எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 30, 2011

கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி

எல்லாரும் பெண் பார்க்கும் சீனுக்கு ஆவலோடு காத்துட்டு இருக்கீங்க. அதிலே ஒண்ணும் சிறப்பான செய்திகள் கிடையாது. சப்புச் சப்புனு தான் இருக்கும். இப்போப் போல அப்போல்லாம் பெண்ணும், பிள்ளையும் பேசிக்கிறதோ, அப்புறமும் கடிதத் தொடர்போ அல்லது, தொலைபேசியில் தொடர்பு வைச்சுக்கிறதோ, வெளியே போறதோ கிடையாது. மறுநாள் காலையிலே விடிஞ்சதும், விடியாததுமாய்க் காப்பி போடச் சொல்லி என் தம்பியும், அவனோட நண்பன் கிருஷ்ணன் என்னும் பையருமாய்க் காப்பியை ஒரு கூஜாவில் விட்டுப் பெரியப்பா வீட்டுக்கு எடுத்துண்டு போனாங்க. பெரியப்பா வீடு கிட்டத்தான் நடந்து போகும் தூரம். அதுக்குள்ளே அங்கே பெரியம்மாவே காப்பி போட்டுக் கொடுத்துட்டு, அவங்களைத் தயார் செய்து அழைத்து வர வண்டியெல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சுட்டாங்க. காலை ஏழரைக்குள் அவங்க வரதுக்கு நல்லவேளைனும், ஒன்பது மணிக்குள்ளாகப் பெண்ணைப் பார்த்துடணும்னும் ஏற்பாடு. என்னோட இரண்டு மாமாக்கள், மாமிகள், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, இன்னொரு பெரியம்மா(பெரியப்பா இல்லை) இரண்டு பெரியப்பா வழி அண்ணன்மார்கள்னு வீடு நிறைய ஜே ஜேனு கூட்டம். இந்த அழகிலே என்னோட சித்திக்கு என்னுடைய சிநேகிதிகள் யாருமே வரலைனு குறை. கூடத் துணைக்கு ஒருத்தருமே இல்லையே உன் வயசுக்காரங்கனு சொல்லிட்டே இருந்தாங்க.

சாதாரணப் புடைவைதான் கட்டுவேன், நகையெல்லாம் போட்டுக்க மாட்டேன்னு நான் அடம் பிடிக்கப் பெரியவங்க என்னைப் படுத்தி எடுக்க, என் கிட்டே இருக்கிற பட்டுப் புடைவைகளில் ஒண்ணைக் கட்டிப்பேன்னு சொல்ல, அதையும் கேட்காத பெரியவங்க சித்தியோட காஸ்ட்லி புடைவையை எனக்குக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்திக் கட்ட வைச்சாங்க. சும்மாவே எனக்குக் கொஞ்சம் சில துணிகளெல்லாம் உறுத்தல் இருக்கும். அதோட வெயிலுக்கு வந்த வேனல் கட்டியின் இம்சை வேறே. கட்டியாலே முகம் சிவந்ததா, கோபமா, இல்லாட்டிப் பெண்பார்க்க வரதினாலே வெட்கமானு கேட்கிற அளவுக்கு முகம் ஜிவு ஜிவுனு இருந்தது எனக்கே தெரிஞ்சது. அம்மாவுக்கோ வருத்தம் தாங்கலை. சாதாரணமாக எல்லாரையும் வம்பு பண்ணிண்டுச் சிரிச்சுண்டு, சீண்டிண்டு இருக்கும் எனக்கு இது எல்லாம் அவஸ்தையா இருந்ததுனு புரியலை. என்னோட இயல்பை மீறி நாடகத்திலே வேஷம் போடறாப்போல் இருந்தது. ஆனால் வேறே வழியே இல்லை. எல்லாரும் வெட்கம் அவளுக்குனு சொல்ல, நானும் பேசாமல் வாயை மூடிண்டேன்.

பெரியப்பாவும், பெரியம்மாவும், அண்ணாவுமாய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சிண்டு வந்து எங்க போர்ஷனுக்கு மேல் இருக்கும் மாடிக்குப் போயிட்டாங்க. முதல்நாளே மாடி அறையைப் பெருக்கித் துடைச்சு நான் தான் கோலம் போட்டு வைச்சிருந்தேன். ஹிஹிஹி, அப்போல்லாம் கோல எக்ஸ்பர்ட்ங்கறதாலே சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் எல்லாம் கூப்பிடுவாங்க கோலம் போட. இங்கேயும் கோலம் நானே போட்டிருந்தேன். கீழே நாங்க இருக்க முதல்லே டிபன் கொடுக்கணும்னு சொல்லி என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் டிபனைக் கொடுக்கச் சொல்லிட்டாங்க. சரினு எல்லாருமாய் டிபன் சாப்பிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைச் சாப்பிட்டியானு ஒருத்தரும் கேட்கலை. எனக்குக் கொடுக்கவும் இல்லை. அதுக்கப்புறமாய்ப் பெண்ணை அழைச்சிண்டு வாங்கனு கூப்பிடவே, சித்தி என்னை அழைச்சுண்டு மாடிக்குக் கூட்டிச் சென்றார். பொதுவாகவே மதுரைப் பக்கம் பெண்களுக்கு அநாவசியக் கூச்சம்னு நான் பார்த்ததில்லை. எல்லாரையும் கண்களுக்கு நேரேயே பார்த்துப் பேசுவோம். அதனால் எனக்கும் கூச்சம்னு எதுவும் இல்லை, தோன்றவும் இல்லை. நன்றாகவே பார்த்தேன். அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, எம்புட்டு உயரம்! இதான் முதலில் தோன்றியது. அவங்களுக்கும் தோணி இருக்கும். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. என்னோட மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு எங்களுக்கெல்லாம். மிச்சம் இருப்பது என் மாமனாரும், என் கணவரும் தான். குட்டி மைத்துனரும் கூட வந்திருந்தாலும் அவர் அப்போக் குழந்தை! அப்போ எல்லாம் பெண்ணும், பிள்ளையும் தனியாப் பேசிக்கிறதுனு கிடையாது. பொதுவாய் என் மாமனார் ஓரிரு கேள்விகள் கேட்க நான் பதில் சொன்னேன். பாடத் தெரியுமானு கேட்டதுக்குத் தெரியாதுனு சொன்னேன். என் கணவர் தனியா எதுவும் கேட்கலை. அப்புறமாக எல்லாருமாய் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மேலே செய்ய வேண்டிய கல்யாண ஏற்பாடுகள் பற்றியே பேச்சு நடந்ததால், நிச்சயம் செய்வதற்கு நாள் பார்த்துவிட்டு பிள்ளை வீட்டில் கடிதம் போட்டதும், வேலை துவங்கவேண்டும் என்ற அளவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மதியம் சாப்பாடும் ஆனதும், அவங்க சொந்தக் காரங்க காந்திகிராமத்தில் இருப்பதால் அங்கே போயிட்டு ஊருக்குப் போகப் போவதாய்ச் சொல்லவும், அப்பா அப்படியே என் பாட்டிக்கு மாப்பிள்ளையைக் காட்டவேண்டும் என்று கூறிவிட்டு டிவிஎஸ் நகரில் இருந்த என் மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதற்கு முந்தைய வருஷம் தான் தாத்தா இறந்து போயிருந்ததால் அப்புறம் பாட்டி வெளியேயே வரவில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கும் மேல் குடும்பம் நடத்தி இருக்கார். ஐந்து வயசில் கல்யாணம் ஆகி இருந்தது அவருக்கு. அங்கே கூட்டிப் போய்விட்டுப் பின்னர் மதுரை செண்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் அப்பா அவங்களை காந்தி கிராமத்துக்கு பஸ்ஸில் ஏற்றி விட்டார். திரும்பி வருகையில் அப்பா முகம் சுரத்தாகவே இல்லை. என்னனு எங்களுக்கு யாருக்கும் புரியவில்லை.

மறுநாள் அப்பாவைப் பார்க்க அப்பாவின் இன்னொரு நண்பர் வரவே அவரிடம் அப்பா முதல்நாள் பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததையும், திரும்பிப் போகும்போது என் மாமனார் பெண் உயரம் கம்மி, பிள்ளைக்கு ஏற்ற உயரம் இல்லைனும் பேசிக்கொண்டதாயும், பிள்ளையின் அத்தை பெண் ஒருத்தி இருப்பதால் அவளும் உயரமாயும் இருப்பாள் என்பதால் அதையே முடிச்சுடலாமா என யோசித்துக்கொண்டு பேசிக்கொண்டதாயும் சொன்னார். அப்போப் பார்த்து எங்க ஜோசியர் மாமா வந்தார். அவர் ரொம்ப ஏழை. எல்லாருக்கும் ஜோசியம் பார்க்கவும் மாட்டார். பார்த்ததுக்குப் பணமும் வாங்க மாட்டார். எப்போவானும் அவருக்குத் தேவை அவசியம் என்று தோன்றினால் மட்டுமே அப்பாவிடம் வந்து பணம் வாங்கிப்பார். கூடியவரையில் திரும்பக் கொடுப்பார். அப்பா வேண்டாம்னாலும் விட்டதில்லை. எதாவது அவசியம் என்றால் அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு போடுங்கனு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். ரொம்ப ஆசாரம் என்பதால் அன்னிக்கு வீட்டில் யாருக்கானும் அசெளகரியம், வீட்டு விலக்கு என்று தெரிந்தால் உள்ளேயே வரவும் மாட்டார். அப்படிப் பட்டவர் அவர் சொல்லித் தான் அப்பா இந்த வரன் விஷயத்திலேயே இறங்கி இருந்தார். இப்போ அவர் பெண் பார்த்துவிட்டுப் போனது என்ன ஆச்சுனு கேட்க வந்தவரை அப்பா ஒரு பிடி பிடித்துவிட்டார். முதல்லேயே வேண்டாம்னு சொன்னேன். இப்போப் பாருங்க பெண்ணைப் பார்த்துட்டு இப்படிப் பேசிக்கறாங்கனு சொல்லி விட்டார். ஆனால் அவரோ அசரவே இல்லை. மறுபடியும் ஜாதகத்தைப் பாருங்கனு அப்பா சொல்ல, "தேவையே இல்லை. :" னு சொல்லிட்டு ஏதோ மனக்கணக்காய்ப் போட்டுவிட்டு, "உங்க பெண்ணுக்கு இந்தப் பிள்ளைதான். அடுத்த மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் ஆகிடும். வைகாசி மூணாம் தேதிக்குள் உங்க பொண்ணுக்குக் கல்யாணம் இதே பிள்ளையோட நடக்கும்." னு சொல்லிட்டு வேறே எதுவும் பேசாமல் கிளம்பிட்டார். தள்ளாடிட்டு போனவரை அப்பா கூப்பிட்டு, சாப்பிட்டுட்டுப் போங்கனு சொல்ல, "இன்னிக்கு எனக்கு இங்கே போஜனம் இல்லைனு தெரிஞ்சு தான் வந்தேன். நான் அப்புறமா வரேன்"னு சொல்லிட்டுப் போயிட்டார்.

அப்பா சொன்னதற்கு ஏற்பப் பெண் பார்த்துவிட்டுச் சென்ற உடனேயே எக்ஸ்ப்ரஸ் தபாலில், (அப்போல்லாம் உண்டு, உடனே பட்டுவாடா பண்ணுவாங்க) பெண் பிடித்திருக்கிறது என்றும் ஆனால் உயரம் கம்மி என்பதால் யோசிப்பதாயும், மேலும் கல்யாணத்தை மதுரையில் நடத்தப் போவதாய் என் அப்பா கூறியதால் அவங்க தரப்பில் 200 பேருக்கும் மேல் கல்யாணத்துக்கு வருவாங்க என்றும் அதுக்காகச் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யமுடியுமா என்றும் கேட்டிருந்தார்கள். இல்லை எனில் கல்யாணத்தைக் கும்பகோணத்தில் நடத்தவேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். கடிதத்தைப் படிச்சதுமே அப்பாவுக்குப் பிடிக்கலைனு சொல்லாம ஏதோ சுத்தி வளைக்கிறாங்கனு புரிஞ்சு போய் வேறே ஜாதகங்களைப் பார்க்கலாம்னு சொல்லிட்டார். ஆனால் எங்க ஜோசியரோ, "அந்தப்பையரே இந்தப் பெண் தான் வேண்டும்னு தானே வருவார்!" என்று சத்தியமே செய்தார்.

Monday, March 28, 2011

கல்யாணமாம் கல்யாணம்! பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்!

வாசலில் வந்தது என்னோட சித்தப்பாவின் தம்பி. அவருக்குத் தாமதமாய்க் கல்யாணம். கல்யாணத்தின்போது நான் சின்னமனூரில் இன்னொரு சித்தி வீட்டில் இருந்தேன். திரும்பி வந்ததும் உடனேயே அம்மா ஹோசூர் கிளம்பியதால் நான் மதுரையிலேயே வீட்டில் இருந்தேன். சின்னச் சித்தப்பா உள்ளே வந்தார். காலம்பர சாப்பிட்டுட்டேன் என்று சொன்னார். அதனால் அவசரம் அவசரமா உப்புமா பண்ணிக் காப்பியும் போட்டுக் கொடுத்தேன். அவர் எல்லாம் சாப்பிட்டுவிட்டு, ஜாதகம் பத்திப் பேச ஆரம்பித்தார். நான் அப்பா, அம்மா ஊரில் இல்லைனு சொல்லியும் கேட்கவில்லை. "அந்தப் புனாப் பையர் என்னோடசொந்த மச்சினர் தான், வேறே யாரும் இல்லை. நீ என் கல்யாணத்துக்கு வந்திருந்தியானா அப்போவே பார்த்திருக்கலாம். உன்னைப் பத்தி நாங்க நிறையச் சொல்லி இருக்கோம் அவங்க வீட்டிலே. அவங்க ஆவலோடு இருக்காங்க. நாங்க தான் தலை தீபாவளிக்குப் போறச்சே உன் ஜாதகத்தை எடுத்துண்டு போய்க் கொடுத்தோம். தாராளமாப் பார்க்கச் சொல்லு அப்பாவை!" என்று சொன்னார். அப்பா கிட்டே சொல்லிடறேன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பிட்டார். அப்பா வந்ததும் விஷயத்தைத் தெரிவித்தேன். வேறே வேலை இல்லை. புனாவிலெல்லாம் இருக்கிறவருக்கு எப்படிக் கொடுக்கிறது? அதுவும் மிலிடரியிலே வேலைனு வேறே சொல்லறாரே! அது நமக்குச் சரிப்படாதுனு அந்த விஷயத்தை அதோடு முடித்துவிட்டார். ஜாதகம் வந்தப்போ வேலை சரியாப் போடலை. இப்போ சின்னச்சித்தப்பா வந்து தான் வேலை பத்திச் சொன்னார்.

அப்பா வேறே ஜாதகம் பார்க்க ஆரம்பிக்க, எங்க ஜோசியரோ விடாமல் அந்தப் பையனைப் பாருங்க. வேறே ஜாதகம் நான் பார்த்துத் தரேன். ஆனால் அது தான் நடக்கும்னு விடாமல் சொன்னார். அப்போ சென்னையிலிருந்து என் சித்தப்பாவே வேறே ஏதோ விஷயத்துக்காக மதுரை வந்தவர் எங்க வீட்டுக்கும் வந்தார். அப்பாவிடம் ரொம்ப நேரம் பேசி எல்லாத்தையும் எடுத்துச் சொல்லிட்டு, நீங்க நேரே போய்ப் பாருங்க. அவங்க ஊருக்குப் போற வழி இது. இப்படிப் போகணும். நீங்க வேணும்னா முன்னாடி சொல்ல வேண்டாம். சொல்லாமலேயே போய்ப் பாருங்க. பிடிச்சால் மேற்கொண்டு பெண்பார்க்க வரச் சொல்லுங்கனு அப்பாவோட மனசுக்கு ஏத்தாப்போல் சொன்னார். அப்போல்லாம் பிள்ளை வீட்டை ஜாதகம் பொருந்தின உடனேயே நேரில் போய்ப் பார்த்துக் கொண்டு வந்துடுவாங்க.

அதனால் அப்பாவும் ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு சம்பிரதாயப்படி ஜாதகம் மாற்றவேண்டும் என்பதால் என்னோட ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். கும்பகோணம் போய் அங்கிருந்து நன்னிலம் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டு கூந்தலூர் என்னும் ஊரில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து அரசலாற்றைத் தாண்டி என் மாமனார், மாமியார் இருந்த கருவிலிக்குப் போகவேண்டும். அந்த நாட்களில் அரசலாற்றில் கல்பாலம் போடப் படவில்லை. மூங்கில் பாலம் தான். ;அதோடு கருவிலிக்குப் பேருந்தும் போகாது. கூந்தலூர் அருகே இருக்கும் எரவாஞ்சேரி தான் கொஞ்சம் பெரிய கிராமம். அந்தக் கிராமத்துக்கே நான் கல்யாணம் ஆகிப் போன அந்த வாரம் தான் கும்பகோணம் ராமன் அண்ட் ராமன் பேருந்து விட்டாங்க. அது வரைக்கும் கூந்தலூரில் பேருந்து குறிப்பிட்டது தான் நிற்கும். ஆகவே முன் கூட்டிச் சொன்னால் தான் நல்லது. வண்டி கட்டிக்கொண்டு போய்க் கூட்டி வர முடியும்.

கூந்தலூருக்கோ, எரவாஞ்சேரிக்கோ வண்டி வரணும்னா, (மாட்டு வண்டிதான்) அரசலாற்றில் இறங்கித் தான் வரணும். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும் நாட்களிலும், (அப்போ காவிரிப் பிரச்னை இவ்வளவு இல்லை, அரசலாற்றில் கோடையில் கூடக் கொஞ்சமாவது தண்ணீர் ஓடும்.)மற்றக் கோடை நாட்களிலும் வண்டியைப் பிரித்து மாட்டை அவிழ்த்து ஓட்டி விடுவாங்க. அதுக்கு முன்னாடி வண்டியிலே வரும் பிரயாணிகள் இறங்கிக்கொண்டு மூங்கில் பாலம் வழியாஅக்கரைக்குப் போவாங்க, அவிழ்த்து விட்ட மாடுங்க மெதுவாப் போய் அக்கரைக்குப் போய்க் காத்துட்டு இருக்கும். இங்கே வண்டியை ஆற்றில் இறக்குவாங்க. அக்கம்பக்கம் எப்படியும் நாலைந்து ஆட்கள் தோப்புக்களில் வேலை செய்துட்டு இருப்பாங்க. வண்டி வரதைப் பார்த்துட்டுக் கூப்பிடாமலேயே வருவாங்க. சிலர் வீடுகளில் பண்ணை ஆட்கள் வண்டியோடயே வருவாங்க. எல்லாருமா வண்டியை ஆற்றில் தள்ளிக்கொண்டு போய் அக்கரையில் மேட்டில் ஏத்துவாங்க. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் கூந்தலூர், அல்லது இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் எரவாஞ்சேரி. அங்கே போய்ப் பேருந்தில் வரவங்களைக் கூட்டி வருவாங்க.

திரும்பி வரச்சே மறுபடியும் அதே. ரிவர்ஸில். அப்புறமா ஊருக்கு வரவரைக்கும் நடுவில் குளங்கள் தான் காணலாம். முட்டை ஆறு என்னும் இன்னொரு ஆறு மூன்று கிலோ மீட்டர் தள்ளிப் பரவாக்கரை போகும் வழியில் இருக்கு. இந்த இரண்டு ஆறுகளுக்கும் நடுவில் தான் எங்க மாமனார் மாமியார் இருந்தாங்க. வயல்கள் எல்லாம் எதிரேயே இருந்தன. அப்பாவோ சொல்லாமல் இல்லை கிளம்பி வந்திருக்கார். அதனால் கூந்தலூர் வந்து அங்கே இறங்கியதும், வழி கேட்டுக்கொண்டு மூங்கில் பாலம் வழியா நடந்தே போயிருக்கார். நல்ல வெயில் காலம், பங்குனி மாசம். பாவம், வேர்க்க விறுவிறுக்கப் போய் மாமனார் பெயரைச் சொல்லி விசாரிக்க, வீட்டுக்கு எதிரேயே இருக்கும் பள்ளியில் படிச்சுட்டு இருந்த என் குட்டி மைத்துனன்,சாப்பிடறதுக்காக வீட்டுக்குப் போயிட்டிருந்தவன், அப்போ நாலு முடிந்து ஐந்தாம் வயசு, எங்க அப்பாவைப் பார்த்துட்டு, வாங்க மன்னியோட அப்பாவா நீங்கனு கேட்டுட்டு உடனே வீட்டுக்கு ஓடித் தகவல் சொல்லி இருக்கார். மன்னியோட அப்பா வரார்னு.

கிராமம் வேறே. வீட்டு வாசலில் அக்ரஹாரத்தின் அனைத்து மக்களும் கூட அப்பா உள்ளே எண்ட்ரி. உள்ளே போனதும், அப்பாவுக்குக் காப்பி கொடுத்து சாப்பாடு போட்டுட்டு, அப்புறமாப் பேசி இருக்காங்க. சம்பந்தம் கலக்கும் முன்னே சாப்பிட அப்பா யோசிக்க என் மாமனார் இந்தக் காலத்தில் அதெல்லாம் பார்க்கவேண்டாம். நானே என் மனைவியைப் பார்க்கப் போனப்போ அங்கே தான் சாப்பிட்டேன்னு சொல்லிவிடவே எல்லாம் முடிச்சுட்டு, பெண் பார்க்க வரதைப் பத்திப் பேச ஆரம்பிக்க, என் மாமனாரின் அண்ணாவும் அங்கே தற்செயலாக வந்தவர், தன் பெண்ணுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருப்பதாயும் மே மாதம் ஒன்றாம் தேதி கல்யாணம் என்றும் கல்யாணத்துக்கு அவசியம் வரணும் என்றும் சொல்லி இருக்கார். என் மாமனாரும் எங்க பையரும் இந்தக் கல்யாணத்துக்கு வரப் போகிறதாலே வந்த உடனே பெண் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கார். சரினு ஒத்துக்கொண்டு அப்பா வந்துவிட்டார். வருஷப் பிறப்பு கழிஞ்சு பெண் பார்க்கத் தேதியை அங்கேயே நிச்சயம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டார்.

வந்து சொன்னார் பெண்பார்க்க வரப் போறதை. அப்போப் பார்த்துக் கோடைக்கட்டி என் முகத்தில். அதெல்லாம் ஒன்றோ இரண்டோ இல்லை. முகம் முழுதும். பெரிசு பெரிசாக் கட்டிகள். எல்லாத்திலேயும் கறுப்பாய்க் கண் மாதிரி இருக்கும். அது உடைஞ்சு ரத்தம் வரும். கீழே குனிய முடியாது. வலி தாங்காது. ஏற்கெனவே டாக்டரிடம் காட்டிட்டு இருந்தேன். அவரோ வருஷா வருஷம் வருது, ஒண்ணும் புதிசில்லையே, மெதுவாத் தான் சரியாகும்னு சொல்றார். பெண் பார்க்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. இந்த மூஞ்சியைப் பார்த்துட்டு என்ன சொல்வாங்களோ/. அம்மாவுக்குக் கவலை. எல்லாருக்கும் சொல்லியாச்சு. என் மாமா வீட்டில், பெரியப்பாக்கள், சின்னமனூரில் இருந்து சித்தி எல்லாரும் தயாராயிட்டாங்க. சின்னமனூர்ச் சித்தி மட்டும் அம்மாவுக்கு உதவ வேண்டி முன்னால் வந்தாங்க. என் முகத்தைப் பார்த்துட்டு உடனேயே அவங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா சித்தப்பாவுக்குத் தகவல் கொடுக்க சித்தப்பாவும் வந்துட்டார்.

உடனேயே சித்தப்பா ஊசியாலே என்னைக் குத்த ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு இரண்டு முறை நான்கு விதமான ஊசிமருந்துகளைக் கலந்து போட்டிருக்கார். கட்டி உடையாது. அமுங்கும் என்றும் சொன்னார். ராஜ வைத்தியம் நடந்தது. அதோடு வரவங்களை வரவேற்கவும் ஏற்பாடுகள். எங்க வீட்டிலே இரு தரப்பிலும் மனிதர்கள் நிறைய. முக்கியமானவங்க வரவும் வருவாங்க. என்பதால் அப்பா சமையலுக்கு ஆள் போட்டுவிட்டார். வெளி ஊரிலிருந்து பிள்ளை வீட்டுக்காரங்க வரதாலே அவங்களுக்கு ஊர் திரும்பற வரைக்கும் கவனிக்கணும்னு என்னோட பெரியப்பா வீட்டிலே தங்கவும் ஏற்பாடுகள் பண்ணியாச்சு. ஒருவழியாப் பிள்ளை வீட்டுக்காரங்க எப்போ வராங்கங்கறதுக்குத் தந்தி வந்தது. அப்போல்லாம் தொலைபேசி இல்லை. இமெயில், எறும்பு மெயில் கிடையாது, செல் கிடையாது. அவசரம்னா உடனே தந்திதான். உடனேயே வந்தும் சேரும். அதைப் பார்த்துட்டு அப்பாவும், தம்பியும் ஸ்டேஷன் போய் அழைத்துக்கொண்டு வந்து பெரியப்பா வீட்டில் விட்டுட்டு வந்தாங்க. மறுநாள் காலையிலே பெண் பார்க்கணும்.

Sunday, March 27, 2011

கல்யாணமாம் கல்யாணம் ! பயமுறுத்திய தோடு!

திருச்சி மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரே பையர். ஏதோ கெமிக்கல் கம்பனி?? சரியா நினைவில் இல்லை. திருச்சிக்குள்ளேயோ அல்லது சுற்றுவட்டாரத்திலோ வேலை. தில்லை நகரில் வீடு. பையரின் அப்பா சங்கரமடத்தில் மிகவும் ஈடுபாடு. இந்த ஜாதகம் திருச்சியிலே பல்லாண்டுகளாய் இருந்த என்னோட ஒண்ணு விட்ட பெரியப்பா ஒருத்தர் மூலமா வந்தது. அவங்க ரொம்பவே வற்புறுத்தினதோடு இல்லாமல் குழந்தையை, (ஹிஹிஹி, மீ ஒன்லி) நாங்க ரெண்டு பேரும் கிட்ட இருந்து கண்ணும், கருத்துமாக் கவனிச்சுப்போம்னு உறுதிமொழி வேறே. அப்பா திருச்சியில் அவங்க வீட்டிலே போய் இறங்கி அந்தப் பெரியப்பாவையும் அழைத்துக்கொண்டு பையர் வீட்டுக்குப் போயிருக்கார். பையரின் அப்பா க்ஷேமலாபங்கள் விசாரிச்சு முடிஞ்சதும் நேரடியாக விஷயத்துக்கு வந்துட்டார். பெண்ணுக்கு வைரத் தோடு போடுவீங்களானு கேட்டிருக்கார். அது வரைக்கும் அப்பா இதை நினைச்சே பார்க்கலை. என்றாலும் சமாளிச்சுட்டுப் போடறேன்னு சொல்லி இருக்கார். வைர மூக்குத்தி? அது ஏற்கெனவே இருக்கு. இது அப்பா.

ம்ம்ம்ம்ம்ம், தோடு வாங்கியாச்சா? வாங்கணுமா??

இனிமேல் தான் வாங்கணும், இப்போத் தானே உங்க அபிப்பிராயம் தெரிஞ்சது. "அப்பா.

நான் சொல்ற இடத்திலே, நாங்க காட்டற வைரக்கற்களை வாங்கி எங்க தட்டான் கிட்டேத்தான் கட்டணும். நீங்க வாங்கறதெல்லாம் சரிப்படாது.

தோடு எங்க பொண்ணுதானே போட்டுக்கப் போறா? அவளுக்கும் பிடிக்கணுமே!

நாங்க சொல்ற தோட்டைத் தான் அவ போட்டுக்கணும்

அப்பாவுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டிருக்கும் நிச்சயமா. நாம அப்போவே புரட்சிப் பெண்ணில் ஒருத்தியாகத் தீவிரமாக இருந்தோமே! தினமும் ஏதானும் ஒரு விஷயத்துக்கு எனக்கும் அப்பாவுக்கும் யுத்தம் வரும்.

நாளைக்குக் கல்யாணமாகிப்புருஷன் வீடு போனால் தெரியும், இந்த அப்பாவோட அருமை!"

தெரியட்டும், தெரியட்டும், அவங்க வீட்டிலும் பொண்ணுங்க இல்லாமலா இருக்கும்! கூடப் பிறந்தவங்களோட சண்டை போடாமலா இருப்பாங்க?

விஷயம் வேறே ஒண்ணும் இருக்காது. அண்ணா அப்போவே ஹோசூரில் வேலைக்குப் போய்விட்டார். ஆகையால் இருந்தது தம்பியும் நானும் மட்டும் தான். தம்பிக்குத் தட்டலம்பிப் போட்டிருக்க மாட்டேன். அல்லது சாப்பிட்ட தட்டை அவரே அலம்பட்டும்னு சொல்லி இருப்பேன். இப்படி ஏதாவது ஒண்ணு. அதே தம்பியும் நானும், அவருக்குத் தமிழ்க் கட்டுரை எழுதவும், படம் வரையவும் கூட்டுச் சேர்ந்துப்போம். அதனாலே இதை எல்லாம் லக்ஷியமே பண்ணறதில்லை. ஆனால் அப்பாவுக்குத் தம்பியை நான் படிக்கவிடாமல் கெடுக்கிறேன்னு ஒரு எண்ணம். அதோட அவருக்குத் தமிழில் அவ்வளவா எழுத வராதுங்கறதாலே நான் எழுதிக் கொடுப்பேன். அதுவும் பிடிக்காது. ஆகையால் எப்போவும் அப்பாவுக்கும், எனக்கும் ஏழாம் பொருத்தம் தான். ஆனால் அம்மா ஏதானும் செய்து கொடும்மானு கேட்டாலும், அலக்ஷியமாக போம்மா, நான் படிக்கணும் தான்! ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டு இருந்தோமுல்ல! அம்மாவும் ரொம்பச் சொல்ல மாட்டாங்க தான். ஏன்னா அம்மா சித்திகளின் பிரசவத்திற்கு உதவிக்குப் போறச்சே எல்லாம் ஸ்கூலுக்குப் போறச்சே கூட சமையலையும் முடிச்சுட்டுத் தான் போயிருக்கேன். அதனால் பொண்ணுக்கு வேலை தெரியும், நம்ம கிட்ட சலுகைனு புரியும். ஆனால் அப்பாவுக்கோ அவர் சொன்னால் உடனே செய்தாகணும். அப்படி இருக்கையில் போற இடத்திலும் மாமனார் இப்படி இருந்தால்???? அப்பாவின் கண்ணெதிரே காட்சிகள் ஓடி இருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் உள்ளூர அப்பாவுக்கே பிடிக்கவும் இல்லை.

அடுத்து நகைகள் பத்திப் பேச்சு. நகைகள் எல்லாம் பண்ணி வச்சாச்சு, அவள் ஸ்கூல் முடிக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிட்டேன். அப்பா/

அதெல்லாம் ஒத்துக்க முடியாது. இப்போ என்ன வயசு உங்க பொண்ணுக்கு? பதினெட்டு முடிஞ்சு பத்தொன்பதா?? ஹும், நாலு வருஷத்துக்கு மேல் இருக்குமே பண்ணி. எல்லாம் பழசாப் போயிருக்கும்

பாலிஷ் பண்ணிடறேன். எங்க கடைக்காரர்ட்டே சொன்னால் வைரப் பாலிஷ் கூடக் கொடுத்துத் தருவார்.

அதெல்லாம் வேண்டாம்னேன். நீங்க அந்த நகைகளை என் கிட்டேக் கொடுங்க. நான் எல்லாத்தையும் எங்களுக்குப் பிடிச்சாப்பல மாத்திடறேன்.

தூக்கிவாரிப் போட்ட அப்பா அப்போ புடைவைகள், சோமன்கள் எல்லாம்??

எல்லாத்துக்கும் பணத்தைக் கொடுங்க, நாங்க இங்கே திருச்சியிலேயே வாங்கிடறோம்.

அப்பாவுக்குச் சுரத்தே இல்லை. இப்போவே இவ்வளவு கெடுபிடின்னா அப்புறமா என்னென்ன கேட்பாரோ?

அப்புறமா வருஷாந்திரச் சீரெல்லாம்???

அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடுக்கிறேன். அதுப்படி செய்யணும்.

சரி. அப்பா திரும்பிவிட்டார். அங்கே எதுவும் பேசாமல் வந்ததே பெரிய விஷயம், சாதாரணமாய்ப் படபடவெனப் பொரியும் சுபாவம் கொண்டவர் பெண்ணுக்குக் கல்யாணம் என்பதால் பொறுத்துக்கொண்டாரோ என்னமோ, தெரியலை. அன்னிக்கே கிளம்பி மதுரைக்கும் வந்தாச்சு. இங்கே வந்து ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஒரு குதி குதிச்சார் பாருங்க. நாங்கல்லாம் நடுங்கிப் போயிட்டோம்.

கல்யாணமா பேசறார் அந்த மனுஷன்?? வியாபாரம், இதிலே சங்கரமடத்துக்கு நெருக்கம்னு வேறே பீத்தல். இருக்கட்டும், இவர் இப்படி எல்லாம் கேட்கிறதை நான் அவர் இருக்கிற சங்கர மடத்துக்கே எழுதிடறேன். ஒரே கத்தல்.

மெல்ல மெல்லப் பெரியப்பா, பெரியம்மா, மாமாக்கள், என்னோட அம்மாவழிப்பாட்டி எல்லாருக்கும் விஷயம் போக எலலாரும் வந்து சங்கர மடத்துக்கு எழுதிடறேன்னு அவருக்கு பதில் போடச் சொன்னாங்க. சரினு அப்பாவும் அந்தப் பையரின் அப்பாவுக்கே சங்கரமடத்தில் இருந்து கொண்டு நீங்க இப்படிக் கேட்டது, பேசியது எதுவும் சரியில்லை. அதனால் சங்கரமடத்திற்கு நான் எழுதி இவற்றை எல்லாம் சொல்லிட்டு அவங்க செய்யலாம்னு சம்மதம் கொடுத்தால் நீங்க சொல்றாப்போலவே செய்துடறேன் என்று எல்லாரையும் சாட்சி வைத்துக்கொண்டு எழுதிப் போட்டுவிட்டார். அங்கே இருந்து பதிலே இல்லை.

. ஹோசூரில் இருந்த அண்ணாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைனு லெட்டர் வரவே அம்மாவை மட்டும் அப்பா அனுப்பிட்டுத் தம்பி அப்போ பியுசி படிச்சுட்டு இருந்தார். அவரோட பரிக்ஷை முடிஞ்சதும், எல்லாருமா வரோம்னு சொல்லி என்னையும், தம்பியையும் மட்டும் இங்கே வைச்சுக்கொண்டார். அதுக்குள்ளே எங்க சித்தப்பா ஜாதகம் பார்த்தாச்சா, பார்த்தாச்சானு லெட்டருக்கு மேலே லெட்டர் அப்பா பாட்டுக்கு அதை எல்லாம் படிச்சுட்டு நிதானமா எங்க கிட்டே மைசூருக்குப் பக்கத்திலே மேல்கோட்டையில் வைரமுடிசேவை பார்க்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருங்க. அவன் காலேஜ் போனதும் நீ க்ளாசுக்குப் போ. காலம்பர அவனுக்குக் காபி போட்டுக் கொடுத்துட்டு க்ளாசுக்குப் போனு ஏகத்துக்கு எனக்கு மட்டும் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) புத்திமதி சொல்லிட்டுப் போயிட்டார். வீட்டுக்காரங்களும், நாங்களும் அடுத்தடுத்து இருந்ததால், ஒண்ணும் பயமில்லை. வீட்டு வாசல் ஒரே வாசல் தான். வீட்டுக்காரங்க போர்ஷனுக்குள் நுழைஞ்சு அவங்க ஹால் வழியா அவங்களுக்குத் தெரிஞ்சு தான் யார் வந்தாலும் உள்ளே வரணும்.

நானும் தம்பியும் மட்டும் தான் இருந்தோம். அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. ஒருநாள் காலம்பர நான் சமைச்சுச் சாப்பிட்டு விட்டு என்னோட அக்கவுண்டன்சி கிளாசுக்குக் கிளம்பிட்டிருந்தேன். அப்போ வாசல்லே யாரோ எங்க அப்பா பேரைச் சொல்லிக்கேட்டுட்டு இருந்தது காதில் விழுந்தது. யாருனு பார்த்தா, சித்தப்பாவோட தம்பி. நான் அடிக்கடி வங்கி பரிக்ஷை எழுத சென்னை போயிட்டிருந்தப்போ எல்லாம் சித்தி வீட்டில் தான் தங்குவேன். சித்தப்பாவோட தம்பிக்கு அப்போக் கல்யாணம் ஆகலை. அதுக்கு அப்புறம்தான் கல்யாணம் ஆச்சு. அந்தக் கல்யாணத்துக்கு நானும், அப்பாவும் போறதா இருந்து போக முடியலை. போயிருந்தால் ஒருவேளை அங்கேயே என்னோட கல்யாணமும் நிச்சயிக்கப் பட்டிருக்குமோ?

Saturday, March 26, 2011

கல்யாணமாம் கல்யாணம்!

ம்ம்ம்ம்ம், இந்த கீதா என்ற பெயர் ரொம்பவே பொதுவாய்ப் புழங்கும் பெயர் என்றாலும் எங்க வீட்டில் அம்மா வழியிலும், அப்பா வழியிலும் இன்று வரை நான் ஒருத்திதான் கீதா. கல்யாணம் ஆகி வந்ததும், இங்கே சொந்தங்களிலே ஒன்றிரண்டு கீதாக்கள் இருக்கின்றனர். வலை உலகுக்கு வந்தப்போ கீத்ஸ் னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தார். அவங்க அப்போ நிறைமாசக் கர்ப்பம் என்பதால் அதிகமாய் இணையம் வரமுடியலை. அப்புறமாக் குழந்தை பிறந்துக் கொஞ்ச நாட்கள் எழுதினாங்களோ என்னமோ தெரியலை. ஆனால் இணையத்திலும் சில காலம் செங்கோல் செலுத்திட்டு இருந்தேன். இப்போ இரண்டு வருஷமா கீதா அசல், கீதா சந்தானம், கீதா 6 என்று சிலர் வந்திருக்காங்க. இப்போ சீதா லக்ஷ்மியைக் கவனிப்போமா??

பள்ளியிலே என் பெயரை சீதாலக்ஷ்மி என்று கொடுத்தது செல்லாமல் போச்சுனு சொல்லிட்டேன் இல்லையா?? தாத்தாக்களைத் தவிர வேறே யாருமே சீதானு கூப்பிட்டதில்லை. அம்மாவுக்கு செண்டிமெண்ட். சீதை கஷ்டப் பட்டாளே அது மாதிரிக் கஷ்டப்படணும்னு. அதோட என்னோட இந்தப் பெயர் கொண்ட பாட்டியும் கஷ்டப் பட்டிருக்காங்க. பெரியவங்க பெயர் என்ற காரணமும் சேர்ந்து கொள்ளவே நிரந்தரமாய் கீதாவானேன். ஆனால் கல்யாணத்திற்குப் பையர் பார்க்கையிலே ஜாதகத்திலே கீதா என்ற பெயரே கொடுக்கலை. சீதாலக்ஷ்மி என்ற பெயர்தான் இருந்தது. என்னோட கணவர் வீட்டிலே அவருடைய கொள்ளுப்பாட்டி பெயர் சீதா லக்ஷ்மி. கொள்ளுத்தாத்தா பெயர் சாம்பசிவம். ரெண்டு பேரும் இப்போ நாங்க ரெண்டு பேரும் எப்படி எல்லாத்திலேயும் காண்ட்ராஸ்டா இருக்கோமோ அதே போல் இருப்பாங்களாம். ஆனால் ரெண்டு பேருமே நல்ல செல்வாக்கோட இருந்திருக்காங்க. சாம்பசிவம் தாத்தா நாச்சியார் கோயிலின் பெருமாள் கோயில், உப்பிலியப்பன் கோயில் போன்ற கோயில்களில் தர்மகர்த்தாவாக (அறங்காவலர்) இருந்திருக்கிறார். அதோடு உள்ளூரின் பெருமாள் கோயிலும் சேர்ந்து கொண்டது. (இந்தப் பெருமாளுக்குத் தான் இப்போ திருப்பணி நடக்கிறது. கும்பாபிஷேஹம் தேதி வைச்சு தேர்தல் அறிவிப்பினாலே தள்ளிப் போயிருக்கு.)

கொள்ளுத்தாத்தா பெயரைத் தான் என் கணவருக்கு வைச்சிருக்காங்க. ஆகவே எங்களுக்குக் கல்யாணத்தின் போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது முதல்லே என்னோட பெயரைப் பார்த்திருக்காங்க. அதிலேயே அவங்க டோட்டலா சந்தோஷமாயிட்டாங்களாம். ஆஹா, இந்த மாதிரிப் பெயர்ப் பொருத்தம் கிடைக்கறது ரொம்பவே அரிதுனு நினைச்சு ஜாதகத்தைக் காட்டினால்,அங்கே இரண்டு, மூன்று பேர் ஜோசியம் பார்ப்பாங்க. எல்லாருமே ஒரே வாக்கா இவங்க பூர்வ ஜன்மத்திலேயும் தம்பதிகள், அதனாலே இவங்களுக்குள்ளே தான் கல்யாணம் நடக்கும் அப்படினு சொல்லி இருக்காங்க. உடனே எங்க வீட்டுக்கும் ஜாதகம் வந்தது. எங்க வீட்டிலே இந்தப்பெயர்ப் பொருத்தம் பத்தி எல்லாம் அப்போத் தெரியாது. மாப்பிள்ளை வீட்டுக்கு என் ஜாதகம் எங்க சித்தப்பா மூலமாப் போச்சு. உடனே அவங்க வீட்டிலே இருந்து என் சித்தப்பா மூலமாவே இவர் ஜாதகம் வந்தது. மாப்பிள்ளை வீட்டில் பொருத்தம் பார்த்தாச்சு என்பதும் ஜாதகம் வந்தப்போ எங்களுக்குத் தெரியாது. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் அவ்வளவு சுலபமாப் பெண் வீட்டில் வலுவிலே போய்ச் சொல்ல மாட்டாங்க.

எங்க அப்பாவும் ஜாதகம் பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவரே. ஜாதகம் பார்த்துச் சொல்லும் ஜோசியரும் உள்ளதை உள்ளபடியே சொல்லக் கூடியவர். அப்படி ஒருவரை அவருக்குப் பின் இன்று வரை நாங்க கண்டதில்லை. ஜோசியரும் பார்த்துட்டு , என் அப்பாவிடம் இந்த வரன் தான் முடியும். இவங்க போன ஜன்மத்துத் தம்பதிகள், இந்தப் பிறவியிலும் சேரப் போறாங்கனு சொல்லி இருக்கார். என் அப்பாவுக்கு முதல் ஆக்ஷேபம் மாப்பிள்ளை தஞ்சாவூர்க்காரர் என்பது, இரண்டாவது ஆக்ஷேபம் அப்போ அவர் புனாவில் இருந்தார். அவ்வளவு தொலைவெல்லாம் பெண்ணை அனுப்ப முடியாது என்று அப்பாவுக்கு இஷ்டமில்லை. அதற்கு முன்னால் டெல்லியில் இருந்து ஒரு வரன் வந்ததை இதே காரணத்தைச் சொல்லி அப்பா நிராகரித்திருந்தார். ஆகவே அக்கம்பக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களான திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருக்கும் பையர்களாகவே பார்த்துக்கொண்டிருந்தார். அப்படி ஒன்றிரண்டு வரவும் வந்தது. அவங்களும் போட்டோவைப் பார்த்துட்டு நேரிலே பேசறதுக்கும் வரச் சொல்லி இருந்தாங்க. ஆகவே அப்பாவுக்குத் திருச்சி வரன் ஒன்று தான் முடிக்க எண்ணம். அப்பா திருச்சிக்குப் போனார்.

அப்போல்லாம் பெண் வீட்டில் நேரே பையர் வீட்டுக்குப் போய் செய்முறைகள், சீர், செனத்திகள் என்று எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு அப்புறமே பெண் பார்க்க வருவார்கள். பெண் பார்த்துவிட்டுச் சீரில் குறைகள் என்று பெண்ணை விடவேண்டாம்னு எண்ணமோ என்னமோ! எல்லாம் பேசி முடிச்சாலே பாதிக் கல்யாணம் முடிஞ்சாப்பலனு சொல்வாங்க. அப்படியும் சிலர் வீடுகளிலே பெண்பார்த்துப் பிடிச்சும், சீர் செனத்திகள் பிடிச்சும் வேறு ஏதேனும் காரணங்களால் நடக்காமலும் போனது உண்டு. ஆனால் எங்க ஜோசியரோ அப்பாவிடம் இதெல்லாம் நடக்காது. உங்க பெண்ணுக்கு அந்தப் பையர் தான். நீங்க பண்ணி வைக்கலைனா அந்தப் பையரே வந்து பண்ணிக்கொண்டு போயிடுவார்னு அடிச்சுச் சொல்லிட்டார். ஆனாலும் அப்பா கேட்கவில்லை. பையர் எங்கேயோ புனாவில் இருக்கிறார். அவர் வந்து பெண்ணைப் பார்த்துப் பிடிச்சு, சம்பந்தம் பேசினு எவ்வளவோ இருக்கு. கையிலே வெண்ணெய் இருக்கு, நெய்க்கு அலைவானேன்னு திருச்சி கிளம்பினார்.

Thursday, March 24, 2011

பெயர்க் காரணமெல்லாம் எதுவும் இல்லை!

பேர் சொல்ல ஒரு பிள்ளை என்று தான் சொல்லுவாங்க. பேர் சொல்ல ஒரு பெண் என்று சொன்னது இல்லை. அது ஏன்???? பொதுவாப் பிள்ளை வயிற்றிலே பிறக்கும் பிள்ளைகளே வாரிசு என்றாகிறது. எங்க அம்மாவுக்கு 47 ஆகஸ்டில் கல்யாணம். கல்யாணம் ஆகையில் அம்மாவுக்கு அப்போப் பதினைந்து வயசிருக்கும். ஏற்கெனவே அம்மா எட்டாவது, அந்தக் காலத்தில் ஈ எஸ் எல் சி என்னும் படிப்பும், ஹிந்தியில் விஷாரத் என்னும் படிப்பும் முடிச்சுட்டு ஆசிரியப்பயிற்சிக்குப் போகணும்னு சொல்லிட்டு இருக்கையில் அப்பா அப்போவே பெண் கேட்டுப்போயிருக்கார். பொதுவாய் பெண் கேட்டுப் பிள்ளை வீட்டில் போற வழக்கம் இல்லை. ஆனாலும், தாத்தாவும் பெரியப்பாவும் நண்பர்கள், பக்கத்துத் தெரு, இரண்டு பேரும் ஒண்ணாய் வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். ஆகையால் திருமணத்துக்கு முன்னாடியே அப்பா அம்மாவைப் பார்த்திருக்கிறார். ஆனால் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அப்போ மும்முரமா இருந்திருக்கு அதனால் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் திருமணம் கிட்டத்தட்ட நிச்சயம் பண்ணி இருந்து, அப்பா சுதந்திரம் கிடைச்சதும் தான் கல்யாணம்னு சொன்னதாலே இரண்டு வருஷங்கள் தள்ளிப் போயிருந்தது. சுதந்திரம் கிடைச்சு ஒரு வாரத்திலோ என்னமோ தெரியலை, கல்யாணம். உடனே ஒரு வருஷத்துக்குள்ளே அண்ணா பிறந்தாச்ச்ச். அண்ணா அப்பா வழியிலே முதல் பேரன் இல்லை. ஆனால் அம்மா குடும்பத்திலே அம்மாவுக்கும், அவங்க அக்காவுக்கும் ஒரே நாள், ஒரே முஹூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. பெரியப்பாவுக்கும், பெரியம்மாவுக்கும் பிறந்த முதல் குழந்தை தங்கலை. அதுக்கப்புறமாய்ப் பிறந்த என்னோட அண்ணாவே வீட்டுக்கு முதல் குழந்தையாய் இருந்திருந்தார். அதுக்கப்புறமாய்ப் பெரியம்மாவுக்கு ஒரு பையரும், உடனேயே ஒரு பெண்ணும் பிறந்தாச்ச்ச்ச்ச் அம்மா என்னை அப்போத் தான் வயித்திலே உண்டாகி இருக்காங்க.


அம்மா வீட்டில் அம்மாவையும் சேர்த்து ஐந்து பெண்கள். ஆகையால் சிறப்புக் கவனம் எல்லாம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்பா வழியிலே பெண்களே குறைவு. பிறந்தாலும் ஒரே பெண் குழந்தைதான் பிறக்கும். ஆகவே பெண் குழந்தையை அப்பா ஆவலோடு எதிர்பார்த்திருக்கலாமோ என்னமோ! அந்தச் சமயம் என்னோட அம்மாவின் இரு பாட்டிமார்கள், தாய் வழித் தாத்தா போன்றோரும் என் தாத்தாவும் இருந்திருக்கின்றனர். எனக்கு நினைவு தெரிந்து இவர்களைப் பார்த்து விளையாடியது எல்லாம் நினைவில் இருக்கிறாது. என்னோட பெரியப்பா (எல்லாருக்கும் மூத்தவர்) தினமும் ராமாயணம் பாராயணம் செய்வார். அப்பாவும் அப்போத்தான் சுந்தரகாண்டப் பாராயணம் ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பாராயணம் முடியும் நாள் நான் பிறந்திருக்கிறேன் என்று செய்தி வந்திருக்கு. அதோட எங்க தாத்தா எப்போதும் ராம ஜபம் செய்வாராம். தாத்தாவின் மனைவி என்னோட தந்தைவழிப் பாட்டி பெயர் சீதா லக்ஷ்மி. எல்லாப் பேத்திகளுக்கும் அந்தப்பெயர் தான். இன்னமும் இது தொடர்கிறது. ஆகவே வீட்டிலே தடுக்கி விழுந்தா ஒரு சீதாலக்ஷ்மி மேலே தான் விழணும்.

பெரியப்பாவின் பெண்கள் உட்பட எல்லாருக்கும் ஏற்கெனவே சீதாலக்ஷ்மினு தான் பெயர் வைச்சிருக்காங்க. இந்தச் சமயம் நம்ம அவதாரம் ஏற்பட்டிருக்கு. என்னோட அம்மாவின் அம்மா, என் தாய்வழிப்பாட்டி என்னைப் பிறந்ததும் பார்த்துட்டுக் குழந்தை ரொம்பக் கறுப்பாய் இருக்கும், நோஞ்சானாய் இருக்கும்னு சொன்னாங்களாம். அம்மாவுக்குப் பெண்ணாய்ப் பிறந்து கறுப்பாயிருக்கேனு ரொம்ப வருத்தம்,. அழுதிருக்காங்க. ஆனால் என்னோட தாத்தாவும், அப்பாவும் கட்டாயம் குழந்தை நல்லா நிறமா இருப்பானு சொல்வாங்களாம். தாத்தா சீதாலக்ஷ்மினு பெயர் வைக்கணும்னு சொல்லி இருக்கார். பொதுவா எங்க பக்கத்திலே மூணு பெயர் வைக்கிறது உண்டு. தாய்வழிப் பெயர், தந்தை வழிப் பெயர், கூப்பிடற பெயர்னு. ஆனால் எனக்கு சீதாலக்ஷ்மினு ஏக மனசாத் தீர்மானம் போட்டு நிறைவேத்தியாச்ச்ச்ச்ச்./ ஆனால் எப்போலே இருந்து கீதானு கூப்பிட ஆரம்பிச்சாங்கனு தெரியலை. ஏனென்றால் எனக்கு நினைவு தெரிஞ்சு என்னை எங்க தாத்தாக்களும் சரி, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, தாத்தா எல்லாரும் சீதுக்குட்டினோ, கட்டிக் கட்டி சீதா, தங்கக் கட்டி சீதானு கொஞ்சியோ தான் பார்த்திருக்கேன், கேட்டிருக்கேன்.

பள்ளிக்குச் சேர்ந்தப்போ கூட ஒண்ணாங்கிளாசிலே/இரண்டாவதிலே????? ஒருதரம் பள்ளியிலே கீதானு பெயர் கொடுத்திருக்கிறது பத்திச் சரியாப் புரியாமல்/ தெரியாமல் பரிக்ஷை பேப்பரில் சீதானு எழுதிக் கொடுத்திருக்கேன்னு சொல்வாங்க. அதுக்கப்புறம் கை எழுத்தை வைச்சுக் கண்டு பிடிச்சு வாத்தியார் கிட்டேச் சொன்னோம்னு சொல்வாங்க. ஆகவே வல்லி சிம்ஹன் சொல்றாப் போல் சுவையான செய்திகள் எதுவும் என் பெயர் சூட்டு விழாவில் கிடையாது. ஆனால் நான் ஆறாம் வகுப்புக்கு வந்தப்போ தான் ஒரு சுவையான சம்பவம். ஆறாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு உண்டு. அப்போதே கிட்டத்தட்ட இருநூறு பெண்கள் எழுதினோம். இரண்டே பிரிவு கொண்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு 25ல் இருந்து முப்பதுக்கு மேல் எடுக்க மாட்டாங்க. ரொம்பக் கண்டிப்பா இடம் இல்லைனு சொல்லிடுவாங்க. அந்த நுழைவுத் தேர்விலே என்னோட பெயர் இருக்கிறதைப் பார்த்துட்டு அம்மா நுழைவுக்கான பணம் கட்டப் போனால் கீதாவா?? பணம் கட்டியாச்சேனு பதில் வருது. அம்மாவுக்கானா ஆச்சரியம். நான் அப்போப் பள்ளிக்குப் போகலை.

வீட்டிலே வந்து அம்மா விஷயத்தைச் சொல்லிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு மறுபடி பள்ளிக்குப் போனாங்க. இந்தப் பெண்ணா பாருங்கனு சொல்ல, பணம் கட்டுமிடத்தில் உள்ள பெண்மணி, அப்பாவோட வேலை என்னனு கேட்க, என் அப்பா சேதுபதி பள்ளி ஆசிரியர் என்று சொல்ல அவங்க செக் பண்ணிட்டு இல்லை, இதிலே உள்ள பெண்ணின் அப்பா பெயர் ராமகிருஷ்ணன், அவர் பள்ளி ஆசிரியர் இல்லைனு சொல்ல, அம்மா எங்க வீட்டுக்காரர் பெயரும் ராமகிருஷ்ணன் தான்னு சொல்ல ஒரே குழப்பம். அப்பாவோட இனிஷியலைக் கேட்க என். என்று அம்மா சொல்ல, அந்த கீதாவின் அப்பாவுக்கோ என்.ஆர். என்று இனிஷியல். அவங்க வீடு பக்கத்திலேயே இருந்தது. விசாரித்ததில் அவங்க அம்மா பிரபலமான பெண் மருத்துவர் கமலா என்பதும் புரிய வந்தது. உடனேயே அம்மா தேர்வு லிஸ்டில் இருக்கிறது ஒரே ஆர். கீதா தான். எங்க பொண்ணோட ரிசல்ட் என்ன ஆச்சுனு கேட்க, நல்லவேளையாப் பரிக்ஷை எழுதின பேப்பர்களை அவங்க வைச்சிருந்தாங்க.

ஒரு ஆசிரியரை அனுப்பி என்னையும் உடன் போகச் சொல்லி நான் எழுதின பேப்பரைத் தேடி எடுக்கச் சொல்ல, நானும் தேடினேன். தேடினதில் கண்டது மேலும் இரண்டு கீதா. இரண்டும் எஸ்.கீதா. கடவுளே என்று வேண்டிக்கொண்டு என்னோடதைத் தேட என் பேப்பர்கள் கிடைத்தன. இன்னொரு ஆர். கீதாவை விடவும் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தேன் நல்லவேளையா! இரண்டு எஸ்.கீதாக்களும் வேறே பாஸ் ஆகி இருக்க அவங்களையும் அழைத்துக் கேட்டுக் குழப்பத்தைத் தீர்க்க என் பெயரிலே இனிஷியலில் என். ஆர். என்றும் இன்னொரு எஸ்.கீதாவுக்கு எம்.எஸ். என்றும் போட்டுப் பணம் கட்டச் சொல்லிப் பள்ளியில் சேர்ந்தேன்.

வல்லி சிம்ஹன் எழுதி இருக்காப்போல் மனதைத் தொடும் விஷயம் எல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் உப்புச் சப்பில்லாமல் இருக்கும். அவங்க கூப்பிட்டாங்க, இன்னிக்கு உடனே எழுதிடலாம்னு முடிவு பண்ணி எழுதிட்டேன்.

Friday, March 18, 2011

ராமனுக்கு எத்தனை மனைவிகள்???


அயோத்யா காண்டத்தில் ஸ்ரீராமருக்குப் பல மனைவிகள் இருப்பதாய் ஒரு குறிப்புச் சொல்லுவதாய்ச் சிலர் எனக்குத் தனி மடல் போட்டுக் கேட்டிருக்கின்றனர். நானும் சிலர் சொல்லுவதையும், எழுதுவதையும் பார்த்தேன். அப்படி எல்லாம் வால்மீகி எங்கேயும் கூறவே இல்லை. அப்படிப் பல மனைவியர் ராமருக்கு இருந்தால் அவர்கள் பற்றிய குறிப்பு அயோத்யா காண்டத்தில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் ஏன் இருக்கவேண்டும்?? அதுக்கப்புறம் ராமர் காட்டுக்குப் போனபோது அவங்கல்லாம் என்ன செய்தார்களாம்??

அயோத்தியிலேயே இருந்தாங்களா? அப்படி இருந்திருந்தால் அது குறித்த குறிப்புகள் ஏன் இல்லை?? அதன் பின்னரும் ராமர் காட்டு வாசம் முடிந்து ராவண வதமும் நடந்து முடிந்து சீதையுடன் நாட்டுக்குத் திரும்பித் தன் தம்பிமார்களையும், தாய்மார்களையும், குருமார்களையும் நாட்டுமக்களையும் தான் பார்க்கிறார். அப்படி இருக்கும் பல மனைவியர் பற்றி எதுவுமேவா கேட்காமல் இருந்திருக்கிறார். ஆச்சரியமா இல்லை?? தங்களைக் குறித்து எதுவுமே விசாரிக்காத கணவனை அந்தப் பெண்கள் எல்லாருமே சும்மா விட்டுவிட்டார்களா?? ஒருத்தர் கூடவா இதைக் குறித்துக் கேட்கவில்லை? சரி அதுவும் போகட்டும்.

நாட்டுக்குத் திரும்பிப் பட்டாபிஷேஹமும் முடிந்து சீதையுடன் தானே ஸ்ரீராமர் சந்தோஷமாய் வாழ்கிறார். அப்போவும் அந்தப் பெண்கள் கணவனை சீதைக்கு மட்டுமே என விட்டுக் கொடுத்துவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்களா?? அதன் பின்னர் தான் சீதை கர்ப்பவதியாகிக் காட்டுக்கும் அனுப்பப் பட்டாளே! ஒருத்தி கூட அதைக் கொண்டாடினதாய்த் தெரியவில்லையே?? அப்படிப் பல மனைவியர் இருந்திருந்தால் யாரானும் ஒருத்தியாவது சீதை தான் இப்போ இல்லை, இனி நமக்குத் தான் கணவனிடம் உரிமை என்று உரிமை எடுத்துக்கொண்டு கவனித்துக்கொண்டாளா?? அதை எங்கானும், வால்மீகியோ மற்றவர்களோ சொல்லி இருக்கிறார்களா?? கம்பர் பட்டாபிஷேஹத்தோடு நிறுத்திக்கொண்டார். அதன் பின்னர் நடந்தவைகளுக்கு அவர் போகவே இல்லை.

இப்படி ஒரு கேள்வி-பதில் விவாதங்கள் நடக்கின்றன. பலருக்கும் இதில் சந்தேகம். நெருப்பில்லாமல் புகையுமா?? என்ற கேள்வி. வெறும் புகையாகவே இருக்கும் பல சமயமும். நன்றாய் எரிவதில்லை. இங்கேயும் அப்படித்தான் சொல்லப் பட்டிருக்கிறது. அதுவும் யார் சொன்னதாய் வந்திருக்கிறது தெரியுமா?? மந்தரை சொல்வதாய் வருகிறது. இதோ வால்மீகி ராமாயணத்தின் ஆங்கில உரையைப் பார்ப்போம்.

hR^ishhTaaH khalu bhavishhyanti raamasya paramaaH striyaH |
aprahR^ishhTaa bhavishhyanti snushhaaste bharatakshaye || 2-8-12


Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position."

With folded arms, as a maid-servant, you have to serve that Kausalya who having reached great prosperity, in the height of joy, will dispose of her adversaries (in the person of Bharata and yourself). Thus, if you become Kausalya's servant-maid along with us, your son Bharata will be Rama's attendant. Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position."

Comment: The words 'Rama's wives' here do not indicate that Rama had multiple wives. Manathara refers to a possible future where Rama being a King would marry other women. It was a norm then for a king to have more than one wife.


எட்டாவது சர்கத்தின் பனிரண்டாவது ஸ்லோகம்.

மேலே கண்ட வரிகள் வால்மீகியின் ராமாயணத்தில் உள்ளன. கம்பரில் அதுவும் இல்லை. ராமன் பட்டத்துக்கு வந்தால் கைகேயி கோசலையிடமும், அவள் தாதிப் பெண்களிடமும் தானும் ஒரு தாதியாக மாறிவிடுவாள் எனவும், தன்னையும் அந்நிலைமைக்கு ஆளாக்கவேண்டாம் எனவும் சொல்கிறாள்.

வேதனைக்கூனி, பின் வெகுண்டு நோக்கியே,
:பேதை நீ பித்தி: நிற்-பிறந்த சேயொடும்
நீ துயர் படுக; நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்: என்றாள்


மந்தரையான கூனி கைகேயியின் மனதை மாற்றப் பேசும்போது மேற்கண்ட வார்த்தைகளைப் பேசுவதாய் வருகிறது. கூடவே அதிலேயே பின் குறிப்பும் கொடுத்துள்ளது. ராமனின் மனைவிகள் என்று சொல்லி இருப்பதால் ராமனுக்குப் பல மனைவியர் என்ற பொருளில் இங்கே சொல்லப் படவில்லை என்பது. ஆனாலும் நாமோ நமக்கு என்ன வசதியோ அதைத் தானே எடுத்துக்குவோம். ஆகவே வால்மீகியே சொல்லிட்டார். ராமன் ஒரு மனைவி மட்டும் உள்ளவன் அல்ல. பல மனைவியர் உள்ளவன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அந்தக் காலங்களில் அரசர்கள் யுத்தங்களில் அடிக்கடி கலந்து கொள்வதுண்டு. அப்படிக் கலந்து கொள்ளும் அரசன் உயிருடனும் வரலாம். உயிரற்ற உடலாகவும் வரலாம். தக்க வயது வருவதற்குள்ளாக ஒரு அரசன் இறந்தால் அவனுக்குப் பின்னர் பட்டம் ஏற ஒரு வாரிசு வேண்டுமே. பொதுவாய் இருந்த அந்தக் காலத்து வழக்கப்படி பட்டத்து அரசியின் மூத்த மகனுக்கே அடுத்த பட்டம் போய்ச் சேருவது வழக்கம். ஒரு சில இடங்களில் இரண்டாம்,மூன்றாம் மனைவியரின் மகன்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் தான். பொதுவான வழக்கம் பட்டத்தரசியின் மகன். ஆனால் அந்தப் பட்டத்தரசிக்குக் குழந்தைகளே பிறக்காவிட்டாலோ அல்லது பிறந்தது எல்லாமே பெண்களாய் இருந்தாலோ அடுத்த அரசியின் மூத்த மகனைப் பட்டத்து இளவரசனாக முடி சூட்டுவது உண்டு. மேலும் பட்டத்து ராணிக்குக் குழந்தைகள் பிறக்கும் என்பது எவ்வளவு நிச்சயமில்லையோ அவ்வளவு ஆண்குழந்தை பிறப்பும். ஆகவே மன்னர்கள் தங்களுக்கு அரச குடும்பத்து வாரிசு வேண்டுமென்பதற்காகவும், பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு மனைவி மட்டும் கொள்ளாமல், இரண்டோ அல்லது மூன்றோ கொள்ளலாம். ஒரு சிலர் ஒரே மனைவியோடும் நிறுத்திக்கொள்வது உண்டு. இங்கே ஸ்ரீராமரை அவ்விதம் ராமனின் மனைவியர் என மந்தரை கூறி இருப்பதன் காரணமே, பட்டத்து இளவரசனாய் முடிசூடப் போகும் ஸ்ரீராமனுக்கு அது வரையிலும் குழந்தைகள் பிறக்கவில்லை. ஆகவே பட்டத்துக்கு முடி சூட்டியதும் அடுத்த வாரிசுக்குத் தயாராகவேண்டும். இதன் காரணமாய் ஒருவேளை எதிர்காலத்தில் ராமன் இரண்டு அல்லது மூன்று பெண்களை மணக்க நேரிடலாம் என்பதால் மந்தரை நடக்கப்போகும் ஒன்றைக் கற்பனை செய்து கூறி இருக்கிறாள். உண்மையில் ராமனுக்கு ஒரே மனைவி மட்டும் தான். பல மனைவியர் இருந்திருந்தால் அது குறித்த குறிப்புகள் பல இடங்களிலும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படி எங்கும் சொல்லப் படவில்லை. ஆகவே இந்த சந்தேகம் அர்த்தமற்ற ஒன்றாகும்.

Tuesday, March 15, 2011

ஜாலிலோ ஜிம்கானா!

கடந்த வாரத்திலே மட்டும் ஏகத்துக்கு நேயர் விருப்பம். எதை முன்னால் எழுதறது, எதைப் பின்னால் தள்ளறதுனு புரியலை. அதனால் கொஞ்ச நாளைக்கு ஒண்ணும் கிடையாத்த்த்த்த்த்த்த்!!!!!

Saturday, March 12, 2011

சாதனைப் பெண்களைப் பாரீர்!

பெண் நெருப்பை ஒத்தவள். அவளால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். நெருப்பு எவ்வாறு ஆக்கபூர்வமான காரியங்களுக்கும் பயன்படுகிறதோ, அவ்வாறே பெண்ணும் ஆக்கபூர்வமான காரியங்களில் மட்டுமே தன் சக்தியைச் செலவிட வேண்டும். காட்டுத் தீயானது எப்படி எல்லாமோ எரிந்து காட்டையே அழிக்கும். ஆனால் வீட்டில் எரியும் அகலோ தன்னைச் சுற்றி இதமான வெளிச்சத்தைப்பரப்பும். பெண்கள் இதமான அகல்விளக்குப் போல் நின்று நிதானமாய்ச் சுடர் விட்டு எரியவேண்டும். அவர்களை அவ்விதம் நிலை நிறுத்துவதில் ஆண்களுக்கும் பெரும் பங்கு உண்டு. சங்கப் புலவர்களான பெண்களை ஆதரித்த பெரும்பாலான அரசர்கள் ஆண்களே. அதன் பின்னும் கண்ணகி, (மதுரையை எரித்ததால் எனக்குக் கண்ணகியோட கொள்கையில் விரோதம் உண்டு, என்றாலும், அந்தக் காலத்திலேயே தைரியமாய் ஒரு அரசனோடு சண்டை போட்டது மட்டும் பிடிக்கும், மற்றபடி கண்ணகி கதையைத் தனியா வச்சுப்போம்)ஒரு கணிகையாகக் கணிகைக் குலத்தில் பிறந்தும் கோவலனைத் தவிர வேறு எவரையும் ஏற்காத மாதவி, அவள் மகள் மணிமேகலை, இவளும் கணிகையர் குலத்தில் பிறந்தும் இல்வாழ்க்கையை நாடாமல் ஒரு புத்த பிக்ஷுணியாகத் தன் வாழ்க்கையை நடத்தியதோடு தனக்குக் கிடைத்த அக்ஷயபாத்திரத்தின் மூலம் மக்களின் பசியாற்றி வந்தாள். பாண்டிமாதேவி, அதன் பின்னர் வந்த திலகவதியார், இவர் இல்லை எனில் நாவுக்கரசர் எங்கே? ஈசனே அம்மையே என அழைத்த, காரைக்கால் அம்மையார் என்னும் புனிதவதியார், சோழநாட்டு இளவரசியான மங்கையர்க்கரசி பாண்டிய மன்னனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பாண்டிமாதேவியாகி சைவத்திற்குப் பெரும் தொண்டாற்றி அறுபட்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான பாண்டிமாதேவி,ஆகியோரைத் தவிர்த்துப் பின்னர் வந்த ஆண்டாளின் மனோ தைரியத்தையும், அவளின் பக்தியையும் பற்றி எழுதத் தனியாகத்தான் பதிவிடவேண்டும்.

தன் விருப்பத்தை உரக்கச் சொல்லி அந்த ரங்கமன்னாரைத் தவிர வேறு எவரானாலும் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாளே! இப்படிப் பல பெண்கள் தங்கள் திறமையைக் காட்டியே வந்திருக்கின்றனர். இவங்க எல்லாம் பல நூற்றாண்டுகள் முன்னே வாழ்ந்தவங்க என்று திரு ஜோ கூறுவதால், சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சுதந்திரத்திற்கு உழைத்த சில பெண்மணிகளின் பெயரைக் கூறுகிறேன். சிவகங்கைச் சீமையை ஆண்டமுத்து வடுகரின் மனைவியான வேலு நாச்சியார், வட மாநிலங்களின் பீமாபாய் ஹோல்கர், ராணி லக்ஷ்மிபாய், ராணி சன்னமா, மற்றும் வீரசாவர்கரின் உதவியுடன் இந்திய தேசீயக் கொடியை முதலில் வடிவமைத்த மடாம் கமா.

இவர்களுக்குப் பின்னர் வந்த காலத்தில் நேருஜியின் சகோதரி ஆன, திருமதி விஜயலக்ஷ்மி பண்டிட், திருமதி சுசேதா கிருபளானி,
திருமதி சுசேதா கிருபளானி, திரு கிருபளானியைத் திருமணம் செய்து கொண்டபோதே இருவரும் இல்வாழ்க்கை வாழவேண்டாம் என்ற முடிவு எடுத்துக்கொண்டு அதற்குச் சம்மதித்தே திருமணம் செய்து கொண்டனர். கடைசிவரையிலும் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் கணவன், மனைவியாக இல்வாழ்க்கை நடத்தவில்லை, குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நாட்டு நலனுக்காகவே தங்கள் வாழ்க்கையைச் செலவிட்டனர். கவிக்குயில் என்று போற்றப் பட்ட சரோஜினி நாயுடு, அவரின் மகள் பத்மஜா நாயுடு, மஹாத்மாவின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி, பேகம் ஆஜாத், ஆகியோரும்,

நேதாஜியின் உளவாளி - வீரப்பெண்மணி சரஸ்வதி ராஜாமணியைத் தவிர காப்டன் லக்ஷ்மி என்னும் பெண்மணி, மிகச் சமீபத்தில் இறந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மும்பையில் கொடி பிடித்துத் தலைமை வகித்த அருணா ஆசப் அலி, வெளிநாட்டில் பிறந்து இந்தியாவுக்கு வந்து இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அன்னிபெசண்ட் அம்மையார்,
அன்னிபெசண்ட் அம்மையாரால் கவரப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவி சிவகாமு அம்மாள்.
அன்னியத் துணிகளைப்பகிஷ்காரம் செய்த பத்மாசனி அம்மாள். டிவிஎஸ்.செளந்தரம் அம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் சேலம் அங்கச்சி அம்மாள், தென்னாற்காடு மாவட்ட வேலு நாச்சியார் எனப் புகழப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாள், ருக்மிணி லக்ஷ்மிபதி

உப்புச் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்ட துர்காபாய் அம்மாள், கிருஷ்ணம்மா, மேலும் துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.அம்புஜம்மாள், இவரோடு போராட்டத்தில் ஈடுபட்டபோது தலைச்சேரி நீதிமன்றம் செல்லும் வழியில் அந்நியர்களின் காவல் படையினரால் தாலி அறுக்கப்பட்ட பி.லீலாவதி, லலிதாபிரபு, இதனால் அந்த இடமே தாலியறுத்தான் தலைச்சேரி என்று பின்னாட்களில் குறிப்பிடப் பட்டது. வ.வே.சு. ஐயரின் மனைவி பத்மாவதி அம்மாள், கமலாதேவி சட்டோபாத்யாயா, பெண்கள் அடிமைகள் என்று கூறப்பட்ட காலத்திலேயே அபலைப் பெண்களுக்காக சேவாசதனம் ஏற்படுத்தித் திறம்பட நிர்வகித்த சகோதரி சுப்புலக்ஷ்மி, முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி


தேசபக்திப் பாடல்களைப் பாடிப் பிரசாரம் செய்த கே.பி.சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள். எஸ்.ஆர்.ரமாமணிபாய், வை.மு.கோதைநாயகி அம்மாள்.மதுரை எம்.கண்ணம்மாள் ,
எழுத்துக்கள் மூலம் தேசபக்தியைப் பரப்பிய பண்டிதை அசலாம்பிகை அம்மாள், இன்னும் எண்ணற்ற பெண்கள் இருக்கின்றனர். இவர்களில் திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாளின் இனிய சங்கீதத்தைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. அதே போல் திருமதி எம்.எல்.வசந்தகுமாரி, என்.சி. வசந்த கோகிலம், டி.கே,பட்டம்மாள், ஆகியோர் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு திறம்பட சங்கீத மேடையிலும் ஆட்சி செலுத்தினார்கள். கணித மேதை சகுந்தலா தேவியைப் பற்றியும் அறியாதோர் இருக்க மாட்டோம. பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் நீண்ட காலம் தலைவராகப் பதவி வகித்த நெஜ்மா ஹெப்துல்லா, இளம் வயதிலேயே அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், தன் தைரியத்தாலும், அதிரடி நடவடிக்கைகளாலும் அனைவரையும் கவர்ந்த திருமதி இந்திரா காந்தி, ஜெயலலிதா, விண்வெளி வீராங்கனைகள் கல்பனா சாவ்லா, பெப்ஸியின் தலைவர் இந்திரா நூயி, சுனிதா வில்லியம்ஸ் என்னும் விண்வெளி வீராங்கனை, பிரிட்டன் பிரதமரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் சுருதி வதேரா,

தன் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிக் கிட்டத்தட்டத் திருமணம் ஆகி இருபது வருடங்கள் தன் கச்சேரிகளில் இருந்து விலகி இருந்த அருணா சாயிராம், மேலும் இன்று சங்கீத உலகில் திறம்படக் கோலோச்சும் பெண்கள் செளமியா, சுதாரகுநாதன், நித்யஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ, காயத்ரி வெங்கட்ராகவன், காயத்ரி கிரீஷ், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, கன்யாகுமரி, அக்கரை சுப்புலக்ஷ்மி என எண்ணற்றோரைச் சொல்லலாம். அவ்வளவு ஏன், நம் சமகாலத்தில் நம்மோடு இணையத்தில் இன்னமும் தொண்டாற்றும் சீதாம்மாவும், ராஜம் அம்மாவும் வாழும் இதிகாசங்கள். சீதாம்மா சமூகத் தொண்டில் தலை சிறந்து நின்றிருக்கின்றனர். ராஜம் அம்மாவோ தமிழுக்கு ஆற்றிய தொண்டை நினைக்க நினைக்க மலைப்பாய் இருக்கிறது. தனி ஒரு மனுஷியாக இருவரும் பல விதங்களிலும் சாதித்திருக்கின்றனர்.

நினைவில் வந்தவர்கள் பெயர் மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். ஆக இதன் மூலம் தெரிவது என்னவென்றால் பெண் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவளே முயலவேண்டும் என்பதே. சில வீடுகளில் குடும்பச் சூழ்நிலை சரியாய் இருக்காது என்று சொல்வார்கள். உண்மையே. அப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தின் மகிழ்வை மட்டுமே கவனித்துக்கொண்டு வந்தால் நாளாவட்டத்தில் அவர்கள் விரும்பும் சூழ்நிலை குடும்பத்தில் உருவாகும். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் அல்லவா?? ராஜம் அம்மா கல்லூரியில் தமிழ் படிக்கவும், தமிழுக்குத் தொண்டாற்றியும் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் சோதனைகளைத் தாண்டப் பெண் ஒருத்தியாலேயே இயலும் என்பது முற்றிலும் உண்மை என்றே தோன்றுகிறது.

இதிலே தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவியான திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களைப் பற்றிக் குறிப்பிட மறந்திருக்கிறேன். தமிழ்நாட்டுப் பூர்வீகம் ஆனாலும் மலேஷியாவிலேயே பிறந்து வளர்ந்து படித்து, அங்கே முதலில் ஆசிரியை வேலை பார்த்துப் பின்னர் கணினித் துறைக்கு வந்திருக்கும் இவரின் தாயார் ஒரு எழுத்தாளர். தாய்மொழி, தந்தை மொழி தமிழ் என்பதாலேயே தமிழை நன்கு கற்ற இவரும் கொரியாவின் விஞ்ஞானியான திரு நா. கண்ணனும் முனைந்து தமிழ் மரபையும், பழங்காலத்து அச்சு நூல்கள், ஏடுகள் என மின்னாக்கம் செய்து பொதுமைப் படுத்தவும், தமிழ் மரபுகள், நாட்டுப்புறக்கலை, தாலாட்டுப் பாடல்கள், பாரம்பரியங்கள், கலை, சங்கீதம், பக்தி இலக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கம் என அனைத்தையும் வலையேற்றுவதற்காக ஏற்படுத்திய இந்த அறக்கட்டளையைப் பல விதங்களிலும் பாடுபட்டு மேம்படுத்தி வருகின்றார். தமிழ் கூறும் நல்லுலகில் இன்று இந்த அறக்கட்டளையும் இதைச் சார்ந்த மின் தமிழ்க் குழுமமும் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றி வருவது திருமதி சுபாவின் தலைமைப் பண்பினாலும், அவரின் பல்வேறுவிதமான முயற்சிகளாலுமே. அவ்வகையில் இவரும் ஒரு சாதனைப் பெண்மணியே.

Friday, March 11, 2011

ப்ரியாவுக்குத் திருமண நாள் வாழ்த்துகள்.

பழக ஆரம்பித்தக் குறுகிய நாட்களிலேயே என் மேல் அதீத அன்பும், அக்கறையும், மரியாதையும் கொண்டிருக்கும் ப்ரியா(.ஆர்.)வுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் மகிழ்வோடும், பூரண உடல் நலத்துடனும், அவரும், அவர் கணவர் மற்றும் குழந்தைகளோடு சந்தோஷமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கீதா&சாம்பசிவம்

Tuesday, March 08, 2011

பெண்ணுக்குச் சம உரிமை, இருக்கிறதா, இல்லையா?

பெண்கள் முன்னேற்றத்துக்கோ, அல்லது பெண்களின் சுதந்திரத்துக்கோ நான் எதிரி அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள். என்னுடைய கருத்தே இந்தச் சுதந்திரம் என்பது அளவுகோல் இல்லாமல் கட்டுப்பாடு இல்லாமல் போகிறதே என்பது தான். ஆறு மாதங்களுக்கு முன்னால் வந்த "ஒன் இந்தியா" என்னும் தளத்தில் கண்ட பரபரப்புச் செய்தி ஒன்று– இன்னும் முன்னேற்றமாக 21-ஆம் நூற்றாண்டுப் பெண்கள் தனித்து வாழவேண்டும் என ‘ஒன் இந்தியா’ என்னும் தளத்தின் ஒரு செய்திக் குறிப்பு சொல்கிறது. அதற்காக அவர்கள் குறிப்பிடும் வசதிகள்(?!) பின்வருமாறு:


1. இரவு நேரம்கழித்து வீட்டுக்கு வரலாம்./ இது பெண்களுக்கான சுதந்திரத்தைக் குறிக்கும் என்பது அவர்கள் கருத்து. ஆனால்/////

ஆண்களைப் போல் பெண்களும் பொறுப்பில்லாமல் சுற்றுவது என்பது அவர்களுக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். பெண்களுக்கு என்று பொருளாதாரச் சுதந்திரம் என்று எப்போது ஆரம்பித்ததோ அப்போதே பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பொறுப்பின்மைக்குப் போய்விட்டார்கள் என்று சொல்லலாம். தேவைக்கு என தவிர்க்க முடியாமல் வேலைக்குச் செல்வது வேறு. ஆனால் அதிகம் வசதி, இன்னும் வசதி, இன்னும் பணம் என்று வேலைக்குச் செல்வது வேறு. குடும்பத்தில் யார் எஜமானன், யார் அடிமை? இருவரின் பொறுப்பும் சமமானதே.


. திரைப்படம் பார்க்கும்போது அழலாம். / ஆனால்........

இது ஒரு பெரிய விஷயமாய் எனக்குத் தெரியவில்லை. எத்தனையோ ஆண்களுமே உருக்கமான படங்களைப் பார்க்கும்போது அழுகின்றனர். சினிமா நடிகர்களுக்காகத் தலையை மொட்டை அடித்துக்கொள்ளும் இளைஞர்களையும், கட் அவுட்டுக்குப் பாலாபிஷேஹம் செய்யும் இளைஞர்களையும் இப்போதும் காணலாம்.





3. தொலைக்காட்சிப் பெட்டியில் விருப்பமான தொடர்களைப் பார்த்துக்கொள்ள முடியும்./ அது சரிதான், ஆனால்////////



வாழ்க்கையின் உன்னத லட்சியமே தொலைக்காட்சியின் தொடர்களைப் பார்க்கத்தானென்று ஏற்பட்டாற்போல் உள்ளதே! பெரும்பாலான வீடுகளில் பெண்கள் சண்டை போட்டு அவர்கள் விருப்பத்துக்கான தொடர்களைத்தான் போடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் உணவு நேரத்தையே அதற்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். விடுமுறை, பண்டிகை தினங்களில் இப்போதெல்லாம் உறவினரோடு கலந்து கொண்டாடுவது போய், தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், அதில் வரும் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயிப்பதிலும் நேரம் போவது தெரியவில்லை. இது புரியாமல் யார் வீட்டுக்காவது நாம் போனால் வாங்க என்று கூப்பிடக் கூட ஆள் இருக்காது. இதில் ஆண், பெண் பேதமே இல்லை. இதைக் குறித்துப் பல தினசரிப் பத்திரிகைகள், வார, மாதப் பத்திரிகைகள் அலுத்துப் போகும் அளவுக்குப் பேசிவிட்டன. ஆணுக்கும் பெண்ணுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதில் ஒற்றுமையோ ஒற்றுமை இதில்! :P



4. மற்றவர்களுக்காக நேரத்தைச் செலவிட வேண்டாம்./ சரி தான், ஆனால் .........

ஆஹா, எத்தனை அற்புதமான கண்டுபிடிப்பு!!! நாம் இந்த உலகில் மற்றவரைச் சாராமல் வாழ முடியுமா? பிறந்ததுமே பெற்றோர். வளர்ந்து படித்து ஒரு வேலைக்குச் செல்வதுவரை அவர்கள் உதவி தேவை. அதன்பின்? எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, அப்பாடா, நிம்மதி என்று நம்பாட்டைப் பார்த்துக்கொண்டு போகலாம் இல்லையா? இதை விட மட்டமான யோசனை வேறு இருக்க முடியுமா? பொறுப்பின்மையின் உச்சக்கட்டமே இதுதான். சம்பாதிப்பது வேண்டுமானால் நமக்காக என்று சொல்லலாம். ஆனால் வேலை செய்யும் இடத்திலோ தங்குமிடத்திலோ சாப்பிடுமிடத்திலோ மற்றவரைச் சாராமல் இருக்க முடியுமா? முயலுங்கள் பெண்களே! உங்கள் சமர்த்து அது! நீங்கள் குடியிருக்கும் அறைக்குள்ளோ வீட்டுக்குள்ளோ பாம்போ அல்லது விஷ ஜந்துக்களோ வந்துவிட்டால்கூட நாமே விரட்டிக்கொள்ளவேண்டும். தண்ணீர்க்குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலோ அல்லது எரிவாயு விநியோகத்துக்கோ, குளிர்சாதனப் பெட்டியையோ, தொலைக்காட்சிப் பெட்டியையோ சரி பண்ணவோ எவரையுமே அழைக்காமல் நாமே செய்து கொள்ள முடியுமா? இப்படிப் பலர் நமக்காக கூப்பிட்ட குரலுக்கு வந்து நேரத்தைச் செலவிடுகிறார்கள். பணத்துக்குத்தான்; இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நம் அற்புதக் கொள்கை அவர்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்தால்கூட நமக்குப் பணத்துக்குக் கூட உதவிக்கு வருவார்களா, சந்தேகமே! “அந்தம்மாதான் அவ்வளவு பேசுதே! அது வேலையை அதுவே பார்த்துக்கட்டும்,” என்று சொல்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.



5. காலையில் எப்பொழுதுவேண்டுமானாலும் எழுந்துகொள்ளலாம்; எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.// என்ன ஒரு ஆனந்தம்?? ஆனால்//////

ஒருபக்கம், “ஆங்கிலேயர் எல்லாத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பாங்க, நமக்கு பங்க்சுவாலிட்டின்னா என்னனே தெரியாது. கொஞ்சம் கூடப் பொறுப்பே கிடையாது,” என்று சொல்லுவோம். இன்னொரு பக்கம் நம் நேரத்தை நாமே வீணடித்துக்கொள்வோம். காலையில் நேரம் கழித்து எழுந்துகொள்வது ஒரு பெரிய சுதந்திரம் என்ற கண்டுபிடிப்புக்கு ஒரு சபாஷ்!



6. நண்பர்களோடு நிறைய நேரம் செலவு செய்யலாம்./ ஆமாம், உறவை விடவும் இப்போதெல்லாம் நட்பே பெரிது/ஆனால்.......

வாழ்க்கையின் அர்த்தமே நண்பர்களோடு செலவு செய்வது தானா? அதைவிடவும் உயர்ந்த கொள்கைகளோ, நோக்கங்களோ, சமுதாய முன்னேற்றமோ இருக்கக் கூடாதா? நட்பு வேண்டும்தான். ஆனால் எல்லாமும் ஓர் எல்லைக்கு உட்பட்டே இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலும் இப்போதை இளைய சமுதாயம் நட்புக்கே முன்னுரிமை கொடுப்பதையும், அதை மறுக்கமுடியாமல் அவர்கள் பெற்றோரும் நட்புக்கே முன்னுரிமை கொடுப்பதையும் பெருவாரியாகக் காண முடிகிறது. சொந்தங்கள் என்றால் குற்றம், குறை சொல்வார்கள்; ஒத்துப் போவதில்லை என்பது இதற்கு அவர்கள் சொல்லும் முக்கியக் காரணம். நட்பில் மட்டும் ஒத்துப் போகிறதா? அபிப்பிராய பேதங்களே இல்லாமல் இருக்கிறதா? நிச்சயமாய் உண்டு. எவ்வளவு நெருங்கிய நட்பானாலும், ஒரு சிறு பேதமாவது இருக்கத்தான் செய்யும். நட்பு விஷயத்தில் பொறுத்துக்கொள்ளும் நாம் சொந்தங்களைக் காப்பாற்றுவதற்காக சொந்தங்களின் குறைகளையும் பொறுத்துக்கொள்ளக் கூடாதா? “குற்றம் பார்க்கில் சுற்றமில்லை” என்பது தானே ஆன்றோர் வாக்கு? தினமணி தினசரிப் பத்திரிகையில், “அருகி வரும் உறவுகள்” என்ற தலைப்பில், மாமா, மாமி, அத்தை, சித்தி, சித்தப்பா போன்ற உறவுமுறைகள் அழிந்து வருவதைக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் நாமோ எந்த உறவும் வேண்டாம் என்று ஒதுங்கினால் கொஞ்சநஞ்சம் இருக்கும் சகோதர பாசமும் எங்கே வரும்? ஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்.



7. பணியில் பதவி உயர்வு பெற்று வெளி ஊர்களுக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லும்போது பிரிவு இருக்காது./ நாம் தான் யாரையுமே சார மாட்டோமே, பிரிவென்ன பிரிவு, சுண்டைக்காய், ஆனால்//////

குடும்பம் என்ற அமைப்பையே குலைக்கும் ஒரு சுதந்திரம் இது. குடும்பம் என்ற அமைப்பு இன்றைக்கும் ஓரளவாவது இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இன்னமும் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் கட்டிக் காக்கும் பெண்களே. அத்தகைய பெண்கள் இன்றைய நாள்களில் அருகி வருகின்றனர் என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை. தேவைக்காக பெண் வேலைக்குச் செல்வது போய் இன்றைக்குப் பண ஆசை எல்லையில்லாமல் போய் நிற்கிறது.


மேற்சொன்ன அனைத்துமே சுயநலமாய்ச் சிந்திக்க வைப்பவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. மேலும் அது சொல்வது குடும்பம் என்னும் அமைப்பில் இன்னும் ஆண்களுக்கே அதிகாரம் இருப்பதாயும் அவர்கள் கட்டுப்பாடுகளும், தளைகளும் விதிப்பதாயும் சொல்கின்றனர். இது எந்த அளவுக்கு நியாயம்?? தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர்? அதற்கான காரணம் மனைவிக்குப் பிடிக்காததனாலேயே. தன் சொந்த அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகளுடன் பேச மனைவியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் நிலையில் இருப்பவர் பலர். அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்.

ஆணுக்குத் திருமணத்தின் மூலம் புதியதொரு வேலைக்காரி கிடைத்தாள் மனைவி என்ற பெயரில் என்பதே இவர்கள் சொல்லுவது. மேலும் இவர்கள் சொல்லுவது கணவன், மனைவி வீட்டிற்குச் சென்று அங்கே மனைவியின் பெற்றோர்களுக்குத் துணிதுவைத்துப் போட்டு, சமையல் செய்து கொடுத்து அவங்களுக்கு அடங்கி இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் சொல்வது படிக்காதவர்கள் யாரும் இல்லை. நன்கு படித்து வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள். இன்னும் நயமாக, பெண் தன் வேர்களைத் துண்டித்துக்கொண்டு புகுந்த வீட்டுக்கு வருவதாய்ச் சொல்கின்றனர்.

ஒரு செடியை அதன் வேரோடு பிடுங்கினால்தான் இன்னொரு இடத்தில் நடமுடியும். வேரில்லாமல் ஏதேனும் ஒரு செடியை நட்டுப் பாருங்களேன். நிச்சயம் பிழைக்காது என்பதறிவோம் இல்லையா? அப்படியே பெண்களும். நிச்சயமாய்ப் பெண் தன் வேர்களோடுதான் புகுந்த வீட்டுக்கு வருகிறாளே ஒழிய வேர்களைத் துண்டித்துக்கொண்டல்ல. இந்த வேர் குடும்பத்தில் நிலைத்து நின்று ஆலம் விழுதுகளைப் போல் படரவேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். துண்டித்துக்கொள்ள அல்ல. ஒரு பெண்ணுக்கும், ஓர் ஆணுக்கும் திருமணம் என்பதன் மூலம் சில சடங்குகள், சம்பிரதாயங்கள் ஏற்பட்டிருப்பது எதற்கு என்று அறிவோமா?

பெண்ணுக்குப் பையன் வீட்டோடு நெருங்கவும், பையனுக்குப் பெண் வீட்டோடு நெருங்கவும்தான். அதற்காகவே சில சடங்குகளைப் பையனின் சகோதரி செய்யவேண்டும் எனவும், சில சடங்குகளைப் பெண்ணின் சகோதரன் செய்யவேண்டும் எனவும் வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்துக்களில் சிலரின் திருமண சம்பிரதாயத்தில் பெண்ணையும், பையனையும் திருமண மேடைக்கு அழைத்துச் செல்வது பையனின் உடன் பிறந்த சகோதரியும், அவள் கணவருமாகவே இருப்பார்கள். அதே போல் நிச்சயதார்த்தம் நடக்கையில் பெண்ணின் சகோதரன் மாப்பிள்ளைக்கு அலங்காரம் செய்யத் துணைக்குச் செல்வதும், மாலை போட்டுச் சந்தனம் பூசுவதும், பெண்ணுக்கு அவள் நாத்தனர் அலங்கரிப்பதும், பொட்டு, பூ வைப்பதும், இப்படி நம் சம்பிரதாயம் ஒவ்வொன்றிலும் உறவினரையும் சம்பந்தம் செய்து கொண்டு ஆரம்பிப்பதில் பெண்ணின் உறவின் முறை வேர்களும் சரி, பையனின் உறவின் முறை வேர்களும் சரி பலப்படவே செய்யும்; செய்தன. சம்பந்தம் செய்வது என்பது அப்படி ஒன்றும் சுலபம் இல்லை. அதன் அர்த்தமோ, தாத்பரியமோ புரியாமல் வெறும் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழச் செய்யப்படும் ஒரு திட்டம் /ஒப்பந்தம் என்ற கோணத்தில் பார்த்தால் இப்படித்தான், அசட்டுத் தனமாய்ச் சொல்லுவார்கள். கூட்டுக் குடும்பம் என்ன அவ்வளவு உயர்ந்த ஒன்றா என்பதும் அவர்கள் கேள்வி.

இதிலிருந்து நம் பாரம்பரியமும், கலாசாரமும் எவ்வளவுக்கு எவ்வளவு செல்லரித்துக்கொண்டு வருகிறது என்று புரிகிறது அல்லவா? இதற்குக் காரணம் பெரும்பாலான புராணங்கள், நம் இதிஹாசங்கள் ஆகியவற்றின் மூலக் கருத்துகள் தவறான கோணத்தில் பார்க்கப்படுவதும் ஒரு காரணம் என்று சொல்லலாமோ? சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் மேம்போக்காவே ஒவ்வொரு கடவுளுக்கும் இரு மனைவிகள் என்ற கோணத்தில் நம் வாழ்க்கையைக் கடவுள் மேல் கட்டாயமாய்த் திணித்துக்கொண்டிருக்கிறோம். நம்மை மாதிரி வாழ்க்கை வாழ்வதோ, குழந்தைகள் பெற்றுக்கொள்வதோ கடவுளருக்கு இல்லை. நாம் நம்முடைய பக்தியை நமது வசதிக்காக அவ்விதமாய் வெளிக்காட்டிக்கொள்கிறோமே தவிர, நம்மைப் போல் கடவுளும், குடும்பம், குழந்தை, குட்டி பெற்றுக்கொண்டு மனித வாழ்க்கை வாழ்கிறார் என எண்ணிக்கொள்ளக் கூடாது. நமது குடும்ப வாழ்க்கையில் அவரவருக்கு என விதிக்கப்பட்ட கடமைகளை ஒழுங்காய்ச் செய்தாலே போதுமானது. இல்லறம் என்பதே அறத்தோடு சேர்ந்து நடத்துவதற்குத்தான். மேலும் மனைவியைத்தான் இல்லாள் என்றும் சொல்கிறோம். கணவனை இல்லான் என்று சொல்வதில்லை. இல்லான் என்றால் அர்த்தமே மாறிவிடுகிறது அன்றோ?

குடும்பத்தில் யார் பெரியவர், யார் சிறியவர் என்ற போட்டிக்கே இடமில்லை. ஆண், பெண் இருபாலாருக்கும் அது சமமே. வீட்டு நிர்வாகம் செய்துகொண்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டம் என்றும் அர்த்தம் இல்லை. வீட்டில் முழுநாளும் இருந்து நிர்வாகம் பண்ணும்போதுதான் அதன் சிரமங்கள் புரியும். ஒரு சில வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்களை அலட்சியமாய்ப் பேசுவதாலேயே வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களைத் தாங்களே மட்டமாயும் நினைத்துக்கொள்கின்றனர். மேலும் வீட்டில் சமையலறையே கதி என்று இருக்கமுடியுமா என்றும் சில பெண்கள் ஆதங்கப் படுகின்றனர். சமையல் என்பதும் எவ்வளவு முக்கியமான ஒன்று. அதுவும் ஒரு கலை என்பதைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை. பெண்கள் பத்திரிகைகள் என்றாலே என்ன வரும்? சமையல் கற்றுக்கொடுப்பதும் குழந்தை வளர்ப்பும் தானே என அலட்சியமாய் இன்றைய நவநாகரிகமணிகள் சொல்கின்றனர். குழந்தை வளர்ப்பு முக்கியம் இல்லையா? சமையல்தான் முக்கியம் இல்லையா? அத்தகைய நவநாகரிகமணிகள் சாப்பாடே சாப்பிடுவதில்லையா??

பாகற்காய் அல்வா கற்றுக்கொடுக்க ஒரு பத்திரிகையா என்பதும் அவர்கள் கேள்வி. அந்தப் பாகற்காய் அல்வா செய்யவும், சுவைக்கவும் பலரும் தயாராய்த் தானே இருக்கிறோம், மேற்கண்ட நவநாகரீகமணிகள் உள்பட. அவர்கள் மட்டும் சாப்பாடே சாப்பிடுவதில்லையா? என்னதான் கடையில் வாங்கி டப்பியில் அடைக்கப்பட்ட உணவைச் சூடு செய்து சாப்பிட்டாலும், அந்த உணவையும் யாரோ ஒருவர் எங்கேயோ, எப்பொழுதோ சமைத்துத்தானே அடைத்துக் கொடுத்திருப்பார்கள்? அதுவே நன்றாக இல்லையென்றால், ருசி இல்லை, உப்புக் கம்மி, காரம் தூக்கல் என்றெல்லாம் சொல்லாமலா இருக்கிறோம்.

எல்லாவற்றையும் சரியாகச் சேர்த்து, நன்றாகச் சமைக்க நமக்குத் தெரியவில்லை. வாங்கிச் சாப்பிடுகிறோம். வாங்கிச் சாப்பிடும்போதே குற்றம், குறை சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். அப்படியானால் சமையல் என்பது கஷ்டம் என்பதும் புரிந்துதானே இருக்கிறது? எல்லாமும் ஒரு கலைதான். இந்தச் சமையலையே மிகவும் சுலபமாய்ச் செய்யும்படி நாம் மனதளவில் நம்மைத் தயார் செய்து கொள்ளுவதோடு, சமையலுக்கான திட்டம், வழிமுறைகள் போன்றவற்றையும் முன்கூட்டியே தயாரித்து வைத்துக்கொண்டால் அரை மணி நேரத்தில் அசத்தலாய்ச் சமைத்துவிட முடியாதா? நம் நோயற்ற உடலுக்கு, நம் குழந்தைகள் ஆரோக்கியமாய் வளர சாப்பாடுதானே முக்கியம். குடும்பத்தை கவனித்து ஆரோக்யமாக வளர்ப்பதும் முக்கியம் இல்லையா? இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள் ஆகின்றனரே. ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது? நம் குடும்பத்தில் இருந்துதானே சமூகம் உருவாகிறது?

போரடிக்கிறதுனு சொல்றவங்களுக்கு நாளைக்கோ, நாளன்றைக்கோ முடிச்சுடுவேன். மின்வெட்டு இருக்கு, அதனால் சந்தோஷப் படுங்க. பதிவு தாமதமாய் வரதுக்கு! :))))))))))))

பெண்ணுக்குச் சம உரிமை! இருக்கிறதா? இல்லையா?

பெண்ணை வீட்டில் அடக்கி வைத்திருந்தது என்பது அந்நியர் படையெடுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட நிர்பந்தங்கள் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்பதை எவரும் அறியாமல் இருக்கமாட்டோம். திடீரென்றுதான் பெண்களை அடக்க ஆரம்பித்தனர். வடநாட்டில் பெண்கள் உடன்கட்டை ஏறியதற்கும் இதுவே முக்கியக் காரணம். சித்தோட் (ராஜஸ்தான் சித்தூர் என்பார்கள்) ராணி பதுமனியின் கதை அறியாதோர் இருக்க மாட்டோம். அப்படி ஒரு நிலைமை நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் வரவேண்டாம் என்பதாலேயே பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாத ஒரு சகாப்தம் துரதிர்ஷ்டவசமாய் ஏற்பட்டது. அதைச் சரியானபடி புரிந்துகொள்ளாமலேயே பெண்ணடிமை என்று ஒரு பெயர் ஏற்பட்டுவிட்டது. பெண்ணை ஆண் வன்முறையால் அடக்கியாளும் நிலையும் ஏற்பட்டுவிட்டது. இனி வரும் சமூகமாவது இதைச் சரியான கோணத்தில் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். இப்படி ஏன் திடீரென ஆயிற்று என்பதற்கான ஒரு சான்றை– சென்ற வருடம் பிப்ரவரி 27-ஆம் தேதி, ஹிந்து சப்ளிமெண்ட்ரியில் வந்த ஒரு செய்தியின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.


சென்னையில் நூறு, நூற்றைம்பது வருடங்கள்முன் வாழ்ந்த சுப்புநாகம்மாள் என்னும் பிரபலமான வக்கீல் வெங்கட்ரமண பந்துலு குடும்பத்துப் பெண்ணின் உண்மைக் கதையை எத்தனை பேர் படித்திருப்பீர்கள்? அதைப் படித்திருந்தால் பெண்கள் ஏன் அடக்கப்பட்டார்கள் என்பதற்கான காரணம் புரியும். சுப்புநாகம் என்னும் அந்தப் பெண் எல்லாப் பெண்களையும் போலவே வீட்டில் தமிழும் வடமொழியும் படித்துவிட்டுத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். செல்வாக்குள்ள குடும்பம். அந்த நாள்களில் சென்னையில் இவர்கள் குடும்பம் ரொம்பவே பிரபலம் என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த 12 வயதுப் பெண்,திருமணம் ஆனதும், உயர் கல்வி பயின்ற கணவனுக்கு மனைவி ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஆசை என்பதால் ஆங்கிலம் படித்தாள். அதற்கென ஒரு கன்யாஸ்த்ரீ வரவழைக்கப் பட்டார். பாடம் கற்றுக்கொள்வதற்கு பதிலாக அந்தப் பெண் கற்றுக்கொண்டது, வேற்று மதத்தின் பாடங்களே. கற்றுக்கொடுக்கப்பட்டதும் அதுவே. நாளாவட்டத்தில் பெண் அந்த கன்யாஸ்திரீயின் மதத்தைச் சார்ந்து அவரோடு நாட்டை விட்டே வெளிநாட்டுக்குப் போய்விட்டார். பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் பெண் கிடைக்காமல் ஊரில் இருந்தால் அவமானம் என்று ஊரை விட்டே போய்விட்டதாயும், பின்னர் அந்தப் பெண் திரும்பி வந்து தேடியதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்தப் பெண் பின்னர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தாய்ப் படித்த நினைவு.

பெண்கள் பலரும் வீட்டிலேயே தமிழும் சம்ஸ்கிருதமும் சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டனர். மேலும் தமிழை ஆழ்ந்து படிக்க சங்கீத ஞானமும் தேவை என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் போன்றவை அனைத்தும் ராகங்களோடேயே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அதே போல் வடமொழி ஸ்லோகங்களும், அதற்கான ராகங்களோடுதான் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு உயர்வு, தாழ்வு என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. எப்படியும் ஏற்றத் தாழ்வை நிறுத்த முடியாது. எல்லாரும் பணக்காரர்களாகவோ அறிவாளிகளாகவோ ஆக முடியாது. அதே போல் அனைவருமே ஏழைகளாகவும் முட்டாள்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. எல்லாரும் பல்லக்குகளில் ஏறிவிட்டால் பல்லக்குகளும் அதிகம் வேண்டும். சுமக்கவும் ஆள்கள் வேண்டும். யார் சுமப்பார்கள்? ஆண்களா?? அவர்கள்தான் ஏற்கெனவே யானை மேலே ஏறி இருப்பதால்தானே நாம் அதிகமான உரிமைகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம், இல்லையா? 33% இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்போகிறார்களாம். நாட்டில் அதைக் கொண்டாடுகிறார்கள் எல்லாரும். ஆனால் என்றைக்கோ 50% கொடுத்திருக்கிறானே ஒருவன். அவளில்லாமல் நானில்லை, நானில்லாமல் அவளில்லை என்றும் சொல்லியிருக்கிறானே!

ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்,
அவளொன்று தானொன்று சொல்லாதவன்
தான் பாதி உமைபாதி என்றானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
நேற்றானவன், இன்றானவன்,
இனி நாளையும் என்றாகப் போகின்றவன்.

அந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்தும் பெண்கள் தான் இன்றைய தேவை. கேட்டு வாங்குவதல்ல உரிமைகள். மேலும் அடிமைகள் இருந்தால் அல்லவோ உரிமைகள் என்று கேட்டு வாங்கவேண்டும்? நம் கடமைகளை மறக்காமல் நல்லபடி நிறைவேற்றினாலே போதும்.

வேத காலத்தில் இருந்து பெண்கள் அறிவாளிகளாகவே இருந்து வந்திருக்கின்றனர். அத்ரியின் மனைவி அநசூயை, நளாயினி (கணவனால் பலமுறை சோதிக்கப் பட்டவள், இவள் தான் மறு பிறவியில் திரெளபதியாகப் பிறந்தாள். அந்தக் கதை தனியா வச்சுக்குவோம்.)வசிஷ்டரின் மனைவி அருந்ததி, காச்யபரின் பெண் அபலா, இவளுக்கு இருந்த சரும வியாதியை இந்திரனைத் துதித்ததன் மூலம் போக்கிக்கொண்டாள். அவ்வளவு ஏன்? கல்விக்கு அதிபதியாக சரஸ்வதியைத் தான் சொல்கிறோம்! அதே போல் செல்வத்திற்கு என மஹாலக்ஷ்மி! வீரத்துக்கு என மலைமகளான பார்வதி தேவி! ஏன் சிவனுக்கு வீரம் இல்லையா? அதே போல் வேதங்கள் அறிந்த, சிருஷ்டிகள் செய்யும், பிரம்மாவிற்குப் படிப்பே கிடையாதா? மஹாவிஷ்ணு தான் ஒன்றுமே இல்லாமல் ஏழையாக இருக்கிறாரா? பெண்களைத் தான் இவற்றிற்கெல்லாம் நாம் அடையாளம் காட்டுகிறோம். இந்தியாவையே பாரத தேவி எனப் பெண்ணாகவே போற்றுகிறோம். அனைவரும் தாய் நாடு என்றே சொல்கிறோமே தவிர, தந்தை நாடு என்று சொல்வதில்லை. பெண்கள் சுதந்திரம் இருக்கிறதாய்ச் சொல்லப் படும் மேலைநாடுகளிலும் Motherland தான், Father land கிடையாது.

சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் பெயர் வருமாறு:
அள்ளூர் நன்முல்லையார்
ஆதி மந்தியார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஓரம் போகியார்
ஔவையார்
கச்சிப்பேட்டு நாகையார்
கழார்க்கீரன் எயிற்றியார்
காக்கைப் பாடினியார் நச்சோள்ளையார்
காவற்பெண்டு
காமக்கணி பசலையார்
குறமகள் இளவெயினியார்
குறமகள் குறிஎயினியார்.
குமிழி ஞாழலார் நப்பசலையார்
நக்கண்ணையார்
நன்னாகையார்
நெடும்பல்லியத்தை
பக்குடுக்கை நன்கணியார்
பூங்கண் உத்திரையார்
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு
பெரெயில் முறுவலார்
பேயார்
பேய்மகள் இளவெயினியார்
பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
பொன்முடியார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மாரிப்பித்தியார்
மாறலோகத்து நப்பசலையார்
முள்ளியூர்ப் பூதியார்
வருமுலையாரித்தி
வெறியாடிய காமக் கண்ணியார்
வெள்ளி வீதியார்
வெண்ணிக் குயத்தியார்
வெண்மணிப் பூதியார்


சங்க காலப் பெண்பாற் புலவர் பெருமக்கள் முப்பத்தி மூன்று பேர். இந்தப் பெண் புலவர்கள் வீராதி வீரர்களாய்த் தெரிந்த மாமன்னர்களைத் தங்கள் பாடல்களால் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களைப் புரிய வைக்கத் தெரிந்தவர்கள். இவர்களில் ஒளவையாரின் காலம் முன்பின்னாகச் சொல்லப் படுகிறது. மேலும் பல ஒளவையார்கள் இருந்ததாயும் தெரிகிறது. என்றாலும் எல்லாருமே மன்னர்களைத் தம்மோடு சரிசமமாகவே பழக வைத்துள்ளனர். எவரும் பெண்கள் தானே என இகழ்ச்சியாக நினத்ததில்லை. இன்னும் பல பெண்கள் வீரத்திலும், தீரத்திலும், கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். ஒரு குந்தவை வளர்த்த ராஜராஜசோழனின் புகழும், ராஜேந்திர சோழனின் புகழும் இன்றளவும் மங்காமல் இருக்கிறது. முதல் முதல் பயணக்கட்டுரைகள் எழுதியது, அதுவும் வடமொழியில் எழுதியது கங்காதேவி என்னும் பெண்மணிதான்.

புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூடப் பெண்கள் சுதந்திரமானவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். சரித்திரங்களிலும் பல பெண்கள் இடம் பெற்றிருக்கின்றனர். ராணி அகல்யா, ஜான்சி ராணி, சித்தோட் ராணி பதுமனி, ராணி மங்கம்மாள், ராணி மீனாக்ஷி(இவள் பின்னால் வந்தவள்), பூசைத்தாயார் என்னும் பெண்மணி எனப் பலரையும் கூற முடியும். இவர்கள் அனைவரும் தங்கள் வீரத்தையும் காட்டி இருக்கின்றனர். சில பெயர்கள் விடுபட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்டத்திலும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்ட பெண்கள் பலர். தில்லையாடி வள்ளியம்மையாலேயே காந்தி இந்தியா வந்தார். சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசீய ராணுவத்தின் மகளிர் பிரிவில் தலைவராக இருந்த பெண்மணி லக்ஷ்மி என்பவர் தமிழ்நாட்டுப் பெண்ணே. ஆகவே பெண்களை எப்போதும் அடிமையாக நினைப்பவர் இருந்ததில்லை என்பதே உண்மை. வாய்ப்புக் கிடைத்தால், இந்த வாய்ப்பு என்பது தானாக உருவாகாது அல்லவா? அத்தகைய வாய்ப்புக் கிடைத்தால் எல்லாப் பெண்களும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம்.

அவ்வளவு ஏன்? என் ஓரகத்தியின் தந்தைவழிப் பாட்டியார் அந்தக் காலங்களில் சிதம்பரம் நகராட்சியின் சேர்மனாக இருந்திருக்கிறார். ஒன்பது கஜம் புடைவையை மடிசாராகக் கட்டிய வண்ணமே நகராட்சி நிர்வாகங்களில், சந்திப்புகளில் பங்கு பெற்றதாய்ச் சொல்வார்கள்.

பதிவுகள் பெரியதாக இருப்பதாய் திவா சொல்கிறார். இன்னும் சிலரும் சொல்வதால் மிச்சம் நாளை பார்ப்போம்.

Monday, March 07, 2011

பெண்ணுக்குச் சம உரிமை! இருக்கிறதா? இல்லையா?

அமாவசை ஆதிரை, என்பவர் நான் எழுதுவதை மிக மோசமான பெண்ணடிமைத்தனம் என்று சொன்னார். திரு.ராமா என்பவர் பெண்களின் நாகரிக(?!) உடை பற்றி மிகவும் புகழ்கிறார். கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து இணையத்தில் எழுதிவரும் இளம் நண்பர் ஒருவரும் பெண் அடிமைத்தனத்தை நான் ஆதரிப்பதாய்ப் புகார் சொல்வார். அதுவும் அவருக்குப் பெண்கள் திருமணம் ஆகிப் புகுந்த வீடு போனால் அவர்கள் மாமியாருக்கோ, மாமனாருக்கோ, அந்த வீட்டினருக்கோ எந்தவிதமான சேவையும்/உதவியும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அது பெண்ணடிமைத்தனம் என்ற உறுதியான கருத்து உண்டு. பெண்கள் அணிந்துகொள்ளும் உடையும் கவர்ச்சியாக இருந்தால்தான் என்ன தப்பு என்று வாதாடுவார். பப் கலாசாரம் சரி என்று சொன்னதாய் நினைவில் இல்லை. அதுவும் சொல்லி இருப்பாரோ என்னமோ. இதோ இந்தக் கலாசாரத்தால் ஓர் இளம்பெண் எப்படிச் சீரழிய இருந்திருக்கிறாள் என்பதை இந்தத் தளத்தின் செய்தி சொல்கிறது பாருங்கள். இதற்கும் அந்த நண்பர், ‘அந்தப் பெண்ணிற்கு வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாகக் குடிக்க அனுமதிக்கவேண்டும்’ என்று சொல்கிறார். முன்னேற்றம் என்பது இதுதான் என்றாகிவிட்டது.



செய்தி-தட்ஸ்தமிழ்.காம்: மது போதையில் சாலையில் கவிழ்ந்த பெண்-சில்மிஷம் செய்த வாலிபர்கள்-விபரீதமாகும் கலாசாரம்

இது சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தினசரிகளிலும், தாட்ஸ்தமிழ்.காம் மின்னிதழிலும் வெளியிட்டிருக்கும் செய்தி. கல்லூரி மாணவி, போக்குவரத்து நிறைந்த தி.நகரில் இப்படி விழுந்து கிடந்திருக்கிறார். இது எதனால்? இப்படிப் பட்ட உரிமையையா கேட்கிறீர்கள்?
ஓர் இளம்பெண் இன்றைய நவநாகரிகத்தால் எப்படிச் சீரழிந்து வருகிறாள் என்பதற்கான அறிகுறியே இது. நமக்கு வெளியே தெரிந்து இந்த ஒரு பெண் என்றால் தெரியாமல் எத்தனை பேர்களோ? காதலனோடு நக்ஷத்திர ஹோட்டலில் மது அருந்தி உல்லாசமாக இருந்த அந்தப் பெண்ணை அந்த இளைஞர்கள் அந்த ஹோட்டலில் இருக்கும்போதே கவனித்திருக்கிறார்கள். பின்தொடர்ந்தும் வந்திருக்கிறார்கள். இந்தப் பெண் ஆபத்தைத் தானே வரவழைத்துக் கொண்டிருக்கிறார். இவர் குடிக்கும்போது பார்த்த பலரும் இனி இவருடன் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைச் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு, தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொண்டுள்ளார்.

புது வருடக் கொண்டாட்டம், நண்பர்கள் தினக் கொண்டாட்டம், காதலர் தினக் கொண்டாட்டம் என்ற புதுப் புதுக் கலாசாரங்களால் இந்தப் பெண்கள் கவரப்பட்டு மெல்ல மெல்லச் சீரழிந்து வருகின்றனர். நேற்று ஒரு நண்பர் சில பெண்கள் ஒரு குழுவாகக் கூடி அமர்ந்து கொண்டு மது அருந்தும் படங்களை அனுப்பி இருந்தார். அதைப் பார்க்கவே மனம் நொந்து போகிறது. எல்லாருமே நன்கு படித்து வேலையில் இருக்கும் கணினி யுகப் பெண்களே. இவர்களுடைய படங்களைப் பார்த்த இன்னொரு திருமணம் ஆகாத இளைஞர், “யப்பாடி, இவங்களைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தறவன் பாடு அதோகதிதான்! கடவுளே, எனக்குப் படிச்சு வேலைபார்க்கும் பெண்ணே வேண்டாம்! கல்யாணம்னாலே பயம்மா இருக்கும் போலிருக்கே,…” என்று சொல்கிறார். நிச்சயமாக அவர் சொல்வதில் தப்பே இல்லை. இவர்கள் திருமணம் ஆகிப் போனால் நிச்சயம் புகுந்த வீட்டில் கணவனோடு ஒத்துப் போவதே கஷ்டம்தான். இதிலே மற்றவர்களோடு ஒத்துப்போவதோ அவர்களுக்கு உதவியாய் இருப்பதோ, அவங்களிடம் உதவியைப் பெறுவதோ இயலாத ஒன்று. அப்படி எதிர்பார்த்தாலே, பெண்ணுரிமை அது, இது என்றுதான் பேசுவார்கள். இப்போதைய பெண்கள் பெரும்பான்மைக்கும் அதிகமானோர், திருமணம் ஆனதுமே தனிக்குடித்தனம்தான் இருக்கின்றனர். சேர்ந்து இருந்தால் மாமியாருக்கு எந்த உதவியும் செய்ய மனம் வருவதில்லை. புகுந்த வீட்டினருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்றால் அது பெண்ணுக்கு உரிமை கிடைத்ததாக அர்த்தமில்லை; அந்தப் பெண் தன் கடமையில் இருந்து தவறுகிறாள் என்றுதான் அர்த்தம்.

மருத்துவமனைகளிலே அதிகமாய்ப் பெண்களே செவிலித்தாயாக இருந்து வருகின்றனர். ஒரு பெண்ணால்தான் சிறந்த செவிலித் தாயாக இருக்க முடியும். இருக்கிறாள். அப்படி வேறு யாருக்கோ முன்பின் அறியாத ஒருவருக்கு எந்தவிதமான அருவருப்பையும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் பெண்- செவிலித் தாயாய் இருக்குமளவுக்குப் பரந்த மனம் இருக்கும் பெண்- சொந்த மாமியாருக்கோ, மாமனாருக்கோ அவர்களுக்கு உடல்நலம் இல்லை என்றாலும் கவனிக்கக் கூடாதாம். இதை என்ன “இஸம்” என்று சொல்வது?
ஆணும் பெண்ணும் இணைந்தும் இயைந்தும் வாழ வேண்டிய உலக வாழ்க்கையில் ஒருவர் மற்றவரின் துணையோ, உதவியோ இல்லாமல் வாழமுடியாது என்ற நிலையில் இன்றைய இந்தச் சீரழிந்த நிலைக்குக் காரணமே பெண்கள் தங்கள் கடமைகளிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விலகி வெளியே வந்ததுதான். சென்ற தலைமுறைப் பெண்கள் ஒழுங்கான பாதையிலிருந்து விலகி வளர்க்கப் பட்டுவிட்டார்களோ? இப்போது அந்தப் பெண்கள் தங்கள் வாரிசுகளையும் அதைவிட மோசமாக, சுயநலம் உள்ளவர்களாகவே வளர்த்து வருகிறார்கள். எங்காவது ஆண்கள் தங்கள் கடமை, கட்டுப்பாடுகளிலிருந்து பிறழ்ந்து வாழ்ந்திருக்கலாம். அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று சொல்வதைவிட்டு அந்த உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்ற திசையில் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய பெண்களின் சம உரிமைக் கோரிக்கை. இதையா கேட்டனர், சமுதாய முன்னேற்றத்திற்காக பெண்ணுரிமை பேசிய பாரதியும் நம் முன்னோர்களும்?

மக்களுக்கு வாங்கும் சக்தி பெருகி இருக்கிறது என்று சொன்னாலும், அந்த வாங்கும் சக்தியானது கடன் வாங்கும் சக்தியாகவே பல வீடுகளில் உள்ளது என்பதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை. நான்கு மாதக் குழந்தையைத் தன் பெற்றோரிடம் விட்டால் கூடப் பரவாயில்லை, காப்பகங்களில் விட்டுச் செல்லும் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளது. பலருக்கும் தேவை என்பதன் உண்மையான அளவுகோல் என்ன என்று புரியவில்லை. ஆகவே அதிகப் பணமே வசதியான வாழ்க்கை என்றே எண்ணுகிறார்கள்.

பெண்கள் என்றாலே அழகு செய்து கொள்பவர்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதைத் தந்திரமாகப் பயன்படுத்தும் வியாபாரிகளுக்குத் துணையாக பல பெண்களும் இந்தத் தள்ளுபடி விற்பனையில் வாங்கித் தள்ளுவது ரொம்பவே சகிக்க முடியாத ஒன்று. நல்லவேளையாக தள்ளுபடி இடங்களுக்கு விஜயம் செய்வதையே தள்ளுபடி செய்யும் என் வழக்கத்திற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். இத்தனை விஷயங்களும் திரு.சாரங் சொல்லி இருப்பதுபோல் ஆண்களுக்கும் பொருந்துவதே என்றாலும் இந்தப் பேரலையில் பெண்ணே பெண்ணின் உந்துசக்தியே அதிகம்.

இரசாயனப் பொருள்களின் தாக்கத்தால் முக அழகு கெடும் என்பது மட்டும் என் கருத்து இல்லை. இது வீண் செலவு என்பதும் என் கவலை. திரு.ராமா மஞ்சளையும், கசகசாவையும் சுலபமாக அடுக்களையிலேயே கிடைக்கிறது என்பதால் மிகவும் மட்டமாக நினைக்கிறாரோ என்னமோ! ஆனால் அது தரும் பயன்களை அனுபவித்தால்தான் தெரியும். இப்படி நம்மிடமே பல நல்ல விஷயங்கள் மலிந்து கிடக்க இன்று படித்தும் வேலை இல்லை, வெளியே வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பல இளம்பெண்களும் இவற்றிலிருந்து பல அழகு சாதனப் பொருள்களை தாங்களாகவே கண்டுபிடிக்கலாமே. அவற்றால் பக்க விளைவுகளும் ஏற்படாது. நம் பணமும் நம் நாட்டிலேயே சுற்றி வந்து பொருளாதார ரீதியான மேம்பாட்டையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே ஒருசில பெண்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதும் நான் அறிந்த ஒன்று. அவர்களில் ஒருவர் திருமதி ராஜம் முரளி என்பவர். பொதிகைத் தொலைக்காட்சியில் அஞ்சறைப் பெட்டிச் சாதனங்கள் மூலம் அழகு செய்து கொள்ளும் வித்தையைச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் நம் பெண்கள் பார்ப்பதோ நெடுந்தொடர்கள் வரும் சானல்கள் தானே? இவையெல்லாம் அவர்கள் கண்களில் படாது. நிச்சயமாய் ஒரு வாரத்திலோ, பத்து நாளிலோ கூட வேண்டாம், வருடக்கணக்கில் பூசினால்கூட யாரும் இயல்பு நிறத்தைவிட சிவப்பாக முடியாது. ஆகவே இந்தச் சிவப்பழகு க்ரீம் என்பதே ஒரு மோசடியான சமாசாரம் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து உண்டா? ஆனால் நாளுக்குநாள் விளம்பரங்கள் முதல் வீட்டின் முக்கிய மாதாந்திர மளிகை லிஸ்ட் வரை இவைதான் இன்று முதலிடத்தில் இருக்கின்றன.

ஒரு விளம்பரத்தில் நடிகைகளுக்கு மேக்கப் போடும் ஒருவர் தன் பெண்ணின் அழகை மேம்படுத்தப் பயன்படுத்தச் சொல்வது ஒரு சிவப்பழகு க்ரீம் ஆகும். அதைப் போட்டதுமே அவள் கலந்துகொள்ளும் போட்டிகளில் வெற்றி பெறுவாள். இங்கே திறமை, தகுதி போன்றவை அடிபட்டுப் போகிறது. கஷ்டப்பட்டுப் படித்த அவள் படிப்போ, தகுதியோ அடிபட்டுப் போகிறது. அவளுடைய நிறத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படுகிறது. இது பெண்களைக் கேவலப் படுத்துவதாய் யாருக்கும் தெரியவில்லையா? இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் கருப்பு நிறமே. அவ்வளவு ஏன்? நாம் வணங்கும் அந்த அம்பிகையும் சரி, கிருஷ்ணரும் சரி, ராமரும் சரி கருத்த நிறத்தவரே. ஆனால் அதைப் பற்றி எண்ணாமல் தானே நாம் அவர்களைக் கடவுளாக ஏற்று வணங்கிக் கொண்டிருக்கிறோம்? திரும்பத் திரும்ப விளம்பரங்களைப் பற்றியே சொல்லவேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு மோசமாய் உள்ளன விளம்பரங்கள். இப்படியான விளம்பரங்களை எந்த மகளிர் முன்னேற்றக் கழகங்களும், பெண் உரிமைக்காகப் போராடும் சங்கங்களும் கண்டு கொள்வதே இல்லை.

மேலும் ஒரு பற்பசை விளம்பரம்.. அதில் அந்தப் பற்பசையைப் பயன்படுத்தினால் ஆணுக்கும், பெண்ணுக்கும் முத்தமிட ஆசை வரும் என்று சொல்கிறது. ஆண்களுக்கான ஷேவிங் க்ரீமா? அதைப்போட்டுக் கொண்டால் உடனே எல்லாப் பெண்களுமே அந்தக் குறிப்பிட்ட ஆண் பின்னால் ஓடிவிடுவார்கள். இன்னொரு பற்பசை விளம்பரத்தில் வரும் பெண் உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கா என்று கேட்டதுமே தன் மேல்சட்டையைக் கழட்டுவாள். அந்த ஆணின் பற்களைக் கண்டதுமே அவளுக்கு அவன் மேல் காதல் பெருகுகிறது. ஆனால் அதற்கென அவள் தன் மேல்சட்டையைக் கழட்டும் அளவுக்குப் போவதாய்க் காட்டுவது பெண்ணினத்தையே இழிவுபடுத்துவதாய் உள்ளதே! இன்னொரு பற்பசை விளம்பரத்தில், ரயிலில் வரும் பெண் டிக்கெட் பரிசோதகர் ஓர் ஆணிடம் டிக்கெட் கேட்பாள். அவன் பேச வாயைத் திறந்ததுமே அவன் பற்களில் இருந்து வரும் மணமும், ஒளியும் அவளை மெய்மறக்கச் செய்து, உடனே தலையை உதறிக்கொண்டு, டிக்கெட் கூடக் கேட்காமல், தான் வந்த வேலையை மறந்து அவனோடு ஓடிவிடுவாள். இப்படி நிஜமாவே ஒரு பெண் நடந்து கொண்டால் அவளுக்கு வேலையே போய்விடும் என்பதே உண்மை. வேலை நேரத்தில் கடமையை மறந்துவிட்டு ஒரு பெண் இப்படி நடந்துகொள்வாள் என்று சொல்வதை எல்லாரும் ஆதரிக்கிறீர்களோ? இன்னொரு பெண்கள் வாகன விளம்பரத்தில் காருக்குள் மனைவியோடு அல்லது காதலியோடு அமர்ந்திருக்கும் ஒரு நபரின் காரின் கதவு கண்ணாடி போல் பளிச்சிடுகிறதாம். அதைப் பார்த்து, போகிற வருகிற பெண்கள் எல்லாம் தன் முகத்தை அலங்காரம் செய்துகொள்கிறார்களாம். இவன் காரில் இருந்தபடியே அதுவும் சிக்னலில் வண்டி நிற்கும்போது இதைப் பார்த்து அசட்டுத்தனமாய் ரசிக்கிறானாம். என்னங்க இது, இதைவிடவா பெண்ணை இழிவுப்படுத்த முடியும்? மனம் கொதிக்கவில்லை இவற்றை எல்லாம் பார்த்து? இவற்றை எல்லாம் எந்தப் பெண்ணியவாதிகளோ அல்லது தங்களை அப்படிச் சொல்லிகொள்கிறவர்களோ சுட்டிக் காட்டியதும் இல்லை. அவர்கள் கண்களில் இவை படுவதும் இல்லை. அவர்களுக்குத்தான் கணவனுக்கும் மாமியாருக்கும் காபி போட்டுக் கொடுக்கும் பெண்ணடிமைகளை மீட்கவேண்டிய நெருக்கடி இருக்கிறதே!

இன்று படித்தவர்கள் மத்தியில்தான் அதிகம் கலாசாரச் சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் ஒரு வகையில் பெற்றோரே. சின்ன வயதில் இருந்தே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதித்து வளர்க்காமல் இறை நம்பிக்கையைப் பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், பக்தியை வளர்க்காமல் இருப்பதே முழுக்காரணம். குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பகிர்ந்து உண்ணவும், இறைவனைத் தொழுதபின்னரே உணவு உண்ணவும் பழக்கவேண்டும். இன்று பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தைதான் இருக்கிறது. அதுவும் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போய்விடுவதால் அநேகமாய் ஆயாக்கள் மூலமோ அல்லது வீட்டிலேயே யாரானும் இருந்தோ பார்த்துக்கொள்வதுதான் நடக்கிறது. முன்னாள்களில் கூட்டுக்குடும்பம் என ஒரு முறை இருந்ததால் பல குழந்தைகள் ஒன்றாக இருக்கும். அனைத்துக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு கிடைக்கும். ஆனால் இன்று அப்படி இல்லையே. துரித உணவுக்குப் பெற்றோரே அடிமை என்னும்போது குழந்தைகளைக் குற்றம் சொல்லி முடியுமா?

முன்பெல்லாம் பள்ளிகள் கடவுள் வாழ்த்தோடே ஆரம்பிக்கும். இப்போதும் மற்ற மதங்கள் நடத்தும் பள்ளிகளில் அவர்களின் கடவுளருக்கு வாழ்த்துச் சொல்லி வழிபட்டுவிட்டே தொடங்குகின்றனர். ஆனால் நாம்தான் நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும், இறை நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். ஒரு வகையில் மதச் சார்பற்ற அரசுகள் எனக் கூறிக்கொள்ளும் நம் அரசுகளே இதற்குக் காரணம் எனலாம். கடவுள் வாழ்த்தைப் பள்ளியில் இருந்து நீக்கியதோடு அல்லாமல் பல தேசத் தலைவர்கள், பல அறிஞர்கள், ஞாநிகள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும் கற்பிப்பதில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றியோ, விவேகானந்தர் பற்றியோ, ரமணர் பற்றியோ, மற்ற மஹான்கள் பற்றியோ பாடங்கள் ஏதும் இல்லை. என்னிடம் ட்யூஷனுக்கு வரும் குழந்தைகளின் தமிழ்ப் பாடப் புத்தகங்களையும், சரித்திரப் பாடப் புத்தகங்களையும் பார்த்து மனம் வெறுத்துப் போய்விட்டேன். எந்தக் குழந்தைக்கும் தமிழில் ஒரு வார்த்தை கூடத் தப்பில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்தத் தமிழைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கே தமிழ் தடவல் என்ற நிலையே இப்போது காண முடிகிறது.

நாட்டுப்புறம் என்னும் சொல்லின் அர்த்தமே மாறும்படியாக நாட்டுப்புரம் என அச்சிட்டுவிட்டு அதுதான் சரியானது என வாதாடும் தமிழறிஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டிலே, தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும், படிக்கவும் மாணாக்கர்களுக்குத் தெரியவில்லை என்பதைக் குறையாகச் சொல்ல முடியுமா? இதுவே ஒரு சினிமாவிலே விஜய், தன் உறவுக்காரக் குழந்தைக்குக் கவிதைப் போட்டிக்கு எழுதிக் கொடுத்த கவிதை என்றால் பார்க்காமல் ஒப்பிப்பதோடு, எந்தப் படம், எந்தத் தியேட்டரில் வந்து எத்தனை நாள் ஓடியது என்பதையும் சொல்லுவார்கள். பெற்றோரும் இதைக் கண்டு மனமகிழ்ந்து பூரித்துப் போகிறார்கள். குழந்தைகள் சினிமா நடிகர் மாதிரி வேடமிட்டுக் கொண்டு நடிப்பதையும், ஆடுவதையும், பாடுவதையும், சினிமாப் பாடல்களின் வக்கிரமான வரிகளுக்கு பாவங்கள் காட்டி ஆடுவதையும், அது சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொள்ளவுமே ஊக்குவிக்கப் படுகின்றனர். (நிகழ்ச்சியின்போது, “உனக்கு இது யார் சொல்லிக்கொடுத்தாங்க?” “என் மம்மி” என்பதே பெரும்பான்மை பதில்) இப்படி வளரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் எங்கிருந்து வரும்? அதற்காகவும் இன்றைய பெற்றோர் ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். இதோ ஒரு சானலின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்ட சிறுவனுக்காகப் பெற்றோர் செய்த செலவுகள் நினைத்தாலே தலைசுற்றுகிறது. ஒரு பக்கம் இந்தியாவை வறுமை நாடு என்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இவ்வளவு பேர் என்ற புள்ளிவிவரங்கள். மறுபக்கம் தங்கள் குழந்தை தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் ஜெயிக்க, பெற்றோர்- அதுவும் நடுத்தர வர்க்கத்து, வருமான வரி கட்டும் பெற்றோர்- செய்யும் செலவு. அந்தப் பையனின் தாய் கொஞ்சமாவது யோசித்திருக்கலாமே.

இந்தத் தொலைக்காட்சியின் போட்டிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் என்னவென்று தெரியுமா என்பதே சந்தேகம்; அப்பாவும் அம்மாவும் அவ்வளவு படுத்தி எடுக்கின்றனர். மேலே சொன்ன சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பையனை, ‘சரியாப் பாடலைனா அப்பா அடிப்பேன்’ என்று சொன்னாராம். நடனப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கோ உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து எல்லாமும். மிகச் சிறிய வயதிலேயே இந்த ரசாயனக் கலவைகள் மிகுந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தி, சின்னக் குழந்தைகள் கூட குழந்தைத் தன்மையை இழந்து காட்சி அளிக்கின்றனர். இது எந்தத் தாயின் கண்ணிலாவது படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். பக்கத்து வீட்டுக் குழந்தைக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற வாய்ப்புக் கிடைத்தது என்றால் தன் வீட்டுக் குழந்தையை அவர்கள் படுத்தும்பாடும் அந்தக் குழந்தைகள் பெறும் மன உளைச்சலும் நேரில் பார்த்தால்தான் நம்பமுடியும்.

பெண்கள் தங்கள் நளினத்தையும், எழிலையும், கம்பீரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். ஆணோடு சம உரிமை என்று போராடியதால் பெண்களுக்கு அதிகமாக என்ன கிடைத்தது? அல்லது கிடைக்கப் போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எதையுமே பிடிவாதமாய் ஸ்தாபிதம் செய்யாமலேயே நாம் நம் உரிமைகளை எடுத்துக்கொள்ளலாம். அல்லது உரிமைகள் இல்லை எனில் மீட்டெடுக்கலாம். ஆனால் அதற்குத் தேவை சகிப்புத் தன்மையும், பொறுமையும்.

தொடரும்.

Friday, March 04, 2011

பெண்களுக்குச் சம உரிமை?? இருக்கிறதா, இல்லையா?

தமிழ் ஹிந்துவில் வெளியிட்ட போது சென்ற பகுதிக்கு, பெண்கள் தரப்பில் இருந்து இரண்டே பேர்களைத் தவிர வேறு யாருமே இதற்குப் பின்னூட்டமிடவில்லை. நண்பர் ஒருவர் சொன்னது சரிதான் என்று நினைத்தேன். “எல்லாப் பெண்களும் உங்க கிட்டே கோபமாய் இருப்பாங்க. உங்களை இந்த மட்டோடு விட்டுட்டாங்களேனு நினைச்சு சந்தோஷப்படுங்க!” என்று சொன்னார். அவர் சொன்னபோது சிரிப்பு வந்தாலும் உண்மையில் இங்கேயும் பல பெண்களும் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.தமிழ் ஹிந்துவில் சந்திரா என்னும் பெண்மணி என்னை அடிப்படைவாதி என்று சொன்னதில் ஆச்சரியமும் இல்லை. சுதந்திரம் என்பதற்கான அளவுகோல் என்ன?? அதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சுயக் கட்டுப்பாடு இல்லாத எந்தச் சுதந்திரமும் பலன் அளிப்பதே இல்லை. இன்றைக்கு நம் நாடு இருக்கும் நிலைமைக்குக் காரணமே கிட்டத்தட்ட 50 விழுக்காடு பெண்கள் இந்தச் சுயக் கட்டுப்பாட்டில் இருந்தும் கலாசாரத்திலிருந்தும் விலகிப் போனதுதான்.

ரிஷி ரவீந்திரன் என்னும் இன்னொரு நெருங்கிய நண்பர் இந்தக் கட்டுரையைத் தமிழ் ஹிந்துவில் படித்துவிட்டுக் , கட்டுரை சமநிலையில் எழுதப்படவில்லை என்கிறார். ஆனால் அது எப்படி என்று அவர் சொல்லவே இல்லை. இன்றைய காலகட்டத்தில் ஆண்களும், சரி, பெண்களும் சரி எல்லாவகை குணங்களையும் கொண்டு இருந்தாலும் சமுதாயத்தில் இன்னமும் பெண்ணின் முக்கியத்துவம் குறையவில்லை என நினைக்கிறேன். குறைய ஆரம்பித்து வருகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு பெண் அப்பாவியாக வெகுளியாக இருந்துவிடலாம், தப்பே இல்லை. ஏனெனில் அந்தப் பெண்ணால் எப்படிப் பட்ட புத்திசாலியான கணவனையும் தன்வயப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் முட்டாள் கணவன் என்றாலோ மிக மிகப் புத்திசாலியான பெண்ணே தேவை. அத்தகைய புத்திசாலித்தனம் இன்றைய பெண்களிடம் இருக்கிறதா? அதற்காக ஒட்டுமொத்த ஆண்களை நான் முட்டாள் என்றெல்லாம் சொல்லவில்லை. இந்த இடத்தில் கணவனைச் சாமர்த்தியமாகவும், திறமையாயும் தன் வயப்படுத்துவதையே குறிப்பிடுகிறேன். ஏனெனில் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இன்னமும் திருமணமும், கணவனும் முக்கியமான அங்கம் வகிக்கின்றனர்.

படித்து லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் முறையான திருமணவாழ்வு இல்லாமல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி வாழ்க்கை நிறைவடைவதே இல்லை. மேலும் பெண்ணானவள் ஆலமரத்தைப் போல் விழுது விட்டுப் படரும் இயல்பு கொண்டவள்.. மரத்தை எப்படி வேரோடு பிடுங்கினால் பாதிப்பு ஏற்படுமோ அப்படியே குடும்பம் என்னும் வேரில் இருந்து பெண் தன்னை விடுவித்துக் கொள்வதும் கடினமே. ஒரு பெண்ணால் எல்லாப் பந்தங்களையும் அறுத்துத் தன்னை விடுவித்துக்கொண்டு வெளிக்கிளம்புவது மிகக் கடினம். வெளிக்கிளம்புவது என்பது இங்கே வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திரா நூயியே, “அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே நான் என் குழந்தைகளுக்குத் தாயாகவும், என் கணவருக்கு மனைவியாகவும் மாறிவிடுகிறேன்.” என்று சொல்லி உள்ளார். ஒரு பெரிய குளிர்பானக் கம்பெனியின் நிர்வாகியான அவரே இப்படிக் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நம் நாட்டுப் பெண்கள் அதிலே பாதியானும் காட்டுகிறார்களா?

பெண்களாகிய நாம் நமது உரிமைகளை மட்டுமே நினைத்து அவைகளைப் பெற ஓடினோமானால் என்ன நடக்கும்? நம் கைகளுக்கு அவை எட்டாத் தூரத்திலேயே காட்சி அளிக்கும். வேண்டுமானால் போராட்டங்கள் நடத்திக் கடுமை காட்டிப் பெறலாம். அதுவா நன்மை? உரிமைகளை மட்டுமே மனசிலே நினைத்துக்கொண்டு நம் கடமைகளை மறக்கலாமா? கடமைகளுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் அல்லவா? கடமைகளைச் செய்தோமானால் நாம் கேட்காமலேயே அனைத்து உரிமைகளும் நம்மிடமே தானாகவே வருமே!

ஆணைவிடவும் பெண்ணுக்கு இயற்கை அறிவும், உள்ளுணர்வும் அதிகம் என்றே சொல்லலாம். அநேகமாய்ப் பெண்களின் உள்ளுணர்வுகள் நூற்றுக்கு நூறு சதம் சரியாகவே இருக்கும். ஆணிடம் இந்த ஆக்க சக்தியும், ஆன்ம இயல்பும் இயல்பாகவே குறைந்தே காணப்படும். இது இயற்கை விதித்த நியதி. அதை ஈடு கட்டும் வகையிலேயே பெண்ணிடம் இவை அபரிமிதமாய்க் காணப்படுகின்றன. வில்லையும், அம்பையும் எடுத்துக் கொள்ளுங்களேன். தனித்து இயங்க முடியுமா? வில்லில் அம்பைப் பூட்டி நாணால் வளைக்கவேண்டும் குறி வைத்த இடத்தில் தாக்க. குடும்பத்திலும் அப்படியே. வில்லாகிய ஆண், நாணாகிய பெண்ணால் அவள்பால் வளைந்தே அம்பு என்னும் குடும்பத்தைப் பூட்டுகிறான். அது தர்மம் என்னும் குறியைச் சரியாகப்போய்த் தாக்கும். தன் அன்பால் பெண் ஆணை வளைக்கிறாள்; என்றாலும் அவனுக்குக் கீழ்ப்படிகிறாள். அதே சமயம் அவனைத் தன்பால் இழுக்கவும் செய்கிறாள். ஆனாலும் அவனையே பின்பற்றிச் செல்கிறாள். வில்லுக்கு நாண் இல்லாமல் எப்படி வேலை இல்லையோ அப்படியே ஆணுக்குப் பெண் இல்லாமலும், பெண்ணுக்கு ஆண் இல்லாமலும் குடும்ப அமைப்பு என்பதே இல்லை.வலை உலகத்தில் இருக்கும் இளம் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சாட்டிங்கில் இதைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னவை:

“பெண்ணுரிமைவாதிகள் தங்கள் கடமைகளைத் தட்டிக் கழிப்பதற்காகப் போராட்டம் என்னும் போர்வைக்குள்ளே ஒளிந்து கொள்கிறார்கள். சமூகத்தில் பல வேறு வேறு தளங்களில் இயங்கும் பெண்களுக்கும் உண்மையாகவே அவர்களின் நியாயமான உரிமை மறுக்கப் படுகிறது. அத்தகைய பெண்களை அவர்கள் இனம் கண்டு அவர்களுக்காகப் போராடுவதில்லையே, ஏன்? அதிகம் படித்த சுயமாகத் தன் காலில் நிற்கும் பெண்களே இத்தகைய பெண் உரிமைப் போராட்டங்களை நடத்துகிறார்கள்; இந்தச் சித்தாந்தத்தை அவர்களே முழுமையாகப் பின்பற்றுகிறார்கள். மேலும் நகரத்துப் பெண்களிடமிருந்து கிராமப் புறத்துப் பெண்கள் வெகுதூரம் வேறுபட்டு இருக்கிறார்கள். அவர்களின் உரிமைகள் பற்றி என்றும், யாரும், எதுவும் பேசுவதில்லை. இப்போது சென்ற பதிவில் நீங்கள் எழுதி இருப்பவயும் நகரத்துப் பெண்களுக்கே செல்லும். கிராமத்துப் பெண்கள் குறித்து நீங்களும் எதுவும் சொல்லவில்லை. அது சரி, ஆண்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்னும் இந்தப் பெண்கள் ஆண்களே இல்லாத உலகில் இருக்கப் போகிறார்களா? அல்லது பெண்களே இல்லாமல் ஆண்களால்தான் இயங்க முடியுமா? இப்படிச் சில பெண்கள் பெண்ணுரிமை பேசிக் கொண்டு ஆண்களை எதிரிகளாய்ப் பார்த்தால் அந்த இயக்கம் எவ்வாறு வெற்றியடையும்?”

இவையே அவர் சொல்வதன் சாராம்சம். கிராமத்திலும் பெண்களின் நிலைமை மோசம் என்று சொல்லக் கூடிய அளவில் இல்லாவிட்டாலும், நவீன, நகர, நாகரிகத் தாக்குதல்கள் அங்கே அதிகமாகவே காணப்படுகின்றன. அடிக்கடி எங்கள் கிராமத்திற்குச் செல்பவள் என்ற முறையில் சிலவற்றைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். நகரங்களிலேயே வசிக்கும் எனக்குக் கூடத் தெரியாத பல அழகு சாதனப் பொருள்களும், உடை அலங்காரங்களும் கிராமத்துப் பெண்களுக்குத் தெரிந்திருக்கின்றன. அதற்குக் காரணம் தொலைக்காட்சியும், அதன் தாக்கமுமே. நகரத்துப் பெண்கள் என்றாலே தலையை விரித்துப் போட்டுக் கொண்டு (இதுக்கு யார் என்ன சொல்லப் போறீங்களோ சொல்லுங்கள், ஆவலோடு காத்திருக்கிறேன்), சல்வார், கமீஸ் போட்டுக் கொண்டு/ அல்லது மிக மிக நாகரிகமாய்க் குட்டைப்பாவாடை அணிந்த வண்ணம்/, கவர்ச்சியான உடை உடுத்திக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் அடிக்கடி ஹோட்டல்களில் அதுவும் நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஹோட்டல்களில் சாப்பிடலாம் என்பதும் அவர்கள் கனவு. அப்படி எல்லாம் இல்லை என்றாலும் சிலருக்கு நம்பிக்கையும் வருவதில்லை. நகரத்துப் பெண்களின் உடை அலங்காரங்களைத் தான் விளம்பரங்களிலே பார்க்கிறோமே என்பார்கள். இப்படியான ஒரு வாழ்க்கைக்காகவே, எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண் தன் கணவனை நச்சரித்து நகரத்தில் வீடு பார்த்துக் குடிவைக்கும்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலிப் பக்கத்துக் கிராமத்தில் அழகான, ஓரளவு இன்னும் மாசுபடாத தாமிரபரணிக் கரையில் இருக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணான அவர், “இங்கே வராதே, உனக்கு இங்கெல்லாம் சரிப்படாது!” என்று நான் சொன்னதன்பின் என்னை எதிரியாகவே பார்க்கிறார். ஆனால் அவர் கணவரோ அவரை விட மன முதிர்ச்சி பெற்றவராய், “நீங்கள் சொல்வதின் உண்மை அவளுக்கு இங்கே வந்து பட்டபின்தான் தெரியும், வந்து இருக்கட்டும்,” என்று சொல்லிக் குடித்தனம் வைத்திருக்கிறார். இது ஒரு சின்ன உதாரணம்தான்.

இதற்கெல்லாம் காரணமே தொலைக்காட்சிகளும் அதன் நிகழ்ச்சிகளும் அவற்றின் தாக்கங்களுமே. தொலைக்காட்சி விளம்பரத்தின் சிகப்பழகு க்ரீம் விளம்பரத்தைப் பார்த்துட்டு அதை வாங்காத பெண்ணே தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்திலும் இல்லை என அடித்துச் சொல்லலாம். நம் மஞ்சளும், கஸ்தூரி மஞ்சளும் செய்யாத ஒன்றையா இவை செய்துவிடப் போகின்றன?? எனக்கு முகப்பரு வந்தபோது நான் போட்டுக் கொண்ட க்ரீம்– வசம்பு, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் சந்தனக் கல்லில் அரைத்து, விளக்கெண்ணெய் விட்டுக் குழைத்து இரவு படுக்கும்போது போட்டால் காலை அவை அமுங்கிவிடும். இது என் சொந்த அனுபவம். இப்போது அதற்கெல்லாம் நேரம் எங்கே என்பவர்கள் வாரம் ஒருநாள் ஒதுக்கி இவைகளைப் பொடிசெய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாமே? நிச்சயமாய்ப் பலன் தரும. (ஆட்டோ வராமல் இருந்தால் சரி! :D)

“அட, உனக்குச் சரியாப் போச்சுன்னா எல்லாருக்குமா?” என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. இதன் மகத்துவம் தெரிந்தே தான் மஞ்சளுக்குப் பேடண்ட் வாங்கி இருத்திருக்கிறார்கள் மேல்நாட்டுக்காரர்கள். அங்கே இருந்து இதே அறிவுரை வந்தால் நாம் ஏற்றுக்கொள்வோம். நம் நாட்டிலேயே சொன்னால் அதை கேலி செய்வோம். மூடப் பழக்கம், பழங்காலம் என்றெல்லாம் சொல்லுவோம்.

இந்தச் சிவப்பழகு க்ரீம் போட்டுக்கொள்ளவில்லை என்றால் அந்தப் பெண் கருப்பாகவே இருப்பார்கள் என்று வேறு சொல்கிறார்கள். மேலும் கருப்பான பெண் என்றால் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று முன்பு வந்த விளம்பரங்களிலே காட்டிக்கொண்டிருந்தார்கள். அது பரவாயில்லையா? அதை நிறபேதம் கற்பிக்கப் படுவதாய் ஏன் பெண்ணுரிமைக்காரர்கள் எவரும் நினைக்கவில்லை? அதை ஏன் அவர்கள் எடுத்துச் சொல்லவே இல்லை? ஏன் பெண் கருப்பாய் இருந்தால் மட்டம் என்று நம்மைப் பற்றி நாமே ஏன் தாழ்வாக நினைக்க வேண்டும்? அதற்காகவெல்லாம் மனம் சோர்ந்து போகலாமா? இந்தியாவின் பொது நிறமே ப்ரவுன் நிறம் தான். ஆனால் தொலைக்காட்சி சானல்களிலோ இப்பொழுதும் கருப்பான பெண்ணுக்கு வேலை கிடைக்காது; மாடல் ஆக முடியாது; நடன அரங்கில் திறமையாக ஆடத்தெரிந்தாலும் பின்வரிசைக்குத்தான் போகவேண்டும்; டல் திவ்யாவிற்கு டேட்டிங் போக வகுப்பில் சக மாணவன் கிடைக்க மாட்டான்; கருப்பாக இருப்பவள் சொல்லும் பிக்னிக் ஸ்பாட்டை யாருமே கவனிக்கமாட்டார்கள்… அப்படி இப்படி என்று என்னென்னவோ சொல்லிப் பயமுறுத்தல்கள். அந்தப் பெண் இந்தச் சிவப்பழகு க்ரீமைப் போட்டுக்கொண்டதும் அதிசய உலகிலிருந்து வந்த மாதிரி சிவப்பாய் ஆகிவிட்டாள் என்றும் காட்டுகின்றனர். அது எப்படி முடியும் என்று யாரும் யோசித்துக் கூடப் பார்ப்பதில்லை. கல்யாணம் தான் வாழ்க்கையா ஒரு பெண்ணுக்கு என்பவர்கள், இந்த மாதிரி மாடல் ஆனதோடு, அல்லது சினிமாவில் நடிப்பதோடு, அல்லது நல்லதொரு வேலை கிடைப்பதோடு திருப்தி ஆகி விடுகிறதா என்பதைக் கேட்டால் பதில் சொல்ல முடியுமா? வாழ்க்கையில் இப்படியோர் உயர்ந்த நிலைக்கு வந்தாலும் அந்தப் பெண்ணால் மன அமைதியோடு இருக்க முடியுமா?



இந்தச் சிவப்பழகு க்ரீமை வாங்கிப் பூசிக்கொண்டால்தான் (அதுவும் ஏழே நாளில் வித்யாசம் ஏற்பட்டு) உயர்ந்த இடத்துக்கு வரமுடியும்; இதை வாங்கினால்தான் உனக்கு வாழ்க்கையே என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் வாழ்க்கையின் மன மகிழ்வுக்கு இது மட்டுமே போதுமா என்று அவர்களைக் கேட்டால் அதை ஒத்துக்கொள்வார்களா? அவர்களுக்கு அவர்கள் தயார் செய்யும் பொருள் விற்பனையில் முதலிடத்தில் இருக்கவேண்டும். இதை ஒரு வியாபாரத் தந்திரம் என்று மட்டுமே சொல்லலாம். மற்றபடி பெண்கள் இதனால் உயர்ந்து விட்டார்கள் என்று சொல்ல முடியுமா? இதை ஒரு மதிநுட்பம் படைத்த முதிர்ச்சியடைந்த பெண் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்விடுவாள். ஆனால் படித்த பெண்களிடமே இதற்கு எதிர்ப்பே இல்லை. அவர்களும் இதனால் என்னவோ வாழ்க்கையே சாபல்யம் அடைவதாக நினைத்து வாங்குகிறார்கள்.

ஆண்களுக்கான ஷேவிங் க்ரீம் விளம்பரமா? அதற்கும் ஒரு பெண் வந்தால்தான் விளம்பரமே சாபல்யமடையும். அந்த ஆணைப் பார்த்த பெண்கள் அவனுக்காகவே வரிசையிலே நிற்பார்கள். இன்னும் செல்போன் என்னும் கைபேசி விளம்பரம்… ஓர் ஆண் அனுப்புகிற எஸ்.எம்.எஸ்ஸுக்கும், அவனோடு பேசவும் பெண்கள் வரிசையிலே வருவார்கள். வேறு வேலைவெட்டி எதுவும் எல்லாமல் என்னவோ இதற்காகவே பெண்கள் காத்துக்கிடக்கிறாற் போல் காட்டுவார்கள். எந்தப் பெண்ணுரிமைக் கழகம் அல்லது சங்கம், அல்லது மக்கள் பிரதிநிதிகள் இதை எதிர்க்கிறார்கள்? இப்போது ஒரு வாரமாய் வரும் மற்றொரு விளம்பரம், டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனத்திற்கு. அதில் பின்னால் பில்லியனில் அமரும் பெண்களை எவ்வளவு மோசமாய் உட்கார வைக்க முடியுமோ அவ்வளவு தரம் கெட்டு அமர்ந்து வந்தாலும் எங்க வண்டியிலே எதுவும் ஆகாது உனக்கு என்று சொல்கின்றனராம். இவங்க புத்தி இப்படியா போகணும்னு நினைச்சேன். வேகமாய் ஓடும் வண்டியில் இப்படி எல்லாம் செய்து கொண்டு வந்தால் போக்குவரவுக்கு எவ்வளவு இடைஞ்சல் ஏற்படும்னு சொல்லி இருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். :(

இங்கே என்னை அடிப்படைவாதி என்று சொல்லும் பலரும் இதை எல்லாம் ஆதரிக்கிறார்களா? இதற்காகக் குரல் கொடுத்த பெண்ணுரிமைக்காரங்களைச் சுட்டிக் காட்டட்டும். அவங்க கேட்பது 33% பெண்களுக்கான ஒதுக்கீடு தான். பாக்கி??? பாக்கியிலே எதுவும் வேண்டாமா? இந்த ஒதுக்கீடு கொடுத்த உடனே பெண்கள் முன்னேற்றம் அடைந்து இந்தியாவின் எல்லாப் பெண்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிடுமா? பெண்களால் அடிமைப்படுத்தப் பட்டு, அவங்களால் கஷ்டப்படும் ஆண்களையும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரலாமா? ஒரு சிலர் கள்ளக்காதல் என்பதையும் சர்வசாதாரணமாக் கூறி இருக்கிறார்கள் . இது ஒன்றும் புதுசு இல்லை என்பது அவர்கள் கட்சி. அதனால் நடந்தால் நடக்கட்டும் என்று விட்டுவிடலாமா? வேண்டுமானால் கள்ளக்காதலையும் அங்கீகரிக்க வேண்டும் என்று பெண்கள் போராடவேண்டும் என்று சொல்கிறாரா? நல்லவேளையா அது பெண்கள் உரிமை என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

எங்கோ நடந்திருக்கலாம். நடக்கும், நடக்கிறது. ஆனால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் மற்றப் பெண்களும் அதைப் பற்றி அறிய நேரிடுகிறதே? அதற்காக ரகசியமாக நடக்கவேண்டும் என்கிற அர்த்தத்திலே எல்லாம் சொல்லவில்லை. அடிப்படையான பெற்றோர் வளர்ப்பு முறையே சரியில்லாமல் போனதே இவ்வளவு அவலங்களுக்கும் காரணம். ஒரு தலைமுறைக்கே பக்தி என்றோ ஆன்மீகம் என்றோ எதுவுமே தெரியாமல் போனது தான் முக்கியக் காரணம். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போக ஆரம்பித்துக் குழந்தைகள் தனியாக வளர ஆரம்பித்ததில் பெற்றோரின் அணைப்பும், ஆதரவும் கிடைக்காத குழந்தைகளே பொதுவாய் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறினால் போதும்னு நினைத்து குறுக்கு வழியில் செல்கின்றனர்.. பெற்றோர் ஒரு முன்மாதிரியாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது குழந்தைகளை பக்தியும், கட்டுப்பாடும் சொல்லிக் கொடுத்து வளர்க்கவேண்டும். அல்லது அதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவேண்டும்.

Thursday, March 03, 2011

பெண்களுக்குச் சம உரிமை? இருக்கிறதா, இல்லையா?

சென்ற வருடத்திய சில நிகழ்வுகள்:

சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள்.

வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு.

இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். இதே ஓர் ஆணாக இருந்தால் மனைவியை ஏமாற்றியதற்கும் கள்ளக் காதலில் ஈடுபட்டதற்கும் அவன் மேல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியும். ஆனால் பெண்களுக்கு மென்மையான சட்டங்களே இருக்கின்றன. அவ்வளவு எளிதில் அவர்களைத் தண்டிக்க முடியாது. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளும் பெண் விடுதலை பற்றிப் பேசும் ஆண்களும் சரி இத்தகைய பெண்களின் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் செயல்கள் பற்றியும் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆண்களிடம் பெண்கள் கஷ்டப் படுவதாயும், கொடுமைப்படுத்தப் படுவதாயும் சொல்லும் பெண்ணியவாதிகள் இந்தப் பெண்களால் சீரழிந்த குடும்பங்களைப் பற்றி நினைத்தானும் பார்க்கிறார்களா? சந்தேகமே! அந்தச் சீரழிக்கப்பட்ட குடும்பங்களிலும் பெண்கள் இல்லையா? அந்தப் பெண்களுக்கு மட்டும் எந்தவிதமான உரிமையும் கிடையாதா?

மேலும் லஞ்சம் வாங்குவதிலும் பெண்கள் நாங்கள் ஒருவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டு வருகின்றனர். சில மாதங்கள் முன்னால் பாஸ்போர்ட் அதிகாரியான பெண்மணி ஒருவரின் லஞ்ச ஊழல் வெளிவந்தது. மேலும் காவல் துறையில் இருக்கும் சில பெண்களும் லஞ்சம் வாங்குவதாயும் வேறு துறைகளிலும் லஞ்சம் வாங்கும் பெண்மணிகள் இருப்பதாயும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. மருந்துகள் வழங்கும் மருத்துவத் துறையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை. பிஹாரில் காங்கிரஸ் மேலவை உறுப்பினரான ஜோதி தேவி என்ற பெண்மணி சட்டசபை நுழைவாயிலில் இருந்த பூந்தொட்டிகளை எல்லாம் உடைத்துப் போட்டு அமர்க்களம் செய்தார். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இந்த அநாகரிகமான, பெண்மைக்குச் சற்றும் பொருந்தாத, ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சி காட்டப் பட்டது. என் கணவரோடு அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்குக் கூச்சமாய் இருந்தது. இது மட்டுமா?

பெண்களுக்கு உரிமைகள் இல்லை என்றும் அவர்களை அடிமைகள் என்றும் சொல்லிக் கொண்டு பெண்ணியவாதிகள் எதற்கெடுத்தாலும் கொடிதூக்கிக் கொண்டு அலைகின்றனர். சமீபத்தில் ஷர்மிளா தாகூர், பிருந்தா காரத், ஜெயந்தி நடராஜன், ஷபனா ஆஸ்மி போன்றோர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவிற்காக நடுத்தெருவில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்; தினசரிகளில் செய்தியாக வந்தது. இப்படி எல்லாம் இருக்கும்போது பெண்களுக்கு உரிமை இல்லை என்றும் அடிமையாக நடத்தப்படுகிறாள் என்றும் பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்றும் முழங்குவதைப் பார்த்தால் சிரிப்பாய் வருகிறது. உடை உடுத்துதலில் தொடங்கிய ஆபாசம் இன்று கள்ளக் காதலிலும் லஞ்சம் வாங்குவதிலும் அதற்காகச் சிறு குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொலை செய்வதிலும் போய் முடிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்து வெளியே வந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் இவை. சம உரிமை கொடுக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும்போதே இப்படி எல்லாம் நடந்துகொள்ளும் பெண்கள் சம உரிமை கொடுத்துவிட்டால்– அதாவது அவர்கள் கேட்பதெல்லாம் இப்போது கிடைப்பதில்லை என்று இப்போது சொல்கிறார்கள்; அதெல்லாம் கிடைத்துவிட்டால்– இப்படி எல்லாம் நடக்காதா?

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! ஆனால் இந்தப்பெண் உரிமை பேசுபவர்களுக்கு என்னவோ பெண்கள் அடிமையாக இருப்பதாயும் அவர்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவதாயுமே நினைப்பு. சமீப காலங்களில் கிட்டத்தட்ட இந்தக் கள்ளக்காதல் பிரச்சினைகளால் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அநேகமாய்ப் பெண்களே குற்றவாளிகள். ஓர் ஆண் தன் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணோடு உறவு பூணும் பட்சத்தில் சட்டம் அவன் மேல் வலிமையாகப் பாய்கிறது. அதுவே ஒரு பெண் என்றால் மென்மையாக அணுகுகிறது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்று வருகிறபோது இதில் மட்டுமே ஏன் பெண்ணிடம் மென்மையான அணுகுமுறை?? பெண்ணிய வாதிகளும் இப்படிப் பட்ட பெண்களைப் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசுவதில்லை. உடல் ரீதியாகவும், இயக்கங்களின் மூலமாகவும் ஆணும் பெண்ணும் மாறுபடுவது இயற்கை. ஆனால் அதற்காக ஒரு பெண் என்னவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பது அருவருப்பாய் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்தெல்லாம் பார்க்கவே வேண்டாம்.

பெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான். ஆனாலும் தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களில் பெண்களை மட்டமாய்ச் சித்திரிப்பதற்கு ஒரு வரையறையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எந்தத் தொடரை எடுத்தாலும் அதில் கணவன் அல்லது மனைவிக்கு ஒரு கள்ளக் காதல், அதற்காகப் பழிவாங்குவது, அல்லது மாமியாரைப் பழிவாங்குவது, மாமியாரையோ, கணவனையோ பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தான் வாழ வந்த குடும்பம் என்ற எண்ணமே இல்லாமல் பழி தீர்த்துக்கொள்ளுவது…. அத்தகைய பெண்களைத் திறமைசாலிகளாய்க் காட்டுவது. அவர்களால் கஷ்டப் படும் பெண்களைத் திறமையற்றவர்களாய் வாயில்லாப் பூச்சிகளாய், பயந்தவர்களாய்க் காட்டுவது. ஒரு நாள் பூராவும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சராசரிப் பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப் படுகிறாள். அவளுக்குத் தன் நிலைமையை நினைத்துத் தன்னிரக்கம் ஏற்படுகிறது. தான் வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று எண்ணுகிறாள். மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பெண்கள் உடுத்தும் உடைகள், அணியும் ஆபரணங்கள் இந்தப் பெண்களின் கருத்தையும், கவனத்தையும் கவருகின்றன. ஆனால் சராசரிப் பெண்களால் வாங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கும் அவற்றின் விலைகள். ஆகவே பெண்களுக்குத் தேவை பணம், அதனால் வரும் ஆடம்பர வாழ்வு. அதற்காகத் தன்னையே அழித்துக்கொள்ளவும் தயங்கவில்லை அவர்கள்.

மேலும் இன்றைய அவசர உலகில் கணவன், மனைவி இருவரும் அநேகமாய் வேலைக்குச் செல்கிறார்கள். மனைவிக்கு அலுவலகம் இருக்கும்போது கணவனுக்கு இருக்காது. கணவன் அலுவலகம் சென்றால் மனைவி வீட்டில் இருப்பாள். ஆக, பெண்களுக்கு முதல் எதிரி இந்தத் தனிமையே. வீட்டில் இருக்கும் பெண்கள்தான் என்றால் நாள் முழுதும் தொலைக்காட்சித் தொடர்களே அவர்களின் ஒரே பொழுதுபோக்கு என்றாகிவிட்டது. அதிலோ பெண்கள் தைரியமாய் என்னவெல்லாம் செய்கிறார்கள்? தனிமையில் வாடும் பெண்கள் தங்களுக்கு ஆறுதல் சொல்லவும், தங்கள் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கவும் யாரானும் இருக்க மாட்டார்களா என உள்ளூர ஏங்குகிறார்கள் என்பது சில உளவியல் நிபுணர்களின் கருத்து. அதனால்தான் அவர்கள் பாதை மாறுகிறார்கள் என்பதும் அவர்கள் கருத்து. முன்பு கூட்டுக்குடும்பமாய் இருந்த போது இந்தப் பிரச்சினை அதிகம் எழவில்லை. அன்பைத் தேடி ஏங்குவதும் தனிமை தரும் சுதந்திரமும் காரணங்களாய்ச் சொல்கிறார்கள். நம் வீட்டில் நம் கணவனிடமும் நம் குழந்தைகளிடமும் கிடைக்காத அன்பா வெளியில் கிடைக்கப் போகிறது? விசித்திரமாய் இல்லை? ஏன் அவர்கள் கணவன்மார்களிடம் மனம் விட்டுப் பேசி, இதைத் தீர்த்துக்கொள்ளக் கூடாது. குழந்தை பெற்ற பெண்கள் என்றால் ஏன் குழந்தைகளோடு பொழுது போக்கக் கூடாது? ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குழந்தைகளையும் இன்று தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகள் பெருமளவில் பாதித்திருக்கின்றன. அதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம். இப்போது பெண்களின் இந்த நிலைமைக்குத் தீர்வு என்னவென்று யோசிக்கலாம்…


தொடரும்.

டிஸ்கி: இந்தக் கட்டுரை சென்ற வருடம் தமிழ் ஹிந்துவில் வெளிவந்தது. இதை எழுதிய எனக்கு ஆதரவாயும், எதிர்த்தும் கருத்துகள் வந்தன. ஒரு பெண்மணி என்னை நகரத்தை விட்டே போகும்படி கூறி இருந்தார். நகரத்துப் பெண்கள் வேலை பார்ப்பதில் கிடைக்கும் சுதந்திரத்தையும்,பொருளாதார முன்னேற்றங்களையும் கண்டு, அதிலும் இந்தக் காலத்துப் பெண்களைக் கண்டும், எனக்குப் பொறாமை என்றும் கூறி இருந்தார். பெண் எக்காலத்திலும் பெண்ணே! மாறமுடியாது. மேலும் நானும் ஒரு காலத்தில் வேலைக்குச் சென்றேன். அம்பத்தூரில் இருந்து தண்டையார்பேட்டைக்குச் செல்வேன். அப்போதெல்லாம் மின்சார ரயில் போக்குவரத்து அம்பத்தூரில் ஆரம்பிக்கவில்லை. எண்பதுகளின் கடைசியில் தான் மின்சார ரயில் போக்குவரத்து ஆரம்பித்தது. நான் சென்ற போது புகைவண்டி தான். டீசல் கூட எப்போவோ ஒரு சில விரைவு வண்டிகளுக்கு மட்டுமே. அதனால் பெண்கள் வேலைக்குச் செல்லுவதின் செளகரியம், அசெளகரியம் எனக்கு நன்கு புரிந்ததே. பின்னர் குழந்தை பிறந்ததும், அதை வளர்ப்பதில் ஏற்பட்ட பல சிக்கல்களுக்காக வலிய வந்த வங்கி வேலையையும் மறுத்தேன். இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும்படி மருத்துவம் படித்த என் அருமை சிநேகிதி ஒருத்தர் தன் மருத்துவப் பயிற்சியையே குழந்தை வளர்ப்புக்காகப் பத்து வருடங்கள் போல் தள்ளிப் போட்டார். இதை விடப் பெரிய தியாகம் எதையும் நான் செய்துவிடவில்லை. இன்றைய நாட்களில் பெண்கள் வீட்டை விட்டுப் பல வேலைகளிலும் ஈடுபடுவதால் ஏற்படும் சமூக, கலாசார மாற்றங்களையே இங்கு குறிப்பிடுகிறேன். இதன் மூலம் பெண்கள் வேலைக்குச் செல்வதை நான் எதிர்ப்பதாய் நினைக்கவேண்டாம். பொருளாதாரத்தில் பின்னுக்கு இருப்பவர் வேலைக்குச் சென்றுதான் தீரவேண்டும்.