எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்

கண்ணன், புநர்தத்தன் இருவருக்கும் ஆபத்து!


கிருஷ்ணன் சிரித்தான். “நீ நான் இல்லை என்ற உடன் இறந்து போவாய், ஆனால் என்னுடன் நான் இருக்குமிடைத்துக்கு என்னுடைய நாட்டுக்கு மட்டும் வரமாட்டாய், அல்லவா?” என்றான்.

“இல்லை, கண்ணா, இல்லை, எந்த நாககன்னிகையும் அவளின் இருப்பிடமான இந்த நாகலோகத்தை விட்டு வெளியே செல்லமாட்டார்கள். அவை தேவிமாதாவின் கட்டளைகள். எவரும் இன்று வரை மீறியதில்லை. நான் மட்டும் எப்படி மீறுவேன்?” என்றாள் ஆஷிகா. அடக்கமாட்டாமல் கண்ணன் சிரித்தான். “ஆகக்கூடி நான் இருந்தால் நீ இருப்பாய், நான் இறந்தால் நீயும் இறப்பாய், ஆனால் நான் எங்கே போனாலும் என்னோடு வந்து வாழ மட்டும் தயாராக இல்லை, அல்லவா?” பேச்சு வராமல் திகைப்புடன் கண்ணனையே பார்த்தாள் ஆஷிகா. இப்படியும் ஒரு வழி உண்டா?? “ என்னை உன்னுடன் அழைத்துச் செல்வாயா?” கண்ணனைக் கெஞ்சினாள் அவள். கண்ணன் அவள் கண்களூடே பார்த்தான். அவள் உண்மையாகவே வர விரும்புகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். தெய்வீகத் தந்தை கூறியது உண்மையே. ஆஷிகா மற்ற நாகப் பெண்களிடமிருந்து வித்தியாசமானவளே.

“அழைத்துச் செல்வேன் கட்டாயமாய், ஆனால் அதற்கு நான் உயிர் பிழைத்திருக்கவேண்டுமே!” என்றான் கண்ணன். மறுபடி அழ ஆரம்பித்தாள் ஆஷிகா. “நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன், கண்ணா!” என்றாள் ஆஷிகா. “ஆஹா, நான் உயிரோடு இருக்கவேண்டுமென்றால் இளவரசனோடு சண்டை போட்டு அவனைக் கொல்லவேண்டும், அல்லது என்னையும் இளவரசனையும் தெய்வீகத் தந்தை கொன்றுவிடுவார். அப்போது நீயும் இறந்துவிடுவாய்!” பரிகாசத் தொனியில் கண்ணன் பேசினான்:’ என்ன செய்யலாம் இப்போது? நீ தான் இந்த இடத்தை விட்டும் வரமாட்டாய்!”

“இல்லை, இல்லை, நான் உன்னுடனே வருகிறேன். எனக்கு இந்த இடமோ, இந்த மக்களோ எவரையும் பிடிக்கவில்லை. என் அன்னைக்கோ என் அக்காவான லாரிகாவிடமே பற்றும், பாசமும் அதிகம். நான் அவளுக்கு ஒரு பொருட்டல்ல. உன்னுடனேயே வருவேன்.” கண்ணன் கண்ணீரினூடே சிரிக்கும் அவள் முகத்தைப் பார்த்தான். அடுத்த நாள் நாகலோகத்து மனிதர்கள் அனைவருமே நன்றாக அலங்கரித்துக்கொண்டு நடக்கப் போகும் போட்டியைக் காணத் தயாரானார்கள். துறைமுகத்துக்கு அருகில் கப்பலுக்குச் செல்லும் வழியை அடைத்து போடப் பட்டிருந்தது மேடை. ஒரு பக்கம் நதியானது கடலில் சேரும் இடமாகவும், மறுபக்கம் கடலில் இருக்கும் கப்பலுக்குச் செல்லும் இடமும் இருந்த இடத்தினருகே வெட்ட வெளியில் அமைக்கப் பட்டிருந்த மேடைக்குப் பின்புறம் தெரிந்த நீண்ட படிகளின் மூலம் கடலுக்குச் செல்லும் வழியெல்லாம் ஆயுதம் தாங்கிய பெண்காவலர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். புண்யாஜனா கப்பலில் இருந்து வந்த பிக்ருவும், அவனுடைய ஆட்களும் அந்தப் படிகள் கடலில் முடியும் இடத்திற்கருகே நின்று கொண்டு இங்கே பார்த்துக்கொண்டிருந்தனர். படிகள் ஆரம்பிக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி உத்தவன் ஹூக்குவுடனும், ஹூல்லுவுடனும் நின்று கொண்டிருந்தான்.

சரியான நேரம் வந்ததும் தேவிமாதா ஆவிர்ப்பவித்திருந்த உடலோடு கூடிய அன்னை ராணி, மரகதக் கற்கள் பதிக்கப் பட்ட வாயிலைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள். அவளுடன் தெய்வீகத் தந்தையும், பட்டத்து இளவரசியும், மற்ற உயர் அதிகாரிப் பெண்களும் காணப்பட்டனர். பெருந்திரளாகக் கூடி இருந்த மக்கள் கூட்டம் உற்சாகக் கூச்சலுடன் ராணி மாதாவை வரவேற்றனர். நாகலோகத்தின் மிக உயர்ந்த, உந்நதமான திருவிழா என அவர்களால் கொண்டாடப் பட்ட இது, அவர்களை மிகவும் உற்சாகப் படுத்தியது. என்னதான் இந்தப்போட்டியின் முடிவில் எவராவது ஒருவரின் உயிர் எடுக்கப் பட்டாலும் இதன் மூலம் அடுத்த பட்டத்து இளவரசன் யார் எனத் தெரிய வருவதோடு அடுத்த அன்னை ராணியின் எதிர்காலமும் முடிவு செய்யப் படுகிறது.

வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. சங்குகள், எக்காளங்கள் ஊதப்பட்டன. பின்னர் நீண்ட நிசப்தம். அதன் பின்னர் அன்னை ராணி கையசைக்க, புநர்தத்தன் ஒரு பக்கமும், கண்ணன் இன்னொரு பக்கமிருந்தும் வந்து அன்னை ராணியை முதலில் வணங்கினர். பின்னர் தெய்வீகத் தந்தையையும் வணங்கினார்கள். கூட்டம் ஆரவாரிக்க இருவரும் போட்டி நடக்கப் போகும் மேடையை நோக்கிச் சென்றனர். செல்லும்போதே மெல்லிய கிசுகிசுப்பான குரலில் புநர்தத்தன் கண்ணனிடம், “வாசுதேவா, ஒருவேளை… ஒருவேளை, நான் உன்னைக் கொன்றுவிட்டேனானால்??? என்னை மன்னிப்பாயா?” இரங்கிய குரலில் கேட்டான் புநர்தத்தன்.

“இதோ பார் சகோதரா, நீயும் என்னைக் கொல்லப் போவதில்லை. நானும் உன்னைக் கொல்லப் போவதில்லை. உன் திறமை முழுதும் காட்டிச் சண்டை போடு. நான் உன்னுடைய குரு மூலமான சகோதரன் என்பதை மறந்துவிடு.” என்றான் கண்ணன்.

“ம்ம்ம் அவந்தியில் தந்தை இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாரோ? என்னை நினைந்து ஏங்கிக்கொண்டிருப்பார்.” என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னான் புநர்தத்தன். “அதை எல்லாம் நினைத்துக் கலங்காதே. உன் தந்தையும் என் குருவும் ஆன சாந்தீபனிக்கு எப்படியேனும் உன்னைக் கொண்டு வந்து சேர்த்துவிடுவதாய் வாக்களித்திருக்கிறேன். அதை நான் எவ்வாறேனும் நிறைவேற்றியாகவேண்டும். அது என் தர்மம், என் அறம், என் கடமை!” என்றான் கண்ணன். போட்டி நடைபெறும் மேடையை இருவரும் நெருங்கினார்கள். புநர்தத்தனுக்கோ கண்ணன் மேல் கைவைக்கவே மனம் வரவில்லை. ஆனாலும் அன்னை ராணியின் கட்டளையை மீற முடியாமல் அவள் கையசைக்கவும் அங்கிருந்த வாள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு வீச ஆரம்பித்தான். கண்ணனும் வாள் ஒன்றை எடுத்து வீச ஆரம்பித்தான். அவன் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியிலே மட்டுமே ஈடுபட்டதைக் கவனித்த புநர்தத்தன் தன் போர்முறையை மாற்றிக்கொண்டான்.

அதைக் கவனித்த கண்ணன் அவனிடம், “முட்டாள் தனமாய் நடக்காதே! போரிடு!” என்று சொல்லிவிட்டுத் தன் உக்கிரமான வாள் வீச்சைக் காட்ட ஆரம்பித்தான். புநர்தத்தன் கண்ணன் வாள் வீச்சில் அபாரத் தேர்ச்சி பெற்றிருப்பதைக் கவனித்தான். அவனுடைய ஒவ்வொரு வீச்சுக்கும் தக்க பதில் கண்ணனிடமிருந்து கிடைத்ததையும் பார்த்துக்கொண்டான். முதலில் சற்று ஆர்வமின்றிச் சண்டைபோட்டுக்கொண்டிருந்த புநர்தத்தன் பின்னர் கண்ணனின் வாள் வீச்சில் கவரப்பட்டு, முழுமையாக ஆகர்ஷிக்கப் பட்டுத் தானும் வாளை வீசிப் போரிட ஆரம்பித்தான். வாள் போர் உக்கிரமானது. சுற்றி இருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை எனப் புரிந்து கொண்ட கூட்டம் யார் ஜெயிப்பார்களோ என்ற ஆவலுடன் காத்திருந்தது. எத்தனை உக்கிரமாய்ச் சண்டை போட்டாலும் இருவரும் மற்றவரை வீழ்த்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இது சுற்றிக்குழுமி இருந்த மக்களுக்கு மட்டுமின்றி, அன்னை ராணிக்கும், அவள் பட்டத்து இளவரசிக்கும் கொஞ்சம் ஆச்சரியமும், விநோதமுமாய் இருந்தது. ஆஷிகாவோ அடுத்து என்ன நடக்குமோ என்று ஆவல் மீதூரக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

இருவரில் எவர் ஜெயிப்பாரோ என்பதில் மக்களுக்கு அலுப்பும், சலிப்பும் ஏற்படத் தொடங்கிய வேளையில் கண்ணன் தன் கைவாளால் புநர்தத்தன் வாளைத் தட்டிவிட்டுவிட்டுத் தன் வாளையும் தூக்கி எறிந்தான். மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு வாள் சண்டையைக் கண்டதில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் சமானமானவர்களாக இருந்ததோடு ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்தவும் இல்லையே? அடுத்து என்ன? கண்ணனும், புநர்தத்தனும் ஒருவரை ஒருவர் தங்கள் கைப்பிடிகளால் இணைத்து மல்யுத்தம் புரிய ஆரம்பித்தனர். புநர்தத்தன் அவ்வளவு தேர்ந்தவன் அல்ல எனினும், கிருஷ்ணனின் எண்ணம் தன்னைக் கொல்லுவது அல்ல என்றோ, ஜெயிப்பதும் அல்ல என்றோ புரிந்து கொண்டுவிட்டான். எனினும் அடுத்து என்ன என்பதை அவனால் நிச்சயிக்க முடியவில்லை. அதுவரையிலும் தானும் கண்ணனோடு மல்யுத்தம் செய்வதைப்போன்று நடிக்கவேண்டும் என்றவரையில் புரிந்து கொண்டான். கண்ணனின் விருப்பமும் அதுவே எனத் தெரிந்து கொண்டுவிட்டான். இருவரும் மல்யுத்தம் செய்தனர். கைகளால் வளைத்து ஒருவரை ஒருவர் அமுக்க முயன்றனர். கீழே விழுந்து புரண்டனர். ஒருவரை மற்றொருவர் தூக்கி வீசி எறிந்தனர். ஆனால் உடனேயே எழுப்பியும் விட்டுக்கொண்டனர். இது முடிவதாய்த் தெரியவில்லை. உண்மையில் சண்டை போடுகிறார்களா? அல்லது விளையாடுகின்றனரா?

அன்னை மாதாவின் முகம் கோபத்தில் சிவந்தது. மேற்கே அஸ்தமனச் சூரியன் மறையப் போகிறான். இந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. மக்கள் கூட்டமும் ஏதோ சதிவேலை நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொண்டாற்போல் இருவரில் ஒருவரின் உயிரைக் கேட்டுக் கத்தினார்கள். அன்னை ராணி கண்ணசைக்க, தெய்வீகத் தந்தை வேறுவழியில்லாமல் தன் கடமையை நிறைவேற்ற எழுந்து நின்றான்.

“இருவரில் ஒருவரும் இறக்கவில்லை என்பதால் தேவிமாதாவின் கட்டளையை நான் நிறைவேற்றியாகவேண்டும். “ என்றான். அவன் முகமும் கடுமையாக இருந்தது. அடுத்த நிமிடம் அவன் வாளை வீசி இருவரையும் கொல்லப் போவதை எதிர்பார்த்துக்கொண்டு மக்கள் காத்திருந்தனர். அன்னை ராணியின் முகம் சவம் போல் வெளுத்துக்காணப்பட்டது. எந்தவிதமான உணர்வுகளையும் அது காட்டவில்லை. கடைசியில் ஒருவருக்குப் பதிலாக இருவர் ரத்தமும் சிந்தப் போகிறது. கூட்டம் அதை நினைத்து ஆரவாரத்தோடு கோஷம் போட்டுக்கொண்டு அதைக் காணப் பரபரத்தனர். தன் இருப்பிடத்திலிருந்து இறங்கிய மன்னன் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த மேடைக்கு வந்தான்.

Thursday, April 29, 2010

என்னமோ ஆயிடுச்சு!

என்னோட பதிவுக்கு வர பின்னூட்டமெல்லாம் வேறே யாருக்கோ போகுது! போகுதா! நான் பப்ளிஷ் அப்புறம் பண்ணலாம்னு வச்சிருக்கிற பதிவெல்லாம் தானே பப்ளிஷ் ஆகுது! பின்னூட்டம் எழுதும்போதே பப்ளிஷ் ஆயிடுதே! ஆகுதா! எல்லாம் கறுப்போட வேலைங்க! பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கே! :)))))))எங்க வீட்டிலே பெரிய பெரிய மாங்காயை எல்லாம் அரை மணி நேரத்தில் துருவித் தள்ளும் அணிலுக்கு வயித்தை எதுவுமே செய்யலையே? அது ஏன்??? அரை மணி நேரத்தில் ஏழு, எட்டு மாங்காய்கள். தொக்குக்குத் துருவ முடியாதவங்க எங்க வீட்டு அணில் கிட்டே கொடுத்தால் போதும், நிமிஷமாத் துருவிடும்.

அதோடயா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு ஜிமெயிலிலே சாட் டிசேபிள்னு வருது, ஆனால் நிறைய நண்பர்கள் சாட்டினேன் நீங்க வரலைனு சொல்றாங்க! இது என்ன கூத்து??? எல்லாம் இங்கே கறுப்பைப் பத்தி எழுத ஆரம்பிச்சேனா?? அதுக்கப்புறமோ?? கறுப்பா, காப்பாத்து! :))))))))
பேசும் பொற்சித்திரமே

Wednesday, April 28, 2010

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி ஏப்ரல் 28


பெரிய உத்தியோகத்தில் இருந்தால் ஆங்கில நூல்களைப் படிப்பது, ஆங்கிலங்கற்றவர்களை வியப்பது, இங்கிலீஷ் நூலிலுள்ள கருத்து எந்தப்பாஷையிலும் இல்லையென்று சொல்வது முதலியவற்றைப் பெருமையாகக் கொள்பவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. ஆனால் இப்போது அத்தகையவர்களது தொகை குறந்து வருகிறது. கிருஷ்ணசாமி ஐயர்ர் காலத்தில் ஆங்கிலமோகம் உச்சநிலையை அடைந்திருந்தது.

அவர் ஆங்கில அறிவில் சிறந்தவர்; அவருடைய தந்தையாரும் தமையனாரும் அவரும் வடமொழிப்பயிற்சியும் அந்த மொழ்யினிடத்தில் அன்பும் உடையவர்கள். இந்த இரண்டு பாஷைகளிலும் கிருஷ்ணசாம் இஐயருக்கு இருந்த அறிவும் அபிமானமும் மற்றப் பாஷைகளை வெறுக்கச் செய்யவில்லை. தமிழினிடத்தில் அவருக்கு இருந்த அபிமானத்தை நான் அனுபவத்தில் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

வடமொழியில் அன்பிருந்தால் தமிழினிடத்தில் அபிமானம் உண்டாவது அந்தக் காலத்தில் அருமை. அறிவுக்கு உண்மையான மதிப்பை அளிக்கும் பெரியார்கள் ஒவ்வொன்றின்பெருமையையும் நன்கு அறிந்து பாராட்டி வருவார்கள்.

"எந்தப் பாஷையாக இருந்தால் என்ன? மனத்திற் பதியும்படியான நல்ல விஷயம் எங்கே இருக்கின்றதோ அதைத் தேடி அறிந்துகொள்ளவேண்டும்" என்பது கிருஷ்ணசாமி ஐயரது கொள்கை.

ஒருநாள் சென்ன இராசதானிக்கலாசாலைத் தமிழ் மாணவர் சங்கக் கூட்டத்திற்கு அவர் த்லைமை வகித்தார். காலஞ்சென்ற ஜி.ஏ. வைத்தியராமையர் அன்று "தமிழின் பெருமை" என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசினார். கிருஷ்ணசாமி ஐயர் தலைமை வகிப்பது தெரிந்து பலர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரும் வந்திருந்தனர்.

கிருஷ்ணசாமி ஐயர் என்ன பேசுவாரோ என்று யாவரும் ஆவலோடு எதிர்நோக்கி யிருந்தனர். சிலர், 'இவர் தமிழைப் பற்றி என்ன பேசப் போகிறார்? ஸம்ஸ்கிருதத்தைப் பற்றி வேண்டுமானாற் பேசுவார்." என்று நினைத்தார்கள்.

உபந்நியாசகர் பேசியபின்பு கிருஷ்ணசாமி ஐயர் பேசத் தொடங்கியபோது எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் பேசலானார்.

"தமிழில் எத்தனை நூல்கள் இருக்கின்றன! திருவள்ளுவர் திருக்குறள் செய்த பாஷை இது; கம்பன் இராமாயணம் இயற்றியது இந்தப் பாஷையிலே; நாயன்மார் தேவாரம் பாடிய பாஷை; மாணிக்கவாசகர் திருவாசகம் அருளிய பாஷை; ஆழ்வார்கள் திவ்யப் ப்ரபந்தம் பாடியதும் இதிலேதான் என்று தொடங்கி வரிசையாகக் கூறிக்கொண்டே சென்றார். ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அன்று அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் குதூகலத்தை அடைந்தார். அந்தப் பேச்சு அவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது; அதிலிருந்து ஒரு பாட்டுக்குரிய பொருளைக் கிரகித்துக்கொண்டார். தமிழ்நாட்டைப் பற்றி அந்த முறையிலே பாடவேண்டுமென்று அவருக்கு அன்று ஒரு கருத்து உண்டாயிற்றென்றே தோற்றுகின்றது. பாரதியாருடைய காதில் கிருஷ்ணசாமி ஐயருடைய பிரசங்கம் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவர் தமிழ்ப்பஷையைப் பற்றிச் சொன்னதைத் தழுவிப் பாரதியார் நாட்டைப் பற்றிப் பாடத் தொடங்கினார்.

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே" என்று தொடங்கும் பாடல் அது.
***************************************************************

ஒரு நாள் கிருஷ்ணசாமி ஐயரவர்கள் என்னுடைய விருப்பத்தின்படி சில அன்பர்களுடன் என் வீட்டுக்கு வந்திருந்தார். என்னுடைய புத்தகங்களையும், ஏட்டுச் சுவடிகளை வைத்திருக்கும் இடத்தையும், படிக்குமிடத்தையும், கையெழுத்துப் பிரதிகளையும் பார்க்கச் செய்தேன். "வெள்ளைகாரராக இருந்தால் தனியே பங்களா இருக்கும்; புஸ்தகசாலைக்குத் தனியிடம் இருக்கும்; வேலைக்காரகள் இருப்பார்கள். பலர் பாராட்டி ஆதரிப்பார்கள். நீங்க இந்தத் தேசத்திலே இருப்பதனால் இதற்கேற்றபடி வறிய நிலையில் சுருக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் தனியே சகாயமின்றி யிருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகின்றது.' என்று அவர் சொன்னார்.

அவர் வாயளவில் புகழ்ந்து பேசிவிட்டுச் செல்பவரல்லர்; எவ்வளவோ வித்துவான்களுக்கு எத்தனையோ விதமான உபகாரங்களைச் செய்திருக்கிறார். மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றவர்களுக்கு வருஷந்தோறும் துரைத்தனத்தார் நூறு ரூபாய் அளிப்பதற்கு அவர் முயற்சியே முக்கிய காரணம்.


தமிழ்த்தாத்தாவின் நினைவு மஞ்சரி முதற்பாகம் 10. வி. கிருஷ்ணசாமி ஐயர் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள். நினைவு மஞ்சரி இரண்டாம் பதிப்பான இது வெளிவந்த ஆண்டு 1945, பார்த்திப வருஷம் ஐப்பசி மாதம். இன்று தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம்.

டிஸ்கி: வேறொரு பதிவுக்காக வைத்திருந்த திரு மு.ராகவையங்கார் படம் தாத்தாவுக்குப் பதிலாக வந்துவிட்டது. ஜெயஸ்ரீக்குக் குழப்பம். ஹிஹிஹி. அ.வ.சி. மன்னிக்கணும் அனைவரும்.

Monday, April 26, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம்பாகம்

நாககன்னிகையின் முடிவு!

“கண்ணா, என் அருமைச் சகோதரா, திக்குமுக்காடித் திணற அடிக்கும் இந்த நாககன்னிகைகளின் சக்தியைப் பற்றி நீ இன்னும் முழுதும் அறியவில்லை. அதனால் நீ நம்பிக்கையுடன் பேசுகிறாய்.” என்றான் புநர்தத்தன். கண்ணன் ஆழ்ந்த யோசனையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து தன்னிருப்பிடம் சென்று உத்தவனுடன் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளின் தன்மையைப் பற்றி விவாதித்தான். அப்போது மீண்டும் தெய்வீகத் தந்தையான மன்னனால் அழைக்கப் பட்டான். மன்னன் அதே பாசத்தோடு கண்ணனைப் பார்த்தான். இப்போது பாசத்தோடு அநுதாபமும் சேர்ந்திருந்தது. “கண்ணா, தேவி மாதாவின் கட்டளைகளா உன்னுடைய திட்டம் பாழாகிவிட்டனவே! என்ன செய்யலாம் மகனே! என் இளைய மகள் ஆஷிகாவிற்கு உன்னை ரொம்பப் பிடித்துவிட்டது. ஆனால் தேவிமாதாவின் கட்டளை வேறுமாதிரியன்றோ அமைந்துவிட்டது. இந்தத் திருவிழாவில் நீ புநர்தத்தனைக் கொன்றுவிட்டுத் தப்பிப் பிழைத்தாயானால் பட்டத்து இளவரசியான லாரிகா உன் மனைவியாவாள். ஆஷிகா வேறொரு இளைஞன் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆனால் அவளோ உன்னை மிகவும் விரும்புகிறாள். அவள் இதயம் இந்த மாற்றத்தால் உடைந்தே விட்டது. அவள் புலம்பி அழுவதைக் காணச் சகிக்கவில்லை. என்னிடம் அவள் உன்மேலுள்ள தன் காதலைப் பற்றி ஒளிவு, மறைவின்றி எடுத்துச் சொன்னாளென்றால் பாரேன்!” என்றான் மன்னன்.

“ம்ம்ம்ம் , புரிகிறது அரசே, ஆனால் இந்த நிலை எப்படி மாறும்? எவ்வகையில் நான் உதவ முடியும்?? அல்லது உங்கள் உதவி கிடைக்குமா?”

“மாற்றமா? கண்ணா, தேவிமாதா ஆணையிட்டுவிட்டாளெனில் அதை எவராலும் மாற்றமுடியாது. என்னால் எப்படி உதவ முடியும்??”

“ம்ம்ம்ம், நானோ, புநர்தத்தனோ அல்லது இருவருமோ ஒருவரோடு ஒருவர் சண்டையிட இஷ்டமில்லை எனச் சொல்லிவிட்டால்???”

“ஓஹோ, அப்படி மட்டும் செய்துவிடாதீர்கள். பின்னர் உங்கள் இருவரையுமே நான் கொல்ல நேரிடும். இங்கே நான் யமன்! மரணக்கடவுள்! தெரிந்ததா?” மன்னம் குரலில் கசப்புணர்ச்சி மேலோங்கி இருந்ததும் புரிய வந்தது.

“ஓஹோ, எனில் உங்கள் குமாரத்திகள் இருவருமே வேறு இருவர் வரும்வரை காத்திருக்க நேரிடும்.” கண்ணன் புன்னகை விரிந்தது.

அரசனோ, மெதுவான குரலில், “என் குருநாதர் பரசுராமராக இருந்தால் இந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார் என்பதை நான் அறிவேன்.” தனக்குள்ளாகப் பேசிக்கொள்பவனைப் போல் கூறிக்கொண்டான். அதைக் கூர்ந்து கவனித்த கண்ணன், “ஆம், ஆம், அவர் புநர்தத்தனைத் திரும்ப அழைத்துச் சென்று நம் தர்மத்தை நிலை நாட்டி இருப்பார். சந்தேகமே இல்லை.” என்றான். சற்று நேரம் மெளனமாக இருந்த அரசன் பின்னர் ஏதோ நினைப்பு வந்தாற்போல், “ராணிமாதாவின் கட்டளையை நான் மீறமுடியாது. அதே சமயம் ஆஷிகா, அவள் நாகலோகத்து மற்றப் பெண்களைப் போல் அல்லாமல் வித்தியாசமானவள். நம் நாட்டுப் பெண்களைப் போன்றவள். அவள் மனம் கஷ்டப் படுவதைக் காணவும் எனக்குச் சகிக்கவில்லை. நீ அவளிடம் சென்று சமாதானமாய் இதில் நாம் செய்வது ஒன்றுமில்லை என்று சொல்லித் தேற்று. அவளுக்குத் தகுந்த மணமகன் வேறொருவன் விரைவில் வருவான் என்றும் சொல்.” என்றான்.

“ஓஓஓ, ஐயா, நான் எப்படி அவ்வாறு உறுதி கூற முடியும்?? அது தவறன்றோ?” என்றான் கண்ணன்.

“வாசுதேவ கிருஷ்ணா, உன்னை எவ்வகையிலேனும் தப்ப வைக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்.” மன்னன் கிசுகிசுப்பான குரலில் மீண்டும் தானே பேசிக்கொள்வது போன்ற தொனியில் கூறினான். ஆஹா, இந்தச் சிறுவன் தான் தான் மேற்கொள்ளும் மேற்கொண்டிருக்கும், மேற்கொள்ளப் போகும் தர்மத்திற்காகத் தன் உயிரைக்கூடப் பெரிதாக மதிக்கவில்லையே! இவனை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். மன்னன் மனதில் எண்ண ஓட்டங்கள்! கிருஷ்ணனையே பார்த்துக்கொண்டிருந்தான். கிருஷ்ணன், அவனைப் பார்த்துக்கொண்டே, “ஆம், ஐயா, உங்கள் குருநாதர் ஆன பரசுராமர் இங்கே இருந்தால் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவ்வாறே செய்துவிடுங்கள்.” மீண்டும் மீண்டும் பரசுராமரின் பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தான் கண்ணன்.

“இதோ பார் கண்ணா! அந்தச் சிறுமி ஆஷிகா தற்கொலை ஏதாவது செய்து கொண்டுவிடுவாளோ எனப் பயப்படுகிறேன். என்னுடைய நம்பிக்கைக்கு உகந்த ஆட்களை உன்னோடு அனுப்புகிறேன். நீ அவளிடம் சென்று எவ்வகையிலேனும் அவளைச் சமாதானம் செய். நீ பேசுவதை இந்த என்னுடைய ஆட்கள் அவளுக்கு மொழிபெயர்த்துச் சொல்லுவார்கள்.”

கண்ணன் அரசனின் ஆட்களுடன் ஆஷிகா இருக்குமிடம் நோக்கிச் சென்றான். கண்ணனைக் கண்டதுமே ஓடி வந்து அவனைக் கட்டிக்கொண்டு ஆஷிகா புலம்ப ஆரம்பித்தாள். அவள் சொன்னவற்றைக் கூட வந்தவர்களில் ஒருவன் மொழிபெயர்த்தான். “கண்ணா, என்னை விட்டுவிட்டுப் போய்விடாதே! நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. செத்துப் போய்விடுவேன். இங்கே அனைவருமே, ஏன் என் தாயான அன்னை ராணி உட்பட அனைவருமே எனக்கு விரோதிகள். அன்னை ராணிக்கு லாரிகா தான் ஆசைக் குமாரி, செல்லப் பெண். நான் ஒன்றுமே இல்லை அவளுக்கு. என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லாதே கிருஷ்ணா!”

நாக கன்னிகை தன்னைக் கட்டிக்கொண்டிருப்பதை நினைத்தால் கண்ணனுக்குத் தர்ம சங்கடமாக இருந்ததோடு உள்ளூர வெறுப்பும் மிகுந்தது. எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் ஆஷிகாவின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணன் தத்தளித்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய இளவரசியே, அழாதீர்கள், என்னைவிட மிக அறிவாளியும், வீரனுமான வேறொருவன் உங்களை மணக்க வருவான். இது தேவி மாதாவின் கட்டளை என்கின்றனர் அல்லவோ? ஆகவே நீங்கள் இதற்காக வருந்தாதீர்கள்.”

“இல்லை, இல்லை, எனக்கு நீ தான் வேண்டும், நீ மட்டுமே, உன்னைத்தவிர வேறு யாரானாலும் எனக்குத் தேவையில்லை. உன்னைப் போல் இன்னொருவன் இவ்வுலகில் இருப்பான் என்றும் தோன்றவில்லை.”

“ஆனால் நான் நாளை கொல்லப் படப்போகிறேனே? நாளை என் வாழ்நாள் முடியப் போகிறது.”

“இல்லை, இல்லை, நான் உன்னைக் கொல்ல அநுமதிக்க மாட்டேன். உன்னை இளவரசனோ அல்லது என் தந்தையோ கொல்ல நேர்ந்தால் என்னையும் நான் என் கைகளால் கொன்று கொள்வேன்.”

“முட்டாள்தனமாகப் பேசாதீர்கள் இளவரசி. எந்த நாககன்னிகையும் அவள் கணவன் இறந்தால் இறப்பதில்லை. அவள் உடனே இன்னொருவனைத் தேடிக்கொள்வாள். இது தேவிமாதாவின் கட்டளைகளில் ஒன்று.” கண்ணன் கொஞ்சம் ஏளனமாய்ச் சொன்னான்.

ஆஷிகாவோ, “இல்லை, நீ கொல்லப்பட்டாயெனத் தெரிந்த அடுத்த நிமிடமே நானும் இறப்பேன்.” தீர்மானமாய்ச் சொன்னாள்.

Saturday, April 24, 2010

பெண்ணே! உன் கதி இதுதானா? :(

ம்ஹும் இவங்கல்லாம் திருந்தவே மாட்டாங்க! என்னத்தைச் சொல்றது? மத்தியானம் வேலை எல்லாம் முடிச்சுட்டுப் பாத்திரம் ஒழிச்சுப் போட்டுட்டு, வேலை செய்யற பொண்ணு வரதுக்காகக் காத்துட்டு இருந்தேன். அவள் புயல் மாதிரி, எப்போ வேணா வருவா, விடிய விடிய என் பொண்ணு வயசு இருப்பா. கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்கும் மேலே அவ அம்மா, பொண்ணுனு மாத்தி மாத்தி வேலை செய்யறதாலே அவ அடிக்கடி போடற லீவைக்கூட சகிச்சுக்கத் தான் வேண்டி இருக்கு. இன்னிக்கு வருவாளா? மாட்டாளா? எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பட்டி மன்றம் தினமும் நடக்கும். நேத்திக்கு அப்படித் தான் வரமாட்டானு சாயந்திரம் ஐந்து மணிக்கு வாசல் பெருக்கப் போனால் யாரையோ அடிக்கிறாப்போல வேகத்திலே வந்துட்டிருந்தா. அதிர்ஷ்டம் அடிச்சதேனு நினைச்சேன்.

இன்னிக்கும் காலம்பர வந்துட்டுத் தான் போனா. அப்போல்லாம் வாயைத் திறக்கலை. நானும் நாளைக்கு வரப் போற விருந்தினருக்குக் கொடுக்கணுமேனு இட்லிக்கு அரைச்சுட்டு இருந்தேனா! அப்புறமா வேலை சரியா இருந்தது. போறச்சே கூடச் சொல்லலை, சாயந்திரம் வரமாட்டேன்னு, சொல்லிட்டு லீவு போடும் வழக்கமும் கிடையாது. சரினு இன்னிக்கும் பார்த்துட்டு ஐந்து மணிக்குப் பெருக்கறேன்னு நம்ம ரங்க்ஸ் கிட்டே சொல்லிட்டு (இல்லைனா அவர் நான் பெருக்கறேன்னு கிளம்பிடுவார்) உட்கார்ந்துட்டு இருந்தேன் புத்தகம் படிச்சுட்டு, போர் அடிச்சது, கணினியைத் திறந்தா அநன்யா அக்கா. சரினு அப்போ யாரையும் வம்புக்கு இழுக்க முடியலையேனு நொந்து நூலாகிக் கிடந்தேனா? அவங்க மாட்டினாங்க. அவங்களோட ஒரு வழியா டூ விட்டுட்டு கணினியை மூடலாம்னா, வாசல்லே அம்மா, அம்மானு சத்தம்.

வேலை செய்யற பொண்ணு அம்மானு கூப்பிடமாட்டா! அக்கானு தான் கூப்பிடுவா. வெளியே போய்ப் பார்த்தா அவ அம்மா. அட? இவ வராளே? பெருக்க மாட்டேன்பாளேனு நினைச்சுட்டுப் பொண்ணு ஏன் வரலைனு கேட்டேன்? கடவுளே! "பேத்தி பிறந்திருக்கும்மா!" என்றாளே பார்க்கலாம்! தூக்கிவாரிப் போட்டது எனக்குனு சொன்னால் அதிலே கொஞ்சம் கூடப் பொய்யில்லை! "என்னது?" நான் கத்தின கத்தல்லே எதிர்வீட்டு மாமி, பக்கத்துவீட்டு மாமி எல்லாரும் என்னவோ, ஏதோனு பார்த்தாங்க. மெதுவா அந்த ஆயா சொல்றா," பேத்திக்குக் கல்யாணம் ஆயிடுச்சும்மா, அவளுக்குத் தான் பொண்ணு பிறந்திருக்கு!"

அடக் கடவுளே! போன வருஷம் தான் எங்க பொண்ணு வந்தப்போ இந்தப் பொண்ணு என்ன கிளாஸ் படிக்கிறானு கேட்டுட்டு, பத்தாவதுனு சொன்னதும், புத்தகங்கள் வாங்கிக்கோனு பணம் கொடுத்துட்டுப் போனா. நானும் பொங்கலுக்கு அந்தப் பொண்ணுக்குனு சல்வார், குர்த்தா தைச்சுக்கனு துணி வாங்கிக் கொடுத்திருந்தேன். அப்போல்லாம் கூட வாயே திறக்கலை. குழந்தை பிறக்கறதுனா சும்மாவா? பத்துமாசம் வயித்திலே சுமக்கணுமே? எப்படி தெரியாமல் போச்சு? கல்யாணம் ஆனதையும் சொல்லவே இல்லையே? ஏன்னு கேட்டா "நீ சண்டை போடுவே, திட்டுவே, அதான்ம்மா சொல்லலை, க்காங்க், நல்ல இடமா திகைஞ்சது, கல்யாணம் முடிச்சாச்சு, அப்புறமும், மாப்பிள்ளையும், பொண்ணும் இங்கே தான் இருந்தாங்க, ஏழாம் மாசம் வளைகாப்பு முடிச்சுத் தான் அனுப்பினோம். மார்வாடி கிட்டே கடன் வாங்கி சீரெல்லாம் செஞ்சு அனுப்பி இருக்கோம். பேத்திப்பொண்ணைப் பார்க்க நானும் வரேன்னேன், வேண்டாம்னுட்டு இவ மட்டும் போயிருக்காம்மா!" கிழவியின் குரலில் பெருமையும் ஆதங்கமும்.

95-ம் வருஷம் பிறந்த இந்தப் பெண்ணுக்குப் பதினைந்து வயசு முடியலை. எங்க வீட்டுக்கு வேலைக்கு வந்தாலே நான் படிக்கப் போனு விரட்டிடுவேன். வீட்டு வேலைக்கு அனுப்பாதேனு சொல்லிட்டு இருப்பேன். இவரும் கத்துவார். இப்போ?? பத்து கிளாஸ் கூட முடிக்காமல் கல்யாணம், உடனே குழந்தை?? அந்தக் குழந்தை எப்படித் தாங்கினது?? என்னோட மனசு இன்னும் சமாதானமே ஆகலை. இந்த வாரமே கண்ணீர் வாரமாப் போச்சு! இவங்களை எல்லாம் யார், எப்படித் திருத்தறது? ஒரு வருஷமா என் கிட்டே மூச்சுக் கூட விடாமல் இருந்திருக்கா இந்த வேலை செய்யற பொண்ணு! என்ன நெஞ்சழுத்தம்??? கையாலாகத மனிதர்களாகப் போய்விட்டோமே!

Friday, April 23, 2010

எந்த அளவுக்கு முன்னேற்றம்??

யாருமே சரியாப் புரிஞ்சுக்கலை. சீரியல் நிகழ்வைப் பத்திச் சொன்னதும் எல்லார் கவனமும் திசை திரும்பி விட்டது. போகட்டும், இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லி இருக்கலாமோ? சொல்லி இருக்கலாம் தான். ம்ம்ம்ம் இப்போப் பார்த்த ஜெயஸ்ரீயின் பின்னூட்டத்திலே சொல்ல வந்ததை அவங்க புரிஞ்சுண்டு இருக்கிறது தெரியுது. ஓகே. :D கொஞ்ச நாட்களாகவே வெயில் அதிகமா இருக்கிறதாலே மத்தியானமாய் ஜாஸ்தி உட்கார முடியலை. சாயந்திரம் தான் வர முடியுது. இருக்கிற நேரத்துக்குள்ளே எழுதணும். போதாக்குறைக்கு இந்த மின்வெட்டு வேறே. யுபிஎஸ் வேறே பாட்டரி வீக்காகி ஒரே கத்தல். முதல்லே அதனாலேனு புரிஞ்சுக்கலை. வோல்டேஜ் பிரச்னைனு நினைச்சேன். அப்புறம் பார்த்தா பாட்டரி மட்டும் வீக்காகலை. கூடவே ரெசிஸ்டர் என்னும் சின்ன உறுப்பு ஒண்ணும் உடைஞ்சு போயிருக்கு. அது உடைஞ்சிருந்ததே தெரியலை. ஏதோ கீழே விழுந்திருக்கேனு எடுத்தா ரெசிஸ்டர்னு மெகானிக் சொல்றார். நல்லவேளையா உள்ள உள்ள சின்ன காயில்(எவ்வளவு அழகாச் சுத்தி இருக்காங்க? ஆச்சரியமா இருந்தது!) எரியலை. நான் பாட்டுக்குக் கணினியைப் போட்டுட்டு இருந்தேன் இத்தனை நாளா. கவனிக்கலைனா வெடிச்சிருக்கும்னு மெகானிக் சொல்றார். தொழில் நுட்பம் தெரிஞ்சவங்கதான் இது பத்திச் சொல்லணும்.

ஆனால் கொஞ்ச நாட்களாகவே இப்படி ஏதாவது ஒண்ணு நடந்துட்டு இருக்கு. சில நாட்கள் முன்னால் மீட்டர் ரொம்பவே வேகமாய் ஓடுதேனு எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொன்னால் இன்வெர்ட்டர் போட்டப்போ அதுக்குத் தனியா ந்யூட்ரல் கொடுக்காமல் ஏற்கெனவே மெயின் லைனில் ஓடிட்டிருந்த ந்யூட்ரலிலேயே கொடுத்திருக்காங்க. அது என்னன்னா, மெயினை அணைச்சாக் கூட இன்வெர்ட்டர் கனெக்ஷன் கொடுக்காத லைட்டெல்லாம் எரிய ஆரம்பிச்சது. ந்யூட்ரலில் கொஞ்சம் ஷார்ட் சர்க்யூட் ஆகி எரிஞ்சும் போயிருக்கு. கவனிக்கலை, அதையும். நல்லவேளையாப்ப் பார்த்தோம். அதுக்கு அப்புறம் அதுக்குத் தனியா ந்யூட்ரல் போட்டு அதைச் சமாதானம் செய்ததுக்கு அப்புறம் இப்போ மீட்டரும் சரியா ஓடுது.

இந்த எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பொருட்கள் வசதினு நினைக்கிறோம். உண்மையில் இவற்றால் மேலும் மேலும் செலவு தான் ஏற்படுகிறதுனு என்னோட எண்ணம். கொஞ்ச நாட்கள் முன்னர் நண்பர் தமிழ்த்தேனீ தன்னோட லாப்டாப்பினால் பட்ட கஷ்டத்தை எழுதி இருந்தார். அதீத செளகரியங்களினாலே சங்கடங்களா? சங்கடங்கள் எல்லாருக்கும் ஏற்படுபவைதான். நான் சொல்றேன், பலரும் சொல்றதில்லைனு தோணுது. இதை எல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் இல்லாமல் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாதானு ஒரு பக்கம் தோணுது. கூடவே நாம இருக்கிற எச்சரிக்கை உணர்வோடு இருந்தால் எல்லாம் சரியாய் இருக்கும்னு தோணுது. அதோட எல்லாத்துக்கும் மேலே இருப்பவனும் சரியான சமயத்தில் நமக்கு புத்தியைச் செயல்பட வைக்கணும். என்னோட வாழ்க்கையிலே பல சமயங்களிலே இம்மாதிரியான பயங்கர நிகழ்வுகளும், அதிலிருந்து மயிரிழையில் தப்பினதும் நடந்திருக்கு. கூடவே அம்மாவோ, அப்பாவோ கையைப் பிடிச்சுண்டு வராப்பல இறைவனும் வரார்னும் புரிய வைச்சிருக்கு. அன்றாட நிகழ்வுகளிலே கூட எதிர்பாராமல் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கு.

இந்த வாரம் ஆரம்பத்திலே இருந்து கண்கள் தளும்பும்படியான நிகழ்வுகள் முக்கியமாய் மூன்று. ஒரு மணி ஆர்டரை அனுப்பினவர், அதை எடுத்து வந்த தபால் பெண். தபால்காரி?? அடுத்து நாங்க உதவிகள் செய்யும் ஒரு ஏழைக்குடும்பத்திற்கு இம்மாத ரேஷன் வாங்கி வைக்கறதுக்காக ரேஷன் கடைக்குப் போனார் என் கணவர். ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வது ஒரு பெண். மணி ஆர்டரை அனுப்பினவர் கண்கள் தளும்ப வைத்தாரென்றால் அதை எடுத்து வந்த தபால்காரப் பெண். விடிய விடிய 22 வயதிருக்குமா? நல்ல கொளுத்தும் வெயிலில், அந்த முரட்டுக் காக்கிப் புடைவை/சல்வார் குர்த்தா?? சரியாக் கவனிக்கலை, ஆனால் பருத்தித் துணி இல்லை. யூனிஃபார்ம் ஆச்சே? காற்றே வராத அந்தத் துணியை உடுத்தியவண்ணம் வீடு வீடாக ஏறி, இறங்கி தபால் பட்டுவாடா பண்ணிக்கொண்டு வேர்க்க, விறுவிறுக்க! கடவுளே! என் பெண்ணாய் இருந்தால் இப்படி ஒரு வேலையே வேண்டாம்னு சொல்லி இருப்பேன். அந்தப் பெண் கிட்டேயும் கேட்டேன்! ஏன் இப்படி ஒரு வேலைக்கு வந்தேனு!

மத்திய அரசு உத்தியோகம். இப்படிக்கிடைச்சால் தான் உண்டு. மூணுவருஷம் இப்படி அலைஞ்சால் அப்புறமாய் ஒரு தேர்வு எழுதிட்டு அலுவலகத்தில் உட்கார்ந்த வண்ணம் வேலை செய்யலாம். தேர்விலும் தேர்ச்சி பெறணும்! :(( பெண்கள் முன்னேற்றம் என்பது இதுதானா?? ஒரு வாரமாய் மனசைக்குடையுது. சில வீடுகள் அடுக்குமாடிக்குடியிருப்புகள். இங்கே எல்லாம் இன்னும் கீழேயே அவரவர் குடியிருப்பு எண்ணோடு கூடிய தபால் பெட்டி வசதி கிடையாது. ஆகவே கீழேயே எல்லாத் தபாலையும் கொடுத்துட்டுப் போகமுடியாது.அடுத்துவர மழைக்காலம், மேடு, பள்ளம் தெரியாமல் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சைகிளை ஓட்டிக்கொண்டு வரணும்! வெயிலில் காய்ந்து, மழையில் நனைஞ்சு, அந்தப் பெண் கொஞ்சம் முன்னேறுவதற்குள் உடம்பு காய்ந்து வடாமாகிப் போயிடுமே!

ரேஷன் கடைப் பெண்?? உட்கார்ந்தவண்ணம் வேலைனு நினைக்கக் கூடாது. அரசு ரேஷன் பொருட்களை மட்டுமே கொடுக்கும் பொறுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறதா? கட்டிடங்கள் அரசின் பொறுப்பில் இல்லையா? இதோடு மூணு இடம் மாறியாச்சு. எல்லாம் காற்று வசதிக்காக ஒரு சிறு சாளரம் கூட இல்லாமல் கட்டப் பட்ட ஒரு இருட்டு அறை. சுற்றிச் சாமான் மூட்டைகள். நடுவில் தராசு. நல்லவேளையா எலக்ட்ரானிக் தராசு. பஸ் கண்டக்டர்கள் வைத்திருக்கும் கணக்கு இயந்திரத்தில் பில் போட்டுக் கொடுக்கிறாங்க. நாள் பூராவும் உட்கார்ந்திருக்கணும். வேலை நேரம்னு இருந்தாலும், கூட்டம் வந்துட்டால் எப்படித் தான் சமாளிக்கிறாங்களோ? எல்லாருமே கொஞ்சம் சாமான் தான் வாங்குவாங்களா என்ன?? சிலர் 20 கிலோ, எல்லாம் நிறுத்து அவங்க அவங்க பையில் கொட்டி, உதவிக்குக் கூட யாரும் இவர் போனப்போ இல்லை. என்ன கொடுமை இது?

எல்லா வேலைக்கும் பெண்கள் வரணும், வரலாம்னு ஆண்கள் சொல்வது ஒருவேளை இம்மாதிரிக்கஷ்டங்களில் இருந்து தங்களைக் காப்பாத்திக்கவோனு சில சமயம் தோணுது. அப்படி நினைப்பதைத் தவிர்க்கமுடியலை. இதிலே பெண்கள் முன்னேற்றமே இல்லை. கடுமையான பின்னேற்றம்! படிப்பு இல்லாமல் கட்டிட வேலைகள் செய்யும் பெண்கள் வருந்துவதைக் கண்டிருக்கிறேன். இது படிச்சுட்டுப் பெண்கள் செய்யும் கடுமையான வேலை. இதுக்கு என்ன சொல்றது???

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்! 2ம் பாகம்

புநர்தத்தனா? கண்ணனா?? ராணியின் எதிர்பார்ப்பு!


புண்யாஜனாக் கப்பலின் ஊழியர்கள் இளவரசியின் புலம்பலை மொழி பெயர்த்தனர். “வாசுதேவ கிருஷ்ணா, தேவி மாதா அன்னை ராணியின் மூலம் ஆக்ஞை இட்டுவிட்டாளாம். நீ தற்போதைய இளவரசனும், பட்டத்து இளவரசியின் தற்போதைய கணவனும் ஆனவனோடு சண்டை இடவேண்டுமாம். நீ ஜெயித்தால் அடுத்த பட்டத்து இளவரசியைக் கைப்பிடிக்கும் பேறு பெறுவாய். உன்னால் புநர்தத்தன் கொல்லப் படுவான் என அன்னை ராணி கூறுகிறாளாம். இதை நீ மீற முடியாது. உன்னிடம் அன்பு வைத்திருக்கும் இந்தப் பெண்ணால் அதைத் தாங்க முடியவில்லை. ஒருவேளை நீ கொல்லப் படுவாயோ என அஞ்சுகிறாள்.”

கிருஷ்ணனுக்கு ஓரளவு செய்தி எதிர்பார்த்தது எனினும் இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை. அது கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. மேலும் இவ்வளவு விரைவில் தேவி மாதா அன்னை ராணியின் மூலம் தன்னைத் தேர்ந்தெடுப்பாள் எனவும் அவன் எதிர்பார்க்கவில்லை. பாவம் இந்தப் பெண்! தன்னை அவளுக்கென நினைத்திருந்தாள். இப்போது இந்தச் செய்தியால் ஏமாற்றம் அடைந்து விட்டாள். அவர்கள் போட்டுக்கொண்டிருந்த திட்டம் இன்னும் முழுமை அடையவில்லை. அதற்கு முன்னால் இந்தச் செய்தி வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது மற்ற அனைவருக்கும்.எப்படியாவது புநர்தத்தனை இங்கிருந்து கடத்திச் சென்றுவிடவேண்டும் எனத் திட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த போதே கிருஷ்ணனுக்கு இம்மாதிரியான அழைப்பு வரும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் கண்ணனை உடனடியாக அன்னை ராணி இருக்குமிடம் கொண்டு செல்லவும் உத்தரவாகி இருந்தது. பாதிப் பேச்சினிலேயே கண்ணன் அங்கே சென்றான். அங்கே அன்னை ராணி உடலில் தேவிமாதா புகுந்து அப்போது தான் வெளிச்சென்றதாயும், அன்னை ராணி தேவிமாதாவை நமஸ்கரித்த வண்ணம் காட்சி கொடுப்பதாயும் தெரியவந்தது. அவள் அருகில் தெய்வீகத் தந்தையான அரசன், “யமன்” அன்னை ராணியை மாறாக் காதலுடன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

கண்ணனிடம் அன்னை ராணி எதுவும் பேசவில்லை. மாறாக மன்னனே பேசினான். “வாசுதேவா! தேவி மாதாவால் அடுத்த போட்டிக்கு உரியவனாக நீ தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாய். இப்போதைய இளவரசனோடு நீ போர் புரியவேண்டும். போரில் நீ கொல்லப் பட்டால் அவனே இளவரசனாக நீடிப்பான். அவனை நீ கொன்றாயானால் பட்டத்து இளவரசி லாரிகாவின் கரம் உனக்கே. நாங்கள் தேவி மாதாவின் திருத் தலத்துக்கு அலங்கரிக்கச் சென்றதும், லாரிகா பட்டத்து ராணியாவாள். நீ தான் அரசன். இது உனக்கு வாய்த்திருக்கும் மாபெரும் வாய்ப்பு. நன்றாகப் பயன்படுத்திக்கொள்வாயாக!” என்றான்.

கொஞ்சம் கிசுகிசுப்பான குரலில் அன்னை ராணியும் அதை ஆமோதித்தாள். கண்ணன், “ஆனால் நான் போர் புரியவும் விரும்பவில்லை. இளவரசனைக் கொல்லவும் விரும்பவில்லை.” என்றான்.

“எனில் உன்னைக் கொல்லவேண்டியவன் நானே மகனே! அது என்னுடைய கடமை. மேலும் தேவிமாதா கொடுத்திருக்கும் மீறமுடியாத கட்டளைகளில் அதுவும் ஒன்று. அவள் கட்டளையை மீற முடியாது.” என்று திட்டவட்டமாய்த் தெரிவித்தான்.

“இது என்ன விசித்திரமான கட்டளைகளும், விதிமுறைகளும்? அதுவும் உலகுக்கே தாய் என்பவளிடமிருந்து?” கண்ணன் கேட்ட இந்தத் தொனியால் அன்னை ராணிக்கு ஆச்சரியம் மேலிட்டது. இன்றுவரையிலும் இம்மாதிரி எவரும் சிந்தித்தது கூட இல்லை. அதிர்ச்சியும், குழப்பமும் கலந்து கண்ணனைப் பார்க்கும்போது அவனோ, “எனக்கு எந்தத் தீங்கும் செய்யாத ஒருவனை நான் ஏன் கொல்லவேண்டும்?” என்றும் கேட்டான்.

“உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப் பட்டுவிட்டது. நாளை நடக்கப் போகும் விழாவில் நீ புநர்தத்தனைக் கொல்லவேண்டும், அல்லது அவன் உன்னைக் கொல்லவேண்டும். “ தெய்வீகத் தந்தை மேலே பேச எதுவும் இல்லை என்ற தொனியில் அப்போதைய சந்திப்பை முடிக்கத் தயார் ஆனான். கிருஷ்ணன் யோசனையுடன் அங்கிருந்து கிளம்பினான். புநர்தத்தன் இருக்குமிடம் சென்றான். அங்கே புநர்தத்தன் இதை எதிர்பார்த்தவனாகவே இருந்தான். அவனிடம்கிருஷ்ணன் நீ என்ன நினைக்கிறாய் இதைப் பற்றி எனக் கேட்க அவனோ என்னால் இதை எப்படித் தடுக்க முடியும் வாசுதேவா? நாகலோகத்தின் விதிமுறைகளும், சட்டதிட்டங்களும் மீறமுடியாதவை என்றான்.

“எனில் நீ செய்யப் போவது என்ன புநர்தத்தா?” கண்ணன் கேட்டான்.

“உத்தவன் நீ கம்ஸனையும், சாணுரனையும் கொன்றது பற்றி என்னிடம் கூறினான். மேலும் நீ என் தந்தை குரு சாந்தீபனியின் சீடன். ஆகவே நீ கட்டாயம் என்னைக் கொன்றுவிடுவாய்!” புநர்தத்தன் அப்போதே கண்ணன் தன்னைக் கொல்லவேண்டும் என எதிர்பார்த்தவன் போலத் தோன்றினான். மேலும் மரணத்தைப் பல ஆண்டுகளாய் எதிர்பார்த்துக் களைத்தவன் போலும் காணப்பட்டான். அவனையே யோசனையுடன் பார்த்தான் கண்ணன்.

"புநர்தத்தா! நாம் ஒரு வகையில் புனிதமான முறையில் சகோதரர்கள் ஆகிறோம். நீ என் குருவின் மகன். குரு எனக்குத் தந்தை என்னும் முறையில் நீ என் சகோதரன் ஆகிறாய். நானும் உன் உடன்பிறவா சகோதரன் ஆகிறேன். இப்போது நான் உன்னைக் கொல்லவேண்டும், அல்லது நீ என்னைக் கொல்லவேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்த அதர்மக்கொலை சற்றும் ஏற்கமுடியாத ஒன்று." என்றான் கண்ணன். மென்மையான ஆறுதல் அளிக்கும் குரலில் இதைச் சொல்லிக்கொண்டே தன் கைகளால் அவனை மெல்ல அணைத்தான் கண்ணன். சொற்களின் ஆறுதலும், மென்மையும் கைகளின் வழியாகப் புநர்தத்தன் உடலுக்குள் புகுந்து அவன் கண்களின் வழியாக வெளியே வந்தது.

தழுதழுக்கும் குரலில் புநர்தத்தன் பேசினான்."வாசுதேவா, உன்னோடு சண்டை போட என்னால் இயலாது. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. என் தந்தையைச் சந்தோஷப் படுத்தவென்றே நீ இத்தகையதொரு அபாயகரமான காரியத்தில் இறங்கிக் கடைசியில் இங்கே வந்து சேர்ந்திருக்கிறாய். உன்னை மரணம் துரத்துவதைக் கூட லக்ஷியம் செய்யவில்லை நீ. இத்தனையையும் பொருட்படுத்தாமல் இங்கே இருந்து என்னைக் காத்து அழைத்துச் செல்வது ஒன்றையே லக்ஷியமாய்க் கொண்டிருக்கும் உன்னிடம் நான் யுத்தம் புரிந்து உன்னைக் கொல்வேனா? இல்லை கிருஷ்ணா, இல்லை, என்னால் இயலாத ஒன்று!" புநர்தத்தன் அழத் தொடங்கினான்.

"ஆஹா, நான் மட்டும் உன்னைக் கொன்றுவிடுவேனா? புநர்தத்தா! என் சகோதரா! பொறுத்திரு, நம்பிக்கையை இழக்காதே! நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஏதேனும் ஒரு வழி கிடைக்கும். அனைத்துக்கும் மேலான அந்தப் பரம்பொருள் தர்மத்தின் வழியில் செல்பவனை, எந்தக் கஷ்டத்திலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனைக் கைவிடமாட்டார். நிச்சயம் இது! கவலையே வேண்டாம்!"

Thursday, April 22, 2010

எது வேண்டும் பெண்ணுக்கு???

தொலைக்காட்சியில் ஒரு தொடர் பத்திக் கேள்விப்பட்டேன். படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய நினைக்கிறாராம் தந்தை. பணக்கார மாப்பிள்ளைக்கு. பெண் எதைத் தேர்ந்தெடுப்பாள்?

பணம், நகை, காரில் ஊர் சுற்றல், உல்லாச வாழ்க்கையையா??

தானே கஷ்டப்பட்டு குடும்பத்தினர் உதவி இல்லாமல் மற்றவர் உதவியோடு படிப்பதையா??

இந்தக் கேள்வி சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரும் கேட்கப் பட்டது. ஆனால் அப்போ பெண்களுக்குப் படிக்கவென வங்கிக் கடன் கிடைக்காது. அதனால் படிக்க முடியாமல் போன பெண்கள் எத்தனையோ பேர்! மீறி எங்க பெண் படிக்கணும்னு படிக்க வைச்ச பெற்றோர்களும் உண்டு, அபூர்வமாய்! எத்தனை பேருக்கு இது நடந்திருக்கு??

Wednesday, April 21, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

ஆபத்து நெருங்கிவிட்டது!

கண்ணா, இந்த நாக கன்னிகைகளைப் பற்றி நீ பூரணமாய் அறிந்திருக்கவில்லை. இவர்கள் உன்னைச் சுற்றிக்கொள்ளுவார்கள் ஒரு ஒட்டுண்ணியைப் போல. உன்னை இவர்கள் சுற்றச் சுற்ற இவர்கள் தரும் இன்பத்திலும், சந்தோஷத்திலும் நீ உன்னை மறந்துவிடுவாய். உன்னால் இவர்களைப் பிரியவே முடியாது. இவர்களை விட்டுச் செல்லவும் நினைக்கமாட்டாய்!”

“எனில் ஐயா, நீங்கள் அந்த தேவி மாதாவாக இருக்கும் அன்னை ராணியை உங்களை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருப்பதற்கு வெறுக்கவே இல்லையா?” கண்ணன் குரலில் ஆச்சரியம் கலந்திருந்தது. அன்று காலையில் தான் புநர்தத்தன் மூலம் இந்த நாககன்னிகைகள் அளிக்கும் இன்பம் பற்றி அறிந்திருந்தான். இப்போது இரண்டாம் முறையாக இந்த மன்னனிடமிருந்து! அதிலும் அனைத்திலும் நேர்மையுடனும், ஒரு புனிதத் தன்மையைக் காப்பாற்றிக்கொள்வதிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதனை அப்படியே தலைகீழாய் மாற்றி அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் வண்ணம் மாற்றும் மாயவலை!

“என்ன??” இப்போது தெய்வீகத் தந்தையின் குரலில் ஆச்சரியம்! “அன்னை ராணியின் கொடுமைகளால் அவளை வெறுப்பதா? என்னால் அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை, வாசுதேவ கிருஷ்ணா! அவள் உடலில் தேவி மாதா புகும் வரையிலும் அவள் எனக்கு ஒரு இன்பத்தை அள்ளிக்கொடுக்கும் மனைவியாகவே செயல்படுகிறாள். எந்த விதத்திலும் எனக்குக் குறை வைப்பதில்லை. அந்த நேரங்களில் அவளுக்காக நான் என் உயிரைக் கூட அர்ப்பணிக்கத் தயாராய் இருக்கிறேன். இல்லை, கிருஷ்ண வாசுதேவா, அவளை என்னால் பிரிய முடியாது. நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். என் உயிரினும் மேலாக என்று வைத்துக்கொள்ளலாம். அவள் இறந்தாளானால் அவளோடு நானும் இறந்துவிடுவேன். அவள் இல்லாத உலகை என்னால் நினைத்துக் கூடப்பார்க்கமுடியவில்லை. தேவிமாதாவின் கட்டளையும் அதுவே. இவற்றிற்கு மேல் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?”

“அரசே, நீங்கள் மிகுந்த அநுபவமும், புத்திசாலியும், திறமைசாலியும் ஆவீர்கள். மேலும் நீங்கள் பரசுராமரின் சீடர் எனவும் சொல்கிறீர்கள். நான் ஒரு சின்னஞ்சிறு சிறுவன். நான் என்ன கூறமுடியும் உங்களுக்கு? போகட்டும், ஒரு நாககன்னிகையை உங்கள் மனைவியாக அடைந்ததின் மூலம், உங்கள் குலத்துக்கும், குலத்து முன்னோர்களுக்கும் செய்யவேண்டிய கடமைகளை உங்களால் நிறைவேற்ற முடியுமா? நிறைவேற்றிவிட்டீர்களா?”

“அவர்களைப் பற்றிய எண்ணங்களையே ஒடுக்கவேண்டியதே. இந்த நாககன்னிகைகள் கொடுக்கும் இன்பத்துக்கு முன்னால் அவை எல்லாம் தூசு மாத்திரம்!”

“ஐயா, நம்முடைய சநாதன தர்மத்தில் நம் சந்ததியில் வசிஷ்டர், அருந்ததி, போன்ற ரிஷி, ரிஷி பத்தினிகளும், அகஸ்தியர், லோபாமுத்திரை போன்ற ரிஷி, ரிஷி பத்தினிகளும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மனைவியோடு வாழ்க்கையை மட்டும் அநுபவிக்கவில்லை. தபஸ் செய்வதிலும், மனைவிக்குப்பங்கு கொடுத்தனர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களிலும் மனைவியோடே பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் செய்த தீரச் செயல்களிலும் மனைவியின் பங்கு உண்டு. எல்லாவற்றிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே அநுபவித்தனர்! அவர்களைப் பற்றி நீங்கள் நினைக்கவில்லையா?”

“ம்ம்ம் ஒரு நாககன்னிகை இவை அனைத்தையும் அவளுக்குச் சொந்தமாக்கிக்கொண்டு விடுவாள். அவள் உனக்கு அளிக்கும் சுகங்களின் மூலம் உன்னையே விலைக்கு வாங்கிவிடுகிறாள். உன்னையும், உன் உடலையும் மட்டுமல்லா, கிருஷ்ணா, உன் எதிர்காலம், நம்பிக்கைகள், உன் பெற்றோர், உன் குலத்து முன்னோர்கள், உன் குலத்துப் பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து தன் பக்கம் மாற்றிவிடுகிறாள்.”

“மாட்சிமை பொருந்திய மன்னரே! தங்கள் அன்பான புத்திமதிகளுக்கு நான் மிகக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் நான் இங்கே ஒரு முக்கியமான காரியத்தை ஒப்புக்கொண்டு அதற்காகவே வந்துள்ளேன். என் குருவான சாந்தீபனிக்கு நான் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். புநர்தத்தன் என்னும் சாந்தீபனியின் குமாரன், தற்சமயம் உங்கள் இளவரசனாய் இருப்பவன். அவனை அவன் தந்தையிடம் திரும்பச் சேர்ப்பதாய்ச் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதற்கெனவே வந்துள்ளேன். அவன் இல்லாமல் நான் திரும்புவது என்பது ஒருநாளும் நடவாத காரியம்.”

“என்றால் விதி உன்னையும் விடப் போவதில்லை.”

“ஐயா, உங்கள் பெருந்தன்மைக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் இளகிய மனம் என்னைப் பரவசம் அடையச் செய்கிறது. நீங்கள் ஏன் எனக்கு உதவி செய்யக் கூடாது?”

“என்னால் முடியாது அப்பனே!”

“நான் ஒப்புக்கொண்டு வந்தபடி புநர்தத்தனை அழைத்துப் போகமுடியவில்லை எனில் நான் இறப்பதையே விரும்புகிறேன். என் கடமையைச் செய்யாமல் இருப்பதை விட இறப்பதே மேல். ஆனால் தந்தையே, நீங்கள் கட்டாயம் எனக்கு உதவப் போகிறீர்கள்.” என்றான் கண்ணன்.

ஒரு நிமிடம் தெய்வீகத் தந்தையான மன்னனுக்குத் தன் குருவான பரசுராமர் கட்டளை இடுவது போல் தோன்றியது. அவரும் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்பார்களே! தீர்மானமாகவும், முடிவாகவும் இவ்வாறே அவர் பேசுவார். அவரால் இவ்விதமே பேசமுடியும். அப்படித் தான் இந்த இளைஞனும், தன் தெய்வீகத் தன்மையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறான். ஆம், இவனிடம் ஏதோ தெய்வீகம் உண்மையாகவே உள்ளது. சநாதன தர்மம்! நம் நாடு! ஆஹா, பூர்வ ஜன்மம் என்று சொல்லக் கூடிய அந்த நாட்கள்! நம் நாட்டிலே தான் இம்மாதிரியான வாக்குறுதிகளையும் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டும் மக்கள் பிறந்திருக்கின்றனர். இவனும் அதற்கெனவே பிறந்திருக்கிறானோ? எவ்வளவோ வருஷங்களாக மறந்திருந்த பிறந்த தாயகம் அந்த மன்னன் கண்களுக்கெதிரே தோன்றியது. நீண்ட பெருமூச்சு விட்டான்.

கண்ணன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பி விட்டான். மறுநாள் காலையில் வைவஸ்வதபுரியைச் சுற்றிப் பார்ப்பதில் கண்ணனும், உத்தவனும் பொழுதைக் கழித்தனர். கப்பலுக்குப் பரிசுப் பொருட்களை எடுக்கச் சென்றிருந்த ராதுவும் திரும்பிவிட, கண்ணன் அவன் கொண்டு வந்த பரிசுப்பொருட்களை பட்டத்து இளவரசி, இளவரசன் புநர்தத்தன், தெய்வீகத் தந்தையான அரசன் ஆகியோருக்கும், இளைய இளவரசியான ஆஷிகாவுக்கும் பிரித்துக் கொடுத்தான். ஆஷிகா ஏற்கெனவே அன்னை ராணியின் கட்டளையின் பேரில் கண்ணனைச் சுற்றிக்கொண்டிருந்தாள். கண்ணன் தனக்கே என நம்பிக்கொண்டிருந்தாள். பரிசுப் பொருட்களைக் கண்டதும் உவகையில் கூச்சலிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டாள்.

அன்று மதியம் உணவிற்குப் பின்னர் கிருஷ்ணனும், உத்தவனும் தப்புவதற்கான வழிமுறைகளைப் பற்றி மெல்லிய குரலில் விவாதித்துக்கொண்டிருந்தனர். "க்ரீஈஈஈஈஈச்" என்றொரு கூச்சல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினர் இளைஞர்கள் இருவரும். அங்கே இளைய இளவரசியான ஆஷிகா ஓடி வந்து கொண்டிருந்தாள். அவள் நீண்ட கூந்தல் சிறு சிறு பாம்புகளைப் போல் பின்னப் பட்டிருந்தது. அவை காற்றில் பறக்க அவள் ஓடி வந்தது அவள் தலையைச் சுற்றிலும் பாம்புகள் சூழ வந்தாற்போன்ற தோற்றத்தில் காட்சி அளித்தது. ஓடி வந்து கொண்டே என்னவோ சொல்லிப் புலம்பவும் செய்தாள் அவள். கண்ணனின் இருப்பிடம் வந்ததும் ஒரே பாய்ச்சலில் கண்ணனிடம் சென்று அவனைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள். புலம்பினாள். என்ன காரணம்?? கண்ணன் திகைத்தான். அவள் என்ன சொல்லி அழுகிறாள்? புரியவில்லை. புண்யாஜனா கப்பலின் ஊழியர்கள் கப்பலில் இருந்து தன்னுடன் அரண்மனைக்கு வந்தவர்களில் நாக தேசத்து மொழி தெரிந்தவர்களைக் கண்ணன் வரவழைத்தான். அவர்கள் கூறியது, கண்ணனைத் திகைப்பில் ஆழ்த்தவில்லை.

Monday, April 19, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

தெய்வீகத் தந்தையின் விருப்பம்!

கிருஷ்ணன் வந்ததுமே, அவன் தோளில் ஆதுரத்துடனும், ஒரு தந்தையின் பாசத்துடனும் கை வைத்து அவனிடம் மென்மையான குரலில், 'மகனே, பயப்படாதே, நான் உன்னைத் துன்புறுத்த மாட்டேன்." என உறுதி அளித்தான். தெய்வீகத் தந்தை என அழைக்கப்படும் அந்த மன்னனுக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்த கிருஷ்ணன், தன்னை அந்த நடு இரவில் அங்கே அழைத்ததன் காரணத்தையும் வினவினான்.

"கண்ணா," மன்னன் குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது. "நீ தெய்வீகத் தன்மை பொருந்தியவன் என்பதில் சந்தேகமே இல்லை எனக்கு. தேவி மாதா சரியாகவே கூறி உள்ளாள். நான் உன்னையும், உன் வீரத்தையும் பெரிதும் மதிக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் என் சொந்த மகனைப் போல் உன்னை நேசிக்கவும் செய்கிறேன். அதனாலேயே உன்னை எச்சரிக்கை செய்ய இந்த நடு இரவில் இங்கே அழைத்தேன். குமாரா, நீ இங்கிருந்து உடனே கிளம்பு. இந்த நாடு உனக்கு ஏற்றதல்ல. அபாயத்தில் விளிம்பில் நீ நின்று கொண்டிருக்கிறாய், குழந்தாய். இந்த நாகலோகம் உனக்கு ஏற்றதல்ல. உன் கப்பலுக்கு உடனே செல்வாயாக. உன்னை நான் தப்புவிக்கிறேன்." என்றான்.

"தந்தையே, உங்கள் பேச்சில் இருந்தும், நீங்கள் சரளமாய்ப் பேசுவதில் இருந்தும் நீங்கள் ஓர் ஆரியர் எனப் புரியவருகிறதே. இங்கே நீங்கள் அரசர். அப்படி இருக்கையில் உங்கள் பாதுகாப்பில் இருந்து நான் ஏன் தப்பவேண்டும்? ஓர் ஆரியனான என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீர்களா?"

"மகனே, நீ இங்கேயே இருந்தாயானால் என் இளைய மகள் ஆன ஆஷிகாவை நீ மணக்க நேரிடும். பின்னர் இங்கேயே இந்த அன்னை ராணிக்கும், அவள் மக்களுக்கும் தொண்டு புரிந்து கொண்டு அடிமையாக இருக்கும் அவலத்துக்கு ஆளாவாய். உனக்கு விடுதலையே கிடைக்காது. சுதந்திரமாய்ச் சிந்திக்கக் கூட முடியாது உன்னால். உன் விருப்பம் என்பது துளிக்கூட இல்லாமல் இந்த அன்னை ராணியின் விருப்பத்திற்கேற்ப நீ வாழவேண்டும். அப்படியும் அவளை உன்னால் திருப்தி செய்ய இயலாது. வேறு உன்னை விடத் திறமைசாலி ஒருவன் வந்தானெனில் உன் இடத்திற்கு அவன் வருவான். உன் உயிர் உன்னுடையதல்ல. நீ கொல்லப் படுவாய்." என்றான் அந்த தெய்வீகத் தந்தை என அழைக்கப் பட்டவன்.

"ஆனால் நீங்கள், உங்களைப் பார்த்தால் பல வருடங்களாக இங்கே இருப்பது போல் தெரிகிறது. உங்களுக்கு எதுவும் நேரவில்லையல்லவா?" என்றான் கண்ணன்.

"மகனே, எனக்கு நேர்ந்த கஷ்டங்களை எப்படி நான் விவரிப்பேன்?? அதோடு உன்னை இங்கே சூழ்ந்திருக்கும் கஷ்டங்களையும் உனக்கு இங்கே நேரவிருக்கும் அசம்பாவிதங்களையும் என்னால் எவ்வாறு சொல்ல இயலும் எனப் புரியவில்லை. உனக்கு எப்படி புரிய வைப்பேன்?? என் மகனே, பல வருடங்கள் முன்னால், எப்போது என எனக்கே நினைவில் இல்லை, பல ஆண்டுகள் முன்னால் நான் வைவஸ்வதபுரிக்குத் தற்செயலாய் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்த கப்பல் தரை தட்டி இதன் கரையில் நின்றதால் வந்து சேர்ந்தேன்." அரசன் சற்று நிறுத்திக்கொண்டான்.

"அப்போது நான் இளைஞன். எனக்கு மனமார, உளமார வரவேற்பு அப்போதிருந்த தெய்வீக அன்னை ராணியால்கொடுக்கப் பட்டது. இப்போது என் மனைவியாய் இருக்கிறாளே அவள் அப்போது வாலிபப் பருவத்தில் இருந்தாள். நான் வந்ததுமே இந்த விழா நடந்தது. அப்போது இளவரசியாகவும் தெய்வீக அன்னையாய்முடிசூடப் போகிறவளாயும் இருந்த இந்த அன்னை ராணியின் அப்போதைய கணவனை நான் தோற்கடிக்கவேண்டும். அல்லது நான் அவனால் கொல்லப்படவேண்டும். என் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பார். ஆனால் அதிர்ஷ்டவசமாய் நான் பார்கவ குலத்து மஹானும், ஜமதக்னியின் புதல்வரும் ஆன பரசுராமரின் சீடராய் இருந்தேன். அவருடைய கோடரி ஆயுதத்தின் வலிமையை நீ அறிவாய் அல்லவா? அவரிடம் பயிற்சி பெற்ற நான்வெகு எளிதாய் அப்போதைய பட்டத்து இளவரசனைக் கொன்றேன். பின்னர் நான் அந்த இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது. திருமணமும் முடிந்தது. நானும் இங்கேயே அடிமையானேன்."

"ஆனால் அடுத்த கப்பல் வரும்போது நீங்கள் தப்பி இருந்திருக்கலாமே? ஏன் தப்பவில்லை ஐயா?" கண்ணன் கேட்டான்.


மகனே, உனக்கு இவ்விடத்து விஷயங்கள் புரியவில்லை. ஒரு நாக கன்னிகை கணவனை வலுக்கட்டாயமாய்த் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது அவளுக்கு மிக முக்கியம். ஆனால் அவள் தானாய்த் தன்னைக் கணவனிடம் ஒப்படைத்துக்கொள்ள முடியாது. இங்கே நான் தான் அவளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன், அவளுடைய உடைமை. அவள் அல்ல. அவள் எப்போதுமே தன் தாய் ஒருவளுக்கு மட்டுமே கடமைப்பட்டவள். கட்டுப் பட்டவளும். அவளை மணந்ததும், நான் இளவரசன் ஆனேன், அதே சமயம் நான் ஒரு சிறைக்கைதியும் கூட. அவள் சொன்னதையும், அவள் தாய் கட்டளையிடுவதையும் கேட்டு அவற்றுக்கு நான் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். ஆஹா! என்ன கொடுமை அது! அநுபவித்தால் தான் புரியும்!"

"குழந்தாய்! நான் எவ்வளவு வருந்தி இருக்கிறேன் தெரியுமா இங்கே வந்து இப்படி மாட்டிக்கொண்டோமே என?? தப்பிக்க வழி இல்லாமல் தவித்திருக்கிறேன், புரிந்து கொள்வாயா? ஆனால் இவர்கள் நாககன்னிகைகள். உன்னை ஒரு முறை சுற்றிக்கொண்டால் பின்னர் உன் ஆயுள் பூராவும் விடவே மாட்டார்கள். உன்னைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து உன்னை அவர்கள் அடிமையாக ஆக்கி வைத்துக்கொள்வார்கள்."

"ம்ம்ம்ம்ம் அது சரி, தந்தையே, இத்தனை வருஷங்கள் நீங்களும் ஒரு அரசனாக வாழ்ந்திருக்கிறீர்கள். அந்த அதிகாரத்தையும், செல்வாக்கையும், வசதியையும் அநுபவிக்கவே இல்லை என்கிறீர்களா?"

"ஆஹா, மகனே, என்ன கேள்வி இது? இத்தனை வருஷங்களாய் நான் பட்ட பாடு நீ அறிய மாட்டாய் அப்பா, அறிய மாட்டாய். எந்த நிமிஷம் யார் வந்து என் உயிரை எடுப்பார்களோ என ஒவ்வொரு கணமும் தவித்துக்கொண்டிருந்திருக்கிறேன். நான் வந்த பிறகு நான்கு முறைகள் இங்கே வெளி நாடுகளிலிருந்து பிரயாணிகள் வந்திருக்கின்றனர். "

"நான்கு முறைகளா? என்ன ஆயிற்று அவர்களுக்கு?"

"ஆம், வந்தார்கள், ஒவ்வொரு முறையும் தெய்வீகத் தாய் அதை முன் கூட்டியே சொல்வாள். அதற்கேற்றாற்போல் எவனாவது ஒருவன் வருவான். அவன் வந்ததும் இந்தத் திருவிழா நடக்கும். திருவிழா என்ற பெயரில் அவன் என்னைக் கொல்லப் போகிறானா? நான் அவனைக் கொல்லப் போகிறேனா என்ற பதைபதைப்பு. அதெல்லாம் உனக்குப் புரியாது மகனே!"

"பின்னர் என்ன நடந்தது அவர்களுக்கு?"

"ஹா, ஹா, நான் யார்?? பரசுராமரின் நேரடி சீடனாயிற்றே? என்னைத் தோற்கடிக்க முடியுமா? ஆஹா, ஒவ்வொரு முறையும் அந்த இளைஞர்கள் என்னால் மிகக் கொடூரமாய்க் கொல்லப் பட்டதை நினைக்கையில் என் மேலேயே எனக்கு வெறுப்பு மிகுந்து வருகிறது. ஆனாலும் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதைத் தான் நான் செய்ய வேண்டி இருந்தது. பின்னர் அந்த அன்னை ராணி இறந்து போனாள். என் மனைவியும், இப்போதைய அரசியும் ஆன இவள் ராணியானாள். நானும் மன்னன் ஆனேன். ஆஹா, நான் வெறும் மன்னன் மட்டும் அல்ல பிள்ளாய்! யமன்! அனைவரின் உயிரையும் எடுக்கும் மரணத்தின் கடவுளான யமன். ஆனால் இந்த யமன் அந்த அன்னை ராணி என அழைக்கப் படும் தேவிமாதாவின் கண்ணசைவினால் உயிர்களைக் கொல்லுவேன். அது தான் இங்கே எனது பிழைப்பு!" அவன் குரலில் இருந்த வறட்சியைக் கண்ட கண்ணனுக்கு அவன் மீது இரக்கமே மிகுந்தது.

"ஆனால் நீங்கள் இப்போது மிகவும் சக்தி படைத்து அதிகாரம் கொண்டு விளங்குகிறீர்கள்.இந்த ராணியும் இப்போது உங்களிடம் அன்பு கொண்டிருக்கிறாள் அல்லவா? இப்போது நீங்கள் முயன்றால் அவள் மனதை மாற்றலாமே? நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை அவள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம்."'

"கண்ணா, இன்னுமா நீ புரிந்து கொள்ளவில்லை!" அரசன் சிரித்தான் என்றாலும் அவன் சிரிப்பில் உயிரில்லை." ஆஹா, என்னால் மட்டும் அது முடிந்தால்?? ம்ஹும் நடக்காது மகனே நடக்காது. எனக்கு உடல்நிலை கெடக் கூடாது. ஓய்வு என்பதும் இல்லை. தேவிமாதா அன்னை ராணியின் உடலில் புகுந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவள் வார்த்தைகளைக் கேட்பதைத் தவிர மற்ற ஒன்றை நான் நினைக்கவும் முடியாது. அற்பக் காரணங்களுக்காகக் கூட என்னைக்கொல்லலாம்."

"நீங்களும் ஏன் நான் புநர்தத்தனை அழைத்துச் செல்லும்போது என்னுடன் வரக்கூடாது?"

பெருங்குரலெடுத்துச் சிரிக்க நினைத்தான் அந்த மன்னன். ஆனால் அது இயலாத ஒன்று. கண்ணனைப் பரிதாபமாய்ப் பார்த்தான். "புநர்தத்தனை அழைத்துச் செல்வதா? கனவு காணாதே தம்பி!" என்றான்.

Sunday, April 18, 2010

காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்!

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவினில் அவள் முகம் கண்டேன்
அங்கே தொலைந்தவன் நானே!"


காலம்பர ரயிலுக்குக் காத்துண்டு இருந்தப்போ யாரோட செல்லிலேயோ இந்தப் பாட்டுப் போட்டிருந்தாங்க ரிங்டோனாக. அப்போலேருந்து இந்தப் பாட்டுத் தான் சுத்திச் சுத்திவருது. படமோ, கதையோ, படத்தோட பேரோ அப்படி ஒண்ணும் என்னைக் கவரலைனாலும் பாடலும், பாடலில் வரும் சொற்களும், பாடிய குரலும் இனிமையோ இனிமை. கேட்கக் கேட்க நல்லா இருக்கு. சுகமான ராகம்.

அடுத்து நினைப்பு வந்தது, காப்டன், காப்டன் குஸ்தி கேர்ள் என்பது தான். ஹிஹி, இது நினைவிலே வந்ததே அங்கே சில குழந்தைங்க விளையாடிட்டு இருந்ததைப் பார்த்ததும். பள்ளியிலே படிக்கும்போது அஞ்சாப்பு வரைக்கும் (:P) தமிழிலே தான் படிச்சேன். என் தம்பிக்கு மூணாப்பிலே இருந்தே ஆங்கிலம் ஆரம்பிச்சது. எனக்கு அப்படி இல்லை. ஆறாப்பிலே தான் ஆங்கிலம் A,B,C னு கத்துக்க ஆரம்பிச்சதும், 'wind of the western sea! father will come to the baby in the nest," அப்படிங்கற lullaby யும், ஜாக் அண்ட் ஜில்லும் அப்போத் தான் படிச்சேன். (யாருப்பா அங்கே கேலி செய்யறது?? அப்போ நான் குழந்தையாக்கும்!சேச்சே, இந்த அநன்யாவாலே பாலக்காட்டுத் தமிழ் போகமாட்டேனு அடம்) அஞ்சாப்பு வரைக்கும் விளையாடின விளையாட்டிலே இந்த "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்!" என்பதும் ஒண்ணு.

இரண்டு செட் இருக்கும். எதிர் எதிர் அணி.வரிசையா நிப்பாங்க. இரண்டு கைகளையும் பின்னாடி கட்டிக்கணும். இரண்டு தலைவலிகள், சீச்சீ, தலைவிகள். ஒரு குழுவின் தலைவில் தன் அணியில் உள்ளவர்களில் யாரானும் ஒருத்தியிடம் ஒரு பொருளைக் கொடுத்து மறைத்து வைப்பாள். அது எதிரணியில் உள்ளவர்கள் கண்டு பிடிக்கணும். பொருள் எதுவா வேணுமானாலும் இருக்கலாம். அப்போ நாங்க மறைச்சு வச்சு விளையாடினது, பென்சில், சிலேட்டுக் குச்சி, சாக்பீஸ் போன்றவையே. தலைவி மறைச்சு வச்சதும் எதிர் அணித் தலைவியைப் பார்த்து, "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்?" அப்படினு கேட்பா. அதாகப் பட்டது, ஆங்கிலம் தெரியும் வரைக்கும் நான் அப்படினு நினைச்சுட்டு இருந்தேன்,

ஆறாப்பிலே இந்த விளையாட்டை விளையாடினோமா? நாங்க ஆறாப்பிலே உள்ள சில மாணவிகள், ஏழாப்பா, எட்டாப்பா தெரியலை, பெரிய கிளாஸ் மாணவிகள் சிலர். இரண்டு அணியா விளையாடினோம். அன்னிக்குனு பார்த்து, என்னைத் தலைவியாத் தேர்ந்தெடுத்துட்டாங்க. (ஹிஹிஹி, அப்போவோ தலைவியா இருந்திருக்கேன், குழந்தையிலேயே, குழந்தை மேதைனு சொல்லிக்கலாம் இல்லை?) நானும் அப்பாவியாய், நிஜமாவே அப்பாவியாய், கையிலே கிடைச்ச ஒரு வஸ்துவை என் குழுவில் உள்ள ஒரு பொண்ணு கையிலே வச்சுட்டு, எதிரணித் தலைவியைப் பார்த்துப் பெருமையாக் கேட்டேன் பாருங்க, "காப்டன், காப்டன், குஸ்தி கேர்ள்?" அப்படினு! கொல்லுனு சிரிப்புச் சப்தம். அங்கே இருந்த டீச்சர் எல்லாம் முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கிறாங்க. எதிரணிப் பொண்ணுங்க எல்லாம் என்னமோ நாங்க தோத்துப் போயிட்டாப்போல் சிரிக்கிறாங்க. எனக்கா ரொம்ப அழுகையா வந்துடுச்சு. பேசாம எல்லாரோடயும், ஆனைமேலே, குதிரை மேலே டூ விட்டுடலாமானு யோசிச்சேன்.

அப்போத் தான் எதிரணியில் இருந்த ஒரு பொண்ணு சொன்னா, "அது குஸ்தி கேர்ள் இல்லை, Who is the Girl(ஹூ இஸ் த கேர்ள்) அப்படினு". ரொம்ப வெக்கமாப் போச்சு. அப்புறமா அந்த ஆட்டம் ஆடும்போதெல்லாம் இதை நினைச்சுச் சிரிச்சுப்பேன். இன்னிக்குச் சில பொண்ணுங்க ஆடிட்டு இருந்ததைப் பார்க்கும்போது இதெல்லாம் நினைப்பு வந்தது. மைலாப்பூர் போய் ஓசிச் சாப்பாடு சாப்பிட்டுட்டு, தெருவிலே இருக்கும் நண்பர் ஒருத்தர் அவங்க வண்டியிலே கூட்டிட்டு வந்தாங்களா, இன்னிக்கு வெயில் கொடுமையிலே இருந்து தப்பினேன். இல்லாட்டிக் கொடுமைதான். ஓசிச் சாப்பாடு வேண்டாம்னாலும் விட மாட்டேங்கறாங்க, என்ன கொடுமை போங்க! அப்புறம் நம்ம வெறும்(வெல்லம் போட்ட) அநன்யா என்னோட ஃபோட்டோ ஒண்ணு கேட்டிருக்காங்க. எதுக்குனு கேட்கிறீங்களா? லேட்டஸ்டா, அவங்க ரங்க்ஸ் நம்ம உளவுப் படையிலே குண்டர் படைத் தலைவராச் சேர்ந்திருக்கார். தக்குடு ரொம்பவே துரோகம் செய்யவே அவனை நீக்கிட்டேன். இவர் பாருங்க சேர்ந்ததுமே என் படத்தைக் கேட்டிருக்கார். பூஜை பண்ணி, காவடி எடுத்து, அலகு குத்திண்டு, தீச்சட்டியும் ஏந்தி, அடுத்து என்னனு கேட்டுட்டு இருக்கார். அதுக்காகப் போட்டிருக்கேன். பாருங்க. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!



அநன்யா அக்கா, சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன் பாருங்க, இந்தப் படம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா??

Wednesday, April 14, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்.

கண்ணன் தப்பிப்பானா??

தன்னுடைய உறுதியான குரலில் அன்னை ராணி பேசத் துவங்கினாள். “வாசுதேவ கிருஷ்ணனுக்கு நல்வரவு. நீ இங்கே என்னை நாடி வரப் போகிறாய் என்பது சில நாட்கள் முன்னாலேயே எனக்குத் தெரியும். எனக்கு இந்த உலகின் அன்னையான தேவி மாதா அறிவித்தாள். அவள் கட்டளை மூலம் எனக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உன்னை வரவேற்று உபசரிக்கவும் அவள் கட்டளை. நீ கொண்டு வந்திருக்கும் பரிசுப்பொருட்களையும் தேவி மாதா அங்கீகாரம் செய்யச் சொல்கின்றாள். உனக்கு இங்கே நல்முறையில் உபசாரங்கள் செய்யவும் கட்டளை இட்டிருக்கிறாள்.” என அறிவித்தாள். அவள் நிறுத்தவும் புநர்தத்தன் அன்னை ராணி கூறியவற்றைக் கண்ணனுக்குப் புரியுமாறு அவர்கள் மொழியில் மொழிமாற்றம் செய்து கூறினான். புநர்தத்தன் பேசி முடித்ததும், மீண்டும் அன்னை ராணி தன் கையை உயர்த்தவே, அங்கே மீண்டும் மெளனம் நிலவியது. “வாசுதேவ கிருஷ்ணா, மாட்சிமை பொருந்திய தெய்வீகத் தந்தையின் நேரடிக் கவனிப்பிலே உன்னை இருத்துமாறு தேவி மாதாவின் கட்டளை. அப்படியே நானும் ஆணையிடுகிறேன். தேவி மாதா, இவ்வுலகின் அன்னை, நீ எப்போதுமே இங்கே இருந்து எங்களுக்குச் சேவை செய்வாய் எனவும் கட்டளை இட்டிருக்கின்றாள். இன்று முதல் நீ எங்களில் ஒருவனாகிவிட்டாய்!” என்று கூறினாள்.

கண்ணனுக்கு அவை மொழிபெயர்க்கப் பட்டதுமே அவன் பதில் கூற யத்தனிக்கும்போது தன் கைகளால் அவனைத் தடுத்த வண்ணம் அன்னை ராணி மேலும் கூறினாள்:” நீ எங்களில் ஒருவனாகிவிட்டாய். இதில் மாற்றம் இல்லை. தேவி மாதா, இவ்வுலகின் அன்னை, உத்தரவிட்டு விட்டாள் எனில் அதை எவராலும் மீற முடியாது, மீறவும் கூடாது.” திட்டவட்டமாக அறிவித்தாள் அன்னை ராணி. கண்ணன் மீண்டும் வாயைத் திறக்கும் முன்னர் ஓர் ஆள் உயரத்துக்கு அங்கே இருந்த குண்டத்தில் இருந்து தீ எழும்பி மேலே வர, அன்னை ராணி எப்படிப் போனாள் என்றே தெரியாமல் மறைந்தாள். அந்த மேடையில் நின்று கொண்டு மெளன சாட்சியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தெய்வீகத் தந்தை என அழைக்கப் படும் அரசன், கீழே இறங்கி வந்து கண்ணன் தோளில் தன் கையை ஆதுரமாக வைத்தான். ஒரு தந்தையின் பாசம் அந்தக் கைகளில் புலப்பட்டது எனக் கண்ணனால் உணர முடிந்தது. அந்தப் பெரிய கூடாத்தின் ஒரு பக்கம் இருந்த தாழ்வாரம் வழியாகக் கண்ணனை அவன் நடத்திச் சென்றான்.

அந்த யாக குண்டத்தின் பின்னால் இருந்த ஒரு தனி அறைக்கு அது சென்றது. அங்கே கல்லால் ஆன ஒரு மேடையின் மேல் அன்னை ராணி அமர்ந்திருக்க இரு பணிப்பெண்கள் அவளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். அன்னை ராணியிடம் ஆவிர்ப்பவித்திருந்த தேவி மாதா விலகிவிட்டதால் அவள் இப்போது தன்னைத் தானே ஆசுவாசம் செய்து கொண்டிருந்தாள். அரசனுக்கும் கண்ணனின் மொழி நன்கு தெரிந்ததால் அன்னை ராணி அவன் மூலம் கண்ணனைப் பல கேள்விகள் கேட்டுக் கண்ணனை பற்றித் தெரிந்து கொண்டாள். கண்ணனுக்கு ஆச்சரியம் என்னவென்றால் அந்த அரசனாகப் பதவி வகித்த தெய்வீகத் தந்தை, குரு பரசுராமரைப் பற்றி விசாரித்தது தான். அவரைப் பற்றி விசாரித்ததோடு அல்லாமல், அவருடைய பல சீடர்களைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டான் அந்த அரசன். பின்னர் கண்ணனை அங்கே அழைத்து வந்த பெண்மணியின் துணையோடு கண்ணன் தன் இருப்பிடத்துக்குச் சென்றான். அங்கே இருந்த புண்யாஜனா கப்பலின் ஆட்கள் ஒருவர் மூலம் மேலும் பரிசுப் பொருட்களைக் கப்பலில் இருந்து எடுத்துவருமாறு கண்ணன் அனுப்பி வைத்தான்.

அன்றிரவு கண்ணன் தூங்குகையில், திடீரெனத் தன் அருகே யாரோ அமர்ந்த மாதிரி தோன்றக் கண்ணனுக்குத் தூக்கி வாரிப் போட்டு விழிப்பு வந்தது. கண் விழித்துப் பார்த்தால் ஒரு நிழலுருவம் கண்ணன் அருகே அமர்ந்து கொண்டு மென்மையாகப் பேச ஆரம்பித்தது. முதலில் யாரோ என நினைத்த கண்ணன், பின்னர் இளைய இளவரசி எனத் தெரிந்து கொண்டான். அவளுடைய நீண்ட கூந்தல் கண்ணன் முகத்தை மறைக்க அவள் கண்ணனைத் தன் வசம் இழுக்க முயன்று கொண்டிருந்தாள். கண்ணன் இதிலிருந்து எப்படித் தப்புவது என்ற யோசனையில் இருந்தாலும், அவனை யோசிக்க விடாமல் அவள் அழகு மயக்கியது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்த கண்ணனைத் தப்புவிப்பது போல் அங்கே ஒரு பெண் அப்போது வந்து அந்த இளவரசியின் காதில் ஏதோ மந்திரச் சொற்களைச் சொல்ல, புலிக்குப் பயந்து ஓடும் மானைப் போல் அவள் கண்ணனை விட்டுவிட்டு ஓடினாள். அருகே படுத்திருந்த உத்தவன், “கண்ணா, என்ன இதெல்லாம்?” என்றான் எழுந்து கொண்டே.

“ஒன்றுமில்லை, உத்தவா, நாக கன்னி ஒரு நாகம் போலவே என்னைச் சுற்றிக்கொள்ளப் பார்த்தாள், நல்லவேளை தப்பினேன்.” என்று சொல்லிவிட்டு நகைத்தான். அறைக்கு வெளியே யாரோ நடக்கும் சப்தம் கேட்டது. ஆஹா, நம் சக்கராயுதத்தைக் கப்பலிலேயே விட்டுவிட்டோமே! கண்ணன் வருந்தினான். காலடிகள் அறை வாயிலை நெருங்கியது. ஒரு கனத்த ஆண் குரல், "வாசுதேவ கிருஷ்ணனுக்கு தெய்வீகத் தந்தையிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. உடனே வரச் சொல்கிறார்." என்றது. "கண்ணா, நானும் வருகிறேன், தனியாய்ச் செல்லாதே!" என்று உத்தவன் சொல்ல, கண்ணனோ, "வேண்டாம் உத்தவா, உனக்கு அழைப்பு இல்லை, மேலும் இப்போதைக்கு உடனடியாக எனக்கு அபாயம் எதுவும் நேராது. கவலைப்படாதே!" என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நாக உலகத்து மனிதனுடன் சென்றான். பல அறைகளையும், தாழ்வாரங்களையும் தாண்டிச் சென்று கடைசியில் உயரமாய் திடகாத்திரமாய் அங்கே நின்று கொண்டிருந்த தெய்வீகத் தந்தையைக் கண்டான்.

Tuesday, April 13, 2010

நாட்டின் தலையாய பிரச்னைகள் தீர்ந்தன! புத்தாண்டு வாழ்த்துகள்!

சானியா-சோயப் திருமணம் செய்து கொண்டதுமே நாட்டின் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அவங்களைத் துரத்தித் துரத்திச் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சிச் செய்தி சேகரிப்பாளர்களும் இனி என்ன செய்வார்கள்? அடுத்து எந்தப் பிரபலம்னு பார்த்துட்டே இருக்கணும், பாவம் இல்லை??? அவங்க அவங்க திருமணம் அவங்க அவங்க தனிப்பட்ட விஷயம் என்பது நம் நாட்டில் இப்போல்லாம் மறந்தே போச்சு.


இப்போப் பாருங்க, தமிழ்நாட்டின் தலையாய பிரச்னை ஒண்ணும் தீர்ந்து போச்சு. நடிகை ரம்பா திருமணம் செய்து கொண்டாராம். ஆஹா, எவ்வளவு பெரிய தீர்வு??? அடுத்து இப்போதைய கவலை, சுஷ்மிதா சென், வாசிம் அக்ரமைத் திருமணம் செய்துக்கப் போறாரா இல்லையா என்பதே! பாவம் பத்திரிகைக்காரங்க. இதெல்லாம் சேகரிக்க வேண்டி இருப்பதால் தான் அவங்களுக்கு மத்த விஷயங்கள் சேகரிக்க முடியலை போல! ரொம்பப் பாவம் இல்லை????

பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் எந்தப் பத்திரிகையும் சரி, தொலைக்காட்சியும் சரி சளைக்கவே இல்லை. நாட்டின் விலைவாசி உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் என்ன?? எங்க தெருவிலே(தெருவா அது??) காஸ் சிலிண்டர் கொண்டு போடுபவர் ரூ 20/- கொடுத்தால் தான் சிலிண்டரைக் கொண்டு வருவேன் என்று சொல்கிறார். அதைச் சொன்னால் மட்டும் என்ன?? உடனேயே நகராட்சி தெருவா போட்டுக் கொடுக்கப் போகுது??

நகராட்சிக் கமிஷனரிடம் விண்ணப்பம் வைத்தால் இன்னும் இரண்டு வருஷங்களுக்குப் போட முடியாதுனு சொல்றார். பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர்க் குழாய்த் திட்டம் முடியணுமாம். அம்பத்தூரில் உள்ள எல்லாத் தெருக்களிலும் இவை எல்லாம் போட்டு முடிச்சாச்சு. எங்க தெருவைத் தவிர. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குமே, வீட்டினுள் புகுந்துடுமே என்றால், விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரம் செய்துட்டு, எங்கேயானும் போய்த் தங்கிக்குங்க என்று கமிஷனர் சொல்கிறார். கமிஷனரைப் பேட்டி கண்டவர்கள் அனைவரும் பெண்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க, ஒதுக்கீடு கொடுக்கப் போராடும் கட்சிகள் எதுவும் இந்த விஷயத்தில் வாயே திறக்கலை.

என்றாலும் விடாமல் நாங்கள் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவோமில்ல??? நாளைக்கு நேரம் இருக்குமா, வர முடியுமா தெரியலை. மத்தியானங்களில் மின்சாரமே இருக்கிறதில்லை. சாயங்காலம் அதிக நேரம் இணையத்தில் உட்கார முடியாது. அதனால் முன் கூட்டிய வாழ்த்துகள்.

அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் புத்தாண்டில் அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும், நிம்மதியும் பொங்கவும் வாழ்த்துகள். பிரச்னைகள் தீரும்னு சொல்லலை, ஆனால் அதைத் தாங்கும் வல்லமையைத் தருவாள் பராசக்தி!


இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

Sunday, April 11, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

அன்னை வந்தாள்!


“இப்போது ராணியாகவும் தெய்வீகம் பொருந்திய அன்னை மாதாவாயும் இருக்கும் அரசிக்குப் பின்னர் இப்போதைய பட்டத்து இளவரசி ராணியாவாள். மேற்சொன்ன முறைகளில் கடைசியாக இளவரசி ராணியாக ஆகும்போது எவன் அவள் கணவனாய் இருக்கிறானோ அவனே அரசனாவான். இந்த இளவரசியை எவ்வாறு தெய்வீக அன்னை என்கின்றனரோ அப்படியே அவனையும் தெய்வத் தந்தை என்கிறார்கள். அவனுக்குச் சில அதிகாரங்களும் கொடுக்கப் படும். முக்கியமாய் அவனை மரணக்கடவுளாகச் சித்திரிக்கிறார்கள். இங்கே அந்த அரசனே யமன் போல் செயல்படுகிறான். அவ்வளவு ஏன் யமன் என்றே அழைக்கின்றனர் அவனை. அனைவர் உயிரையும் எடுக்கும் அதிகாரம் அவனுக்கு உண்டு. ஆனாலும் அவன் ராணியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவனே ஆவான். அவளை மீறி அவனாலும் ஒன்றும் செய்யமுடியாது.” புநர்தத்தன் நீண்ட விளக்கம் கொடுத்தான்.

கண்ணன் அன்பு ததும்பப் புநர்தத்தனைப் பார்த்தான். “புநர்தத்தா, இங்கிருந்து தப்பிச் செல்ல நான் வழி கண்டுபிடித்துவிட்டால், நீ என்னோடு வருவாயல்லவா?” என்று அவன் தோளின் மேல் கையை வைத்து அவனை ஆதரவுடன் தட்டிய வண்ணம் கேட்டான்.

“கண்ணா, நீ ஒரு முட்டாள். இங்கிருந்து தப்புவது என்பது கனவிலும் நடவாத ஒன்று. மேலும் நான் இங்கிருந்து வர விரும்பவில்லை. உன் இஷ்டத்துக்கு எதுவும் செய்யமுடியும் என நினையாதே! எச்சரிக்கை!” என்றான் புநர்தத்தன்.

“சரி, தப்ப வழி கண்டு பிடிக்கிறேன், சீக்கிரமாகவே. உன்னையும் அழைத்தே செல்வது என முடிவு செய்துவிட்டேன்.” என்றான் கண்ணன் தனது வழக்கமான மென்சிரிப்போடு.

புநர்தத்தன் அங்கிருந்து சென்றதும், உத்தவனைப் பார்த்துக் கண்ணன், “உத்தவா, மாபெரும் சதிச் சூழலில் சிக்கிக்கொண்டுள்ளோம். யமனின் கைகளில் விழுந்துவிட்டோம். எப்படியாவது தப்பவேண்டும்.” என்று சொன்னான். அன்று மதியம் ஒரு பெண் காவலாளி வந்து தெய்வீக அன்னையும், ராணியுமாக இருப்பவள், சர்வசக்தி படைத்த அவர்கள் தலைவி, கண்ணனையும், உத்தவனையும் பார்க்க விரும்புவதாய்ச் சொன்னாள். கண்ணனும், உத்தவனும் அவளுக்கெனக் கொண்டு வந்திருந்த விலை உயர்ந்த பரிசுகளைப் புண்யாஜனா கப்பலின் ஊழியர்களை எடுத்துவரச் சொல்லிவிட்டு அந்தப் பெண்மணியோடு சென்றனர். வழியெங்கும் ஆயுதங்கள் தரித்த பெண் காவலாளிகள் கடுமையான காவல். உலகுக்கே அன்னை என அவர்களால் அழைக்கப்படும் அந்த ராணியைப் பார்ப்பதே புனிதமான ஒன்றென அவர்களால் சொல்லப் பட்டது. அவளைப் பார்க்கச் செல்லும் இடமும் மிகவும் புனிதமானது என வர்ணிக்கப் பட்டது. அரை இருட்டான ஒரு பெரிய கூடத்தில் இரு புறமும் ஆயுதபாணியான பெண்கள் அணி வகுத்து நின்றனர். அறையின் ஒரு கோடியில் ஒரு யாக குண்டம் போன்ற அமைப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் செந்நாக்குகள் அவ்வப்பொழுது மேலெழும்பியது, கண்ணன் வந்துவிட்டனா எனப் பார்ப்பது போல் இருந்தது. அந்தத் தீயை, புனிதத் தீ என அழைக்கின்றனர். அந்த அரைகுறை இருட்டில் அந்தத் தீயிலிருந்து கிளம்பிய மெல்லொளியில் அந்த அறையின் அனைத்துப் பொருட்களுமே ஏதோ சொப்பன உலகில் இருப்பதைப் போல் காட்சி அளித்தது.

எதிரே ஒரு பெரிய மேடை. மேலே ஏறப் படிக்கட்டுகள். அதன் ஒருபக்கத்தில் பட்டத்து இளவரசியும், அவளின் இளைய சகோதரியும் நிற்கப் பின்னால் பட்டத்து இளவரசியின் அப்போதைய கணவன் ஆன புநர்தத்தன் நின்றுகொண்டிருந்தான். இன்னொரு பக்கம் தெய்வத் தந்தை என அழைக்கப்படும் அரசன் பூரண ஆயுதபாணியாக நின்று கொண்டிருந்தான். இந்த தெய்வீக அரசிக்கு முன்னர் ஆயுதங்களைப் பூரணமாய்த் தரிக்க அரசன் ஒருவனுக்கு மட்டுமே அநுமதி உண்டு. அரசனின் ஐம்பது வயதுக்கு அவன் பார்க்க மிகவும் இளமையாகவே இருந்தான். வசீகரமான முகத்தோடு திறந்த மனம் படைத்தவன் போல் காணப்பட்டான். திடீரெனச் சங்குகள், எக்காளங்கள் போன்ற வாத்தியங்கள்முழங்க, எதிரே இருந்த யாககுண்டத்தின் தீ ஆள் உயரத்துக்குக் கொழுந்து விட்டெரிந்தது. அதன் ஒளி மங்கும் முன்னர் திரைக்குப் பின்னே தெரியும் ஓவியம் போல் அன்னை ராணி அங்கே நிற்பது லேசாகத் தெரிந்தது. எங்கே இருந்து எப்படி வந்தாள்??

ராணியின் அழகு கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. அவள் நடு வயதுக்கு மிக மிக அழகாக இருந்தாள். அழகோடு இணைந்த கம்பீரம் மெருகூட்டியது. கழுத்தில் ஒரு கெட்டியான ஆபரணமும், தலையில் பாம்பு படம் எடுக்கும் தோற்றத்துடன் கூடிய ஒரு கிரீடமும், அணிந்திருந்தாள். அந்தக் கிரீடத்தின் ரத்தினங்களின் ஒளி கண்ணைப் பறித்தது. அதன் சிவந்த ஒளி, கீழே எரிந்துகொண்டிருந்த தீயோடு போட்டி போட்டுக்கொண்டு ஜொலித்தது. எல்லாவற்றுக்கும் மேலே, ஆஹா, இது என்ன? உயிருள்ள நிஜப் பாம்பே அவள் கழுத்தை அலங்கரிக்கிறதே!

இது என்ன?? அனைவரும் அவளை வணங்குகின்றனர். சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து நமஸ்கரிப்பவர்கள் அவள் சொல்லும்வரை எழுந்திருப்பது இல்லை. ஆச்சரியமாய் இருக்கிறதே? நம் நாட்டு ரிஷி, முனிவர்கள் கூட இவ்வித வணக்கங்களை ஏற்றதில்லை. கம்பீரமும், அதிகாரமும் நிறைந்த குரலில் அவள் ஆணையிட்டதுமே அனைவரும் எழுந்தனர். பின்னர் அவள் கண்ணால் காட்டிய சைகையைப் புரிந்துகொண்ட அரசன், இளவரசனை அழைக்க, இளவரசனாகிய புநர்தத்தன் கண்ணனை அழைத்து, அரசிக்கு அவன் கொண்டு வந்திருக்கும் செய்தியைக் கூறச் சொன்னான். கண்ணன் இரண்டடி முன்னால் வைத்து தெய்வீக அரசியைப் பார்த்துக் கீழ்க்கண்ட செய்திகளைக் கூறினான்.

"தெய்வீக அன்னையே, நான், வாசுதேவ கிருஷ்ணன், ஷூரர்களின் ஒப்பற்ற தலைவனான வசுதேவனின் மகன், இந்த பூமியின் ஒரு பகுதியை ஆண்டு வரும் யாதவகுலத் தலைவன் ஆன உக்ரசேனனிடம் இருந்து நட்புக் கரம் நீட்டிக்கொண்டு வரும் செய்தியைச் சுமந்து வந்துள்ளேன். தங்களுக்கேற்ற விலை மதிக்க முடியாத பரிசுகளையும் அவர் சார்பாய்க் கொண்டு வந்துள்ளேன். இந்தப் பரிசுகளை ஏற்று, அவரின் உந்நத நட்பையும் ஏற்று எங்களைக் கெளரவிக்க வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்." கண்ணனின் மென்மையான குரலில் கூறப்பட்ட இந்தச் செய்தி அனைவருக்கும் புரியாவிடினும் மனதில் ஓர் மூலையில் இளக்கம் மிகுந்தது. அங்கே ஓர் ஆழ்ந்த அதே சமயம் சற்று நேரம் நீடித்த மெளனம் நிலவியது.

ஆஞ்சநேயரின் காலில் மிதிபடும் பெண் யார்?


அனுமன்



சனைச்சரன் அனுமனைப்பிடிச்சதையும், அனுமனால் சனைச்சரன் பட்ட பாட்டையும் இங்கே நம்ம திராச அவர்கள் விரிவாக எழுதி இருக்காங்க. (சார், ஓசியிலே விளம்பரம் கொடுத்தாச்சு) அங்கே போய்ப் படிங்க எல்லாரும். அதிலே சனைச்சரன் அனுமன் காலைப் பிடிச்சதைப் பத்தியும் எழுதி இருக்கார். சனைச்சரனாக அனுமன் காலைப் பிடித்துக் கெஞ்சியும் விடவில்லையாம் ஆஞ்சநேயர். காலில் போட்டு மிதிக்க ஆரம்பித்தாராம். உடனேயே தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக்கொண்டானால் சனைச்சரன். என்றாலும் அவனுடைய தந்திரம் புரிந்து, பெண்ணாக இருந்தாலும், தன் மனம் மாற்றமடையாது என்பதை நிரூபிக்கவும் பெண்களைக் கண்டும் தன் மனம் நைஷ்டிகப் பிரம்மசரியத்திலிருந்து சிறிதும் வ்ழுவாது எனவும் நிரூபிக்கவே பெண்ணாக மாறியபோதும், பெண்ணாய் இருந்தாலும் இது சனைச்சரனே என்பதால் காலில் போட்டு அநுமன் மிதிக்கிறாராம். இது சமீபத்தில் நான் பரோடா போயிருந்தப்போ அங்கே இருந்து டகோர் துவாரகா போனோம்.


இது நம்ம துளசி இந்தச் சிற்பத்தைப் பார்த்துட்டு வியப்புடன் எழுதி இருந்த பதிவு. இங்கே பார்க்கவும்.


டகோர் துவாரகை பற்றி ஏற்கெனவே எழுதி உள்ளேன்.
இங்கே
இங்கேயும்


இம்முறை செல்லும்போது ஆட்டோகாரர், பரோடாவில் இருந்தே 500ரூக்கு டகோர் கூட்டிச் செல்வதாய்க் கூட்டிச் சென்றார். வீட்டு வாசலிலேயே ஏறி, வீட்டு வாசலிலேயே இறங்கியாச்சு. கிட்டத்தட்ட எண்பது கிலோமீட்டர் இருக்கும். எங்களுக்கே ஆச்சரியம். ஆட்டோக்காரர் வருஷத்துக்கு ஒரு வண்டி வாங்கறாராம். மூன்று வண்டிகளுக்கு மேல் வைத்திருக்கிறார். என்றாலும் குஜராத்தில் ஆட்டோவில் போக இரண்டு அல்லது மூன்று கிமீ தூரம் என்றால் ஒரு நபருக்கு ஐந்து ரூபாயே, கவனிக்கவும் ஐந்து ரூபாய் தான் வாங்கறாங்க.

டகோரில் இம்முறை ஜ்யோதிஷ் மடத்துக்குப் போனோம். இது ஆதிசங்கரர் பத்ரிக்கு அருகே உள்ள ஜ்யோதிஷ்மடத்தில் ஏற்படுத்திய பீடத்தின் கிளையாகும். நம்ம ஊர் ஞாநாநந்தகிரி, அவர் சீடர் ஹரிதாஸ்கிரி எல்லாம் இங்கே இருந்து வந்தவங்களே. அருமையான கோயில். சுரங்கப்பாதை மாதிரி வடிவமைத்து மேலே ஏறி ஈசனையும் கீழே பாதாளத்துக்குப் போய் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவையும் தரிசிக்குமாறு செய்திருக்கிறார்கள். மூலஸ்தானத்தில் சாரதை. இங்கேயும் ஆஞ்சநேயர் இதே போல் காலில் பெண்ணை மிதித்த வண்ணமே காட்சி அளித்தார். எனக்குக்கொஞ்சம் சந்தேகம் ஆகவே அங்கே இருந்த அர்ச்சகர் (உண்மையில் அவரும் துறவியே) அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவர் மேற்சொன்ன கதையைத் தான் கூறினார். பெரும்பாலும் வடமாநில நகரங்களிலேயே இம்மாதிரி வைப்பார்கள் எனவும், குஜராத்தில் ஆஞ்சநேயர் காலில் பெண்ணை மிதிக்கும் காட்சியுடன் கூடிய சிலைகளை அதிகம் காணமுடியும் எனவும் சொன்னார். இதைத் தவிரவும் ஜுனாகட் மாவட்டத்தின் கொடினார் என்னும் ஊரின் பிரசித்தி பெற்ற அம்மனும் முதலை வாகனத்தில் அங்கே காட்சி அளித்தாள். இந்த அம்மனை குஜராத்தில் மட்டுமே காணமுடியும். படம் எடுக்க அநுமதி இல்லாததால் படம் எடுக்க முடியவில்லை. கூகிளில் கொடிநார் அம்மன் கிடைக்கவில்லை.

Friday, April 09, 2010

ஒரு வேண்டுகோள்!

பெருமாள்

இந்தப் படத்திலுள்ள எங்க ஊர்ப் பெருமாள் காணாமல் போனதும், பின்னர் திரும்பக் கிடைத்ததுமான முயற்சிகளைப் பற்றியும், கும்பாபிஷேஹம் செய்ய முயல்வது பற்றியும் எழுதி வந்திருக்கிறேன். தற்சமயம் கும்பாபிஷேஹம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டு பாலாலயமும் எடுத்து ஜனவரியில் இருந்து திருப்பணி ஆரம்பித்து நடந்து வருகிறது. இயன்றவர்கள் பொருளுதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம். நன்றி.



திருப்பணி

பாலாலயம் படங்கள்

பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல வாங்க!




இன்று நமது அருமைத் தோழி வல்லி சிம்ஹன் அவர்களின் பிறந்த நாள். எங்கேப்பா எல்லாரும், வாங்க வரிசையா~ பரிசை என் கிட்டே கொடுத்துட்டு, வாழ்த்தை அவங்களுக்கு அனுப்புங்க பார்க்கலாம்! :))))))) தங்கம், வைரம், தனியாக் கொடுத்துடுங்க. வஸ்த்ரகலா, பரம்பரா எல்லாக் கலர்லேயும் ஒண்ணொண்ணு.


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரேவதி.

Thursday, April 08, 2010

சிவலிங்கம், பற்றிய ஒரு விளக்கம், மீள் பதிவு!

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி!
திருக்கைலை மலையே லிங்க வடிவாக வழிபடப் படுகின்றது. மேலும் திருவண்ணாமலையும் அக்கினி ஸ்வரூபமாய் லிங்க வடிவிலே இருப்பதாயும் கேள்விப் படுகின்றோம். மேலும்
"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே"
என்று சொல்லுகின்றார் மாணிக்கவாசகர். இங்கே ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியாய் நின்றவர் அந்த ஈசனே தான் அல்லவா? விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒரு பெரும் சோதி ரூபமாய் நின்றார் அவர். அந்த உருவமே லிங்கமாய் ஆவிர்ப்பவித்தது. மனிதனை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் வடிவமே லிங்கம் ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே இரண்டிரண்டாய் இருப்பதை அறிவோம் அல்லவா?? பகல்-இரவு, ஒளி-இருட்டு, இன்பம்-துன்பம் என்பது போன்ற இருவகை நிலைகள் இருக்கின்றன அல்லவா?? இதைத் தான் மாயை என்று சொல்கின்றனர். இந்த இருமை வகையான மாயையில் இருந்து நாம் விடுபட்டு இவற்றை எல்லாம் கடந்த நிலையையே லிங்க ஸ்வரூபம் நமக்கு உணர்த்துகின்றது.

ஆன்மீகப் பெரியோர் அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்று இது. ஒரு சமயம் விவேகானந்தர் கலந்து கொண்ட ஒரு சமய வரலாற்று மகாநாட்டில் ஒரு ஜெர்மானியத் தத்துவப் பேராசிரியரால் லிங்க வழிபாடு, பாலுணர்வோடு தொடர்பு படுத்திப் பேசப் பட்டது. அப்போது அந்தப் பேரவையில் இருந்த ஸ்வாமி விவேகானந்தர் அதே மேடையில் அதை ஆணித்தரமாய் மறுத்ததோடு அவற்றுக்கு எடுத்துக்காட்டாய் புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி எடுத்துரைத்து மறுத்தார். ஆகமவிதிகளின் படி ஆவுடையாரின் வடிவமானது, பத்மபீடம் அல்லது சமவடிவிலான நாற்கோணமாகிய பத்திரபீடம் ஆகும் எனவும் எடுத்துக் காட்டினார். மேலும் பழைய காலங்களிலேயே லிங்க வழிபாடு இருந்திருப்பதோடு அப்போதெல்லாம் பீடங்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் விவேகானந்தர். காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்திலும், சீர்காழி தோணியப்பர் கோயிலிலும் பீடமற்ற லிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரியவருகின்றது.

லிங்கம் என்பது சிவலிங்கம் என்ற ஒரே பொருளையும் கொண்டதல்ல. இறைத் தன்மையின் வடிவமே லிங்கம் ஆகும். திருமூலர் சொன்னபடி இவற்றின் உட்பொருளை அறிதல் மிகக் கடினம்.

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே. 1712

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 1752

நம் நாட்டில் சநாதன தர்மத்தோடு அடையாளப் படுத்தப் பட்ட இந்த லிங்க வடிவானது அனைத்துச் சமயங்களையும் கடந்த ஓர் அற்புத தத்துவமாகும். தவஞானிகளின் ஆற்றல்களாலும், கோயில்களில் சொல்லப் படுகின்ற மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பேராற்றல் படைத்த இந்த லிங்கத்தின் சக்தி அளப்பரியது என அறிவியல் வல்லுநர்களும் கூறுவதாயும் தெரியவருகின்றது. அமெரிக்கக் கண்டத்தின் பெரு என்னும் நாட்டின் தத்துவத் துறை திறனாய்வாளர் John Stephen என்பவர் இந்தக் கருத்தை வலியுறுத்தி SIVALINGAM என்றதொரு ஆய்வு நூலை எழுதி இருப்பதாயும் தெரியவருகின்றது.

நம்நாட்டில் மட்டுமில்லாமல் அநேக உலக நாடுகளிலும் அணுமின் நிலையங்களின் கொதிகலன்கள் லிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. எல்லையற்று விரிந்து, பரந்து இருக்கும் ஓர் அளப்பரிய சக்தியின் அல்லது இறைத் தன்மையின் ஆதிவடிவம் என்று சொன்னாலும் மிகையில்லை. குறிப்பிட்டதொரு சமயத்துக்கும் சொந்தம் எனக் கூறமுடியாது. தமிழ்த்தாத்தா திரு உ.வே.சா. அவர்கள் வைணவத்திருத்தலங்களிலே கூட சிவலிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள் எனவும் தெரிய வருகின்றது. அரியலூர், காரமடை, மொண்டிப்பாளையும், திருமருகல் போன்ற தலங்களில் கூம்பு வடிவிலும், செவ்வக வடிவிலும் லிங்கங்கள் உள்ளன எனத் தமிழ்த்தாத்தா குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாதர் கோயிலில் செவ்வக வடிவில் லிங்கம் உள்ளதாயும் தெரியவருகின்றது.

மாசிமாதத்தில் அந்தக் கோயிலில் நடக்கும் பந்தசேவையின் போது ஏற்றப்படும் தீப்பந்தம் வட்ட வடிவமாய் இருப்பதாயும், அது குண்டலினி சக்தியின் குறியீடு எனவும் சொல்கின்றனர். நம் ஆழ் மனதில் உள்ள குண்டலினி சக்தியையே லிங்கமாய் உருவப் படுத்தி வழிபட்டிருக்கலாம் சித்தர்களால் என்பதும் ஒரு தகவல். மேலும் லிங்க வடிவு நெருப்போடும் தொடர்பு கொண்டதாய்ச் சொல்கின்றனர். ஆதி மனிதன் தனக்கு ஏற்பட்ட விழிப்புணர்வின் உச்சத்தில் இறைத் தன்மையை லிங்க வடிவில் உணர்ந்து வழிபட்டிருக்கலாம் என்பதும் ஓர் ஆய்வின் மூலம் தெரிய வருகின்றது. நெருப்பு ஆற்றலைக் கொடுக்கும். அது போல் மனிதனின் உள் உணர்வுக்கும் நெருப்பின் தொடர்பு என்பது குண்டலினியை எழுப்புவதன் மூலம் ஏற்படும் அல்லவா? ஆற்றலைக் குறிக்கக் கூடிய ஒரு சக்தியே லிங்கம் என்பது சமயச் சான்றோர்களின் கருத்து.இறைவனை அறியாமையை இருள் என்றும் அவனை அறிதலுக்கு ஒளி பெற்றான் என்றும் சொல்லுவதுண்டுஅல்லவா? அத்தகைய பேராற்றல் படைத்த ஒளிவடிவே லிங்கம் ஆகும். இதைத் தம் சுய அனுபவத்தில் கண்டே வள்ளலார் அருட்பெருஞ்சோதி, தனிப்பெரும் கருணை என்று விளக்கியதோடு அல்லாமல் சமரச சன்மார்க்கத்தையும் ஏற்படுத்தினார். இன்றைக்கும் வடலூரில் ஜோதி வழிபாடு என்பது நடந்து வருகின்றது என்பதையும் அறிவோம். லிங்கம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பிரகாசம், ஒளி வீசுவது என்ற பொருளும், வடமொழிச் சொல்லுக்கு சூக்ஷ்மமான தேகம் என்றும் பொருள் உண்டு. ஆகவே தன்னுள்ளிருந்து ஒளி வீசி சூக்ஷுமமாய் இருக்கும் ஒன்றே லிங்கம் என்று கொள்ளவேண்டும்.

தஞ்சைப் பெரிய கோயில் தக்ஷிணமேரு என அழைக்கப் படுவதையும் நாம் அறிந்துள்ளோம். கைலை மலையை நினைவு படுத்தும் விதத்திலேயே அந்தக் கோயில் அவ்வாறு கட்டப் பட்டுள்ளது. உள்ளே ஆவுடையாரும் லிங்கமும் மட்டும் பெரியதல்ல. உள் கூடும் ஆகாசலிங்கத்தை உணரச் செய்யும் விதமாக வடிவமைக்கப் பட்டது. உள்ளே பெருவுடையாரை நாம் வழிபடுவது உருவ வழிபாடு எனில், அதற்கு மேலே விமானத்தின் மேல் வரையிலும் அருவுருவ வழிபாட்டை நினைவு செய்யும் விதமாக வடிவமைக்கப் பட்டது. மகுடாகம வழிபாடு என ஏதோ ஒரு தளத்தில் படித்த நினைவும் கூட.(இது குறித்து சரியான ஆதாரம் என்னிடம் இல்லை.) ராஜராஜ சோழன் தன் கடைசி நாட்களில் சிவபாதசேகரன் என்ற துறவறப் பெயர் பெற்றதாகவும், அவன் குருவிடம் அவன் தீக்ஷை வாங்கும் காட்சியும் சித்திரங்களாகத் தீட்டப் பட்டவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆகையால் சிவலிங்கத்தின் உள் அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்டே ராஜராஜன் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளான் என்பதற்கும் சந்தேகமே இல்லை. இனியாவது லிங்க சொரூபத்தைப் பார்க்கும்போது அதன் பரிபூரணத்துவத்தைப் புரிந்து கொண்டு பார்ப்போமா???

Wednesday, April 07, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

புநர்தத்தன் பேசுகிறான்!

புநர்தத்தனின் கண்கள் பொங்கின. தன் கண்களில் வழியும் கண்ணீரை மறைத்துக்கொண்டு அவன், “இல்லை, என்னால் முடியாது, வாசுதேவகிருஷ்ணா, நான் இங்கிருந்து தப்ப நினைத்தாலும் அது என்னால் இயலாத ஒன்று.” என்றான். இயலாமையில் விளைந்த கோபத்திலும், மனதின் ஓர் ஓரத்தில் தந்தையிடம் உள்ள பாசம் கிளர்ந்து எழுந்ததால் விளைந்த சோகத்தாலும் அவன் குரல் தழுதழுத்தது.

“ஏன் முடியாது?? உன்னைச் சிறைக்கைதியைப் போல் வைத்திருக்கிறார்கள் எனில் உன்னை இங்கிருந்து மீட்பது என் கடமை!” என்றான் கண்ணன். “முடியாது கண்ணா, முடியாது! இந்த நாட்டில் பட்டத்து இளவரசிக்கெனத் தேர்ந்தெடுக்கப் பட்டவன் ஒன்று சாகவேண்டும், அல்லது அரசனாகவேண்டும். அவன் எவ்வளவு உண்மையாகவும், விசுவாசத்தோடும் இருக்கிறானோ, அரசனாக முடியும், இல்லை எனில் அவனுக்குச் சாவு தான் ஒரே தண்டனையாக விதிக்கப் பட்டுள்ளது. இந்த நாட்டு இளவரசியை ஏமாற்றி அவளுக்குத் துரோகம் புரிந்தவன் உயிரோடு இதுவரை திரும்பிச் சென்றதில்லை. இவை இந்த நாட்டின் கடுமையான சட்டங்கள். தெய்வீக அன்னையால் விதிக்கப் பட்டது.” என்றான் புநர்தத்தன்.

“ம்ம்ம்ம்?? எவ்வாறு நீ தேர்ந்தெடுக்கப் பட்டாய் புநர்தத்தா?? “

“இது ஒரு விசித்திரமான நாடு கண்ணா! இந்த நாட்டின் அரசிக்கு எனச் சில அபூர்வத் திறமைகளும், அதிசய சக்திகளும் இருக்கின்றன. அந்தச் சக்திகளைக் கொண்டு அவள் பல அதிசயங்களைப் புரிகின்றாள். அவள் உடலில் அம்பாள் வந்துவிடுவதாயும், அந்த நேரங்களில் அவளே அம்பாளாக மாறிவிடுவதாயும் சொல்கின்றனர். அப்போது அவள் சொல்பவை அனைத்தும் இங்கே வேதவாக்காகக் கடைப்பிடிக்கப் படுகின்றன. அவளுடைய மகள்களுக்கு என எங்கே மணமகன் பிறந்திருக்கிறான் என்பதும் அவன் எவ்விதம் இந்த நாட்டுக்கு வந்து சேருவான் என்பதும் மற்றும் அவனைக்குறித்த அனைத்துத் தகவல்களும் அவளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுகின்றன. ஒருவேளை அவளுடைய இந்த மானசீக சக்தியினாலேயே அவள் தன் பெண்களுக்குரிய மணமகனைத் தன்பால் இழுக்கிறாளோ? தெரியவில்லை! அவள் சக்தியே ஒரு புதிர் கண்ணா! ம்ம்ம்ம்?? எனக்கென்னமோ அவளுடைய இந்த அதிசய சக்தியாலேயே நீயும் இங்கே வந்து சேர்ந்திருக்கிறாயோ என எண்ணுகிறேன் கண்ணா!” என்றான் புநர்தத்தன்.

கண்ணன் சிரித்தான். “புநர்தத்தா! நான் என் சொந்த விருப்பத்தின்பேரிலேயே இங்கே வந்திருக்கிறேன்.” என்றான்.

“குழப்பம் தான் மிஞ்சுகிறது. கண்ணா, எனக்குப் புரியவில்லை. ஆனால் என்ன நடந்தது என்று கேள். புண்யாஜனாவின் ராக்ஷசர்கள் என்னை இங்கே கொண்டு வந்தபோது இந்த தெய்வீக சக்தி படைத்த அன்னை ராணி என்னை வரவேற்றாள். நான் வந்த சிலநாட்களிலேயே இங்கே ஒரு திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவில் புதிதாய் வந்திருக்கும் இளைஞன் எவனோ, அவன் ஏற்கெனவே பட்டத்து இளவரசிக்கு மணமகனாய் அல்லது கணவனாய் இருக்கும் ஆணோடு யுத்தம் செய்யவேண்டும். இந்த யுத்தத்தில் கணவனாய் ஏற்கெனவே இருப்பவன் ஜெயித்தால் வந்தவன் கொல்லப் படுவான். வந்தவன் ஜெயித்தால் அவன் அடுத்த அரச மணமகனாய் அறிவிக்கப் பட்டு ஏற்கெனவே இருந்தவன் கொல்லப் படுவான். அப்படி நான் ஏற்கெனவே இந்தப் பட்டத்து இளவரசிக்கு மணமகனாகவும், கணவனாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவனோடு போர் புரிய நேர்ந்தது. எனக்கு வேறு வழியில்லை. மறுத்தாலும் என் உயிர் என்னுடையதில்லை. நான் அவனைக் கொன்றுவிட்டு, இந்தப் பட்டத்து அரசிக்கு மணமகனாக அறிவிக்கப் பட்டுத் திருமணம் செய்து வைக்கப் பட்டேன். இல்லை எனில் நான் இறந்தால் அவனே நீடித்திருப்பான்.” என்றான் புநர்தத்தன்.

கண்ணன் முகம் யோசனையில் ஆழ்ந்தது. “அப்படியா? என்றால் நானும் இப்படி ஒரு விழாவில் கலந்துகொள்ளும்படி இருக்குமோ? அந்த இளவரசியை நான் மணந்துகொள்ளும்படி நேருமோ?” என்று கேட்டான்.

“அப்படித்தான் நினைக்கிறேன் கண்ணா! அன்னை ராணியின் மேல் இன்னும் தெய்வீகம் ஆவிர்ப்பவிக்கவில்லை. அப்படி ஒரு நிலை அன்னை ராணிக்கு வந்து அவள் பேசவும் ஆரம்பித்துவிட்டாளானால் அவள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர உனக்கு வேறு வழியே கிடையாது. அப்படி நீ மறுத்தாயானால் ராணியின் கணவனாக இருக்கும் அரசனால் கொல்லப் படுவாய்.” என்றான் புநர்தத்தன். “ஓஹோ, நான் அவளை மணந்துகொண்டால்??” கண்ணன் கேட்டான். இளவரசியின் நடத்தைகளுக்கான காரணம் கண்ணனுக்கு இப்போது புரிய ஆரம்பித்தது. தன் அன்னையின் தீர்க்கதரிசனத்திற்கு ஏதுவாக அவள் தன்னை அவள் வழிக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறாள்.

“நீ அவளை மணந்துகொண்டால் வாழ்நாள் பூராவும் அவளோடு இங்கேயே இருக்கவேண்டும், அல்லது வேறு ஒருவன, உன்னைவிட பலசாலியும் புத்திசாலியுமாக இருந்து இங்கே வந்து உன்னைக் கொல்லும்வரை அவளோடு வாழலாம். ராணியின் பெண்களான இவர்களுக்கு இந்த நாட்டை விட்டோ, நகரத்தை விட்டோ வெளியே செல்ல முடியாது. நீ இந்த இளவரசியை மணந்து கொண்டால், நல்ல சாப்பாடு, விலை உயர்ந்த துணிகள், ஆபரணங்கள், பேருக்குக் கொஞ்சம் அதிகாரம் அத்தனையும் கிடைக்கும். ஆனால் நீ உன் மனைவியான அந்த இளவரசியின் அடிமைதானே தவிர, நீயாகச் சுதந்திரமாய் அவளை எதுவும் செய்ய முடியாது. அவளுக்குப் பணிவிடைகள் புரிவதே உன் முக்கிய வேலை. ஒரு ஒட்டுண்ணிபோல் அவளை ஒட்டிக் கொண்டே உன் வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். நீ அந்தண்டை, இந்தண்டை நகரமுடியாமல் எப்போது பெண்காவலர்கள் உன்னைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்கள். உன் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குத் தெரிந்துவிடும். அதோடு எப்போது இந்த தெய்வீக சக்தி படைத்த அன்னை ராணி உன்னுடைய மரணத்தை அறிவிப்பாளோ என்ற கவலையும் இருக்கும்.”


“இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை வாழ்வதை விட நான் இறப்பதையே மேலாக நினைக்கிறேன்.” என்றான் கண்ணன். “ நீ ஏன் மறுத்துப் பேசவில்லை புநர்தத்தா?” என்றும் கேட்டான். “என்னால் முடியாது. தெய்வீக சக்தியால் அடுத்த மணமகன் வருகிறானா என்பதை ராணி அறிவிக்கும் வரையில் நான் காத்திருக்கவேண்டும். அறிவிப்பு வந்து, திருவிழாவும் அறிவிக்கப் பட்டால் நான் ஒன்று சண்டையில் ஜெயித்து என் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, கொல்லப் படவேண்டும். இந்த இருவரில் யார் உயிர் பிழைக்கின்றனரோ அவரே அடுத்த அரசனும் ஆவான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் இந்த ஒரு நாளுக்காகக் காத்திருப்பதே என் வேலை.” என்றான் புநர்தத்தன்.

“சரி, இதில் அரசன் எங்கே வருகிறான்? அவனுக்கு என்ன வேலை?” என்றான் கண்ணன்.

Monday, April 05, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம்பாகம்

புநர்தத்தன் வர மறுக்கிறான்!

அரண்மனை மிகப் பெரியதாகக் கோட்டைக்கு நடுவில் அமைந்திருந்தது. அரண்மனனயின் ஒரு பாகம் கிருஷ்ணனுக்கும், கூட வந்தவர்களுக்கும் எனச் சித்தம் செய்து தயாராக வைக்கப் பட்டிருந்தது. கண்ணனையும், உத்தவனையும் அங்கே அழைத்துச் சென்றனர். கப்பலில் கூட வந்த மற்ற தொழிலாளிகளில் சிலர் இங்கே கண்ணனின் பணிவிடைக்கெனத் தயாராகக் காத்திருந்தனர். அழகிய இளைய இளவரசி கண்ணனை விட்டுப் பிரிய மனமின்றி விடைபெற்றுச் சென்றாள். அவள் செல்லும்போது மீண்டும் கண்ணனை வந்து பார்ப்பதாகச் சொல்லிச் சென்றதை, அவள் மொழி தெரிந்த ஒருவனால் மொழிபெயர்த்துக் கண்ணனுக்குச் சொல்லப் பட்டது. அனைவரும் சென்று தனிமை கிடைத்ததும், உத்தவனைப் பார்த்துக் கண்ணன், “உத்தவா, கடைசியில் ஒருவழியாகப் புநர்தத்தனைக் கண்டு பிடித்துவிட்டோம். ஆனால் இந்த நாககன்னிகைகளின் பிடியிலிருந்து அவனை விடுவித்து எவ்வாறு அழைத்துச் செல்வது என யோசிக்கவேண்டும்.” என்றான்.

“நாம் அபாயத்தில் இருக்கிறோம். இப்படி ஒரு விசித்திரமான உலகுக்கு வருவோம் என்பதை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால்……ம்ம்ம்ம் எனக்கு ஒரு யோசனை, பார்க்கலாம், ஒருவேளை நாம் தப்பிச் செல்லக் கூட முடியும்.” என்றான் உத்தவன்.

சிறிது நேரம் கழித்து, கண்ணனைக் கப்பலில் சந்திக்க வந்த பெண் அதிகாரி, பட்டத்து இளவரசியின் மணாளனும், அடுத்த அரசனாகப் போகிறவனுமான இளவரசன் புநர்தத்தனை அழைத்துக் கொண்டு கண்ணனின் இருப்பிடம் வந்து சேர்ந்தாள். கண்ணனை அவன் வணங்கினான். ஒரு மாதிரியான தர்மசங்கடமான நிலை நிலவியது. யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. என்ன பேசுவது? யார் ஆரம்பிப்பது என நினைத்தவர்கள் போல் மெளனமாகச் சிறிது நேரம் அனைவரும் இருந்தனர். பின்னர் கண்ணனே பேச ஆரம்பித்தான், “புநர்தத்தா, உன்னை ஒருவழியாகக் கண்டு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. “ புநர்தத்தன் என்ற பெயரால் அழைக்கப் பட்டதுமே அவன் முகம் வெளிறிப் பயம் சூழ்ந்துகொண்டது அவனை. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். கண்ணன் கண்களுக்கு அது தப்பவில்லை. எனினும் கவனிக்காதவன் போல் மீண்டும் தொடர்ந்தான். “குருதேவர் தன் ஆசிகளை உனக்குத் தெரிவிக்கச் சொன்னார். உன்னை அவரால் ஒரு க்ஷணம் கூட மறக்கமுடியவில்லை. அவர் மறக்கவும் இல்லை.” என்றான் கண்ணன்.

“நீ இங்கே வந்தது ஒரு துர்பாக்கியமே! வந்திருக்கவேண்டாம் நீ!” என்ற புநர்தத்தன் தன் அருகே நின்றிருந்த பெண் அதிகாரியைக் குறிப்பாய்ப் பார்த்துவிட்டு, “கண்ணா, இவளுக்கு நம் மொழி தெரியாது என்றும் எதுவும் புரிந்துகொள்ள மாட்டாள் என்றும் நினைக்காதே! நம் செய்கைகளில் இருந்து அனைத்தையும் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் படைத்தவள் இவள்.” என்று வேகமாய்ச் சொன்னான்.

“எனில் நீ இங்கே ஒரு சிறைக்கைதியா? ம்ம்ம்ம்ம்?? பட்டத்து இளவரசி அடுத்த அன்னை ராணியாகும்போது நீ அடுத்த ராஜாவாகப் போகிறாய் என்றல்லவோ எண்ணினேன்?”

“ஆம், அது உண்மைதான். பட்டத்து இளவரசிக்கெனத் தேர்ந்தெடுக்கப் பட்டவனே நான். ஆனால் உன்னிடம் உண்மையை உள்ளபடி சொல்கிறேன் கேட்டுக்கொள், கண்ணா. நீ இப்போது இங்கே வந்தது எனக்குத் துளிக்கூடப் பிடிக்கவில்லை. உன் வரவால் அனைவருக்கும் ஏதோ ஆபத்து ஏற்படப் போகிறது என்று தோன்றுகிறது.”

“ஏன்?? உன்னை மீண்டும் குருதேவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைக்கவே நான் விரும்பி வந்துள்ளேன். நீ இல்லாமல் அவருக்கு மன மகிழ்ச்சியே இல்லை.” என்றான் கிருஷ்ணன்.

“ஹா, ஹா, ஹா, என் தந்தை! அவர் என்னை இறந்தவனாக ஏன் நினைத்துக்கொள்ளக் கூடாது? அவர் அப்படி நினைப்பதே எனக்கும் சந்தோஷமாக இருந்திருக்குமே. என்னால் அவரிடம் திரும்பிச் செல்லமுடியாது.” என்று திட்டவட்டமாக மறுத்தான் புநர்தத்தன். பின்னர் மெதுவாய்த் தனக்குத் தானே பேசிக்கொள்வது போல், “ நான் போகவேண்டுமென நினைத்தாலும், அதுநடவாத ஒன்று.” என்று சொன்னான். “என்ன ஆயிற்று புநர்தத்தா? நம்முடைய புனிதமான நாட்டையும், அதன் சநாதன தர்மத்தையும் முற்றிலும் மறந்து போனாயா?” என்றான் கண்ணன். புநர்தத்தன் ஒரு பெருமூச்சு விட்டான்.

“வாசுதேவக் கிருஷ்ணா, கேள், கடந்த ஒருவருஷ நாகலோக வாழ்க்கையில் அமிழ்ந்து போன எனக்குத் திரும்பவும் என் தந்தை நடத்தும் அந்தக் கஷ்டமும், ஊருக்கு ஊர் செல்லும் நாடோடி வாழ்வும் பிடிக்குமெனத் தோன்றவில்லை. ஆம், உண்மைதான், இங்கே வந்த சில நாட்கள், அல்லது ஒரு மாதம்?? எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கவில்லைதான். திரும்பி நம் நாட்டிற்குச் செல்லவும் நினைத்தேன் தான். ஆனால் நாளாக, நாளாக இந்த சுகங்கள் என்னைத் தங்கள் அடிமையாக்கிவிட்டன. இங்கே உள்ள ஆடம்பர வசதிகளில் வாழ்ந்து பழக்கப் பட்டுவிட்டேன். ஓரளவு எனக்கெனத் தனியான அதிகாரங்களும் அளிக்கப் பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேல், லாரிகா, பட்டத்துக்குரிய இளவரசி, என்னை மகிழ்விப்பதிலேயே தன் கருத்தைச் செலுத்தி,எல்லா விதங்களிலும் என்னை மகிழ்வித்து வருகிறாள். அவளிடமிருந்து பிரிந்து செல்வதென்றால், ம்ஹும், அது என்னால் ஆகாத ஒன்று. ம்ம்ம் உனக்குப் புரியாது கண்ணா, புரியவே புரியாது. நீ நம் நாட்டுப் பெண்களின் மத்தியில் வாழ்ந்தவன். அவர்களுக்கு எனச் சிலக் கட்டுப்பாடுகளும், நாகரீகங்களும், சில விதிகளும் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்துக் கட்டுப்பாடான வாழ்க்கை வாழும் பெண்கள் நம் நாட்டுப் பெண்கள். இந்த நாக கன்னிகைகளோடு ஒரு நாள் வாழ்ந்தவனால், அந்தப் பெண்களோடு வாழ்வதை நினைத்தும் பார்க்கமுடியாது.” இதைச் சொல்லும்போது புநர்தத்தனின் குரல் மிக மிக மெதுவாகத் தயக்கத்துடனே ஒலித்தது.

கண்ணனுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். நம் குருதேவரின் மகனா இப்படிப் பேசுவது? “என்ன ஆயிற்று புநர்தத்தா உனக்கு? நீ ஒரு அருமையான தவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாய். உனக்கு அது நினைவிலாவது உள்ளதா? ஆஹா, நம் நாட்டின் ரிஷி, முனிவர்கள், ரிஷி பத்தினிகள்! அவர்களின் தவ வாழ்க்கையும் ஒழுக்க சீலமும், உன் நினைவிலாவது உள்ளனவா? அல்லது இந்த நாகலோகத்து உணவு, உடைகள், ஆடம்பர வாழ்க்கை, நாக கன்னிகையின் அழகு ஆகியவற்றில் மூழ்கிப் போய் உன்னுடைய கடமைகளை மறந்துவிட்டாயா? ஒரு ஆர்யனான உனக்கு உன் கடமைகளையும், கடைப்பிடிக்கவேண்டிய தர்மத்தையும் பற்றி நான் சொல்லவேண்டாம். அவைகளை விடுத்து நீ இந்த சிற்றின்ப வெள்ளத்திலேயே மூழ்கி இருக்கப் போகிறாயா?? எந்த ஆரியனும் இது வரை இதைத் தன் வாழ்க்கையின் லக்ஷியமாய்க் கொண்டதில்லை என்பதையும் அறிவாயல்லவா?”

கண்ணன் சற்றே நிறுத்திவிட்டுப் புநர்தத்தனைக் கனிவுடனும், இரக்கத்துடனும் பார்த்தான். பின்னர் மிகவும் மென்மையாக, அதே சமயம் உறுதியும், கருணையும் நிரம்பிய குரலில், “புநர்தத்தா, உண்மையில் எனக்கு மிகவும் சந்தோஷம், எதற்குத் தெரியுமா? அனைத்துக் கடவுளரும் சரியான சமயத்தில் என்னை இங்கே அநுப்பி வைத்து உன்னை இந்த நரகத்திலிருந்து மீட்கும் வாய்ப்பைக் கொடுத்ததுக்கு. நான் நினைப்பது சரி என்றால், நீ இங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிஷத்தையும், உன்னுடைய அதிகாரமோ, அல்லது இந்த ஆடம்பர வாழ்க்கையையோ மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் கடந்து கொண்டிருக்கிறாய். எப்போது வேண்டுமானாலும் உன்னுடைய அதிகாரம் பறிபோகலாம், உன் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். இந்த ஆடம்பரமும், அதிகாரமும் நிலைத்து நிற்கப் போவதில்லை என்பதை அறிந்திருக்கிறாய் என்றே எண்ணுகிறேன். இந்தச் சூழ்நிலையிலும் நீ உன்னுடைய தந்தையும் என்னுடைய குருவுமானவரிடம் திரும்ப மறுக்கிறாயா? நீ ஒரேயடியாக அதல பாதாளத்தில் விழுந்துவிடவில்லையே புநர்தத்தா??” புநர்தத்தன் முகத்தை இனம் தெரியாத ஓர் உணர்வு கவ்வியது.

“கண்ணா, உண்மையில் என்னுடைய உயிருக்குப் பயந்தே நான் வர விரும்பவில்லை. வைவஸ்வதபுரியை விட்டுத் தப்பிக்க நான் நினைத்த அடுத்த நிமிஷம் என் உயிர் என்னுடையதில்லை. அதோடு உண்மையாகவே இந்த ஆடம்பரங்களும் என்னைக் கவர்ந்துவிட்டன. இவற்றை விட்டு விலகிக் கஷ்டமானதொரு வாழ்க்கையை வாழவேண்டும் என நினைக்கக்கூட என்னால் முடியவில்லை. சாந்தீபனியின் மகனாக இங்கே வந்த நான் முதலில் இந்த வாழ்க்கையை வெறுத்தேன் தான். ஆனால் இப்போதே இது தான் வாழ்க்கை என்ற உணர்வு என்னிடம். வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும் என்றே நினைக்கிறேன். நீ சொல்லும் அந்த ஆதர்ச வாழ்க்கையை வாழவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இப்போது இல்லை.”

ஆஹா, புநர்தத்தா, சேற்றில் புரளும் பன்றியைப் போல இப்படி ஒரு வாழ்க்கையை நீ உண்மையாகவே விரும்புகிறாயா? ஒரு வளர்ப்பு நாயைப் போல உன்னைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்து ஆதாயம் தேடிக்கொள்ளும் பெண்களின் கூட்டுறவில் உண்மையாகவே சுகம் காண்கின்றாயா? ஒவ்வொரு நிமிஷமும் உன் உயிருக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. இந்திரிய சுகத்துக்கு நீ அடிமையாகிவிட்டாயா? இப்படிப் பட்ட ஒரு போலியான வாழ்க்கையும் ஒரு வாழ்க்கை என்றா சொல்லுகிறாய்?”

“ஹா, என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள் கண்ணா. ஆம், நான் சேற்றில் புரளும் ஒரு பன்றிதான். வளர்ப்பு நாய்தான். இதை என்னால் எப்படி விடமுடியும்? நான் இதற்குப் பழகிவிட்டேன். இப்போது இந்த வாழ்க்கையை வாழ்வது என்னுடைய அத்தியாவசியத் தேவை என்றே வைத்துக்கொள்.” என்றான் புநர்தத்தன்.

“அது சரி! ஒரு நாக கன்னிகை உனக்குக் கொடுக்கும் சில நிமிட இன்பங்களே பெரியதல்லவா? அதை விட உன் தந்தையாரோ, உன் முன்னோர்களோ, எப்படிப் பட்ட முன்னோர்கள்? அறிவாயன்றோ? உன் தந்தை ஒவ்வொரு நிமிஷமும் அநுபவிக்கும் துயரமும், ஒன்றுமே இல்லைதான். அதெல்லாம் இந்த நாக கன்னிகை உனக்குக் கொடுக்கும் இன்பங்களை விடப் பெரியது அல்லவே அல்ல. இல்லையா?” கண்ணன் குரலில் சற்றே இகழ்ச்சி தெரிந்தது. “உன்னுடைய முன்னோர்களுக்கு நீ செலுத்த வேண்டிய மரியாதை எதுவுமே இல்லை. ஒரு மனிதன் எப்போது தன் தந்தையை அவமதிக்க ஆரம்பிக்கிறானோ, அவன் மனிதனே அல்ல.” மென்மையாகப் பேசினாலும் கடுமை தெரியப் பேசினான் கண்ணன்.

Friday, April 02, 2010

இந்த நாள் , அது இனிய நாள்!

ஹிஹிஹி, நேத்திக்குப் பதிவைப் பார்த்து பயந்தவங்களுக்கெல்லாம் நன்னி. இன்னிக்கு ஒரு நல்ல நாள். இந்த நாள் இனிய நாள். பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய நன்னாள். இந்த வலை உலகினர் அனைவரையும் ஒரு மாபெரும் புரட்சித் தலைமையை ஏற்றுக்கொள்ளவேண்டிய உந்நத நிலைக்குக் கொண்டு சென்ற நாள். வலை உலகின் பதிவர்களான அனைத்து உறவுகளுக்கும் இது ஒரு பொன்னாள்.

என்னனு புரியலையா? இன்னியோட நான் தமிழிலே பதிவுகள் எழுத ஆரம்பிச்சு நாலு வருஷம் முடியுது. ஆதரவு தெரிவிச்சவங்களுக்கும், இனி தெரிவிக்கப் போறவங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆதரவு தெரிவிக்கலைனா நான் போயிட்டாக் கூட வேதாளமா வந்து பயமுறுத்துவேன் இல்லை? அது!!! அதைத் தான் முந்தின பதிவிலே குறிப்பிட்டு வச்சேன். நீங்க பதிவு எழுதும்போது உங்க கையிலே ஆவிவடிவில் புகுந்து (ஹை ஜாலியா இருக்கும் போலிருக்கே) என் இஷ்டத்துக்கு எழுத வைப்பேன். மாட்டேங்கறவங்க தூக்கத்திலே ராக்ஷசியா வந்து பயமுறுத்துவேன். (இது இன்னும் நல்லா இருக்கும் போலிருக்கே!) பதிவுகள் எழுத ஆரம்பிச்ச புதுசிலே ஆதரவு தெரிவிச்சவங்கள்ளே முக்கியமான நபர் சூப்பர் சுப்ரா. அவராலே தான் ஏதோ கொஞ்சமாவது என்னைப் பார்த்து நானே சிரிச்சுக்க ஆரம்பிச்சேன். அவரைத் தான் முதல்லே மிரட்டணும். இதுக்காகவே அவர் எப்போவோ ஒரு வாட்டி எட்டிப் பார்க்கிறதோடு சரி. அதனால் முதல்லே ஆவியாய் மாறி மிரட்டப் போறது சூப்பர் சுப்ராவைத் தான். ஏண்டா இவங்களுக்கு ஆதரவா எழுதினோம்னு நொந்து போயிடுவாரோ! அடுத்து நம்ம அம்மாஞ்சி அம்பி மாட்டிப்பார். எனக்குத் தமிழ் எழுதச் சொல்லிக்கொடுக்காததோடு பதிவுக்கு வந்து கிண்டல் வேறே பண்ணிட்டுப் போனார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்பியைப் பயமுறுத்தணும், கத்தரிக்காய் சாப்பிட வைக்கணும், கேசரினாலே ஓடும்படி பண்ணணும், போர்க்கொடியை ரெண்டு கையாலேயும் பார்த்துடணும் , தக்குடுவை ஒரு வழி பண்ணணும். , கைப்புள்ளயை, அதியமான், நக்கலா பண்ணறீங்க?? ஸ்மைலி போட்டு வெறுப்பேத்தறேனா? ஸ்மைலி தவிர வேறே எதுவும் எழுத மாட்டீங்க அப்புறமா, அப்படிப் பண்ணிட மாட்டேன்?, இன்னும் யாரு?? அபி அப்பா?? சரி போனால் போகுதுனு ஒரு முறை பயமுறுத்தலாம், இந்த நட்டு ஆண்ட்டினு கூப்பிட்டதாலே ஒரே முறை. புலி?? வேண்டாம், நல்ல புலி. விட்டுடுவோம், கல்யாணம் வேறே இப்போத் தான் ஆகி இருக்கு. கோபி?? சேச்சே, ரொம்ப நல்ல பையர், அழுதுடுவார் அப்புறமா.

திராச சார், திவா, மெளலி இவங்களை எல்லாம்?? ம்ம்ம்ம்ம்??? ஆன்மீகம் இல்லை எழுதறாங்க?? ஆஹா, அவங்க எல்லார் கிட்டேயும், நான் தான் உம்மாச்சினு சொல்லிடலாம். நல்ல ஐடியா! திவா கிட்டே நான் தான் பிரம்மம்னு சொல்லிடலாம். வேண்டுமானா மகாநதி ஷோபனாவோட குரல்லே "பிரம்மம் ஒன்றுதான், பரப்பிரும்மம் ஒன்றுதான்!" பாட்டைப் போட்டுக் காட்டிடலாம். பாட்டு மட்டும் கேட்கும். உருவம் தெரியாது. பிரம்மமே நாந்தான்னு எழுத வச்சிடலாம். திராச அவர்கள் கிட்டே திருத்தணி முருகன்னு சொல்லிடணும். உருகிடுவார். மெளலி கிட்டே மீனாக்ஷி மாதிரி போயிடணும். சர்வ சக்தி வாய்ந்த அந்த ஆதிபராசக்தியே நான் தான்னு சொல்லிடணும். ஆஹா, அம்பாளே வந்துட்டாளே! என்ன பண்ணறதுனு மெளலி நல்லா யோசிக்கணும். அப்புறமா கேஆரெஸ், குமரன் இருக்காங்க. குமரன் தான் வலை உலகில் முதல் முதல்லே என்னை "கீதாம்மா"னு கூப்பிட்டுட்டுக் கூப்பிடலாமா?னு கேள்வியும் கேட்டுட்டுக் கூப்பிடவும் ஆரம்பிச்சார். இன்னிக்கு இண்டநேஷனல் லெவல்லே கீதாம்மா ஆகி இருக்கேன். அதனால் குமரனை மன்னிச்சு விட்டுடலாமா?? கேஆரெஸ்ஸை?? ம்ம்ம்ம்ம்? அவரைக் கட்டாயமாய் பயமுறுத்தியே ஆகணும். பேசாம நான் காரைக்கால் அம்மையாரோட கணவர் பரமதத்தன் ஆவி மாதிரி வந்து நின்னுட்டு எனக்கு ஆதரவா அவரை எழுத வச்சிடலாம். ஹிஹிஹி, ஜாலியா இருக்கும் போலிருக்கே இதெல்லாம்! நல்ல ஐடியா! அப்புறமாப் பெண்பதிவர்கள்ளே முதல்லே ரேவதி?? வேண்டாம், வேண்டாம், பாவம், பயந்துடுவாங்க. அதோட என்னடா கண்ணானு கூப்பிடுவாங்களே! அதைக் கேட்டதுக்கப்புறமும் எப்படிப் பயமுறுத்தறது?? துளசி, வேண்டாம் வேண்டாம், நம்மளையும் மதிச்சு அவங்க எங்கே சுற்றுப் பயணம் போனாலும் உடனே எனக்குத் தனி மடல் கொடுத்து ஆலோசனை கேட்கிறாங்க. ஆலோசனைகளை வேணாச் சொல்லிடலாம் ஆவி வடிவில் , அவங்க தூங்கும்போது. இன்னும் யாரு?? கவிநயா? வேண்டாம், கவிதை சொல்லிப் பயமுறத்தறேம்பாங்க, அது நமக்கு வராது, நாம தானே பயமுறுத்தணும், ம்ம்ம்ம்??? யோசிக்கலாம், கவிதைன்னா நாமளே ஓடிடணும். அதனாலே நல்லா யோசிச்சுச் செய்யணும். பேசாம நான் எழுதறதையே மடிச்சு மடிச்சுக் கவிதை மாதிரி காட்டிடணும். தலையில் அடிச்சுண்டு போயிடுவாங்க. ரா.ல. பாவம் உடம்பு சரியில்லை போல, ஆளே காணோம். விட்டுடுவோம், போனால் போகட்டும். :( ஆஹா, எல்கே தாத்தா, அவரை விட்டுட்டேனே! விதம் விதமாப் படம் போட்டு குழப்படி பண்ணறாரே! ஒரிஜினல் படத்தைப் பார்த்துப் போட வைக்கணும். அந்தக் காலத்து நம்பியார் போல இருக்கிற இவரை எப்படிக் கல்யாணம் செய்துட்டீங்கனு அவரோட தங்கமணியைப் பார்த்துக்கேட்கணும். ம்ம்ம்ம்ம் இப்போதைக்கு இவங்க போதும். அப்புறமா ஒவ்வொண்ணா வரலாம்.


ஆஹா, வலை உலகப் பதிவர்களே, காத்திருங்க. நான் போனாலும் என்னோட ஆவி எந்த உருவத்திலாவது வந்து உங்க எல்லாரையும் சுத்துமே! I will haunt you all!

Thursday, April 01, 2010

ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராக்ஷசி போல் வருவேன்!

"ராத்திரி நேரத்தில் தூக்கத்தில் நானொரு ராக்ஷசி போல் வருவேன்
நாளைக்கு என்னோட பதிவுக்குப் பின்னூட்டம் போட்டால் தான் விடுவேன்!"

என்ன நாளைக்கு???? நாளை வரை காத்திருக்கவும். டண்டடண்டடண்டடண்ட டய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்