்ததை மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும். நைசாக இருக்கணும்னா சலிக்கவும். நான் சலிக்கலை. அப்படியே போட்டுட்டேன். ரவையும் இல்லாமல் மாவும் இல்லாமல் கோலப் பொடி பதத்தில் இருக்கும். இதை அளந்து கொண்டு ஒரு கிண்ணம் ரவை மாவு எடுத்துக் கொள்ளவும் ஒன்றரைக்கிண்ணம் சர்க்கரை எடுத்துக்கவும். மிக்சி ஜாரில் சர்க்கரையைப் பொடிக்கவும். பொடிக்கையிலேயே அதிலே ஏலக்காயைச் சேர்க்கவும்.

இப்போது மாவு, சர்க்கரைப் பொடியை ஒன்றாகக் கலந்து வைக்கவும். ஒரு கிண்ணம் நெய் எடுத்துக்கவும். ஒரு வாணலியில் அரை க்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்புகளை ஒடித்துப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு கலந்த மாவில் கொட்டி விட்டு, அதே வாணலியில் மிச்சம் நெய்யை ஊற்றவும். நெய்யிலிருந்து புகை வரும் வரை சூடு செய்யவும். அந்தச் சூடு குறையாமல் தேவையான நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக லாடு மாவுக் கலவையில் ஊற்றவும். கொஞ்சம் நெய்யை நிறுத்திக் கொண்டு மாவைக் கரண்டியால் அல்லது இலைக்கரண்டியால் நன்கு கிளறி நெய்யும், மாவும் ஒன்றாகக் கலக்கும்படி கிளறி விடவும். சற்றே இளகின பதத்தில் இருந்தால் மாவு சரியாக வந்திருக்குனு அர்த்தம். ரொம்ப இளகி இருந்தால் எடுத்து வைத்திருக்கும் மாவை இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம். உதிர் உதிராக இருந்தால் நெய்யை இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கலக்கவும்.

முந்திரிப்பருப்பையும் போட்டு நன்கு கலந்த பின்னர் தனியாக எடுத்து வைக்கவும். நன்கு ஆறட்டும். உருண்டை பிடிக்கலாம். ஒவ்வொருவர் அடுப்பில் நெய்யைக் காய்ச்சிய வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாவில் நெய்யை ஊற்றிக் கொண்டு சுடச் சுடக் கையையும் சுட்டுக் கொண்டு உருட்டுவார்கள். இந்த முறையில் அதெல்லாம் தேவையே இல்லை. நல்லா ஆறிடுச்சுனு தெரிஞ்சதும் உருண்டைகளாக உருட்டவும். நேரம் ஆக ஆக உருண்டை நல்லா கெட்டிப்பட்டு விடும். நேத்திக்கு நெய் கலந்த மாவைப் பார்த்த ரங்க்ஸ் இதென்ன இப்படி இளகி இருக்குனு கிண்டல் பண்ணினார். இன்னிக்கு உருண்டை கெட்டியாக இருக்கு பாருங்க! தைரியமா எப்போ என்ன உருண்டை செய்தாலும் ரவா லாடு, பொட்டுக்கடலை லாடு, கடலைமாவு லாடு, ஜவ்வரிசி லாடு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு கலந்த மாவு லாடு, கோதுமை மாவு லாடுனு எதுவா இருந்தாலும் இம்முறையில் நெய்யைக் காய்ச்சி ஊற்றினால் ஆறியதும் நிதானமா உருண்டைகள் பிடிக்கலாம். சுவையான சத்தான உருண்டைகள்.


Sunday, September 11, 2016

மாதர் தம்மை இழிவு செய்து "மாதரையே" கொளுத்திடுவோம்! :(

பாரதியார் க்கான பட முடிவு

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும்படியா இருக்கு இன்றைய நிலைமை?

இன்று மஹாகவியின் நினைவு நாள். மஹாகவி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைத் தான் கொளுத்தச் சொன்னான். ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களைக் காதலிக்க ( என்ன அர்த்தம் இதுக்கு) மறுக்கும் பெண்களை வரிசையாய்க் கொன்று கொண்டிருக்கிறார்கள்! இது எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு நேற்றுப் பிரபலமான தொலைக்காட்சி சானலின் பிரபலமான தொடரில் பள்ளி செல்லும் பெண்ணை ஒருவன் துரத்தித் துரத்திக் காதலிப்பதோடு அந்தப் பெண்ணை, "ஐ லவ் யூ" என்று சொல்லும்படி வற்புறுத்துகிறான். அப்படி அந்தப் பெண் செய்யவில்லை எனில் அவள், அவள் அம்மா, கூட இருக்கும் இன்னொரு பெண்மணி மூவரையும் வீட்டுக்குள் அடைத்துப் போட்டுப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் போவதாகவும் பயமுறுத்துகிறான். அவன் பெரிய இடத்துப் பிள்ளை என்றும் அவன் செல்வாக்கிற்கு யாராலும் ஏதும் செய்ய முடியாது என்றும் பீத்தல், அலட்டல்! இப்போது நாடு அதிலும் முக்கியமாய்த் தமிழ்நாடு இருக்கும் நிலைமையில் இத்தகைய காட்சிகளோ அல்லது வசனங்களோ தேவையா என்றே தோன்றுகிறது!

பதினைந்து வயதிலிருந்து முப்பது வயதுக்குள்ளாகப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர் பெண்ணின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் பயப்படுகிறார்கள் எனில், முப்பது வயதும் அதற்கும் மேல் ஆன கல்யாணம் ஆன பெண்களோ கள்ளக் காதலில் ஈடுபட்டுக் கணவனைக் கொலை செய்வது, காதலனைக் கொல்வது, கள்ளக் காதலியைக் கொல்வது என்று ஏதோ கத்திரிக்காய், வாழைக்காயை நறுக்குவது போல் நறுக்கித் தள்ளுகின்றனர். முந்தாநாள் தினசரியில் மனைவி குடிக்கக் காசு தராத காரணத்தால் மனைவியின் கழுத்தை அரிவாளால் வெட்டிவிட்டுத் தலை மறைந்த கணவன் பற்றிய செய்தி! வரவரப் பத்திரிகைகள் முக்கியமாய் தினசரிகள், தொலைக்காட்சிச் செய்திகள்னு பார்க்கவே மனசுக்கு பயமாய் இருக்கிறது. எப்போ மாறும் இந்த நிலைமை?

மஹாகவியின் நினைவு நாளைக் குறித்துச் சொல்ல வந்துட்டு என்ன என்னவோ சொல்லிட்டுப் போறேன். ஆனால் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க விரும்பிய மஹாகவி இன்று உயிருடன் இருந்திருந்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பான் என்பது என்னமோ நிச்சயம்.


Wednesday, September 07, 2016

வேதனைக்கு மேல் வேதனை!

நேற்றைய செய்தி ஒன்று மனதை வேதனைப் படுத்துகிறது. இன்னமும் அதன் கோரத்தை ஜீரணிக்க முடியவில்லை. நேற்றுக் காலை வந்த மன்னார்குடி விரைவு வண்டியில் மாம்பலத்தில் ஓர் குடும்பம் இறங்க வேண்டும். இறங்கி இருக்காங்க. அவர்களிலே வயது முதிர்ந்த இருவர் முன்னால் இறங்கி இருக்காங்க. சரிதான். தப்பில்லை. அடுத்து இரு நடு வயதுக்காரர்கள் அல்லது இளைஞர்கள் இறங்கி சாமான்களை எல்லாம் இறக்கி இருக்காங்க. கடைசியில் கைக்குழந்தையுடன் அந்தக் குடும்பத்து மருமகள் இறங்குகையில் ரயில் கிளம்பிவிட்டது. யாருக்குமே பதட்டம் வரத் தான் செய்யும். இந்தப் பெண்ணும் பதட்டத்தில் செய்வதறியாது கிட்டத்தட்டக் குதித்திருக்கிறாள்.

ரயில் போகும் திசையிலேயே இறங்க வேண்டும் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தாலும் அப்போது இருந்த பதட்டத்தில் அதைக் கடைப்பிடிக்கத் தோன்றாது தான். கீழே உள்ளவர்களாவது அந்தப் பெண்ணிடமிருந்து குழந்தையை ஒருவர் வாங்கிக் கொண்டு இன்னொருவர் அநேகமாய்ப் பெண்ணின் கணவராகவும் இருக்கலாம், அந்தப் பெண்ணைக் கீழே இறக்கி இருக்க வேண்டும். வேடிக்கை பார்த்திருக்கின்றனர். விளைவு! குழந்தை ரயில் நிலைய நடைமேடையின் இடுக்கு வழியாக தண்டவாளத்தில் விழுந்து குழந்தையின் மேல் ரயில் சக்கரம் ஏறி இரண்டு துண்டாகி இருக்கிறது. அந்தப் பெண் குழந்தையைக் காப்பாற்றப் போய் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இப்போது இரண்டு கால்களையும் இழந்து தவிக்கிறாள்.

வயது முதிர்ந்தோரை இறக்கி விடும்போதே அந்தப் பெண்ணையும் சேர்த்தல்லவோ இறக்கி இருக்கணும்! குழந்தையுடன் இருக்கும் பெண்ணைக் கடைசியில் இறங்கச் சொல்லலாமா? ஒரு ஆண் ரயிலில் இருந்து கொண்டு சாமான்களைக் கொடுத்தால் கீழே உள்ளவர்கள் வாங்கி வைக்கலாம். பெரியவங்களாவது இறங்கும்போதே அந்தப் பெண்ணையும் கூடவே இறங்கும்படி வற்புறுத்தி இருக்கணும். அநியாயமாய் ஒரு சின்னப்பிஞ்சு உயிர் போனதோடு இல்லாமல் அந்தப் பெண்ணுக்கும் கால்களை இழக்க வேண்டிய கட்டாயம்! ஒரு சின்ன அஜாக்கிரதையினால் விளைந்த  விளைவு மிகக் கோரமாய் ஆகி விட்டது. இனி அந்தப் பெண்ணின் கதியை நினைத்தாலே கவலையும், பயமும் வருகிறது.

நான் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் பல்லவன் விரைவு வண்டியிலிருந்தோ அல்லது மலைக்கோட்டை விரைவு வண்டியிலிருந்தோ மாம்பலத்தில் இறங்கும்போதும், திரும்பி ஶ்ரீரங்கம் வருகையில் ஶ்ரீரங்கத்தில் இறங்கும்போதும் ஶ்ரீரங்கத்தில் பல்லவனில் ஏறும்போதும் திக் திக் திக் என்று கவலையும், பயமுமாக இருக்கும்.  ஏறி உட்கார்ந்ததும் தான் அப்பாடா என்று இருக்கும். அதே போல் வண்டியை விட்டு இறங்கினதும் தான் மூச்சே விட முடியும். அப்படியும் ஒரு முறை ஃப்ளாஸ்க், ஆகாரங்கள் அடங்கிய பையை ரயிலிலேயே விட்டு விட்டுக் கொஞ்ச தூரம் வந்த பின்னர் நம்ம ரங்க்ஸ் ஓடிப் போய் ரயிலில் ஏறி எடுத்து வந்தார். இறங்குகையில் ரயில் நகர ஆரம்பித்து விட்டது. அவருக்குப் பழக்கம் இருந்ததாலும் ரயில் கிளம்பி விடும் என்பது தெரிந்திருந்ததாலும் கவனமாகக் காலைக் கீழே வைத்து ரயில் ஓடும் பக்கமாக இறங்கினார். அதன் பின்னரே மூச்சு வந்தது.


அடுத்து ஒரு முறை மலைக்கோட்டை விரைவு வண்டியில் சென்னையிலிருந்து வருகையில் ராத்திரி முழுக்கத் தூங்கவே இல்லை. காலை அசந்து விட்டது. ஶ்ரீரங்கம் வந்ததே தெரியலை. யதேச்சையாக ரங்க்ஸ் எழுந்து பார்த்தால் ஶ்ரீரங்கம் ரயில் நிலையம். என்னை எழுப்பினார். நல்ல வேளையாக சாமான்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு பை தான். ஆகவே உடனே கீழே இறங்க ஆரம்பித்தோம். அப்படியும் நான் அங்கே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் என்ன நிலையம் என்பதைக் கேட்டுத்தெரிந்து கொண்டு அவர் உதவியோடு இறங்கினேன். பின்னாலேயே அவரும் இறங்கினார். இரு முறை இப்படி ஆகி இருக்கிறது. ஆகவே கூடியவரை காலை நேரத்துக்குப் போய்ச் சேரும் வண்டிகளில் செல்லக் கூடாது என்று எண்ணுகிறேன். நல்லவேளையா எனக்கோ அவருக்கோ தூக்கக் கலக்கம் இல்லை! பிழைத்தோம்! :(

வண்டி நிற்க அனுமதித்திருக்கும் நிலையங்களில் குறைந்த பட்சமாக மூன்று நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரை நிற்கவேண்டும் என்று ஓர் கட்டாய உத்தரவே பிறப்பிக்கலாமோ என்று தோன்றுகிறது. இல்லை எனில் காசைப் பார்க்காமல் எழும்பூர் வரை சென்று திரும்பி வர வேண்டும். வேறு வழியில்லை. காசு போனால் சம்பாதிக்கலாம்! உயிர்? அதிலும் இப்போது பெண்களுக்கு மிகவும் சோதனைக்காலம் போல இருக்கிறது! :(

Monday, September 05, 2016

பிள்ளையார் வந்தாரா? கொழுக்கட்டை கொடுத்தீங்களா?


பூஜைக்குத் தயாராகக் காத்திருக்கும் பிள்ளையார்கள், எட்டுப் பிள்ளையார்கள் இடம் பெற்றிருக்கின்றனர். :) இடக்கோடியிலிருக்கும் பிள்ளையார் தான் கீழே விழுந்து சின்னக் காயம் பட்டவர். :(


தேங்காய்க் கொழுக்கட்டை, உளுந்துக் கொழுக்கட்டை, இட்லி, வடை, அப்பம், பாயசம், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, கரும்பு மற்றும் சாதம், பருப்பு. 


அர்ச்சனை நடக்கும்போது

நம்ம ராமர் இன்றைய தினம் அந்தப் பிரதிபலிப்பு இல்லாமல்

கீழே உள்ள பூதேவி, ஶ்ரீதேவி சமேதரான மஹாவிஷ்ணுவுடன் ரிஷபாரூடர், மீனாக்ஷி, அன்னபூரணி போன்றவர்கள். 
 தீபாராதனை!


Saturday, September 03, 2016

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??

நாளை சாமவேதிகளுக்கு ஆவணி அவிட்டம். இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும்.  .  இந்த வருடம் செப்டம்பர் நான்காம்  தேதி ஞாயிறு அன்று சாமவேதிகளுக்கான உபாகர்மா!

தகவல்களுக்கு நன்றி:தெய்வத்தின் குரல்!

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.  .  பொதுவாக மீள் பதிவு போடுவதில்லை;  என்றாலும் இது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் கடந்த சில வருடங்களாகப் போட்டு வருகிறேன்.  ஏற்கெனவே படித்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  நன்றி. பொறுத்தருள்க! :)))))