எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 24, 2019

ஆஹா, இதெல்லாம் என்ன?

இந்தப்படத்தில் இருப்பவர்கள் யார்? சொல்லுங்க,பார்ப்போம்!


ஏற்கெனவே இந்தப்படத்தைப் பார்த்தவங்க ஆட்டத்தில் கலந்துக்கக்கூடாது! கீழே இருப்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா?





இது தான் சிரிப்பாச் சிரிச்சுடுச்சே நிறையவே!


நேற்றுஅல்லது முந்தாநாள் வீடு பற்றிப் பேச்சு வருகையில் அதிரா அவருடைய இலங்கை வீட்டை நினைவு கூர்ந்திருந்தார். எனக்கும் எங்க அம்பத்தூர் வீடு நினைவில் வந்தது. கீழே வீட்டு வாசலில்தெருவுக்கே நிழல் கொடுத்துக் கொண்டிருந்த வேப்ப மரம். இப்போ இருக்கா இல்லையானு தெரியலை.  வெட்ட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொண்டோம். :(




வீட்டிற்குள் நுழையும் வாயில்.உள்ளே வராந்தா, அடுத்துக்கூடம்.  முக்கிய நுழைவாயில்க் கதவுக்கும் வராந்தாக் கதவுக்கும் இடையே பத்து அடிக்கும் மேல் இடம் விட்டிருந்தோம்.




மரப்பசுமைக்குப்  பின்னர் பச்சையாய்த் தெரிவது மாடியின் மேல் முதல் தளத்தில் போட்டிருந்த ஷெட்!

இல்லம் இனிய இல்லம் க்கான பட முடிவு


வீட்டு வாசலில் அமர்ந்து கொள்ள பெஞ்ச் போட்டிருந்தோம். மாலை வேளைகளில் அதில் உட்கார்ந்து புத்தகம் படிக்க, டேப் ரிகார்டர் போட்டுக் கேட்க, அக்கம்பக்கம் உள்ளவர்களோடு அங்கிருந்தபடியே அரட்டை அடிக்க என நினைவுகள், நினைவுகள், நினைவுகள்!


மேலே உள்ள படங்கள் எல்லாம் 2016 ஆம் ஆண்டில் எடுத்தவை. கீழே பார்க்கப் போகும் படங்கள் 2011 ஆம் ஆண்டில் நாங்க வீட்டை விட்டுக் காலிசெய்ய நேர்ந்ததற்கான காரணங்களுடன் கூடிய படங்கள். வீட்டு வாசலில் ஒரு பக்கம் ஜல்லிமலை, இன்னொரு பக்கம்  மணல் குன்று. வழியில் எல்லாம் இரும்புக் கம்பிகள். செங்கல்கள்!





இந்த மணல் குன்று கரைந்தால் தான் நாங்க வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர முடியும். வெளியே இருந்து உள்ளே வர முடியும். இதைக் குவித்திருந்த நாளன்று என் மாமனாரின் ச்ராத்தம். யாருமே வர முடியாமல் பக்கத்துக் குடியிருப்பு வளாகத்தின் வழியாக எங்க சுற்றுச் சுவர் உயரம் கம்மி என்பதால் எல்லோரும் புரோகிதர்கள் உட்பட ஏறிக் குதித்து வந்தார்கள். பால்காரர் இதை எல்லாம் பார்த்து விட்டுப் பாலே கொடுக்கவில்லை.



நாங்க எங்க வீட்டிலிருந்து மண்வெட்டி, பான்டு போன்றவை எடுத்து வந்து வாசல் மணல் மலையைக் கொஞ்சம் நகர்த்திவிட்டுச் சரி செய்து வீட்டுக்குள் ஒரு காலையாவது உள்ளே நுழையும்படி செய்தோம்.


அந்தச்சமயம் வந்த கிருஷ்ணன் பிறப்பின் முதல்நாள் தான் முதல் முறையாகத் தண்ணீர் வீட்டுக்குள் வந்தது. காலை மூன்று முதல் எட்டு மணி வரை தண்ணீரை இறைத்துக் கொட்டி விட்டுப் பின்னர் செய்த பக்ஷணங்கள் இவை. கிருஷ்ணனிடம் உனக்கே இது நியாயமா எனக் கேட்டேன் அன்று.



இடர் விலக வேண்டும் எனக் கிருஷ்ணன் பிறப்புக்குப் பின்னர் வந்த மஹாசங்கடஹர சதுர்த்தி அன்று செய்த கணபதி ஹோமம். இந்த ஹோமம் செய்து சரியாய் ஒரே மாதம் தான் அந்த வீட்டில் இருந்தோம். அதன் பின்னர் அந்த வீட்டைக் காலிசெய்து கொண்டு என் நாத்தனாரின் ஓரகத்தி வீட்டுக்குக் குடித்தனமாகப் போனோம். அடுத்து வந்த மாதங்களில் அம்பேரிக்கா போனதால் அங்கே எடுக்கப்பட்ட முடிவு தான் ஶ்ரீரங்கத்துக்குக் குடித்தனம் வருவது.



அம்பத்தூர் வீட்டுக் கூடத்தில் நடுவில் அமைக்கப்பட்ட சுவாமி அலமாரி. மேல் தட்டில் ராமரும் கீழே மண்டபத்தில் விக்ரஹங்களும் வைத்திருந்தோம். மண்டபத்தை அங்கேயே கொடுத்து விட்டுவந்து விட்டோம்.



இது அம்பத்தூரில் ஒரு கார்த்திகை அன்று எடுத்த படம். 2010 ஆம் வருடம் என நினைக்கிறேன்.



கொல்லைத் தோட்டத்தில் நம்ம செல்லம் படுத்துக் கொண்டிருக்கையில் ஃபில்ம் காமிராவில் எடுத்த பழைய படம்.



வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்தப்போ மாடிப்படி அடியில் தேங்கி இருந்த தண்ணீரில் காணப்பட்ட நண்டுகள்.




இந்த மீன் கொத்தி நாங்க அந்த வீட்டுக்குப் போனதில் இருந்து எனக்குப் பழக்கம். எங்க கொல்லைக் கிணற்றுக்குள் டைவ் அடித்துப் போகும். ஒருநாள் மதியம் கிணற்றில் இறங்கி விட்டு ஓய்வு எடுத்தபோது எடுத்த படம். இதுவும் 2009 அல்லது 2010இல் இருக்கும்.



இதைத் தான் பாரிஜாதம் என்பார்கள். எல்லோரும் பவளமல்லிப் பூவைப் பாரிஜாதம் என்கின்றனர்.  ஆனால் இது தான் உண்மையில் பாரிஜாதம். வாசனை அக்கம்பக்கமெல்லாம் பரவும். ஊரைத் தூக்கும்.



ஹாஹாஹா, இதுக்கு முன்னால்  தான் ஆறு மாசத்துக்கு ஒரு முறை பிரசவத்துக்கு ஒரு மியாவ் வந்துடும். அதுக்குப் பிரசவம் பார்த்துப் பத்தியம் வடிச்சுப் போட்டுனு எனக்கு ஒரே அலுப்பா இருக்கும்.  இருந்தாலும் நல்ல பொழுது போக்காத்தான் இருந்தது. அதைத் தான் நாய்கள்........ :( குட்டிகளும் சேர்ந்து அம்மாவுடன்  போய்ச் சேர்ந்து விட்டன. இது அதற்கு அப்புறமா வந்ததுனு நினைக்கிறேன். கொல்லைக்கிணற்றடியில் காற்றாடப் படுத்து இருந்தப்போ எடுத்த படம். வட்டமாய்த் தெரிவது கிணறு.

முன்னெல்லாம் கௌதமன் சார் ஞாயிறன்று எங்கள் ப்ளாகில் படங்கள் போடுவார்.அதற்கேற்றாற்போல் போட்டிப் படம் எங்கே இருந்தாவது எடுத்து வந்து போடுவேன்.  இப்போல்லாம் சுற்றுப்பயணப் படங்கள் வருவதால் போடுவதில்லை. இன்னிக்கு அதுவும் நினைப்பு வந்தது.  எல்லோரும் பார்த்து ரசியுங்கள். 

Friday, February 22, 2019

குறுக்குத்துறை முருகன் கோயிலில்!

அடுத்து  மறுநாள் நாங்க சென்றது குறுக்குத்துறை முருகன் கோயில். போனமுறை வந்தப்போப் பார்க்க நினைச்சுப் போக முடியலை! இந்த முறை வெள்ளம் இல்லாததால் போயிடணும்னு முடிவு செய்து விட்டோம். சிந்துபூந்துறை என்னும் அழகான பெயர் கொண்ட துறைக்கு இது குறுக்கு வழி என்பதாலும் பெரும்பாலும் மக்கள் விரைவில் போக வேண்டி இந்தக் குறுக்கு வழியைப் பயன்படுத்தியதாலும் இதற்குக் குறுக்குத் துறை என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்வார்கள்.

இந்தத் துறையில் அநேகமாய்ப் பாறைகள் நிறையக் காணப்படும். இந்தப் பாறைகள் சிற்பங்கள், சிலகள் செய்யப் பயன்படும். ஆகையால் இந்த இடத்தைத் திருவுருவாமலை என்றும் சொல்லுவார்கள்.  இறைவன் திருவுருவங்களை இந்தப் பாறையில் வடித்திருக்கின்றனர். முக்கியமாய்த் திருச்செந்தூரில் இருக்கும் முருகனின் மூல விக்ரஹம் இந்தப் பாறையில் 1653 ஆம் ஆண்டில் வடிக்கப்பட்டதாய்க் கூறுகின்றனர். அதே சிற்பி இங்கேயும் மற்றொரு முருகன் விக்ரஹத்தைச் செதுக்கினதாகவும் அதுவும் இங்கேயே இருப்பதாகவும் சொல்கின்றனர்.

கோயிலில் நுழைந்ததும்காணப்பட்ட முன் மண்டபம்


இது ஒரு குடவரைக் கோயில். கருவறை, மூலவர், உள் பிரகாரம் ஒரு பகுதி ஆகியன ஒரே பாறையில் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலும் இதைத் திருவுருவாமலை என அழைக்கின்றனர். இது தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கிறது எனச்சொல்லப்பட்டாலும் ஆற்றின் உள்ளே காணப்படுகிறது. கரைக்கு அருகே  சிறிது தூரத்திலேயே வண்டிகளை நிறுத்திவிட்டு நடந்து போக வேண்டுமாம் முன்னெல்லாம். ஆனால் இப்போது நீர் வடிந்திருப்பதாலும் பாதைகொஞ்சம் போடப் பட்டிருப்பதாலும் கொஞ்ச தூரம் உள்ளேயே சென்று கோயில் வாசலுக்கு அருகிலேயே வண்டியை நிறுத்தினார் ஓட்டுநர். கோயில் வாசலில் கோயிலுக்கு எதிரே தாமிரபரணி! கோயிலைச் சுற்றிலும் தாமிரபரணி.




இது கோயில் பிரகாரத்தில் வெளியே காணப்பட்ட நீராழி மண்டபம்னு நினைக்கிறேன். பலரும் முக்கியமாய்ப் பெண்கள் அதிகம் குளித்துக் கொண்டிருந்தபடியால் அங்கே அருகே சென்று படம் எடுக்க வில்லை. ஆனால் குழந்தைகள், சிறுமிகள் எனப் பலரும் குளித்துக் கொண்டும் நீச்சல் அடித்துக் கொண்டும் நீச்சல் கற்றுக் கொண்டும் இருந்தனர். பார்க்கவே மனதுக்கு ரம்மியமாக இருந்தது.  திருநெல்வேலியில் அநேகமாக அனைவருமே ஏதேனும் ஓர் வழியில் தாமிரபரணிக்கு வந்து அங்கே நதியில் குளித்து நீராடித் துவைத்துக் கொண்டு அங்கே கரையிலேயே இருக்கும் பிள்ளையார்/மற்றக் கடவுளரை வணங்கி விட்டு நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு (ஆண், பெண் அனைவருமே) சுத்தமாகக் காட்சி அளிக்கின்றனர். அதிலும் அதிகாலையிலேயே இதைக் காண முடிகிறது. ஊரிலும் குப்பை அதிகம் இல்லை.  நாங்க இருந்த ஓட்டல் சந்துக்குள் என்றாலும் குப்பையைப்பார்க்க முடியலை. ஜங்க்‌ஷன்பக்கம் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் குப்பை. 






                                                                கோயில்  வாசலில்


இது இன்னொரு கோணம்


கோயில் வெளியே 


இது கோயிலில் சந்நிதிக்கு நேரே


நாங்க வந்த வண்டி தான் அங்கே நிற்கிறது.

எல்லாக்கோயில்களிலும் இந்தத் தாமிரபரணி நீர் தான் அபிஷேஹத்துக்குச் செல்லும்.  ஆனால் இங்கே வருஷத்துக்கு ஒரு முறை தாமிரபரணி அன்னையே முருகனுக்கு அபிஷேஹம் செய்து ஆனந்தப்படுகிறாள்.  மழைக்காலத்தில் இந்தக் கோயில் முழுவதும் மூடிக்கொள்ளும் என்கின்றனர். அப்போது இங்கு உள்ள உற்சவர் சிலைகளைக்  கொஞ்சம் தள்ளி மேலக்கோயில் என்னும் இடத்தில் கொண்டு போய் வைப்பார்களாம்.  இந்தக் கோயில் இருக்கும் இடம் திருவுருவாமலை என அழைக்கப்படுவதால் பழனிக்கு உள்ள புனிதம் இங்கேயும் உள்ள முருகனிடம் உண்டு என்கின்றனர்.  பழனிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே சென்று விட்டு வந்தால் போதும் என்கின்றனர்.  அதே போல் மேலக்கோயில் திருச்செந்தூர் முருகனைச் செதுக்கிய சிற்பி செய்த சிலை இருப்பதால் அதுவும் திருச்செந்தூரும் ஒன்று என்போரும் உண்டு.  பழனிக்கும் திருச்செந்தூருக்கும் சென்றால் ஏற்படும் நன்மைகள்  இந்தக் கோயிலுக்கும் மேலக்கோயிலுக்கும் சென்றால் ஏற்படும் என்கின்றனர்.

திருச்செந்தூர்க் கோயில்  உருவான போதே இந்த மேலக்கோயிலும் தோன்றி இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். திருச்செந்தூர் முருகன் சிலை உருவாக்கப்பட்டு இங்கிருந்து திருச்செந்தூர் போனதால் இது தான் திருச்செந்தூர் முருகனின் பிறந்தகம் என்போரும் உண்டு. அவரைப் போலவே உள்ள மற்றொரு சிலை தான் இங்கே மேலக்கோயிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர். நாங்க போனப்போ மேலக் கோயில் திறக்கலை. அல்லது சீக்கிரம் மூடி விட்டார்கள் என எண்ணுகிறேன்.  இந்தப் பாறையில் முருகன் செதுக்கப்பட்ட வரலாறாகச்சிற்பி செதுக்கிய முருகனை அங்கிருந்து  பிரிக்க முடியாததால் முருகன் அப்படியே வெயில், மழை, காற்றில் அடிபட்டுக் கிடந்ததாகச் சொல்கின்றனர். பாதுகாப்பில்லாமல் ஓர் பாறையில் ஆற்றின் நடுவே கிடந்த இந்த முருகனை  அந்த நதிக்குத் தினந்தோறும் நீராட வரும் ஓர் பெண்மணி பார்த்திருக்கிறார்.  அவர் மகன்வடமலையப்ப பிள்ளை என்னும் பெருந்தனக்காரர். அந்தப் பெண்மணி இந்த முருகனைத் தொடர்ந்து வணங்கி வந்துள்ளார்.  முருகனை வெயில், மழை, காற்றிலிருந்து பாதுகாக்க ஓலைக்கூரை போட்டிருக்கிறார். அதிசயங்கள் நடக்க ஆரம்பிக்க சுப்ரமணியரும் பிரபலம் அடைய ஆரம்பித்தார்.பின்னர் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இந்தக் கோயில் வந்ததும் அவர்கள் முறைப்படி அர்த்த மண்டபம், கர்பகிரஹம், முன் மண்டபம், அதை அடுத்த மகா மண்டபம் எனக் கட்டிக் கோயிலுக்குத் திருப்பணி செய்திருக்கின்றனர்.

திருச்செந்தூர் முருகனை டச்சுக்காரர்கள் தூக்கிக்கொண்டு செல்லும்போது கடலில் மூழ்கத் திரும்பவும் வடமலையப்ப பிள்ளை முருகனைப் பிரதிஷ்டை செய்யச் சிலை செய்தார். ஆனால் திருச்செந்தூர் முருகனே தான் இருக்குமிடத்தைத் தெரியப்படுத்தவும், அப்போது செய்யப்பட்ட சிலையும் இந்தக் கோயிலில் தான் உள்ளது.  பஞ்ச மூர்த்திகளும் தம் தம் தேவியருடன் காட்சி அளிக்கின்றனர். (வழக்கம் போல் உள்ளே படம் எடுக்கத் தடை) குருக்களைச் சில விஷயங்கள் கேட்டதற்குப் பெரிய அளவில் உதவி செய்யலை. தலையை ஆட்டிவிட்டுப் பேசாமல் இருந்து விட்டார்.  {எல்லோருக்குமே நெ.த. போல் முகராசி இருக்கணுமே!  நமக்கு வீட்டிலேயே கிடையாது! :))))) } கருவறையில் சுயம்புவாக சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.  தாமிரபரணியில் வெள்ளம் வரும்போதெல்லாம் இவருக்குஅபிஷேஹம் நடப்பதோடு அந்த நீரிலேயே ஆனந்தமாக மூழ்கிக் கிடப்பார் இவர்.

எல்லாத் திருநெல்வேலிக் கோயில்களையும் போல் இங்கேயும் நெல்லையப்பர்,காந்திமதி தவிர மீனாக்ஷி,சொக்கர்சந்ந்திகளும், நடராஜர்,சிவகாமசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. ஷண்முகரும் ஆறு முகங்களோடு வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். உள் சுற்றில் பஞ்ச லிங்கங்கள், அம்பிகையுடன் காட்சி தருகின்றனர்.  இங்கு வந்து பிரார்த்தித்துக் கொள்பவர்களுக்குத் திருமணத் தடை நீங்கும் எனச்சொல்லப்படுகிறது.  குழந்தைகளுக்கு தோஷம் நீங்க இங்கே வந்து குழந்தைகளைக் கருப்பட்டி, தவிடு ஆகியவற்றுக்கு விற்றுவிட்டுப் பின்னர் வாங்கிச் சென்றால் குழந்தைகள் தோஷம் நீங்கி ஆரோக்கியமாக வளருவார்கள் என்பது இங்குள்ள மக்களின் ஐதிகம். கோயில் காலை ஆறு மணியிலிருந்து பனிரண்டு மணி வரை திறந்திருக்கிறது. மாலையில் சீக்கிரமாய் மூடிவிடுவார்களாம். நான்கு மணியில் இருந்து ஏழு மணிக்குள்ளாக வந்து பார்த்துவிட்டுத் திரும்பி விட வேண்டும். 

Tuesday, February 19, 2019

தாத்தாவுக்கு நமஸ்காரங்கள்!

உ.வே.சா க்கான பட முடிவு

அப்படிச் சொல்லலாமா?

பாலவனத்தம் ஜமீன்தாராக இருந்தவரும், தமிழன்பு மிக்கவரும், இப்போது மதுரையிலுள்ள தமிழ்ச்சங்கத்தின் ஸ்தாபகருமாகிய ஸ்ரீமான் பொ.பாண்டித்துரைத் தேவரவர்கள் ஏறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் ஒருமுறை தம் பரிவாரங்களுடன் கும்பகோணத்திற்கு வந்திருந்தார்கள். அவருடைய அன்பரும் ஸேது சம்ஸ்தானத்துச் சங்கீத வித்துவானுமாகிய பூச்சி ஐயங்காரென்று வழங்கும் ஸ்ரீநிவாஸ ஐயங்காரும் அப்போது அவருடன் வந்திருந்தார். ஐயங்கார் அக்காலத்தில் சிறு பிராயத்தினர்; பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடத்திலும் மகாவைத்தியநாதையரிடத்திலும் அவர் இசைப் பயிற்சி பெற்றவர்; அவர் முன்னுக்கு வந்து புகழடைய வேண்டுமென்ற விருப்பம் பாண்டித்துரைத் தேவருக்கு மிகுதியாக இருந்தது. அதனால் கும்பகோணத்திலிருந்து திரும்புகையில் அங்கிருந்த அன்பர்களிடம், "இவரைப் பிரகாசப்படுத்தவேண்டும்" என்று சொல்லிவிட்டு அவர் இராமநாதபுரம் சென்றார். ஸ்ரீநிவாசையங்கார் மட்டும் கும்பகோணத்தில் தங்கினார்.


அக்காலத்தில் கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ ஸாது சேஷையர் முதலிய பல கனவான்கள் சேர்ந்து ஸ்ரீநிவாசையங்காருடைய சங்கீதக் கச்சேரி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தனர். கச்சேரி அந்நகரத்துள்ள "போர்ட்டர் டவுன் ஹாலில்" நடைபெற்றது. நகரத்திலிருந்த கனவான்களும், உத்தியோகஸ்தர்களும், சங்கீத வித்துவான்களும், வேறு பலரும் வந்திருந்தார்கள். கூட்டம் மிகுதியாக இருந்தது; அம்மண்டபம் முழுவதும் எள்ளிட இடமில்லை.


ஸ்ரீநிவாசையங்கார் மிகவும் அருமையாக அன்று பாடினார். திருக்கோடிகாவல் கிருஷ்ணையர் முதலிய வித்துவான்கள் அந்தக் கச்சேரியில் பிடில் முதலியன வாசித்துச் சிறப்பித்தனர். சங்கீத ரஸிகர்கள் பலர் நிறைந்த அந்தப் பெரிய நகரத்துக்கேற்றபடி ஸ்ரீநிவாச ஐயங்காருடைய பாட்டு அமைந்திருந்தது. அவருக்கு அன்று ஒரு தனி ஊக்கம் உண்டாயிற்று. கச்சேரிக்கு வந்திருந்த யாவரும் ஐயங்காருடைய கானாமிர்தக் கடலில் மூழ்கித் தம்மையே மறந்திருந்தனர். பலர் தங்கள் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கு அவரை வருவித்துப் பாடச் செய்யவேண்டுமென்று அப்போது தீர்மானித்தனர்.


கச்சேரி முடிவடைந்த பிறகு அவ்வித்துவானைப்பாராட்டிச் சில வார்த்தைகள் சொல்லவேண்டுமென்று ஸாது சேஷையர் என்னிடம் சொன்னார். அவரைப் பற்றிப் பின்வருமாறு பேசினேன்:

"ஆறு சுவைகளும் நிரம்பிய விருந்துணவை உண்டுவிட்டு அந்த உணவைப்பற்றி ஒரு பிரசங்கம் செய்யவேண்டுமென்றால் அது முடியுமா? அதுபோல ஸீநிவாசையங்காரளித்த சங்கீத விருந்தை நுகர்ந்து எல்லாம் மறந்திருக்கும் இந்த நிலையில் பேசுவதற்கு எப்படி முடியும்? என்னைப் போலவே எல்லோரும் இருக்கிறீர்களென்பது எனக்குத் தெரியும். சங்கீதத்திற் பெயர் பெற்ற சோழநாட்டிற் பரம்பரையாகச் சங்கீத வித்துவான்கள் வாழ்ந்துவரும் இந்த நகரத்தில், பாண்டி நாட்டிலிருந்து ஒரு வித்துவான் வந்து எல்லோரையும் மயக்கி விட்டாரென்பதை நினைக்கையில் எனக்கு ஆச்சரியம் மேலிடுகின்றது. இந்தச் சிறு பிராயத்திலேயே இவ்வளவு திறமையோடு விளங்கும் இவர் இன்னும் சிலகாலத்தில் நம்முடைய நாட்டிலுள்ள யாவருடைய உள்ளத்தையும் கவரும் ஆற்றலுடையவராவாரென்பதில் சந்தேகமில்லை. இந்த நகரத்தில் முன்பு த்ஸெளகம் ஸ்ரீநிவாசையங்காரென்று ஒரு பழைய சங்கீத வித்துவான் இருந்தார். அவர் தஞ்சாவூரிலிருந்த சிவாஜி மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டவர். இந்நகரில் சக்கரபாணிப்பெருமாள் ஸந்நிதியில் அவ்வரசர் கட்டளைப்படி இருந்து பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார். அவரை யாவரும் த்ஸெளகம் சீனுவையங்காரென்றே வழங்குவார்கள். இந்த நகரத்தில் வேறொரு ஸ்ரீநிவாசையங்கார் வந்து எல்லோருக்கும் சங்கீதத் தேனைப் புகட்டிப் புகழ்பெறப் போகிறாரென்பதை நினைந்து அவருடைய இயற்பெயராகிய ஸ்ரீநிவாசையங்காரென்பது சீனுவையங்காரென்று முன்பே குறைந்துவிட்டது போலும்" என்று பேசிப் பாராட்டினேன்; அப்பொழுது புதிதாக இயற்றிய பாடலொன்றையும் சொன்னேன். பிறகு ஸ்ரீநிவாசையங்கார் தக்க சம்மானம் பெற்று ஊர் போய்ச் சேர்ந்தார்.


கும்பகோணத்தில் அக்காலத்தில் பக்தபுரி அக்ரஹாரத்தில் கோபாலையரென்ற ஒரு தமிழ் வக்கீல் இருந்தார். அவர் தஞ்சாவூர் சம்ஸ்தானத்தில் சங்கீத வித்துவானாக இருந்து புகழ்பெற்ற பல்லவி கோபாலையருடைய பேரர். அவர் தம்முடைய பாட்டனார் பெற்ற சர்வமானியங்களை வைத்துக் கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தார். அவருக்குச் சங்கீதத்திலும் நல்ல பழக்கம் உண்டு. பல பழைய வித்துவான்கள் இயற்றிய கீர்த்தனங்களும் மற்ற உருப்படிகளும் அவருக்கு ஆயிரக்கணக்காகப் பாடம். பல்லவி கோபாலையருடைய சாகித்தியங்களையும், த்ஸெளகம் சீனுவையங்காருடைய கீர்த்தனங்களையும் அவர் அடிக்கடி பாடிக்கொண்டேயிருப்பார்; அவ்வூருக்கு வரும் சங்கீத வித்துவான்களெல்லோரும் அவர் வீட்டிற்குச் சென்று அவரோடு பேசியிருந்துவிட்டுச் செல்வார்கள்; அவரிடமிருந்து சில கீர்த்தனங்களைக் கற்றுக்கொண்டும், தமக்குத் தெரிந்த கீர்த்தனங்களிற் பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொண்டும் போவார்கள்.


பூச்சி ஐயங்கார் கும்பகோணத்திற்கு வந்த காலத்தில் முற்கூறிய கோபாலையருக்குப் பிராயம் ஏறக்குறைய எழுபதுக்கு மேல் இருக்கும். ஐயங்கார் அவரைப் போய்ப் பார்க்கவில்லை. அவரும் கச்சேரிக்கு வரவில்லை.


பூச்சி ஐயங்காரது கச்சேரி நடந்த மறுநாள் யாரோ ஒருவர் கோபாலையரிடம் சென்று, "த்ஸெளகம் சீனுவையங்கார் பெயர் இவருடைய பெருமையை நோக்கிக் குறைந்துவிட்டது" என்று நான் பேசினதைச் சொல்லிவிட்டனர். தம்மிடம் ஐயங்கார் வாராமையால் இயல்பாக அவருக்கு இருந்த கோபத் தீ பின்னும் மூண்டெழுந்தது. "அப்படியா சமாசாரம்! விட்டேனா பார் அந்தப் பிள்ளையாண்டானை!" என்று சொல்லிக் கைத்தடியை எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டார். அவருடைய உடலில் முதுமையினால் இருந்த நடுக்கம் அப்பொழுதுண்டான கோபத்தாற் பின்னும் அதிகமாயிற்று; கை நடுங்கக் கால் தள்ளாடக் கோபம் தம்மைச் செலுத்த வீதிவழியே வந்தார்; அங்கவஸ்திரம் விழுந்து கீழே புரண்டது. வரும்போதே, "காலம் கலிகாலமாய்விட்டது. வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிடுவதா?" என்று சொல்லிக் கொண்டே நடந்தார். அவருடைய வேகத்தையும் கோபநிலையையும் கண்ட சிலர் அவரைப் பின் தொடர்ந்தனர். "யாரையோ தன் கைத்தடியால் அடித்துவிட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறார் இவர்" என்று யாவரும் எண்ணினர்.


பக்தபுரி அக்கிரகாரத்துக்கு அடுத்ததாகிய ஸஹாஜி நாயகர் தெருவின் இரண்டாவது வீட்டில் நான் வசித்து வந்தேன். கோபாலையர் என் வீட்டை நோக்கி வந்தார். அப்பொழுது காலையில் மணி 9 இருக்கும். நான் காலேஜுக்குப் போகவேண்டியவனாகையால் வழக்கப்படி வீட்டின் பின்புறத்திலுள்ள கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தேன். கோபாலையர் என் வீட்டில் நுழைந்தார். உள்ளே என் சிறிய தந்தையார் இருந்தார். கோபாலையருக்கு அப்பொழுது கண்பார்வை குறைந்திருந்தது. ஆகையால் என் சிறிய தந்தையாரருகில் வந்து அவரை மேலுங்கீழும் பார்த்து இன்னாரென்று தெரிந்து கொண்டு மிக்க ஆத்திரத்தோடு, "உங்கள் பிள்ளையாண்டான் இருக்கிறாரா?" என்று இரைந்து கேட்டார். அவர் கேட்ட குரல் என் காதில் விழுந்தது. அவர் என் பேச்சினாற் கோபங்கொண்டு வந்திருக்கிறாரென்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன். நனைந்த ஆடையுடனே உள்ளே ஓடி வந்து கோபாலையரிடம், "க்ஷமிக்கவேண்டும்! க்ஷமிக்க வேண்டும்!!" என்று பணிவாகச் சொன்னேன்.


"க்ஷமிக்கவா? உங்களுடைய தகப்பனார் இருந்தால் நீங்கள் பேசினதைக் கேட்டுச் சகிப்பாரா? நீங்கள் அப்படிச் சொல்லலாமா? த்ஸெளகம் சீனுவையங்கார் பெருமை உங்களுக்கு என்ன தெரியும்? அவர் இருந்தால் இப்பொழுது உங்களை என்ன செய்திருப்பார் தெரியுமா! ஒரு சிறு பையனை இவ்வளவு தூரம் உயர்த்திப் பேசலாமா? அந்த ஸிம்ஹமெங்கே! இந்தப் பூச்சி எங்கே!" என்பவற்றைப் போலப் பல கேள்விகளைச் சரசரவென்று ஆத்திரத்தோடு அவர் என்னைக் கேட்டுக் கொண்டே போனார். நான் என்ன சொல்வேன்!


"பொறுத்துக்கொள்ளவேண்டும்; பொறுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி நமஸ்காரம் செய்தேன்.


"நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?" என்று கேட்டார் கோபாலையர்.


"க்ஷமிக்கவேண்டும்: என்னவோ சொல்லிவிட்டேன். ஒரு வித்தையில் நூதனமாக முன்னுக்கு வருபவர்களை அப்படிப் பேசித்தானே பிரகாசப்படுத்தவேண்டும்; ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லியே உத்ஸாகத்தை உண்டாக்க வேண்டும்; அதனால் அப்படிச் சொன்னேன். வேறு விதமாகத் தாங்கள் எண்ணிக்கொள்ளக் கூடாது" என்றேன்.


"எண்ணிக்கொள்வதா? நீங்கள் அப்படிப் பேசினதற்கு வேறு என்ன அர்த்தம்? கீழே உட்காருங்கள்; அந்த மகானாகிய த்ஸெளகம் சீனுவையங்கார் கீர்த்தனங்களைக் கேளுங்கள்" என்று சொல்லி அந்தக் கிழவர் உட்கார்ந்தார்; நானும் ஈரவேஷ்டியோடே உட்கார்ந்தேன். உடனே அவர் த்ஸெளகம் சீனுவையங்கார் இயற்றிய சில வர்ணங்களைப் பாடிக்காட்டினார்; அவை வெவ்வேறு ராகங்களில் அமைந்திருந்தன. அவர் வேறு சில கீர்த்தனங்களையும் பாடினார். நடுங்கிய குரலாக இருந்தும் அவறைப் பாடும்பொழுது கையை ஆட்டுவதும் தலையை அசைப்பதுமாகிய அவர் செயல்கள் அவருடைய உத்ஸாகத்தின் அளவைப் புலப்படுத்தின. மேல் ஸ்தாயியில் பாடத் தொடங்கும்போது அது பிடிபடாமையினால் தம் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டிக் காட்டி அவர் அபிநயம் செய்தபோது அவர் அடைந்த இன்பத்தை, உண்மையில் தம் சாரீர பலத்தினால் அந்த ஸ்தாயியில் பாடுபவர்கள் கூட அடைந்திருக்க மாட்டார்கள். முதிர்ந்த பிராயத்தில் அவர் அவ்வளவு பாடியது எனக்கு அளவற்ற வியப்பை உண்டாக்கியது. த்ஸெளகம் சீனுவையங்கார்பால் அவருக்கிருந்த பேரன்பும், அவருக்கு இழுக்கு நேர்ந்ததைப் போக்கவேண்டுமென்ற எண்ணமும் அவரிடம் புதிய சக்தியை உண்டாக்கின.


"எப்படி இருக்கின்றன, பார்த்தீர்களா? அவருடைய பெருமையை நீங்கள் உண்மையில் தெரிந்துகொண்டிருந்தால் அப்படிச் சொல்லத் துணிந்திருக்க மாட்டீர்கள். இப்பொழுதாவது த்ஸெளகம் சீனுவையங்காருடைய சக்தியைத் தெரிந்துகொண்டீர்களா?" என்று கோபாலையர் கேட்டார்.


"தெரிந்து கொள்ளாமல் என்ன? முன்பும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறேன். இப்பொழுது பின்னும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். அவரெங்கே! இவரெங்கே! உபசாரத்துக்காக நான் சொன்னதை ஒரு பொருளாகத் தாங்கள் எண்ணக்கூடாது. பெரியவர்களெல்லாம் ஒரு வஸ்துவைப் பெருமைப்படுத்தவேண்டுமென்றால் இப்படிப் பாராட்டிச் சொல்வது வழக்கம். மாளிகைகளை மேருவைக் காட்டிலும் சிறந்தவை என்று சொல்லுவார்கள்; அதனால் மேருவுக்குப் பெருமை குறைந்து போகுமா? மேருவை எடுத்துச் சொல்வதனாலேயே அதன் பெருமை பின்னும் விளங்கும். அதுபோல இதுவும் த்ஸெளகம் சீனுவையங்காரை நான் குறைவாகக் கூறியதாகாது; இப்படிக் கூறியதால் பின்னும் அவருடைய பெருமையே விளங்கும்."


"அதெல்லாம் உங்கள் தமிழ்ப் புஸ்தகங்களில் வைத்துக்கொள்ளுங்கள். சபையிலே பேசுவதென்றால் அப்படி யோசியாமல் சொல்லிவிடலாமா? தப்பு தப்புத்தான்" என்று தீர்ப்புக் கூறினார் கோபாலையர்.


அதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்? ஒருவாறு சமாதானங் கூறி அனுப்பினேன். பழைய வித்துவானிடத்தில் அந்தக் கிழவருக்கு இருந்த அன்பும், அவ்வித்துவானுடைய பெருமையைக் காப்பாற்றுவதில் அவருடைய சக்திக்கு மேற்பட்டு விளங்கிய பற்றும், அப்பெருமைக்குக் குறைவு நேருங் காலத்தில் உண்டான மானமும் இந்நிகழ்ச்சியால் நன்றாக வெளியாயின.

 மரபு விக்கியில்  பத்தாண்டுகளுக்கு முன்னர் எழுதிச் சேர்த்தது!

 இன்னிக்குத் தாத்தாவின் பிறந்த நாளைக்காக நேற்றிரவே ஷெட்யூல் பண்ணி வைச்சிருந்ததாய் நினைச்சேன். கடைசியில் பார்த்தால் (ஆரம்பத்தில் இருந்தே) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ட்ராஃப்ட் மோடிலேயே இருந்திருக்கு! தேடிப் பிடிச்சுப் போட்டிருக்கேன். :)

Sunday, February 17, 2019

கிருஷ்ணாபுரம் கோயிலில் நாங்கள்!

அடுத்துச் சென்றது கிருஷ்ணாபுரம் கோயில். அந்தக் கோயிலுக்கெனத் தல வரலாறு குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை. ஆனால் இது விஜயநகர சாம்ராஜ்யத்து மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாயக்கர் காலம் எனவும் சொல்கின்றனர், கோயில் பதினாறாம் நூற்றாண்டைச்சேர்ந்தது என அறிய வருகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்த நாயக்கர் காலத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் இக்கோயிலில் புனரமைப்புச் செய்யப்பட்டதாகவும் சொல்கின்றனர். அப்படி எனில் கோயில் அதற்கும் முன்னால் இருந்து இருந்திருக்க வேண்டும். நாங்க கோயிலுக்குச் சென்ற சமயம் மாலை  ஆறரை மணிக்கு மேல் ஆகி விட்டது. இருட்டும் சமயம். கோயிலில் வெளியில் யாருமே இல்லை. அங்கே இருந்த கோயில் அலுவலகம் போல் தென்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தவரிடம் இந்தக் கோயிலில் படங்கள் எடுக்கலாமா, அனுமதி உண்டா எனக் கேட்டோம். அதற்கு அவர் தானும் பெருமாளை வணங்கவே வந்ததாய்ச் சொன்னார்.  சரினு உள்ளே போனோம். அங்கிருந்த மண்டபத்தில் நமக்கு வலப்பக்கம் அந்தப் பிரபலமான சிற்பங்கள்.

"சில்பி" யால் வரையப்பட்டுத் தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் பெயரில் பிரபலமான சிற்பங்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன் யாரேனும் இருந்தால் அனுமதி கேட்கலாம் என! யாரையும் காணோம். சரினு காமிராவை எடுத்து அவசரம், அவசரமாகப் படங்கள் எடுக்கத்துவங்கினேன்.


சிற்பங்களைத் தொடாமல் தள்ளி நின்றே பார்க்கச் சொல்லி அறிவிப்புப் பலகை. மொபைல், காமிரா மூலம் படங்கள் எடுக்கக் கூடாது எனவும் அறிவிப்பு. எல்லாச் சிற்பங்களையும் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர். நம் மக்கள் சிற்பங்கள் சிலவற்றின் கையை, காலைனு உடைச்சு வைச்சதன் மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இன்னும் கொஞ்சம் கிட்டப் போய் எடுக்கலாம் என நினைத்துக்குறவன் ராஜகுமாரியைக் கடத்தும் சிற்பத்தைப் போய் எடுக்கையிலேயே எங்கிருந்தோ வந்தார் ஒருவர். கோயில் ஊழியர் நான் என்றார். படம் எடுக்கக் கூடாது. காமிராவை உள்ளே வைங்க என்று சொல்லிவிட்டார். அங்கேயே நின்று நான் காமிராவை உள்ளே வைக்கும்வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெருமூச்சு விட்டு விட்டு நாங்கள் உள்ளே பெருமாளைப் பார்க்கச் சென்றோம். இந்தக் கோயிலில் குடி இருப்பவர் திருநாமம் வெங்கடாசலபதி! தாயார் பத்மாவதித் தாயார்!  உற்சவரை ஸ்ரீநிவாசப் பெருமாள் என அழைக்கின்றனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அவர் வீற்றிருக்கிறார். மூலவர் நின்ற திருக்கோலம். தாயார் சந்நிதி தனியாக இருக்கிறது. பெருமாள் சந்நிதியின் வலப்பக்கம் உள்ளே வெகு தூரம் நடந்து செல்ல வேண்டும்.

நாங்கள் போனபோது மாலைக்கால வழிபாட்டுக்காகப் பெருமாள் காத்திருந்தார். எங்களைக்கண்ட பட்டாசாரியார் தீபாராதனை எடுத்துத் தரிசனம் செய்து வைத்தார்.  நாங்கள் அங்கிருந்து திரும்பும்போதே பிரசாதம் எடுத்துக்கொண்டு ஒருவர் மடப்பள்ளியிலிருந்து வரப் பெருமாள் முன் திரையும் போடப்பட்டது. நல்லவேளை என நினைத்த வண்ணம் வெளியே வந்தோம், தாயார் சந்நிதிக் கதவு சார்த்தப்பட்டிருந்தது. பெருமாளுக்கு வழிபாடு முடிந்து வந்து இங்கே வழிபாடு செய்யும்போது தான் திறப்பார்கள் என்று சொன்னதால் கம்பிக்கதவின் வழியாகத் தாயாரைப் பார்த்துக் கொண்டோம். வண்டி பாக்கேஜ்  மூன்று மணி நேரத்துக்குத் தான் பேசி இருந்தோம். ஆகவே திரும்பணும். செப்பறையில் இரண்டு மணி நேரம் போலக் காத்திருப்பால் ஏற்பட்ட தாமதம்.

புராண காலத்தில் பர்பகுளம் என அழைக்கப்பட்ட இந்த ஊர் இப்போது கிருஷ்ணப்ப நாயக்கன் பெயராலேயே கிருஷ்ணாபுரம் என அழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் தல விருக்ஷம் புன்னை மரம். தீர்த்தம் கோயிலின் தெப்பக்குளம். திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஓர் மாற்றாக இவர் கருதப்படுகிறார். அங்கே வேண்டிக்கொண்டு செல்ல முடியாதவர்கள் அந்தப் பிரார்த்தனைகளை இந்தக் கோயிலில் நிறைவேற்றலாம் என்று சொல்கின்றனர். திருப்பதியில் போல் இங்கேயும் பிரம்மோற்சவம் புரட்டாசி மாதம் பதினோரு நாட்கள் கொண்டாடப்படுகிறது. சுமார் ஐந்து லக்ஷம் மக்கள் கூடுவார்கள் என்கின்றனர்.  வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தக்கோயிலில் அன்றும் தை மாதம் காணும் பொங்கலன்றும் கூட்டம் தாங்காது என்கின்றனர். வாராவாரம் சனிக்கிழமைகளிலும் கூட்டமாக இருக்கும் என்கின்றனர். இதைத் தவிர்த்து தீபாவளி, பொங்கல், சித்திரை வருஷப்பிறப்பு ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு.  இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.





மேலே உள்ளது குறத்தி ராஜகுமாரனைக் கடத்தும் சிற்பம் என நினைக்கிறேன். இதை எடுக்கையில் நாங்கள் தரிசனம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தோம். எல்லோரும் தாயார் சந்நிதியில் மாலை வழிபாட்டு தீப ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது தெரியமால் எடுத்த படம்/ 



முழுச் சிற்பமும் எடுக்கக் கொஞ்சம் நேரம் தேவை. அதோடு கொஞ்சம் தள்ளி நின்று ஜூம் செய்து எடுக்கணும். அதற்கெல்லாம் நேரம் இல்லை. நம்ம ரங்க்ஸ் காவல் காத்துக் கொண்டிருக்க, நான் கைகால்கள் நடுங்க, வியர்த்துக் கொட்ட அவசரம் அவசரமாக எடுத்த சிற்பத்தின் ஒரு பகுதி. இதை எடுக்கையிலேயே முன்னே வந்த ஊழியரின் குரல் கேட்க வெளியே நடையைக் கட்டினோம்.

காலை ஆறு முதல் பதினொன்றரை வரையிலும், மாலை நாலு முதல் இரவு பதினோரு மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும் என்றனர். உள்ளூர் மக்கள் கோயிலுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.   திருமணம் ஆவதற்காகவும், குழந்தைப் பேறு வேண்டியும் வெங்கடாசலபதியைப் பிரார்த்தித்துக் கொள்பவர்கள் அங்கே செல்ல முடியாவில்லை எனில் இங்கே பிரார்த்தனையை நிறைவேற்றலாம் என்கின்றனர்.

இந்தக் கோயில் சிற்பங்கள் பற்றிய ஒரு செவிவழிக்கதை என்னவெனில் சிற்பி ஒருவன் சிற்பம் செதுக்க வேண்டிக் கற்களைப் பார்வையிடுகிறான். அப்போது அவன் கண்களில் செந்நிற ரேகைகள் ஓடும் செவ்வரி ஓடிய பாறைகள் படுகின்றன. அதைக் கண்ட அவன் சிற்பம் செதுக்க இவை ஏதுவான கற்கள் எனக்கண்டுகொண்டு செதுக்குகின்றான். அவன் கற்பனை சிறகடித்துப் பறக்க அவன் வடிக்கும் வீரன் சிலையின் வடியும் ரத்தப்பெருக்காக அந்தச் சிவப்பு வரிகள் அமைந்து விட சிற்பத்தின் அழகு சொல்ல முடியாத ஒன்று. அந்தச் சிலை வடிவைத் தூணாக நிறுத்துகிறான் சிற்பி. இது தான் சொல்வதும் கேட்டதும். ஆனால் அங்குள்ள தூண்களில் இந்தச் சிற்பங்கள் தனியாகச் செதுக்கப்பட்டுப் பொருத்தப்பட்டவையாகவே எனக்குத் தோன்றின.  அதோடு இல்லாமல் இந்தச் சிற்பங்களைத் தட்டினால் உலோகத்தில் தட்டுவது போல் வெண்கல ஓசை வருமாம். ஆகவே ஆங்காங்கே சிற்பங்களின் மேல் தட்டக் கூடாது என்னும் அறிவிப்பையும் காண முடிந்தது.

பின்னர் அங்கிருந்து திரும்பும்போது தான் பாளையங்கோட்டை வழியாக வந்தோம். கிறித்துவர்கள் அதிகம் அங்கே என்றார்கள். அதற்கேற்பப் பல புராதன சர்ச்சுகள், பள்ளிகள், கல்லூரிகள் காணப்பட்டன. சற்றுத் தூரம் கடந்து வந்த பின்னர் தான் வாமன முதலியார் தெரு என்னும் பெயரிலோ என்னமோ நீண்ட ஓர் கடை வீதி வந்தது. அங்கே தான் நான் முன்னர் சொல்லி இருந்த முறுக்கு, தட்டை, சீடை, மனோகரம் போன்ற பக்ஷணங்களைச் செய்து விற்கும் கடைகள், கடைகள், கடைகள்! அப்போது தான் அந்த வண்டி ஓட்டுநரிடம்  சுலோசன முதலியார் பாலத்தைக் கடந்து தானே நாம் அந்தப்பக்கமாய்த் திருநெல்வேலிக்குப் போகணும் என்று கேட்டேன்! அவர் ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! கேள்விப்பட்டதே இல்லையாம். எந்தஊர் என்று கேட்டதற்கு இதே ஊர் தான் என்றார். சரிதான். சரித்திர விஷயங்களில் இவ்வளவு ஆர்வம் உள்ளவரா என நினைத்துக் கொண்டேன். சற்று நேரத்திலேயே சுலோசன முதலியார் பாலம் வந்தது. அவரிடம் காட்டி இதான் சுலோசன முதலியார் பாலம் என்றும் சொன்னேன். பின்னர் நம்ம ரங்க்ஸ் ஆணைப்படி சந்திரவிலாஸ் வாசலிலே இறக்கிவிட்டுவிட்டுப் போனார் அவர்.

சந்திரவிலாஸிலே மதியமே சாப்பாடு சுமார் ரகம் கூட இல்லையேனு எனக்குக் கவலை. சரி எப்படி இருந்தாலும் இட்லி, தோசை, என்றால் சாம்பார், சட்னி, காரம்னு இருக்கும். அது வேண்டாம்னு முடிவு செய்து சப்பாத்தி சொன்னேன். சப்பாத்தி பரவாயில்லை ரகம். சூடாக இருந்தது. அதுக்குத் தொட்டுக்கக் கொடுத்தாங்க பாருங்க ஒரு  ஐடம். எங்க இரும்பு வாணலியின் உள் பக்கத்தை விடக் கறுப்பாக ஏதோ! லேகியம் போல்! நான் அதைத் தொடவே இல்லை. சர்வ ஜாக்கிரதையாக வெறும் சப்பாத்தியை மட்டும் உள்ளே தள்ளினேன். நம்ம ரங்க்ஸ் இட்லி, தோசைனு ஆர்டர் பண்ணிட்டு அந்தச் சட்னி ருசியிலும், சாம்பார் ருசியிலும் என்ன செய்யறதுனு புரியாம முழிச்சுட்டு இருந்தார். பின்னர் காஃபி கேட்டதுக்குக் காஃபிப்பொடியே போடாமல் முழுக்க முழுக்கச் சிக்கரியிலேயே போட்ட காஃபி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார் ஓட்டல் ஊழியர். ஆனால் ரெண்டு பேர் சாப்பிட்டதுக்கும் பில் அறுபது ரூபாய்க்குள் தான்! அதுக்காக வயித்தைக் கெடுத்துக்க முடியுமோ? நாளை இல்லை, இன்னிலே இருந்தே இந்தப்பக்கம் தலை வைச்சுப் படுக்க வேணாம்னு முடிவெடுத்தேன்.

Friday, February 15, 2019

அழகிய கூத்தனின் தரிசனம்!

இன்னும் சிறிது நேரக்காத்திருப்புக்குப் பின்னர் மறுபடி தொலைபேசிக் கேட்டதில் அவர் மனைவியோ, யாரோ ஒரு பெண்மணி குருக்கள் கோயிலுக்குக் கிளம்பி விட்டதாகச் சொன்னார். அதன் பின்னர் மேலும் இருபது நிமிடங்கள் சென்றன. வரும் வண்டிகள் எல்லாம் கோயில் பக்கமே திரும்பவில்லை.  மீண்டும் சற்று நேரம் கழிந்ததும் குருக்கள் ஓர் கோயில் ஊழியருடன் வந்து சேர்ந்தார். அதற்குள்ளாக மணி ஐந்தரை ஆகி விட்டது. பேசாமல் நாலு மணிக்குக் கிளம்பி வந்திருக்கலாம். பின்னர் ஊழியர் கோயிலைத் திறக்க குருக்கள் முதலில் சென்றார். சற்று நேரக்காத்திருப்புக்குப் பின்னர் நாங்களும் உள்ளே சென்றோம். அதற்குள்ளாக குருக்கள் நாங்கள் எங்கிருந்து வந்தோம் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் பெயர் ராஜாமணி என்றார். சாதாரணமாகக் கூட்டம் இருக்காது என்றாலும் மாசாந்திரத் திருவாதிரை நாட்கள், மற்றும் திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் போன்ற நாட்களில் நல்ல கூட்டம் வரும் என்றார்.

கோயில் தலபுராணம் தெரியுமா எனக் கேட்டதற்குத் தெரியும் என்றோம். இளைஞரான அவருக்கு இந்தக் கோயிலில் ஈசனுக்குத் தொண்டு செய்வதில் பெருமையாக இருந்தது என்பது அவர் பேச்சில் தெரிந்தது. எங்கள் குழந்தைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டவர் அவர்கள் வெளிநாட்டில் இருப்பதற்கு மிகவும் வருந்தினார். என்ன செய்ய முடியும்! அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். பின்னர் சபா மண்டபத்தில் ஏறி நடராஜரைக் கிட்டே இருந்து தரிசிக்கலாம் எனில் படிகள் உயரமோ உயரம்! பக்கத்தில் உள்ள திருவாசி போன்ற  செப்புத் தகட்டைப் பிடித்துக் கொண்டு ஏற முயன்றேன். நம்ம ரங்க்ஸ் ஏறிப் போய்விட்டார். குருக்கள் கோயில் ஊழியரிடம் எனக்கு உதவச் சொல்ல அவரும் வந்து கையைப் பிடித்து மேலே தூக்கி விட்டார். அதற்கும் மேல் படிக்கட்டுகளைக் கடந்து ஒருவழியாகத் தாமிரசபையில் போய் நின்றேன்.

செப்பறை க்கான பட முடிவு  à®šà¯†à®ªà¯à®ªà®±à¯ˆ க்கான பட முடிவு

மேலே உள்ள படங்கள் கூகிளார் கொடுத்தவை. என்னைப் படம் எடுக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்கள். அதோடு கையில் காமிராவைப் பார்த்ததுமே கோயில் ஊழியர் என்னை விட்டு நகரவே இல்லை. அங்கே நடராஜர் சந்நிதியில் தரிசனம் முடித்துக் கொண்டு பின்னர் அங்கேயே இருக்கும் சிவனையும், அம்பிகையையும் தரிசித்துக் கொண்டோம். இந்த லிங்கம் சுயம்புலிங்கம் எனவும் வேண்ட வேண்ட வளர்ந்ததால் வேண்ட வளர்ந்த நாதர் என்னும் பெயரில் அழைக்கப்படுவதாகவும், இவர் தான் "நெல்லையப்பர்" எனவும் குருக்கள் கூறினார். அம்பிகை பெயர் காந்திமதி! இருவரையும் தரிசித்துக் கொண்டோம். தீப ஆராதனைகள் எடுத்தார்கள். பார்த்துக்கொண்டோம். பின்னர் பிரகாரம் சுற்றி வந்து செப்பறையைப் பார்க்கவேண்டிச் சென்றோம்.


உள்ளே நுழைந்ததும் தெரியும் மண்டபம்


மண்டபத்தின் இன்னொரு பகுதி






நம்ம ஆளு மண்டபத்தின் இரு பக்கங்களிலும் காணப்பட்டார்.



தாமிர சபையின் மேல் கூரை. முழுதும் தெரியும் வண்ணம் படம் எடுக்க முடியலை! :(



எல்லாம் முடிந்ததும் குருக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அடுத்த கோயிலான கிருஷ்ணாபுரம் நோக்கிச் சென்றோம். முற்றிலும் இதற்கு எதிர்த்திசையில். போகணும் அதற்கு. அதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

மூன்று நாட்களாக அடுத்தடுத்து வேலைகள், மைத்துனர் பையர் வருகை என ஒரே வேலை மும்முரம். இதோடு நடுவில் மின்வெட்ட்ட்ட்ட்டு வேறே! காலையிலே கொஞ்ச நேரமாவது உட்காருவேன். இரண்டு நாட்களாக அது முடியலை.  நேற்றுப் பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டு எழுந்துட்டேன். வேலை இருந்தது. பின்னர் மதியம் தான் சில மணி நேரம் குறைந்தது 3 மணி நேரம் உட்கார முடியும்.  மாலை நேரம் கட்டாயமாய் உட்கார முடிவதில்லை. சனி, ஞாயிறு குஞ்சுலு வரும். அப்போ மட்டும் இரவு ஒன்பது மணி வரை உட்கார்ந்திருப்பேன். சில சமயங்களில் அது வராது! :( அப்போ மறுநாள் காலை வரும்! அன்னிக்கும் பதிவுகளைப் பார்க்க முடியாது.  இஃகி, இஃகி, ரொம்ப ரொம்ப பிசினு சொல்லிக்கத் தான் ஆசை! ஆனால் அது பிடிக்காது. :) அதனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால் பதில் வரத் தாமதம் ஆனாலோ, பின்னூட்டங்கள் வெளியிடத் தாமதம் ஆனாலோ பொறுத்துக்கொள்ளவும்.