எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 31, 2009

சாந்தி நிலவ வேண்டும் உலகிலே!



இந்தப் புத்தாண்டில் உலக மக்கள் அனைவரின் வாழ்விலும், வளமும், மகிழ்வும் சேர்ந்து அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சாந்தி நிலவவேண்டும்.

Wednesday, December 30, 2009

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!

படித்துவிட்டீர்களா? வெங்கை(கா)யா நாயுடுவுடன் ஒரு சந்திப்பு



திநகரில் இருந்து திருவான்மியூர் பேருந்தைத் தேடிக் கண்டுபிடிச்சு ஏறுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு. பேருந்து நிலையம் பூராவும் பேருந்துகள் அதுக்கு மேலே திணறிட்டு இருக்கு. எல்லாம் வெளியே போகமுடியாமல் தவிப்பு. உள்ளே வர பேருந்துகள் அதுக்கும் மேலே ஜனக்கூட்டத்தைத் தாண்டி வரத் தவிப்பு. எப்படித்தான் மனிதர்கள் அங்கே அவ்வளவு கூட்டத்தில் போய்ட்டு வராங்களோனு தினம் தினம் இந்த வேதனையை அநுபவிக்கும் மக்களின் மீது பரிதாபம் பொங்கி வந்தது. பகல் ஒன்றரை மணிக்கே இப்படின்னா அதுவும், ஞாயிற்றுக்கிழமையில், அலுவல்நாட்களில் கேட்கவே வேண்டாம். :( நல்லவேளை, நான் பிழைத்துக் கொண்டேன்னு பாடணும்போல் இருந்தது. ஒருவழியாப் பேருந்து வெளியே வந்து திருவான்மியூர் நோக்கிச் சென்றது. பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் பொருட்காட்சி நடக்குதுனு சொன்னாங்களே தவிர, அது அங்கே இருந்து நடக்கும் தூரம் எல்லாம் இல்லை. ஆட்டோ வச்சுண்டு தான் போனோம். இனி இந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

உலக மக்களின் அனைத்துத் தரப்பு மத ஒற்றுமைக்காகவும், அனைத்து மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்திற்காகவும் துவங்கப் பட்ட இந்த அமைப்பின் பெயர் global foundation for civilizational harmony என்பது. திரு அப்துல் கலாம் அவர்களால் துவக்கி வைத்த இந்த அமைப்பு அனைத்து மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைந்து செயலாற்றி வருகிறது. அதன் ஒருபடியாகச் சென்ற வருடம் பெப்ரவரி மாதம் 6,7,8 தேதிகளில் இந்த ஆன்மீகக் கண்காட்சியை நடத்தினார்கள். இதைத் தவிரவும் பல்வேறு சமூகநலத் திட்டங்களையும் இது மேற்கொண்டு செயலாற்றுகிறது. முதல்முறையாகப் பெருவாரியான மக்களுக்கு ஹிந்து அமைப்புகள் செய்யும் தொண்டுகள் பற்றிய தெளிவான அறிமுகம் சென்ற வருடம் தான் கிடைத்தது என்றே சொல்லலாம். படித்தவர்கள் பலருக்கும் கூட ஆச்சரியம், இவ்வளவு செய்யறாங்களா?? தெரியவே இல்லையேனு! அண்ணா நகரில் ஜெயகோபால் கரோடியா பள்ளி மைதானத்தில் நடந்த இந்தப் பொருட்காட்சியின் முக்கிய நோக்கமே ஹிந்து இயக்கங்கள், மடங்கள், மற்றும் ஆன்மிகக் குழுமங்கள், மற்ற மதங்களின் இயக்கங்கள் போன்றவைகள் பொதுமக்களுக்குச் செய்து வரும் பல்வேறு தொண்டுகளைப் பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லுவதே ஆகும்.


அதிலும் முக்கியமாய் இந்து அமைப்புகளோ அல்லது இயக்கங்களோ மக்கள் தொண்டு செய்வதே இல்லை என்னும் எண்ணம் பரவலாக இருப்பதையும் கருத்தில் கொண்டு பல்வேறு இந்து இயக்கங்கள் இதில் பங்கு பெற்று தங்கள் தொண்டைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கொடுத்துள்ளது. ஆனால் சென்ற வருடம் இந்த நிகழ்வு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்ததால் வெகுஜனங்களைச் சென்றடையவில்லை. அதையும் மனதில் கொண்டு இந்த வருடம் சற்றே பெரிய அளவில் இந்தப் பொருட்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் முக்கிய அங்கம் வகித்தவை தயாநந்த சரஸ்வதி அவர்களின் அர்ஷவித்யா குருகுலம், அதைச் சார்ந்த தொண்டு அமைப்புகள், ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை குழுமங்களின் தொண்டு அமைப்புகள், சாந்தாநந்தரின் ஸ்கந்தாஸ்ரமம், ஸ்ரீகணபதி சச்சிதாநந்த ஸ்வாமிகளின் ஹீலிங் த்ரூ ம்யூசிக் குழுவினர், அவர்களின் தொண்டுகள், காஞ்சி காமகோடி மடம், சிருங்கேரி மடம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம், மாதா அமிர்தாநந்தமயி, பிரம்மகுமாரிகள் அமைப்பு, ராமகிருஷ்ணா மடம், விவேகாநந்தா மடம், விவேகாநந்தா யுவகேந்திரா, ராஷ்ட்ரீய சேவிகா அமைப்பு, திருமலா திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீபுரம் நாராயணி பீடம், ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ஆரோக்கியபீடம், ஸ்ரீஹரிதாஸ்கிரி ஸ்வாமி அவர்களின் தென்னாங்கூர் மடம், மதுரை செளராஷ்டிரா சங்கம், ஸ்ரீராம்தேவ் அவர்களின் யோகாஸ்ரமம், சிவாநந்த ஆசிரமம், சேவாலயா, தமிழ் ஹிந்து தளம், சுத்தாநந்த பாரதியாரின் சீடர்கள், வைதீகஸ்ரீ, பத்மா சுப்ரமணியத்தின் ந்ருத்யோதயா, போன்ற பல்வேறு அமைப்புகள் சேர்ந்து நடத்தியது இந்தத் திருவிழாவை.

மாபெரும் கூட்டம்னு சொல்ல முடியாட்டியும் கூட்டம் தான். பல கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், நல்லவேளையா சாலை பெரியது. நடந்ததும் உடையார் தோட்டம் என அழைக்கப் படும் ராமச்சந்திரா பல்கலைக்கழக வளாக மைதானம். ஐயப்ப பக்த சமாஜத்தினரால் உணவு விடுதி நடத்தப் படுகிறது. அநுமதி இலவசம். கழிப்பறை வசதிகள், அரங்குகள் நிர்மாணித்திருப்பவர்களுக்கு, மற்றும் அமைப்பாளர்களுக்கான சாப்பாடு வசதிகளுக்கு எனப் பந்தல் போட்டு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அதிகமாய் மாணவ, மாணவியர், கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், இளம்பெண்கள், தனியாகவோ, குழுக்களாகவோ, பள்ளி, கல்லூரிகள் மூலமாகவோ வந்த வண்ணம் இருந்தார்கள். அவர்களைக் கவரவும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்தும் மாலை ஐந்து மணிக்கு மேல் தான். என்றாலும் காலையில் ரத்ததான முகாமும், அதன் பின்னரும் புதிர் போட்டிகளும், கேள்வி, பதில் பகுதிகளும் அவற்றுக்கான பரிசுகளும், படம் வரையும் போட்டியும் அதற்கான பரிசுகளும் வழங்கப் படுகின்றன. கலைநிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கில் அப்போது யோகக்கலை பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்க நாலு பேர் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

விவேகாநந்தா யுவகேந்திராவைப் பார்த்ததும் எனக்குள் உற்சாகம் பீரிட்டுக் கொண்டு வர, அங்கே போனேன். நாமளும் இளைஞர்களின் ஒருத்தி அல்லவோனு அங்கே போனால் அது உனக்கில்லைனு ரங்க்ஸ் என்னைப் பிடிச்சு இழுக்க, அங்கே நடக்கும் போட்டியில் பங்கு பெறணும்னு ஆசையோடு போனால், அட, அது சின்னப் பசங்களுக்குனு இழுத்துட்டு வந்துட்டார். நானும் சின்னப் பொண்ணுதானேனு சொன்னால் முறைப்பு. அதுக்குள்ளே ராமகிருஷ்ணா மடத்தின் அரங்கம் வந்ததா?? அங்கே புத்தகங்களைப் பார்த்தோமா? ஹிஹி, பார்த்தேனானு தான் சொல்லணும். அதைப் பார்த்ததும் லாலிபாப்பைப் பார்த்த குழந்தை மாதிரி அங்கே நுழைய ரங்க்ஸோ என்னைப் பின்னால் இழுக்கிறார். அவர் கையில் கத்தை ஸ்வாமிபடங்கள். ஏற்கெனவே நாங்க போற ஊரிலே எல்லாம் பார்க்கிற ஸ்வாமிபடங்களை எல்லாம் வாங்கி மாட்டி வச்சிருக்கார். இனிமேல் ஸ்வாமி அலமாரியிலே இடமே இல்லைனு வீட்டிலே உள்ள எல்லா அறையிலும் மாட்டியாச்சு. இனிமேலே புதுசா வீடு கட்டினாலோ அல்லது, புதுசா அறை இந்த வீட்டிலேயே போட்டாலோ தான் உண்டு. இங்கே என்னடான்னா எல்லாரும் அவங்க அவங்களோட சேவைகளை விளக்கும் குறிப்புகள் கொண்ட கையேடுகள் மட்டுமில்லாமல் ஏதானும் ஸ்வாமிபடமும் வேறே கொடுக்கிறாங்க. அது தவிர, ரமணர் படமே இல்லைனு ஒரு ரமணர் படம், ஏற்கெனவே வீட்டிலே இருக்கும் ராமர் படங்கள் பத்தாதுனு சின்னதா ஒண்ணு, கையடக்கமா. விலைக்கு வாங்கி வச்சுண்டாச்சு. இந்த மாதிரி இருக்கையிலே என்னை முறைக்கிறார். புத்தகம் வாங்கக் கூடாதாமே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்போ இங்கே எந்தப் புத்தகத்தை வாங்கி எங்கே வைக்கப் போறே?? வீட்டிலே இடமே இல்லை, உனக்கப்புறம் படிக்க ஆளும் இல்லை. ரங்க்ஸின் முறைப்புக்கு அஞ்சாமல்,அட, நான் போனதுக்கப்புறம் இருக்கிறவங்க படவேண்டிய கவலைனா அதுனு சொல்லிட்டு, ரா.கணபதியோட "அறிவுக்கனலே, அருட்புனலே" புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். இவ்வளவு பெரிய புத்தகத்தை வாங்கி இருக்கேனே, கூடவே பெரிசா ஒரு பையானும் கொடுப்பாங்க, கையிலே இருக்கிற கையேடுகளைப் போட்டுக்கலாம்னு நினைச்சால், அவங்க என்னடானா சின்னதா ஒரு பையிலே போட்டுக் கொடுத்துட்டாங்க. கையேடுகளே ஒரு இருநூறு சேர்ந்திருக்கு. வெயிட் தாங்கலை. எப்படிடா இத்தனையையும் தூக்கிட்டு மத்த அரங்கங்களுக்குப் போறதுனு முழிச்சோம். அதுக்குள்ளே அங்கே நுழையுமிடத்தில் ஒரே பரபரப்பு. என்னடானு பார்த்தா, வெங்கையாநாயுடு வராராம். அதுவும் நான் வந்திருக்கிறது தெரிஞ்சு என்னைப் பார்க்கவே வரார் போலிருக்கே?? அட??? எந்தப் பத்திரிகைக்காரங்களையும் வரக்கூடாதுனு ரகசியமா இல்லை போனேன்?? :P:P:Pஆச்சரியமா இருந்தது. அங்கே இருந்த அரங்கிலேயே உட்கார்ந்து கொண்டேன். வெங்கையா நாயுடுவோட பேசவேண்டியதை மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்த்து வச்சுக் கொண்டேன். அதோ அங்கே நிக்கிறவங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே??? எங்கேயோ பார்த்தமுகம்??? யார் அது????

Tuesday, December 29, 2009

எல்லாரும் புதுமையான பொருட்காட்சி பார்க்க வாங்க!

சின்ன வயசிலே சர்க்கஸோ, பொருட்காட்சியோ பார்த்ததே இல்லை. பொருட்காட்சி முதல்லே பார்த்தது பதினைந்து வயசிலே. கல்யாணம் ஆகி வந்ததும் ஒரு தரம் சென்னையிலே சுற்றுலாப் பொருட்காட்சிக்கும், தேனாம்பேட்டை காங்கிரஸ் கண்காட்சிக்கும் போனேன். காங்கிரஸ் கண்காட்சி அப்போ ரொம்பவே பிரபலமான ஒன்று. நிறைய விஷயங்கள் சேகரிக்கலாம். சரித்திரத் தகவல்கள் பல இடம் பெற்றிருக்கும். பயனுள்ள கண்காட்சியாக இருந்தது. அதுக்கப்புறமா செகந்திராபாத்திலே இருக்கும்போது அங்கே சர்க்கஸ் வந்தது, கூடவே பொருட்காட்சியும். எங்க பெண்ணும், பையரும் குழந்தைங்க அப்போ. அவங்களுக்குக் காட்டணும்னு நம்ம ரங்ஸுக்கு ஆசை அதனால் சனி, ஞாயிறுனா கூட்டம் அதிகம் இருக்கும்னு வார நாட்களின் ஒருநாள் அவர் ஆப்பீச்சுக்கும், பொண்ணுதான் அப்போப் படிச்சுட்டு இருந்தா, அவ பள்ளிக்கும் ஒருநாள் விடுமுறை போட்டுட்டு முதல்லே சர்க்கஸுக்கும், அப்புறமா பொருட்காட்சிக்கும் போனோம். வாழ்நாளில் முதலும் கடைசியுமா சர்க்கஸ் பார்த்தது அப்போத் தான். அதுக்கப்புறமா பல பொருட்காட்சிகள், கண்காட்சிகள். யு,எஸ்ஸில் கிறிஸ்துமஸ் சமயம் நடக்கும் பல்வேறு காட்சிகள், விழாக்கள். வட மாநிலங்களின் சாத்தம், ஆட்டம் என கிருஷ்ண ஜன்மாஷ்டமிக் கொண்டாட்டங்களின் கண்காட்சிகள், அருமையான ஒன்று. இப்படிப் பல பொருட்காட்சிகள் பார்த்து இப்போப் பொருட்காட்சிக்கே போகறதில்லை. இப்போ எதுக்கு இதெல்லாம்னு கேட்கறிங்க இல்லை???? போனவருஷம் ஆன்மீகப் பொருட்காட்சி சென்னையில் நடை பெற்றதுனு பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். நாங்க அப்போ பரோடா போயிட்டோம். அதனால் பொருட்காட்சிக்குப் போகமுடியலை. மேலும் போன வருஷம் தான் ஆரம்பம். போதிய விளம்பரம் இல்லை. மேலும் மொழி ஒரு பிரச்னையாக உள்ளூர் மக்களுக்கு இருந்திருக்கிறது. பெரும்பாலும் ஆங்கிலமாகவே அமைய சிலருக்குப் புரிதலில் பிரச்னையும் இருந்திருக்கிறது. அது பற்றி ஒரு விமரிசனம் படித்துவிட்டு நானும் ஏதோ இரண்டு வரி எழுதி இருந்தேன்.

இந்த வருஷமும் அந்தப் பொருட்காட்சி இந்த மாதம் 24-ம் தேதி ஆரம்பித்து, 28-ம் தேதி வரையில் நடைபெறுகிறது என தினசரிப் பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகள், சில குறிப்பிட்ட தொலைக்காட்சி சானல்கள் மூலம் தெரிந்து கொண்டோம். ஆனால் பொருட்காட்சி நடக்குமிடம் திருவான்மியூர். நாங்க இருப்பது வடமேற்கு என்றால் அது தென் கிழக்கு. சரியான எதிரெதிர் மூலைகள். எங்கே????னு பெருமூச்சு, சிறுமூச்சு, மூச்சை அடக்கும் பயிற்சினு எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். இந்த அழகிலே கால்வலிக்குச் சாப்பிடும் மாத்திரையின் பக்கவிளைவுகள் வேறே அதிகமா இருந்தது. கனவெல்லாம் காணாதேனு ஒரே அதட்டல் நம்ம ரங்க்ஸ் கிட்டே இருந்து. ஆசை இருக்கு தாசில் பண்ணனு வழக்கமான டயலாக் வேறே. நொந்து நூலாகிக் கிடந்தேன். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

என் நிலைமையைப் பார்த்து பயந்து போன அவர் ஏகப்பட்ட கண்டிஷன்களோட கூட்டிட்டுப் போக சம்மதிச்சார். எல்லாத்துக்கும் ஒத்துண்டாச்சு. ஞாயிறன்று போக முடிவு செய்தால் அன்னிக்குனு பார்த்து என் தம்பி, மதுரையிலே இருந்து அண்ணா, மன்னி, (பெரியப்பா பையர்) எல்லாரும் வரதாச் சொல்லி இருந்தாங்க. திங்களன்று கடைசிநாள் பொருட்காட்சிக்கு. எப்படிப் போறது? அன்னிக்கு வாரத்தின் முதல் நாள், அதோட, பொருட்காட்சிக்குக் கடைசிநாள், வைகுண்ட ஏகாதசி வேறே. சரிதான்! பொருட்காட்சி ஆசையையே வழிச்சுத் துடைச்சுப் போட்டுட்டுப் பேசாமல் இருந்தேன். ஞாயிறன்று காலையிலே என் தம்பி தொலைபேசி, உங்க வீட்டுக்கு இந்த முறை வரலைனு சுபச் செய்தியைத் தெரிவிக்க, உடனடியாக அதிரடி மந்திராலோசனைக் கூட்டம் நடத்தி அன்னிக்குப் பொருட்காட்சிக்குச் செல்லுவது பற்றிய அவசரச் சட்டமும் உடனடியா அமுலுக்குக் கொண்டு வந்து, அதை என் அண்ணாவிடமும் சுபஸ்ய சீக்கிரமாத் தெரிவிச்சாச்சு. அவரும் பச்சைக்கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட, அன்னிக்கு மத்தியானமா, ரங்க்ஸ் எமகண்டம் வரப் போறது, சீக்கிரமா வீட்டை விட்டு வெளியே போனு என்னை விரட்ட, (அவர் குளிக்கப் போகக் கூட இதெல்லாம் பார்ப்பார், இதுக்குக் கேட்கணுமா? :P) நானும் கணவனே கண் கண்ட தெய்வம்னு அவர் சொல்லை மீறாத மனைவியாக சரியாய்ப் பதினொரு மணி ஐம்பத்தைந்து நிமிஷங்களுக்கு வீட்டுக்கு வெளியே வந்தேன்.

பலகை போட்டு வண்டியை இரண்டரை அடி கீழே இருக்கும் சாலையில் ஏற்கெனவே இறக்கியாச்சு. ஆனால் அங்கே இருந்து வண்டியிலே போகமுடியாது. கொஞ்ச தூரம் நடந்து போய் அடுத்த தெருவிலே தான் ஏறிக்கணும். கைலை யாத்திரையை விடக் கஷ்டமான பயணம். அதைக் கடந்து அடுத்த தெருவுக்கு வந்து வண்டியிலே ஏறிட்டுப் பேருந்து நிலையத்துக்கு வந்து வண்டியை வச்சுட்டுத் திருவான்மியூர் போகும் பேருந்து இல்லைங்கறதாலே திநகர் பேருந்தைப் பிடிச்சு உட்கார்ந்தோம். பேருந்தும் உடனே கிளம்பிடுச்சு. ஞாயிற்றுக்கிழமைனாலும் பொங்கல் புதுத்துணிகள் வாங்க அநேகமாய்த் திருத்தணி, திருப்பதினு அக்கம்பக்கம் ஊர்க்காரங்க எல்லாம் திநகர் நோக்கிப் படைஎடுக்கிறாங்க போல! அவ்வளவு கூட்டம்! விவேக் அருகேயே பாண்டி பஜார், பனகல் பார்க்னு நிறுத்திடறாங்க. அங்கிருந்து திநகர் பேருந்து நிலையம் போகத் தான் நம்ம பேருந்துக்கு ஒரு மணி நேரம் ஆகுது. போறாத்துக்கு அந்தச் சின்னப் பாலத்திலே வண்டிகளை வேறே வரிசையா நிறுத்திடறாங்க. பாலம் தாங்குமானு பயமா இருக்கு! கீழேயும் போக்குவரத்து நெரிசல், மேலேயும் போக்குவரத்து நெரிசல். நடைபாதைகளிலோ கேட்கவே வேண்டாம். ஜனக்கூஊஊஊஊஊட்டம். எல்லாரும் இந்தக் கூட்டத்தில் ஒருத்தரை ஒருத்தர் அடையாளம் கண்டு, என்ன பேசி, எப்படிப் பார்த்து, எப்படித் தேர்ந்தெடுக்கிறாங்கனு எனக்கு ஆச்சரியமாவும் இருந்தது. நமக்குச் சரியா வராதுனும் நினைச்சுண்டேன். பட், தோளில் ஒரு தட்டல்! திரும்பிப் பார்த்தால், அட, நம்ம ரங்க்ஸ், இறங்கு, பேருந்து நிலையத்துக்குள்ளே போகாது, பர்க்கிட் ரோடிலேயே நிறுத்தறாங்க. உள்ளே போய்த் திருவான்மியூர் பேருந்தைப் பிடிக்கலாம்கறார். ஆமாம் இல்லை, அட, நாம ஆன்மீகப் பொருட்காட்சி பார்க்க இல்லை கிளம்பி இருக்கோம்???? அதை விட்டுட்டேனே??? ஹிஹிஹி, நாளைக்குப் பார்ப்போமா?? இரண்டு நாளா உடம்புதான் படுத்தினதுனா ஆற்காட்டாரும் நினைச்ச நேரம் விசிட். இந்தப் பதிவையே இப்போ மூணாம் தரமாக் கொடுக்கிறேன், போகுதா பார்க்கலாம்.

Monday, December 28, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

மணிமகுடம் கிடைத்தது!


கண்ணன் தன் தந்தையை நமஸ்கரித்ததையும், வசுதேவர் அவனைத் தன்னிரு கரங்களால் எடுத்து அணைத்ததையும் பார்த்திருந்தாள் தேவகி. கடைசியாக இத்தனை வருடங்களுக்குப் பின்னர் தந்தையும் மகன்களும் சேர்ந்துவிட்டனர். அதோ கண்ணனுக்கு அருகே பலசாலியாகவும் கம்பீரமாகவும் வருவதுதான் பலராமனா? ரோஹிணி அக்காவால் வளர்க்கப் பட்டவனா?? கண்ணீர் பொங்கி வெள்ளம்போல் வந்தது. அந்த வெள்ளத்தினூடே நீந்தி வருவது போல் தெரிந்தான் கண்ணன். அவள் அருகே வராமல் போயிடுவானோ? தன்னைச் சூழ்ந்த தோழியரை விலக்கிவிட்டுக் கீழே இறங்கிக் கண்ணனின் பாதையில் நின்றாள் தேவகி. தன் வளர்ப்புத் தந்தையிடம் பேசிய கண்ணனோ தேவகி இருக்கும் பக்கமே வந்து கொண்டிருந்தான். தேவகியைப் பார்த்தான். அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. தன்னிரு கரங்களையும் நீட்டினாள். அவள் நீட்டிய கரங்களுள் அவன் அடைக்கலம் புகுந்தான். “அம்மா”

அவ்வளவு தான். அந்த மந்திரச் சொல் தேவகியை மயக்கம் அடைய வைத்தது. ஒரு பூவைப் போல் தன் தாயைத் தூக்கி அவள் மயக்கத்தைத் தெளிவிக்க முயன்றான் கண்ணன். அவளைச் சூழ்ந்து அவளுக்கு வைத்தியம் பார்க்க வந்தோரை விலக்கிவிட்டுத் தன் கைகளால் அவளைச் சுமந்து கொண்டு வசுதேவரின் மாளிகைக்கு வந்தான் கண்ணன். அதற்குள்ளாக மயக்கம் தெளிந்த தேவகி மனதில் வெட்கம் சூழ எழுந்து அமர்ந்தாள். அனைவருக்கும் உயிர் வந்தாற்போல் நிம்மதியாய் இருந்தது. அங்கு வந்திருந்த யாதவத் தலைவர்கள் அனைவருமே வசுதேவருக்கும், தேவகிக்கும் வேண்டியவர்களே. ஆகையால் அனைவருக்கும் தேவகி போட்டிருந்த சபதத்தினால் மனம் கலங்கி இருந்தது. ஆனால் கண்ணனோ அவற்றை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டான். அப்போது அங்கே கட்டியம் கூறும் சப்தம் கேட்க அனைவரும் திரும்பிப் பார்த்தனர். வசுதேவரும், கர்காசாரியாரும், சாந்தீபனி பின் தொடர வந்து கொண்டிருந்தனர். சாந்தீபனிக்குப் பெருமை. வேத வியாசரின் கட்டளைப்படி தன்னால் விருந்தாவனத்தில் சில மாதங்கள் கண்ணனுக்கு ஆயுதப் பிரயோகம் கற்றுக் கொடுத்ததையும், கண்ணன் அதில் தேர்ந்திருப்பதையும் எண்ணி மனம் மகிழ்ந்தார். மேலும் அவர் கம்சனின் விருந்தாளிகளாய் வந்திருந்த அவந்தி தேசத்து ராஜகுமாரர்கள் விந்தன், அநுவிந்தன் இருவருக்கும் குருவாக இருக்கவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். இவை எல்லாவற்றாலும் அவர் மனம் மகிழ்ந்து இருந்தது.

சற்று நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே மதுராவின் காவலையும், பாதுகாப்பையும் ஏற்றிருந்த ப்ரத்யோதா வந்தான். அவன் முகம் கவலைக்கிடமாய் இருந்தது. வசுதேவரைப் பார்த்து, “ஷூரர்களின் அரசே, நாம் சீக்கிரம் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும், நிலைமை மிகவும் மோசமாய் இருக்கிறது. கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன். எப்போது பகைவர்கள் மதுராவின் மேல் பாய்வார்கள் என்பதைக் கணிக்க முடியவில்லை/” என்றான்.

“ஆம், உண்மைதான், வந்திருப்பவர்களில் கம்சனின் விசுவாசிகள் பலரும் இருக்கின்றனர். முக்கியமாய் விதர்ப்பதேசத்து இளவரசன்.. ம்ம்ம்ம்.., இப்போது என்ன செய்யலாம் ப்ரத்யோதா??” வசுதேவர் கவலையுடன் கேட்டார். ப்ரத்யோதாவோ, “ஐயா, வந்திருப்பவர்களை விடுங்கள், அவர்கள் விருந்தாளிகள். ஆனால் மதுரா நகரை இப்போது மூவாயிரம் மகத வீரர்கள் சூழ்ந்திருக்கின்றனர். அவர்களின் இளவரசனும், தளபதியும் ஆன வ்ருதிர்கனன் கொல்லப் பட்டிருக்கின்றான். மேலும் மகத நாட்டுச் சக்கரவர்த்தியின் அன்புக்குரிய இரு பெண்களின் கணவனும், மறுமகனும் ஆன கம்சனும் கொல்லப் பட்டிருக்கின்றான். ஜராசந்தன் வேறு எதைப் பொறுத்துக் கொண்டாலும் தன் மறுமகன் கொல்லப் பட்டதையும் தன்னிரு பெண்களும் விதவை ஆனதையும் ஒருகாலும் மன்னிக்கமாட்டான். கம்சனின் ராணிகள் ஆன அஸ்தி, ப்ரப்தி இருவரும் எப்போது நம் பக்கம் பாய்வார்கள் தங்கள் தகப்பனின் துணையோடு என்பதையும் அறியமுடியவில்லை. கம்சன் நம்மிடம் எப்படி இருந்தாலும் அந்தப் பெண்களிடம் ஒரு நல்ல கணவனாகவே நடந்து கொண்டிருக்கிறான். அந்தப் பெண்களின் துயரம் சகிக்க முடியவில்லை. எப்போது யார் என்ன சொல்வார்கள், செய்வார்கள் எனக் கணிக்கமுடியாமல் இருக்கிறது.” என்று வருத்தத்தோடே சொன்னான்.

வசுதேவர் யோசனையோடேயே சொன்னார்.”நம்மிடையே மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும். அந்த முடிவை விரைவிலும் எடுக்கவேண்டும்.” என்றார். மேலும் ப்ரத்யோதா, “அரசரான உக்ரசேனர் மிகவும் பலஹீனமாய் உள்ளார். மனதளவில் மட்டுமல்லாமல் பல வருடங்கள் சிறை வாசத்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப் பட்டுள்ளார். என்னதான் கம்சன் மிகக் கொடூரமானவன் என்றாலும் அவரின் ஒரே மகன் கொல்லப் பட்டிருக்கிறான். அதனால் அவரால் இப்போது நிர்வாகம் செய்யமுடியுமா சந்தேகமே. நம்மில் வேறு யாராவது தலைமைப் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ளவேண்டும். “ ப்ரத்யோதாவின் இந்தப் பேச்சைக் கேட்ட மற்ற யாதவத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் மனதிற்குள் தானே தலைவனாகும் எண்ணமே ப்ரத்யோதாவிற்கு இருக்கிறதோ எனத் தோன்றியது. அதில் எவருக்கும் சம்மதமும் இல்லை. இப்படி எல்லாம் பேசி நம்மை மனம் மாறச் செய்கிறானோ என்ற எண்ணமும் மேலோங்கியது. “இப்போது என்ன அவசரம், தலைவனுக்கு?? இப்போ இருக்கிறபடியே இருந்தால் ஒண்ணும் தப்பில்லை.” என்றார் ஒரு தலைவர் அவசரம் அவசரமாய். இன்னொருவர், “இந்த மாதிரியான இக்கட்டான சமயத்தில் தேர்ந்தெடுப்பது சரியும் இல்லை. அவசரம் வேண்டாம்.” என்றார்.

வசுதேவருக்கோ ப்ரத்யோதா சொல்வதே சரியெனப் பட்டது. உடனடியாக நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும், முடிவுகளை விவேகத்துடன் எடுக்கும் ஒரு தலைவனுக்கு இப்போது தேவை என்பதை அவர் உணர்ந்தார். ப்ரத்யோதாவை ஆமோதித்தார். கர்காசாரியாரும் ப்ரத்யோதாவும், வசுதேவரும் சொல்வது சரி என்றார். அப்படி எனில் வசுதேவரே பொறுப்பை வகிப்பது சரி எனப் ப்ரத்யோதா சொல்ல, வசுதேவரோ தன்னால் முடியாது என்று திட்டவட்டமாய் மறுத்தார். “நான் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கவலையுடனும், துக்கத்துடனும், மனப்போராட்டத்துடனும் கழித்துவிட்டேன். எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாமல் தனிப்பட்ட வாழ்க்கை என்னை அலைக்கழித்துவிட்டது. ஆகவே நான் இதற்குத் தகுதியானவனே அல்ல. இந்த மாபெரும் பொறுப்பு எனக்கொரு சுமையாகவே தென்படுகிறது.” என்று சொன்னார். ஆனால் யார் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் அவருக்குத் தன்னுடைய மனமார்ந்த ஒத்துழைப்பை நல்குவதாயும் தெரிவித்தார். மீண்டும் ப்ரத்யோதாவின் மேலேயே அனைவருக்கும் சந்தேகம். இப்படி எல்லாம் விஷயத்தை மாற்றி மாற்றிப் பேசிக் கடைசியில் இவன் தலைவன் ஆகப் பார்க்கிறானோ? ம்ம்ம்ம்ம் என்னதான் இந்த மதுராவை இவன் காவல் காத்து வந்தாலும், நல்லதொரு தளபதியாகப் போர்களில் பங்கு பெற்றிருந்தாலும், திறமையானவனாக இருந்தாலும் இவனா நமக்குத் தலைவன்??? ஆஹா, இது நடக்கவே கூடாது.

அப்போது கிருஷ்ணனும், பலராமனும் அங்கே வந்து சேர்ந்தனர். தங்கள் தகப்பனுக்கு இருபக்கமும் இருவரும் அமர்ந்தனர். காணக்கிடைக்காத கண்கொள்ளாக்காட்சியாக அது அமைந்தது. இருவரையும் அந்த சபையில் இருந்த அனைவருமே வயது வித்தியாசமே பார்க்காமல் வணங்கி வரவேற்றனர். அதிலும் கிருஷ்ணன் வெறும் பதினாறு வயது நிரம்பாத பாலகன் இல்லை அவர்கள் கண்களுக்கு அவனே பாதுகாவலன், ரக்ஷகன், மீட்பன், இன்னும் என்னவெல்லாமோ!

வசுதேவர் அவர்களைப் பார்த்து, “எங்கே போய்விட்டீர்கள் இருவரும்? உள்ளே வந்தால் உங்களைக் காணோமே? உங்களுக்காகக் காத்திருந்தோம்.” என்றார். “தந்தையே, அன்னையைக் கொண்டு வந்து உள்ளே அந்தப்புரத்தில் விட்டுவிட்டு அவர்களைச் சமாதானம் செய்துவிட்டுக் கம்சன் மாமாவின் உடல் அவருடைய மாளிகைக்கு வந்து சேர்ந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு வந்தேன்.” என்றான் கண்ணன். “ஆஹா, கண்ணா, வாசுதேவா, உனக்கு எங்கள் வந்தனங்கள் உரித்தாகுக! செயற்கரிய அரிய செயலைச் செய்துமுடித்திருக்கிறாய் நீ!” என்றனர் அங்கிருந்த சில தலைவர்கள். “உண்மைதான், பெரியோர்களே, ஆனால் என் மனம் என்னமோ அதனால் மகிழ்வுறவில்லை. “ கண்ணனின் குரல் அவனையும் அறியாமல் தழுதழுத்தது. “அதிலும் இப்போது கம்சனின் மாளிகைக்குச் சென்றபோது இரு ராணிகளும் அலறித்துடிப்பதைக் கண்டதில் இருந்து மனம் துடிக்கிறது. என்னால் அதைக் காது கொண்டு கேட்கமுடியவில்லை. என்னுடைய மாமாவான கம்சன் ஒரு நல்ல அன்பான கணவனாக இருவரிடமும் இருந்திருக்கிறார். அதுதான் இரு ராணிகளும் மனம் உடைந்து அழுகின்றனர்.” கண்ணன் கண்களிலும் கண்ணீர் மழை இப்போது. சிலருக்கு இது ஆச்சரியமாகவே இருந்தது. கண்ணனுக்கு மன உறுதி இருக்கும் என நினைத்தோமே? ஒரு தலைவனாக அவன் செயலாற்றி இருக்கிறான் என எண்ணினோமே? இவ்வளவு பலஹீன மனம் படைத்தவனா கண்ணன்?? ம்ம்ம்ம்??/ இவன் எவ்வாறு நம் நாயகனாக ஆகமுடியும்??? குழப்பமே மிகுந்தது அனைவருக்குள்ளும்.

எதையும் கவனிக்காமல் கண்ணன் மேலும் தொடர்ந்தான்.”இனிமேல் அவர்களின் வாழ்க்கை இங்கே எவ்விதம் நடைபெறும்??? அவர்களுக்குத் துக்கமே மிகுந்திருக்கும். ஆனால் வேறு என்ன செய்யமுடியும் என்னால்?? மாமாவின் கொடூரமான நடத்தைக்கு வேண்டிய பலனையே அவர் அறுவடை செய்துள்ளார். வினை விதைத்தவன் வினையைத் தானே அறுப்பான்??? கடவுளின் விருப்பமும் அதுவே. “ என்றான் கண்ணன். மேலும் கண்ணன் பேசும் முன்னர் அக்ரூரர் அங்கே வந்தார். அவரோடு கம்சனின் தந்தையும், பல வருடச் சிறை வாசம் செய்தவரும் ஆன வயது முதிர்ந்த உக்ரசேனரும் வந்தார். அவரோடு சிறையில் இருந்த அந்தகர்களின் இன்னொரு தலைவன் ஆன வஜ்ராந்தகனும் கூடவே வந்தான். உக்ரசேனரைப் போல் வயதான இவனும் மூன்று நாட்கள் முன்பு தான் கம்சனை எதிர்த்துப் பேசியதற்காக வ்ருதிர்கனனால் கடும் தண்டனை அளிக்கப் பட்டு அதன் காயங்கள் ஆறாத நிலைமையில் உடல் பூராக்கட்டுகளோடு வந்திருந்தான். அனைவரும் எழுந்து நின்று அக்ரூரருக்கும், உக்ரசேனருக்கும் மரியாதை செய்தனர். வசுதேவரின் அருகே போடப் பட்டிருந்த சிங்காதனத்தில் உக்ரசேனர் அமர, அக்ரூரரும் , வஜ்ராந்தகனும் வசுதேவருக்கும் உக்ரசேனருக்கும் இடையே அமர்ந்தனர்.

அனைவரும் நடந்த விஷயங்களையும், அவரவருக்குத் தெரிந்த கோணங்களில் பேசி விவாதிக்க ஆரம்பித்தனர். உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்னைகளும் விவாதிக்கப் பட்டன. மதுராவைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தே அனைத்திலும் பெரியதாகத் தெரிந்தது. நேரம் போய்க் கொண்டே இருந்தது. மந்திராலோசனை முடிவடையவில்லை. எந்த முடிவும் எட்டப் படவில்லை. அனைவருக்கும் நிலைமை மிகவும் கவலைக்கிடம் எனப் புரிந்தது. கடைசியில் உக்ரசேனரே ஒரு முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார். “கூடியிருக்கும் யாதவகுல ரத்தினங்களே, நான் அனைத்தையும் நன்கு கேட்டுக் கொண்டேன். ப்ரத்யோதா சொல்லுவதில் உண்மை உள்ளது. அவன் சொல்வது போல் பலம் பொருந்திய விவேகம் நிரம்பிய ஒரு இளைஞனே நமது தலைவனாக இருக்கவேண்டிய சமயம் இது. நம்மில் ஒருவர் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும். உங்கள் அனைவருடைய கருத்தையும் நான் கேட்டுக் கொண்டுவிட்டேன். நானோ வயதானவன், பல வருடங்கள் செய்த சிறைவாசத்தால் இவ்வுலகத்தோடு தொடர்புஅற்றுப் போய் எதுவுமே தெரியாமல் இருக்கிறேன். மேலும் உடல்ரீதியாகவோ, உள்ள ரீதியாகவோ பலமிழந்தும் இருக்கிறேன். எனக்கும் ஒரு மகன் இருந்தான்.” உக்ரசேனரின் குரல் தழுதழுக்க, “என் ஒரே மகன், இந்தப் பட்டத்துக்கு உரியவன், கம்சன், அவன் இப்போது இல்லை, நான் மகனை இழந்தவன்.” தன் கண்களில் இருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே உக்ரசேனர் மேலும், “ஆகையால் நான் கிருஷ்ண வாசுதேவனை என் மகனாக ஏற்றுக் கொண்டு அவனையே உங்கள் தலைவனாகவும் ஏற்றுக் கொள்ளும்படிப் பிரார்த்திக்கிறேன்.”

Saturday, December 26, 2009

மறுபடியும் வந்துடுச்சு பிரசவத்துக்கு!

என்னடா இதுனு நினைக்காதீங்க. கொஞ்ச நாட்களாவே, மாசங்களா?? ஆமாம், கிட்டத் தட்ட ஒரு வருஷமாக் காணவே காணோம். வரவே இல்லை. அப்பு வந்திருந்தப்போ அதுக்குக் காட்டணுமேனு நினைச்சேன். ஒரே ஒருநாள் வந்ததுதான். அப்புவுக்குக் காட்டினேன். அதுக்கப்புறமா வரவே இல்லை. சரிதான், திருந்திடுச்சு, ஒழுங்காக் கணவனோட குடித்தனம் பண்ணறதுனு நினைச்சேன். கொஞ்சநாட்கள் முன்னாலே பார்த்தா ஒரே சண்டை, சச்சரவு, வீட்டில் உட்காரமுடியலை, ராத்திரி தூங்க முடியலை, அவ்வளவு சத்தம், சண்டை,கத்தல். ரொம்பக்கவலையாப் போச்சு. ஆனால் வந்திருக்கிறது யாருனும் தெரியலை. சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்டுட்டு இருந்தது.

இன்னிக்குப் பாருங்க காலம்பர எழுந்துக்கறச்சேயே மனசுக்கு சந்தோஷமா இருந்தது. என்னோட கால்வலி, அதனால் விளைந்த வயித்து வலி எல்லாத்தையும் மறக்கடிக்கறாப்போல் பக்ஷிகளின் கூச்சல், ரொம்ப சந்தோஷமா. அதிலும் அணில் இருக்கே வாலைத் தூக்கிண்டு தென்னை மரத்திலே நட்ட நடுவிலே உட்கார்ந்துண்டு, வெடுக், வெடுக், வெடுக் னு கத்திண்டு இருந்தது. ஒரு படம் எடுத்துடலாம்னு நினைச்சேன். காமிராவை எடுத்துண்டு வரதுக்குள்ளே ஓடிப் போயிருக்கு. என்னடானு பார்த்தா எல்லாப் பறவைகளும் மறுபடி கூச்சல். இம்முறை பயம் கலந்த கூச்சல், குழப்பம். அடப் பாவமே, எதுக்கானும் அடிபட்டிருக்கோ, நேத்திக்குக் காக்காய்க்குவச்ச சாதத்தைச் சாப்பிட்டுட்டு இருந்த குயில்குஞ்சை காக்காயெல்லாம் சேர்ந்து விரட்டிட்டு இருந்ததே?? இப்போ அதானா??? இருக்காதே?? காலம்பர ஏழு மணி தான், இன்னும் சமைக்கவே ஆரம்பிக்கலையே???

அதுக்குள்ளே கொல்லைக்கிணற்றடியிலே இருந்து கூப்பாடு. போய்ப்பார்த்தா, கண்ணில் உசிரை வச்சிண்டு, வயிற்றிலே சுமையோடு நின்னுட்டு இருக்கு. சாப்பிட்டு எத்தனை நாளாச்சோ தெரியலை! சாப்பாடு வேணுமாம். இந்த மாதிரி அநியாயமும் உண்டா? போனமுறை பிரசவம் பார்க்கும்போதே இதான் கடைசினு சொல்லி அனுப்பி இருந்தேன். சரினு ஒரு வருஷம் தொல்லை இல்லையேனு பார்த்தா, இப்போ இப்படி எனக்கு உடம்பு முடியாதப்போ வந்து நிக்குதே? இனிமே இதுக்கு நான் பிரசவம் பார்த்து, பத்தியம் வடிச்சுப் போட்டு, மருந்து கிளறிக் கொடுத்து!!!!!!! என்னத்தைச் சொல்றது போங்க! அப்புறமாக் குளிச்சுச் சமைச்சுச் சாப்பாடு போட்டேன்னு வச்சுக்குங்க! அப்புறமும் போகலை, காலைக்காலைச் சுத்துது. இத்தனை நாள் எங்கே போச்சு இந்தப் பாசமும் உருகலும், தெரியலை. அங்கேயே போய்க்கவேண்டியது தானே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

யாருனு கண்டு பிடிச்சு எழுதற சிஷ்ய(கே)கோடிங்க பதிவிலே இலவசமா என் சார்பிலே யார் வேணாலும் பின்னூட்டம் போடலாம்.

Thursday, December 24, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - இரண்டாம் பாகம்

தேவகியின் பிள்ளை!


உலகமே ஸ்தம்பித்து நின்றாற்போல் நின்றனர் மதுராவின் மக்கள். ஒருவாறு சமாளித்துக் கொண்டு பார்த்தால் கம்சன் கொல்லப் பட்டது உண்மையே. இதோ அவர்களின் ரக்ஷகன்! கடைசியில் வந்தே விட்டான். நாரதர் சொன்னது சரியாகிவிட்டதே? மக்கள் இனம் புரியாத மகிழ்வில் குதித்தனர். ஆடிப் பாடினர். ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டார்கள். சிலர் கண்ணனைக் கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்ல முயன்றனர். ஆனால் அங்கே இருந்த மகத வீரர்களோ??? முதலில் திகைத்தாலும் பின்னர் சமாளித்துக் கொண்டனர். ஆஹா, அவர்கள் நாட்டுச் சக்கரவர்த்தியின் மாப்பிள்ளையும், சக்கரவர்த்தியான ஜராசந்தனின் பிரியத்துக்கு உகந்தவனும் ஆன கம்சன், யாதவர்களின் தலைவன் கொல்லப் பட்டுவிட்டான். அதுவும் ஒரு சிறுவனால். இதோ ப்ரத்யோதா, இன்று வரையிலும் கம்சனுக்கு விஸ்வாசமிக்கவனாய்க் கருதப் பட்டான். என்ன காரியம் செய்துவிட்டான்? நம் தளபதி வ்ருதிர்கனனைக் கொன்றுவிட்டானே?? யாதவத் தலைவர்கள் மேல் ஆத்திரத்துடன் பாய்ந்தனர் மகத வீரர்கள். இன்னும் ஒரு நிமிஷம் சென்றிருந்தாலும் இருநாடுகளுக்கு இடையேயான மாபெரும் யுத்தமாக மாறி இருக்கும். ஆனால் அதோ அது யார்? அட, நம் பலராமன் தான்.

பலம் பொருந்தியதொரு அரக்கனைப் போல் காட்சி அளித்த அந்த இளைஞன், தற்சமயம் யாதவர்களுக்குத் தலைவனைப் போல் மாறிவிட்டிருந்தான். சண்டையிட ஆரம்பித்த மகத நாட்டு வீரர்களுக்கும், யாதவர்களுக்கும் இடையே சென்று தன் முட்கள் நிரம்பிய கதையைச் சுழற்றிக் கொண்டே ஆத்திரம் அடங்காமல் மகதவீரர்களைப் பார்த்து, “எவனாவது தன் ஆயுதத்தைத் தூக்கினால் இந்த என் கதையால் ஒரே போடுதான்!” என்று சொன்னான். அவன் குரலும் உச்சரிப்பின் அழுத்தமும் அவன் சொன்னதைச் செய்வான் என்று காட்டியது. அனைவரும் அவன் ஆணைக்குக் கீழ்ப்படிந்தனர். அனைவரது ஆயுதங்களும் கீழே வீசி எறியப் பட்டன. இவ்வளவில் வசுதேவர் அக்ரூரரைக் கலந்து ஆலோசித்தார். ப்ரத்யோதாவும் சேர்ந்து கொண்டான். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில் வெளி நாடுகளில் இருந்து வந்திருந்த அரச விருந்தினர்களை அவர்களின் இருப்பிடம் கொண்டு செல்லும் வேலையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும், மாளிகையின் பொறுப்பையும் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னான். அவ்வாறே வந்திருந்த விருந்தினரைச் சமாதானம் செய்து அனைவரையும் அவரவர் இடத்தில் கொண்டு சேர்த்தான். அக்ரூரரோ கம்சனின் உடலை மாளிகையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். கூட்டம் கலைய ஆரம்பித்தது. அனைவரும் ஜெயஸ்ரீ கிருஷ்ணா என முழங்கிக் கொண்டே கண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லிய வண்ணம் சென்றனர். சிலர் கண்ணனின் கால்களில் விழுந்தும் வணங்கினார்கள்.

அவர்களின் உற்சாகத்தைப் பார்த்த கண்ணனோ கம்சனின் ரத்தம் தோய்ந்த தன் கைகளை உயர்த்தி மக்களைப் பார்த்து, கொண்டாட்டங்களுக்கு இது சமயம் இல்லை, அனைவரும் அமைதியாகக்கலைந்து செல்லுங்கள் என்றான். என்ன ஆச்சரியம்??? அனைவரும் கண்ணன் சொல்படியே நடந்து கொண்டனர். கண்ணனோ நந்தனைத் தேடிச் சென்றான். என்னதான் வசுதேவனின் மகன் தான் என்பது தெரிந்திருந்தாலும் தன்னை வளர்த்த நந்தனைக் கண்ணனால் ஒதுக்க முடியவில்லை. நந்தன் இருக்குமிடம் தேடிச் சென்று, அவனை நமஸ்கரித்து, “தந்தையே, நான் செய்த இந்தக் காரியத்திற்காக என்னை மன்னிப்பீர்களா? ஆனால் எனக்கு வேறு வழியே தெரியவில்லை.” என்று மிகப் பணிவோடும், உருக்கத்தோடும் சொன்னான். “குழந்தாய், என் அருமைக் குழந்தாய், “ நந்தனால் மேற்கொண்டு பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. குரல் தழுதழுக்க அவன், “நூறாண்டு வாழ்வாய் அப்பா” என வாழ்த்தினான் தன் அருமைப்பிள்ளையை.

உத்தவனிடமிருந்து தன் துணிமணிகளை வாங்கிக் கொண்ட கண்ணன் நந்தனைப் பார்த்து, “தந்தையே, தாங்கள் கூடாரத்திற்குச் செல்லுங்கள். நான் அரண்மனைக்குச் சென்று பார்த்துவிட்டு, கம்சனின் உடல் தகனம் செய்யப் பட்டதும் வந்துவிடுகிறேன்.” என்றான். கண்ணன் அரண்மனைக்குச் செல்லத் திரும்பினான்.

கண்ணனுக்காக அங்கே காத்திருந்தது??? வேறு யார்? தேவகியே தான். அவள் பிள்ளை, அவளுடைய எட்டாவது பிள்ளை, அவள் குலத்தைக்காக்கவெனவேப் பிறப்பெடுத்த பிள்ளை அதோ நிற்கின்றான் வளர்ப்புத் தந்தையிடம் பேசிக் கொண்டே. எத்துணை உரிமையாகவும், அன்பாகவும் பேசுகிறான்? என்னிடமும் இப்படிப் பேசுவானா? ஆஹா, அவன் பிறந்த அந்த நிமிடம்??ம்ம்ம்ம் எனக்கு இன்னும் அது மட்டும் நினைவில் இருக்கு. அப்புறம்தான் அவனைக் கொண்டு போய்விட்டனரே?? என்ன ஒரு அழகான குழந்தை?? ஒரு நிமிஷம் தான் கண்ணாரக் காண முடிந்தது. அடடா???? அந்த யசோதைதான் என்ன பாக்கியம் செய்திருக்கிறாள்? இவனின் ஒவ்வொரு விளையாட்டையும், ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நிமிஷமும் கண்டு களித்திருப்பாளே? முகம் பார்த்துச் சிரித்துக் கண்களால் பேசி இருப்பானே? குப்புற விழமுடியாமல் அழுதிருப்பானோ? ம்ம்ம்ம் நான் பக்கத்தில் இருந்தேன் என்றால் குப்புறத்தி விட்டிருப்பேனே! பாவம் குழந்தை குப்புறத்திக்கும்போது முகவாயில் அடி பட்டிருக்குமோ?? தவழ்ந்து செல்லும்போது மரங்களைச் சாய்த்தானாமே? மரங்கள் மேலே விழுந்திருந்தால்??? ப்ரத்யோதாவின் மனைவியான பூதனை கூட இவனைப் பார்த்து மனசு மாறிவிட்டாளாமே? இவனை பார்த்தால் யார் தான் மனம் மாற மாட்டார்கள்?? அந்த நிமிடத்தில் தேவகி கண்ணனைத் தான் வயிற்றில் தாங்கியதில் இருந்து பெற்ற வரையிலும் இருந்த அத்தனை இன்ப, துன்பங்களையும் மீண்டும் அநுபவித்தாள்.

திருமணம் நடந்த இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் துன்பம், துன்பம், துன்பம். துன்பம் மட்டுமே. வேறு எதையும் காணமுடியவில்லை. அடுத்தடுத்து ஆறு குழந்தைகள் அண்ணனான கம்சனால் கொல்லப் பட்டனவே? அந்தக் குழந்தைகள் எப்படித் துடித்திருக்கும்?? இதோ கதையைச் சுற்றிக் கொண்டு சம்ஹாரத்துக்குக் காத்திருக்கானே, ஏழாவது பிள்ளை, இந்த ஏழாவது குழந்தை பலராமன், பிறக்கும்போதே ஒரு வயதுக் குழந்தை போலப் பெரிய குழந்தை. அப்பப்பா, இவனை வெளியே எடுப்பதற்குள் என்ன பாடு?? அரண்மனை வாசிகளுக்குத் தெரியாமல் வெளியே எடுத்து கோகுலத்துக்கும் அனுப்பி இந்த எட்டாவது பிள்ளைக்குத் தோழன் வேண்டுமென அதற்கும் ஏற்பாடுகள் செய்து?? எல்லாம் எதற்காக?? இந்த ஒரு நாளுக்காகவன்றோ? ஆனால், ஆனால் இது நடந்து முடியும் வரையில் நான் பட்ட பாடு, தவித்த தவிப்பு. நான் பெற்றெடுத்த இந்தக் குழந்தைகள் வளர்வதைக் கண்ணால் கூடக் காணமுடியாமல் தவித்த தவிப்புக்கு இன்றுதான் முடிவு வந்திருக்கிறது. அதிலும் கண்ணன் மதுராவுக்கு வந்துவிட்டான் எனத் தெரிந்ததில் இருந்தே அவனைக் காண ஆவலுடம் காத்திருந்தேன். ஆனால் அவன் வாவில்லை. என்னவோ என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கர்காசாரியார் வந்தார். கம்சனைக் கொன்று முடிக்காமல் தாயைக் காண விரும்பவில்லை கண்ணன் என்னும் செய்தியைச் சொன்னார். என் குழந்தைக்குத் தான் எவ்வளவு உறுதி?? மேலும் கர்காசாரியார் கண்ணன் இப்போது அரண்மனைப்பக்கம் வருவது அவன் உயிருக்கே ஆபத்து என்றும் சொன்னார்.

அதுக்காகப் பேசாமல் இருந்தாச்சு. இங்கே இந்தச் சண்டையைக் காண வந்தால் இந்தச் சாணுரன் கண்ணனைக் கொன்றே விடுவான் போல் அல்லவோ இருந்தது? ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் இப்போது சேர்ந்திருப்பது இந்தக் கண்ணனுக்காகவன்றோ? நாம் செய்த சபதத்துக்காகவன்றோ? கண்ணனுக்கு ஏதேனும் நேர்ந்தால் நாமும் தீக்குளிப்பதாய்ச் சொன்னோமல்லவா? அதனால் அல்லவோ இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து கம்சனை எதிர்க்கக் கிளம்பி உள்ளார்கள்? என் இறைவா, அது நடக்கவேண்டுமே? சாணுரன் கண்ணனைக் கீழே வீழ்த்திக் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்தபோது அதைக் காணச் சகிக்காமல் தேவகி அந்த இடத்தில் இருந்து சென்றாள். பின்னர் அவளுக்குச் செய்தி கொண்டு வந்த பெண் சொன்னாள் கம்சனைக் கண்ணன் கொன்றுவிட்டதாய். ஓட்டமாய் ஓடி வந்தாள் தேவகி அந்த உப்பரிகையில் நின்று அந்த அரங்கினுள் கண்ணன் இருக்குமிடம் தேடினாள். அதோ கண்ணன், தன் வளர்ப்புத் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கிறான். இது என்ன நந்தன் கிளம்புகிறானே? கண்ணனும் அவனோடே சென்றுவிடுவானோ? அவனைக் கூப்பிடலாம். கண்ணா, என் கண்ணா, என் செல்வமே, என் குழந்தையே, தேவகிக்கு வாய் திறந்து திறந்து மூடியது. பேச்சு வரவில்லை. அவள் நெஞ்சை இத்தனை வருஷத்துத் துக்கமும் சேர்ந்து கொண்டு ஒரு மலைபோல் அமர்ந்து கொண்டு நசுக்கிக் கொண்டிருந்தது. அந்த மலை நகன்றால் அல்லவோ அவளால் பேச முடியும்???

கண்களிலிருந்து தாரையாகக் கண்ணீர் கொட்டத் தன்னிரு கைகளையும் நீட்டிய வண்ணம் பேச முடியாமல் தவித்த தேவகி கண்ணன் இருக்குமிடம் பார்த்தவண்ணம் நின்றாள். கண்ணன் தகப்பனிடம் பேசிவிட்டுத் திரும்பியவன் உப்பரிகையில் நின்ற தேவகியைக் கண்டான். ஆஹா, இது என்ன அவள் பிள்ளை அவளை அடையாளம் கண்டு கொண்டானா? இதோ சிரிக்கின்றானே அவளைக் கண்டு?? அவள் கனவில் கூட ஒரு முறை இம்மாதிரிக் கண்ணன் சிரித்திருக்கிறான் அல்லவோ?? இதோ அடுத்த அடியில் அவளிடம் கண்ணன் வந்துவிடுவான். இதோ அவளிடம் வந்தே விட்டான்.

தேவகியின் பார்வையைப் பொங்கி வந்த கண்ணீர்ப் பிரவாகம் மறைத்தது.

Tuesday, December 22, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், ஜயஸ்ரீ கிருஷ்ணா தொடருவான்!

இயக்கமே நின்றுவிட்டது. அனைவரும் செய்வதறியாது திகைத்துச் சிலையாக நின்றனர். மகத வீரர்கள் சண்டைபோட்ட நிலையிலேயே நின்றனர். அவர்களை வீழ்த்த முயன்ற யாதவத் தலைவர்களின் கைகளும் வாட்களை ஓங்கிய நிலையிலேயே நின்றுவிட்டிருந்தன. பலராமனால் சூழப் பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த வசுதேவருக்கோ நடந்தது நனவிலா அல்லது தம் கனவா என்ற சந்தேகம் மனதைத் துளைத்தது. அனைவரிலும் பரிபூரண பிரக்ஞையோடு இருந்தது கண்ணனும், பலராமனும் மட்டுமே. அனைவருமே ஓங்கிய வாளோடு கண்ணனையும், அவனருகே வெட்டப் பட்டிருந்த கம்சனின் தலையையும் கண்டனர். சங்கை முழக்கிக் கொண்டிருந்த கண்ணனையும் கண்டனர். உயிர்பெற்றெழுந்தாற்போல் மக்கள் கூட்டம் கண்ணனிடம் பாய்ந்தது. கண்ணன் தன் கை வாளைத் தூக்கி எறிந்தான். ஓடினான் தன்னைப் பெற்ற தந்தையிடம். இரு கைகளையும் கூப்பியவண்ணம் கீழே விழுந்து வணங்கினான் தந்தையை. மிகப் பணிவோடும், வணக்கத்தோடும், “தந்தையே, என்னை ஆசீர்வதியுங்கள்” என்றான். வசுதேவருக்கோ அழுகை அடங்காமல் பொங்கி வந்தது. செய்வதறியாமல் நின்றவர் தன் மகனை இரு கைகளாலும் தூக்கிக் கட்டி அணைத்தார். அவரை அறியாமல் வாய்விட்டுச் சத்தம் போட்டுப் பெரியதாய் அழுதார். ஆஹா, இந்த மகனுக்காகவன்றோ இத்தனையையும் பொறுத்துக் கொண்டு, இவன் ஒருநாள் வருவான், நம் கனவைப் பூர்த்தி செய்வான் எனக் காத்திருந்தோம்?? ஆஹா அவன் வந்தும் விட்டான், நம் கனவும் நனவாயிற்றே? தீர்க்கதரிசனம் உண்மையாகிவிட்டது. அழுதவண்ணமே வசுதேவர் தன் மகனின் தோள்களில் சாய்ந்தார். மகன் தந்தையைத் தேற்றினான்.

இத்துடன் கண்ணன் கதையின் முதல் பாகமும், அவனின் சிறு வயதுக் கொட்டங்களும் முடிந்தன. இனி கண்ணனை நாம் ஒரு இளவரசனாக அரச மரியாதைகளுடனும், அரச உடைகளுடனும் காணப் போகிறோம். அவன் வாழ்க்கைப் பாதையின் திசைகள் மாறப் போகின்றன. அவனுக்கு அளிக்கப்போகும் அரசுப் பதவியை அவன் மறுக்கப் போகிறான். அவன் வாழ்வின் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் பெண்களைச் சந்திக்கப் போகின்றான். அவர்களுக்கு அவன் கொடுக்கும் வாக்குறுதிகள், அவர்களுடனான உறவின் உண்மைகள், அவற்றின் விளைவாய் ஏற்படப் போகும் அரசுரிமைப் போர்கள் என அனைத்தையும் பார்க்கப் போகிறோம். நம் கதாநாயகன் கண்ணன் மட்டுமே. அவன் அத்தையான குந்தியின் மகன்களுக்காக அவன் செய்யப் போகும் உதவிகள், தியாகங்கள், அவர்களின் மண வாழ்க்கையில் கண்ணன் வகிக்கும் பங்கு என அனைத்துமே பார்க்கப் போகிறோம். இனி வரப் போகும் பாகத்தில் குருவிற்குக்கண்ணன் அளிக்கப் போகும் குரு தக்ஷணையும், பாஞ்சஜன்யம் அவனுக்குக் கிடைக்கப் போகும் விதம், மேலும் ஒரு நாட்டின் மொத்தக் குடிமக்களும் உலகிலேயே முதல்முறையாக சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறுவது, (The Exodus) ருக்மிணிக்குக் கொடுத்த வாக்கின்படி அவளைக் காக்க எடுக்கும் முயற்சியும் பார்க்கலாம்.

முதல் பாகம் முடிந்தது!

Monday, December 21, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சன் அழிந்தான்!

பலராமன் விட்ட குத்தின் வேகம் தாங்காமல் திணறிக்கொண்டிருந்த முஷ்திகனை பலராமன் மேலும் வேகமாய்த் தாக்கினான். அவன் கிருஷ்ணனைப் போல் தன் தலை அலங்காரங்கள் எல்லாம் எடுக்கும் வரையில் காத்திருக்கவில்லை. முஷ்திகனின் அழைப்பில் இருந்த கேலி அவனைப் பொங்கி எழச் செய்தது. முஷ்திகன் மேல் பாய்ந்த பலராமனை முஷ்திகனும் தன்னிரு கரங்களால் தடுக்க முயல இருவருடைய கைகளும் இணைந்து ஒன்றை ஒன்று முறுக்கிக் கொள்ள, உடல்களாலும், இருவரும் யுத்தம் செய்ய ஆரம்பித்தனர். ஒருவர் மேல் இன்னொருவர் விழுந்து புரண்டு ஒருவர் உடலால் மற்றவர் உடலைப் பூட்டி எழுந்திருக்கவிடாமல் செய்து மாறி மாறித் தரையில் உருண்டு கொண்டிருந்தனர். கூடி இருந்த மக்கள் கூட்டமோ இருவரையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது. நடு நடுவே, “சாது! சாது!” எனக் கோஷமிட்டனர்.

கிருஷ்ணன் அரங்கினுள் நுழைந்துவிட்டான். அவன் கண்கள் சாணுரனை அளவெடுத்துக் கொண்டிருந்தன. அவன் கால்கள் மெல்ல மெல்லப் பின் வாங்கி அரச விருந்தினர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கித் தன்னை இட்டுச் செல்ல முயல்வதையும் கண்டு கொண்டான். மேலும் சாணுரனின் இருகால்களின் ஒன்றிற்கு ஏதோ அடி பட்டிருக்கவேண்டும். அந்தக் காலை வலுவோடு ஊன்ற முடியவில்லை அவனுக்கு. இதையும் கண்ணன் கவனித்துக் குறித்துக் கொண்டான். பசியோடிருக்கும் மலைப்பாம்பு தனக்கு இரை கிடைத்ததும் எப்படி ஆவலுடன் விழுங்கக் காத்திருக்குமோ அப்படிக் காத்திருந்தான் சாணுரன் கண்ணனுக்காக. சாணுரனின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முயன்று கொண்டே அவனைத் தன்னுடைய மல்யுத்தப் பிடிகளில் ஒன்றால் கட்ட முயன்று கொண்டிருந்தான் கண்ணன். மெல்ல மெல்லத் தன்னை அரச விருந்தினரில் முக்கியமானவர் அமரும் இடம் நோக்கி அழைத்து வந்திருப்பதையும் உணர்ந்து கொண்டான். சாணுரனின் ஒவ்வொரு பிடியையும் கண்ணன் தவிர்த்துக் கொண்டு வந்தான். சாணுரனோ கண்ணன் ஒரு ஆரம்பப் பயிற்சியாளன் என்ற அசட்டையிலேயே இருந்தான். ஆகவே கண்ணனின் புத்திசாலித் தனமான சில பிடிகளில் அவன் ஆச்சரியமடைந்தான். மெல்ல மெல்ல இருவரும் கம்சனுக்கு நேர் எதிரே வந்துவிட்டனர்.

கண்ணனைத் தன் வலுவான பிடியால் கட்டவேண்டும் என்ற ஆத்திரத்துடன் வந்தான் சாணுரன். கண்ணன் மேல் ஆக்ரோஷமாய்ப் பாய்ந்தான். ஆனால் கண்ணனோ அவனைவிட வேகமாய் நகர்ந்ததோடு அல்லாமல், நகரும்போதே சாணுரனின் இடக்காலை நோக்கி ஓங்கி ஓர் உதையும் கொடுத்தான். கண்ணன் நினனத்தது சரியே. சாணுரனின் அந்தக் கால் தான் சற்று பலவீனமானது. அவன் தடுமாற ஆரம்பித்தான். மேலும் கண்ணன் அந்தக் காலை நோக்கித் தாக்குவான் என்றும் எதிர்பாராமல் சாணுரன் அவன் பெருத்த உடலை நிலை நிறுத்த முடியாமல் கீழே விழுந்தான். ஆனால் சட்டெனத் தன் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு சமாளித்துக் கொண்டான். சாணுரனின் இந்தத் தவிப்பைப் பார்த்து அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது. மேலும் இந்த எதிர்பாராத் தாக்குதல்களால் களைப்பும் அடைந்தான் சாணுரன். ஏற்கெனவே தன் சக்தியை அவன் இழந்திருந்தான். ஆனால் கண்ணனோ புத்தம்புதியவனாய் முழு சக்தியோடும், உற்சாகத்தோடும் சாணுரனுக்குக் காத்திருந்தான். இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது பலராமனால் முஷ்திகன் தூக்கி எறியப் பட்டான். அவன் விழுந்த வேகத்தில் மண்டை உடைந்திருக்குமோ எனச் சந்தேகம் கொள்ளும்படி இருந்தது. மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உற்சாகக் கூச்சல் இட்டனர். இளம் மங்கையரும், இளம் வாலிபரும் ஆட ஆரம்பித்தனர்.

சாணுரனுக்குக் கோபம் மிகுந்தது. ஆக்ரோஷத்தோடு கண்ணன் மேல் பாய ஆயத்தமானான். பல வருஷங்கள் பயிற்சி பெற்றிருக்கும் சாணுரனுக்குக் கண்ணனின் சாந்தமும், அமைதியான தாக்குதலும் ஆச்சரியத்தை அளித்தது. சாணுரனின் பெருத்த உடல் அவனுக்குப் பலம் என இதுநாள் வரை நினைத்திருந்தான், ஆனால் கண்ணனின் வில் போல் வளையும் உடலையும், அவன் செளகரியமாகப் போடும் பிடிகளையும் பார்த்த சாணுரனுக்குத் தன் உடலே தனக்கு பலவீனமும் எனப் புரிந்து கொண்டான். சீக்கிரத்திலேயே சாணுரன் களைத்துப் போகக் கண்ணன் புத்துயிருடன் யுத்தம் புரிந்தான். கடைசியாகச் சாணுரன் தன்னுடைய வலுவான ஆயுதமான முஷ்டியால் எதிராளியின் முகத்தில் ஓங்கிக் குத்துவதை ஆரம்பித்தான். இவ்விதம் அவன் குத்தும்போது எதிரியால் தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் கீழே விழுந்துவிடுவான். உடனே சாணுரனின் பெருத்த உடலால் அவனும் கீழே விழுந்து எதிரியைத் தன் உடலால் நசுக்கி விடுவான். அம்மாதிரி சமயங்களில் பலர் இறந்திருக்கின்றனர். இப்போது கம்சன் கேட்டிருப்பதும் அதுவே. சாணுரன் தன் பலத்தை எல்லாம் பிரயோகித்துப் பின்னால் போய் வேகமாய்த் தன் முஷ்டியை ஓங்கிக் கொண்டு கண்ணன் முகத்தில் குத்த ஓடிவந்தான். கண்ணன் முகத்தை அது உரசவே கண்ணன் கீழே விழுந்திருக்கவேண்டும். சட்டெனச் சமாளித்த கண்ணன் தன் முஷ்டிகளால் சாணுரனைத் தாக்க ஆரம்பித்தான். இருவரும் ஒரே சமயம் கீழே விழுந்தனர். ஆனால் சாணுரனின் பெருத்த உடலைத் தூக்கிக் கொண்டு அவனால் எழமுடியவில்லை. கண்ணன் எழுந்துவிட்டான். சாணுரனுக்குத் தன்னுடைய முக்கியமான தாக்குதல் பலிக்காதது கண்டு ஆத்திரம் அதிகம் ஆனது.

படுத்த நிலையிலேயே சாணுரன் தன் கைகளை நீட்டிக்க்கண்ணனுடைய குரல்வளையைப்பிடித்து இரு கைகளாலும் நெரிக்க முயன்றான். ஆனால் கண்ணனோ தப்பித்துவிட்டதோடு அல்லாமல், எழமுடியாமல் படுத்திருக்கும் சாணுரனைக் கண்டு, “நீ தோற்றுவிட்டாய், சாணுரா!” எனக் கூறிக் கொண்டே அரங்கின் மற்றொரு பக்கம் ஓடினான். என்றாலும் சாணுரன் விடாமல் மெல்ல எழுந்து கண்ணனைத் தாக்க மீண்டும் ஓடி வந்தான். கண்ணனோ இந்தப்பக்கமும், அந்தப் பக்கமும் மாறி மாறி ஓடிப் பாய்ச்சுக் காட்டினான். கண்ணனை எப்படியாவது பிடிக்கவேண்டும் என நினைத்த சாணுரனின் கைகளுக்கு அவன் தோள் கிடைத்தது. அதைப் பிடிக்க யத்தனித்தான். ஆனால் கண்ணன் தன் முஷ்டிகளால் கொடுத்த அடி சாணுரனின் கண்களில் விழுந்திருந்தது. அவனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. கண் பார்வை மறைத்தது. எப்படியாவது கண்ணனைப் பிடிக்கவேண்டும் என்ற அவன் முயற்சி பலிக்கும் முன்னேயே கண்ணன் அவன் மேல் ஒரு புலியைப் போல் பாய்ந்தான். அவனைக் கீழே தள்ளினான். கொப்பும், கிளையுமாகப் பரவிப் படர்ந்திருந்த ஒரு பெரிய மரம் ப்யல் காற்றில் கீழே விழுவதைப் போல் சாணுரன் கீழே விழுந்தான்.

கண்ணனோ அவன் மார்பில் ஏறி அமர்ந்தான். கூடி இருந்த கூட்டம் உற்சாகக் கூச்சல் போட்ட வண்ணம் குதித்து ஆடக் கண்ணன் அவனை “சாணுரா, உன் தோல்வியை ஒப்புக் கொள்” எனக் கேட்டுக் கொண்டிருந்தான். தப்பிக்கப் பார்த்த சாணுரனைக் கண்ணன் தன் இரும்புப் பிடியால் பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் சாணுரனின் கரங்களோ அந்த நிலையிலும் தன் எஜமானனின் உத்தரவை நிறைவேற்றும் விதமாய்க் கண்ணனின் குரல்வளையை நெரிக்க முயன்றன. அவனுக்குக் கருணையே காட்டக் கூடாது என நினைத்த கண்ணன் அவன் தலையை நசுக்கிக் கொண்டே இன்னொரு கரத்தால் அவன் முகத்தில், கண்களில் குத்துவிட்டான். சாணுரன் உடலில் இருந்து ரத்தம் ஓட ஆரம்பித்தது. அப்படியே மயங்கி விழுந்தான் அவன். இடியோசை போன்ற கைதட்டல் சப்தம் காதைப் பிளந்தது. யாதவத் தலைவர்கள் தங்களை மறந்து கண்ணனைப் பாராட்டிக் கொண்டே அரங்கினுள் நுழைந்து கண்ணனுக்கு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் கண்ணன் அந்த நிலையிலும் கம்சன் மேல் ஒரு கண் அல்ல இரு கண்களையும் வைத்திருந்தான். சாணுரன் கீழே விழுந்ததுமே கம்சனுக்குள் பொங்கி எழுந்த ஆத்திரத்தை உணர்ந்து கொண்டான். அவன் மீசையை முறுக்கிக் கொண்டதையும், கைகள் உடைவாளுக்குச் சென்றதையும், அந்த இடத்தை விட்டுச் செல்ல யத்தனித்ததையும், அக்ரூரரால் தடுக்கப் பட்டதையும் கண்டிருந்தான். கம்சனின் ஆத்திரம் தன் மேல்தான் என்பதையும், அவன் வாளை எடுத்துக்கொண்டு தாக்கவந்தது தன்னையே என்பதையும் கண்ணன் உணர்ந்த அதே விநாடியில், மகத நாட்டுத் தளபதியின் வாள் அவனைப் பெற்ற தகப்பனான வசுதேவனின் தலைக்கு மேல் ஓங்கப் பட்டதையும், அதைக்கண்ட மற்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் குதித்தெழுந்து தங்கள் வாட்களை உருவியதையும் கண்ணன் கண்டான்.

அங்கே காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த பூரண ஆயுதக்காவலர்களான மகத வீரர்கள் அனைவரும் யாதவத் தலைவர்கள் மேல் பாய்ந்ததையும், அக்ரூரர் கம்சனைத் தடுத்து நிறுத்தப்பிரம்மப் பிரயத்தனப் படுவதையும் கண்ட கண்ணன், அங்கே நிலவும் சூழ்நிலையைப் பூரணமாகப் புரிந்து கொண்டான். அக்ரூரர் மிகவும் பிரயாசையுடன், “வேண்டாம், கம்சா, வேண்டாம்” எனத் தடுக்க முயல்வதையும் கம்சனின் முகத்தில் கூத்தாடிய கொலைவெறியையும், அவன் தன் பலம் அனைத்தையும் பிரயோகித்து, அனைவராலும் மரியாதைக்குரியவர் எனப் போற்றப் பட்ட புனிதராகிய அக்ரூரரைக் கீழே தள்ளியதையும் கண்டான். கம்சன் கண்ணன்பக்கம் திரும்பினான். கம்சனின் தலைக் கிரீடம் கீழே வீழ்ந்தது. தூக்கி எடுத்துக் கட்டப் பட்டிருந்த அவன் சிகை விரிந்து தொங்கியது. கண்ணன் ஒரு அடி பின்னல் நகர்ந்து கம்சனின் பின் சென்று அவன் நீண்ட சிகையைப் பிடித்து இழுத்து அவனைக் கீழே தள்ளினான். கம்சனுக்கு மயக்கம் வரும்போலிருந்தது. அவன் வாளும் அவனை விட்டு நழுவியது. அவனுக்குத் தன் முடிவு பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமும், அதை ஒட்டி நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் மனக்கண்கள் முன் ஓடின. ஒரு நிமிட காலம் அவன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தான். தன் முன்னே தன்னுடைய பரம வைரி ஒரு கடவுளைப் போலவே தன்னை சம்ஹாரம் செய்ய நின்றிருப்பதையும் கண்டான். ஒரு நிமிஷ காலம் கம்சனின் உள்ளத்துள்ளே இறைவன் மேல் பக்தியும், தான் அதுநாட்கள் வரை இறைவனை நினையாமல் இருந்ததும் தோன்றின. கம்சன் எழுந்திருக்க முடியாமல் கண்ணன் அவனை அமுக்கிக் கொண்டிருந்தான். கண்ணன் முகத்தையே பார்த்த கம்சனுக்குள் இனம் புரியாத ஏதேதோ எண்ணங்கள்!

அதற்குள் பலராமன் நிலையைப் புரிந்து கொண்டு, ஆபத்தை எதிர்பார்த்தவனாய்த் தன் அப்பாவைத் தாக்கப் போனவர்களைத் தன் கலப்பையால் ஓங்கி அடித்தான். எங்கும் குழப்பம் சூழ்ந்தது. ஆயுதம் தரிக்காத சாமானிய மக்கள் கலவரத்தில் இருந்து தப்பிக்க ஓடினார்கள். பெண்கள் அலறிக்கொண்டே ஓடினார்கள். ஓடமுடியாத பெண்கள் அலறலை நிறுத்த முடியவில்லை. ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அவற்றின் சப்தம் இடியைப் போலவும், அவற்றிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள் மின்னலைப் போலவும் தோன்றின. எங்கும் ரத்த மழை வர்ஷிக்க ஆரம்பித்தது. ஒரு பார்வையாளனாக அதுவரை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு, “வேளை வந்துவிட்டது” என்று புரிந்தது. கம்சனின் வாள் கண்ணனுக்கு அருகே விழுந்திருந்தது. அதை எடுத்தான். ஒரே வீச்சுத் தான். கம்சனின் தலை உருண்டதை அனைவரும் பார்த்தனர். கண்ணன் அது நாள் வரையில் கம்சனின் தோளில் தரிக்கப் பட்டிருந்த பொன்னால் கரையிடப் பட்ட சங்கை எடுத்தான்.தன் வாயில் வைத்துச் சங்கை ஊதினான்.

வெற்றிச்சங்கம் முழங்கியது.

விருது ஏற்பு நிகழ்வில் மழை!

இந்த விருதை எனக்கு திரு பித்தனின் வாக்கு (எவ்வளவு பெரிய பெயருங்க???)அவர்கள் அளித்துள்ளார். அவர் அளித்துப் பலநாட்கள் ஆகியும் என்னால் அவர் பதிவுக்குப் போய்ப் பார்க்கமுடியலை. அடுத்தடுத்து ஏதானும் வேலைகள். பித்தனின் வாக்கு அவர்களின் உண்மைப் பெயர் தெரியலை. அவருக்கு என்னோட மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரோட பழகின எல்லாருக்குமே இந்த விருதைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கார். அது மாதிரி நானும் கொடுக்கணுமா தெரியலை. என்றாலும் அனைத்துப் பதிவர்களும் இதைப் பங்கிட்டுக் கொள்ள அழைக்கின்றேன்.

அப்புறமாத் தமிழ்நாட்டின் சிரபுஞ்சியாக எங்க ஊர் ஆயிட்டு இருக்கு. எங்க தெருவைத் தோண்டின அன்னிக்கு ஆரம்பிச்ச மழை நடுவிலே ஒருநாள் நாங்க துளசி வீட்டுக்குப் போறதுக்காக நின்னது. இப்போச் சேர்த்து வச்சுப் பெய்யுது. நேத்திக்குத் தொலைபேசியிலே மாம்பலத்திலே இருக்கும் தம்பிட்டே பேசினப்போ இங்கே மழை பெய்யுதுனு சொன்னா ஹிஹிஹிஹினு சிரிக்கிறார். எல்லாம் நேரம்! நான் வடாம் எதுவும் கூட இந்த வருஷம் போடலை. ஆனால் பாருங்க, பாலைவனப் பகுதிகளிலே இருந்தெல்லாம் எங்களைக் கூப்பிட்டு அழைப்பு வருது. அங்கெல்லாம் மழை பெய்யணுமாம். யாரானும் நாத்து நடணும்னா உடனே வந்து நடலாம். அவ்வளவு ஆழமா உழுதிருக்காங்க. விளையற நெல்லை நாங்களே அறுவடை செய்துக்கறோம். ஏன்னா இனிமே இது காய்ஞ்சு அவங்க ரப்பிஷோ, கல்லோ கொட்டி கிராவல் போட்டு சமன்படுத்தி, அப்புறம் தார் போடணுமே! வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்ச தூரம்தான்! :)))))))))))))))

Sunday, December 20, 2009

தேர் நிலைக்கு வந்திருக்கு! அடுத்த தேரோட்டம் எப்போ???

அடடாடாஆஆஆஆஆ? கம்சனுக்கு முடிவு வந்துடுத்துனு எழுதினா எல்லாரும் எப்படி எல்லாம் அர்த்தம் எடுத்துக்கறாங்கப்பா, மாத்தலாம்னு பார்த்தா மூணு நாளா சொதப்பிட்டு இருந்த இணையம் வெள்ளிக்கிழமை மத்தியானத்திலே இருந்து தூங்கிடுச்சு. தொலைபேசினா அங்கே இருந்தவங்க தன்னோட கொஞ்சும் குரலில், "It will be restored by today evening. Have a good day"னு இழையோ இழைனு இழைஞ்சாங்க. வெள்ளிக்கிழமை ராத்திரி சோதனை பண்ணினா, ஒரே ஒரு மயில் மட்டும் பறந்தது. மத்தது பறக்கிறதுக்குள்ளே மறுபடி தூக்கம். சரி, ராத்திரி எல்லாரும் தானே தூங்குவோம்னு நேத்துக்காலம்பர பார்த்தா அது இன்னும் எழுந்துக்கவே இல்லை. மீண்டும் தொலைபேசியில் அழைப்பு, மீண்டும் கொஞ்சும் குரல். "இன்னிக்குக் கட்டாயம் சரி பண்ணிடுவாங்க." னு மறுபடியும் பொய் சொல்லுது.

வெறுத்துப் போய் துளசிக்குத் தொலைபேசினேன். ரொம்ப நாளா வரேன், வரேன்னு சொல்லிட்டு பயமுறுத்திட்டு இருந்தோமே, இன்னிக்கு நிஜமாவே வரப்போறோம்னு சொன்னதும், சரி, வாங்கனு சொல்லிட்டாங்க. கிளம்ப ஏற்பாடு செய்யும்போது தான் அவங்க வீட்டுக்குப் போகும் வழி கணினியிலேயே இருக்கேனு நினைப்பு வந்தது. நல்லவேளையா புத்திசாலித் தனமா(ஹிஹிஹி, நான் யார், நான் யார், நான் யார்?) விலாசம், தொலைபேசி எண்ணை எழுதி எடுக்கிறாப்போல் (ஹிஹிஹி, சாதாரணமாத் தேடிக் கண்டுபிடிக்கணும், இது என்னமோ வாகா மாட்டிக்கிறாப்போல் கிடைக்குது) வச்சிருந்தேன். மறுபடி கணினியைத் திறந்தால் ஆஹா, வந்துடுச்சேனு இணையம் வந்துடுச்சு. ஆனால் அரை மணி நேரம் முயன்றும் முகப்புப் பக்கம் கூடத் திறக்கலை. சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு கிளம்பிட்டேன். அதுக்குள்ளே ரங்க்ஸ் போச்சுடா, கம்ப்யூட்டரிலே உட்கார்ந்துட்டியா? இனிமே எழுந்தாப்போல் தான்னுட்டு தொலைக்காட்சியைப் போடப் போயிட்டார். உடனேயே மனசு அவசரகால நடவடிக்கை தேவைனு எச்சரிக்கைக் குரல் கொடுக்க, எழுந்துட்டு, கதவைப் பூட்டறேன்னு ஆரம்பிக்கவும், வேறே வழி இல்லாமல் அவரும் எழுந்து வந்தார்.

நாங்க வெளியே போகப் போறோம்னு தெரிஞ்சே போன வாரம் எங்க ரோடைத் தோண்ட வந்தாங்களா?? அதனால் என்ன? எப்படியும் போயே தீருவோம், நாங்க கைலை மலையிலேயே நடந்திருக்கோம்னு வீராப்புப் பேசினோமா?? ஹஹ்ஹாஹாஹா! நான் சிரிக்கலை! விதி! ரொம்பவே தொடர்ந்து சிரிச்சது ஒருவாரத்துக்கு. எங்க சாலையைத் தோண்டினதிலே ஆரம்பிச்சு 18-ம் தேதி வெள்ளிக்கிழமை வரைக்கும் மழைனா மழை அப்படி ஒரு மழை! ஒருநாள் கூட விடலைனா பார்த்துக்குங்க. வெள்ளிக்கிழமைதான் போனாப் போறதுனு மழை விட்டுது. சரினு தான் சனிக்கிழமை கிளம்பினோம். ஏற்கெனவே துர்க்குணி, அதிலும் இப்போ கர்ப்பிணிங்கறாப்போல் நம்ம கால் ஏற்கெனவே தகராறு. இப்போக் கொஞ்ச நாட்களாய்க் கேட்கவே வேண்டாம். ஆனால் மருத்துவர் நீங்க நிறைய நடப்பீங்கனு எனக்கு வாக்குக் கொடுத்திருந்தார். அதையும் நிறைவேத்தணுமே. ஆனால் பாருங்க. நம்ம ரங்க்ஸுக்குப் பயம். அதனால் எப்படியோ கஷ்டப் பட்டு வண்டியைக் கீழே இறக்கி தள்ளிக் கொண்டே அடுத்த தெருவுக்குப் போய் அங்கே வண்டியை நிறுத்தி வச்சுட்டு வந்திருந்தார். நானும் எப்படியோ டிராக்டர் வந்து உழுது போட்டிருந்த எங்க தெருவிலே அந்தப்பள்ளம், மேடு, ஆழம் காணமுடியா நீர் நிலைகள் எல்லாத்தையும் தாண்டி அடுத்த தெருவுக்கு முழுசாப்போயிட்டேன். அங்கே இருந்து எங்க வண்டியிலே தான் போனோம் அம்பத்தூர் பேருந்து நிலையம் வரைக்கும். ஆச்சரியத்திலும் ஆச்சரியம், வண்டி சாதாரணமா நான் ஏறிண்டதுமே நின்னுடும். இன்னிக்கு ரொம்பச் சமர்த்தாக் கிளம்பிட்டது. அம்பத்தூர் பேருந்து நிலையத்திலும் பேருந்து தயாராய் நின்னுட்டு இருந்தது. சொகுசுப் பேருந்து. நல்லவேளைதான் இன்னிக்கு நினைச்சு ஏறிப் போனோம்.

எத்தனை நேரம்னு நினைக்கறீங்க?? ஹிஹிஹி, எங்களுக்கும் தெரியாது. ஆனால் பேருந்து என்னமோ போயிட்டே இருந்தது. நேரம் ஓடிட்டே இருந்திருக்கு. கடைசியா நாங்க துளசி வீட்டுக்குப் போறச்சே மணி இரண்டேகால் ஆயிருக்கு. பதினோரு மணிக்குக் கிளம்பி இத்தனை நேரமானு மிரண்டு போயிட்டோம். நாங்க வரதுக்காக அவங்க பாவம் சாப்பிடாமல் காத்துட்டு இருந்தாங்க. நாங்க சாப்பிட்டு வருவோம்னு சொல்ல நான் மறந்துட்டேன். ரங்க்ஸின் முறைப்பை லட்சியம் செய்யாமல் அவங்களைச் சாப்பிடச் சொன்னோம். அங்கே இன்னொரு விருந்தாளியும் இருந்தாரா? நான் அவரை உதனு நினைச்சுட்டேன். அப்புறம் பார்த்தால் அவர் போன வருஷம் எங்க வீட்டுக்கு வந்திருக்கார். எனக்கும் அடையாளம் தெரியலை, அவருக்கும் தெரியலை. இரண்டு பேரும் அசடு வழிஞ்சோம். அவர் யாருனு கேட்கறீங்களா? நம்ம கோபிதான்! சென்னைக்கு அவர் வந்ததே தெரியாதா? கொஞ்சம் ஏமாந்துட்டேன். கோபிக்கும், கோபாலுக்கும் துளசி உணவு பரிமாறப் போனாங்க. பேசினதில் கோபால் தான் நாங்க வரப் போறோம்னு கஷ்டப் பட்டு சமைச்சிருக்கார்னு புரிஞ்சது! :P:P:P:P துளசி, உண்மையை மறைக்காமல் சொல்லிட்டேன், சரியா???

அடப் பாவமே, தெரிஞ்சால் சாப்பிடாமல் வந்திருப்போமேனு நினைச்சோம். அப்புறமா காபி போட்டு வச்சுட்டு கோபால் வந்து உட்கார்ந்தார். துளசி சாப்பிடப்போனாங்க. ஸ்ரீகண்ட் கொண்டு வந்து கொடுத்தாங்க எல்லாருக்கும். அதுவும் கோபாலோட தயாரிப்புத் தான்னு டேஸ்ட் பார்த்ததுமே தெரிஞ்சது. போற போக்கில் துளசி கோபியைப் பார்த்து,"கோபி, பார்த்தியா, நான் தான் வேலை செய்யறேன்னு எல்லாருக்கும் தெரியணுமாக்கும்!" அப்படினு வேறே சொன்னாங்களா? சரிதான் தினமும் வேலை செய்யறது யாருனு புரிஞ்சு போச்சு. ஹிஹிஹி, துளசி, நீங்க சொன்னாப்போல எழுதிட்டேனா??? அப்புறமா கோபி போட்டோ செஷன் முடிச்சுட்டுக் கிளம்பிப் போயிட்டார். யாரோ சிநேகிதி(தன்) பார்க்கணும்னு. அப்புறமாக் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு துளசி கொடுத்த ஸ்வீட்டை எல்லாம் மூட்டை கட்டிண்டு கிளம்பினோம்.

வரும் வழியில் நியூ உட்லண்ட்ஸில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகி சுபாஷிணிக்கு ஒரு சின்ன பார்ட்டி கொடுத்தாங்க. அதுக்கு அழைப்பு வந்திருந்தது. அங்கே போய் நியூ உட்லண்ட்ஸில் அவங்களையும் பார்த்துட்டு, பேருந்தில் ஏறி அம்பத்தூருக்கு வந்து சேர்ந்தோம். தேர்த்திருவிழாவுக்குத் தேரைத் தயார் செய்யறாப்போல் நானும் வெளியே கிளம்பறதுனா இவ்வளவு தயார் பண்ணிட்டுப் போகவேண்டி இருக்கு பாருங்க. தேரை நிலைக்குக் கொண்டு வரப் படற கஷ்டத்தை நம்ம ரங்க்ஸ் என்னை வீட்டிலே கொண்டு சேர்க்கப் படறார். அப்பாடானு ஆயிடும் அவருக்கு. :P:P:P:P

Wednesday, December 16, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சனுக்கு முடிவு நெருங்குகிறது!

அவசரம் அவசரமாய் மறுத்தான் நந்தன். “இல்லை, இல்லை இவர்கள் இந்த வீரவிளையாட்டுகள் எதிலும் பங்கெடுக்கப் போவதில்லை. அதிலும் உம்போன்ற திறமைசாலியான மல்லர்களோடு போரிடவே இவர்கள் அறியமாட்டார்கள். நாங்கள் எல்லாம் கிராமத்து மனிதர்கள் தாமே?? இந்த விதிமுறைகள் எங்களுக்குத் தெரியவும் தெரியாது, புரியவும் புரியாது. விட்டுவிடுங்கள் இவர்களை!” நந்தனின் அவசரமான பதிலால் கம்சன் முகத்தில் இகழ்ச்சி கலந்த சிறு புன்னகை தோன்றியது. சாணூரனோ விடவில்லை. இரு சகோதரர்களுக்கும் எதிரே நின்றுகொண்டான். ஒவ்வொருவரையும் உற்றுக் கவனித்தான். அந்தப் பந்தலில் இருந்த அனைவர் கவனமும் அங்கே தான் இருந்தது. உள்ளூர் மக்களுக்கு அவர்களையும் அறியாமல் கிருஷ்ண, பலராமர்களிடம் மிதமிஞ்சிய பாசம் தலை தூக்கி இருந்தது. இந்தச் சவாலை அவர்கள் ஒத்துக் கொள்ளவேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் யாதவத் தலைவர்களோ இதில் இருக்கும் சூக்ஷ்மமான சூழ்ச்சியை எண்ணி மனம் கலங்கினர். அடுத்து நடக்கப் போவது என்னவோ என்று கலக்கமாய்ப் பார்த்தனர்.

அவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குப் பின்னாலே தான் அரசமகளிர் அமரும் உப்பரிகை இருந்தது. அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த தேவகிக்குக் கீழே நடப்பது என்னவெனப் புரிய நேர்ந்ததும் கலங்கிப் போனாள். சாணூரன் எங்கே? கிருஷ்ண, பலராமர்கள் எங்கே? ஆண்டவா? இது என்ன கொடுமை? ஏன் இப்படி நடக்கிறது? பயத்திலும், கலக்கத்திலும் முகம் வெளுத்த தேவகி கைப்பிடிச் சுவரின் ஓரமாய்ச் சென்று தன் மனதுக்குள் இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டாள். மீண்டும் கீழே என்ன நடக்கிறது எனக் கவனித்தாள். “உங்கள் தந்தைக்கு வயதாகிவிட்டது. அவரை ஏன் கேட்கிறீர்கள்? அவரின் அநுமதியை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” சாணூரன் இருவரையும் ஏளனத்தோடு பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘இந்த ஊருக்கு உள்ளே வந்ததுமே நீங்கள் இருவரும் காட்டிய வீரத்தைப் பற்றி ஊரே பேசிக் கொண்டிருக்கிறது. மேலும் விருந்தாவனத்திலும் நீங்கள் இருவரும் சாகசங்கள் செய்தீர்களாமே? காதில் விழுந்ஹது. இருவருமே தேர்ந்த மல்லர்கள் எனவும் கேள்விப் பட்டேனே? அது பொய்யா? “ சாணூரன் கேலி செய்வதைப் புரிந்து கொண்டனர் யாதவத் தலைவர்களும், நந்தனும், கிருஷ்ண, பலராமர்களும். ஆனாலும் கிருஷ்ணனோ, பலராமனோ பதில் ஏதும் பேசவில்லை.

சாணூரனே மீண்டும் அவர்களை மல்யுத்த மேடைக்கு அழைத்தான். இருவரையும் போட்டிக்கு அழைக்கும் விதமாய்த் தன் தோள்களையும், தொடைகளையும் இரு கைகளாலும் தட்டி சப்தத்தை எழுப்பினான். அவன் எழுப்பிய சப்தத்தைக் கண்டு அவன் சீடர்களில் ஒருவன் கையில் இருந்த சங்கால் நீண்ட ஒலி எழுப்பினான். யாதவத் தலைவர்களின் நெஞ்சம் திக் திக் கென அடித்துக் கொண்டது. கம்சனுக்கோ அடுத்து என்ன நடக்கப் போகிறது எனப் புரிந்துவிட்டது. சிரிப்பை அடக்கும் விதமாய்த் தன் மீசையில் கைகளைப் போட்டு முறுக்கிக் கொண்டு, தான் சிரிப்பது வெளியே தெரியாவண்ணம் கவனித்துக் கொண்டிருந்தான். பலராமனுக்கோ சாணூரனின் அலட்டல் பொறுக்க முடியவில்லை. தந்தை அநுமதியை வேண்டி அவர் முகத்தையே பார்த்தான். நந்தனோ அசைந்து கொடுக்கவில்லை. சாணூரன் மீண்டும் கேலி செய்தான். “ஏன் உன் தகப்பன் முகத்தையே பார்க்கிறாய்? “ இப்போது அவன் குரல் அந்தப் பகுதி முழுதும் கேட்கும் வண்ணம் எதிரொலித்தது. இப்போது நேரிடையாகவே கண்ணனைக் கண்டு, “ நீ மல்யுத்தம் செய்வாய் அல்லவா?” என்று கேட்டான் சாணூரன். கிருஷ்ணனுக்கு அவன் எண்ணம் புரிந்தது. என்றாலும் மிகவும் மென்மையாக, “உன்னுடனா? நான் மிக மிகச் சிறியவன், உன்னைவிட” என மறுமொழி தந்தான்.

அவன் விட்ட சவாலை எதிர்கொள்வது தான் சரியானது என்றே கிருஷ்ணன் உள்ளூர நினைத்தான். ஆனாலும் சாணூரனின் எண்ணம் அவனுக்கு நன்கு புரிந்ததால் தன்னை விடாது வற்புறுத்தினால் ஒழியத் தான் இதை ஒப்புக் கொள்ளக் கூடாது என்னும் முடிவில் இருந்தான். “ஹா, வா, வா, நந்தனின் மகனே, இந்தக் கிழவன் உனக்கு மல்யுத்தத்தில் சில பிடிகளைச் சொல்லித் தருவேன். அவற்றாஇ நீ என்னிடமிருந்து கற்றுக் கொண்டாயானால் வாழ்நாள் பூராவும் என்னை மறக்கமாட்டாய்!’ என்றான். மீண்டும் தொடைகளைத் தட்டினான். கிருஷ்ணனை அழைத்தான். கண்ணனோ உறுதியாக மறுத்தான். சாணூரனோ கிருஷ்ணனை எழுப்பி வலுக்கட்டாயமாய் மேடைக்குத் தள்ள முனைந்தான். அக்ரூரர் தன்னையும் அறியாமல் கூச்சலிட்டார். “இல்லை, இல்லை, இது சரியில்லை, சாணூரா, நீ ஒரு சிறுவனோடா மோதப் போகிறாய்?” யாதவத் தலைவர்களில் கொஞ்சம் தைரியம் வந்த சிலரும் ஆக்ஷேபித்தனர். வசுதேவனும் செய்வதறியாது தவித்தார். அனைவருக்கும் சாணூரனின் கொலைவெறித் தாக்குதல் பற்றி நன்கு தெரியும். அவன் விதிகளை மீறாமலேயே தன்னுடைய இந்தப் பெரிய உடலால் எதிராளியை வீழ்த்திக் கீழே தள்ளி அவர்கள் எலும்புகளைச் சுக்கு நூறாக உடைப்பான் என்பதை அறிந்திருந்தார்கள். யாதவப் பெண்மணிகள் அமர்ந்திருந்த உப்பரிகையில் இருந்தும் ஆக்ஷேபம் செய்து கூச்சல்கள் வந்தன. ஆனால் வழக்கம்போல் சூது அறியாத கிராம மக்களோ கிருஷ்ணனைத் தனிமைப் படுத்திச் சாணூரன் அழைத்ததை கிருஷ்ணனுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவம் என்றும் அதைக் கிருஷ்ணன் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் நினைத்தனர். அருமையானதொரு விளையாட்டைப் பார்க்கப் போகிறோம். அவர்களில் சிலர் காலையில் ருக்மிக்கு நேர்ந்தவைகளை நேரில் பார்த்திருந்தனர். ஜெயஸ்ரீ கிருஷ்ணா! என்ற கோஷம் முழங்கியது.

கிருஷ்ணனோ சற்றும் பயமே இல்லாமல் சாணூரனையே பார்த்தவண்ணம் இருந்தான். சாணூரன், “என்னைக் கண்டு பயப்படுகிறாயா சிறுவனே?” என வினவினான். அப்போது கம்சனைப் பார்த்த அக்ரூரர் அவன் உள்ளுக்குள் சாணூரனின் இந்தக் காரியத்தால் மகிழ்வது புரிய, அங்கே இருந்த வண்ணமே கம்சனைப் பார்த்து, “ அந்தகர்களின் தலைவனே, இது நியாயமே இல்லை, நீதி இல்லை, ஒரு சிறுவன் ஒரு பெரிய மல்யுத்த வீரனோடு போர் புரியவேண்டும் என்பதை தர்மசாஸ்திரங்களே ஒத்துக் கொள்ளாத ஒன்று. முதலில் இதை நிறுத்து.” என்றார். கம்சன் வாயே திறக்கவில்லை. ஆனால் சாணூரன் மீண்டும் கண்ணனைப் பார்த்து, “என்ன பயமா?” என்று கேட்டான். ‘என் தந்தை என்னைத் தடுத்தார்,” கண்ணன் உடனடியாகப் பதில் சொன்னான். ‘ஹா, ஹா, உன் தந்தையல்லவா? அப்படித் தான் செய்வார். உனக்குக் காட்டில், அல்லது யமுனைக்கரையில் பெண்களோடு ஆடிப் பாடத் தான் தெரியும். உன் தந்தைக்கு அது தெரியும் அல்லவா? அதான் தடுத்திருக்கிறார்.” இப்போது வெளிப்படையாகவே கேலி செய்தான் சாணூரன். கண்ணனோ அமைதியாக, “ஆம், நான் ராஸ் விளையாடுவேன், அதுக்கு என்ன இப்போ?” என்று கேட்டான். பின்னர் மெதுவாகத் தன் தந்தையாக அதுவரை அனைவராலும் நம்பப்படும் நந்தனைப் பார்த்து இருகைகளையும் கூப்பி வணங்கி, “தந்தையே, இதற்கு மேலும் என்னை நீங்கள் தடுக்கலாகாது.” என்றான்.

பின்னர் தன் தலைப்பாகை, தலை அலங்காரங்கள் போன்றவற்றைக் களைந்து தன்னருகில் இருந்த உத்தவனிடம் கொடுத்தான். அரங்கத்துக்குச் சென்று தானும் மல்யுத்தத்திற்குத் தயாரானான். அவன் நின்ற முறையே அழகாயும் அலாதியாகவும் இருந்தது. பார்ப்பவர்கள் மனதில் நம்பிக்கையைத் தூண்டும் விதமாய் இருந்தது. “சாணூரா, நான் தயார், “என்றான் கண்ணன். ஜெய ஜெயஸ்ரீகிருஷ்ணா! என்ற கோஷம் அந்த அரங்கை நிறைத்தது.

பலராமனுக்கு உள்ளுக்குள்ளாகக்கோபம் பொங்கிக் கொண்டு இருந்தது. அவனை முதலில் சாணூரன் அழைத்த போதே அவன் யுத்தம் செய்யத் தயாராகிவிட்டான். ஆனாலும் அவன் உள் மனம் இது சரியான நேரமல்ல என எச்சரித்தது. தன் தம்பியிடமிருந்து அதற்கான நேரம் வந்துவிட்டதற்கான அடையாளச் சைகை வரவேண்டும். காத்திருந்தான் பலராமன். தன்னைவிட ஆழ்ந்து யோசிக்கும் தம்பி எடுக்கும் பல முடிவுகள் சரியானதாய் இருப்பதை பலராமன் இதற்கு முன்னர் பலமுறை கண்டிருக்கிறான். ஆகவே காத்திருந்தான். கண்ணன் சாணூரனின் சவாலை ஏற்றுக் கொண்டதும், இதற்கெனவே காத்திருந்தாற்போல் முஷ்திகன் பலரரமனிடம் வந்தான். “ஹே, நீ?? நீ என்ன செய்யப் போகிறாய்? இப்படி ஒதிய மரம்போல் வளர்ந்திருக்கிறாயே? இன்னும் என்ன தயக்கம்? அல்லது நீ ஒரு பெண்ணா? பேடியா?” அவன் கேள்வியால் பலராமனின் கோபம் அதிகரித்தது. ஏற்கெனவே கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த அவன் கோபம் அதிகரிக்கவே முஷ்டியை ஓங்கி முஷ்திகன் முகத்தில் ஒரு குத்து விட, அவன் தடுமாறித் தன் முகத்தைப் பொத்திக் கொண்டு கீழே விழுந்துவிடாமல் இருக்கச் சமாளித்துக் கொண்டிருந்தான். பலராமனும் அரங்குக்குள் நுழைந்தான்.

மல்யுத்தம் ஆரம்பமாயிற்று.

Sunday, December 13, 2009

ஆஹா, வந்துடுச்சே, சந்தோஷத்தில் குதிக்கிறோமே!


இன்று காலை மருத்துவரிடம் போகவேண்டி இருந்தது. யாருக்குங்கறீங்களா?? வழக்கம்போல் நமக்குத் தான். எலும்பு முறிவு மருத்துவர். எக்ஸ்-ரே எடுத்துட்டு வாங்கனு சொல்லி ஒரு மாசம் ஆச்சு. நமக்கு வீட்டில் வேலை, விருந்தாளிகள் வரவு, மழை வரவு, தெருவிலே தண்ணீர் தேங்கி நின்னுட்டு வெளியே போகமுடியாம இருந்ததுனு ஆயிரம் காரணம் போகமுடியலை. இந்தத் தெருவிலே மழைத் தண்ணீர் மழை நின்னும் தேங்கி இருந்தது. அதை அப்படியே படம் எடுத்து, ஹிந்து பத்திரிகைக்கு டவுன் டவுன் செய்திகளுக்கு அனுப்பினோம். அங்கே இருந்து எங்களைத் தொடர்பு கொண்டு பேசிட்டு, நாங்க அனுப்பிய செய்திகளையும் படிச்சுப் பார்த்துட்டுப் போன மாசம் 22-ம் தேதிய டவுன் டவுன் செய்தியில் அரைப்பக்கத்துக்கு எங்களோட குறைகளை விளக்கிப் போட்டாங்க.

அதுக்கப்புறமும் முனிசிபாலிடியிலே இருந்து சுகாதார ஆய்வாளர் மட்டுமே வந்து பார்த்துட்டு, தண்ணீரை நாங்க தான் கொட்டி வச்சுட்டோமோனு சந்தேகப் பட்டு, மேற்கொண்டு பக்கத்து அடுக்கு மாடிக்குடியிருப்புக்காரங்களையும் நாங்கதான் கழிப்பறைத் தண்ணீரை வெளியே விடச் சொன்னோமோனும் சந்தேகப் பட்டுக் கேள்விகள் கேட்டுட்டுப் போயிட்டார். எங்க வீட்டிலேஇருந்து கொஞ்ச தூரத்தில் தெரு திரும்பும் இடத்தில் முழங்கால் தண்ணீரில் எல்லாரும் போயிட்டு இருந்ததைக் கவனிச்சதாய்க் கூடக் காட்டிக்கலை. வெறுத்துப் போய் என்ன செய்யறதுனு யோசிச்சுட்டு, நம்ம வீட்டுக் கதாநாயகர், இந்தக் காலனி மக்களின் சார்பா துயர் துடைக்க நாமதான் முன் வரணும்னு நினைச்சு, கமிஷனரைச் சந்திக்க நேரம் கேட்டார். மறுநாள் வரச் சொன்னாங்க. மறுநாள் போய்க் காத்திருந்து, நிஜமாவே மணிக்கணக்காக் காத்திருக்கும்படி ஆச்சு. அவங்க சொன்ன நேரம் வேறே. கமிஷனர் கொடுத்த நேரம் வேறே. அதைச் சொல்லலை. கமிஷனரைப் பார்த்தாச்சு. அவர் தெருவை வந்து பார்த்துட்டுத் தான் சொல்லுவேன். உங்க தெரு இந்த உலகிலேயே மிக அழகான, அருமையான வசதிகளைக் கொண்டதுனு தெரியுது. அதனால் இப்போ சாலை எல்லாம் போடறாப்போல் இல்லை. எதுக்கும் தொலை பேசி எண்ணைக்கொடுங்க. வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டார்.

திடீர்னு போன வாரத்தில் மாலை நேரம் ஒருநாள் முனிசிபாலிடியில் இருந்து தொலைபேசி அழைப்பு. கமிஷனர் வரார், தயாராய் இருங்கனு. மாலை, மரியாதை செய்யணுமோனு யோசிச்சேன். அதுக்குள்ளே நம்ம கதாநாயகர் கிளம்பிட்டார் வரவேற்க. முரசறைந்து தெருவில் எல்லாருக்கும் விஷயத்தைத் தெரிவிக்க ஒரு மாபெரும் கூட்டம் பின் தொடர ஊர்வலம் கிளம்பியது. எல்லாத்தையும் பார்த்துட்டு, அம்பத்தூரின் தண்ணீர் அனைத்துமே, தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீர் உள்பட இங்கே கொண்டு வரப்போவதாய்ச் சுபச் செய்தியைச் சொல்லி எங்கள் வயிற்றில் அக்னியை வார்த்துவிட்டு, உங்க தெரு இப்போப்போடமுடியாது, இதுக்கென்ன குறைச்சல்னு சொல்லிட்டாராம். இது தாழ்வான பகுதி, இங்கே எல்லாத் தண்ணீரையும் கொண்டு வந்தால் நாங்க எல்லாம் முழுகிப் போயிடுவோம்னு சொல்லிப் பார்த்தாச்சு. மனுஷன் கேட்கவே இல்லை. அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்னு சொல்றார். நாங்க முழுகிப் போறதைப் பார்க்க அவருக்கு அவ்வளவு ஆசையானு ஆச்சரியமாப் போச்சு. அப்புறம் தேங்கிக் கிடந்த தண்ணீரை மட்டும் வெட்டி விட்டு அகற்றுவதாய்ச் சொல்லிட்டுப் போனார். மறுநாள் மோட்டார் வைத்து அனைத்துத் தண்ணீரையும் இறைத்தும் தண்ணீர் தேங்கியே இருக்க, வீடுகளின் ஓரத்தில் பள்ளம் தோண்டி அந்தத் தண்ணீரை வெளியேற்றினார்கள்.

பக்கத்துத் தெருக்களுக்கு எல்லாம் சாலை போட வேலை ஆரம்பித்துவிட்டது. நாங்க மனசு நொந்து போய் இருக்க திடீர்னு முந்தாநாள் ஜேசிபி வந்து சாலையைத் தோண்ட ஆரம்பிச்சது. மேற்குப் பக்கம் தோண்டிட்டுப் போயிடுவாங்களோனு நினைச்சால், நேத்திக்கு எங்க பக்கமும் தோண்டிட்டாங்க. விசாரிச்சதில் எங்க சாலைக்கும் விடிவு வந்துடுச்சாம். சாலைபோடப் போறாங்களாம். தெருவாசிகள் அனைவர் வீட்டிலும் நேத்திக்குப்ப் பால்பாயாசம்னு கேள்விப்பட்டேன். எனக்கு யாரும் தரலை. ஆனால் என்ன சாக்கடை தோண்டற திட்டத்திலே மாற்றம் இல்லைனு வயித்திலே புளியைக் கரைச்சுட்டுப் போயிட்டார் அந்தக் காண்ட்ராக்டர். இவங்க மனசு திடீர்னு மாறி சாலை போட ஆரம்பிச்சதாலேயே என்னமோ மழைவேறே நேத்திக்குக் கொட்டோ கொட்டுனு கொட்டித் தீர்த்துடுச்சு. வீட்டை விட்டுக் கீழே இறங்க முடியாது. இரண்டு அடிக்குப் பள்ளம். கீழே இறங்கினால் என்னை மேலே ஏத்த கிரேன் தான் வரணும். மத்தவங்க எல்லாம் எப்படிப் போறாங்க வெளியேனு பார்த்தால் ஆண்கள் மட்டும் தான் ஒருமாதிரிச் சறுக்கிட்டுப்போயிட்டு இருக்காங்க. கார் வச்சிருக்கிறவங்க காரை எடுக்க முடியாது. வண்டியை எடுக்க முடியாது. நல்ல நடைப்பயிற்சி செய்யும்படிக்கு இருக்கு. வெளியே போகமுடியாதவங்களைப் படிதாண்டாப்பத்தினிகளாக ஆக்கிட்டாங்க. மேலே உள்ள படம் தண்ணீர் தேங்கி இருந்தப்போ எடுத்தது. இதிலே குறுக்கும், நெடுக்கும் போயிட்டுப் போயிட்டு வரது நம்ம கதாநாயகர் தான்.

சுதந்திரம் வந்து அறுபது வருஷத்துக்கு மேல் ஆகியும், மெட்ரோ நகரம் என அழைக்கப் படும் சென்னையின் மிகப் பெரிய முனிசிபாலிடியும் ஆசியாவின் மிகப் பெரிய முனிசிபாலிசியும் ஆன இந்த ஊரில் ஒரு சாலைக்கு எத்தனை வருஷம் போராட வேண்டி இருக்கு?? என்றாலும் இது என் நாடு. இதை நான் மிகவும் நேசிக்கிறேன்.

வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்!

Friday, December 11, 2009

எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான்!

பாரதியின் கண்ணன்


சேவகரால் பட்ட சிரமமிகவுண்டு கண்டீர்
சேவகரில்லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன், துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழியானாலும், கள்ளர்பயமானாலும்


இரவிற்பகலிலே எந்நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற்காப்பேன்
கற்றவித்தையேதுமில்லை, காட்டு மனிதன் ஐயே
ஆனபொழுதுங்கோவடி குத்துப்போர் மற்போர்

நானறிவேன், சற்றும் நயவஞ்சனைபுரியேன்
என்று பல சொல்லி நின்றான். ஏது பெயர் சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்
கட்டுறுதியுள்ள உடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல்-ஈங்கிவற்றால்

தக்கவனென்றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்க உரை சொல்லி விருது பல சாற்றுகிறாய்
கூலியென்ன கேட்கின்றாய்? கூறுகென்றேன் ஐயனே
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகளேதுமில்லை
நானோர் தனியாள் நரை திரை தோன்றாவிடினும்

ஆனவயதிற்களவில்லை- தேவரீர்
ஆதரித்தாற்போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லையென்றான்
பண்டைக்காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
அண்டு மிகவும் களிப்புடனே நானவனை

ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன். கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெலாம் பேசி முடியாது.
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்

வண்ணமுறக்காக்கின்றான், வாய் முணுத்தல் கண்டறியேன்.




எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!


இன்று மகாகவியின் பிறந்தநாள்.

Wednesday, December 09, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - மல்யுத்தப் போட்டியில்!

கம்சன் தன்னிரு கைகளையும் தட்டினான். அவனுடைய அந்தரங்கப் பணியாள் வந்ததும், நம்பிக்கைக்குரிய ஆகா என்னும் மெய்க்காப்பாளனை அழைத்துவரச் சொன்னான். ஆகா வந்து சேர்ந்தான். ஆஜானுபாகுவான ஆகாவைப் பார்த்தாலே பயமாக இருந்தது. வருடக்கணக்காகக் கம்சன் இட்ட கட்டளைகளை மறுபேச்சுப் பேசாமல் நிறைவேற்றி வந்த ஆகாவுக்கு அவன் செய்து வந்த முரட்டுத் தனமான வேலைகளின் காரணமாக உடலும், மனமும் கடினமாகி இருந்ததோ என்னும் வண்ணம் தோற்றமளித்தான். அவனிடம் கம்சன், குவலயாபீடத்துக்கு என்ன நேர்ந்தது என விசாரித்தான். நந்தனின் மகனை இந்தப் பந்தலினுள் நுழைய விடமாட்டீர்கள் என நினைத்தேன், நுழைந்துவிட்டானே எனப்பதறினான். ஆகா குவலயாபீடம் கண்ணனால் கொல்லப் பட்டது எனச் சிலரும் அவனால் மயக்கப் பட்டது எனச் சிலரும் சொல்லுவதாகவும், தனக்கும் அது பற்றிய சரியான தகவல்கள் இல்லை என்றும், விசாரிக்கச் சொல்லி இருப்பதாகவும் கூறினான். அங்காரகனையும் விசாரிக்கச் சொல்லுவதாக மேலும் கூறினான் ஆகா. கம்சன் “அங்காரகனை விசாரித்து என்ன ஆகப் போகிறது? அவனைப் பற்றி நினைக்க இது நேரமில்லை. மல் யுத்தம் ஆரம்பிக்கப்போகிறது. மல்லர்கள் திரண்டு வரப் போகின்றனர். இன்னும் சில நிமிடங்களில் நானும் அந்த இடத்திற்கு என் விருந்தாளிகளுடன் மல் யுத்தத்தைக் கண்டு களிக்கச் செல்லவேண்டும்.” என்று சொல்லி நிறுத்தினான் கம்சன்.

கம்சனின் கட்டளையை எதிர்பார்த்து ஆகா காத்திருந்தான். “ஆகா, இந்த மல்யுத்தம் ஆரம்பிக்கும் முன்னே சாணுரனுக்குத் தகவல் அனுப்பிவிடு. நந்தனின் மகன்கள் இருவரும், முக்கியமாய் அந்தக் கண்ணன் உயிரோடு இருக்கக் கூடாது.” என்றான் கம்சன். ஆகா திகைத்தான். “ எப்படி முடியும்? கண்ணனோ பதினாறு வயதுச் சிறுவன். சாணுரன் போன்ற பெரும் மல்லன் ஒருவன் அவனைப்போட்டிக்கு எங்கனம் அழைப்பான்?” என்று திரும்பிக் கேட்டான் ஆகா. “சாஸ்திரத்துக்கு மட்டுமின்றி தர்மத்திற்கும் விரோதமாயிற்றே, இதை எவரும் அநுமதிக்க மாட்டார்களே?” என்றான் மேலும். அப்போது பலர் சேர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டும், ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் நடந்து வரும் காலடி ஓசை கேட்டது. தனது அரச விருந்தினர்கள் தன்னைக் கண்டு தன்னுடன் பந்தலுக்குப் போக வருகின்றனர் என்பதைப் புரிந்து கொண்ட கம்சன் சட்டென எழுந்தான். வேகமாயும், கோபமாயும் தன் கால்களை பூமியில் ஓங்கி உதைத்தான். ஆகாவைப் பார்த்த வண்ணம் கோபம் அடங்காமல், “சாணுரன் என்ன செய்வானோ எனக்கு அது பற்றிய கவலை எதுவும் இல்லை. ஆனால் என் கட்டளை என்னவெனச் சொல்லிவிட்டேன் அல்லவா? அதை நிறைவேற்றவேண்டும். என் கட்டளையை மதிக்கவேண்டும், சொல் அவனிடம்.” வெறுப்போடு தன் கைகளை அசைத்து ஆகாவை வெளியே போகச் சொன்னான் கம்சன். அனைவரும் உள்ளே வருவதற்கு முன்னால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் இருக்கப்பிரயாசைப் பட்டான் கம்சன்.

அரை வட்டமான அந்தப் பெரிய மைதானம் பல வகைத் தோரணங்களாலும், மலர்மாலைகளாலும், வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்த தொட்டிகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வெண்மணல் பரப்பி நடுவே ஒரு பெரிய மேடையில் மல்லர்கள் விளையாட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அரண்மனைப் பெண்கள், மற்றும் அவர்களுடன் வந்த தோழியர், விருந்தினர்கள் அமருவதற்கெனத் தனி உப்பரிகை ஏற்படுத்தப் பட்டிருந்தது. கம்சனும், அவனுடைய விருந்தாளிகளும் அமரவென ஒரு பெரிய மேடையில் அவரவர் தகுதிக்கும், அரசப் பதவிக்கும் ஏற்ப ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. அங்கே மகத நாட்டுக் காவலர்களின் பலத்த காவலும் இருந்தது. இன்னொரு பக்கம் வேதம் ஓதும் பிராமணர்கள் ,மற்றக் குடிமக்கள், மல் யுத்தம் பார்க்கவென வந்த வெளிநாட்டுப் பிரயாணிகள் என அனைவருக்கும் என இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. இன்னொரு பக்கம் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து வண்ண, விசித்திரமான வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை, ஆபரணங்களுடன் கிராம மக்கள் அமர்ந்திருந்தனர். அந்தக் கிராம மக்கள் அமர்ந்திருந்த பகுதியையே அனைவரும் திரும்பித் திரும்பிப் பார்ப்பதில் இருந்து அங்கே ஏதோ முக்கியத்துவம் எனப் புரிகிறது. என்ன அது??? ஆஹா, அதோ கண்ணன்! கிராம மக்களோடு ஒருவனாக அல்லவோ அமர்ந்திருக்கிறான்?? என்ன ஆச்சரியம்??? விருந்தாவனத்து கோபர்களோடு அவர்களுக்குத் தலைமை தாங்கி வந்த நந்தனுக்கு ஒரு பக்கம் கண்ணனும், இன்னொரு பக்கம் பலராமனும். மக்கள் கூட்டம் கண்ணன் மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை. சாதாரண மனிதனைப் போல் சாதாரண உடை அணிந்து தலையில் உள்ள மயில் பீலி மட்டுமே தன்னைத் தனித்துக் காட்டும் விதமாய் இருந்தாலும், கண்ணன் கண்ணன் தான். அவனுக்கு நிகர் எவருமில்லை என்னும்படிக்குத் தனித்துத் தெரிந்தான். அருகிலுள்ள மக்கள் அவனைத் தொட்டுப் பார்ப்பதிலும், அவனோடு ஒரு வார்த்தை பேசுவதிலும், அவன் திரும்பத் தங்களைக் கண்டு சிரிப்பதிலும் அந்தச் சிரிப்பில் உள்ள அமைதியையும், ஆநந்த்ததையும், அது தங்கள் உள்ளங்களுக்கு அளிக்கும் சாந்தியையும் கண்டு வியந்தவண்ணம் இருந்தனர். பலாப்பழத்தை மொய்க்கும் ஈக்கூட்டம் போல் கண்ணன் இருக்கும் இடத்தையே மக்கள் கூட்டமும் மொய்த்தது.


அப்போது கம்சன் உள்ளே நுழைவதைக் குறிக்கும் வகையில் பேரிகைகள் சப்தித்தன. எக்காளங்கள் முழக்கமிட்டன. சங்குகள் ஊதப்பட்டன. தன்னுடைய பரிவாரங்களுடனும், மற்ற அரச விருந்தினர்களோடும் கம்சன் உள்ளே நுழைந்தான். கம்சனின் மாமனாரான ஜராசந்தனின் மகத வீரர்கள், யாதவ குலத்தினரில் ஒரு சில தலைவர்கள், விருந்தாவனத்து இடையர்கள் எனச் சிலரைத் தவிர மற்றவர்கள் யாருமே கம்சனின் இந்த தநுர்யாகத்தின் உண்மையான நோக்கத்தை அறியமாட்டார்கள். மக்களுக்குக் கம்சன் கண்ணனை அங்கே வரவழைத்ததும், அவன் யசோதையின் மகன் அல்ல, தேவகி பெற்ற பிள்ளை என்பதும் மகிழ்வையே தந்தது. ஆகையால் அனைவருமே விழாவின் மயக்கத்திலே இருந்தனர் என்று சொல்லலாம். மல்யுத்த மேடையில் சாணுரன், முஷ்திகன், தோஷாலா என்னும் மற்றொரு மல்லன் மூவரும் கம்சனின் வரவைக் கண்டதும் இரு கை கூப்பி வணங்கினார்கள். ஒவ்வொருவருக்கும் பின்னால் அவர்களின் சீடர்களில் பொறுக்கி எடுத்த பனிரண்டு பேர் நின்றனர். அனைவருமே மல்யுத்த உடையில் இருந்தாலும், அரசவையின் முக்கிய மல்லர்களான சாணுரனும், முஷ்திகனும் பட்டுச் சால்வைகளைப் போர்த்திக் கொண்டதில் தனித்துத் தெரிந்தனர்.

சாணுரன் பஹு யுத்தம் என்னும் கைகளை மட்டுமே பயன்படுத்திப் போடும் மல் யுத்தத்தில் தேர்ந்தவனும் கூட. ஆயுதங்களைப் பயன்படுத்திப் போர் செய்யும் வித்தையும் இடம் பெற்றிருந்தது. சாதாரண மனிதர்கள் தடி, கம்பு, அரிவாள், சிலம்பம் போன்றவற்றாலும், கொஞ்சம் அதிக அந்தஸ்து பெற்ற வீரர்கள் அவரவரின் தகுதிக்கு ஏற்ற ஆயுதங்களையும் பயன்படுத்திப் போர் செய்யவேண்டும் என்பது பொதுவான விதியாக இருந்தது. வீர விளையாட்டு ஆரம்பித்தது. கோடலி கொண்டு தாக்குவதும், வில் வித்தையும் மிகவும் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் அதில் தேர்ந்த வீரர் மட்டுமே பங்கெடுக்கவேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டது. வீரர்கள் வரிசையாக நின்றனர். எதிர்பக்கங்களில் அவர்களை எதிர்ப்பவர்கள் எந்த எந்தப் போட்டிக்கு எனத் தேர்ந்தெடுக்கப் பட்டனரோ அந்தப் போட்டிகளுக்கு உரிய தங்கள் போட்டியாளருக்கு முன் நின்றனர். சங்குகள் முழங்கியவை நிறுத்தப்பட்டன், பேரிகைகள் நின்றன. எக்காளங்கள் அமைதியாயின. சட்டென்று சூழ்நிலையே அமைதியாக மாறியது.

அப்போது ஒரு குரல், “ம்ம்ம்ம் ஆரம்பிக்கட்டும், “ என்று சொல்ல வீரர்கள் ஒரு பெரிய கூச்சலுடன் “ஜெய விஜயீ பவ” எனக் கூவிக் கொண்டு தங்கள் தங்கள் போட்டியாளரிடம் பாய்ந்தனர். சற்று நேரம் யாருக்கும் எதுவும் புரியவில்லை. சில நிமிடங்களில் போட்டியாளர்களில் சிலர் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள, மற்றவர்களுடன் போட்டியிடச் சிலர் முன் வந்தனர். மல்யுத்தக்காரர்கள் தங்கள் திறமையை எல்லாம் காட்டி மல்யுத்தம் செய்தனர். அந்த அரங்கிலேயே அதிகக் கூட்டமும் இருந்தது. மக்கள் கூட்டம் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு வீரரைப் பாராட்டி அவர்கள் பக்கம் கூவிக் கொண்டு மற்றவரைத் தூண்டி விட்டது. சாணுரன், முஷ்திகன், தோஷாலா ஆகியவர்களின் சீடர்களால் பல மல்யுத்த வீரர்கள் தோற்கடிக்கப் பட்டனர். வென்றவர்கள் ஒரு பக்கமும், தோற்றவர்கள் மறுபக்கமும் நின்றனர். சாணுரனும், முஷ்திகனும், தோஷாலாவும் தங்கள் சீடர்கள் இருவர் பின் தொடர அந்த மாபெரும் அரங்கைச் சுற்றி வந்தனர். பெருமை முகத்தில் பொங்க, கர்வம் கொப்பளிக்கச் சாணுரன் ஒவ்வொருவராய்ப் பார்த்து வந்தான். சிலரை விளையாட்டாய் வம்புக்கு இழுத்து மல்யுத்தம் செய்ய வருகிறீர்களா எனக் கேட்டான். இப்படியே விளையாட்டாய்க் கேட்பது போல் அரங்கைச் சுற்றிய சாணுரன், கிராம மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்ததும், அங்கேயும் கேட்க எண்ணியவன் போல் நின்றான். அவன் பார்வை தற்செயலாய்ப் படுவது போலவே கண்ணன் மேலும், பலராமன் மேலும் பட்டது. அன்று காலையில் தான் அரண்மனைச் சாயத் தொழிலாளியின் கடையில் இருந்து வாங்கப் பட்ட விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு அமர்ந்திருந்தனர் கிருஷ்ணனும், பலராமனும். அவர்களைப் பார்த்துக் கொண்டே எதுவுமே தெரியாத மாதிரி நந்தன் பக்கம் திரும்பி, “நந்தராஜரே, இந்தப் பையன்கள் யார்? உம்முடைய பையன்களா?” என்று கேட்டான். மேலும் தொடர்ந்து, “இவர்களைப் பார்த்தால் அரசிளங்குமரர்கள் போல் இருக்கின்றனரே? இவர்களை ஏன் என்னுடனோ அல்லது மற்ற வீர விளையாட்டுகள் எதிலோ பங்கெடுக்க வைக்கக் கூடாது?” என்றும் கேட்டான்

நந்தனுக்கு உடல் நடுங்கியது.

Monday, December 07, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், குவலயாபீடத்தின் முடிவு!

குவலயாபீடம் தன்னுடைய வழக்கமான கோபத்தை மறந்துவிட்டதா அல்லது அதற்குக் கோபமே வராதா என்னும்படிக்கு மிக மிக சந்தோஷமாய் விளையாடிக் கொண்டிருந்தது. தன்னுடைய நீண்ட துதிக்கையை நீட்டிப் போகிற வருகிறவர்களை எல்லாம் வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தது. இதோ! இரு இளைஞர்களும் வந்துவிட்டனர். குவலயாபீடம் அவர்களைத் துதிக்கையால் எடுத்துச் சுழற்றி வீசப் போகிறது அல்லது தன் காலடியில் போட்டு எலும்புகள் நொறுங்க நசுக்கப்போகிறது. கம்சனின் காதுகளில் எலும்புகள் நொறுங்கும் சப்தம் விழுந்ததோ என்னும் விதமாய் அவன் மிகவும் ஆவலுடன் அந்தக் காட்சியைக் காணக் காத்திருந்தான். கம்சனின் கண்கள் விரிந்தன. ஆவலுடன் நோக்கினான். தன் கண்களைக் கசக்கிக் கொண்டும் பார்த்தான். இருவரும் வரும்போது அவர்களைத் தடுத்து நிறுத்தும்விதமாய்க் குவலயாபீடம் தன் நீண்ட துதிக்கையை நீட்டியது. தடுக்கப் பார்த்தது. ஆனால் கண்ணன் சொன்ன ஓரிரு வார்த்தைகள் கட்டுப் படுத்திவிட்டனவே. மிருதுவாக, மிக மிக மெதுவாக ஏதோ சொன்னான் கண்ணன் அந்தப் பெரிய யானையைப் பார்த்து. அது உடனேயே தன் தும்பிக்கையை உயர்த்திக் கொண்டு ஒரு சந்தோஷப் பிளிறலிட்டது. மேலும் கண்ணனோடு துதிக்கையை நீட்டிக் கொண்டு விளையாடவே ஆரம்பித்துவிட்டது. கண்ணன் அதனிடமிருந்து நகர்ந்து வேறுபக்கம் சென்றான். அதுவிடாமல் தன் துதிக்கையை நீட்டி அவனைத் தடுக்கப் பார்த்தது. இவ்விதம் கண்ணன் எந்தப் பக்கம் சென்றாலும் குவலயாபீடம் தடுத்தது. அவனைப்போகவிடவில்லை. மக்களில் சிலர் பயந்தனர். கண்ணனை எவ்விதமேனும் அந்த யானையிடமிருந்து காக்கவேண்டும் என்றும் முயன்றனர்.

ஆனால் கண்ணன் சிறிதும் அஞ்சவில்லை. மக்கள் அனைவரையும் நகர்ந்து போகச் சொல்லிவிட்டு யானையின் அருகே சென்று மிருதுவான குரலில் அதற்குப் புரியும் வகையில் அதனோடு பேசினான். குவலயாபீடம் தான் நெடுநாள் பிரிந்திருந்த நண்பன் ஒருவன் திரும்பி வந்துவிட்டானோ என எண்ணும்படியாக அவனை மிக மிகச் சிநேகத்துடன் பார்த்தது. கண்ணனைக் கண்டதும் அதன் சந்தோஷம் கட்டுக்கடங்காமல் போகவே தன் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு வித விதமாய்க் கோணிக்கொண்டு தன்னை முறுக்கிக் கொண்டு வேடிக்கைகள் செய்து காட்டியது. இவ்விதம் அந்த யானை நடந்து கொள்வது இதுவே முதல்முறை என்பதால் மக்கள் அனைவரும் ஆநந்தக் கூச்சலிட்டதோடு ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர். மேலே உப்பரிகையில் இருந்து கம்சன் ஆச்சரியம் அடங்காமல் அதே சமயம் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கக் குவலயாபீடம் தன் துதிக்கையால் கண்ணனைத் தடவியும் கொடுத்தது. அதன் கண்கள் நட்பின் ஒளியாலும், அன்பின் மொழியாலும் பளபளத்தன. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கண்ணனை எச்சரித்துக் கொண்டிருக்கையிலேயே விருந்தாவனத்து முரட்டுக்காளைகளை அடக்கிய அதே அன்போடும், விவேகத்தோடும் கண்ணன் அந்தப் பெரிய யானையிடமும் பேசிக் கொண்டும், அவ்வப்போது அதைத் தட்டித் தடவிக் கொடுத்துக் கொண்டும், கொஞ்சம் கொஞ்சமாய் அதன் அருகே முன்னேறினான். யானை தன் துதிக்கையால் கண்ணனை அலாக்காய்த் தூக்கித் தன் மேல் வைத்துக் கொண்டது. மக்கள் பயத்திலும் கவலையிலும் அலறினார்கள். சிலர் அவ்விடத்தை விட்டு ஓடினார்கள். பெண்களுக்கு பயத்தில் மயக்கமே வந்துவிட்டது. ஆனால் இத்தனைக்கும் கண்ணன் அலட்டிக் கொள்ளவே இல்லை.

குவலயாபீடம் கண்ணனைத் தன் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் நடந்துவிட்டுப் பின்னர் திரும்பி அதே இடத்திற்கு வந்து ஒரு பூவைப் பறிப்பது போன்ற மென்மையுடனே கண்ணனைக் கீழே இறக்கிப் பூமியில் விட்டது. சுற்றி இருந்த மக்கள் கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்தது. சந்தோஷக் கூச்சலிட்டது. வெற்றி, வெற்றி, கண்ணனுக்கு ஜெயம், எனக் கோஷித்தார்கள். கண்ணனையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அந்த யானை சற்று நேரத்தில் நிற்கமுடியாமல் மயக்கம் வந்தது போல் கீழே உட்கார யத்தனித்தது. கண்ணன் நின்று கொண்டிருக்க அவனுக்கு எதிரே அந்த யானை தன்னிரு கால்களையும் மடித்துக் கொண்டு மெல்ல மெல்ல உட்கார்ந்து மிக மெதுவாய்த் தன் கண்களை மூடிக் கொண்டது. அதன் துதிக்கை கண்ணன் பாதங்களைத் தொட்டபடி அது படுத்திருந்த காட்சி கண்ணனுக்கு அது தன் வணக்கங்களைத் தெரிவிக்கும் விதமாய் இருப்பதைப் பார்த்த மக்கள் “கண்ணன் ஒரு கடவுள்” எனப் புரிந்துகொண்டு குவலயாபீடம் அவன் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது என்றும், வேறு சிலர் குவலயாபீடம் கொல்லப் பட்டது என்றும் நினைத்துக் குழம்பினார்கள். ஆனால் கம்சனுக்குச் சந்தேகமே இல்லை. குவலயாபீடத்தைக் கண்ணன் வென்றுவிட்டான். இனி?? கம்சனால் நிற்கக் கூட முடியவில்லை. மாபெரும் கூட்டம் ஒன்று கோட்டை வாயிலிலும், பந்தல் வாயிலிலும் உள்ளே நுழைய முயல்வதையும் கண்ணன் முன்னேறி வருவதையும் கண்டான் கம்சன். அவன் கால்கள் நடுங்கின. அருகிலிருந்த கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டான்.


தன்னைத் தானே சமாளித்துக் கொண்ட கம்சன், அதற்குள்ளாக நந்தகுமாரர்கள் இருவரும் அந்தப்பந்தலினுள் நுழைந்து விட்டதையும், ஜனக்கூட்டம் இருவரையும் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, "ஜெய ஜெய நந்த, நந்தன" என்று கோஷமிடுவதையும் கவனித்தான். இருவரிலும் கண்ணனை மிக எளிதாய் அடையாளம் கண்டுகொண்டான் கம்சன். தன் அண்ணனைப் பின் தொடர்ந்து வ்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுவன், கரிய நிறத்தவன், ஆனாலும் என்ன அழகு? என்ன ஒளி? என்ன மரியாதை அண்ணனிடம்?? கம்சனால் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தன்னைத் தானே உலுக்கிவிட்டுக் கொண்டான். ஆஹா, இந்தச் சிறுவன் தான் எனக்கு எதிரியா? இவன் கையாலேயா நான் சாகப் போகிறேன்? கம்சனின் கோபம் அதிகரித்தது. தன்னை அடக்கிக் கொள்ள மிகப் பிரயாசைப் பட்டான். பற்களைக் கடித்துக் கொண்டான். இல்லை, இல்லை, நான் சாகமாட்டேன் இவன் கைகளால். கடைசி வரையில் ஒரு கை என்ன, இரு கையாலும் பார்த்துவிடுவோமே. என்ன நடக்கிறது என, நானா? அவனா? ம்ம்ஹும், ம்ம்ஹும், இறுதிவரை போராடி முடிந்தால் தேவகியின் அந்தப் பிள்ளையின் கழுத்தை இந்தக் கைகளால் நெரித்துக் கிழிக்கவேண்டும். அது நடக்கவேண்டும். கம்சன் தன் கைகளைத் தட்டி, ஏவலர்களை அழைத்தான்.

Saturday, December 05, 2009

கனவு கலைந்தது!

ஆறு மாசமா ஏதோ ஒரு கனவிலே மூழ்கி இருந்தாச்சு. இப்போக் கனவு கலைந்தது. யதார்த்தத்துக்கு வந்தாச்சு. அநேகமாய் இனி பதிவுகள் ஒழுங்காய் வரும்னு நம்பறேன். பின்னூட்டங்களில் யாரும் கேட்காவிட்டாலும், தனி மடல்களிலும், தொலைபேசியிலும் நண்பர்கள் பதிவுகள் எப்போவோ ஒரு முறை போடுவதைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. அதே போலப்பலர் பதிவுகளுக்கும் என்னால் போகவும் முடியலை. தனி மடல் அனுப்பிக் கூப்பிடறவங்க பதிவுகளே நிறைய இருப்பதால் எல்லார் பதிவுக்கும் போகவும் முடியலை. பல்வேறு தவிர்க்கமுடியாத காரணங்களால் ஆன இந்தத் தாமதங்கள் இனி இருக்காது என நம்புகிறேன். கூடிய வரையிலும் மூன்று நாளைக்கு ஒரு பதிவாவது போட முயல்கிறேன். நன்றி. கண்ணன் அடுத்த முக்கியமான நடவடிக்கையை ஆரம்பிக்கப் போகிறான். தெரிந்த கதை எனப் பலரும் சொன்னாலும் எப்படி நடந்திருக்கும், அதில் உள்ள சாத்தியக் கூறுகள், மேலும் என்ன நடந்திருக்கும் என்பதை இளைய தலைமுறைக்குப் புரிய வைப்பதற்காக எழுதும் இந்தக் கதைக்கு ஆதரவு கொடுக்கும் பலருக்கும் நன்றி.

Saturday, November 28, 2009

வலையில் அகப்பட்டுக்கொண்ட புலி!





வாழ்த்துகள் புலி! வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துகிறோம்.

கீதா&சாம்பசிவம்





வாழ்த்துகள் புலி: திருமண நாள் 29-11-09 ஞாயிறு.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கண்ணனுக்கு ஆபத்து!

நம்பிக்கையோடு எழுந்தான் கம்சன். அவனுடைய நம்பிக்கைக்கு உகந்த யானைப்படைத் தலைவன் ஆன அங்காரகன் இன்று காலை சூரியோதயம் ஆன சில நிமிடங்களில் கம்சன் சொன்னதைச் செய்து முடிப்பான். குவலயாபீடம், அந்தக் கோபக்கார யானையின் கால்களின் கீழே அந்தக் கண்ணன், மாயக்காரன், கடவுளாம் கடவுள் அவன் அந்த யானையின் காலடிகளில் மிதிபட்டு எலும்பு நொறுங்கிச் சாகப் போகின்றான். கம்சனின் காதுகளில் கண்ணனின் எலும்புகள் நொறுங்கும் சப்தம் கேட்டதோ என்னும் அளவுக்கு அவன் அதை உறுதியாக எதிர்பார்த்தான். தன்னுடைய பரமவைரியானவன் ஒரேயடியாக அழிந்து போவதை, அதுவும் யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் மடிவதைக் கம்சன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவனுடைய நம்பிக்கைக்கு உரிய பணியாளர்கள் வந்ததும் தன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டான். எந்நேரமும் தன் யானைப்படைத் தலைவன் கொண்டுவரப் போகும் இனிய செய்திக்காகக் காத்திருந்தான். அதைக் கேட்டதும் மல்யுத்தம் நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிட அவன் அரண்மனை உப்பரிகைக்குச் செல்லவேண்டும். யாதவத் தலைவர்கள் அனைவரும் கண்ணன் இறந்து போனதை நினைத்துச் செய்வதறியாது தவிப்பதை அங்கிருந்து பார்த்து மகிழவேண்டும். அவர்களின் ஒப்பற்ற கடவுள் யானையின் காலடியில் நாசமானதை எண்ணியும், நாரதரின் தீர்க்கதரிசனம் பொய்த்துப்போனதை எண்ணியும் அவர்கள் வருந்துவதைக் கண்டு மகிழவேண்டும்.

அப்போது அவன் கனவுகளை அழிக்கும்விதமாக ஒன்று நடந்தது. திரிவக்கரை வந்தாள் தன் வழக்கமான நேரத்தில், வழக்கமான வாசனைத்திரவியங்களோடு. நேற்று அவளுக்கு நேர்ந்ததைப் பற்றிக் கம்சன் கேள்விப்பட்டானே தவிர அவளை நேரிடையாகப் பார்க்கவில்லை. இது யார்? யாரிந்த அழகி? ஆஹா, நம் அரண்மனையில் நமக்கும் தெரியாமல் இப்படி ஓர் பெண்ணரசி இருந்திருக்கிறாளா? இது என்ன ஆச்சரியம்? கம்சனுக்கு வாசனைத் திரவியங்களை நீட்டிய திரிவக்கரை, வழக்கம்போல் அவனை வாழ்த்தினாள். அவள் குரலைக் கேட்டு அசந்து போன கம்சன், “திரிவக்கரை, நீயா? இது நீயா? என்னால் நம்பமுடியவில்லையே? என்ன ஆயிற்று உனக்கு?” என்று கேட்டான். “ஆம், இளவரசே, நானே தான். எனக்கு உடல் நேராகிவிட்டது. அனைவரையும் போல் நன்றாக ஆகிவிட்டேன்.” தன்னைத் தானே பெருமையுடன் நோக்கியவள், கம்சனுக்கு வாசனைத் திரவியங்களை அளித்தாள். கம்சன் பேசாமல் யோசித்த வண்ணம் அவள் நீட்டிய வாசனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டான்.

அவனுக்கு உடனேயே யானைக்கொட்டாரத்திற்குச் சென்று குவலயாபீடம் கொட்டாரத்தில் இருந்து விளையாட்டுகள் நடக்கும் மைதானத்தில் நுழையும்போது அதன் காலடிகளில் கண்ணன் நசுங்கிச் சாவதைக் கண்டு மகிழும் ஆசை தோன்றியது. ஆனால் நேரே அவன் அந்த இடத்திற்குச் செல்வது அவ்வளவு உசிதம் இல்லை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். ஆகவே அனைத்துப் பணியாளர்களையும் வெளியே போகச் சொல்லிவிட்டுச் சற்று யோசித்தான். அறைக்கதவை நன்கு சார்த்தித் தாளிட்டுவிட்டு, தன் தலைக்கிரீடத்தையும், உடைவாளையும் எடுத்து அணிந்துகொண்டான். அறையின் ஒரு பக்கச் சாளரத்தில் இருந்து பார்த்தால் குவலயாபீடம் அந்தப் பெரியமஹாசபைக்கெனப் போட்டிருக்கும் பந்தலினுள் நுழையும் காட்சி நன்கு தெரியும். அந்தச் சாளரத்திற்குப் போய் நின்றுகொண்டான். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட ஆரம்பித்திருந்தனர். கம்சனுக்கு நெஞ்சம் திக் திக்கென அடித்துக் கொண்டாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு நிமிஷமும் நகருவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. பொறுமையை வரவழைத்துக்கொண்டு வெளியே பார்த்தவண்ணமிருந்தான். மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அனைத்துத் தரப்பினரும் வந்து அவரவருக்குரிய இருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். சாமானிய மக்கள் தங்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த பார்வையாளர் இடத்திற்குச் சென்று அவரவர் விருப்பம் போல் வசதியான இடம் பிடித்துக் கொண்டனர். பெண்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த இடமும் நெருக்கடி தாளாமல் பிதுங்கிக் கொண்டிருந்தது. விதம் விதமாய்த் தங்களை அலங்கரித்துக்கொண்டு பெண்கள் வந்திருந்தனர். யாதவத் தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் மகதநாட்டு வீரர்கள் முற்றுகையிட்டது போல் சூழ்ந்திருந்ததையும் கம்சன் கவனித்துக் கொண்டான். வ்ருதிர்கனன் தன் வாக்கை அருமையாக நிறைவேற்றுகிறான் என்பதில் மனம் மகிழ்ச்சி கொண்டான்.

சங்கங்கள் முழங்கின. பேரிகைகள் ஆர்ப்பரித்தன. மக்கள் கூட்டம் அமைதியாக அமர்ந்தது. அப்போது கம்சனின் அரண்மனையைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களும் தங்கள் கைகளைத் தட்டிக் கொண்டும், தொடையில் தட்டி மற்றவர்களை அழைத்துக் கொண்டும் தங்கள் வீரத்தைத் தங்களுள் ஒருவரோடொருவர் விளையாட்டாய் மல்யுத்தம் செய்து காட்டியும் அரங்கைச் சுற்றி வந்தனர். கம்சனுக்கு உள்ளூரப் பெருமையும், கர்வமும் மிகுந்தது. அவனுடைய மல்யுத்த வீரர்களில் முக்கியமானவர்கள் ஆன சாணுரனையும், முஷ்திகனையும் தோற்கடிக்கக் கூடிய மல்லன் இனிமேல்தான் பிறக்கவேண்டும். சாணுரன் பார்க்க ஒரு மாமிசமலைபோல் இருந்தாலும் அவன் மல்யுத்த நிபுணன். முஷ்திகனோ உயரமும், பருமனும் அளவோடு அமையப் பார்க்க ஒல்லியாகக்காணப்பட்டானே தவிர அவனுடைய ஒரு மல்யுத்தக் குத்தை எவராலும் தாங்கமுடியாது. சிந்தனையில் ஆழ்ந்திருந்த கம்சனுக்கு ஆரவாரசப்தங்கள் காதில் விழ, அட, என்ன ஆயிற்று?? இதோ! குவலயாபீடம் உள்ளே நுழையப் போகிறது. அங்காரகன் தான் அதன் மேல் அமர்ந்து வருகிறான். சொன்னால் சொன்னபடி செய்கிறானே. பட்டத்து யானையான இந்தக் குவலயாபீடம் இம்மாதிரி முக்கியமான நிகழ்ச்சிகளிலேயே அனைவரின் பார்வைக்காக அழைத்துவரப்படும். யானைகளே பெரியவை என்றாலும் இந்தக் குவலயாபீடம் மிக மிகப் பெரியது. அதன் தந்தங்களோ மூன்றடிக்கும் மேல் நீண்டு காணப்பட்டன. துதிக்கை மட்டுமே ஆறடிக்கு நீண்டிருக்கும்போல் இருந்தது. மிக அழகாக இந்த நிகழ்ச்சிக்கென அலங்கரிக்கப் பட்டு உள்ளே வந்து எப்போது வழக்கம்போல் அது நிற்கும் இடத்திற்கு வந்து, தன் துதிக்கையை உயர்த்தி சத்தமாகப் பிளிறியது. அங்கிருந்த அனைவருக்கும் அது வணக்கம் சொல்வதைப் போல் அமைந்தது அது.

ஆனால்…….ஆனால்…….ஆனால்……. என்ன இது? குவலயாபீடத்தின் கோபம் எங்கே போயிற்று? யாரைப் பார்த்தாலும் கோபம், எவரையும் அருகே நெருங்கவிடாது. அதைப் பழக்கும் அங்காரகனே சமயத்தில் மிகவும் கஷ்டப் படுவானே? இன்று என்ன அனைவரையும் பார்த்து துதிக்கையை ஆட்டி விளையாடி அழைக்கிறதே? இதற்கு முன் எப்போதும் காணாவகையில் அனைவரிடமும் நட்பாய்ப் பழகுகிறதே? இது என்ன அதிசயம்? அல்லது இது என் கற்பனையோ? கம்சன் தன் கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டு மீண்டும் கவனித்தான். இல்லை இல்லை. இது உண்மையே தான். குவலயாபீடம் தான் அப்படி எல்லாம் அன்பாய் நடந்து கொள்கிறது. குவலயாபீடம் இப்போது அந்தப் பந்தலின் தலைவாயிலில் போய் நின்றுகொண்டு நாட்டியம் ஆடுவதைப்போல் ஒரு காலை முன் வைத்து மற்றக் கால்களைப் பின் வைத்துக்கொண்டு எதற்கோ தயாராய் இருப்பதைப்போல் நிற்கின்றதே? கம்சன் கூட்டத்தைக் கவனித்தான். கூட்டம் மேலும் மேலும் வந்துகொண்டிருக்கக் கூட்டத்தின் ஒரு பக்கம் கடல் அலை போல் மக்கள் போய் மோதுவதும், பின்னர் திரும்பி வருவதுமாய் இருந்தனர். என்னவெனக் கூர்ந்து கவனித்தால், அங்கே இரு இளைஞர்கள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கூட்டத்தினர் அவர்களில் கால்களில் விழுவதற்குச் செல்வதும், விழுந்தவர் அவர்கள் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வதையும், மேலும் சிலர் கிட்டே போய்த் தொட முயல்வதையும், பெண்கள் அருகே நெருங்க முடியாமல் அவர்கள் நடந்து சென்ற இடத்தின் மண்ணை எடுத்துத் தலையில் போட்டுக் கொள்வதையும் கண்டான்.

ஆஹா, இவர்கள் யாரெனச் சொல்லாமலே புரிந்துவிட்டதே! தேவகியின் மைந்தர்களன்றோ? ஒருவன் நீலநிறத்துக்கண்ணன், மஞ்சள் நிற ஆடை தரித்துத் தலையில் மயில் பீலியை வைத்துக் கொண்டு அலங்கரித்துக் கொண்டுள்ளான்.மற்றொருவன் சிவந்த நிறத்தில் பார்க்க மல்லன் போல் காண்கின்றான். நீல நிற ஆடை தரித்துள்ளான். ஆஹா, இவர்களுக்கென இந்த ஆடைகள் பொருத்தமாய் அமைந்துவிட்டிருக்கிறதே. மக்கள் மயங்கிப் போவதில் என்ன ஆச்சரியம்? எதுவுமில்லை, முட்டாள் மக்கள். கண்ணன் நடந்து முன்னேறி வர வர, கம்சனின் கோபமும் மேலோங்கிக் கொண்டு வந்தது. அவன் ரத்தம் கொதித்தது. கடைசியில் அவன் எதிரி, பரம வைரி வந்தேவிட்டான். அவனைக் கொல்லவெனப்பிறந்திருப்பதாய் நாரத முனியில் இருந்து வியாசரிஷி வரை அனைவரும் சொல்லிக்கொண்டிருப்பவன் இவனே. ஹா, ஹாஹா, அவன் என்னை அழிக்கும் முன் இதோ இந்தக் குவலயாபீடம் அவனை அழிக்கப் போகிறதே! கம்சன் காத்திருந்தான். அந்த நிகழ்ச்சியைக் காணவேண்டி மிக ஆவலோடு காத்திருந்தான். கண்ணனும், பலராமனும் குவலயாபீடம் இருக்குமிடம் நெருங்கிவிட்டனர். இன்னும் சில நொடிகள் தான். இதோ குவலயாபீடம் இருவரையும் தன் கால்களில் போட்டு மிதிக்கப் போகிறது. மூச்சை அடக்கிக் கொண்டு கம்சன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

Friday, November 27, 2009

கண்ணன் வருவான்,கதை சொல்லுவான் - கம்சனின் நம்பிக்கை!

மதுரா நகருக்கு யாதவத் தலைவர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். ஏற்கெனவே அங்கேயே இருந்த தலைவர்களும் இவர்களோடு சேர்ந்துகொண்டனர். அனைவருக்கும் அது இளைஞன் ஆகட்டும், அல்லது வயது முதிர்ந்த யாதவகுலத் தலைவனாகட்டும், எல்லார் பேச்சுக்களும் கடந்த இரு நாட்கள் நடந்த நிகழ்வுகள் பற்றியே ஆகும். அதுவும் அனைவரிலும் மிகவும் வயது முதிர்ந்த, அனைவராலும் மிக மிக மதிக்கப் பட்ட அந்தகர்களின் அரசன் எனப்பட்ட பஹூகாவும், அவன் மகனும் திடீரென மறைந்தவிதத்தை எவராலும் ஜீரணிக்கமுடியவில்லை. மகத நாட்டில் இருந்து கம்சன் வரவழைத்துத் தன்னுடைய அரண்மனைப் பாதுகாவலுக்கு என ஏற்பாடு செய்து இருக்கும் மகதநாட்டு இளவரசனின் கண்காணிப்பில் அவர்கள் இருவரும் ஒருவேளை வீட்டுச் சிறை வைக்கப் பட்டிருக்கலாமோ எனப் பேச்சாய் இருந்தது. சிலர் அதை திட்டவட்டமாய் மறுத்தனர். தேவகியின் இரு பிள்ளைகளும் மதுராவிற்கு வந்திருப்பதையும், அந்தக் கண்ணன் என்பவனால் திரிவக்கரையின் கூன் அதிசயமான முறையில் நீங்கியதையும், தநுர்யாகத்துக்கென வைக்கப் பட்டிருந்த வில் முறிக்கப் பட்டதையும், ருக்மியைத் தூக்கி எறிந்ததையும் மதுரா மக்கள் மட்டுமின்றி யாதவகுலத் தலைவர்கள் மத்தியிலும் ஒரே பேச்சாக இருந்தது. தேவகியின் மக்களுக்குக் கம்சன் அளிக்கப்போகும் தண்டனையை எண்ணி அவர்கள் மிகவும் கவலையும், பயமும் அடைந்தார்கள். அது விலகாமலே அன்றிரவு, அவர்கள் அனைவரும் வசுதேவரை அவர் மாளிகையில் சென்று சந்தித்தனர்.

ஒரே சலசலப்பு. மெல்லிய குரல்களில் கேள்விகள், பதில்கள், முடிவுதெரியாத வினாக்களை எழுப்பியவர்கள், அவர்களைச் சமாதானம் செய்தவர்கள், தயக்கத்துடன் இருந்தவர்கள், கம்சனிடம் பயம் நீங்காதவர்கள். பலதரப்பட்டவர்களும் அங்கே கூடிக் கலந்தாலோசித்தனர். சிலர் அங்கிருந்து வெளியேறுவதே உத்தமம் எனச் சொல்ல, வேறு சிலர் கம்சனுக்குப் பயப்படுவதா? நேருக்கு நேர் போர் அறிவித்துப் போராடி ஜெயிப்போம், இல்லை எனில் மரணத்தைத் தழுவுவோம், வெற்றி அல்லது வீர மரணம் எனக் கோஷித்தனர். அக்ரூரரும் அங்கே இருந்தாலும் அவருக்கு இறைவன் மேலும், தாங்கள் அன்றாடம் வணங்கும் பசுபதிநாதர் மேலும், நாரதர் சொல்லிச் சென்ற தீர்க்க தரிசனத்தின் மேலும் நம்பிக்கை வைத்துக் கண்ணன் வருவான், கம்சனைத்தீர்ப்பான் எனச் சொன்னாரே தவிர அவரிடம் வேறு ஒன்றும் பெரிய அளவில் திட்டங்கள் இல்லை. அந்த அளவிற்கு அவரால் யோசிக்கவும் முடியவில்லை. “காத்திருங்கள், கண்ணன் காப்பான்.” இது ஒன்றே அவருடைய பதிலாக இருந்தது.

கூட்டத்தில் ஒருவர் சற்றே கிண்டலாய், “அக்ரூரரே, நாரதர் சொன்னதை நீர் இன்னமும் நம்புகிறீரா?” என்று கேட்க, தான் நம்புவதாகவே அக்ரூரர் சொன்னார். தேவகியின் பிள்ளையைத் தாம் பார்த்துப் பழகி இருப்பதாகவும், அவனால் கட்டாயம் தாம் அனைவரும் நினைக்கும் எண்ணம் ஈடேறும் எனவும் உறுதியாகச் சொன்னார் அக்ரூரர். அப்படி நடக்காவிட்டால் என ஒருவர் எழுப்பிய கேள்விக்குத் தங்கள் கோழைத்தனத்துக்குக் கடவுள் அளிக்கும் தண்டனையாக அது இருக்கும் என்ற அக்ரூரர் ஆனால் தாம் உறுதியாகக் கண்ணனால் காப்பாற்றப் படுவோம் என நம்புவதாய்த் தெரிவித்தார். அவநம்பிக்கையோடு அவரைப் பார்த்தனர் பெரும்பாலான யாதவத் தலைவர்கள்.

“வேறு என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள் அவனை? அவன் வந்துவிட்டான். நம் ரக்ஷகன் அவன். வந்ததுமே அவன் செய்த முதல் வேலை திரிவக்கரையின் கூனை நிமிர்த்தியது தான். அது ஒன்றே போதாதா அவன் திறமையை நிரூபிக்க. திரிவக்கரையை இப்போது நேரில் பார்த்தால் அசந்து போவீர்கள். அதோடு மட்டுமா? ருக்மியைத் தூக்கி எறிந்திருக்கிறான் அநாயாசமாய். தநுர்யாகத்துக்கென வைத்திருந்த வில்லை உடைத்திருக்கிறான். இன்னும் என்ன வேண்டும்?” என்று கேட்டார் அக்ரூரர். அக்ரூரர் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கே இருவர் நுழைந்தனர். அனைவரும் பேச்சில் கவனமாய் இருந்ததால் யார் எனக் கவனிக்கவில்லை. அப்போது கர்காசாரியாரின் குரல் அனைவர் குரல்களுக்கும் மேலே கேட்டது. “ இளவரசர் தேவகனின் அருமைப் பெண்ணான தேவகி இங்கே உங்களிடம் பேச விரும்புகிறாள். அவள் முடிவு ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறாள்” என்று சொன்னார் கர்கர். அனைவரும் தூக்கிவாரிப் போட்டுத் திரும்பினார்கள். தேவகியின் மெலிந்த உருவம் கண்ணில் பட்டது. உலகத்துத் துயரங்களையெல்லாம் தாங்கித் தாங்கி அவள் உருவம் மெலிந்ததோ என்னும்படிக்கு அவள் சோகம் அவளின் ஒரு அசைவிலேயே தெரியவந்தது. வெளுத்த, இளைத்த முகத்தில் தெரிந்த கண்கள் மட்டும் பெரியதாய் இருந்தன. அந்தப் பெரிய கண்களால் அனைவரையும் அவள் பார்த்தபோது அந்தக் கண்களின் ஆழத்தில் தெரிந்த இனம்புரியாத சோகக் கடல் அவர்கள் அனைவரையும் அதில் முழுக அடித்துவிட்டது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.

இரு முறை பேச முயற்சி செய்துவிட்டு முடியாமல் பின்னர் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு கிணற்றின் ஆழத்திலிருந்து வருவது போன்ற மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள் தேவகி. “வணக்கத்துக்கு உரிய தலைவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது இங்கே இந்த சபையில் உங்கள் மத்தியில் பேச நேர்ந்ததுக்கு என்னை ,மன்னிக்க வேண்டுகிறேன். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். அது….அது…..அது…… அப்படி ஒருவேளை என் பிள்ளைகளைக் கம்சன் கொன்றுவிட்டானென்றால், நான் அக்னிப்ரவேசம் செய்துவிடுவேன். இதுவே என் முடிவு.” என்றாள் தேவகி.

அறையில் மெளனம் சூழ்ந்தது சில விநாடிகளுக்கு. முதலில் சமாளித்துக் கொண்டவர் அக்ரூரர் தான். “தேவகி, நீ இறப்பதா? அதுவரை நாங்கள் அனைவரும் எங்கள் உயிரை வைத்துக் கொண்டிருப்போமா? உன் குமாரர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் முதலில் உயிரை விடுவது நாங்களாய்த் தான் இருக்கும். நான் உனக்கு வாக்கு அளிக்கிறேன்.” என்றார் அக்ரூரர். தேவகி அவ்வளவில் அறையை விட்டு வெளியே செல்ல அனைவரும் அக்ரூரர் கூறிய வண்ணமே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டம் கலைந்தது. அனைவர் மனமும் கனத்துப் போயிருந்தது. அங்கே கம்சனோ? அவன் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தானா? மனம் அமைதில் இருந்ததா? சந்தோஷமாகத் தன் அரச வாழ்க்கையை அநுபவித்துக் கொண்டிருந்தானா? இல்லை! அதோ கம்சன்! அவன் அந்தரங்க அறையில். அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. மனம் தத்தளிக்கிறது. அவன் நிலைமை அவனுக்கு ஒருவாறு புரிந்தே இருந்தது. யாதவத் தலைவர்கள் யாருக்குமே அவன் நன்மை செய்யவில்லை. அனைவரையும் பகைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என உதவ யாருமே இல்லை. இப்போது அதிகாரத்தில் இருப்பதால் பயந்துகொண்டு செய்கின்றனர். ஆனால் அவன் யாரை நம்புவது?

அவன் அஸ்வமேத யாகக்குதிரையோடு செல்லும் முன்னே அனைவரையும் ஒருவழியாக அழித்திருக்கவேண்டுமோ? அந்தச் சிறுவர்களையும் வந்ததுமே அழித்திருக்கவேண்டும், அல்லது அக்ரூரருக்குப் பதிலாக அவன் நம்பிக்கைக்கு உகந்த படைத் தலைவர்கள் யாரையேனும் அனுப்பி இருந்தால் அந்தப்பிள்ளைகளை ஒழித்திருப்பார்களோ? தப்புச் செய்துவிட்டோமோ? இல்லை, இல்லை, இப்போவும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை. இன்னும் நேரம் இருக்கிறது,இன்று இரவு மட்டும் அனைத்து யாதவத் தலைவர்களையும் ஒரே சமயத்தில் அழிக்க முடிந்தால்???? ம்ஹும்,சாத்தியமில்லை, மற்ற நாட்டுத் தலைவர்களும், அரசர்களும் தநுர்யாகத்திலும், அதை ஒட்டிய வீரப்போட்டிகளிலும் பங்கெடுக்க வந்திருக்கின்றனரே. அந்த நந்தனின் மகன்கள்??அவர்களையாவது ஒழிக்க முடியுமா என்றால்?? அதுவும் நடக்காது போல் இருக்கிறது. அவர்கள் தங்கி இருப்பது கிராமத்து மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்களில், மக்கள் கூட்டத்திற்கு நடுவில். அதுவும் அனைத்து மக்களும் அந்தக் கிருஷ்ணனை ஏதோ கடவுள் தான் பூமிக்கு வந்துவிட்டார் எனச் சொல்லிக் கொண்டு தரிசனம் செய்யப் போவதும், வருவதுமாய் இருக்கின்றனராமே! அவனை இப்போது இந்த இரவில் கொல்லமுயன்றால் பழி நேரிடையாக நம்மீது வரும். ம்ம்ம்ம்ம்ம் அங்காரகனிடம் சொல்லி இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. பார்க்கலாம். பொழுது விடியட்டும்.

பொழுதும் விடிந்தது. யாருக்கு????