எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 12, 2019

இன்னும் 3 படங்கள்!

அடுத்தாப்போல் இரு ஆங்கிலப் படங்கள். ஒரு தமிழ்ப்படம், இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக ஆகஸ்ட் மாசம் 23ஆம் தேதி 2019 ஆம் ஆண்டில் வந்த படத்தைப் பார்த்துட்டேனே! ஹையா! ஜாலி! எடுத்த எடுப்பில் உம்மாச்சி படத்தைக் காட்டினாங்க. அதுவும் வெங்கடாசலபதி. கடைசியிலே பார்த்தால் இது டிவிஎஸ் காரங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க எடுத்த படமாம். டிவிஎஸ் அவர்களின் மகனான டி.எஸ்.கிருஷ்ணாவின் பிள்ளை சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன் நிக்கி சுந்தரம் எடுத்த படமாம். எல்லாத் துறையிலும் புகுந்த டிவிஎஸ் குழுமம் சினிமாத் துறையிலும் புகுந்தது நல்லது என்றாலும் அவங்க பேரனே நடிச்சிருப்பது கொஞ்சம் சரியாத் தெரியலை. அதுவும் நிக்கி சுந்தரத்துக்கு நடிப்பே வரலை! ஒரே மாதிரி முகபாவத்தோடு நடிக்கிறார். அதுக்குக் கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பரவாயில்லை ரகம்.   படத்தோட பெயர் "மெய்". உடம்புனும் அர்த்தம் எடுத்துக்கலாம். உடல் உறுப்புக்களைத் திருடுவதால், உண்மையைத் தேடிக் கண்டு பிடிப்பதால் உண்மைனும் அர்த்தம் எடுத்துக்கலாம்.

மெய் விமர்சனம் க்கான பட முடிவு

உடல் உறுப்பு தானம் பற்றியும், அதை விளம்பரப்படுத்தவுமே எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். ஆனால் படத்தின் கதைக்கரு இந்த உறுப்பு தானத்திற்காக நல்ல உடல்நிலையில் இருப்பவர்களின் உறுப்புக்களை, முக்கியமாகச் சிறுநீரகங்களைத் திருடும் வணிக ரீதியாகச் செயல்படும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் ஆகியோரைப் பற்றிய படம். கதைப்படி (நிஜம்மாகவும்?) அம்பேரிக்காவில் மருத்துவம் படிக்கும் அபிநந்தனுக்கு ஹவுஸ் சர்ஜன் பயிற்சியின் போது அவன் மிகவும் பாசமும் அன்பும் வைத்த, அவன் மருத்துவராகிச் சேவை செய்ய வேண்டும் என நினைத்த அவன் தாய் இறந்து போகவும் மனம் வருந்தித் தொழிலில் கவனம் செலுத்தாமல் இருக்கிறான். அவன் மனம் மாற வேண்டி அவன் தந்தை அவனை இந்தியாவுக்குத் தன் சிநேகிதனிடம் அனுப்பி வைக்க, மருந்துக்கடை வைத்திருக்கும் அந்த சிநேகிதன் வீட்டில் வந்து தங்கும் அபிக்கு ஏற்படும் சிக்கலான அனுபவங்களே கதை! அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதும் பின்னர் அவன் இந்தியாவிலேயே மருத்துவமனை ஒன்றை ஏற்படுத்திக் கதாநாயகியைத் திருமணமும் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவதும் தான் கதை!

மெய் விமர்சனம் க்கான பட முடிவு

நடுவில் காணாமல் போன தன் மகள் பற்றி அறியத் துடிக்கும் சார்லி, இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன்,கிஷோர் என்பவராம், பார்க்க விநோத் கன்னாவின் பிள்ளை மாதிரி இருக்கார். மற்ற நடிகரெல்லாம் யாருனு தெரியலை. நர்மதாவாக நடிக்கும் பெண், (சார்லியின் மகள்) முகம் தெரிந்த முகமாக இருக்கு. யார்னு தெரியலை.   உதவிக் காவலர் கருணாகரன் , டாக்டர் ஜெயந்த் ஆகிய பாத்திரங்களில் நடிப்பவர்கள் நன்றாக நடிப்பதால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் சரி செய்து கொள்கிறது தானாகவே! :) இயக்குநருக்கு முதல் படம் என்ற அளவில் பரவாயில்லை ரகம். ஆனால் திரைக்கதை ஏற்கெனவே பலமுறை வந்திருப்பதால் புதிதாக ஏதும் இல்லை எனப் பொதுவான விமரிசனம் சொல்லுகிறது. மற்றபடி காதல் காட்சிகள் அது,இதுனு குழப்பலை! இசையும் தேவையான அளவுக்கு மேல் காதைக் குடையவில்லை. ஒளிப்பதிவு அபாரம். சராசரியான படம் என்றாலும் பரவாயில்லை ரகம்.

அடுத்து ஓர் ஆங்கிலப்படம் மன்னரின் சொற்பொழிவு (King's Speech) omitted the original name of the picture பார்த்தேன். இது இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் இங்கிலாந்தில் அரச குடும்பத்தின் நிகழ்வுகளை வைத்து எடுத்த படம். ஐந்தாம் ஜார்ஜ் இறக்கும்போது எட்டாம் எட்வர்ட் பட்டமேற்க அவர் தன் காதலி வாலிஸ் சிம்ப்சனை மணம் முடிக்க வேண்டித் தன் பட்டத்தையே துறந்து விடுகிறார். வாலிஸ் சிம்ப்சன் இரு முறை விவாகரத்தான அமெரிக்கப் பெண்மணி. இங்கிலாந்தின் அரச குடும்பச் சட்டங்களின் படி விவாகரத்து ஆகிக் கணவன் உயிருடன் இருந்தால் அந்தப் பெண் அரசகுடும்பத்தவரைத்திருமணம் செய்து கொள்ள முடியாது. இங்கிலாந்துச் சர்ச்சுகள் அனைத்திற்கும் அரசரே தலைவர். அவர் விதவையாக இருந்தால் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் விவாகரத்தான கணவன்மார் இருவரும் உயிருடன் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.

king's speech க்கான பட முடிவு


பட்டத்தைத் துறந்த சமயம் அவருக்குப் பின்னர் பட்டமேற்ற ஆறாம் ஜார்ஜ், இப்போதைய அரசி எலிசபெத்தின் தந்தையின் பேச்சுத் திறன் குறைபாட்டையும் அதை அவர் எப்படிச் சரி செய்து கொண்டார் என்பது குறித்தும் எடுக்கப்பட்ட உண்மையான சில நிகழ்வுகள். அருமையாகப் படம் ஆக்கி இருக்கிறார்கள். ஆஸ்கர் விருதுகள் நான்கோ, ஐந்தோ கிடைத்துள்ளது இந்தப் படத்திற்கு.   சிறந்த நடிகராக இந்தப் படத்தில் ஆறாம் ஜார்ஜாக நடித்திருக்கும் காலின் ஃபர்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதோடு இல்லாமல் வெஸ்ட்மினிஸ்டர் அபே, பக்கிங்காம் மாளிகை போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள் மிகக் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டுப் படமாக்கி உள்ளார்கள்.

 king's speech க்கான பட முடிவு

மருத்துவரிடம் தன் சிறு வயது அனுபவங்களைப் பகிரும்போது இளவரசன் ஆல்பர்ட் (ப்ரின்ஸ் ஆல்பர்ட்டாக நடிக்கும் இவர் தான் ஆறாம் ஜார்ஜாகப் பட்டம் ஏற்றவர்) காலின் ஃபர்த் தன் சிறு வயதில் தங்களைக் கவனித்துக்கொண்ட செவிலித்தாய்மார்கள் தன்னை நடத்திய விதம் குறித்து மருத்துவரிடம் பகிர்கையில் ராஜகுமாரனாக இருந்தாலும் அவர்களையும் அடக்கி ஆளச் சிலர் இருப்பார்கள் என்றும் அவர்களுக்கும் உணவு, கவனிப்பு போன்றவற்றில் பாரபட்சம் காட்டப்படும் என்பதும் புரிகிறது. அதுவும் தன் செவிலித்தாய்க்குத் தன்னைப் பிடிக்கவே பிடிக்காது எனவும் தினம்தினம் தன் தந்தை ஐந்தாம் ஜார்ஜையும், அவர் தாய் ராணி மேரிக்கும் குழந்தைகள் நிலைமை பற்றித் தினம் அவர்களைக் காட்டிச் சொல்லும்போது தன்னைத் தன் செவிலித்தாய் கிள்ளிவிடுவாள் ரகசியமாக என்றும் தான் அழுவதைப் பார்த்துப் பெற்றோர் மனக்கசப்பு அடைவார்கள் என்பதையும், தனக்குச் செவிலித்தாய் சரியாக உணவு கொடுக்க மாட்டாள் என்றும் இது தெரியத் தன் ராஜகுலப் பெற்றோருக்கு ஐந்து வருஷங்கள் பிடித்ததாகவும் சொல்லும்போது நமக்கும் மனம் கசிகிறது.

king's speech க்கான பட முடிவு

இவரை "பெர்ட்டி" எனக் குடும்பப் பெயரில் அழைப்பார்கள். மருத்துவரும் பிடிவாதமாக அந்தப் பெயரிலேயே அழைப்பேன் என்கிறார். தன்னுடைய திக்குவாயைப் போக்கிக்கொள்ள முடியாமல் திண்டாடுபவரை அவர் மனைவி எலிசபத், பின்னாட்களில் ராணி எலிசபெத், ஆறாம் ஜார்ஜின் மனைவி, இப்போதைய ராணி எலிசபெத்தின் அம்மா தான் லண்டனின் ஹார்லி சாலையில் இருக்கும் இந்த ஆஸ்திரேலிய மருத்துவரிடம் அனுப்பிப் பேச்சுப் பயிற்சி மூலம் சரி செய்து கொள்ள ஊக்குவிக்கிறாள். அரசராக விருப்பமே இல்லாமல் இருந்தவரைத் தன் அண்ணனின் காதலினால் கட்டாயமாக அரசராக்கப்படுவதும், பின்னால் ஹிட்லரின் போர் அறிவிப்பினால் நேசநாடுகளை ஒன்றிணைத்துப் போருக்குத் தயாராக இருக்குமாறும் வானொலியில் பேசும் அளவுக்குப் பேச்சுத் திறமை படைத்தவர் ஆகிறார். ஆனால் அவர் மருத்துவரான லியோனெல் அப்போதும் அவரிடம், "பெர்டி, இன்னமும் உனக்கு "டபுள்யூ" சரியாக உச்சரிக்க வரலை என்பதும், அதற்கு ஆறாம் ஜார்ஜான பெர்டி, "நான் வேண்டுமென்று தான் அப்படிச் செய்தேன். அப்போத் தான் மக்கள் பேசுவது நான் தான் எனப் புரிந்து கொள்வார்கள்." என்று சொல்லுவதும் அதிலும் நடந்து கொண்டே சகஜமாகச் சொல்லுவதும் காட்சி அமைப்பில் அருமை. கடைசியில் இந்த உண்மையான மருத்துவருக்கு "ராயல் விக்டோரியன் ஆர்டர்" விருது கிடைத்ததாகப் படம் முடியும்போது போடும் டைடில் கார்ட் சொல்லுகிறது. நல்லதொரு சரித்திரப் படம்.

ஹாலிடேஸ் இன் தி வைல்ட் பார்த்தேன். தென் ஆப்பிரிக்காவில் யானைகளைப் பழக்கிப் பராமரிப்பவரான ஒருவருடன் ஒரு மிருக வைத்தியர் (பெண்) தற்செயலாகச் சந்திக்க நேர்கிறது. அவர்கள் வாழ்க்கை பின்னர் எப்படிப் போகிறது என்பது தான் கதை. ஒன்றரை மணி நேரப் படம். படம் முழுக்கத் தென் ஆப்பிரிக்க யானைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இயல்பாகப் போகிறது படம். இதுவும் நன்றாகவே இருந்தது. யானைகளைப் பார்ப்பதற்காகவே இந்தப் படம் பார்த்தேன்.

Saturday, November 09, 2019

அமிதாபின் 3 சந்தேகங்கள்!

இரண்டு படங்கள் பார்த்தேன். ஒன்று "பதலா"! இன்னொன்று"தீன்". இரண்டுமே அமிதாப் நடித்த படங்கள். அமிதாபின் ஆரம்பகாலப்படங்களில் ஜெயாபாதுரியுடன் நடித்த ஒரு சில படங்களைத் தவிர்த்து மற்றவை அதிரடி ஹீரோவாக அவர் உருண்டு, புரண்டு, சண்டை போட்டு நடித்தவையே! ஆனால் இப்போதெல்லாம் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரோ எனத் தோன்றுகிறது. அதிலும் பதலாவின் வக்கீலாக வந்து கட்சிக்காரரிடம் பேசுகிறார். கட்சிக்காரராக நடிப்பவர் "டாப்சி பன்னு" என்னும் நடிகை. ஒரு இளம் தொழிலதிபராக வரும் அந்தப்பெண் பணக்காரத்தன்மையையும்  அது கொடுக்கும் அலக்ஷியத்தையும் இயல்பாகக் காட்டுகிறாள். விஷயம் இது தான். க்ளாஸ்கோ, ஸ்காட்லாண்டில் வசிக்கும்  (கதைப்படி) "நைனா சேதி" என்னும் இளம் பெண் தொழிலதிபர் ஒரு கொலைக்கேஸில் குற்றம் சுமத்தப்பட்டுக் காவல் துறையால் கைது செய்யப்படுகிறாள். (அட, நம்ம ஊருனு நம்ம அதிரடி ஓடோடி வரப் போறாங்க.)

இது வெளியிட்ட நாள் மார்ச் 8, 2019 (நெல்லைத்தமிழர், கவனிக்க). தயாரிப்பு ஷாருக்கானும், அவர் மனைவி கௌரிகானும். படம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. எங்க பெண் இன்னமும் இந்தப் படம் பார்க்கலை என்று சொன்னாள். இஃகி,இஃகி,இஃகி! நாங்க பார்த்துட்டோமுல்ல!

இந்த நைனா சேதிக்கு சுனில் சேதியுடன் திருமணம் ஆகி ஒரு சின்னப் பெண் குழந்தை இருக்கிறது. அவளுடைய தொழில் விவகாரங்களில் கணவனின் பரிபூரணமான உதவியும் அவளுக்குக் கிடைத்து வருகிறது. ஆனால் நைனா சேதிக்கு என்ன காரணத்தாலோ அர்ஜுன் ஜோசஃப் என்பவனுடன் தவறான உறவு ஏற்படுகிறது. இதைக் கணவன் அறியாமல் பாதுகாத்து வருகிறாள் நைனா. அர்ஜுனும் திருமணம் ஆனவனே. நைனாவும், அர்ஜுனும் ரகசியமாக ஒரு ரிசார்ட்டில் தங்கித் தங்கள் காதலைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் தொழில் சம்பந்தப்பட்டவர்களிடம் நைனா தான் பாரிஸுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு அர்ஜுனை ரகசியமாகச் சந்திக்கச் சென்றிருக்கிறாள். அதற்கான எல்லாவிதமான "அலிபை"களும் தயார் நிலையில்! சந்திப்பு முடிந்து இருவரும் அவரவர் இடம் நைனாவின் காரில் திரும்பும் வழியில் மலைப்பாதையில் மான் ஒன்று குறுக்கிட இருவர் வாழ்க்கையிலும் விதி குறுக்கிடுகிறது. நைனாவின் கார் எதிரே வந்த ஒரு காரின் மேல் மோதி அது சாலையோரத்தின் மரத்தில் மோதி நிற்கிறது. உள்ளே ஓர் இளைஞன். பார்த்தால் செத்துவிட்டான் போல் இருக்கிறது.

எப்படியோ அதை மூடி மறைத்துவிட்டுத் திரும்பும் காதலர்களை யாரோ பணம் கேட்டுத் தொலைபேசியில் அழைத்து க்ளென்மோர் ஓட்டலுக்குக் குறிப்பிட்ட அறைக்கு வரச் சொல்ல அங்கே அர்ஜுன் இறந்து கிடக்கிறான். அவர்கள் கொண்டு வந்த பணம் அறை முழுவதும் இறைந்து கிடக்க நைனா தலையில் அடிபட்டுக்கிடக்கிறாள். ஆனால் அறைக்குள் யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் நைனாதான் கொன்றிருக்க வேண்டும் என்று போலீஸ் நிச்சயித்து அவளைக் கைது செய்து அழைத்துச் செல்கிறது. தன் மனைவியின் ரகசிய வாழ்க்கை குறித்தும், அவள் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதையும் கண்ட நைனாவின் கணவன் தன் குழந்தையுடன் அவளை விட்டு விலகி விடுகிறான்.

Badla க்கான பட முடிவு

ரகசியமாய் அர்ஜுனைக் காதலித்தாலும் தன் குடும்பம், கணவன், குழந்தை மேல் பற்றுக் கொண்ட நைனா மனம் நொந்து போய்த் தன் வக்கில் நண்பரான ஜிம்மியின் உதவியுடன் இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுபட நினைத்துப் பிரபல வக்கீல் பாதல் குப்தாவைத் தனக்காக வாதாட ஏற்பாடு செய்கிறாள். படம் முழுவதும் பாதல் குப்தா நைனா சேத்தியைக் கொலை விஷயமாக எடுக்கும் பேட்டி தான்! வேறே இல்லை. ஆனால் நைனா கொலையின் பின்னணி குறித்து பாதல் குப்தாவிடம் விளக்குவதில் முழுக்கதையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். எங்கோ ஓர் வாலிபன் காணாமல் போனது குறித்துப் பத்திரிகைச் செய்தியைக் காட்டி நைனாவிடம் விசாரிக்கும் பாதல் குப்தாவுக்கு மெல்ல மெல்ல உண்மை விளங்கக் கடைசியில் தான் இந்த வழக்கில் வாதாட முடியாது என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறார். திகைத்த நைனா தன் வக்கீல் நண்பன் ஜிம்மியிடம் விஷயத்தைச் சொல்லத் தொலைபேசியில் அழைக்க, வெளியே அவளை யாரோ அழைக்கிறார்கள். யாரெனப் பார்க்கச் சென்ற நைனா மேலும் திகைக்கிறாள். வந்தவர் தன் பெயர் பாதல் குப்தா என்றும், ஜிம்மி அனுப்பியதாகவும் சொல்ல, திகைக்கும் நைனாவிடம் தொலைபேசியில் ஜிம்மி தான் பாதல் குப்தாவை இப்போது அனுப்பி இருப்பதாகச் சொல்கிறான். நைனாவின் திகைப்பு அதிகம் ஆக அவளைக் கைது செய்து அழைத்துப் போகக் காவல் துறை அலுவலர்களும் வருகின்றனர்.

Badla க்கான பட முடிவு

முதலில் பாதல் குப்தாவாக வந்தது யார்? உண்மைக்குற்றவாளி நைனா தானா? எல்லாவற்றுக்கும் படத்தைப் பார்த்தால் விடை கிடைக்கும். காதல் காட்சிகளோ, காதலர்கள் பாடும் டூயட் பாடல்களோ இல்லாமல் படம் முழுக்க விறுவிறுப்பாகச் செல்கிறது. காதலர்கள் தனியாகத் தங்கி இருந்த ரிசார்ட், அதன் சுற்றுப்புறங்கள், மலைப்பாதை எல்லாமும் ஸ்காட்லாண்டை நமக்கு ஓரளவுக்குக் காட்டுகிறது. படப்பிடிப்பு ஸ்காட்லான்ட் க்ளாஸ்கோவில் ஜூன் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2019 ஃபெப்ரவரியில் முடிவடைந்து அதே வருஷம் சர்வதேசப் பெண்கள் தினமான மார்ச் எட்டாம் தேதி வெளியிட்டிருக்கிறார்கள். இம்மாதிரிப் படங்களை எந்தவிதமான கவர்ச்சியான காட்சிகளோ, நடனங்களோ இல்லாமல் சுற்றுப்புறத்தின் இயல்பான நடைமுறையில் அழகாகப் படமாக்கி இருக்கும் இயக்குநர் சுஜோய் கோஷ் பாராட்டப்பட வேண்டியவர்.

te3n க்கான பட முடிவு

அடுத்ததும் அமிதாப் தான். வங்காளத்தின் கல்கத்தா நகரில் நடக்கும் கதை. அமிதாப் இதில் ஜான் பிஸ்வாஸாக நடிக்கிறார். இறந்து போன அவர் ஒரே பெண்ணின் பெண் குழந்தையைக் கல்கத்தா நகரில் ஜான் பிஸ்வாஸும் அவர் மனைவி நான்சி பிஸ்வாஸும் வளர்த்து வருகிறார்கள். மாப்பிள்ளை வடகிழக்கு மாநிலத்தில் வேலையாக இருக்கிறார். பள்ளிக்குச் செல்லும் பேத்தி ஏஞ்சலா ஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து திரும்பி வருகையில் கடத்தப்படுகிறாள். கடத்தப்பட்ட குழந்தையைத் தேடிக் காவல் துறை ஒரு பக்கம், ஜான் பிஸ்வாஸ் இன்னொரு பக்கம் அலையக் கடைசியில் குழந்தை பிணமாகக் கிடைக்கிறாள். குழந்தை இறந்தது ஓர் விபத்து என்று சொல்லப்படுகிறது. தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ளத் துப்பில்லை எனக் குழந்தையின் இறுதிச் சடங்குக்கு வந்த அதன் தகப்பன் மாமனாரைச் சாட இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த காவல் துறை அதிகாரி மார்ட்டின் (நவாசுதீன் சித்திக்) திடீரென வேலையை விட்டு விட்டுச் சர்ச்சில் பாதிரியாகப் போய்விடுகிறார். ஜான் பிஸ்வாஸின் மனைவி நான்சி அதிர்ச்சியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுச் சக்கர நாற்காலியில் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். மனைவியையும், வீட்டையும் கவனித்துக்கொண்டு ஜான் பிஸ்வாஸ் தன் பேத்தியைக் கடத்தியவனைத் தேடிக் கொண்டே இருக்கிறார். அந்த முயற்சியில் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால் தன் பேத்திக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் கடத்தியவனைப் பிடிக்கும் ஆர்வமும் ஜான் பிஸ்வாஸுக்குக் குறையவில்லை. தினம் தினம் தொடர்ந்து காவல் நிலையம் சென்று உட்கார்ந்து விட்டு வருகிறார். அங்கே தற்போது காவல் துறை அதிகாரியாக இருக்கும் சரிதா சர்கார்(வித்யா பாலன்) மார்ட்டினின் சிநேகிதியும் கூட! அப்போது திடீரென ரோனி என்னும் ஓர் எட்டு வயதுச் சிறுவன் காணாமல் போகிறான். அதுவும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏஞ்சலா காணாமல் போன அதே முறையில் பள்ளியில் இருந்து திரும்பி வரும் வழியில். இருவர் கடத்தலிலும் ஓர் கறுப்பு வான் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஏஞ்சலாவைக் கடத்தியவன் தான் ரோனியையும் கடத்தி இருப்பானோ? சரிதா தன் பாணியில் விசாரணையைத் தொடர்ந்தாலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அதே முறை என்பதால் பழைய ஆவணங்களைத் தேடிப் பிடித்து எடுத்ததோடு அல்லாமல் மார்ட்டினின் உதவியையும் கேட்கிறாள்.

te3n க்கான பட முடிவு

சரிதாவின் தேடலில்  முடிவில் கிடைக்கும் குற்றவாளியைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனாலும் மார்டினுக்கு இதில் திருப்தி இல்லை. அவன் முனைந்து உண்மையைக் கண்டு பிடிக்கிறான்.உண்மைக்குற்றவாளி யார் எனத் தெரிந்தாலும் அவர் செய்ததில்  அதில் ஓர் நியாயம் இருப்பதை உணர்ந்தவன் கடைசியில் சரிதா குற்றவாளி என நம்புபவரைச் சிறைச்சாலையில் ஜான் பிஸ்வாஸைச் சந்திக்க வைக்கிறான். அவரிடம் பேசி உண்மையைத் தெரிந்து கொண்டு உண்மையை எடுத்துச் சொல்லும் ஜான் பிஸ்வாஸ் தான் செய்ததில் நியாயம் இருப்பதை உணர்ந்து திருப்தி அடைகிறார்.  இம்முறை ரோனி உயிருடன் மீட்கப்படுகிறான். ஜான் பிஸ்வாஸாக நடிக்கும் அமிதாப் உண்மை தெரிந்த மகிழ்ச்சியில் ரோனியைத்தன் பேத்தி இடத்தில் வைத்து அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார். மார்டின் மீண்டும் சர்ச்சில் பாதிரியாக ஆக வித்யா பாலன் குற்றவாளியைப் பிடித்த மகிழ்ச்சியில் தன் வேலையைத் தொடர்கிறார். அவருக்கும் ரோனியைக் கடத்தியது உண்மையில் யார் எனச் சொல்லாமல் மார்டின் மறைத்து விடுகிறான். ஆகவே இரு கடத்தல்களும் ஒரே மாதிரி இருப்பதால் ரோனியைக் கடத்திய நபர் தான் ஏஞ்சலாவையும் கடத்தி இருக்கிறான் என்பதில் வித்யா பாலன் உறுதியாக இருக்கிறார். அதற்குச் சாட்சியாக ஏஞ்சலாவின் கடத்தலில் பணயமாகக் கேட்கப்பட்ட பணம் இப்போதைய குற்றவாளியிடம் இருந்தற்கான ஆதாரபூர்வமான சான்றுகள் கிடைத்தது தான்.

te3n க்கான பட முடிவு

முந்தைய படத்தை இயக்கிய சுஜோய் கோஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ஓரளவுக்குத் தெரிந்த முகங்கள். கல்கத்தாவின் தெருக்களும், பழமை மாறாத வீடுகள், ட்ராம் வண்டியில் பயணிக்கும் அமிதாப் எனக் கல்கத்தாவின் வாழ்க்கை முறையை இயல்பாக எடுத்திருக்கிறார்கள். நடுவில் வரும் துர்கா பூஜைக் காட்சிகளும் படத்தோடு ஒட்டியே வருகின்றன. ஒளிப்பதிவு, இயக்கம், வசனங்கள் எல்லாம் "சிக்". அமிதாபின் நடிப்பு அவர் வயது கூடக் கூட நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. தன் வயதுக்கேற்ற படங்களில் நடிப்பது அவருக்கு ஓர் கௌரவத்தையும் கொடுக்கிறது. மார்டினாக வரும் நவாசுதீன் சித்திக், சரிதா சர்காராக நடிக்கும் விக்ட்யா பாலன் ஆகிய அனைவரும் அவரவர் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளார்கள். ரோனியின் தாத்தாவாக வரும் மனோஹர் சிந்கா பாத்திரத்தில் நடிப்பவரான சப்யசசி சக்ரவர்த்தியும் தன் நடிப்பில் முதிர்ச்சியைக் காட்டியுள்ளார். மொத்தத்தில் நல்ல படங்களைப் பார்க்க முட்கிறது, பார்ப்பது எப்போவோ நடந்தாலும். படத்தின் பெயர் Te3n.  அமிதாபின் 3 சந்தேகங்கள்.